பால் அரசியல்

milk
இந்திய வேளாண் உற்பத்தியைப் பெருக்க அன்றைய நவீன அறிவியலாளர்களால் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சி பெரும் பண்ணையாளர்களுக்கே வாய்ப்பாக அமைந்தது, குறுஉழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றிக் கூலிகளாக்கி இருந்தது. இவர்களுக்கு உதவும் பொருட்டு இன்னொரு புரட்சி செய்ய அவர்கள் விரும்பினர். அதுதான் ‘வெண்மை புரட்சி’ எனும் பால் உற்பத்திப் பெருக்கம்.
இந்த இடத்தில் ஒரு செய்தியைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தியாவில் பால் என்பது ஒரு முதன்மை உற்பத்திப் பொருளாக இருந்தது இல்லை. அது வேளாண்மையின் ஒரு உபரி உற்பத்திப் பொருளே. இங்கே கால்நடைகள் என்பவை உணவுப் பயிர்களில் மனிதர் உண்டது போக மீதியையும், மனிதரின் உணவுக்குப் பயன்படாத தாவரங்களையும் தின்று வளர்ந்தவையே. சுருக்கமாக ஒருவரின் உணவை மற்றொருவர் உண்டு, அவர் மேல் பட்டினியைத் திணித்து விடாமல் வாழ்ந்துவந்தனர்.
பால் வெள்ளம்
மேற்கத்திய கால்நடை வளர்ப்போ தனது கால்நடைகளுக்கு உணவு அளிப்பதற்காகத் தனியாகப் பயிர் செய்ய வேண்டிய கட்டாயத்தைக் கொண்டது. அதாவது மனிதர் உணவுக்கான பயிர் நிலத்தைத் திருடி, கால்நடைக்குக் கொடுப்பது.
அறிவியலாளர்கள் கூற்றுப்படி 33% இந்தியர்கள் அதிலும் குறிப்பாக 70% தென்னிந்தியர்கள் ‘லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள்’ (Lactose intolarant) எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர்களுடைய உடல் அமைப்புப் பாலில் உள்ள சர்க்கரையை உடைக்கும் தன்மையற்றது என்பதே. இதன் விளைவாகத் தொடர்ந்து பால் உட்கொண்டால் அடிவயிற்றில் வலி, உப்புசம், வயிற்றுப்போக்கு முதலியவை ஏற்படலாம்.
நம்மிடையே காப்பி, தேயிலை அறிமுகமாகும்போதுகூட அவற்றைப் பெரும்பாலும் பால் கலக்காமல் சாப்பிடும் வழக்கம்தான் முன்பு இருந்தது. ஒரு தலைமுறைக்கு முன்பு தேநீர் கடைகளில் கடுங்காப்பி, வரத்தேநீர் என்கிற சொற்கள் புழங்கப்பட்டதை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அறிவார்கள். ஆனால், இன்று அவையனைத்தும் வழக்கொழிந்து தேநீர், காப்பி என்றாலே பால் கலந்து சாப்பிடுவது என்பதே நடைமுறை இயல்பாகிவிட்டது.
பூச்சிக்கொல்லி ஆபத்து
பசுமைப் புரட்சியைப் பின்பற்றிய இந்த வெண்மைப் புரட்சியிலும், பசுமைப் புரட்சி விட்டுச்சென்ற ஆபத்தின் தடம் இருந்தது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏழு ஆண்டுகள் நடத்திய ஆய்வின் முடிவில் பாலில் டி.டி.ட்டி, ஆர்செனிக், காட்மியம், ஈயம் ஆகியவற்றோடு நச்சுத்தன்மைமிக்க பூச்சிக் கொல்லியான HCH (Hexachlorocyclohexane) இருப்பதும் தெரியவந்தது. கலப்பட உணவு சட்டத்தின்படி இந்த HCH கிலோவுக்கு 0.01 மி.கி மட்டுமே இருக்கலாம். ஆனால், ஆய்வில் இது சராசரியாக 5.7 மி.கி இருப்பது தெரியவந்தது. இது ஈரலையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.
அழிக்கப்பட்ட எளிய உணவு
சிற்றூர்களில் பாலை நேரடியாக நுகரும் பழக்கம் அதிகம் இருந்ததில்லை. அவர்கள் பாலைத் தயிராக்கிக் கடைந்து வெண்ணெய், நெய் எடுத்து விற்பதே வழக்கம். இதில் அவர்களுக்கு இரண்டு பலன்கள் இருந்தன. வெண்ணெய் எடுத்த பின் கிடைக்கும் துணைப்பொருளான மோரையும் விற்று வருமானம் ஈட்ட முடிந்தது. சிறந்த வேனிற்பருவப் பானமாக விளங்கிய 'லாக்டிக் அமிலம்' நிறைந்த நீர்மோர், மக்களுக்கு மலிவான விலையில் கிடைத்த சத்து பானமாக இருந்தது.
அதேபோல் சிற்றூர் காலநிலைக்கு ஏற்ற பொருளாக விளங்கிய நெய், நீண்ட நாட்கள் கெடாது என்பதால் மழைக்காலங்களில் ஊர்ப்புறங்களுக்கு ஏற்றதொரு உணவாக அது இருந்தது. இவை அனைத்தையும்விட சிறப்பு, இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்ததுதான். சில பத்தாண்டுகளுக்கு முன்புவரைகூட ஒரு சில ஊர்ப்புறங்களில் மோர், வெண்ணெய், நெய் விற்கும் பெண்களைப் பார்க்க முடிந்தது. எளிய பெண்களிடம் இருந்த இந்தச் சிறு வணிகப் பொருளாதாரம், ‘வெண்மை புரட்சி’ என்கிற பெயரால் தட்டி பறிக்கப்பட்டு இன்று பெரும் வணிக நிறுவனங்கள் வசம் சென்றுவிட்டது.
பால் என்பது இன்று பங்குச் சந்தை வணிகம். நெஸ்ட்லே போன்ற பால்மாவு நிறுவனங்கள், குவாலிட்டி வால்ஸ் போன்ற பனிக்கூழ் நிறுவனங்கள், காட்பரீஸ் போன்ற சாக்லேட் நிறுவனங்கள் முதலியனவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் எகிறிக் கொண்டிருக்க… ஊர்ச்சந்தையில் மோர் விற்றுக்கொண்டிருந்த நம் கிழவிகளைக் காணாமல் போய்விட்டார்கள்.

(நாட்டு மாடு, வெளிநாட்டு மாடு பற்றிய சர்ச்சை பெரிதாக நடந்துகொண்டிருக்கும் நிலையில். சூழலியளார் நக்கீரன் அவர்கள் எழுதி சமீபத்தில் வெளியான ‘பால் அரசியல்’ நூலின் ஒரு பகுதிதான் இந்தக் கட்டுரை.)