கலை அறிவியல் படிப்புகள் – வரலாறு

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து கல்லூரிப் படிப்பில் எந்த பிரிவை எடுத்து என்ன படிக்கலாம் மாணவர்களும், பெற்றோர்களும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
மாணவர்கள், பெற்றோர்கள் பெரும்பாலும் மருத்துவ பொறியியல் படிப்புகளைத்தான் தங்கள் கனவாக நினைத்திருப்பார்கள். பொறியியல் படிப்பில் வேலை வாய்ப்புகள் இல்லாத சூழலில் பொறியியல் படிப்பின் மோகம் சமீப காலங்கங்களில் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது.
உண்மையிலேயே பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கேற்ற திறமையும் இருக்கும் மாணவர்கள் அதைப் படிப்பதில் தவறில்லை. ஆனால் பெற்றோர்கள் சொல்கிறார்கள், அடுத்தவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காகத் தொழில்முறை கல்வியில் சேர்வது வெற்றிக்கான வழியல்ல.
பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் இஞ்சினியரிங் படிப்பை தேர்ந்தெடுக்கக் காரணம் மற்றும் கலை அறிவியல் பாடப்பிரிவுகளைப் படித்தால் வளமான எதிர்காலம் இருக்காது என்ற நினைப்புதான்.
“மாணவர்கள் அடுத்தவர்களுக்காக ஒரு பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது தவறு. எதைப் படித்தாலும் அதில் சாதிக்கக்கூடிய ஆளுமையை வளர்த்துக்கொண்டால் லட்சியத்தை அடைவது எளிது.” கலை அறிவியல் பாடப் பிரிவுகள் வளமான எதிர்காலத்தை தரும் ஏராளமான வாய்ப்புகள் கொண்டவை. அரசுத்துறை வேலை வாய்ப்புகள், தனியார் வாய்ப்புகள், சுய வேலை வாய்ப்புகளையும் கலை அறிவியல் படிப்புகள் உருவாக்கித் தரும். இளநிலை பட்டத்தோடு படிப்பை முடித்து விடாமல் முதுநிலை, ஆய்வு நிலை வரை தொடார்ந்து படிக்கும் மாணவர்களுக்கு சமூக அங்கீகாரமும், நிலையான எதிர்காலமும் நிச்சயம் உண்டு.
வளமான வரலாறு
பலரால் புறக்கணிக்கப்படுகிற பாடப் பிரிவுகளில் வரலாறும் ஒன்று. பி.ஏ. வரலாறு படித்துவிட்டு அதிலேயே பட்ட மேற்படிப்பு முடிக்கிற பொறுமையும் திறமையும் இருந்தால் நிச்சயம் ஒருவரால் வரலாற்று ஆராய்ச்சியாளராகத் தடம்பதிக்க முடியும். வரலாறு முடித்தவர்கள் ஆவணக் காப்பகம், நூலகம், அருங்காட்சியகம் ஆகியவற்றில் பணியாற்றலாம்.
அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணப் பாதுகாவலர் வேலைக்கும் இந்தப் படிப்பு உதவும். அரசியல்வாதிகளில் பலர் வரலாறு படித்தவர்களைத் தங்களின் மக்கள்தொடர்பு அலுவலராகவும் அந்தரங்கக் காரியதரிசியாகவும் நியமிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். இவை அனைத்தையும் தவிர ஆசிரியர் பணியையும் தேர்ந்தெடுக்கலாம்!