சட்டக் கல்லூரி காலத்தின் தேவை!

வழக்கறிஞர் பா.ப.மோகன்

Fundamental-Rights-of-Indian-Citizens
நான் ஒரு தோழமை இயக்கத்தில் பயின்று முழு நேரப் பணியாளனாக இருந்து பயிற்சி செய்து வழக்கறிஞராக வந்தவன். அப்படி இருந்த போதிலும் இந்திய சமூகத்தில் சமமற்ற நிலையில் வாழக்கூடி ஆதிவாசிகள், தலித்கள், சிறுபான்மை

மக்கள், உழைக்கும் மக்கள், பெண்கள் ஆகியோர்களுக்கு மத்தியில் பயணித்து பணி செய்கிற பொழுதுதான் எனக்கே ஒரு புதிய வெளிச்சம் ஏற்பட்டது.

அப்படி தலித்களுக்கான ஒரு மிகப் பெரும் போராட்டத்தை மேலவளவு வழக்கில் நடத்தினோம். இதுபோன்ற வழக்குகளை இன்றைக்கு தமிழகத்தின் பல இடங்களில் நடத்திக் கொண்டிருக்கிறோம். அது போலத்தான் கோயம்புத்தூர் வழக்கிலே பாதிக்கப்பட்டு கையறு நிலையிலே இருந்த சிறைவாசிகள், அவர்களது குடும்பத்தார்கள் என்னை தொடர்பு கொண்ட போது சிறைக்கு சென்று அவர்களைப் பார்த்து பேசி இந்த வழக்கை நடத்த வேண்டுமா என்று நான் யோசித்தேன் ? அப்போது என்னைச் சந்தித்த சில சகோதரர்கள் அவர்கள் இருப்பதோ சிறையில் வெளியில் வந்து நேரடியாக உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடையாது எனவே நீங்கள் நேரடியாகச் சென்று அவர்களைப் பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதுவரை கோயமுத்தூர் வழக்கின் சிறைவாசிகள் பலரை எனக்கு அறிமுகம் கிடையாது. பின்பு தடா சிறைவாசிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த வழக்கிலே மேட்டுப்பாளையம் ரோட்டைச் சேர்ந்த அந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கிரிமினல் கான்ஃபரன்சியை அவர்கள் மீது பொய்யாக ஜோடித்து சிறை வைக்கப்பட்டார்கள். அந்த சிறைவாசிகளின் குடும்பந்தார்கள் எனக்கு எழுதிய கடிதம் தான் என்னை அந்த வழக்கை எடுத்து நடத்தும்படி தூண்டியது.

வரலாற்றைப் படிக்கிற போது இந்த முஸ்லிம் சமூகம் 400 ஆண்டுகாலம் இந்த மண்ணின் மக்களுக்காக இந்த நாட்டின் எல்லாவிதமான வளர்ச்சிக்காக, இலக்கியத்திற்காக என சகல துறைகளிலும் தன்னுடைய பங்களிப்பை முழுமையாக செய்துள்ளது. குறிப்பாக இன்று நீதிமன்றங்களிலே பயன்படுத்தப்படுகிற சொற்களில் பல சொற்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வழங்கியது. இப்படி வரலாற்றில் வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு சமூகம் மிக மோசமாக ஒடுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டு இருக்கிற காட்சியை அன்றைக்குப் பார்த்தேன். இது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

o-PRISON-CELL-facebookஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய நான் முஸ்லிம் குடும்பங்களுக்காக 2000 லிருந்து தொடங்கி 2008 வரை வழக்குகளை நடத்தினேன். அதில் பலபேரை இணைத்தேன். அதில் சகோதரர் CMN சலீம் அவர்களும் ஒருவர். அவர் சென்னையில் நடத்திய கண்ணீர் கருத்தரங்கம் சமூகத்தில் ஒரு பொறியாக கிளம்பி சிறைவாசிகளின் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருந்தது. இன்று பலர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு 18 பேர்கள் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதி கேட்டு காத்திருக்கிறார்கள்.

இன்று பல்லாயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய செவ்வாய்க்குப் போக முடியும். இந்தியா மங்கள்யானை அனுப்பி விண்ணில் நிலை நிறுத்தி இருக்கிறது, இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மின்னணு தவல் தொழில் நுட்பம் ஏற்படுத்திய புரட்சி காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஏன் மனிதர்கள் பாகுபடுத்தப்படுகிறார்கள், ஏன் தீண்டாமை இருக்கிறது, ஏன் ஒரு சமூகம் புறக்கணிக்கப்படுகிறது, ஏன் ஒரு சமூகம் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்படுகிறது. இதை மாற்ற முடியாதா? என்ற கேள்விக்கு பதில் என்ன?
சமீபத்தில் இஸ்ரேலுக்கும் ஃபலஸ்தீனுக்கும் நடந்த யுத்தத்தில் ஹமாஸ் நடத்திய எதிர்தாக்குதல் எதைக் காட்டுகிறது என்றால் ஒரு சமூகம் அறிவாற்றல் மிக்க சமூகமாக உருவாகிற போது எதையும் எதிர் கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கிறது. அதற்குக் காரணம் ஃபலஸ்தீனர்கள் தொழில் நுட்பத் துறையிலே தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

அதைப் போல தமிழகத்தில் நாம் அறிவுத்துறையில் நம்மை தரம் உயர்த்தி சமூக நீதியை வென்றெடுப்பதற்கு தமிழகத்திலே ஒரு சட்டக் கல்லூரியை உருவாக்குவது மிக மிக அவசியம்.
ஆற்றல் மிக்கவர்கள் ஆங்காங்கே உதிரிகளாக இருக்கிறார்கள். என்னிடம் ஜூனியராக இருந்த ரைஹானா என்ற பெண் சிவில் ஜட்ஜஸ் தேர்வில் தமிழகத்திலேயே எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று இன்று ஓமலூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பதும் முக்கியம்.

National Anthem of Indiaஇன்று எதிர் கொள்ளும் தாக்குதல் சாதாரணமானதல்ல, உலகமயமாக்கலின் விளைவாக உலகம் உள்ளங்கைக்குள் வந்திருக்கிறது. எந்த தகவலையும் உடனடியாக பெறவும் பரிமாறவும் முடியும். உலகமயம் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் சக்திகளுக்கு சேவையாட்களாக நாடுகளை மாற்றி இருக்கிறது. இந்தியாவில் ஆட்சி மாறியிருக்கிறது. மன்மோகன் போய் மோடி வந்திருக்கிறார். ஆனால் இருவருமே பன்னாட்டுக் கம்பெனிகளின் சேவகர்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருகிறார்கள். ஒரு வித்தியாசம் மோடியின் கூட்டம் ஃபாஸிஸ்ட் கூட்டம் என்ற மிகப்பெரிய ஆபத்தும் நமக்கு சேர்ந்தே இருக்கிறது.
உலகமயமும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கமும் காவிக் கூடாரத்தின் ஃபாஸிசமும் கை கோர்த்திருக்கும் காலத்தில் நாம் மிகப் பெரும் சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒன்றுபட்ட ஒர் அறிவுப் பூர்வமான ஆக்கப்பூர்வமான சமூகமாக நம்மை தரம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு காலத்தின் தேவையாக நான் கருதுவது ஒரு சட்டக்கல்லூரியைத் தான். இந்தியாவில் மொத்தம் 913 சட்டக்கல்லூரிகள் இருப்பதாக தெரிகிறது. அதில் 184 வது லா கமிஷன் ரிப்போர்ட் இப்போது வந்திருக்கிறது அதில் சட்டக் கல்வியையே மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. முன்பை விட இப்போது சட்டப் படிப்பை அதிகமானவர்கள் தேர்வு செய்கிறார்கள்.

கல்வி அடிப்படை உரிமை என்பது சட்டமாக்கப்பட்டு இன்றைக்கு கல்வியின் அவசியம் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ள சூழலில் சட்டக் கல்வி என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்க்கையின் எந்தப் பகுதியும் சட்டத்தின் பிடியிலிருந்து விடுபடுவது கிடையாது. இந்த நாடு முடியாட்சி என்பதிலிருந்து மாறி ஜனநாயக ஆட்சிக்கு திரும்பியதிலிருந்து நாடு சட்டத்தின் ஆட்சியின் கீழ் வந்து விட்டது. எப்போது சட்டத்தின் ஆட்சி வந்து விடுகிறதோ அது முதல் சட்டம் காட்டுகிற வழிமுறையில்தான் சமூகம் இயங்க முடியும். சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஜனநாயக ஆட்சி வந்த பிறகு வழக்கறிஞர் மட்டுமல்ல சமூகத்திலே இருக்கிற ஒவ்வொருவரும் சட்டம் குறித்து தெரிந்து இருக்க வேண்டியது நியதி.

Ignorance of the Law Is No Excuse என்று சொல்வார்கள், அதாவது யாரவது ஒருவரை கத்தியால் குத்தி விட்டு சட்டம் தெரியாமல் குத்தி விட்டேன் என்னை மன்னித்து விட்டு விடுங்கள் என்று சொல்ல முடியுமா? குத்தினால் அது தண்டனைக்குரிய குற்றம்தான். எனவே தண்டிக்கப்படுவது உறுதி. Every Citizen of Countries Expert Know Law என்று சொல்வார்கள். எனவே படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சட்ட அறிவு அவசியம். சட்டம் நீதிமன்றத்தோடு நிற்கவில்லை வாழ்க்கையின் சகல துறைகளிலும் சட்டம் தன் கடமையை செய்கிறது.

சட்டத்துறை இன்று நவீனமாகவும் இலகுவாகவும் மாறியிருக்கிறது. முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் பணம் திரட்டி அங்குள்ள ஒரு வக்கீலை தேடிப் பிடிக்க வேண்டும். இன்று இ ஃபைலிங் அடிப்படையில் சட்டம் படித்த ஒரு வழக்கறிஞர் அவர் இருக்கும் இடத்தில் இருந்தே வழக்கை பதிவு செய்யலாம். உயர் நீதிமன்றத்திற்கு இந்த முறை இன்னும் வரவில்லை, வர வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறது.
அது போல மனித உரிமைக்கான போராட்டம் என்பது இன்று சர்வதேச தன்மை கொண்டது. மோடி அமெரிக்கா சென்ற போது பிரம்மாண்டமான எழுச்சி என்ற மாயத் தோற்றத்தை ஏற்டுத்தினார்கள் அது ஒரு பக்க செய்திதான். ஆனால் மோடி பேசிய இடங்களில் எல்லாம் நீ ஒரு “இனப்படுகொலைகாரன்” 2000 முஸ்லிம்களைக் கொன்றவன் நீ, இந்த நாட்டிற்கு வருவதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேட்டு மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை எந்த ஊடகமும் வெளிச்சத்திற்கு கொண்டு வரவில்லை. பிரதமராக இருந்தாலும் ஒரு கொலைகாரன் தண்டிக்கப்பட முடியும் என்பதைத்தான் நாம் அறிய வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு சட்டக் கல்லூரியை ஆரம்பிப்பது என்பது நம்மை போன்ற ஒடுக்கப்படுகிற மக்களின் தொலை நோக்குப் பார்வையோடு ஒரு சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் என்றுதான் அதை சொல்வேன்.
33 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். தலித் மக்களுக்கு இட ஒத்துக்கீடு உண்டு. ஆர்.கே.நாரயணன் ஜனாதிபதியாக இங்கே வரமுடிந்தது. ஆனால் இன்றைக்கும் பல கிராமங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்க முடியவில்லை. அதன் விளைவுதான் மேலவளவு கிராமத்தில் நடந்த கொலைகள். தாசில்தார் சென்று முருகேசன் என்பவரிடம் வாக்குறுதி தருகிறார். அவருக்கு எதிராக மற்றொரு சாதியினர் திரண்ட போது வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் வந்து நாங்கள் இருக்கிறோம், தேர்தலில் நிற்பது அரசியல் சாசனம் உனக்கு வழங்கிய அடிப்படை உரிமை எனவே தேர்தலில் நில் உனக்கு நாங்கள் பாதுகாப்புத் தருகிறோம் என்றார்கள்.

என்ன கொடுமை என்றால் நாங்கள் அந்த வழக்கை நடத்துகிற போது மேலவளவு சென்று இரண்டு நாட்கள் தங்கி ஆய்வு செய்தோம். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் முருகேசன் துணைத் தலைவர் பக்கிரிசாமி இருவரும் தங்களது அலுவலகத்திற்குள்ளே கூட போகமுடியவில்லை. அதற்காக மனு கொடுக்க மதுரை சென்று வரும் வழியில்தான் முருகேசனும் அவருடன் சேர்ந்த ஆறு பேரும் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கை மதுரையிலிருந்து சேலத்துக்கு மாற்றி நடத்திய போதும் கூட மிரட்டப்பட்ட காரணத்தால் நடுநிலை வழக்கறிஞர்களே வழக்கு நடத்த பயந்தார்கள். நீதிபதியும் குற்றவாளிகளும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி இருந்தும் அந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தோம். இது போன்ற வன்கொடுமை வழக்குகளிலே தலித் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆயுள் தண்டனையாவது கிடைத்ததனால்தான் ஆதிக்க சாதிகளுக்கு சிறிதளவாவது அச்சம் வந்ததைப் பார்த்தோம்.

இப்போது இது போன்ற வழக்குகளில் என்னை சிறப்பு வழக்கறிஞராக இணைக்கிறார்கள். நான் ஒருவன் என்ன செய்ய முடியும்? பலபேரை உருவாக்குங்கள், அதுதான் தீர்வு. நம்முடைய இளைஞர்கள் பயிற்றுவிக்கப்பட்டு நீதிமன்றத்திற்குள் நின்று ஜெயித்துக்காட்ட வேண்டும்.

மிகப் பெரும் கொடூரத்திற்கு மத்தியில் வாழும் ஃபலஸ்தீனத்தின் ஹமாஸ் நமக்கு புகட்டும் பாடம் அதுதான். தங்கள் ஆற்றலை மேம்படுத்திய ஹமாஸின் இளைஞர்களால்தான் இஸ்ரேல் தானாக ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்தது. எங்கிருந்து ராக்கெட் வருகிறது என்பதை இஸ்ரேலால் அறிந்து கொள்ள முடியவில்லை. உலகிலேயே அறிவாற்றலில் சிறந்தவர்கள் எனப்படும் இஸ்ரேலை நிலைகுலைய வைத்தது ஹமாஸின் அறிவாற்றல்தான். நாங்கள் ஆற்றல்மிக்க கற்பிக்கும் சமூகம் என்பதை ஃபலஸ்தீனர்கள் நிரூபித்திருக்கிறார்கள்:

இதேபோல் இங்கே சட்டக் கல்லூரியை தொடங்கி சட்டக் கல்வியை, ஞானத்தை பெறுவதற்கான களத்தை அமைத்தோம் என்றால் அது தமிழ்நாட்டிற்கு ஏன் இந்தியாவிற்கே ஒரு புது வழிகாட்டுதலாக அமையும்.
முஸ்லிம்களுக்கான ஒதுக்கீடு சிறைச்சாலை எண்ணிக்கையில் மட்டுமே அதிகமாக இருக்கிறது என்று சொன்ன சச்சார் கமிட்டியின் அறிக்கை அற்புதமானது. அது நமக்கொரு டாக்குமெண்டேஷன், அது இன்று வரை நடைமுறைக்கு வராமல் எழுத்துக்களாகவே இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு கண்டிப்பாக ஒரு சட்டக் கல்லூரி தேவை.

நம்மை எதிர்ப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்று ஆத்திரப் படுகிறோம். ஆனால் நம்முடைய நடவடிக்கைகள் பக்குவமானதாக அறிவுப் பூர்வமானதாக அமைய வேண்டும், அதுதான் சரியான வழிமுறை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ நாம் ஒரு ரூல் ஆஃப் லா சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம்மைப் போன்ற ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள், தலித்கள், பழங்குடிகளுக்கான நியாயங்கள் எங்கே? நோக்கியா கம்பெனி வரும்போது குதூகலித்தவர்கள் தங்குதடையற்ற மின்சாரம் மற்றும் சகல வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். நோக்கியா கம்பெனியை மூடிச் சென்றபோது தனக்கு இந்தியச் சட்டம் பொருந்தாது என்றார்கள். ஆனால் நீதிபதி சந்துரு மட்டும்தான் இந்த நாட்டுக்குள் ஒரு கம்பெனியை நிறுவினால் உனக்கு இந்த நாட்டுச் சட்டம் பொருந்தும் என்றார், ஆனாலும் ஒரு மாற்றமும் இல்லை.

கொஞ்சமாவது இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்கிறவர்கள் உருவானால்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒருவர் இருவர் தனிப்பட்ட முறையில் உருவானால் சரி செய்ய முடியாது. அதற்கான கட்டமைப்பைக் கொண்ட ஒரு கல்லூரி ஒரு சட்டக் கல்லூரி இருக்கும் போது நாம் நினைத்தை சாத்தியப்படுத்த முடியும். அந்த சட்டக் கல்லூரி ஒட்டுமொத்த சமூகத்தின் விடிவுக்கு வழிகோலாக அமையும். பொருள் உற்பத்தி சார்ந்தே உலகமயம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தகம் அது சார்ந்திருக்கக்கூடிய அத்துனை விஷயங்கள் மற்றும் சமூகம், பொருளாதாரம், குடும்பம் அனைத்திலும் இன்று சட்டம் கோலோச்சுகிறது. ஆகையால் சட்டக்கல்லூரியின் மூலம் நாம் எதிர்பர்க்கிற மாற்றத்தை கொண்டு வரமுடியும்.

WSCL LFT 4Cபிரிட்டிஷ் இந்தியாவில் சுத்தந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும், நீர்த்துப் போகச் செய்வதற்கும் 1861 இல் உருவாக்கப்பட்டதுதான் காவல்துறை சட்டம். ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன பிறகும் ஒடுக்கக்கூடிய அந்த சட்டமே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இப்போதுதான் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள்.

நம்மிடம் சிறப்பான பின்னணி கொண்ட ஒரு சட்டக் கல்லூரியும் அதிலிருந்து சமூக நீதியையும் சம நீதியையும் பேணக்கூடிய பெருமக்கள் உருவாகி இருந்தால் என்றைக்கோ சுப்ரீம் கோர்ட்டின் டைரக்‌ஷன்களை மாற்றி இருக்க முடியும்.
ஒடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் என அனைவருக்கும் அரசியம் சாசனம் வழங்கி இருக்கக்கூடிய உரிமைகளை நிறைவேற்றித் தரக்கூடிய ஆளுமைகள் உருவாக்கப்பட வேண்டும், அதற்கான ஒரு களம் வேண்டும். அதற்கு பாரம்பர்ய பின்னணி கொண்ட அலிகர் முஸ்லிம் யுனிவர்சிட்டி போல தமிழ்நாட்டில் ஒரு சட்டக் கல்லூரி இஸ்லாமிய சமூகத்தால் துவக்கப்படவேண்டும்.
சமூக நீதிக் கொள்கையை அமுலாக்குவதற்கு பொருளாதார கலாச்சார ரீதியாக சமூகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு சட்டக் கல்லூரி மிகவும் அவசியம்.