இளவயதில் உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் முஹம்மது இதாயத்துல்லாஹ்.

HIDAYA
கல்விக்கு கரை இல்லை. அதனைக் கற்றோருக்கு வயது வித்தியாசமில்லை. இளம் வயதில் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானவர் என்ற பெருமைக்கு மட்டுமல்ல இளவயதில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும், நாட்டின் துணை

குடியரசுத் தலைவராகவும் தன் கல்வி அறிவால், சட்ட ஞானத்தால் பல பொறுப்புகளுக்கு தன்னை உயர்த்திக் கொண்டவர் ஜஸ்டிஸ் இதாயத்துல்லாஹ். 1905 இல் உ.பி. மாநிலம் லக்னோவில் பிறந்தவர். லக்னோவின் புகழ் பெற்ற கான் பகதூர் ஹபீஸ் முஹம்மது வலியுல்லாஹ் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பாட்டனார் முன்ஷி குதரதுல்லாஹ் வாரனாசியின் புகழ் பெற்ற வக்கீல், அத்துடன் அவர் உருது கவிஞரும் கூட. இதயத்துல்லாஹ்வின் குடும்பச் சூழல் அலாதியானது. கவிஞர்கள், வழக்கறிஞர்கள் என படித்தவர்கள் ஏராளமானோர் நிறைந்த குடும்பம்.
இதாயத்துல்லாஹ்வின் மூத்த சகோதரர் இக்ராமுல்லாஹ் அக்கால I.C.S. அது தற்போது I.A.S. என்றழைக்கப்படுகிறது. இதயதுல்லாஹ்வின் தந்தை விலாயதுல்லாஹ் மிகச் சிறந்த மொழிப் பற்றாளர். மட்டுமல்லாமல் அவர் காலத்தில் கணிதமேதையும் கூட! அலிகர் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் தங்க மெடல் பெற்றவர். இதயதுல்லாஹ்வின் சகோதரர் பாகிஸ்தானில் அயலுறவுச் செயலாளராக பணி புரிந்தார். இளவயது முதலே படிப்பில் படு சுட்டியாகத் திகழ்ந்தவர் இதயதுல்லாஹ். அக்கால வழக்கப்படி பட்டப் படிப்பிற்குப் பின் சட்டக் கல்வியாக பிரிட்டிஷ் சட்டம் பயில வேண்டும்.
ZAKIR1927 இல் கேம்பிரிட்ஜில் சட்டம் பயிலச் சென்றார். பல்கலைக் கழகத்திலேயே இரண்டாவதாகத் தேறினார். இதற்காக தங்கப் பதக்கமும் பெற்றார். லண்டன் பார் கவுன்சில் தானாகவே முன் வந்து இவரை சேர்த்துக் கொண்டது. தன் 25 வது வயதில் முதுநிலை சட்டக் கல்வியில் ஹானர்ஸ் பெற்றார். பி. லிட் பட்டத்தை பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகத்தில் பெற்றார், இதுவும் ஆனர்ஸ் போபாலில் உள்ள பரக்கத்துல்லாஹ் பல்கலைக் கழகத்தில் பி. லிட் பட்டம்பெற்றார். 1929 இல் இந்திய மஜ்லிஸ் கட்சியின் இந்தியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆங்கில மொழிப் புலமை, சட்டப் புலமை இரண்டையும் ஒரு சேரக் கற்ற மேதையாகத் திகழ்ந்தார். 1930 இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். மத்திய மாகாணமான நாக்பூர், பீஹார் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்தார். நாக்பூர் சட்டப் பல்கலைக் கழகத்தில் முகம்மதியச் சட்டம் கற்பிக்கும் ஆசிரியராக பொறுப்பு ஏற்றதுடன் ஆங்கில இலக்கிய பேராசிரியராகவும் விளங்கினார். இவரின் நிகரற்ற ஆற்றலைக் கண்ட அரசு, அரசு வழக்கறிஞராக நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் பணி அமர்த்தியது. பின்னர் அட்வகேட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அங்கேயே கூடுதல் நீதிபதியாகவும் பணி புரிந்தார். அன்றைய நாளில் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தவர்களில் இளவயதுக்காரர், அதிலும் இந்தியர் இவர்.
1958 வரை மத்திய பிரதேச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவரை தலைமை நீதிபதியாக நியமித்தனர்.1958 இல் அங்கிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். உச்ச நீதிமன்றத்திலும் மிக இளவயது நீதிபதி இவர்தான். 1968 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார். இவரே இந்தியாவின் முதல் இஸ்லாமிய தலைமை நீதிபதி.
இவர் தலைமை நீதிபதியாக இருந்த போதுதான் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஜாகிர் ஹூஸைன் மரணமடைந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இவரே புதிய குடியரசுத் தலைவர் வரும் வரை தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதேநேரம் துணை குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி குடியரசுத் தலைவர் வேட்பாளாராக நிற்கும் பொருட்டு தான் வகித்த துணை குடியரசுத் தலைவர் பொறுப்பை துறந்தார். இதனையும் ஜஸ்டிஸ் இதயதுல்லாஹ் அவர்களே சேர்த்து கவனித்தார். அத்துடன் தன் தலைமை நீதிபதி பொறுப்பையும் சேர்த்தே கவனித்தார். இந்தியாவில் வெறெவருக்கும் இது போன்று குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என மூன்று பெரும் பொறுப்பை ஒரே சமயத்தில் சுமந்ததாக வரலாறில்லை. முகம்மது இதயதுல்லாஹ் ஒரு நாளைக்கு மூன்று அலுவலக்கங்களுக்கும் சென்று பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்தார். அந்த சமயம் அமெரிக்க அதிபரான ரிச்சர்ட் நிக்சன் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவரே துணைக் குடியரசுத் தலைவராகவும், உச்சநீதி மன்ற நீதிபதியாகவும் விளங்குவது கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினார்.
பணி புரிந்து ஓய்வு பெற்ற பின்னர் முகம்மது இதயத்துல்லாஹ் அவர்களை அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டின் துணைத் தலைவராக்க பலரும் வந்து உதவினர். 1974 – 84 வரை குடியரசுத் துணைத் தலைவராக இருந்த இவருக்கு 1982 இல் மீண்டும் ஓர் சோதனை.
அன்றைய ஜனாதிபதி கியானி ஜெயில் சிங் அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது மீண்டும் இதயதுல்லாஹ் (பொறுப்பு) குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். இவ்வாறு இரண்டு முறை குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என தன் கல்வி ஞானத்தால் பெற்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
இவர் தலைமை நீதிபதியாக இருந்த போதுதான் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமையை பாராளுமன்ற தலையீட்டால் பறிக்க முடியாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார்.
தன்னை நீதிபதி என்ற பதவிக்குள் சுருக்குவதை விட சட்டம் கற்பிக்கும் ஆசிரியர் பணியை பெரிதும் விரும்பினார்.
பெங்களூரில் இவர் உருவாக்கிய முதல் தரமான சட்டப் பல்கலைக் கழகம் குறிப்பிடத்தக்கது. 13க்கும் மேற்பட்ட இவர் எழுதிய பல்வேறுபட்ட சட்ட நூல்கள், விளக்கங்கள் இன்றும் பல சட்ட பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளது.
ராய்ப்பூரில் இவர் பெயரால் தேசிய சட்ட பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது.