வியாழக்கிழமை, 09 நவம்பர் 2017 08:37

மண்ணின் வரலாறு-7

Written by 
Rate this item
(0 votes)

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள திண்டிவனத்திற்கு மேற்கில் வரலாறு கூறும் வந்தவாசிக்கு தெற்கில் விழுப்புரத்திற்கு வடமேற்கில் திருவண்ணாமலைக்கு கிழக்கில் அமைந்துள்ள கோட்டைப்பட்டணம் செஞ்சி.
குறிஞ்சியும் மருதமும் கலந்து உறவாடும் நில அமைப்பில் சங்கரா பரணி ஆறு மேற்கிலிருந்து கிழக்காகத் தவழ்ந்து புதுச்சேரியில் சுண்ணாம்பு ஆறு எனப் பெயர் பெற்று கடலில் கலக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய ‘கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரிதம்’ எனும் நூலும் ஆங்கிலேயரின் மெக்கென்ஸி கெயெழுத்துப் படிவங்களும் செஞ்சிக்கு முன்பு கிருஷ்ணபுரம் என்ற பெயர் இருந்ததாக கூறுகின்றன. இது கடவுள் கிருஷ்ணரின் பெயரை நினைவு கூர்வதாக இருக்கலாம். செஞ்சி என்பதற்கான பொருள் புலப்படவில்லை.
senji 5நம்முடைய நாட்டில் நூற்றுக்கணக்கான கோட்டை கொத்தளங்கள் உள்ளன. அவற்றில் சில கோட்டையில் இருக்க வேண்டிய எல்லா வசதிகளையும் கொண்டிருக்கின்றன. சில பிரம்மாண்டமானவை. சில சிறியவை. இவற்றில் நடுத்தரமானவற்றில் சிறப்பான வசதிகளைப் பெற்ற கோட்டை, இங்குள்ள கோட்டை அரண்களும் அகழியும் சூழ கோட்டைக்கான இலக்கணத்தோடு உள்ளதால் வரலாற்றாய்வாளர்கள் இதனைக் காண விரும்புகிறார்கள்.
அரண்மனை, அந்தப்புரம், திருமண மஹால், படை வீரர்கள் தங்குமிடம், குதிரை யானை லாயங்கள், நெற்களஞ்சியம், கருமருந்துக் கிடங்கு. போர்பயிற்சிக் கூடங்கள், சக்கரக்குளம் - செட்டிக்குளம் என தண்ணீர் வசதி, நீண்ட உயர்ந்த சுவர்கள் என ஒரு கோட்டைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் பெற்றது செஞ்சிக் கோட்டை.
இக்கோட்டையை யாதவர்கள் கட்டி ஆட்சி செய்திருகின்றனர். ஆனந்தக் கோன் முதலிலும் கிருஷ்ணக் கோன் அடுத்தும் ஆட்சி புரிந்துள்ளனர். இருபதாண்டுகளுக்குப் பின் குறும்பர்களின் ஆட்சி, பதினான்காம் நூற்றாண்டின் விஜய நகரப் பேரரசு செஞ்சியைக் கைப்பற்றியது. கிருஷ்ண தேவராயர் காலத்திற்குப் பின் செஞ்சியை நாயக்கர்கள் ஆளத் தொடங்கினார்கள்.
விஜயநகர அரசு நாயக்கர் அரசுகளால் ஆளப்பட்டு பேரரசாக மதுரை வரை பரவியிருந்தது. தக்காணத்தில் பாமினி அரசு முஸ்லிம்களால் ஆளப்பட்டு பின்னர் ஐந்தாகப் பிரிந்தது. கோல் கொண்டா, பீஜப்பூர், பீதார், பீரார், அகமத் நகர் என பாமினி அரசு ஐந்தானது.
ஒன்றாய் இருந்த போது இருந்த ஒற்றுமை ஐந்தாய்ப் பிரிந்த போது காணாமல் போனது. ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சூழல் உருவானது. அவர்கள் தானாகவும் மோதிக் கொண்டனர். விஜயநகர அரசால் தூண்டப்பட்டும் களம் கண்டனர்.
காலம் ஐவரையும் ஒரு திருமணத்தின் மூலம் இணைத்தது அவர்கள் ஒன்றுபட்டனர். விஜயநகரத்தின் விளையாட்டைப் புரிந்து கொண்டனர். ஒன்றுபட்ட அவர்கள் விஜய நகரப் பேரரசை வீழ்த்துனர்.
1565 இல் நடந்த தலைக்கோட்டை போர் பலரின் தலைவிதியையே மாற்றியது.
வீழ்த்தியவர்களில் ஒருவரான பீஜப்பூர் அரசருக்கு செஞ்சிக் கோட்டம் ஆளக் கிடைத்தது. செஞ்சிக்கு அப்போது ‘பாதுஷாபாத்’ எனும் பெயர் மாற்றம் கிடைத்தது.
கர்நாடகப் பகுதிக்கு அப்போது பௌஜிதாராக சையத் அம்பர்கானும் செஞ்சியின் ஆளுநராக சையத் நசீர் கானும் நியமனம் பெற்றார்கள்.
செஞ்சிக்கு மேற்கிலுள்ள திருவண்ணாமலை கிழக்கிலுள்ள வழுதாவூர் கடலோரமுள்ள போர்ட் நோவா (பரங்கிப் பேட்டை) அருகிலுள்ள பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் கிள்ளேதார்கள் (வட்டாட்சியர்) நியமிக்கப்பட்டனர். தேவனூர், மலையனூர், உளுந்தூர்ப் பேட்டை போன்ற ஊர்களில் படைத்துறை ஊதிய மானியம் பெற்றவர்களின் குடியிருப்புகள் உருவாகின.
ஆட்சியதிகார பணிகளுக்காக தக்காண முஸ்லிம்கள் தமிழகத்தின் வடபகுதியை வாழுமிடமாகக் கொண்டனர். பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த காஜிகளும் உரிமையியல் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்.
பாலாறு, சங்கராபரணி, தென் பெண்ணை, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் நூறாண்டுகளுக்கு மேல் அமைதியாகப் பயணித்தன.
பதினேழாம் நூற்றாண்டின் நடுவில் ஆலம்கீர் ஒளரங்கசீப் - சிவாஜி மோதலில் ஆலம் கீரின் கையோங்கியது. சிறையிலிருந்து தப்பிய சிவாஜி வடக்குத் திசையைப் பார்ப்பதைத் தவிர்த்து தக்காணத்திற்கு வந்தார். கோல் கொண்டா அரசை தன் வசப்படுத்தி பண, படை உதவியோடு செஞ்சிக்கு வந்தார். அப்போது செஞ்சியை ஆண்டு கொண்டிருந்தவர்களை சதி செய்து நீக்கி ஆட்சியைத் தனதாக்கினார்.
1677 இல் சிவாஜி செஞ்சியின் ஆட்சிப் பொறுப்பை தன் சகோதரர் சாந்தாஜியிடம் ஒப்படைத்து விட்டு உடல் நலமில்லாததால் 1679 வரை ஓய்வில் இருந்தார். அதன் பின் அவருடைய கவனம் மராட்டியக் கோட்டைகளின் மேல் சென்றது.
மராட்டியரின் கரங்களுக்கு செஞ்சி சென்றதைக் கேட்ட ஒளரங்க சீப்புக்கு அடிமுதல் முடிவரை ஆவேசம் கொப்பளித்தது. தன்னுடைய முக்கிய தளபதியான ஜுல்பிகார் அலிகான் தலைமையில் பெரும்படையன்றை செஞ்சியைப் பிடிக்க அனுப்பினார்.(1690)
முற்றுகை தொடர்ந்தது. செஞ்சி மொகலாயர் கரங்களுக்கு வரவில்லை. சிவாஜியின் மரணத்திற்கு பின்பு ஆட்சியாளர்கள் மாறி இறுதியில் அவருடைய இரண்டாவது மகன் ராஜாராம் செஞ்சிக் கோட்டையின் அதிபதியாகியிருந்தார்.
பெருந்தளபதி ஜுல்பிகார்கானின் ஏழாண்டு முற்றுகைக்குப்பின் செஞ்சிக் கோட்டை மொகலாயர்களின் கரங்களுக்கு வந்தது. (1698)
senji 7ஜுல்பிகார் ‘நஸ்ரத் ஜங்’ எனும் பட்டப் பெயரைப் பெற்றார். இதனால் செஞ்சிக் கோட்டை ‘நசரத்காட்’ எனும் புதுப் பெயர் பெற்றது. இதன் பொருள் ‘வெற்றி நகரம்’ என்பதாகும்.
ஜுல்பிகார் கர்நாடக நவாப் ஆனார். கசாபர்கான் என்பவருக்கு செஞ்சியை ஆளும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அப்பொறுப்பு ராஜஸ்தானைச் சேர்ந்த சொரூப் சிங்கிற்கு வழங்கப்பட்டது குத்தகை அடிப்படையில்.
சொரூப் சிங் செஞ்சிக்கு வருவதற்கு முன் ராஜஸ்தானின் புண்டேல்காண்ட் அரசருக்கு உதவியாளராக இருந்தார். இதன் காரணத்தால் சொரூப்சிங் வகையறாக்கள் புண்டேலாக்கள் என அழைக்கப்பட்டனர்.
சொரூப்சிங் சாதாரண படை வீரர் அல்லர். அவருடைய தாயார் ராஜபுத்திரி, தந்தை மொகலாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனாலேயே இவர் செஞ்சிக்கு ராஜாவானார். அவருடன் குதிரைப்படையும் காலாட்படையும் இருந்தன.
சொரூப் சிங் செஞ்சியிலிருந்து ஆண்ட போது ஆற்காட்டில் ஓர் ஆட்சிக் குழு இயங்கிக் கொண்டிருந்தது. அதன் திவான் சாதத்துல்லாஹ் கான், பேஷ்கார் தக்கிம் ராய், சிராஸ்தார் லாலா தோடர் மால். இவர்களிடமும் காலாட்படை, குதிரைப் படை, யானைப் படைகள் இருந்தன.
பன்னிரெண்டு லட்சம் பகோடாக்களை வருமானமாகப் பெற்று வந்த சொரூப் சிங் திறையைச் செலுத்தாமலிருக்க ஆரம்பித்தார். ஒளரங்க சீப் (1707) மரணத்திற்குப் பின் அவர் தனித்தியங்க விரும்பினார். புதிய பேரரசர் பகதூர் ஷாவிற்கு பஞ்சாப், ஆக்ரா ஆகிய இடங்களில் மராட்டியர்களும் ராஜ புத்திரர்களும் சீக்கியர்களும் ஜாட் இனத்தவர்களும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள்.
இந்தச் சூழல் சொரூப் சிங்கை திறை செலுத்தாமலிருக்கத் தூண்டியது. தனியரசு காண கூறியது.
பாரூக் ஷியார் ஆட்சியின் போது சொரூப் சிங்கின் திறை கணக்கிடப்பட்டு எழுபது லட்சம் ரூபாய் வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில் சொரூப் சிங் 1714 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சொரூப் சிங் மரணமடைய அவரின் மகன் தேசிங்கு ராஜன் புண்டேலாவிலிருந்து புறப்பட்டு செஞ்சி வந்து முடி சூட்டிக் கொண்டார். மொகலாயப் பேரரசைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. திறைப்பாக்கியைப் பற்றிய செய்திக்கு அவர் செவி சாய்க்கவில்லை “செஞ்சியின் ஆட்சியதிகாரம் எங்களுக்குரியது. யாருக்கும் திறையோ கப்பமோ கட்ட வேண்டியதில்லை” என்றான் 22 வயதே ஆன செஞ்சிக் கோட்டை வாலிபன் தேசிங்கு ராஜன்.
திவான் சாதத்துல்லாஹ் கான் சிராஸ்தார் லாலா தோடர் மாலை அனுப்பி தேசிங்கிடம் திறையைக் கேட்க வைத்தார். தேசிங்கு டெல்லியின் ஆணையைக் கேட்பதாக இல்லை. போர் முழக்கம் செய்தான். உதவிக்கு வழுதாவூர் கிள்ளேதாரும் நண்பனுமான மகபத்கானின் படை வந்தது.
செஞ்சியின் சிறுபடை மொகலாயர்களின் பெரும்படையோடு மோதி தோற்றது. தேசிங்குராஜன் களப்பலியானான். தேசிங்கு ஆண்டதோ பத்தே மாதங்கள் மாண்டதோ அரை நொடியில், ஆனால் அவன் நாட்டுப்புறப் பாடல்களில் நாயகன் ஆகிவிட்டான்.
தேசிங்கு மரணித்த பின் செஞ்சி நவாப் சாதத்துல்லாஹ் கானின் கீழ் வந்தது. அவருடைய இயற் பெயர் சையத் முகம்மது பட்டப் பெயர்தான் சாதத்துல்லாஹ்கான். இவர் மொகலாயரோ, துருக்கியரோ, ஆஃப்கானியரோ அல்லர்; அரேபியர்.
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் அரேபியாவை ஆண்ட ஹஜ்ஜாஜ் இபுனு யூசுபின் முறையற்ற ஆட்சியால் அரபு முஸ்லிம்கள் கப்பல் கப்பலாய் அரபிக் கடலைத் தாண்டி வந்தனர். அவர்களில் அரபுக் கடலோரம் கொங்கணக் கடற்கரையில் வந்திறங்கிய நவாயத் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் சாதத்துல்லாஹ்கானின் குடும்பத்தினர்.
ஒளரங்க சீபிடம் பணிக்குச் சேர்ந்த சையது முஹம்மது படிப்படியாய் உயர்ந்து ‘மான்சாப்’ (ஆட்சிக்குழு உறுப்பினர்) ஆகி ஆற்காட்டு நவாப்பாக உச்சத்தை அடைந்தது. ‘சாதத் நாமா’ எனும் நூலில் பதிவாகியுள்ளது.
சாதத்துல்லாஹ் கானுக்கு முன்பு நவாபாக இருந்த தாவூத்கான்தான் தலைநகரை செஞ்சியிலிருந்து ஆற்காட்டுக்கு மாற்றினார். அதனாலேயே ‘ஆற்காட்டு நவாப்’ எனும் பெயர் வந்தது. என்றாலும் சாதத்துல்லாஹ்கான் செஞ்சியிலிருந்தே ஆட்சியதிகாரம் செய்தார். அவர் காலத்தில் நூற்றுக்கணக்கான அரபுகள் ஆற்காட்டு நிர்வாகங்களில் அங்கம் வகித்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் செஞ்சி, ஆற்காடு, வேலூர் பகுதிகளில் இருக்கின்றனர். மீனம்பூரில் திரளாக உள்ளனர்.
சீரிய ஆட்சி செய்த சாதத்துல்லாஹ்கானுக்குப் பின் சில நவாயத் நவாப்கள் அதற்குப் பின் ஹைதராபாத் நிஜாம் அனுப்பிய அன்வர்தீனை ஏற்காத சந்தா சாகிப் பிரெஞ்சியரோடு சேர்ந்து நவாபை எதிர்த்தார். நவாபோடு ஆங்கிலேயர் சேர போரில் அன்வர்தீன் மரணிக்க அதன் பின் நடந்த போரில் சந்தா சாகிப் மரணிக்க முகம்மது அலீ நவாப் ஆனார்.
அன்வர்தீனின் மகனே வாலாஜா முஹம்மது அலி. இவரே ஆற்காட்டிலிருந்த தலைநகரை மதராஸ் பட்டினத்திற்கு மாற்றியவர். ஆற்காட்டு அரசை ஆங்கிலேயருக்கு மடை மாற்றியவர்.
செஞ்சியின் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று, மைசூர் ஹைதர் அலி ஆங்கிலேய தளபதி மெக்காலேயை 1780 இல் சிறை பிடித்தது. எனினும் பின்னர் செஞ்சி ஆங்கிலேயர் வசம் சென்றது.
“செஞ்சி ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்டதிலிருந்து அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை இழந்தது. ஐரோப்பா நெப்போலியனைப் பற்றி அச்சம் கொண்டிருந்த வேளையில் ஆற்காடு மாவட்ட ஆட்சியாளாயிருந்த காரோ என்பவர் 1802 ஆம் ஆண்டு செஞ்சியிலுள்ள கோட்டையை அழித்து விடும்படி வருவாய்க் கழகத்துக்கு பரிந்துரை செய்தார். நல்ல வேளையாக ஆட்சியரின் பரிந்துரை செயல்படுத்தப்படவில்லை” என்கிறார் ‘செஞ்சியின் வரலாறு’ எனும் நூலை எழுதிய பேராசிரியர் சி.எஸ். சீனிவாச்சாரி.
பெரும் நகரமாக மாறாத செஞ்சி பெரும் வரலாற்றைச் சுமந்து நிற்கிறது. இங்கு சிதைந்தும் சிதையாமலும் காணப்படும் கோட்டைக் கொத்தளங்களும் அரசாட்சி மண்டபமும் களஞ்சியங்களும் கல்யாண மகாலும் லாயங்களும் பாதுகாப்பரண்களும் நடுத்தமிழக வரலாற்றின் நடுப்பகுதியைச் சொல்லுகின்றன. தமிழகத்தில் காண வேண்டிய ஓரிடமாகத் திகழும் செஞ்சி பார்ப்பவர்களை பழைய காலத்துக்கே அழைத்துச் செல்லும். குதிரைகளின் குளம்பொலிகள் உங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
“ஒரு நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட போர்க் குதிரைகள் துள்ளி எழுச்சி நடை போட்ட மண்ணை அரை நிர்வாணமாக ஏர் உழும் ஒரு விவசாயின் எருதுகள் ஏர்க்கலப்பையினால் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. செஞ்சி அரசர்கள் ஆரவாரத்துடன் அமர்ந்து அரசோச்சிய இடத்தில் சிலந்திகள் வலை பின்னிக் கொண்டிருக்கின்றன. ஆனால் துணிவும் வீரமும் மிக்க ஒரேயரு அரசனின் நினைவு மட்டும் கிராமங்களில் போற்றி பாதுகாக்கப்படுகிறது. நாடோடிப் பாடகர்கள் ராஜா தேசிங்கின் வாழ்வையும் வீழ்ச்சியையும் பாடிக் கொண்டிருக்கின்றார்கள்” என வரலாற்றாசிரியர் பேராசிரியர் சி.எஸ்.சீனிவாச்சாரி குறிப்பிடுவதில் உண்மையிருக்கிறது.
செஞ்சிப் பகுதியை நூறாண்டுகளுக்கு மேல் ஆண்ட பீஜப்பூர் சுல்தான்களிடம் பாரசீக, துருக்கி, ஆஃப்கன், தக்காண முஸ்லிம்கள் பணியாற்றியுள்ளனர். அவர்கள் ஆங்காங்குள்ள ஊர்களில் அரசுப் பணிகளிலும் படைகளிலும் இருந்துள்ளனர். பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சிக்குப் பின்னர் மராட்டியர் ஆட்சி. அதன்பின் மொகலாயர் - நிஜாம் ஆட்சிகள்.
இறுதியில் ஆற்காடு நவாப் அரசு ஐரோப்பியரோடு ஐக்கியமான பின் ஆங்காங்கு ஆற்காட்டிலிருந்து தமிழகக் கோடி வரை வாழ்ந்த முஸ்லிம்கள் தக்காணவர் எனும் பொருளில் ‘தக்னி’ எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களே செஞ்சியில் பெரும்பாலும் வாழ்கின்றனர். அதே சமயத்தில் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் குடியேறிய மராட்டியர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் தமிழரோடு கலந்து விட்டார்களா? அல்லது மராட்டியத்திற்கோ தஞ்சையில் அவர்களின் ஆட்சியிருந்ததால் தஞ்சைப் பகுதிக்கோ இடம் பெயர்ந்து விட்டார்களா?
செஞ்சியிலும் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான்மையினராக இல்லை. அவர்கள் பீரங்கிமேடு, செட்டிக் குளம், விழுப்புரம் சாலை போன்ற பகுதிகளில் மட்டும் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும், அரசுப் பணிகளிலும் உள்ளனர்.
செஞ்சியைச் சுற்றிலும் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் வாழ்கின்றனர். அவர்கள் ஷேக், சையத், ஷெரீப், தக்னி, பட்டான்கள் ஆவர். அன்றைய அரேபிய, துருக்கிய, ஆப்கானிய, பாரசீக வம்சா வழியினர் இவர்கள். இவர்களோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப்பேசும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
ஏழு பள்ளிவாசல்கள் உள்ளன. கோட்டைக்கு கீழேயுள்ள சாதத்துல்லாஹ்கான் பள்ளிவாசல் பெருநாட்களின் போது தொழும் ஈத்கா மைதானமாக பயன்பாட்டில் உள்ளது.
செஞ்சியில் பெருந்தொகையாக வாழும் முஸ்லிம்கள் பள்ளியம்பட்டு, அப்பம்பட்டு, மீனம்பூர், நீலாம்பூண்டி, எதப்பட்டு, அவலூர்ப் பேட்டை போன்ற செஞ்சி வட்ட சிற்றூர்களிலும் கணிசமாக வாழுகின்றனர். வட ஆற்காட்டு மாவட்டத்தின் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றனர்.
முஸ்லிம்களின் ஆட்சியில் பங்கேற்றவர்களே தாம் வந்த திசை நோக்கிச் செல்லாமல் பரம்பரையாய் உருது பேசினாலும் தமிழர்களாய் இங்கு வாழ்கின்றனர்.
ஆலம்கீரின் மாபெரும் தளபதி ஜுல்பிகார் அலிகான் துருக்கியர், அவருக்குப் பின் செஞ்சியை ஆண்ட தாவூதுகான் ஆப்கானியர் - தாவூத்கானுக்குப் பின் வந்த சாதத்துல்லாஹ் கான் அரேபியர்.
முதலிருவர் டெல்லிக்கே திரும்பி விட்டாலும் அவர்களின் இன மக்களில் பலர் இங்கேயே தங்கி விட்டனர். நவாப் சாதத்துல்லாஹ்கான் இங்கேயே வாழ்ந்து வாழ்வை முடித்துக் கொண்டாலும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை தமிழகத்தில் குடியேற்றி வாழச் செய்து விட்டார்.
அன்று வந்து செஞ்சியில் குடியேறிய முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரே இன்று செஞ்சியின் சட்டசபை உறுப்பினர். Muhammed Ali Khan Wallajahமுஸ்லிம்கள் ஆண்ட பூமியில் ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்.
நாடு விடுதலை பெற்ற பின் முஸ்லிம் லீக் அடிமட்ட முஸ்லிம்களை நோக்கிச் செல்லவில்லை. எனவே அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் திராவிட இயக்கத்தில் சங்கமித்தனர்.
நாகப்பட்டின பாட்ஷா, கடையநல்லூர் கதிரவன் எனும் சம்சுதீன், பெரியகுளம் மேத்தா (முன்னாள் எம்.எல்.ஏ) காயல்பட்டினம் ஜக்கரியா (கதிரவன் ஆசிரியர்) முகவை காதர் என சில கழகக் கண்மணிகள். அவர்களில் செஞ்சி மஸ்தானும் ஒருவர். இவர் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வின் தலைவராகவும் உள்ளதோடு தற்போதைய செஞ்சியின் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார்.
இங்கே தீய சக்திகள் முளைக்காமல் இருப்பதற்கு மக்களின் ஒற்றுமையே காரணம். இங்கு முஸ்லிம்கள், வன்னியர்கள், பல இனக்குழக்களோடு தமிழ் சமணர்களும் வாழ்கின்றனர்.
செஞ்சிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் உள்ள வல்லம் அருகில்தான் தமிழ் சமணர்களின் தலைமை பீடமான மேல் சித்தாமூர் உள்ளது. தமிழ் சமணர்களை நயினார் என அழைக்கின்றனர்.
முஸ்லிம்கள் தம் வாழ்விடங்களில் அமைத்துள்ள ஜமாஅத்களை மாவட்ட மாநில அளவில் விரிவாக்கலாம்; ஆன்மீக அமைபைத் தவிர ஏதேதோ கூறிக் கொண்டு இயக்கங்கள் அமைத்து சமுதாயத்தைப் பிரியச் செய்வது நல்லதல்ல.
அரசியலைப் பொறுத்தவரை தனித்தனி அமைப்புகளைச் சாராமல் முஸ்லிம்கள் ஒத்த கருத்துடைய பெரிய கட்சிகளில் சேர்ந்து செயல்படுவதே நல்லது.
முஸ்லிம் இயக்கங்கள் தனித்தே தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வரலாறில்லை. ஏதோ ஒரு பெரிய கட்சியின் கூட்டில்லாமல் வென்றிட வாய்ப்பில்லை.
காங்கிரசில் வாய்ப்பு பெற்ற முஸ்லிம்கள் ஏற்கனவே வேலூர் குடந்தை நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளனர். தி.மு.க.வில் வாய்ப்புப் பெற்றவர்களும் அதேபோல் அரசியலில் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இதையே செஞ்சியும் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ. வும் உறுதிப்படுத்துகின்றனர்.
ஊர்வலம் தொடரும்
தொடர்புக்கு : 9710266971

Read 629 times