10, +2 உளைச்சல்கள்

இப்படி ஆகுமென்று யாரும் நினைக்கவில்லை. படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை என்று எவரும் சொல்லாத ஒன்றை இச்சமூகம் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. அதனால், மாணவர்கள்

மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கூடவே, பெற்றோரும் டென்சனுக்கு ஆளாகின்றனர். +2 தேர்வு என்பது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற படிப்பு என்று ஆழமாக நம்புவதன் விளைவு இவை.

உண்மையில் படிப்பு மட்டும் வாழ்க்கையா..? நன்கு சிந்தித்துப் பார்த்தால் படிப்பு தொடர்பற்ற தொழில்களால்தான் மனித வாழ்வின் தேவைகள் நிறைவடைகின்றன. உணவு, உடை, கட்டுமானம் தொடர்புடைய வேலைகளுக்குப் படிப்பு தேவையில்லை. பட்டறிவு போதும்.
ஒருகாலத்தில் மருத்துவத்துக்கும் பட்டறிவே ஆதாரமாக இருந்தது. இன்று மேற்கூறிய அனைத்தும் படிப்பு வழியில்தான் பெற வேண்டும் என்கிற நிலை உருவாகி விட்டது. இதன் மூலம் நன்மையை விடத் தீமையையே பெற்றுள்ளோம்.
பட்டறிவைப் படிப்பறிவு மட்டமாகக் கருத வைத்து விட்டது. பிற உழைப்பை கீழ் நிலையாகக் கருதும் நிலைக்கு உள்ளாகி விட்டது.
பட்டறிவைப் படிப்பறிவு முந்தியதேன்? ஒரே ஒரு காரணம்.. நோகாமல் சம்பாதிக்க வேண்டும். நம் பிள்ளைகள் மிகக் குறைந்த உழைப்பில் அதிக செல்வம் பெற வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். பிள்ளைகளும் அந்தத் சிந்தனையைத் தகவமைத்துக் கொண்டனர். தம்மால் முடியாத ஒன்றைத் தம் பிள்ளைகளிடம் திணிப்பதும் ஒரு காரணம். இது ஒரு உள வன்முறை. இத்துடன் இன்னொரு காரணமும் தொற்றிக்கொண்டது. அதுதான்.. கௌரவம்.
என் பிள்ளை இவ்வளவு மதிப்பெண்.. இந்தப் படிப்பு .. இந்தப் பிரிவு .. இந்த வேலை என்றும் கௌரவத்துக்குச் சொல்ல வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். தற்போது 1000 த்துக்கு மேல் மதிப்பெண் வாங்கினால் கௌரவம். தேர்ந்தெடுக்கப்பட குறிப்பிட்ட படிப்பு சேர்ந்தால் கௌரவம். இவற்றில் இடறினால் கௌரவக் குறைச்சல். சுற்றமும் நட்பும் இழவு வீடு போல் விசாரிப்பர். (உள்ளுக்குள் மனம் குளிர்வர்)
உண்மையில் கௌரவம் என்பது பிறர்க்காக வாழ்வதைக் குறிக்கும். அதாவது, நம் வாழ்க்கையின் மையம் என்று பிறர் ஆகி விட்டதன் வெளிப்பாடே கௌரவம். மற்றவர் பார்வைக்கு நாம் நன்றாக இருப்பதுபோல் போலியாக ஒப்பனை பாவனை செய்ய வேண்டும். அவர் என்ன நினைப்பார். எவர் என்ன சொல்வார் என்பதிலேயே கௌரவ வாழ்க்கை கழியும். சுயம் சுத்தமாக அசுத்தம் ஆகிவிடும்.

1 2  5
நம் வாழ்க்கைக்கு நாம் மையமாக இல்லாத போது அது நடைப்பிணம் போன்றது. இப்படிப்பட்ட வாழ்க்கை நெறியை(வெறியை) இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளிடம் திணிக்கின்றனர். இது அவர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி விடுவதோடு, பல தீயப் பழக்கங்களுக்கும் இட்டுச் செல்லும். உளப் பிறழ்வுகள் உடல் நலத்தையும் கெடுக்கும்.
ஒரு காலத்தில் பாஸ், ஃபெயில் என இரண்டைத்தான் பார்ப்பர். தற்போது பாஸ் வகையறாவே மூன்றாக வார்க்கப்பட்டுக் கிடக்கின்றது. மதிப்பெண் என்பது லட்சப் பணமதிப்புள்ள எண் போன்றாகி விட்டது. எனவே, இங்கே வர்க்கம் உருவாகி விட்டது. (வறுமைக் கோட்டுக்குக் கீழ் தேர்ச்சிப் பெறாதோர்). அதிக மதிப்பெண் பெற்ற மாணவரிடம் வர்க்கத் திமிர் (கொஞ்சம்) இருக்கும். அவர்களைப் பொறுத்தவரையில் ஃபெயில் ஆனோர் தீண்டத்தகாதோர். இந்தியாவில் மதிப்பெண் ஒரு வகையில் வர்ணப் பாகுபாட்டுடன் இருக்கிறது.
உயர்ச்சாதியாக இருக்க ஆசைபடுவதுபோல் உயர் மதிப்பெண் பெற வேண்டத்தகாத முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.

மதிப்பெண்ணின் நடுத்தர வர்க்கத்தினர்தான்( 45-60 %) சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். காரணம், தமது குறைகளை வாழ்க்கையில் பூர்த்தி செய்ய இவர்கள் மேற்கொள்ளும் முயற்சியால் சமூகம் உயர்கின்றது. ஆனால் நடப்பது என்ன..? குறைந்த மதிப்பெண் வாங்கி விட்டோமே என்று நாணம் கொள்கின்றனர். சிலர் தவறான முடிவுக்கும் வருகின்றனர். அந்த அளவுக்கு சமூகம் இவர்களுள் இறுக்கத்தை (tension) ஏற்படுத்திவிட்டது. அதிக மதிப்பெண் பெற்றோரிடம் உயர்வு மனப்பான்மையையும் குறைந்த மதிப்பெண் பெற்றோரிடம் தாழ்வு மனப்பான்மையையும் மதிப்பெண் தந்துவிடுகிறது. மதிப்பெண் குறை என்பது வாழ்க்கைக் குறையல்ல. வேறொரு வாழ்க்கைக்கான குறியீடு. இதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் அனைத்து மதிப்பெண்களுக்கும் வாழ்க்கை இருக்கின்றது. இதுதான் யதார்த்தம்.
படிப்பு வராதோர்க்கு வேறு ஏதேனும் வரும்.
இணையம், கைப்பேசி, தொலைக்காட்சி, திரைப்படம் என மோகங்கள் சூழ அவற்றின் மத்தியில் படிப்பது பெரிய விஷயம்.
படிப்புத் தவிர மற்றவை திறமை அல்ல என்று கருதப்படுவது துரதிர்ஷ்டம். என்ன செய்வது.. இதனால் பிற திறன்களைப் பள்ளிக்கூடமும் வீடும் மாணவர்களிடம் வளர்ப்பதில்லை. பிற துறைகளில் சிறந்து விளங்கும் பிள்ளைகள் இருந்தும் இந்தியா சோபிப்பதில்லை. காரணம்.. மதிப்பெண்.

எண்களால் தான் வாழ்க்கை ஓட்டம் என்றாகி வருகின்றது. எங்கும் எண்கள்.. எதிலும் எண்கள். பணம் கூடத் தாளற்ற எண்கள் கொண்டே முழு பரிவர்த்தனை நடக்கப் போகின்றது. போகிற போக்கைப் பார்த்தால் ‘ஆதார் எண்’ நமது பெயர் என்றாகிவிடும் போலிருக்கிறது.
உண்மையில் நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பது எண்கள் அல்ல.. எண்ணங்கள்...
மதிப்பெண் மட்டும் நமது வாழ்க்கை அல்ல.. மதிப்புறு வாழ்க்கையே வாழ்க்கை.
மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் அவ்வளவு தொடர்பில்லை என்பது பலகால நிரூபணம். மனனத் திறன் மதித் திறன் அல்ல.