புதிய கல்விக் கொள்கை 2016

SNM September 2016 Wrapper-2
கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும் விதிகளையும் கொண்டது. இதை ஆங்கிலத்தில் Policy, Principle என்று சொல்வார்கள். தங்களுடைய நோக்கத்தை அடைய விரும்பும் ஒரு நாடு அல்லது ஒரு கூட்டம் என ஒவ்வொருவரும் தங்களுக்கான கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயல்படுவார்கள்.

பின்பற்றக்கூடியவர்களை உருவாக்குவதற்காக தங்களுடைய கொள்கைகளை கல்வித் திட்டங்களாக வடிவமைத்து கல்விக் கூடங்களில் பயிற்றுவிப்பார்கள். விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால் எந்த விளையாட்டிலும் ஜெயிக்கலாம் என்று சொல்லப்படுவதுண்டு அதற்காக ஒவ்வொரு அரசும் அல்லது தனிச் சிந்தனை போக்கு கொண்டவர்களும் தங்களுக்கான கல்விக் கொள்கை கொண்டிருப்பார்கள்.
ஒரு சமூக உருவாக்கத்தில் கல்வியின் பங்கு மிகப் பெரியது. ஆதிக்க சக்திகள் பொது மக்களை அடிமைப்படுத்தும் ஆயுதமாகவும் – மக்களிடையே சமத்துவ சமநீதிச் சமூகத்தை உருவாக்கும் நீதி நெறியாகவும் கல்வி இருவேறு முகங்கள் கொண்டதாக ஆக்கப்பட்டிருப்பது வரலாறு படிக்கும் போது தெரியும்.
கல்விக் கொள்கை உருவாக்கப்படுவதும், வாழும் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஏற்ப கல்வி கொள்கைகளில் மாற்றம் செய்யப்படுவதும் தவிர்க்க முடியாத அவசியம்.

ஒரு நாட்டின் கல்விக் கொள்கை மக்களிடையே அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் சமநீதி, சமத்துவம், மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களையும் அரவணைத்துச் செல்லும் நடுநிலை போன்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும்.
எந்த வகையிலும் மக்களை பாகுபடுத்தி மனிதர்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வை, பிரிவிணையை உண்டாக்கும் செயலை கொள்கையாக அல்ல. கருத்தாகக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாது.
கல்விக் கொள்கை என்பது பாடத் திட்டத்தை வடிவமைப்பது மட்டுமல்ல! அதற்குள் பல உட்கூறுகுறுகள் இருக்கின்றன. கல்வியை எந்த மொழியில் கற்பது? கல்விக் கூடங்களை யார் நிர்வகிப்பது? தரமான கல்வி என்பது எது? அரசுக் கல்வி நிறுவனங்களால் அதை வழங்க இயலுமா? தனியார் கல்வி நிறுவனங்களின் பங்கு என்ன? கல்வியில் அந்நிய நாட்டு நிறுவனங்கள் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது உட்பட பல கேள்விகளுக்கு பதில் கல்விக் கொள்கையில் இருக்க வேண்டும்.
இந்தியாவில் பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதற்காக சில விவாதத் தலைப்புகளை வெளியிட்டு, நாடு முழுவதும் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான ஐவர் குழு தயாரித்த அறிக்கை 2016 ஏப்ரல் 30 அன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள் (Some Inputs for Draft National Education Policy 2016 - http://mhrd.gov.in/nep-new) என்ற தலைப்பில் ஓர் ஆவணத்தைத் தனது வலைதளத்தில் ஆங்கில மொழியில் வெளியிட்டு, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது.

இந்த முன்வரைவில் சில தேவையான ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மயக்கும் வார்த்தைகள் மூலம் இந்தியாவின் கல்விக் கொள்கைக்கு பொருத்தமற்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேவையான மாறுதல்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை இந்தியாவின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணாக உள்ள முன்மொழிவுகளை தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. கல்வி முடிவுகளில் வெளிப்படைத் தன்மை, அறிவுப் பூர்வமான விவாதங்கள் இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
இதுவரை இல்லாத அளவு கல்விக் கொள்கை 2016 க்கு எதிராக ஆரம்ப நிலையிலேயே சமூகவியளாலர்கள் திரள்வது ஏன்? மற்ற அரசுகள் இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லையா? பா.ஜ.க. எதிராக மட்டும் ஏன் இவ்வளவு பெரிய எதிர்ப்பு? என்ற கேள்விகளுக்கு பதிகளை பார்ப்போம்.
மத்தியப்படுத்துதல் (centralization)
இந்தியா பல மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல இனங்கள் பல்வகை பண்பாடுகளுடன் ஒருங்கிணைந்த நாடு. பள்ளிகள் இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாடத்திட்டம் முழுவதும் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. இப்புதிய கொள்கை, மாநிலத் தின் அதிகாரத்தைப் பறிக்கின்றது. கணிதம், அறிவியல், ஆங்கிலத்தில் தேசிய பாடத்திட்டத்தை கொண்டு வர முயல்கிறது. மண் சார்ந்து, மக்கள் சார்ந்துதான் கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் உருப்பெறுகின்றன; வளர்கின்றன.
காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரி யான பாடத்திட்டத்தை இந்த நாட்டில் புகுத்த முடியாது; புகுத்தவும் கூடாது.
மேலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு, மத்திய அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெறவேண்டும் அவர்களுக்கு மட்டும் தான் ஸ்காலர்ஷிப் என்கிறது. கல்வித் துறையில் - இயக்குநர் பொறுப்பு உள்பட, பல முக்கிய அதிகாரிகளின் பதவிகளுக்கு - இந்தியக் கல்விப் பணித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களையே நியமிக்கவேண்டும். என்கிறது.
20 % மட்டும் மாநில அரசிடம் விட்டு விட்டு மத்திய அரசு கல்வியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிடும். மேலும் இன்னொரு காலனி ஆக்ரமிப்பாக மாறும் அல்லது மொழி இன அடிப்படையிலான பிளவுகளுக்கு வழி வகுக்கும்.
நாடு முழுவதும் ஒரேமாதிரியான தரம் கொண்ட பாடத்திட்டம் இருக்கலாம்; ஒரே பாடத்திட்டம் இருக்கக்கூடாது.
மொழிக் கொள்கை
மாநிலங்கள் விரும்பினால் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது வட்டார மொழியை பயிற்று மொழியாக வழங்கலாம். உலக அளவிலான அறிவைப் பெறுவதற்கு குழந்தைகளை ஆங்கில மொழியில் வாசிக்கவும், எழுதவும் தகுதி உள்ளவர்களாக ஆக்க வேண்டும். இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உழைத்த சமஸ்கிருத மொழியை பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக் கழக நிலையிலும் கற்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் அளிக்கப்படும் என்றும் புதிய கல்விக் கொள்கை முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகிறது. அதில் ஒரு மொழியை மட்டும் முன்னிலைப்படுத்துவது ஏன்?
குழந்தை கல்வியில் பயிற்றுவிப்பு மொழி எது என்பது பற்றிய விவாதம் இந்தியாவில் மட்டும்தான் நடைபெறுகிறது. தாய்மொழி வழிக் கல்வியே இயற்கையானது. உலகின் அனைத்து வளர்ந்த, வளரும் நாடுகள் பெரும்பாலானவற்றிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆரம்பக் கல்வி மொழி தாய் மொழியே. அறிவு என்பது பொதுச் சொத்து. அதைத் தாய் மொழியில் பெற்றால் தான் எல்லாருக்கும் கொடுக்க முடியும்.
குஜராத் மாநிலத்தில் எல்லாப் பாடங்களிலும் பிஎச்டி பட்டம் வரை குஜராத் மொழியிலேயே படிக்கலாம். ராஜஸ்தானில் ஆங்கிலம் தெரியாமல் மேல்படிப்பில் பட்டம் பெறலாம். விருப்பமிருந்தால் ஆங்கிலம் படிக்கலாம். ஆங்கிலம் படிக்காவிட்டால் உருப்படமுடியாது எனும் மனப்பதிவு காலனியாதிக்க சிந்தனையிலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை என்பதைக் காட்டுகிறது.
பிரிட்டனின் காலனி ஆதிக்கம் பரவி இருந்த நாடுகள் முழுவது ஆங்கிலம் அவசியம் என்பதை கட்டாயமாக்கினர். இந்தியாவில் 1835 க்குப் பிறகு ஆங்கிலக் கல்வி வேலைக்கான தகுதி பெறும் கல்வியாக மாற்றப்பட்டது. இந்தியர்களுக்கு “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார் பாடத்திட்டத்தை வடிவமைத்த மெக்காலே. அவரது அறிவுரைப்படி பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவது கூடத் தடை செய்யப்பட்டது.
அது இன்று வரை ‘கம்பெனி வேலை… அரசு வேலை என எதுவாக இருந்தாலும் ஆங்கிலமே கல்வியின் அடிநாதமாக ஆக்கப்பட்டு விட்டது. காந்தி அடிகள் விமர்சித்தது போல “பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’.
இன்று ஆங்கில வழி கல்வி பயிலும் தலைமுறை தமிழும் ஆங்கிலம் முழுமையாக அறியாத இரண்டும் கெட்டானாகவே இருக்கிறது.
தமிழே தெரியாத பலர் தமிழ் நாட்டில் தொழில் செய்வதும், தமிழ்நாட்டில் படித்த மாணவர்கள் ரஷ்ய சென்று மருத்துவம் படித்து விட்டு வருவதும் இங்கு இயல்பாகவே நடைபெறுகிறது.
ஜப்பான், சைனா, ஜெர்மன் போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளும், ஃபின்லாந்த், கொரியா போன்ற கல்வியில் முன்னணியில் இருக்கும் நாடுகளும் ஆங்கில வழிக்கல்வியின் மூலம் உயர்வு பெறவில்லை. அவர்களது தாய் மொழியிலேயே கல்வி பெற்று ஆராய்ச்சியும் செய்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற ஜப்பான் வின்ஞானிகள் கூற ஆங்கில வழி கல்வி பெறாதவர்களே! தாய்மொழிக் கல்வியே அறிவதற்கும் புரிவதற்கும் இயல்பானது இயற்கையானது.
ஒற்றை மதம் (communalization)

இந்திய கலாச்சார ஒற்றுமைக்கு சமஸ்கிருதத்தின் பங்களிப்பை கணக்கில் கொண்டு சமஸ்கிருதத்தை கற்றுத்தருவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும், இக்கல்விக் கொள்கையின் மேல் வேத உலகக் கண்ணோட்டம் (vedic world view) அல்லது வேதக் கல்வி (vedic education) உருவாக்கப்படும், அருகில் இருக்கும் ஆசிரமங்களோடு சேர்ந்து பள்ளிக்ககூடங்கள் செயல்பட வேண்டும் என்கிறது கல்விக் கொள்கை.
ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத வார விழா கொண்டாடச் சொன்னது இந்த அரசு. இதுவரை ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்பட்டு வந்த நாளை, “குரு உத்சவ்” வாக மாற்றுகிறது.
தற்போது குஜராத் பள்ளிகளில் தினானாத் பாத்ரா என்ற ஆர் எஸ் எஸ் காரரின் புத்தகங்களை, பாடத்திட்டமாகச் சேர்த்தார்கள் பிறகு, இந்தியா முழுவதும் இதே “குஜராத் மாடலை” பின்பற்ற விரும்புகிறது பா.ஜ.க அரசு. ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது பாத்ராவிடம் அவரது நூல்களை தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்க இருப்பதாக ஒப்புதல் தெரிவித்திருக்கிறாராம். இவை எல்லாம் நமது நாட்டுக் கல்வியைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் முயற்சியே. பாத்ராவின் புத்தகங்களுக்குக் கடும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. பரோடாவில், உள்ளூர் காங்கிரஸ் இப்புத்தகங்களை எதிர்த்து தீயிலிட்டுப் பொசுக்கியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியுயார்க் டைம்ஸ் இதழ், பாத்ராவின் புத்தகங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக்கப்படுவதைக் கண்டித்து, “False Teachings for India’s Students” என்றொரு கட்டுரை எழுதியுள்ளது.
அறிவின் அடிப்படையில் வருவதே நம்பிக்கை. நம்பிக்கை அடிப்படையில் அறிவு திணிக்கபடுபவர்கள் தங்கள் மீது திணிக்கப்படும் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் ஆராய்ச்சியாளர்களாக ஆகவே முடியாது. குழந்தைகளுக்கு சிந்திக்க கற்றுத் தருவதும் ஒன்றை உண்மையா? பொய்யா? சரியா? தவறா? என ஆராயும் திறமையை வளர்ப்பதுதான் கல்வி. ஒற்றைக் கலாச்சாரத்தில் உருவாக்குவதல்ல.
கூலிகளை உருவாக்குவது
ஐந்தாம் வகுப்புக்கு மேல் தேர்வில் தவறும் மாணவர்களுக்கு தொழில் கல்வி பயிற்றுவிக்கப்படும் என்கிறது இந்த கல்விக் கொள்கை முன்வரைவு.
உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து நாட்டில் 7 வயதில் தான் கல்வி தொடங்குகிறது. 16 வயது வரை 9 ஆண்டுகளுக்கு தேர்வு இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சமூக முன்னேற்றத்தில் இந்தியா 127 இடம் காரணம் கல்வியின் அதள பாதாள தாழ்ச்சி. 70 % மேற்பட்டவர்கள் 8 ஆம் வகுப்பைத் தாண்டுவதில்லை. யுனஸ்கோ உலக கண்கானிப்பு அறிக்கையின் (Education for All Global Monitoring Report) கணிப்பில் அனைவருக்கும் கல்வி எனும் இலக்கை 2015 இலும் எட்டத் தவறப்போகும் 40 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி அளிக்க வேண்டும் என்கிறது இந்திய அரசியல் சட்டத்தின் 45-வது பிரிவு. அரசியல் சட்டத்தின் 24-வது பிரிவு 14 வயதுக்குக் குறைந்த குழந்தைகளை, தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ஆபத்து நிறைந்த தொழில்களில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்கிறது.
இப்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அரசு இந்த இரண்டு அடிப்படை சட்டங்களையும் மாற்றுகிறது.
குழந்தைத் தொழிலாளர் திருத்த மசோதா 2016, நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சட்டம், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ‘அபாயகரமான வேலை’ என்று சட்டத்தால் வரையறுக்கப்பட்ட வேலை செய்வதற்கு தடைவிதிக்கிறது. ஆனால், குடும்பத் தொழில்களில் ஈடுபடுவதை தடை செய்யவில்லை. பள்ளி நேரத்துக்குப் பிறகு பணியாற்றலாம் என்று கூறியுள்ளது. மேலும், 15 முதல் 18 வயதுடைய குழந்தைகள் பணியாற்ற தடையுள்ள தொழில்களின் எண்ணிக்கையையும் இந்த புதிய அரசு குறைத்துள்ளது.
கல்வி கொள்கையின் மூலம் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கல்வியிலிருந்தும் அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. இது “குலக் கல்விக்கான” முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.
இன்று உலகம் முழுவதும் ஒரு பொருளின் உற்பத்தி பல்வேறு கட்டங்களால் பிரித்து வெவ்வேறு குழுக்களால் செய்யப்படுகிறது. அதன் உச்சபட்ச தொழில் நுட்ப இரகசியம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கே தெரியும்.
மூலத்தை அவர்கள் வைத்துக்கொண்டு சொன்னதை செய்யும் கூலிகளுக்காகவே இந்தியா போன்ற நாடுகளை பயன்படுத்துகிறது முதலாளித்துவ நாடுகள். அதையும் தாண்டி இந்திய அரசு தனது கூலிகளாக வைத்திருப்பதற்கு கல்விக் கொள்கையே வகுக்கிறது.
இங்கு ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தொழில் கல்வி வேறு, தொழில் வழிக் கல்வி வேறு. தொழில் கல்வி 30 நாட்களில் ஆங்கிலம் படிப்பது. தொழில் வழிக் கல்வி ஆங்கில வழிக் கல்வி போல. தொழில் வழிக் கல்வி : உழைப்பு உலகையும் அறிவு உலகையும் ஒன்றிணைக்கும் கல்வி. சிந்தனைத் திறனுடன் உழைப்புத் திறனை சேர்த்து வளர்க்கும். பரிசோதனைகள், கள ஆய்வுகள், களப்பணிகள் மூலம் ஒரு பொர்ருளை உற்பத்தி செய்வது வரை கற்றல். இதில் மாணவரின் குடும்ப, சமுதாய பிண்னணி அவரது கல்வியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கக் கூடாது.
மாணவர்கள் தொடர்ந்து படித்து மேல் வகுப்புச் செல்லும் போது அறிவுத் திறமையும் தொழில் திறமையும் இணைந்து படிப்படியாக உயர் மட்டங்களுக்கு செல்ல வேண்டும். மனனம் செய்யும் திறனாய்வு ஒழிந்து தொழில் திறமையோடு அறிவு மதிப்பிடப்படும்.
தொழில் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தாமல் தொழில் கல்வியை நோக்கி குழந்தைகளை கூலிகளாக்குவது ஏன்?

வணிகமயம் (commercialization) சந்தைமயமாக்கல் ( Market oriented)
“உலகளவில் உள்ள 200 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவவும், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்விதுறையில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கப்படும். கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என்கிறது இந்த புதிய கல்விக்கொள்கை.
1968 ஆம் ஆண்டு கல்வியாளர் கோத்தாரி தலைமையில் 17 பேர் கொண்ட கல்விக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த முன்வரைவு இந்தியப் பொருளாதாரம் என்று அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. பா.ஜ.க புதிய கல்விக் கொள்கை இந்த முன்வரைவு கல்வியை முதலீடு என்கிறது.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வருமாயின் கல்வி என்பது சேவை என்ற நிலையிலிருந்து, ஒரு பண்டம் என்ற நிலைக்கு மாறிவிடும். இந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் தங்கள் நாட்டில் உள்ள மாணவர்களுக்குச் சொல்லித்தர முடியாதவைகளை இங்கே இறக்கமதி செய்யும்.
கல்வி அறிவுக்கானது என்பதை மாற்றி, மதி்ப்பெண்ணுக்கானது என்றும், கல்வி முன்னேற்றத்துக்கானது என்பதை மாற்றி, வேலைவாய்ப்புக்கானது என்றும், கல்வி சமூகமாற்றத்துக்கானது என்பதை மாற்றி, வணிகத்துக்கே என்றும் ஆக்கப்பட்டு விட்டது.
கல்வியை சேவையாகக் கருதிய காலம் மலையேறிவிட்டது. இப்போது, ‘கல்வி வள்ளல்’ என்றால் நிச்சயமாக கல்வி வணிகர் என்பதே பொருள்!
கல்வியை ஒரு சந்தைப்படுத்தும் பொருளாகப் பார்க்கத் தொடங்கிய காலம் முதல்தான் ‘கல்விச் சர்வதேசமயமாக்கல்’ என்ற சொல்லாடலே உருவானது. உயர்கல்வியின் நோக்கமும் தேவையும் மாறியதும் இந்தப் புள்ளியில் இருந்துதான். கல்வியை ஒரு பண்டமாக கருதத் தொடங்கிய பின்னர், ஒரு சர்வதேசச் சந்தைப் பொருளாகப் பாவித்து உலகம் முழுவதும் விற்று வாங்கும் பொருளாக ஆக்குவதில் தடைகள் ஏதும் இல்லாத சூழல் உருவாகவும் உலகமயமாக்கல் விரும்பியது. அதன் விளைவாகத்தான் உலக வர்த்தக அமைப்பின் கீழ் உயர்கல்வி கொண்டுவரப்பட்டது.
2000ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாயிடம் கல்வியில் சீர்திருத்தம் குறித்து அம்பானி, பிர்லா சமர்ப்பித்த அறிக்கை சந்தை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும், உயர் கல்வியில் அரசின் கட்டுப்பாட்டைத் தளர்த்திட வேண்டும், உயர் கல்வியில் நேரடி அந்நிய மூலதனத்தை அனுமதித்திட வேண்டும் என்பது போன்றவற்றை முன்வைத்தது. இந்த அரசு அதை நடைமுறைப்படுத்துகிறது.
கல்வியை வணிகப் பொருளாக்கி, வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்னும் நிலை ஏற்கனவே உண்டாக்கப்பட்டு விட்டது.
உலகப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவுகளைத் திறந்து விடுவது உள்ளூர் பல்கலைக் கழகங்களின் வளர்ச்சிக்கு ஒருகாலும் உதவாது.
தனியார்கல்வியாலும், நவீனக் கல்வியாலும் மாணவர்கள் கடன்காரர்களாக மாற்றபப்டுகிறார்கள். பாடத் திட்டம் காரணமாக கடும் உளவியல் சிக்கலுக்கும் ஆளாகிறார்கள், தற்கொலை முடிவெடுக்கிறார்கள் அதற்கு தீர்வு என்ன? ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது இனிமேல் பேராசையாகவே கருதப்படும்.
அறிவு என்பதே பண்டாமானதுதான் கல்வியில் ஏற்பட்ட ஆகப் பெரும் சீரழிவு.
ஒற்றை மதம் (communalization)

இந்திய கலாச்சார ஒற்றுமைக்கு சமஸ்கிருதத்தின் பங்களிப்பை கணக்கில் கொண்டு சமஸ்கிருதத்தை கற்றுத்தருவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும், இக்கல்விக் கொள்கையின் மேல் வேத உலகக் கண்ணோட்டம் (vedic world view) அல்லது வேதக் கல்வி (vedic education) உருவாக்கப்படும், அருகில் இருக்கும் ஆசிரமங்களோடு சேர்ந்து பள்ளிக்ககூடங்கள் செயல்பட வேண்டும் என்கிறது கல்விக் கொள்கை.
ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத வார விழா கொண்டாடச் சொன்னது இந்த அரசு. இதுவரை ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்பட்டு வந்த நாளை, “குரு உத்சவ்” வாக மாற்றுகிறது.
தற்போது குஜராத் பள்ளிகளில் தினானாத் பாத்ரா என்ற ஆர் எஸ் எஸ் காரரின் புத்தகங்களை, பாடத்திட்டமாகச் சேர்த்தார்கள் பிறகு, இந்தியா முழுவதும் இதே “குஜராத் மாடலை” பின்பற்ற விரும்புகிறது பா.ஜ.க அரசு. ஸ்மிருதி இரானி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது பாத்ராவிடம் அவரது நூல்களை தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் இணைக்க இருப்பதாக ஒப்புதல் தெரிவித்திருக்கிறாராம். இவை எல்லாம் நமது நாட்டுக் கல்வியைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் முயற்சியே. பாத்ராவின் புத்தகங்களுக்குக் கடும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. பரோடாவில், உள்ளூர் காங்கிரஸ் இப்புத்தகங்களை எதிர்த்து தீயிலிட்டுப் பொசுக்கியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியுயார்க் டைம்ஸ் இதழ், பாத்ராவின் புத்தகங்கள் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக்கப்படுவதைக் கண்டித்து, “False Teachings for India’s Students” என்றொரு கட்டுரை எழுதியுள்ளது.
அறிவின் அடிப்படையில் வருவதே நம்பிக்கை. நம்பிக்கை அடிப்படையில் அறிவு திணிக்கபடுபவர்கள் தங்கள் மீது திணிக்கப்படும் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் ஆராய்ச்சியாளர்களாக ஆகவே முடியாது. குழந்தைகளுக்கு சிந்திக்க கற்றுத் தருவதும் ஒன்றை உண்மையா? பொய்யா? சரியா? தவறா? என ஆராயும் திறமையை வளர்ப்பதுதான் கல்வி. ஒற்றைக் கலாச்சாரத்தில் உருவாக்குவதல்ல.
இந்து இந்தி இந்தியா?
மேலே நாம் படித்த கல்விக் கொள்கைக்கான உள்ளீடுகள் எந்த மக்களை ஆங்கிலம் சரிவர கற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறதோ அவர்களுக்கே ஆங்கிலத்தில்தான் கல்வி கொள்கை வெளியிடப்படுகிறது. அதைப் படித்து செப்டம்பர் 15 க்குள் மக்கள் அரசுக்கு கருத்து தெரிவிக்க வேண்டுமாம்.
மோடியின் மன்கிபாத் உரைகள் மொழி பெயர்க்கப்பட்டு 19 மொழிகளில் வெளிவருகிறது. ஆனால் கல்விக் கொள்கைகள் உள்ளீடுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதும்கூட 11 மொழிகளில்தான் இந்த ஆவணம் வெளியாகியிருக்கிறது.
கல்வியாளர்களின் எந்த பங்களிப்பும் இல்லாமல் இந்தியாவின் அமைப்புச் சட்டங்களுக்கு எதிராக சமத்துவ சமநீதியான சமூகத்தை உருவாக்குவதற்கு மாற்றமாக ஏற்படுத்தப்படும் கல்விக் கொள்கை யாருக்காக?
ஆங்கிலத்தில் மேம்பட்டோருக்கும், திறன் குறைந்தோருக்குமான இடைவெளி அதிகரித்து வேறுபாடு உண்டாகி இருக்கிறது. அதற்கு தீர்வில்லை. பள்ளிக் கல்வியை முழுமையாகப் பெறும் வாய்ப்பில்லாத, பள்ளிப் படிப்பையே தாண்ட முடியாத மாணவர்களை படிப்பை பூர்த்தி செய்ய வைக்காமல் கல்வியின் மூலமே அவர்களை வடிகட்டி வெளியே தள்ளளுவதன் மூலம் எதை சாதிக்க நினைக்கிறது இந்த அரசு?
தரம் குறைந்த கல்வி, தரமில்லா மாணவர்கள், தகுதியற்ற ஆசிரியர்கள் என்ற இன்றைய கல்வியின் அவலத்திற்கான அடிப்படைகள் 1. தனியார் பள்ளிகளின் வணிகமயம் 2. பொதுப்பள்ளிகளின் அதிகாரமயம் 3. கல்விக்குத் தேவையான நீதி ஒதுக்கீடு செய்யப்படாதது. இவைகளுக்கு இந்த கல்விக் கொள்கை தீர்வு தருகிறதா? இல்லை.
பின்னர் இந்த கல்விக் கொள்கையின் இலக்குதான் என்ன?
பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பு ஏற்று ஸ்மிருதி இராணி மனித வள மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்ற பின் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் ஸ்மிருதி இராணியை சந்தித்து கல்விக் கொள்கை மாற்றம் கொண்டு வருவது பற்றி பேசுகிறார்கள். இப்போதைய மனிதவளமேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் சந்தித்து கல்விக் கொள்கை குறித்து உரையாடல் நடுத்துகிறார்.
இந்தக் கல்விக் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்த முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் கீழ் இருந்த ஒரே ஒரு கல்வியாளரும் ஆர் எஸ் எஸ் காரர். மற்றவர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். (அதனால்தான் இந்த கல்விக் கொள்லையில் நிர்வாகம் குறித்தே அதிகம் வருகிறது)
ஆர் எஸ் எஸ் அமைப்பு தனக்கென்று ஒரு கொள்கை ஒன்றை வகுத்து செயல்படும் ஒரு இயக்கம். அவர்களின் ஒரே இலக்கு ஒற்றை இந்தியா. ஒரே மொழி. ஒரே கலாச்சாரம். ஒரே நாடு அதை உருவாக்கும் கல்வித்திட்டம் தான் இது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது போல விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால் எந்த விளையாட்டிலும் ஜெயிக்கலாம் என்பதை மனதில் அவர்கள் தங்களுக்கான இந்தியாவை உருவாக்க திட்டமிடுகிறார்கள்.
அது சமத்துவ சமநீதியான, ஜனநாயக இந்தியா அல்ல. மீண்டும் மக்களை அந்நியர்களுக்கு அடிமையாக்கி, சாதி ரீதியாக மக்களை பிரித்து ஏற்றத் தாழ்வு மிக்க ஒரு ஒரு சமூகத்தை அமைத்து அதை அதிகாரம் செய்ய நினைக்கிறார்கள்.
நமக்குத் தேவை சமத்துவ சமநீதியான, ஜனநாயக இந்தியா அதை நோக்கிப் பயணிப்போம்... ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது.