வாருங்கள்... சரிவுகளிலிருந்து மீண்டெழுவோம்...! 3

Government-Jobs-In-Indiaவேலை வாய்ப்பு 1: அரசு வேலை.

அரசு வேலைகளான IAS, IPS, IFS… போன்ற வேலைகளுக்கான தேர்வுகளை UPSC – மூலம் GROUP 1 தேர்வுகள் எழுதி வெற்றி பெறலாம். இதற்கு UG தகுதி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் சிரமப்பட்டுப் படித்து GROUP 1 தேர்வில் வெற்றி பெற்றால் அரசு வேலைகளுக்கு ஒரு மாணவர் தகுதி பெற்றவராகிறார்.
இதற்கான அரசு அறிவிப்புகள் அரசு வெளியிடும் இணைய தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு 2: அரசு வேலை
U.G முடித்த பின் B.Ed (Bachelor Of Education) படிப்பை நிறைவு செய்து TET (Teacher Eligibility Test) தேர்வில் வெற்றி பெற்றால் அரசுப் பள்ளிகளுக்கு ‘ஆசிரியர்’ ஆகும் தகுதி பெறுகிறார்.
வேலை வாய்ப்பு 3: தனியார் வேலை
B. A. English, B.Com , B.Sc. (Physics, Maths, Chemistry...) போன்ற கோர்ஸ் - களை படிக்கின்ற மாணவர்கள், படிக்கின்ற காலங்களில் திறமையோடு (புரிந்து படிப்பது) படித்து B.Ed முடித்தால் தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
வேலை வாய்ப்பு 4 : டியூஷன் சென்டர்
மேற்கானும் படிப்புகள் எப்போதும் தேவைப்படுவதால் டியூஷன் சென்டர்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
முதுகலை (MASTER GEGREE) M.A. / M.Sc / M.Com (2 ஆண்டுகள்)
வேலை வாய்ப்பு 1: உதவிப் பேராசிரியர்
முதுகலை படிக்கின்ற மாணவர்கள், தங்களின் கடைசி ஆண்டின் இறுதிப் பருவத்தில் (4 th SEMESTER) SET (STATE ELIGIBILITY TEST), NET (NATIONAL ELIGIBILITY TEST) தேர்வுகள் எழுதுவதற்கு தகுதி பெற்றவராகிறார். இத்தேர்வுகளை எழுதுவதற்கு முதுகலை பட்டப் படிப்பில் 55% பெற்றிருக்க வேண்டும்.
SET தேர்வில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணி புரிய தகுதி பெற்றவராகிறார்.
NET தேர்வில் வெற்றி பெற்றால் இந்தியாவில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணி புரிய தகுதி பெற்றவராகிறார். இந்த NET தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரு முறை நடை பெறும் (ஜுன் மற்றும் டிசம்பர் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமை)
வேலை வாய்ப்பு 2 : ஆராய்ச்சியாளர்கள்
NET தேர்வில் JRF (Junior Research Fellowship) என்ற நிலை இருக்கிறது. அதில் வெற்றி பெற்றால் ஆராய்ச்சியாளராக உருவாகலாம். ஏதேனும் பல்கலை கழகங்களில், கல்லூரிகளில் பேராசிரியராக செய்கின்ற Project க்கு உதவியாளராக நியமிக்கப்படுவார். இவர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு University Grants Commission (UGC) மூலமாக நிர்ணயித்து வழங்குகிறது.
வேலை வாய்ப்பு 3 : இந்திய பொருளியல் பணி
M.A. Economics படிக்கின்ற மாணவர்கள் முதுகலையில் 60% பெற்றிருந்தால் IES (Indian Economic Services) தேர்வு எழுதுவதற்கு தகுதி பெறுகிறார். அதில் வெற்றி பெற்றால் மத்திய அரசுப் பணி புரிவதற்கு வாய்ப்புகள் உண்டு. (இது பொருளாதாரம் படித்தவர்களுக்கு மட்டுமே)

வேலை வாய்ப்பு 4 : கணக்காளர்
M.Com முடித்த மாணவர்கள் C.A. தேர்வில் வெற்றி பெற்றால் கணக்காளராக செல்லும் வாய்ப்புகள் உண்டு.
M.Phil, Ph.D.,
M.Phil, (Master of Philosophy) என்பது ஆராய்ச்சித் துறையின் அடிப்படைத் தகுதி.
Ph.D., Doctor of Philosophy
தற்போதைய கல்வித் துறையில் உயர்ந்த படிப்பு இது. இந்த படிப்பை முடித்தவர்கள் ‘முனைவர்’ பட்டம் பெறுகிறார். எல்லாத் துறைகளிலும் இந்த படிப்பு உண்டு. உலகம் முழுவதும் ஆராய்ச்சித் துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்குகின்றன இந்தியாவும் விதி விலக்கல்ல !
Ph.D., நிறைவு செய்பவர் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்கு செல்லலாம்.
இவைகளைத் தாண்டி அதற்கு தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தந்த பதவிகளுக்கு நம்மை தகுதி உடையவர்களாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சமூக மாற்றம் தேவை என்று பேசுகிறோமே தவிர அதற்கான அடிப்படைக் காரணங்களை தெரிந்து கொள்வதுமில்லை; பேசுவதுமில்லை. எனவே, தங்கள் குழந்தைகளை உயர் பதவியில் வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அதற்கான வாய்ப்புகளை இப்போதே பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பு:-
இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கோர்ஸ், அரசு வேலை வாய்ப்புகள் சிலவற்றைத் தான் இங்கு தந்திருக்கிருக்கிறோம். இதைத் தாண்டி வேறு துறைகள் சார்ந்த விசயங்கள், அதற்கான வேலை வாய்ப்புகளும் ஏராளம் இருக்கின்றன.


தவறு 7:- மார்க்க ஞானமின்றி குழந்தைகளை வளர்த்தல் 
இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறி, வாழ்வியலுக்குத் தேவையான எல்லா விசயங்களையும் சொன்னதோடு மட்டுமின்றி, அதை செய்து காட்டிய நபி (ஸல்) அவர்கள், அதற்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் ‘ஸஹாபாக்கள்’ எனும் சமூகத்தை உலகிற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.
இஸ்லாமிய வணக்க வழிபாடுகளும், வாழ்வியல் நமது சமூகத்தில் “மக்தப் மதரஸாக்கள்” மூலம் போதிக்கப்பட்டு வந்தது. ஒரு புறம் பள்ளி / கல்விப் பாடங்கள். மறுபுறம் இஸ்லாமிய அடிப்படை மார்க்க ஞானங்கள் மக்தப் மதரஸாக்கள் மூலம் போதிக்கப்படும். தான் கற்ற கல்வி அல்லாஹ், ரசூலுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற முன்னோர்களின் வழிகாட்டுதலும், கட்டுக் கோப்பான குடும்பச் சூழலும் அவர்களை உயர்ந்தவர்களாக உருவாக்கியது.
மேலும் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையையும் உயர்வையும் நமது இரத்தத்திலே உணர்வாக உரம் பாய்ச்சிய பெருமை ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்த “இளைஞர் நற்பனி மன்றங்களையே சாரும்.”
ஆனால் இன்று பணம், பதவி, கொள்கை, படிப்பு ரீதியான குழப்பங்களில் இளைய சமூகம் இழுத்துச் செல்லப்பட்டதால் சமூகத்தின் சீரழிவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பணம் சார்ந்த கல்விகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து மாணவர்கள் வளர்க்கப்படுவதால் எல்லா தீமைகளும் நமது சமூகத்தில் நிரம்பி வழிகின்றன.
விளைவுகள்:-
மார்க்கத்தின் அடிப்படை ஞானம் இல்லாமல் வளருகின்ற அல்ல, வளர்க்கப்படுகின்ற இளைஞர்கள் தொழுகை, நோன்பு, தக்வா, இக்லாஸ் போன்ற அடிப்படை விசயங்களில் தவறிவிடுகின்றார்கள்.
குளிக்கும் முறை, விருந்தினர்களை உபசரித்தல், நடைமுறைப் பழக்க வழக்கங்கள் தெரியாமலேயே இளைஞர் சமூகம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
“மனம் போன போக்கில் போனவர்களை எல்லாம் ஷரீஅத் (மார்க்கம்) காட்டித் தந்த வழியில் போக வேண்டும்.” என்ற அடிப்படைக் கொள்கை தகர்க்கப்பட்டு, இப்போது “கலாச்சாரம் போன போக்கிலே சமூகம் சென்று கொண்டிருக்கிறது. எது எதுவெல்லாம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தி இருக்கிறதோ அதையெல்லாம் செய்வதற்கு தயாராகி விட்டார்கள்.”
முஸ்லிம்களுக்கான அடையாளமும் பண்பாடும் மறைந்து கொண்டு வருகிறது; கலாச்சாரம் காலாவதியாகி விட்டது; வாழ்வியலுக்கான மார்க்க கடமைகளும் சம்பிரதாயங்களும் மாறிப் போய் விட்டது.
பள்ளி, கல்லூரி சார்ந்த பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் குடும்பப் பாரம்பர்யம், இரத்த உறவுகள், சொந்த பந்தங்கள் அவர்களின் அந்தஸ்து தெரியாமலேயே வளர்க்கப்படுகிறார்கள்.
இஸ்லாமிய அடிப்படை மக்தப் மதரஸாக்கள் போன்ற கல்விக்கான வழிகள் அடைபட்டுப் போனதால் எவ்வளவு பெரிய விளைவுகளை சந்திக்கின்றோம் பார்த்தீர்களா..?
என்ன செய்ய வேண்டும்?
மக்தப் மதரஸா செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கின்ற பெற்றோர்கள், தங்கள் இல்லங்களிலேயே ஈமான், கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஸலவாத் போன்ற விசயங்களையும் அதன் முக்கியத் துவத்தையும் போதியுங்கள்.
நபி (ஸல்) அவர்களின் குடும்ப வரலாறுகளை கற்றுக் கொடுங்கள்.
நபி (ஸல்) அவர்களின் குணங்களை குழந்தைகளுக்கு கதைகளாகச் சொல்லி நீயும் இப்படி உதவ வேண்டும் என்று ஊக்கப்படுத்துங்கள்.
உறவினர்களின் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
என்ன செய்ய வேண்டும் 2 :-
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிகளை சரியாக பின்பற்றியதால்தான் நமது சமூகம் ஏராளமான கல்வியாளர்களைப் பெற்றிருக்கிறது.
Modern Surgery – யில் அப்பாஸ் அல் ஸஹ்ராவி, இயற்பியலில் இப்னு சீனா, கண் சம்பந்தப்பட்ட துறையில் அபு அல் ஹைதம், அல் ஜிப்ரா (கணிதம்) அல் குவாரிஸ்மி, வேதியலில் ஜாபிர் இப்னு ஹய்யான், சமூகவியல், பொருளியலில் இப்னு கல்தூன் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
இப்படி எல்லாத் துறைகளிலும் சாதித்து விட்டு ஆரவாரம் இல்லாமல் அமைதியாய் சென்றிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். இவ்வளவு சாதனைக்கும் அடிப்படை “குர்ஆன், ஹதீஸை” அவர்களின் சிறுவயதிலிருந்தே முறையாக கற்றுக் கொண்டதுதான்.
எனவே, உங்கள் குழந்தைகள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதற்கான முன் மாதிரி அண்ணல் நபி (ஸல்) அவர்கள்தான். அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு நீ தேர்ந்தெடுத்த இந்த துறைக்கு இவர்களை பின்பற்று என்று குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்.
அடிப்படை மார்க்க அறிவு, முன்னோர்களின் வாழ்க்கை, நடைமுறைக் கல்வி வாழ்வியலை ஒரு மனிதன் கற்றுக் கொண்டால் அனைத்திலும் சிறந்து விளங்குவான் என்று உறுதியோடு சொல்லலாம்.
அதற்கான வழிகளை உங்கள் குழந்தைகளிடம் இருந்து தொடங்குங்கள். அடுத்த தலைமுறையாவது சிறந்து விளங்கட்டும்.
முடிவுரை :-
கண்ணியம் மிகுந்த பெற்றோர்களே! வருங்கால வாழ்விற்கும் தாழ்விற்கும் பொறுப்பேற்றுக் கொண்ட இளைய சமுதாயமே! இந்த உலகிற்கு ‘கல்வியை வழங்கி சமூகத்தின்’ வழித்தோன்றல்களாக நாம் இருக்கிறோம்.
கல்வியைக் கொடுத்த சமுதாயம் நாம்! கல்வியை வாங்கிய சமூகம் நாம் அல்ல! என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு காலத்தில் ஒரு முஸ்லிம் மாணவன் உயர் பதவியில் இருந்தால் அவனுக்கும், அவனை சார்ந்தவர்களுக்கும் பெருமை. ஆனால் இன்று ஒரு முஸ்லிம் (மாணவன்) உயர் பதவியில் இருந்தால் அவரைக் கொண்டு அந்த சமூகமே பெருமிதப்படுகிறது.
பெற்றோர்களே! உங்கள் குழந்தை உங்கள் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால் அவன் எங்களுக்கு சகோதரன் என்ற உணர்வை இஸ்லாம் வழங்கி இருக்கிறது.
வாருங்கள் அனைவரும் சேர்ந்து சரிவிழிருந்து மீளெழுவோம்!
வல்ல அல்லாஹ் நம்மோடு துணை நிற்கிறான் என்ற தைரியத்தில் வாருங்கள்.
“வரலாறு நம்மை எழுதட்டும்” ஆமீன்.