சட்டப்படிப்பு.

சட்டம் என்பது மனிதர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகளைக் கொண்டது. சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான நிலையான வளர்ச்சிக்கும் விதிகளும், நெறிமுறைகளும் நீதியாக பேணப்பட வேண்டும். அறம், நீதி நெறி என்பதன் மறுவடிவம்தான் சட்டம் எனலாம். அறத்தை தழைக்கச் செய்யவும், அறநெறிதவறும் அநீதிகளை களைந்து நீதியை நிலை நாட்டவும்தான் சட்டம்.
மனிதர்கள் சமூகமாக வாழ்கிறவர்கள். உறவு, கொடுக்கல் வாங்கல், சுயதேவைகள் என ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் மற்றவரோடு தொடர்பில் இருப்பதுதான் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை. ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் மனிதர்களால் வாழ முடியாது.
உறவு, வியாபாரம், கொடுக்கல், வாங்கல், பழக்க வழக்கம் போன்றவை மூலம் மனிதர்கள் பிர மனிதர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் தொடர்புகளில் முரண்பாடுகள் தோன்றும்.
மனிதர்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளில் நீதி செய்யப்பட் வேண்டும். இல்லாவிட்டால் சமூகத்தில் சமாதான வாழ்க்கை என்பது கானல் நீராகிப் போகும் அபாயம் இருக்கிறது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம், நம்முடைய அரசியல் சட்டம்தான். மகத்தான மானுட ஆவணம் என்று அழைக்கப்படும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்ட’த்தின் உருவாக்கத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் போராட்டங்கள், தவிப்புகள், மகத்தான தலைவர்களின் கனவுகள், தியாகங்கள் எல்லாமே இருக்கின்றன. இனம், சாதி, நிறம், மத, பால், தேசியம், வயது, உடல்வலு, பணம் ஆகியவற்றை காரணமாக்கி எந்த தனி மனிதருக்கும் “நீதி” மறுக்கப்படக் கூடாது.
இன்று நம் நாட்டில் சட்டத்தை மதிக்காமல் அதை வளைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணத்திற்கும் அதிகாரத்திற்கும் விலைபோகும் பொருளாக நீதி மாறிவரும் சூழ்நிலையில், ஏழைகளுக்கும் நீதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இனப்பற்று, மதப்பற்று, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக மனித நேயத்தை உதறித் தள்ளி மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.
சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட மனித உரிமைகளை வென்றெடுக்க சட்டம் படித்த ஆளுமைகள் இந்த தலைமுறையிலிருந்து உருவாக வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியாகவும் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் சட்டத் துறையில் பெருகி வருகிறது.
சட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. இவைதவிர, சிவில் சர்வீஸ் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளையும் எளிதாக எழுதலாம்.
முஸ்லிம்கள் சட்டப் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசரமும் அவசியத் தேவையும் இருக்கிறது. அதிகமான முஸ்லிம் மாணவர்கள் சட்டப் படிப்பை முடித்து இஸ்லாமிய சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக செயல்பட வேண்டும்.
இந்திய சட்டப் படிப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பாக இஸ்லாமிய சட்டப் பிரிவை படித்து இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஆளுமைகளாக முஸ்லிம் மாணவர்கள் மாறுவதற்கு மிகச் சரியான துறை சட்டத்துறை.