சட்டம் பயின்றால் சாத்திக்கலாம்!

o-LEADERSHIP-facebook

 அ. மார்க்ஸ்
சட்டக் கல்லூரி ஒன்றை உருவாக்கும் நோக்குடனும், சட்டக் கல்வி பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தும் எண்ணத்துடனும் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டக் கல்வி என்பதை பொறுத்தமட்டில் இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டக் கல்வி

என்பது ஏதோ வழக்குரைஞர்கள் மட்டுமே படிக்க வேண்டிய ஒன்றல்ல! எல்லோருமே சட்டம் பற்றி குறிப்பிட்ட அளவு அறிந்திருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இது ஜனநாயக நாடு என்று சொல்கிறோம், சட்டத்தின் ஆட்சி என்று சொல்கிறோம், Constitutional Governance என்று சொல்லுகிறோம். இந்த வார்த்தைகளுக்கு ஏதாவது பொருள் இருக்க வேண்டுமானால் சட்டம் குறித்த அறிவு நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போதுதான் இங்கே சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறதா என்பதை அறியவும் நம்முடைய உரிமைகளைப் பெறவும் வழியாக இருக்கும். என்கிற வகையில் சட்டக் கல்வி தொடர்பான நமது அடிப்படைகளை நமது அரசியல் சட்டம் என்பது என்ன, அது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது போன்ற அடிப்படையான விஷயங்களை எல்லா மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது.
அடுத்ததாக வழக்கறிஞர்கள் சட்டம் படிப்பது வழக்காடுவதற்கு மட்டுமல்ல! சட்டம் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஒரு பார்வை கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.
ஏனெனில் பலவிதமான சட்டங்கள் இருக்கிறது. சட்டங்களின் தாயான அரசியல் சட்டம், அதை செயல்படுத்தக் கூடிய இந்தியன் பீனல் கோடு, கிரிமினல் பொசிஜர் கோடு, இது போன்ற ஏகப்பட்ட சட்டங்கள் இருக்கிறது. இது அல்லாத ஸ்பெஷல் சட்டங்கள் நெருக்கடி நிலை நிலவுகிறது என்று சொல்லி நம்முடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதற்காக கொண்டு வரப்படும் தடா, பொடா, அஃப்சா போன்று ஏராளமான சட்டங்கள் இங்கு இருக்கின்றன.
இதில் சாதாரண சட்டங்கள் கூட முழுமையான சட்டங்கள் என்றோ மிகச் சரியான சட்டங்கள் என்றோ சொல்லி விட முடியாது. சட்டங்கள் மாறிக் கொண்டே இருக்கும். இன்றைக்கு இருக்கும் ஒரு சட்டம் நாளை மாறும். மாற்றம் என்பது அவசியம். உதாரணமாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சட்டம். சமீபத்தில் வெளியான வர்மா கமிஷன் அறிக்கை அதை ஒட்டி உருவாக்கப்படும் மாற்றங்கள் என இன்று பெருமளவு அந்த சட்டம் மாற்றம் கண்டிருக்கிறது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் 73 இல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மதுரா என்ற பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு பெரும் போராட்டம் இந்தியாவில் நடைபெற்றது. கிட்டதட்ட 7 ஆண்டுகள் பல்வேறு பெண்கள் இயக்கங்கள் இந்த சட்டத்தில் உள்ள (உ.ம் விசாரணை என்கிற பெயரில் அந்தப் பெண்ணை துன்புறுத்தி பேச விடாமல் செய்வது போன்ற) ஓட்டைகள் போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் இருந்த சூழலில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக பல மாநாடுகள் நடை பெற்று இறுதியாக 1980 இல் மும்பையில் ஒரு மாநாடு நடைபெற்று சட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட்டது. பின்பு 1983 இல் ஒரு திருத்தம். தற்போது டெல்லியில் நடபெற்ற பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு ஒரு மாற்றம் என சமூகம் மாற்றமடைய, மேன்மை பெற சட்டத்தில் மாற்றம் என்பது அவசியமாகிறது.
காலம் மாற மாற சட்டங்களும் மாறிகொண்டுதான் இருக்கும். இந்த மாற்றத்தை கிரகித்துக்கொண்டு இன்னும் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று சொல்லக்கூடியவர்கள் உருவாக வேண்டும்.
சட்டப் படிப்பு என்பது வழக்கிலிருந்து நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் வழக்குகளிலிருந்து பாதுகாக்க மட்டுமல்ல, சட்ட அறிவு என்பது வேறு பல விஷயங்களை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது, நீதியான மனநிலையையும் நெறிமிக்க பார்வையையும் நமக்குத் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இன்றைக்கு சட்டத்தை பொறுத்தமட்டில் குறிப்பாக அடித்தள மக்கள் சிறுபான்மையினர் இவர்களுக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான பாதுகாப்புச் சட்டமாகத்தான் இருக்கிறது.
நம் நாட்டுச் சட்டத்தை பொறுத்தமட்டில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசியல் சட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கிறது குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு அவர்களுடைய மதச் சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டிருக்க, மற்ற அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, உயிர் வாழும் உரிமை, சொத்துரிமை போன்றவற்றில் எந்த நிபந்தனையும் இல்லாமல் வரையறுக்கப்பட்டிருக்கிறது. மதச் சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வரை என்று இணைத்து வைத்தார்கள். அப்படி இணைத்து வைத்தவர்கள் யார் என்றால் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் அரசியல் சட்ட அவையில் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல். வல்லபாய் பட்டேல் இன்று ஒற்றுமையின் திருவுருவாக மோடியால் முன் நிறுத்தப்படுகிறார். ஆனால் இந்தியச் சமூகத்தைப் பிளவுபடுத்துவதில் முதன்மையாக இருந்தவர் அவர். குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இடஒதுக்கீடு போன்றவற்றை தடுத்து நிறுத்தியவர்.
அரசியல் நிர்ணயச் சட்ட விவாதங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அது இரண்டு வருடம் நடைபெற்றது. வேறு பல நாடுகளைக் காட்டிலும் தெளிவாகவும், விரிவாகவும் எழுதப்பட்டது நம்முடைய அரசியல் சட்டம்.
அம்பேத்கர், நேரு போன்ற முற்போக்கானவர்கள் அதில் இருந்தர்கள் என்பது மட்டுமல்லாமல் 1950 இல்தான் அது பூர்த்தியானது. 1948 இல் ஐ.நா. சபையின் Universal Declaration of Human Rights என்று சொல்லப்படக்கூடிய உலக மனித உரிமை பிரகடனம் வெளியிடப்பட்டது.Law1
அது முழுமையாக மனித உரிமைகளை வரையறுத்த ஒரு பிரகடனம். எனவே அந்த பிரகடனத்திற்குப் பின்னால் உருவான அரசியல் சட்டம் என்பதனால் அந்தப் பிரகடனத்தில் இருக்கக்கூடிய முக்கியமான கூறுகள் நம்முடைய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டன.
எனவே வேறு பல ஜனநாயக நாடுகளைக் காட்டிலும் நம்முடைய அரசியல் சட்டம் தெளிவானதாகவும் குறிப்பாக Fundamental Rights என்கிற அடிப்படை உரிமைகள் பகுதி மிகவும் அற்புதமாக வரையறுக்கப்பட்ட ஒன்று என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதில் சில குறைபாடுகள் இருந்தாலும் கூட!
இதில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்த விவாதம் வந்த போது கடுமையாக அதை எதிர்த்துப் பேசியவர் வல்லபாய் பட்டேல். இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது போன்ற Separate Electorates என்ற முஸ்லிம்களுக்கென்று தனிதொகுதி கொடுக்கக்கூடாது என்று வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் கடுமையாக வாதிட்டார்கள்.
நீங்கள் நாட்டையே பிரித்துவிட்டீர்கள் இனிமேலும் இப்படி பேசுவதில் அர்த்தம் கிடையாது. உங்களது விசுவாசத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் இடஒதுகீடு கேட்டீர்களானால் மீண்டும் இந்த நாட்டை பிரிக்கும் நோக்கத்தில் இருக்கிறீர்கள் என நாங்கள் நினைப்போம் என அப்போது வல்லபாய் பட்டேல் பேசினார். முஸ்லிம்களால் ஒன்றும் பேச முடியவில்லை. எதுவும் பேசாமல் இருந்து விடுட்டார்கள்.
அதன் விளைவு முதலில் 1948 இல் தலித்களுக்கு கொடுக்கப்பட்டது போல இடஒதுக்கீடு கொடுக்க முடிவுக்கு வருகிறார்கள். அதாவது மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மந்திரி சபையில் இட ஒதுக்கீடு, மூன்றாவதாக தேர்தலில் இடஒதுக்கீடு. போன்ற விஷயங்கள் ஒத்துக் கொள்ளப்பட்டன.
1950 இல் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு சௌத்ரி காலிக் உஸ்மான் போன்ற மிக முக்கியமான இஸ்லாமிய தலைவர்கள் இனிமேல் இந்தியாவில் இருப்பதில் அர்த்தமில்லை என்று எண்ணி நாடு கடந்து போய் விட்டார்கள். மாப்பிள்ளை இல்லாத கல்யாணம் என்று சர்ச்சில் சொன்னது போல அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம்களது எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு கூட இல்லை என்றானது.
1950 இல் அரசியல் சட்டம் வெளியிட இருந்த போது சிறுபான்மை தொடர்பான சட்ட உருவாக்கக் குழு தலைவரான வல்லபாய் பட்டேல் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். முஸ்லிகள், சீக்கியர்கள் அதிர்ந்து போனார்கள். ஏன் என்று கேட்ட போது சில முஸ்லிம் தலைவர்கள் என்னிடம் வந்து இந்த உரிமைகள் எங்களுக்கு தேவையில்லை என்று சொன்னார்கள் என்று கூறினார். மறுபடியும் அமர்ந்து பேசுகிறார்கள், வாக்கெடுப்புக்கு விடுகிறார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து போன பிறகு வட நாட்டு முஸ்லிம்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக வாக்களித்தார்கள். தமிழக முஸ்லிம் தலைவர்கள் மட்டும் ஆதரவாக வாக்களித்தார்கள். கடைசியில் தோல்வி அடைந்து முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ஊற்றி மூடப்பட்டது.

நம்முடைய அரசியல் சட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று 1. fundamental rights 2. directive principles. உலகம் முழுவதும் இப்படித்தான் அரசியல் எழுதப்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சில நாடுகளில் மட்டும்தான் இது போன்று சட்டங்கள் இரண்டாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. ஏன் இரண்டாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது என்றால் இந்தியா என்பது பல்வேறு வகைப்பட்ட இனம், மதம், ஜாதி, மொழி கொண்ட மக்கள் வசிக்கக்கூடிய நாடு இங்கே பிரச்சனைகள் உள்ளன. இங்கு எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது சாத்தியம் இல்லை. எடுத்துக்காட்டாக விவாகரத்து உரிமை, சொத்துரிமை, வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்ற காரியங்களில் மதரீதியான வேறுபாடுகள் இருக்கின்றன. காந்தி பஞ்சாயத்துராஜ் வேண்டும் என்றார் (மக்கள் அதிகாரம் பெற்றவர்களாகவும் அரசாங்கம் பலவீனமானதகவும் இருக்க வேண்டும்) அம்பேத்கர், பெரியார் போன்றோர் கிராமப் பஞ்சாயத்து வேண்டாம் ஏனெனில் இந்த நாடு சாதி ரீதியான கட்டமைப்புள்ள நாடு கிராமங்களுக்கு அதிகாரம் வழங்குகிறபோது சாதியம் மேலும் வலுவடையும், அதனால் இங்கு அரசு பலமாக இருக்க வேண்டும் என்றனர். இந்த இரண்டு விதமான கருத்துக்கள் அரசியல் நிர்ணய சபையில் வந்த போதுதான் ஒருவர் சொன்னார்: சட்டத்தை இரண்டு விதமாக பிரித்து விடுங்கள். இதை நீங்கள் directive principles இல் முதலாவதாக கொண்டு வாருங்கள் என்றார். அதாவது செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டம் சொல்லும் ஆனால் உடனடியாக செய்ய வேண்டும் என்பதோ செய்யாததால் அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர முடியும் என்பதோ சாத்தியமில்லை, இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ் அடிப்படை உரிமையாக கொடுக்க முடியாது, அதே சமயத்தில் வழிகாட்டும் நெறிமுறைகளாக வைக்கலாம் என்று பொதுவான முடிவெடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பொதுசிவில் சட்டமும் directive principles வழிகாட்டும் நெறிமுறைகளில் கொண்டு வரப்பட்டது. அதனால்தான் சில குறைபாடுகள் இருந்த போதிலும் கூட பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சிறப்பானது.
ஆனால் இந்த சட்டத்தை செயல்முறைப் படுத்துவதற்காக இருக்கிற பீனல்கோடு, கிரிமினல் பொசிஜர் கோடு போன்றவை அத்தனையும் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. அன்றைய சுதந்திரப் போராட்டத்தையும் உரிமைப் போராட்டத்தையும் ஒடுக்குகிற நோக்கில் உருவாக்கப்பட்டது, அதே சட்டங்கள் இன்றும் தொடர்கிறது. உதாரணமாக சிறைச்சாலைக்குள் கதர் குல்லாய் போடக்கூடாது என்பது ஒன்று, இன்று வரை அது மாற்றப்படவில்லை. கட்டாய உழைப்பு இன்றைக்கும் அரசாங்கம் நினைத்தால் ஊதியம் வழங்காமல் கட்டாய உழைப்பு செய்யச் சொல்லி உங்களை நிர்ப்பந்திக்க முடியும். இன்றைக்கும் கூட பிச்சை எடுத்தால் உங்களை குற்றவாளியாக்கலாம், உங்களுக்கு தொழு நோய் இருக்கிறதென்று சொல்லி குற்றவாளியாக்கலாம். இப்படி சில மோசமான காலத்திற்கு ஒவ்வாத சட்டங்கள்தான் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கின்றன. இதை லா கமிஷன்கள் திருத்த வேண்டும் என இப்போது அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. உண்மையில் இவை திருத்தப்பட வேண்டும் இது பற்றிய விழிப்புணர்வு நமக்கு இல்லாமல் இருக்கிறது.
நம்முடைய நீதிமன்றங்கள் தலைசிறந்த தீர்ப்பை வழங்கி இருக்கின்றன. இருந்தபோதிலும் இதிலும் மிகப் பெரும் தவறுகள் நடந்திருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 2012 இல் ஓய்வு பெற்ற 16 நீதிபதிகள் குடியரசு மாளிகைக்குச் சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து நாங்கள் கொடுத்த 13 மரண தண்டனைகள் தப்பான மரண தண்டனைகள் சட்டத்திற்கு விரோதமாக நாங்கள் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு சட்டத்தின் 72 ஆம் விதி வழங்கும் உரிமையை பயன்படுத்தி மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
எனவே சட்டமென்பது எப்போதும் முழுமையான ஒன்றல்ல, சட்டத்தை நிறைவேற்றுவதில் இத்தனை சிக்கல்கள் இருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே சட்டம் என்பது சமூகம் வளர வளர மாறிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே சட்டக் கல்வி என்பது சட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல! சட்டத்தின் போதனையை புரிந்து கொள்வதும் அதை நீக்குவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்வதும் சட்டக் கல்வியின் மூலம் செய்ய வேண்டிய பணியாக இருக்கிறது. எனவே சட்டத்தை தெரிந்து கொள்ளவும் அதன் அடிப்படையில் போராடவும் நம்முடைய வழக்கறிஞர்கள் ஏராளமாக உருவாக வேண்டும்.