வேளாண் நுழைவுத்தேர்வு

ICAR (Indian Council of Agricultural Research) எனப்படும் இந்திய விவசாய ஆய்வுக்குழுமம், இந்திய விவசாய அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் கல்வித் துறையின் கீழ் இயங்கும், சுய அதிகாரமுள்ள நிறுவனமாகும். இக்குழுமம் நாடு முழுவதும் விவசாயக்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்தல், வழி நடத்துதல், மேலாண்மை செய்தல் போன்ற பணிகளைச் செய்கிறது.
விவசாயம், விவசாயப் பொறியியல், உயிர் தொழில்நுட்பம், பயிர் அறிவியல், தோட்டக்கலை, இயற்கை வள மேலாண்மை, விலங்கு அறிவியல், மீன்வள அறிவியல், விவசாய அறிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்கும் 100 நிறுவனங்களும், 70 விவசாயப் பல்கலைக்கழகங்களும் ICAR - ன் கீழே இயங்குகின்றன.
இளநிலை படிப்பில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் வேளாண் நுழைவுத் தேர்வை, ஐ.சி.ஏ.ஆர்., நடத்துகிறது. இந்தாண்டுக்கான, இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மே, 12; முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, மே, 13 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'நிர்வாக காரணங்களால், நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விரைவில் புதிய தேதிகள் அறிவிக்கப்படும். விரைவில் விண்ணப்பங்கள் வெளியிடப்படும். 'இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், www.icar.org.in என்ற இணையதளத்தில், தகவல்களை அறிந்துகொள்ளலாம். வேளாண் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அரசு உதவித்தொகையுடன் படிக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.'