சிறந்த ஆளுமையைக் கொண்ட குழந்தைகள்

children-reading d
சிறந்த ஆளுமையைக் கொண்டவர்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் அழகையும், முழுமையையும் பார்க்க முடியும். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் மக்களை கவரக்கூடியதாகவும், அவர்களின் பாராட்டுக்கும், நன்மதிப்பிற்கும் உட்பட்டதாகவும் இருக்கும். அவர்கள் அனைவரோடும் பிரச்சினையும், தடையுமற்ற உறவை நிலை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருப்பர்.

ஒரு வளரும் குழந்தையிடம் சிறந்த கலைஞனாக, அரச தலைவனாக, புகழ் பெற்ற அறிஞனாக, ஆகக் கூடிய ஆற்றல்கள், திறமைகள் இருப்பது போன்று பலவீனங்களும், பின்னடைவுகளும் இருக்கின்றன. திறமைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, தெரிந்து, வெளிப்படுத்திக் கொள்வதற்கும், பலவீனங்கள் ஒவ்வொன்றை இனங்கண்டு அவற்றை அப்புரப்படுத்திக் கொள்வதற்கும் சிறந்த கல்வியும் பயிற்சியும் தொடர்ந்து வழங்க வேண்டும். ஒருவனுக்குக் கொடுக்கப்படும் கல்விதான் அவனது ஆளுமை வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்துகிறது. ஆனால் சிறந்த ஆளுமை என்பது கல்வியாலும் அதனுடாகக் கொடுக்கப்படுகின்ற பாயிற்சியாலுமே கிடைக்கிறது. கல்வியை மாத்திரம் கொடுத்து பயிற்சியும், வழிகாட்டலும் கொடுக்கப்படவில்லையென்றால் ஆளுமை வளர்ச்சி ஏற்படுவதற்கு எந்த விதத்திலும் வாய்ப்புக் கிடைக்காமல் போகும்.

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமுள்ளவர்களாக வளர்வதைப் பார்க்கவே விரும்புகிறார்கள்.நோயின்றி ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அவர்களுக்கும் நாட்டுக்கும் முழு உலகிற்கும் பெரும் பயனுள்ளவர்களாவர். இவர்கள் தம் பெற்றோருக்கும் தாம் வாழும் சமூகத்திற்கும் சுகமானவர்களாகவே வாழ்வார்கள். அழகான ஆளுமையுள்ள குழந்தைகளை உருவாக்க முனைப்புடன் செயல்படும் அனைத்து பெற்றோர்களும் பின்வரும் விஷயங்களை குழந்தைகளுக்கு வழங்கியும், வழிகாட்டியும் துணைசெய்ய தவறக்கூடாது.

• குழந்தைக்கு தேவையான அன்பு, பாதுகாப்பு, கணிப்பு என்பவற்றை முறையாக வழங்குங்கள். அதனால் அவன் தன் மீதும் மற்றவர் மீதும் நம்பிக்கை கொண்டவனாக வளர்வான்.

• குழந்தை மதிப்புமிக்கவன் என்பதை எப்பொழுதும் அவனுக்கு உணரச்செய்யுங்கள் அதனால் தன்னைப் போன்று மற்றவர்களும் மதிப்புமிக்கவர்கள் என கருதுவான்

• குழந்தைகளின் உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் அதனால் மற்றவர்கள் மீதான உரிமைகளை மதிக்க கற்றுக்கொள்வான்

• குழந்தைகளின் திறமைகளை மதித்து, பாராட்டி ஊக்கமளியுங்கள் அதனால் தன்னை உயர்வும் மதிப்பும் மிக்கவனாகக் கருதிக்கொள்வான்

• விளையாட குழந்தைக்கு நேரத்தை வழங்குங்கள். அதனால் பல விசயங்களை கற்கவும், சமூக அனுபவங்களைப் பெறவும் மன ஆறுதல் அடையவும் வழி கிடைக்கும்.

• எப்பொழுதும் உண்மையான விசயங்களை உரையாட உற்சாகமூட்டுங்கள் அதனால் தன்னையும் மற்றவர்களையும் ஏமாற்றாமல் பாதுகாத்துக் கொள்வான்
• குழந்தை பின்பற்றும் மார்க்கத்தின் மீது ஆர்வமூட்டுங்கள் அதனால் வழி தவறாமல் கட்டுப்பாட்டிற்குள் வாழ வழி வகுத்துக்கொள்வான்.

• துஷ்பிரயோகம், தகாத செயல்களிலிருந்து பாதுகாப்புக்கொடுங்கள் அதனால் வலிமையும் ஆரோக்கியமும் உடையவனாக வளர்வான்.

• கல்வி கற்பதற்கான கதவுகளைத் திறந்து விடுங்கள் அதனால் தனது திறமைகளை வளர்த்து உலகிற்கு உதவி செய்யக்கூடியவனாக மாறுவான்.

• உங்கள் நடை, உடை, செயல் அனைத்தாலும் அவனுக்கு அழகான செய்திகளை வழங்குங்கள் அதனால் அவன் உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் அன்பும், மரியாதையும், நல்லெண்ணம் கொண்டவனாக இருப்பான்.

குழந்தைகள் மதிப்புமிக்கவர்கள், முக்கியமானவர்கள், மேன்மையுடையவர்கள் என்பதை உணரும் வகையில் பெற்றோரும் மற்றவர்களும் அவர்களோடு உரையாட வேண்டும். இதனால் குழந்தைகள் தமது சூழலை பாதுகாப்பும் பயனும் உடையதாக ஏற்று தம் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக அழகுபடுத்தி பயனுறுதிமிக்க ஆளுமையுடையவர்களாக மாறுவார்கள்.

குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் சுயகொள்கை, உடலமைப்பு, உடலாரோக்கியம், ஆடை, பெயர், கலாசாரம், திறமைகள், ஆரம்ப அனுபவங்கள், அங்கீகாரம், மக்கள் மதிப்பு, குடும்ப உறவு, சூழல், நண்பர்கள் போன்ற பல விசயங்கள் செல்வாக்குச்செலுத்துகின்றன. இவை குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் சாதகமான அல்லது பாதகமான பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே அதில் கவனமாக் இருங்கள்.