இஸ்லாமியக் கட்டடக் கலை

islamic a
இஸ்லாமியக் கட்டடக் கலைக்கு என்று பொதுவாக எந்தவித விதிகளும் கிடையாது. இஸ்லாம் பரவிய அனைத்து நாடுகளில் பள்ளிவாசல்களை கட்டும்போது அந்தந்த நாடுகளில் உள்ள பண்பாட்டிற்கு ஏற்ப கட்டுமானங்கள் கட்டப்பட்டன.
தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடக் கட்டடக் கலையை பின்பற்றி கடற்கரைப் பட்டினங்களில் 7-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் அதிகமான பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இவை அனைத்தும் திராவிட இஸ்லாமிய கட்டடக் கலையைக் அமைப்பாக கொண்டிருந்தன.
இந்தியாவில் புகழ்பெற்ற பல கலைகளுள் கட்டடக் கலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய வரலாற்றில் பல காலகட்டங்களில் கட்டடக்கலை பலவிதமான மாறுதல்களைக் கண்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றளவும் காலத்தால் அழியாத நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன.
இஸ்லாமியர்கள் இந்தியாவினுள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்திய கட்டடக் கலையில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது என்றே சொல்லலாம். முஸ்லிம்களால் இந்தியக் கட்டடக்கலையினுள் சில புதிய உத்திகள் புகுத்தப்பட்டன.
மேலும் கட்டடம் கட்டுவதில் சில விஞ்ஞானப் பூர்வ முயற்சிகள் செய்தனர். இதன் காரணமாகத்தான் இன்றளவும் அந்தக் கட்டடங்கள் எந்த வித சேதாரமும் இன்றித் திடமாக இருக்கின்றன. இதுபோன்று இந்தியாவின் பாரம்பரிய கட்டடக் கலையும் இஸ்லாமிய முறையும் கலந்து உருவாகிய புதிய கட்டடக் கலை இந்திய இஸ்லாமியக் கட்டடக்கலை என்று அழைக்கப்பட்டது.
இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு பட்ட மேற்படிப்பாக உலகின் பல நாடுகளில் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் கற்றுத் தரப்படுகிறது.