சுத்தத்தில் கவனம்... பக்கத்தில் சுவனம்...

  மவ்லவீ S.N.R. ஷவ்கத் அலி மஸ்லஹி ஈரோடு – 98658 04000
rIMG 2721 cambodia phonm penh stung meanchey garbage dump landfillசாப்பிடும் இடத்தில் சுத்தம்தான் முதல் ருசி - கோவை ஞானி.
சமீப காலங்களாகவே பருவ நிலை மாற்றம் என்பது மாற்றமும் ஏமாற்றமுமாய் ஏற்ற இறக்கத்துடன் ஓடியாடி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. காற்று, மழை, புயல், சுனாமி, வெப்பம், நில நடுக்கம், இப்போது எபோலா என இப்பிரபஞ்சம் எங்கும் சுற்றுச் சூழல் முற்றிலும் மாறிப் போய் இருக்கிறது.
காரணம் என்னவாக இருக்கும்? யோசிப்பதற்கு ஒன்றுமில்லை நம் கரங்களால் கை குலுக்கி வரவேற்கப்பட்டவைதான் அவை. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பார்கள் அது இன்றைக்கு மிக மிக பொருத்தமான பொன்மொழியாகவே நம் கண்முன் மின்னலடிக்கிறது.
இன்றைக்கு நம் கண்முன் உள்ள மிகப் பெரும் சவால் நமது சுற்றுப் புறத்தை தூய்னையாக வைத்திருப்பதுதான். நம் நாட்டின் பிரதமர் “தூய்மை பாரதம்” என்றொரு தனிப்பெரும் திட்டத்தையே ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து தொடங்கி வைக்கிறார் என்றால் நாம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளை எட்டப் போகிற வேளையில் இபோதுதான் நாம் பாலர் பாடமாகிய “சுத்தம் சோறு போடும்” “இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு” என்று படித்துக் கொண்டிருக்கிறோம்.
நீங்களும் நானும் நினைப்பது போல் அப்படி ஒன்றும் அவ்வளவு சாதாரணமான ஒரு பொருளல்ல குப்பை! மண்ணையும் விண்ணையும் ஏன் இப்பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைக்கிறது என்றால் அது மிகையல்ல...
இன்று நாம் நமது ஜன்னல் வழியே தூக்கி வீசும் கழிவுகள்தான் நாளை நமது வீட்டு வாசல் வழியே வந்து தாக்கத் தொடங்குகிறது தனது அழிவுக் கரங்களாலும் ஆபத்துகளாலும்...! நல்ல வேளை நாம்தான் அடிக்கடி இருப்பதில்லை நமது வீட்டில்... ஆங்காங்கே ரெடிமேட் ஹோட்டல்களும், மோட்டல்களும் வந்து விட்ட பிறகு நமக்கென்ன வேலை நமது வீடுகளில் உறங்குவதைத் தவிர...!
“அவர் நல்லாத்தான் இருந்தாரு... எந்த கெட்ட பழக்கமும் கிடையாது... திடீர்னு அவருக்கு கேன்ஸர்னு சொல்றாங்க என்னன்னு தெரியல.. நேத்து திடீர்னு மவுத்தா போயிட்டாரு... யாரும் பார்க்க வேணாம்னு சொல்லி உடனே அடக்கம் பண்ணிட்டாங்க... அல்லாஹ்தான் எல்லாத்தையும் காப்பாத்தனும்...” இப்படியான சோக உரையாடல்களை நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இன்றைக்காவது நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்... “நல்லா இருந்த மனுஷனுக்கு கேன்சர் எப்படி வந்தது?”
பல இடங்களில் குப்பை மேடுகள் தீப்பிடித்து அதுவும் “பற்றிப் பிடித்து கொளுந்து விட்டு எரிவதையும் சற்று நேரத்தில் அணைந்து போய் புகை மட்டும் கசிந்து கொண்டிருப்பதையும் பார்த்திருக்கலாம்.
இங்கே “தீ” எப்படி வந்தது? இதைத்தான் “கொள்ளி வாய் பிசாசு” என்கிறார்கள் அந்த பிசாசின் அறிவியல் பெயர்தான் “மீத்தேன்” என்பது நம்மில் பலருக்குத் தெரியாது இந்த வாயுதான் ஆவியாய் மாறி தீயைப் பற்ற வைக்க இதை பொறுத்துக் கொள்ள முடியாத “கார்பண்டை ஆக்ஸைடு” காற்று வழியே ஆவியாய் வந்து அணைத்துப் போடுகிறது இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அப்புகையிலிருந்து “ஃபீனிக்ஸ்” பறவையாய் கிளம்பி வரும் “டயாக்சின்” ஆவி வாயுவை…!
இந்த ‘டயாக்சின்’தான் எந்த நல்ல மனிதரையும் தனது “புற்று நோயா”ல் பற்றிப் பிடித்துக் கொள்கிறது. இது வீட்டு குப்பையிலிருந்துதான் வந்தது என்றால் நம்ப முடிகிறதா என்ன? suthamஇது மாதிரிக்கு ஒன்றுதான். இது மாதிரியான பண்ணூற்றுகணக்கான நோய் நொடிகள் நம்மூர் குப்பையில் பூத்துக் குலுங்குகின்றன. அப்பூக்களை நாம் பறிப்பற்கு முன்பே அவைகள் நம்மைப் பறித்துச் சென்று விடுகின்றன என்பதுதான் இன்றைக்கு நம் முன் உள்ள மிகப்பெரும் சோகம்.
நமது இந்திய தேசத்தில் ஒரு நாளில் மட்டும் குவியும் குப்பைகள் எவ்வளவு தெரியுமா 1,27,486 மெட்ரிக் டன், தமிழகத்தில் 14,000 மெட்ரிக் டன், சென்னையில் 6,604, திருப்பூரில் 550 மெட்ரிக் டன் என புள்ளி விவரங்கள் புலம்புகின்றன.
சென்னை மாநகராட்சி குப்பை நிர்வாகத்திற்காக மட்டும் ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் செலவு செய்கிறது. அப்படி இருந்தும் “சிங்கார சென்னை”யை என்றைக்காவது புத்தம் புது சாலைகளுடன் கண்டதுண்டா...? ஒற்றை மழை சற்று நேரம் நின்று பெய்து விட்டால் போதும் “கூவம்” உங்கள் காலடியில் ஓடுவதையும், ரோடுகளிலும், வீதிகளிலும் கண் குளிரக் காணலாம்.
இவற்றில் குடியிருப்போர்களின் குப்பைகள் 68% இடம் பிடிக்கின்றன. வணிகர்களின் குப்பைகள் 16% ஆகும். இதர தொழிற்சாலைகள், கல்லூரிகள், மண்டபங்கள் என 16% இடம் பிடிக்கின்றன எனவே முதலில் கவனம் செலுத்த வேண்டியது குடிமக்கள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெளிவாகத் தெரியவருகிறது.
இன்னும் சொல்லப் போனால் இக்குப்பைகளில் மக்கும் குப்பைகள் 60% உள்ளது. மக்கா குப்பைகள் 35% உள்ளது மற்றவை 05 % உள்ளது அப்படியானால் ஏன் நாளுக்கு நாள் குப்பை மேடுகள் ஊட்டி மலை போல் உயர்ந்து கொண்டே வருகின்றன... வெறும் 40% குப்பைகளையா நம்மால் கட்டுப் படுத்த முடியவில்லை!
இது யோசிக்க வேண்டிய ஒன்று நாம் நமது குப்பைகளை எப்படி கையாளுகிறோம் என்பது மிக மிக கவனிக்க வேண்டிய ஒன்று சாதாரணமாக நமது வீட்டுக் குப்பைகளை நாம் என்ன செய்கிறோம்...? முன்பெல்லாம் வீட்டருகே குப்பை குழிகள் இருந்தன அவற்றில் கொண்டு போய் கொட்டுவோம் இப்போதெல்லாம் எல்லாமுமே “யூஸ் அண்ட் த்ரோ” மற்றும் “கேரி பேக்” என்றழைக்கப்படும் நெகிழிகள் உலகுக்கு வந்து விட்டோம்.
அது மண்ணில் நெகிழும் நெகிழியாக இருந்தால் பரவாயில்லை நெகிழா நெகிழியாக (பிளாஸ்டிக் பாலிதீன் பைகள்) யால் நாம் என்ன செய்ய முடியும் அதில்தான் மக்கும் குப்பைகளைக் கொட்டி எறும்போ, ஈயோ உள்ளே புகுந்து விடாதவாறு அதன் வாய்களை இறுகக் கட்டிப் போட்டு விடுகிறோம் எலி வாயிலிருந்து தப்பி புலி வாயிலே மாட்டிக் கொண்டது போல் ஆகிவிட்டது உள்ளே உள்ள குப்பைக்கு...! இப்படி எல்லோரும் “கேரிபேக்” எனும் நெகிழியில் குப்பைகளைக் கட்டிப் போடுவதால் மக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் சுமார் 80% குப்பைகள் குப்பைகளாகவே மறுமாற்றம் பெற்று விடுகின்றன. இது அபாயகரமானது.
வெளிநாடுகளில் “திடக் கழிவு மேலாண்மை” வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கூட அவைகளை வெகு அற்புதமாக “பேக்கிங்” செய்து கொண்டு போகிறார்கள், ஆனால் இங்கு நடப்பது என்ன?
குப்பை வண்டி, குப்பை லாரி என்று சொல்வார்கள் பெயர் மிகவும் பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார்கள் ஆம் “கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லப்படுவது உண்மையோ இல்லையோ” ஆனால் எங்க ஊர் குப்பை வண்டி செல்லுமிடமெல்லாம் கழிவுதான் என்பது உண்மையிலும் உண்மை. “இனி வேண்டாம் என்று குப்பையில் போடப்பட்ட வண்டியே மீண்டும் உயிர் பெற்று வந்து தமது எக்ஸ்ரே எழும்புக் கூடுகளில் குப்பைகளை சுமந்து கொண்டு செல்லும்போது “அசோகர்” என்றோ நட்டு வைத்த சாலையோர மரங்களுக்கு ஒரே நேரத்தில் இரு புறமும் உரம் போட்டுச் செல்வதை விட வேறு எண்ண புண்ணிய காரியம் செய்து விட முடியும்…? இது தவிர வீட்டுக்குள்ளேயே தவம் இருக்கும் குப்பைகள் இருக்கிறதே அது கணக்கில் அடங்காதவை.
காலி பாட்டில்கள், காலாவதியான பேட்டரிகள், கால் முறிந்த நாற்காலிகள், வீடு காலி செய்யும் போது கட்டாயம் வேண்டும் என எடுத்து வைத்திருக்கும் மெகா சைஸ் அட்டை பெட்டிகள், அதற்குள்ளே எலிகளும் கரப்பான் பூச்சிகளும் கூடவே மூட்டை பூச்சிகளும் தினத் தந்தி எனக்கு! அவள் விகடன் உனக்கு! என சண்டை போட்டுக் கொள்ளும்.
sutham2பழைய துணிகள், துருப் பிடித்த ஆணிகள், இளைத்துப் போன காலனிகள், போன வருஷம் கடுமையான காய்ச்சல் வந்ததை தினம் தினம் நினைவூட்டிக் கொண்டிருக்கும் மருந்துப் புட்டிகள், அரசியல் இன்றி அணுவும் அசையாது என்பதை நினைவூட்டும் பழுதாகிப் போன தொலைக் காட்சி பெட்டி, மேசை மின் விசிறி, மேசை மிக்ஸி, மின்னடுப்பு, மிதி வண்டி , மடிக்கணினி என இலவசக் குப்பைகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். போதாக்குறைக்கு ஜனரஞ்சக இதழ்கள் தங்களது விற்பனைகளைக் கூட்டிக் கொள்வதற்காக கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அள்ளிக் கொடுக்கும் வாராந்திர / மாதாந்திர இலவசங்கள் இருக்கிறதே அவை சொல்லிமாளாதவை இப்போதெல்லாம் இலவசங்களின்றி இங்கு எதுவுமே விற்பனையாகப் போவதில்லை அது காதுக்குப் போடும் தங்கத்தகடாய் இருந்தாலும் சரி! அல்லது கால் நடைக்குப் போடும் தவிடாய் இருந்தாலும் சரி! விலையில்லாப் பொருள் இருந்தால்தான் அது விலையுள்ள பொருளாய் கொஞ்சமாவது மக்கள் மனதில் மதிப்பு பெறும்! வாழ்வதற்கு பொருள் வேண்டும் அதேவேளை வாழ்வதிலும் பொருள் (அர்த்தம்) வேண்டும் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்கிறார்கள் உளப்பூர்வமாக.
“தூய்மை ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் மறுபாதி”
“உங்கள் சுற்றுப் புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்” “எந்த வகையிலும் பிறருக்கு நோவினை தராதீர்கள்” “நடைபாதைகளில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவது தர்மச் செயல்”
“குளங்களில் மலம் ஜலம் கழிக்காதீர்”
“வீடுகளை மயானங்களாய் ஆக்காதீர்கள்”
மரங்களை வெட்டாதீர்கள்”
“நிலங்களை மாசுபடுத்தாதீர்கள்”
“விவசாய நிலங்களை அழிக்காதீர்கள்”
என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெகு அழகாக சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
 ஆனால் இன்றைக்கு முஸ்லிம்கள்தான் சுத்தமற்றவர்களாக, சுகாதாரமற்றவர்களாக வலம் வருவது பெரும் வேதனை அளிக்கிறது இஸ்லாமிய இல்லங்களில் தூய்மை இல்லை. மஸ்ஜித்களிலும், மதரஸாக்களிலும் மினாராவையும், மிஹ்ராபையும் தவிர மீதியாவும் பச்சை பாசியாலும், சிலந்தி வலைகளாலும் “கிராஃப்ட் ஆர்ட்” செய்யப்பட்டு ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது யாவுமே நமக்கு பழக்கப்பட்டுப் போனதால் வாருங்கள் இனியேனும் நாம் நமது சுத்தங்களை போற்றுவோம்!! நமது அசுத்தங்களை அகற்றுவோம்!!!