ஜஸ்டிஸ் சையத் மஹ்மூத்.

SyedMahmood
சையத் மஹ்மூத் நீதிபதியாக பிரிட்டிஷ் ஆட்சியின் போதே செயல்பட்டவர்.
வடமேற்கு மாகாண நீதிபதியாக 1887 இல் தொடங்கி 1893 வரை பணிபுரிந்தார். இவரை பிரிட்டிஷார் நிரந்தர பொறுப்புள்ள நீதிபதியாக நியமிக்காமல்

இழுத்தடித்தனர். நீதிமன்ற உயர்பதவியில் வெள்ளையரே தகுதி பெற்றவர்கள் என்பது போன்ற மனநிலையில் அன்றைய அரசு இன்று முஸ்லிம்களை உயர் பொறுப்பில் அமர்த்த பின்வாங்குவது போலவே பிரிட்டிஸ் ஆட்சியில் அன்றும் நடந்தது.
1882 பிரிட்டிஷார் ஒரு வழியாக உயர் பொறுப்பான நீதிபதி பொறுப்பில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக முதல் இந்தியர் என்ற பெருமையுடன் சையத் மஹ்மூத் பொறுப்பேற்றார் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் அதுவும் ஒரு முஸ்லிம்!
தன் கடமையே கண்ணாக விளங்கி சையத் மஹ்மூத் தன் தந்தையின் கல்விக் கனவான ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியை அலிகரில் உருவாக்க உதவினார்.
ஆம். சர். சையத் அஹ்மத்கானின் மகன் தான் ஜஸ்டிஸ் சையத் மஹ்மூத். அலஹாபாத் ஜூரியான (நீதிபதி) மஹ்மூத் பிரிட்டிஷாரை விட தெளிவாக, தீர்க்கமாக, விரிவாக தீர்ப்பின் நியாயத்தை விளக்கி தீர்ப்பு எழுதுவார். அவரின் நீண்ட விளக்கமுள்ள தீர்ப்புகள் சில வேளையில் சலிப்புத் தரும். ஆனால் அவரின் சட்ட நுணுக்கத்தில் உள்ள ஆழ்ந்த புலமை தீர்ப்பில் வெளிப்படும். அவரது தீர்ப்புகள் ஒவ்வொன்றும் சட்ட இலக்கியமாகவே இன்றும் மதிக்கத்தக்கவை.
அதனால்தான் நாட்டிலுள்ள சட்டஉயர் கல்வி மையங்கள் அனைத்திலும் அவரின் 300 க்கும் மேற்பட்ட தீர்ப்புகள் தொகுக்கப்பட்டு பாட நூலாக வைக்கப்பட்டுள்ளன.
ஜஸ்டிஸ் சையத் மஹ்மூத் 1850 இல் டெல்லியில் சர் சையது அஹ்மது கானின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். மொராதாபாத்தில் பள்ளிக் கல்வி அலிகரில் கல்லூரிக் கல்வியை நிறைவு செய்தபின் தந்தை கானின் பணி நிமித்தம் காரணமாக டெல்லி இடம் பெயர்ந்தார்.
அங்குள்ள ராஸி கல்லூரியில் தன் இளங்கலை பட்டம் பெற்றார். அவரின் மெட்ரிகுலேஷன் விடைத் தாளில் அவர் பெற்ற உயர் மதிப்பெண் அவருக்கு கல்வி ஊக்கத் தொகையுடன் உயர் கல்வி கற்க இங்கிலாந்து செல்லும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. 1869 இல் பாரிஸ்டர் சட்டக் கல்வியில் சேர்ந்தார். 1872 இல் பார் கவுன்சில் உறுப்பினரானார். இடையில் சட்டத்துடன் 1870 இல் லத்தீன், கிரேக்கம் முதலான மரபார்ந்த மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.Bab-e-Sayyad
1872 இல் அலகாபாத் உயர்நீதிமன் பாரிஸ்டராக பதிவு செய்தார். ஆறு ஆண்டுகள் வழக்கறிஞர் தொழில் செய்த நிலையில் அரசு இவரை அவுத் மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதியாக நியமித்தது. 1887 இல் தற்காலீகமாக மீண்டும் அலகாபாத்திற்கு வரவழைத்தது அரசு.
இவரின் திறமைகள் கண்டு பொறாமை கொண்ட நீதித்துறை வெள்ளையர் நிர்வாகம் இவரை நிலையாக எங்கும் பணி செய்ய விடாமல் இடையூறு செய்தது.
இவர் கேம்ப்பிரிட்ஜில் படித்த போது அரபியிலும் புலமை பெற்றதால் ஏற்கனவே உள்ள சட்ட நீதி, நெறிகளுடன் இஸ்லாமிய நெறி அடிப்படையில் தன் தீர்ப்புகளை மெருகேற்றினார். அரசின் கவர்னர் ஜெனரல் வைஸ்ராய் குறிப்பாக லார்ட் லிண்டன் ரிப்பன் போன்றோர் இஸ்லாமியசட்ட விவரங்களில் இவரிடம் ஆலோசனை பெற்றனர். இவரால் இவர் தந்தையின் அலிகர் பல்கலைக் கழகம் மேலும் மேலும் சிறப்புற்றது. இவரின் விரிவான தீர்ப்பளிக்கும் பாணி அதில் தெறிக்கும் நியாயங்கள் பலவும் இஸ்லாமிய தனிநபர் சட்டக் கோட்பாடுகளில் தெறிக்கும் ஒளியாக வெளிப்பட்டது. இவரின் விரிவான தீர்ப்பை பிரிட்டிஷ் நீதிபதிகளில் ஒருவரான கோஸ்லாவ்கி பெரிதும் புகழ்கிறார். “பெருமளவு வாசிப்புத் திறன், அறிவுப்பூர்வமான வாதம், இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை பண்பு, நீதி வழங்கும் நடைமுறையில் புதிய ஆளுமை என அனைத்தும் நிரம்பிய தீர்ப்புகளை வழங்குவதில் சயீத் மஹ்மூத் நிகற்றவர்.
இவர் தந்தைக்கு ஏற்ற தனயனாக இருந்து முஹம்மதன் ஆங்கிலோ – இந்தியக் கல்லூரிக்கும் வேண்டிய கட்டமைப்பை உருவாக்கித் தந்தார். பின்னாளில் இதுதான் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமாக மலர்ந்தது.
கல்வி வாசலுக்குள் ஒரு பள்ளிவாசல் கொண்ட இது இறைக் கல்வியும் நெறி கல்வியும் ஒருங்கே அமையப்பட்ட கல்விச் சாலை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.
சையது மஹ்மூது அவர்களின் ஆற்றலை உணர்ந்த ரிப்பன் 1882 இல் இந்தியாவின் உயர்கல்வி ஆணையம் அமைத்த போது இக்குழுவின் முதல் ஆணையராக இருந்தது இவர்தான், இந்தியக் கல்வி குறித்து முதன்முதல் ஆய்வு செய்தவர் இவர்தான்.
நவாப் காஜா சர்புதீனின் மகளான முஷாரஃப் ஜஹானை சையது மஹ்மூத் மணந்தார். ஒரே மகன் ரோஸ் மசூத். அலகாபாத்தில் அழகிய ஒரு வீட்டை வாங்கினார் சையது மஹ்மூது. அந்த வீட்டை அன்றைய அலஹாபாத் சகதோழரான பாரிஸ்டர் மோதிலால் நேருவும் விரும்பியதால் அவருக்கு விற்றுவிட்டார். ஸ்வராஜ் பவன் என்று இருந்த பெயரை ஆனந்த பவனம் என்று மோதிலால் மாற்றிக் கொண்டார். பின்னர் இந்த வீட்டில்தான் பல கூட்டங்கள் நடை பெற்றது. சையது மஹ்மூது தனக்காக அலிகரில் ஒரு வீடு கட்டினார். இந்த வீடு தற்போது சர் சையது அகமது கான் கல்விக் கழகமாக மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் இவர்தான். சட்ட இலக்கியங்கள் (உருது மொழியில்) சாட்சியங்களும் சட்டங்களும் என்ற நூல் முதலானவை இவரின் படைப்புகள்.