இந்திய மருத்துவ படிப்புகள்

மருத்துவம் என்றாலே பெரும் பெரும் கட்டடங்களும், தோல் டாக்டர், பல் டாக்டர், நரம்பு டாக்டர் எம் பி பி எஸ், எம்.எஸ்., எம்.டி என்ற பெயர்கள்தான் நம் நினைவில் வரும். இந்த மருத்துவமனைகளும் மருத்துவ முறைகளும் நமது மண் சார்ந்தவை அல்ல! இந்த மருத்துவமும் மருத்துவ முறைகளும் ஆங்கிலத்தை மையமாக கொண்டவை. ஆங்கிலேயர்களின் மருத்துவ முறை. இன்றைய சூழலில் தவிர்க்க இயலாத மருத்துவமாக ஆங்கில மருத்துவத்துறை வளர்க்கப்பட்டிருக்கிறது நினைவில் கொள்ளுங்கள் வளரவில்லை வளர்க்கப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட அனைத்துப் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு தடை இருந்தன. நாடு விடுதலை பெற்ற பிறகு மகாத்மா காந்தியின் தலையீட்டை அடுத்து மத்திய அமைச்சரவையில் இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க 1948-ல் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நமது மண்ணுக்குறிய பாரம்பரிய வைத்திய முறைகள் உயிருக்கும், உடலுக்கும், மண்ணுக்கும் ஊறு விளைவிக்காத பின் விளைவுகளைத் தராத மருத்துவ முறைகள். பாரம்பரிய வைத்திய முறைகள் நோயை மட்டும் பார்ப்பதில்லை. முழுமையாக மனித உடலையும் மனதையும் பார்க்கிறது. நோய்க்கு மருந்து அளிக்காமல், நோய் வந்த மனிதரின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் மருத்துவத்தையே நமது பாரம்பரிய வைத்திய முறைகள் தருகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் நோய் தானாகவே போய்விடும் என்பது சித்தா யுனானி போன்ற மருத்துவ சிகிச்சையின் அடிப்படை.
இந்திய மருத்துவம் என்று அழைக்கப்படும் மருத்து துறைகள் :
சித்த மருத்துவர் : மண்ணையும் மண்ணில் விழைந்த தாவரங்களையும் அறிந்து அதன் மருத்துவ குணங்களை ஆய்ந்தறிந்த சித்தர்கள் தமிழில் எழுதிய மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். இந்த மருத்து முறைகளை பயின்றவர்கள் சித்த வைத்தியர் எனப்படுவார்கள். சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இளங்கலை ஆயுர்வேதம் (B.S.M.S) முடித்தவர்கள் சித்த மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.
ஆயுர்வேத மருத்துவர் :

ஆயுர்வேதம் இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இளங்கலை ஆயுர்வேதம் (B.A.M.S) முடித்தவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.
யூனானி மருத்துவம்என்பது கிரேக்க - அராபிய வைத்திய முறையாகும். மத்திய கலத்தில் அரபு முஸ்லிம்களால் பைத்துல் ஹிக்மா (அறிவு இல்லம்) என்ற ஒர் அமைப்பின் மூலம் கிரேக்க மொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட கிரேக்க மருத்துவத்தையே அக்கால அரபு முஸ்லிம்கள் பெரிதும் வளர்த்தெடுத்தனர். யூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதற் கிடைக்கிறதாயினும் யூனானி மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா (980-1037) என்பவரால் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேதத்துடன் நெருங்கிய தொடர்புடைய யூனானி மருத்துவ முறையில் இன்று இந்தியா முன்னிலை வகிக்கும் நாடாக விளங்குகிறது. இங்கே யூனானி கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையம், மற்றும் மருத்துவ மனைகள் உள்ளது. இளங்கலை யூனானி (B.U.M.S.,) முடித்தவர்கள் யூனானி மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.
ஓமியோபதி மருத்துவர் :

ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சாமுவேல் ஹேனிமேன் என்பவரால் கண்டறியப்பட்ட மேற்கத்திய மருத்துவ முறை ஓமியோபதி மருத்துவம் ஆகும். ஓமியோபதியில் மருந்துகள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது. இளங்கலை ஓமியோபதி (B.H.M.S) முடித்தவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா :

 இந்திய மருத்துவ முறைகளில் இன்னொமொரு பிரிவாகும். இதற்கு இந்தியாவில் Bachelour of Naturopathy and Yogic Sciences) எனும் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி
ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இப்படிப்பில் சேர, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். யுனானி மருத்துவ துறையில் சேர்வதற்கு அரபி அல்லது உருது படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை, அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை, அரசு சித்த மருத்துவக் கல்லூரி சென்னை, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி சென்னை, அரசு யோக மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி சென்னை, அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி திருமங்கலம், மதுரை, அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி கன்னியாகுமரி போன்ற இடங்களில் நேரிலோ அல்லது தபாலிலோ பெற்றுக்கொள்ளலாம். அல்லது <http://www.tnhealth.org/> என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து படிப்புகளுக்கும் ஒரே படிவத்தில் விண்ணப்பிக்கலாம். அனைத்து படிப்புகளுக்கும் கட்டணமாக 500 ரூபாயும், சிறப்பு பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்போருக்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "டிடி" யை "Director of Indian Medicine and Homoeopathy, Chennai - 106", என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றொப்பமிட்ட கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, "The Secretary, Selection Committee, Directorate of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Govt. Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai - 600 106. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விவரங்களுக்கு 044 - 2622 2639 என்ற எண்ணையோ அல்லது <http://www.tnhealth.org/> என்ற இணையதளத்தையோ பார்க்கவும்.