மாணவர்களின் கல்விப் பயணம் எதை நோக்கி அமைய வேண்டும்?

ஒரு மாணவன் தனது கல்விப் பயணத்தில் கால் பதிக்கின்ற போது, தான் கற்கின்ற கல்வியின் மூலம் எனது தேசம், சமூகம், குடும்பம் பயன்பெற வேண்டும் என்ற இலட்சியத்தோடு படிக்க வேண்டும் என்பதை சென்ற இதழில் பார்த்தோம்.
அடுத்த இலக்கு
2. கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் குணம் சீரமைக்கப்பட வேண்டும்
ஒரு மனிதனுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு குணம் (Character) என்பது மிக மிக அவசியம். ஒருவருடைய வாழ்வையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான காரணிகளில் ‘குணமும்’ ஒன்று.
ஒரு மாணவன் பிறரிடம் பழகும் தன்மை, பேசும் இயல்பு, பார்க்கின்ற விதம், அவன் உண்பது, குடிப்பது, ஆடை அணிவது முதல் எல்லா விஷயங்களும் இதில் உள்ளடங்கும்.
சுருங்கச் சொன்னால், ஏதேதோ வழிகளில் செல்கின்ற மாணவர்களை “நான் இப்படித்தான் வாழ்வேன்” என்ற தன்னம்பிக்கை ஏற்படுத்தி தன்னை திருத்தி அமைக்கின்ற உயர் பண்பை இன்றைய கல்வியும், கல்வி முறையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இதை வேறு விதமாக சொன்னால் ‘Personality Development’ - ஐ மாணவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் இன்றைய கல்வி முறை மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நேர்மையையும் உள்ளடக்கிய Personality Development - ஐ உருவாக்குகிறதா என்றால் மில்லியன் டாலர் கேள்விக்குறிதான் விடையாக அமையும்?
காரணம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வி கற்பதற்கான காரணங்கள் தெரியவில்லை. தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இல்லை சிலரைத் தவிர..!
அதனால்தான் இங்கு நாம் வலியுறுத்துவது “ஒரு மாணவன் கல்வி கற்கின்ற போது நான் நல்லவனாக உருவாவேன்; அதற்காகத்தான் கல்வி கற்கிறேன்” என்ற தன்னம்பிக்கையோடு தனது இரண்டாவது இலக்கை நிலை நிறுத்தினால் அவன் பிறருக்கும் உதாரணமாக அமைவான்.
சரி ஒரு மாணவனுக்கு உயர்ந்த குணத்தை இன்றைய கல்விமுறை தரவில்லை. ஆனால் அது வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள் அப்படியெனில் அந்த உயர்ந்த குணத்தை பெற்றுக் கொள்ள நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பதும் எனக்கு புரிகிறது.
அதற்கான பதில் என்ன தெரியுமா?
மாணவர்களின் பெற்றோர்களும், குடும்பச் சூழலும் தான் காரணம்.
ஒரு மாணவனுடைய குணம் கட்டமைக்கப்பட / சீரமைக்கப்பட பெற்றோர்களும், அவர்கள் வாழுகின்ற இல்லமும்தான் காரணமாக அமைகிறது.
ஒரு குழந்தை மாணவனாக மாறுகின்ற போது அவனுக்குள் ஏற்படுகின்ற மாறுதலை / மாற்றங்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் அவனுக்கு ஒழுக்கமில்லை என்று சொல்லி அவனை உதாசீனப்படுத்தி விடுகிறோம்.
சிறுவயதில் அவனது தேவைக்கும் அதிகமான எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுத்து விடுகிறீர்கள். ஒரு கட்டத்தில் அவன் விரும்புகின்ற ஒரு பொருளை(!?) உங்களிடம் அவன் கேட்டால் இதையெல்லாம் கேட்கக் கூடாது என்று புத்திமதி கூறுகிறீர்கள். அதை அவன் கேட்க மறுக்கும் போது அவனை உதாசீனப்படுத்துகிறீர்கள்.
அவன் உங்களை வரம்பு மீறுவதற்கான காரணம், சிறுவயதில் அவனுக்கு தேவையானதை தாண்டி அனைத்தையும் நீங்கள் வாங்கிக் கொடுத்ததுதான் அதற்கு காரணம் என்று ஏன் உங்களுக்கு தெரியாமல் போனது?
உயிரற்ற வெறும் பொருட்களை வாங்கிக் கொடுப்பது தான் அன்பு என்றால் அது ‘உங்கள் தவறு!’
ஒரு தந்தை…. 8 கோடி ரூபாய் செலவில் BENZ CAR ஒன்று வாங்குகிறார். அன்று மாலை அவரது இல்லத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டது. நமது வீட்டிற்குள் ஏதோ புதிதாக கார் ஒன்று நின்றிருப்பதை பார்த்த அவரது எட்டு வயது குழந்தை அந்த பென்ஸ் காரில் ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்தது.
விலை உயர்ந்த பென்ஸ் காரில் தனது மகன் கிறுக்குவதை பார்த்து அந்த தந்தை டேய் என்னடா அதுல கிறுக்குற அதன் மதிப்பு என்னன்னு உனக்குத் தெரியுமானு வாய் பேச கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் அருகில் இருந்த 2 கிலோ படிக்கல்லைத் தூக்கி அவன் மேல் எறிந்தார்.
சிறு குழந்தை 2 கிலோ படிக்கல் அவன் மீது பட்டதுதான் தான் தாமதம் தலையில் ரத்தம் வடிய துடி துடித்து கீழே விழுந்தான்.
அனைவரும் அழுது கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல பரிசோதனைக்குப் பின் மருத்துவர் சொன்னார். உங்கள் மகனுக்கு உயிர் மட்டும்தான் இருக்கிறது. கோமோ ஸ்டேஜில் இருக்கிறார் என்று கூறிவிட்டார்.
அழுத கண்களோடு கவலை தோய்ந்த முகத்தோடு வீட்டிற்கு வந்து அப்படி என்னதான் பென்ஸ் காரில் எழுதினான் என்று பார்க்க வந்தார் அந்த தந்தை. அதில் “ஐ லவ் மை டாடி” என்று அந்த ஆருயிர் குழந்தை எழுதி இருந்தது.
பொதுவாக பொருட்களின் நோக்கம் என்பது பயன்படுத்துவதற்குத்தான். மனிதர்கள் நேசத்திற்குரியவர்கள்.
ஆனால் இன்று பொருட்களை நேசித்து மனிதர்களை பயன்படுத்துகிறோம்.
பொருட்களை நேசித்து மனிதர்களை பயன்படுத்துகிற நிலைமாறி மனிதர்களை நேசித்து பொருட்களை பயன்படுத்துகிற காலம் வர வேண்டும்.
எனவே உங்கள் குழந்தைகளை நீங்கள் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை எப்படி மாற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ! அது போல நீங்கள் மாற வேண்டும்.
எனவே உங்கள் குழந்தைகளின் குணம் உங்களால் உங்கள் இல்லங்களில் பண்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
நாம் தவறுகளை செய்து விட்டு அவர்களை குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
எனவே ஒரு மாணவனின் குணம் கட்டமைக்கப்பட வேண்டுமானால் அவனது பெற்றோர்களும் குடும்ப சூழலும் சீராக வேண்டியது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் ஒரு மாணவனின் குணம் குணம் சீர்பெற அவன் நல்ல சிந்தனைகள் உள்ளவனாக இருக்க வேண்டும்.
நல்ல சிந்தனை எப்படி குணத்தை தீர்மானிக்கும் என்கிறீர்களா?
உதாரணம் ஒன்று சொல்கிறேன். +2 முடித்த பின் ஏதேனும் ஒரு கல்லூரியில் கிடைத்திருக்கும் அவனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் புது ஆடை அணிந்து நோட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு கல்லூரி கலையரங்கில் கல்லூரி முதல்வரின் அறிவுரைகளுக்குப் பின் “A LL of Yo Go to Your Respective Class Room” அவரவர்கள் அவரவர் வகுப்புக்குச் செல்லுங்கள் என்று கூறியிருப்பார்.
முதல் நாள் வகுப்பில் நுழைந்த அவன் புது மணமகன் போல் தலை நிமிராமல் அமர எங்கு இடம் கிடைத்ததோ அங்கு அமர்ந்து கொள்வான்.
ஒரு வாரம் பத்து நாட்கள் கழிந்த பின் நம் உடன் படித்த மாணவர் யாரேனும் உண்டா? நமது தெருவில் / ஏரியாவில் வசிக்கும் மாணவர்களைத் தேடிப்பிடித்து அவர்களோடு ஒரு மூன்று மாதங்கள் வரை ஓடும்.
மூன்று மாதம் கழிந்த பின் நன்றாக படிக்கும் மாணவர்கள் முதல் இருக்கைகளிலும் படிப்பில் அவ்வளவாக விருப்பம் இல்லாத மாணவர்கள் கடைசி இருக்கைகளிலும் மாணவர்கள் செட்டு செட்டாகப் பிரிந்து அமர்வார்கள்.
கல்லூரி தொடங்கிய நான்காவது மாதத்தில் அமர்ந்த நண்பர்கள் வட்டம் கல்லூரி வாழ்க்கை முடிகிற வரை அது தொடரும்… (ஒரு சில மாற்றங்களைத் தவிர பெரும் மாற்றங்களை அங்கு எதிர்பார்க்க முடியாது)
அப்படியே சற்று நேரம் உங்கள் வாழ்க்கையை பின்னோக்கி நகர்த்திப் பார்த்து இது சரிதானா என்பதை உங்களை கிள்ளிப் பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.
அந்தப் புத்துணர்வுடன் உங்களிடம் ஒரு கேள்வி ?!
நன்றாக படிக்கும் மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடிப் பேசி பின் அப்படி அமர்ந்தார்களா? அல்லது யதார்த்தமாக அப்படி அமைந்ததா?
ஒவ்வொரு செட் மாணவர்களும் நண்பர்களும் நாமெல்லாம் எங்கு எப்படி அமர வேண்டும் என்ற திட்டத்திற்குப் பின் அவர்கள் அப்படி அமர்ந்தார்களா? அல்லது யதார்த்தமாக அது அமைந்ததா?
யதார்த்தமாக அப்படி அமைந்தது என்றால் அவர்களை அங்கு அப்படி அமர வைத்தது எது? என்ற வினா எழுகிறதல்லவா?
ஒவ்வொருவரும் அப்படி அமர்வதற்கு ? குறிப்பிட அமைப்பில் இருப்பதற்கு அவர்களின் சிந்தனைதான் காரணம். ஒவ்வொருவருடைய எண்ண அலைகள் அந்த எண்ணம் சார்ந்தவரோடு இவரை இழுத்துச் சென்று விடும். என்ன... புரியவில்லையா?
உதாரணத்திற்கு “மதுரையில் வசிக்கின்ற அப்துல்லாஹ் என்பவருக்கு ‘சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற குணம் உடையவராக இருப்பார்.”
இது போல் சென்னையில் வாழுகின்ற அப்துர் ரஹ்மான் என்பவரும் ‘சமூகத்தில் ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற குணம் உடையவராக இருப்பார்.
இவர்கள் இருவரும் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு நிகழ்வில் ஒன்று சேர்வார்கள்.
ஏன்? உங்களது வாழ்கையை சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
உங்களுடைய நண்பர்கள்; நீங்கள் அதிகம் மனம் விட்டுப் பேசும் உறவுகள்; உங்களுக்கும் மிகவும் பிடித்தவர்கள் இவர்கள் எல்லோரும் ஏறக்குறைய (சுமார் 60 - 70%) உங்கள் இயல்புக்கும் உங்கள் குணத்திற்கும் ஒத்துப் போகக் கூடியவராக இருப்பார்.
இனிவரும் காலங்களிலும் நீங்கள் பழகப் போகும் நண்பர்கள் உறவுகள் அனைத்தும் ஏறக்குறைய உங்கள் குணத்தில் ஏதேனும் ஒன்றில் ஒத்துப் போகக்கூடியவராகத்தான் இருப்பார்.
ஒரு வேளை இருவரின் குணங்களும் எந்த வகையிலும் ஒத்துப் போகவில்லை என்றால் அந்த உறவுகள் வெகு நாள் நீடிக்காது.
காரணம் ஒரு நல்ல சிந்தனை நல்ல எண்ணம் இன்னொரு நல்ல எண்ணம் நல்ல சிந்தனை உடையவரோடு இழுத்து சேர்த்து விடும். அதனால்தான் அரபியில் ஒரு பழ்மொழி உண்டு. அல் ஜின்சு யமீலு இலல் ஜின்சி - இனம் இனத்தோடுதான் சேரும்.
அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான் : ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்விற்கு பயப்படுங்கள். நல்லவர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.
மேற்காணும் இறை மொழியிலும் நபி மொழியிலும் மனோதத்துவ அடிப்படையில் ஏராளமான விஷயங்கள் புதைந்துள்ளன.
எனதருமை மாணவக் கண்மனிகளே!
நான் எனும் நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டு உங்களுக்குள் “நல்ல சிந்தனை உருவாக்க முயற்சி செய்யுங்கள்; அது தொடரும் பட்சத்தில் உங்களது கல்வியும் கலாசாரமும் நல்ல சிந்தனையின் வெளிப்பாடாக அமையும்.”
எனவே கல்வி கற்க செல்கின்ற மாணவர்களே! உங்கள் எண்ணங்களை பரிசுத்தமாக்குங்கள். அதில் உங்களுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் தேசத்திற்கும் பலன் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கல்வி கற்க சொல்வதற்கு முன் உங்கள் மனதில் நிலை நிறுத்த வேண்டிய நோக்கங்கள் இரண்டு.
1. நான் கற்கின்ற கல்வி மூலம் எனது தேசம், சமூகம், குடும்பம் பயன் பெற வேண்டும்.
2. நன் கற்கின்ற கல்வி எனக்குள் நல்ல சிந்தனைகளை உருவாக்கி எனது குணத்தை பண்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு படிப்பைத் துவங்க வேண்டும்.