விண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பு

12விண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பு
இன்றைய காலகட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக உள்ளது. கைநிறைய சம்பளம் என்பதை விட, நாட்டின் பெருமைக்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இத்தகைய அரியதொரு வேலைவாய்ப்பை பெற பி.டெக் படிப்பு போதுமானது.

இவர்களுக்காகவே தொடங்கப்பட்டது தான் இலவச பி. டெக் படிப்பு. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மிக அருகில் வலியமலா என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி) கல்வி நிலையம். இங்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமிக்க திறமையான மாணவர்கள் படிக்கலாம். மத்திய அரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 4 ஆண்டு பி.டெக் படிப்பு கற்பிக்கப்படுகிறது. அதற்காக ஐஐஎஸ்டி சார்பில் அட்மிஷன் டெஸ்ட் என்ற தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

இக்கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது மாணவர்கள் பெறும் சலுகைகள் ஏராளம். குறிப்பாக படிக்க வரும் மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் ஏதும் இல்லை, தங்கும் இடம் மற்றும் உணவு இலவசம். மேலும் மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்க, அவர்களுக்கான மருத்துவக் காப்பீடும் இலவசமாக வழங்கப்படுகிறது. பி.டெக் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங், பி.டெக் அவியோனிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் பி.டெக் பிசிகல் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகியவை ஐஐஎஸ்டியில் கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகள் ஆகும்.

இதற்கான கல்வித்தகுதியாக பிளஸ் 2வில் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல், வேதியியல், கணிதப்பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இக்கல்லூரியில் 4 வருடங்கள் பி.டெக் முடித்த திறமையான மாணவர்களுக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உறுதியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பிரபல கல்வியாளர்கள். இதற்கான மேலும் விவரங்களை பெற www.iist.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
இது தவிர வேறு சில கல்வி நிறுவனங்களும் இத் துறையில் படிப்பைத் தருகின்றன.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,
ஐ.ஐ.எஸ்.,பெங்களூரு,
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ராஞ்சி