சூழலியல் அறிவியல் கல்வி

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனஜீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்து உயிரினங்களின் நலவாழ்வும் சுற்றுச் சூழல் சமநிலையிலேயே தங்கியுள்ளது.
சுற்றுச் சூழல் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறைகளின் வளர்ச்சி உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுடன் சேர்ந்தே வளர்ந்துள்ளன. சுற்றுச் சூழலை மனிதன் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல.
மனிதன் சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது ஏராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கை பாதிப்புகள் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன.
இப்போது அனைத்து நாடுகளிலும் உயிர்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மெதுவாக உருவாகி வருகிறது. இனிவரும் நாட்களில் மனிதர்கள் சுற்றுச் சூழலின் மீது அக்கறையுள்ள சமூகமாக மாற வேண்டும்.
சுற்றுச் சூழல் கல்வி அதற்கு அவசியம் தேவையாகிறது. சூழலியல் கல்வி மூலம், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகள் அனைவருக்கும் கிடைக்கவும், இருக்கும் வளங்களைப் பாதுகாத்து முன்னேறும் வழிவகைகளைச் சிந்திக்கவும், செயல்படுத்தவும் சூழலியல் கல்வி உதவும்.
முக்கியமாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களை இந்த பூமியின் பிரதிநிதிகள் என நம்புகிறவர்கள் வாழும் தலைமுறை, எதிர்காலத் தலைமுறைகளுக்கு பூமியின் வளங்கள் பற்றாக்குறை ஏற்படாமல் சமமாக கிடைக்க வகை செய்ய வேண்டும். உயிரினங்களுக்கு சுகாதாரமான, வளமான வாழ்க்கை கிடைக்க ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது.
உலக சமநிலையில் ஏற்படும் மாறுபாடுகளை களைந்து வளர்ச்சி பெறுவது, ஏற்கனவே ஏற்பட்டுள்ள மாசுக் கட்டுப்பாடு மற்றும் கழிவுகளை அழிப்பது போன்றவற்றை முறையான படிப்பின் வழியாகவும் தெளிவான திட்டமிடல் மூலமாகவும் மட்டுமே முழுமையாக செயல்படுத்த முடியும். இதற்கான இயற்கை மற்றும் சமூக அறிவியலும் இணைந்த துறையே சுற்றுச்சூழல் அறிவியல்.
இத்துறையில் பயின்றவர்கள் சுற்றுச்சூழல் ஆலோசகர்களாக, சுரங்கம், உரத் தொழிற்சாலைகள், நெசவுத் தொழில், சாயப்பட்டறைகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றில் விஞ்ஞானிகளாக மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கும் செய்தியாளார்களாக உருவாகி வருவார்கள்.
சூழலியல் படிப்புகள்
• Environmental Education
• Environmental Policy and Conflict Management
• Environmental Sustainability
• Environmental Chemistry
• Toxicology and Risk Assessment
• Water and Watershed Management
• B.Sc. Environmental Science
• B.Sc. Environmental Science Wildlife Management
• B.Sc. Environmental Science Water Management
• B E M (Bachelor of Environmental Management)
இதையொட்டி மரபுசாரா ஆற்றல்(renewable energy), விவசாயம் (agriculture), நகர திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி(urban planning and development), இயற்கை வள மேலாண்மை (Natural Resource Management) என்று மேலும் பல படிப்புகள் உள்ளன.
ஐ.ஐ.டி. பெங்களூரு, வைல்ட் லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, டெகராடூன், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொஸைட்டி, மும்பை, ஜே.என். பல்கலைக்கழகம், டில்லி, ஜி.பி. பந்த் விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உ.பி. ஆகியவற்றில் இது தொடர்பான சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம்.
தமிழ்நாட்டில் : B.Tech.(Energy and Environmental Engineering) Tamil Nadu GD Agricultural University, Coimbatore