விமர்சனங்கள் எதற்காக?

இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய புள்ளி. கலகக்காரன் / கலகக்காரி என்று பெயர் எடுக்கவா? அதை விடவும், குறைகளைக் களையவும் சீர்கேடுகளை சீரமைக்கவும்தானே.
அவரவரைப் பொறுத்து, சூழ்நிலைகளைப் பொறுத்து விமர்சன வழிமுறைகள் வேறுபடும்; வேறுபட வேண்டும்.
அநியாயக்கார ஆட்சியாளன் முன்னிலையில் உண்மையைத் துணிந்து உரைப்பதுதான் உண்மையான ஜிஹாத் என்ற ஹதீஸில், நம் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.
அதிகாரத்திற்கு ஒத்து ஊதுங்கள் என்று நான் யாருக்கும் சொல்லவில்லை தலைவர்கள் என்று சொல்பவர்களை விமர்சிக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.
ஆனால், இறுதி விளைவுகள் குறித்த நுணுக்கமான பார்வை எப்போதும் அவசியம். நண்பர்களை எதிரிகளாக மாற்றுவதும் எதிரிகளை நண்பர்களாக மாற்றுவதும் நம் கையிலேயே, நம் அணுகுமுறையிலேயே இருக்கிறது.
அவரவருக்கு அவரவர் விமர்சன முறைகள் இருக்கின்றன. முடிந்தால் அதன் சாதக பாதங்கள் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் சரி காணாது விட்டால் கடந்து செல்லுங்கள். நம் எல்லோரது எண்ணமும் பொது நன்மை ஒன்றே. அதில் சந்தேகம் கிடையாது.
மாற்றத்திற்கான வழிமுறைகள் நுணுக்கமாகவும் விவேகமாகவும் இருப்பது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடிவுகள், வழிமுறைகள் இருக்கும். ஆனால், எதையும் வலிந்து திணிக்க முடியாது. இதில் நாம் ஏன் குழம்ப வேண்டும்?
நமது கவனத்திற்குரிய இன்னொரு விஷயம்: காட்டமான விமர்சனம் என்பது வேறு, காட்டமான சொற்களைப் பயன்படுத்தி விமர்சிப்பது என்பது வேறு.
சமூக, அரசியல், மார்க்க , இலக்கிய செயற்பாட்டில் இருப்போருக்கு சொற்கள் பற்றிய கவனம் எப்போதும் மிக முக்கியம். வார்த்தைகள் தவறுவதால்தான் வலிகள் அதிகரிக்கின்றன. இதை நான் சும்மா சொல்லவில்லை.
பல்கலைக்கழக வாழ்வில் அங்கிருந்த அதிகார வர்க்கத்தினருடனும், பொது வாழ்வில் பலருடனும் நேருக்கு நேர் மோதிய சந்தர்ப்பங்கள் பல எனக்கு ஏற்பட்டிருக்கின்றன.
அப்போதெல்லாம் நாங்கள் கைக்கொண்ட நேர்மையான, வித்தியாசமான வழிமுறைகள் ஆரம்பத்தில் குழப்பமாகத் தெரிந்தாலும், பின்னர் நல்ல விளைவுகளைத் தந்திருக்கின்றன.
முதலில் வாய்த் தர்க்கங்களில் தொடங்கி, பின்னர் புரிந்துணர்வால் அடங்கிப் போன பல சம்பவங்கள் எனது மனதுக்கு வந்து போகின்றன.
காலம் மிகப் பெரிய ஆசான்!
கோபம் ஏற்படாத ஒருவன் மனிதனாக இருக்க முடியாது. ஆனால், கோபத்தை சமநிலைப்படுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும். அநீதியைக் கண்டு பொங்காத மனிதனின் இதயம், இறந்து இற்றுப் போனதாகவே இருக்க முடியும்.
தார்மீகக் கோபம் அவசியம். அது குறித்து தாழ்வுணர்ச்சி கொள்ளத் தேவையில்லை. அது இல்லாவிட்டால் யாரும் மாற்றத்தைப் பற்றி சிந்தித்து செயலாற்ற மாட்டார்கள்.
ஆனால் ஒன்று. கோபத்தின்போது எப்படி நடந்து கொள்வது என்பது தனிக்கலை. அதை பட்டறிவின் மூலமும் பெற வேண்டும்: படிப்பறிவின் மூலமும் பெற வேண்டும்.
இவை எதுவுமே இல்லை என்றால், நீங்களும் பொதுப் புத்திக்குள் தொலைந்து போவீர்கள். அப்படித் தொலைய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இளைஞர்களே, யுவதிகளே!
நீங்கள் புதியவர்கள் அல்ல. இது உங்களின் காலம். நீங்கள்தான் இதில் தலைவர்கள். நம்பிக்கையோடு- ஆனால், நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் முன்னே நகருங்கள்.
உங்கள் தவறுகளிலிருந்து பாடம் படியுங்கள். அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்.