தலைமைத்துவம்

நாம் இத்தலைப்பின் கீழ் பேசப்போவது ஒரு அரசியல் தலைவரோ ஒரு நாட்டு தலைவரோ பற்றி அல்ல மாறாக புகாரி மற்றும் முஸ்லிமில் ஆகிய நபிமொழித் தொகுப்புகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு நபிமொழி குறித்துத்தான்.
“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.”
ஆட்சித் தலைவன் மக்களின் பொறுப்பாளி. அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.
இதுதான் அந்த நபிமொழி.
ஆண் தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளி. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.
பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனது குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள்.
பணியாளர் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளி அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான்.
ஆக இந்த நபிமொழியின் அடிப்படையில் நாம் ஒவொருவரும் தலைவர்கள் ஆவோம், ஆங்கிலத்தில் இதை PERSONAL LEADERSHIP என்று கூறுவார்கள். இது தனி மனித தலைமைத்துவத் தன்மை வரைவிலக்கணத்தின் மிக முக்கியமானது.
ஒருவர் தனது கருத்துக்களைக் கூறி மற்றவரை அவரது சுய விருப்பத்தோடு தாமாகாவே முன் வந்து பின்பற்ற வைப்பது ஒரு திறமை. ஆங்கிலத்தில் இதை CAPACITY TO INFLUENCE என்பார்கள்.
இதற்கு உதாரணமாக ஓர் தந்தை மகனுக்கு நீச்சல் பயிற்றுவிக்க அவனை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று அவனை “குதி” என்றால் அவன் குதிக்க மாட்டான். இது அவனை தள்ளிவிடுவது (Push) போன்றதாகும். இதுவே அந்த தந்தை முதலில் நீச்சல் குளத்தில் இறங்கி பிறகு அந்த குழந்தையை குதிக்கச் சொல்வது (pull) அவனை நம்பிக்கையுடன் செயல்பட வைக்கும்.
இஸ்லாமிய வரலாற்று ரீதியாகப் பார்த்தால் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்திற்கு முன்பே குறைஷிகளால் “அல் அமீன்” நம்பிக்கையாளர் “அஸ் ஸாதிக்” உண்மையாளர் என்று அழைக்கப்பட்டார்.
அவர் இறைத்தூதராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் ஹிரா குகையில் அதிசயக் காட்சியை விளக்கிய போது அவர்களின் மனைவி கதீஜா (ரழி), முஹம்மதை இறைத்தூதராக ஏற்றதும், அவரது நண்பர் அபூபக்கர் (ரழி) நீங்கள் கூறுவது உண்மை நீங்கள் இறைத்தூதர் தாம் என உண்மைப்படுத்தியதும், நபியவர்களை முன் பின் தெரியாத மதீனாவாசிகள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ‘அகபா’ என்னும் உடன்படிக்கை போட காரணமாக அமைந்ததும் முஹம்மது உண்மையாளர் என்ற நம்பிக்கைதான்.
இது போன்ற அனைத்து சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்கள் அனைத்து விதமான மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாக தலைமைத்துவத்தின் அடையாளம் பொறுப்புணர்வாகும். தலைமைத்துவம் என்பதை சுருக்கமாக விளக்க விரும்பினால் அதனை “பொறுப்பு - Responsibility" என்ற ஒரே சொல்லின் மூலம் விளக்கிவிடலாம்.
ஒரு பொறுப்பை தாமாகவே முன் வந்து ஏற்றுக் கொள்ளும் உணர்வைத்தான் ஆங்கிலத்தில் Proactive Response என்பார்கள் இப்படிப்பட்ட பொறுப்புணர்வை தூண்டக்கூடிய ஹதீஸ் ஒன்றை நாம் ஆய்வு செய்வோம்.
“இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். அதில் சிறப்பானது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்பதாகும். அதில் தாழ்ந்தது பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவது. இன்னும் நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.” (புகாரி)
இதில் ஆய்வுக்குரியது யாதெனில் தான் நடைபாதையில் மக்களுக்கு துன்பம் தரும் ஒரு பொருள் கிடந்தால் அதை பொறுப்பில்லாதவன் பிறர் மீது குறையைக் கூறி விட்டு கடந்து செல்வான். அதுவே பொறுப்புள்ளவன் அதை அகற்றிவிட்டு செல்வான். இதைத் தான் ஆங்கிலத்தில் INITIATIVE என்பார்கள்.
இப்போது “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளி” என்ற நபிமொழியையும் “இறைநம்பிக்கையின் கிளைகள்” என்ற நபிமொழியையும் இணைத்துப் பார்க்கும் போது பொறுப்புணர்வைத் தருவது இறைநம்பிக்கைதான்” என்று அறியமுடிகிறது.
எனவே இஸ்லாத்தை பொறுத்தவரை
1. தலைமைத்துவம்
2. பொறுப்புணர்வு
3. ஈமான்
இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதாகும். இந்த பொறுப்புணர்வுக்கு உதாரணமாக நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மதீனாவில் போர் சூழல் ஒருநாளில் திடீர் என்று ஒரு சத்தம் கேட்டது. சஹாபாக்கள் என்ன நடந்தது என்பதை அறிய கிளம்பிய போது, நபி (ஸல்) சஹாபாக்களுக்கு முன்னரே குதிரையில் மதீனாவை சுற்றி வளம் வந்து விட்டு சஹாபாக்களிடம் “நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை” என்று மக்களின் அச்ச உணர்வை போக்கினார்கள் இதுவே பொறுப்புணர்வாகும்.
பொறுப்புணர்வு உள்ளவர்கள் தாம் இருக்கும் இடத்தை முன்னால் இருந்ததை விட சிறந்த இடமாக மாற்றுவார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவை சிறந்த இடமாக மாற்றினார்கள்.
அடுத்ததாக கலீஃபாக்கள் வாழ்க்கையிலிருந்து ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அபூபக்கர் (ரழி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் கலீஃபா அபூபக்கர் (ரழி) அவர்களுடைய வீட்டினருகில் வாழ்ந்த இரு சிறுமிகள் அந்த மகிழ்ச்சியில் பங்கு பெறவில்லை. காரணம் கலீஃபா அபூபக்கர் (ரழி) அந்த சிறுமிகளுக்கு பால் கறந்து கொடுப்பது வழக்கம். ஆனால் அவர்கள் கலீஃபாவாக ஆன பிறகு அவ்வாறே பால் கறந்து கொடுப்பார்களா என்ற கேள்வி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவில்லை.
இந்த தகவல் கலீஃபாவின் காதுகளுக்கு எட்டிய போது கலீஃபா அபூபக்கர் (ரழி) அவர்களே அந்த சிறுமிகளிடம் சென்று “இறைவனின் அருளால் எனது பதவி, எனது வழக்கமான வேலைகளை மாற்றி விடாது என்று நம்புகிறேன். நான் நிச்சயமாக உங்களுக்கு பால் கறந்து கொடுப்பேன்” என்றார்கள். அதன் பின்னர் அந்த வழியாக அவர் செல்லும் போதெல்லாம் அச்சிறுமிகளிடம் ‘உங்கள் ஆடுகளில் பால் கறக்க வேண்டுமா?’ என்று கேட்பது வழக்கமாக இருந்தது.”
மற்றொரு சம்பவம் போரில் தன் ஒரே மகனையும் இழந்து விட்டு மதீனாவுக்கு அருகில் ஓர் சூழலில் ஒரு மூதாட்டி வசித்து வருவது கலீஃபா அபூபக்கர் (ரழி) அவர்களின் கவனத்துக்கு வந்ததும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதிகாலையில் அந்த மூதாட்டி வீட்டிற்கு சென்று அதனை சுத்தம் செய்து அவருக்கு உணவுப் பொருட்களை வழங்கி விட்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். இந்நிலையில் அந்த மூதாட்டி பற்றிய செய்தி உமர் (ரழி) அவர்களுக்கு எட்டியது ஒரு நாள் விடியற்காலையில் அங்கு சென்று பார்த்த போது அந்த மூதாட்டியின் தேவைகள் முன்னரே நிறைவேற்றப்பட்டிருப்பது தெரியவருகிறது. மறுநாள் அந்த உதவி யாரால் செய்யப்படுகிறது என்பதை அறிய சற்று முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமர் (ரழி) அவர்கள் அந்த குடிலின் பின்புறம் மறைந்து கவனித்த போது, அது கலீஃபா அபூபக்கர் (ரழி) அவர்கள்தான் என்பதை அறிந்ததும் வியந்தார்கள்.
ஆட்சிக் காலத்தில் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உண்டு, அப்போது மதீனா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது.
நிவாரண உதவித் தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரழி) அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலீஃபா அவர்கள் தம் உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதீனாவின் புறநகருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள், கலீஃபா அவர்கள் அந்த குடிசையை நெருங்கி அனுமதி பெற்று உள்ளே சென்று உமரை யாரென்று அறியாத அந்த பெண்மணியிடம்...
உமர் (ரழி) : குழந்தைகள் ஏன் அழுகிறார்கள்?
பெண்மணி : பசியின் காரணத்தினால்தான்
உமர் (ரழி) : அடுப்பில் என்ன இருக்கிறது?
பெண்மணி : அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான் அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள் அதற்காகத்தான் இவ்வாறு செய்கிறேன். இந்த துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவி கூட செய்யாத கலீஃபா உமர் அவர்களுக்கும் எனக்கும் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் நல்ல தீர்ப்பு வழங்குவான்.
அப்பெண்மணியின் இந்த வார்த்தையை கேட்டு பதறிப்போன கலீஃபா உமர் (ரழி) அவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்திட அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலையை உமர் எப்படி அறிவார்? என்று வினவினார்.
உடனே அந்த பெண் முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார்.
கலீஃபா உமர் (ரழி) அவர்கள் விரைந்து நகருக்கு திரும்பி உடனே பைத்துல் மாலுக்கு சென்றார்கள். ஒரு சாக்கு பையில் மாவு நெய் பேரித்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும், துணிமணிகளையும் கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு சாக்குப் பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார். அவர்களின் உதவியாளர் அஸ்லம், நானே இதை சுமக்கிறேன் அமீருல் முஃமினீன் அவர்களே என்று கூறியபோது உமர் (ரழி) அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்த பெண்மணியைப் பற்றிய கேள்வி என்னிடமே கேட்கப்படும். அதனால் இந்த சுமையை நானே தூக்குகிறேன் என்றார்கள்.
உடனே அதை சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக அந்த பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள். அஸ்லமும் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்கள். குடிசையை அடைந்த உமர் (ரழி) அவர்கள் மாவு, நெய், பேரித்தம்பழம் இவை மூன்றையும் எடுத்து அவற்றை பிசைந்து அடுப்பிலிருந்த சட்டியில் இட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊது குழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயைத் தூண்டி எரியச் செய்தார்கள். இதனால் அவர்களுடைய அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு உணவு தயாரானதும் கலீஃபா அவர்களே, அந்த உணவை அந்த பெண்மணிக்கும், குழந்தைகளுக்கும் பரிமாரினார்கள். மீதம் இருந்ததை அடுத்த வேளை உணவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கொடுத்தார்கள்.
வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதை கண்ட கலீஃபாவும் மகிழ்ச்சியடைந்தார்கள். பிறகு உமர்(ரழி) அவர்கள் அப்பெண்மணியிடம் அக்குழந்தையை பராமரிப்பவர் யாருமில்லையா? என வினவினார்கள். அந்த குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவருக்கு ஆதரவளிக்க வேறு யாருமில்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்கள்.
வீட்டில் இருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்து போய் மூன்று நாட்கள் பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்த பெண்மணி சொன்னார். உங்கள் இந்த கருணை செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலீஃபா ஆவதற்கு உமரை விட நீங்களே மிக பொருத்தமானவர் என்றார்கள். உமர் (ரழி) அவர்கள் நீ கலீஃபாவை சந்திக்கும் போது அங்கே என்னை கண்டு கொள்வீர்கள் என்று கூறினார்கள்.
கொஞ்சம் நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டு குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் அதன் பின் மதீனா திரும்பினார்கள். செல்லும் வழியில் அஸ்லமிடம் சொன்னார்கள். நான் அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தது அழும் குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்ப்பதற்காகத்தான்.
வீரத்திற்கு பெயர் போன உமர் (ரழி) அவர்கள் கருணை உள்ளவராகவும் தமது குழந்தைகளின் மீது பொறுப்பணர்வு கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
தொடரும்…