துன்பமும் தீமையும் தற்செயலா..!?

கலாநிதி பீ. எம். எம். இர்பான்
உலகில் துன்பங்கள் நிகழக் காரணம் என்ன?
எல்லா தத்துவங்களும் விடை காண முயன்று களைத்து நிற்கும் கேள்வி இது.
அங்கக் குறைபாட்டால் சுருண்டு படுத்திருக்கும் குழந்தையொன்றின் முனகலுக்கு முன்னால் சர்வ வியாக்கியானமும் வலுவிழந்து விடுகிறது.
‘நான் செய்த குற்றம் என்ன!?’ என அக்குழந்தையின் அழுகையிலிருந்து பிறக்கும் கேள்வியில்
எல்லா தத்துவங்களும் ஊமையாகி விடுகின்றன.
உண்மையில் இந்த வேதனையும் துன்பமும் தற்செயலா!?
முதிர்ந்தோர் பிணியுறுவதும். . . கனிந்த பழங்கள் அழுகிக் கெடுவதும். . . பசுந்தளிர் புழு வீழ்ந்து பட்டுப் போவதும் தற்செயலா!?
உறைய வைக்கும் குளிர். . . சுட்டெரிக்கும் வெயில். . . சுழன்றடிக்கும் காற்று. . . கரைபுளரும் வெள்ளம். . . திகிலூட்டும் பூகம்பம். . . வெந்து சிதறும் எரிமலை. . . உயிர் பறிக்கும் மின்னல். . .
இவற்றுக்கிடையில் பூமியுருண்டை பந்தாடப்படுவது தற்செயலா!?
தாவரங்களை கால்நடைகளும், கால்நடைகளை ஓநாய்களும், ஓநாய்களை பிற விலங்குகளும் வேட்டையாடுகின்றன. அனைத்தையும் மனிதன் வேட்டையாடுகிறான்.
பின்னர் அனைவரும் மண்ணுக்கு உரமாகி, அந்த உரத்தை மீண்டும் தாவரங்கள் உட்கொண்டு செழிக்கின்றன. இது தற்செயலா!?
பிரசவ வலியும் மரண வேதனையும் தற்செயலா!?
ஒரு கவளம் உணவால் வயிற்றை நிரப்பிக் கொள்ள மனிதன் தினமும் ஓடுவதும். . .
பிறகு வயிற்றைக் காலி செய்ய மீண்டும் ஓடுவதும் தற்செயல்தானா!?
ஆன்மாவின் ஈர்ப்புக்கும் உடலின் இச்சைக்கும் இடையில். . .
அன்றாடச் செயலுக்கும் ஆற்ற வேண்டிய கடமைக்கும் இடையில். . .
சொந்தத் தேவைக்கும் பிறர் கோரிக்கைக்கும் இடையில்...
மனிதன் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது தற்செயலா!?
ஒவ்வொரு வினாடியும் பயம், கலக்கம், எச்சரிக்கை, எதிர்ப்பு என அலைக்கழியும் வாழ்வின் வெறுமையை நிரப்பிக் கொள்ள இருப்பதை விட மோசமான தீமைகளை மனிதன் நாடிச் செல்வது தற்செயலா!?
அவன் எனக்கு அநியாயம் இழைப்பதும்... நான் அவனை வீழ்த்துவதும்... அவன் என்னில் பொறாமை கொள்வதும்... நான் அவனை கேலி செய்வதும் தற்செயல் நிகழ்வுகளா!?
திருட்டும் கொலையும் வன்புணர்வும். . . அவற்றுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளும் தற்செயலா!?
மனித இனத் தோற்றம் முதல் இந்த நிமிடம் வரை ஓயாது நிகழ்ந்து கொண்டிருக்கும் போர்களும் கொலைகளும் அவற்றினால் வழிந்தோடும் குருதிப்புனல்களும் தற்செயலா!?
இல்லை - இவற்றுள் எதுவுமே தற்செயல் இல்லை!
இவை வாழ்வின் கூறுகள்; பிரபஞ்ச இயக்கத்தின் உயிர் நாடிகள்.
அப்படியென்றால் இவற்றுக்கு காரணம் என்ன?
இந்த தீமைகளும் வேதனைகளும் அவசியம்தானா!?
ஆதித் தந்தை ஆதம் (அலை) செய்த முதல் பாவத்தை அழிப்பதற்கே இவை நமக்கு விதியாகின என்று பைபிளின் பழைய ஏற்பாடு சொல்கிறது.
அவ்வாறெனில்... விலக்கப்பட்ட கனியை அவர் புசித்த பாவத்திலிருந்து தேவ மன்னிப்பு பெறுவதற்காகவா மனித வாழ்வு யுக யுகாந்திரமாக அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது!?
அந்தப் பாவத்தை கழுவவே இயேசுவின் ரத்தம் சிந்தப்பட்டதாக கிறிஸ்தவம் சொல்கிறது.
வரலாறு முழுக்க சிலுவைகளிலும், சிறைக் கம்பிகளுக்கிடையிலும், தூக்கு மேடைகளிலும், மூடிய அறைகளுக்குள்ளும் லட்சக்கணக்கான உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப் பட்டமைக்கும் இதுதான் விளக்கமா!?
ரத்த ஆறுகள் ஓய்ந்தபாடில்லை.
தேவன் இன்னும் சினம் தணியவில்லை...
அந்த முதல் பாவத்தை இறைவன் இன்னும் மன்னிக்கவில்லை என்பதா இதன் பொருள்!?
உலகில் நிகழும் தீமைகளுக்கு மெய்யியலாளர்கள் சொல்லும் விளக்கமோ வேறு விதமானது.
‘துன்பம் என்பது சுதந்திரத்துக்காக கொடுக்கப்படும் விலை’ என அவர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில், சுதந்திரம் என்பது சுதந்திரமான தேர்வை வேண்டி நிற்பது.
அந்தத் தேர்வில் நல்லதும் இருக்கலாம்; கெட்டதும் இருக்கலாம்.
நல்லதை மாத்திரம் நோக்கியதாக மனித நாட்டம் செலுத்தப்படுமானால், அங்கு தேர்வுச் சுதந்திரம் என்பதற்கு இடமில்லை.
ஆனால் சுதந்திரம் என்பது - சரியோ தவறோ - மனிதன் விரும்பிச் செய்வது.
அதன் விளைவுகளையும் அவனே ஏற்றுக் கொள்வது.
அனைத்து உண்மைகளையும் பரிபூரணமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனது அறிவுக்கும் புலன்களுக்கும் இல்லை.
எனவே அவன் தவறுகளில் வீழ்வதும், அந்தத் தவறுகளின் விளைவாக துன்பங்களிலும் தீமைகளிலும் உழல்வதும் தவிர்க்க முடியாதவை.
ஆக - சுதந்திரம் எங்கிருக்கிறதோ அங்கு துன்பமும் இருக்கும்.
ஆதமின் தவறு இந்த சுதந்திரத்துக்கான குறியீடு மட்டுமே.
அவர் அல்லாஹ்வின் விருப்பத்தையன்றி தனது விருப்பத்தை சுதந்திரமாக நிறைவேற்ற முற்பட்டார்.
அந்தச் சுதந்திரம் அவரை துன்பத்தில் தள்ளியது.
வரையறுக்கப்பட்ட அறிவால் முழுமையான உண்மையை அவரால் புரிந்து கொள்ள முடியல்லை.
சுதந்திரம் என்பது மனிதன் தானாகவே ஏற்றுக் கொண்ட சுமை.
வானங்களும் பூமியும் மலைகளும் ஏற்கப் பயந்த பொறுப்பு அது.
எனவே, விளைவுகளையும் அவனே ஏற்க வேண்டும்.
மொத்தத்தில் - மனிதத் துன்பங்களின் திறவுகோல் அவனது சுதந்திரம்தான் என்கின்றனர் தத்துவவாதிகள்.
அதனால்தான் அவன் துன்பப் படுகிறான். . . தடுமாறுகிறான். . . போர் புரிகிறான். . . ரத்தத்தில் நடக்கிறான். . . பிணியும் மூப்பும் மரணமும் எய்துகிறான்.
அவனது வாழ்வு ஓயாத இயக்கமாக. . . போராட்டங்களின் ஆடுகளமாக மாறுகிறது.
சுதந்திரத்துக்காக என்ன விலை கொடுக்கவும் அவன் தயார்.
ஏனெனில் சுபீட்சத்தை விட அவன் அதிகம் நேசிப்பது சுதந்திரத்தைத்தான்.
அவனைப் பொறுத்தவரை, அவனது இருப்பின் மூல நிபந்தனையும் அதுதான்.
தானும் தனது சமூகமும் சுதந்திரமாக வாழ எந்தத் துன்பத்தையும் ஏற்க அவன் தயார்.
முதலாளித்துவம் வந்த போது நிலமானியக் கட்டமைப்பு தகர்ந்து போனது.
ஏனெனில் அந்த முதலாளித்துவம் பலருக்கு சுதந்திர வாக்காக அமைந்தது.
சோஷலிசம் வந்த போது முதலாளித்துவம் ஆட்டம் கண்டது.
ஏனெனில் அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தருவதாக அது வாக்களித்தது.
இருண்ட யுகம் தொட்டு இன்றுவரை மனித வரலாறு ரத்தம் தோய்ந்ததாகவே பதியப்பட்டிருக்கிறது.
எனினும் சுதந்திரம் என்ற வார்த்தையால் அது வீரமும் கம்பீரமும் மிக்க வரலாறாகத் தெரிகிறது.
வரலாற்றுப் பக்கங்களில் வழிந்தோடியிருக்கும் செறிவான ரத்த ஆறுகள் அனேகமாக சுதந்திரப் போராட்டம் பற்றிய கதைகளையே சொல்கின்றன.
இந்த எல்லா வியாக்கியானங்களுக்கும் அப்பால் அல்-குர்ஆன் ஓர் அழகான விளக்கத்தை தருகிறது.
தீமை என்பது சோதனை; அதில்தான் மனிதன் புடம் போடப் படுகிறான்; அதில்தான் பலரது போலிச் சாயம் வெளுக்கிறது; மனிதர்களுக்கிடையிலான தர வேறுபாடும் அதில்தான் தெரிய வருகின்றது. . . என்கிறது அது.
“நன்மையாலும் தீமையாலும் உங்களை நாம் சோதிக்கிறோம்” (அல்- அன்பியாஉ: 25)
உலக வாழ்வு என்பது புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டுமே.
அதற்கப்பால் இன்னும் எத்தனையோ பக்கங்கள் உள்ளன.
உலக வாழ்வு முடிந்த பின் பர்ஸக். . . மறுமை. . . விசாரணை. . . தீர்ப்பு...
அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் இன்னும் பல பக்கங்கள் பாக்கியுள்ளன.
ஒரேயொரு பக்கத்தை மாத்திரம் வாசித்து விட்டு புத்தகத்தைப் பற்றிய முடிவுக்கு வருவது சரியாகுமா!?
“அதனைக் காணும் நாளில், மாலையிலோ காலையிலோ ஒரு சொற்ப நேரமே உலகில் தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்.” (அந்-நாஸிஆத்: 46)
எல்லாம் இருக்க - அனைத்தையும் இப்போதே பூரணமாக தெரிந்து கெள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்க நாம் என்ன பூரணமானவர்களா!?
“மனிதன் பலவீனனாகவே படைக்கப்பட்டிருக்கிறான்.” (அந்-நிஸாஉ: 28)
எல்லாவற்றுக்கும் தீர்ப்புக் கூற நாம் எல்லாம் அறிந்தவர்களா!?
“சொற்பமான அறிவே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.” (அல்-இஸ்ராஉ: 85)
பிரச்சினை நமது பகுத்தறிவை விட மிகப் பெரியது.
இறை நம்பிக்கையைத் தவிர அதற்கு வேறு பதில் இல்லை!