தூய்மை இந்தியா மலர...

தூய இஸ்லாம் கூறும் அறிவுரைகள் - 02 - கே. ஆர். மஹ்ளரீ

▪ சுத்தம் எவை? அசுத்தம் எவை?
(நபியே!) உமது உடைகளைத் துய்மைப்படுத்தும்!
[74 : 04] நிச்சயமாக பாவங்களிலிருந்து விலகி உளத்தூய்மையுடன் இருப்போரையும் அசுத்தத்தி லிருந்து நீங்கி உடல் தூய்மையுடன் இருப்போ ரையும் இறைவன் விரும்புகிறான். [02 : 222]

▪ நஜீஸ் - அசுத்தம் என்றால் என்ன?
அசுத்தம் என்பதற்கு அறபுவில் 'நஜாஸத் - நஜீஸ்' எனப்படும். அதாவது ஒரு மனிதன் விலகிக் கொள்ள வேண்டியதும் உடல், உடை, இருப்பிடம் எதிலாவது பட்டுவிட்டால், அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டிதுமான ஒன்றுக்கு 'நஜீஸ்' என்று கூறப்படும்.

▪ எவையெல்லாம் அசுத்தமானவை?
01. இறந்தவை : இஸ்லாமியச் சட்டப்படி அறுக்காமல் இறந்தவை அசுத்தமானவை. 'உயிருள்ள பிராணியிலிருந்து வெட்டி எடுக்கப் பட்ட துண்டும் இறந்ததே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். [அபூதாவூது]

▪ விதிவிலக்கானவை
இறந்தவை அசுத்தம் என்ற ஒரு பொது விதி இருந்தாலும் அவற்றிலிருந்து மீன், வெட்டுக்கிளி போன்றவை விதி விலக்கானவை. அதாவது இவை அசுத்தமானவை அல்ல.

ஏனெனில், 'இறந்தவற்றில் இரண்டும் இரத்தத்தில் இரண்டும் அனுமதிக்கப்பட்டவை. இறந்தவற்றில் இரண்டு என்பது, மீனும் வெட்டுக்கிளியும். இரத்தத்தில் இரண்டு என்பது, ஈரலும் மண்ணீ ரலும்' என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். [இப்னு மாஜா]
இதேபோல எறும்பு, தேனீ போன்ற இரத்த ஓட்டமில்லாதவையும் தூய்மையானவையே. அந்த வகையில் இவை எப்பொருளிலாவது விழுந்து இறந்து விட்டால், அப்பொருள் அசுத்தமாகாது என்பது ஏகோபித்த அறிஞர்கள் முடிவு.
ஆனால், இவை ஏதாவது ஒரு பானத்தில் விழுந்து அதனால் அவற்றின் தன்மை மாறினால் அசுத்தம் என்பதும் மாறாவிட்டால் பரவாயில்லை என்பதும் அறிஞர் ஷாஃபிஈயின் (ரஹ்) கருத்து.

▪ மன்னிக்கத்தக்க இன்னும் சில...

இறந்தவற்றின் எலும்பு, இறக்கை, முடி, நகம், கொம்பு போன்றவையும் சுத்தமானவையே. ஏனெனில், ஆரம்பகால அறிஞர்களில் பலர் யானை போன்றவற்றின் எலும்புகள் மூலம் தலைவாரியதையும், அவற்றில் எண்ணெய் ஊற்றி வைத்திருந்ததையும் நான் கண்டுள்ளேன்.
அதை ஒரு தவறான செயலாக அவர்கள் எண்ணவில்லை என்று அறிஞர் ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகிறார். [புகாரி]
02. இரத்தம் : அறுக்கப்பட்ட பிராணிகளிலிருந்து ஓடும் இரத்தமாக இருந்தாலும், அல்லது மாதவிடாய் இரத்தமாக இருந்தாலும் அனைத்து இரத்தமும் அசுத்தமானவையே. ஆனால் குறைவான இரத்தம் என்றால் குற்றமில்லை.
ஏனெனில், குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள 'தமன் மஸ்ஃபூஹா' என்பதற்கு இப்னு ஜுரைஜ் (ரஹ்) விளக்கம் கூறும்போது, வழிந்தோடும் இரத்தம் என்றே குறிப்பிடுகிறார்.
இந்த அடிப்படையில், அறுக்கப்பட்ட பிராணிகளின் நரம்போரங்களில் உள்ள இரத்தம், அவற்றை வேக வைக்கும் போது பாத்திரத்தின் மேல்பகுதியில் காணப்படும் இரத்தம் போன்றவற்றால் எவ்வித குற்றமுமில்லை.

• மன்னிக்கத்தக்க பிற இரத்தங்கள்
இதேபோல கொசு, மூட்டைப் பூச்சியின் இரத்தமும் பருக்களிலிருந்து வெளிவரும் இரத்தமும் மன்னிக்கத்தக்கவையே.
'வெட்டுக் காயங்களிலிருந்து வெளிவரும் சீழ், சலம் பட்ட ஆடைகளை சுத்தம் செய்ய வேண்டும். இவை அசுத்தம் என்பதற்கு வெளிப்படையான ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும் இயன்ற வரை (தொழுகை நேரங்களில்) அவற்றை இல்லாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டும்' என்று அறிஞர் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்.

03. பன்றி இறைச்சி : 'எனக்கு வழங்கப்பட்ட வேத அறிவிப்பில் இறந்த பிராணி, வழிந்தோடும் இரத்தம், பன்றி இறைச்சி, இறைவனின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்டவை தவிர வேறு எந்த உணவும் உண்பவர்களுக்கு தடை செய்யப்பட வில்லை. உறுதியாக இவை அசுத்தமானவை என்று நபியே மக்களிடம் கூறும்!' [அல் குர்ஆன் 06 : 145]

04. சிறுநீர்
05. மலம்
06. வாந்தி

இந்த மூன்றும் அசுத்தம் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்து.
அதேசமயம், குறைவான வாந்தியினால் எவ்வித குற்றமும் பாதிப்பும் இல்லை. இதேபோல, தாய்ப்பாலை மட்டும் உணவாகக் கொள்ளும்
சிறுகுழந்தையின் சிறுநீரும் மன்னிக்கத் தக்கதே. அதன் மீது தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது. கழுவ வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில், சிறுகுழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால், அது மனிதர்களுக்கு சிரமமானதாகி விடும். எனவேதான் தண்ணீர் தெளித்தால் போதுமானது என்று இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

'உணவு உண்ணாத வெறும் தாய்ப்பால் மட்டுமே அருந்திக் கொண்டிருந்த ஓர் ஆண் குழந்தையை உம்மு கைஸ் (ரளி), நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார். அந்தக் குழந்தை நபியவர்கள் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே நபியவர்கள் நீர் கொண்டு வரச் செய்து தமது ஆடையில் தெளித்து விட்டார்கள். கழுவவில்லை.' [புகாரி]

இது உணவு உண்ணாத தாய்ப்பால் மட்டும்
அருந்தும் குழந்தைகள் சம்மந்தப்பட்டது. ஆனால் உணவு உண்ணும் குழந்தைகளின் சிறுநீர் என்றால், அவசியம் கழுவித் தூய்மை செய்ய வேண்டும்.

- தொடரும்...