திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017 08:13

முதல் தலைமுறை மனிதர்கள்-9

Written by 
Rate this item
(0 votes)

பண்டிட் ஏ.கே.ஜமாலி சாகிப் என அழைக்கப்படும் அப்துல் காதர் ஜமாலி சாகிப் திருச்சி மாவட்டம் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்குத் தந்த மிகச் சிறந்த சேவையாளர்களில் ஒருவராவார். அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மைகளைக் கொண்டிருந்த அவரைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
பிறப்பு - கல்வி :
ஜமாலி சாகிப் 25.10.1922 அன்று திருச்சி மாவட்டம் (தற்போதைய பெரம்பலூர் மாவட்டம்) லெப்பைக் குடிக்காடு என்ற பேரூரில் அஹமது புகாரி ஜெய்த்தூன் பீவி தம்பதியினரின் நான்காவது மகனாகப் பிறந்தார். லெப்பைக் குடிக்காடு முஸ்லிம் மக்களின் பூர்வீகம் கேரளாவாகும். 1920-களில் கேரளாவில் நடைபெற்ற மாப்பிள்ளைமார் கிளர்ச்சியின் போது ஆங்கிலேய ஆட்சியினர் மேற்கொண்ட அடக்கு முறையைத் தாங்கொண்ணாத சில முஸ்லிம் குடும்பத்தினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்து தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமி மலையிலும் (கும்பகோணம் அருகில்), திருச்சி மாவட்டத்திலுள்ள ரெங்கபுரத்திலும் குடியேறினர். இவர்கள் லெப்பைகள் என அழைக்கப்பட்டதால், இவர்கள் குடியேறிய ரங்கபுரமும் பின்னாட்களில் லெப்பைக் குடிக்காடு என பெயர் மாற்றம் கண்டது. இம்மக்கள் தங்களது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் நாளாவட்டத்தில் சிறு மற்றும் பெரும் நிலவுடமையாளர்களாக ஏற்றம் பெற்றனர். பெரும்பாலோர் வெற்றிலைக் கொடிக்கால் வைத்து வேளாண்மை செய்து வந்தனர். பெரிய பண்ணை, நடுப்பண்ணை, சின்னப்பண்ணை என மூன்று பிரிவுகளாக இம்மக்கள் அழைக்கப்படலாயினர். நடுப்பண்ணை என்று அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில்தான் ஜமாலி சாகிப் பிறந்தார்.
தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை லெப்பைக் குடிக்காட்டிலேயே பயின்ற ஜமாலி சாகிப், பின்னர் சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஜமாலியா அரபிக் கல்லூரியில் சேர்ந்து ஓதி ஆலிம் பட்டம் பெற்றார். அதனாலேயே ‘ஜமாலி” என அறியப்பட்டார். பின்னர் திருவையாறிலுள்ள தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து தமிழில் வித்வான் (புலவர்) பட்டம் பெற்றார். முஸ்லிம் லீக் தலைவர்களிலேயே தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர் இவர் ஒருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஈடுபாடு :
இளமையிலேயே ஜமாலி சாகிப் பொதுப் பணிகளில் நாட்டம் கொண்டிருந்தார். “வாலிபர் சங்கம்” என்ற சங்கம் ஒன்றினை தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கி சமூகப் பணி ஆற்றி வந்தார். 1938ஆம் ஆண்டு லெப்பைக் குடிக்காட்டில் முஸ்லிம் லீகின் கிளை தொடங்கப்பட்ட போது அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். சிறந்த செயல்பாடுகள் காரணமாக பல பதவிகள் இவரைத் தேடி வந்தன. 1941-ஆம் ஆண்டு குன்னம் தாலுகா முஸ்லிம் லீக் செயலாளர்களில் ஒருவராகவும், அதே ஆண்டில் மாகாண முஸ்லிம் லீகின் கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகவும், அதே ஆண்டில் அகில இந்திய முஸ்லிம் லீகின் கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 23 தான்.
நாட்டுப் பிரிவினைக்குப் பின் அகில இந்திய முஸ்லிம் லீகின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்காக அக்கட்சியின் கவுன்சில் கூட்டம் 13.12.1947 மற்றும் 14.12.1947 ஆகிய தேதிகளில் கராச்சி நகரில் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள அனைத்து மாகாணங்களிலிருந்தும் கவுன்சில் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாகாணத்திலிருந்து காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் தலைமையில் கலந்து கொண்ட ஐந்து உறுப்பினர்களில் ஜமாலி சாகிபும் ஒருவர். பொதுச் செயலாளராகயிருந்த கே.டி.எம்.அகமது இப்ராகிம் சாகிப், கேரளத் தலைவர்களான சீதி சாகிப் மற்றும் எம்.எம். அன்வர் ஆகியோர் பிற உறுப்பினர்களாவர். இதுபற்றி ஜமாலி சாகிப் முஸ்லிம் லீக் மாநாட்டு மணிவிழா மலரில் (2008) எழுதியிருப்பதாவது.
“...................... அகில இந்திய முஸ்லிம் கவுன்சிலில் அங்கம் வகிக்க சென்னை மாகாணத்திலிருந்து 20 பேர்கள் மட்டுமே தகுதியுடையவர்களாக இருந்தனர். அகில இந்தியப் பொதுச் செயலாளரால் அறிவிக்கப்பட்ட தேதிக்குள் இந்தியாவிலிருந்து தரை மார்க்கமாக கராச்சி போய்ச் சேருவது என்பது இயலாத காரியமாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்று ஐந்து மாதங்களாகியும் கூட இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரங்களில் இன்னும் கொலை கொள்ளைகள் நடந்து கொண்டு தான் இருந்தது. பம்பாய்க்கும், கராச்சிக்குமிடையே நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்தும் சுதந்திரத்திற்குப் பின் நிறுத்தப்பட்டுவிட்டது. கராச்சிக்கு ஆகாய மார்க்கமாகத்தான் போய்ச் சேரமுடியும் என்ற சூழ்நிலை இருந்தது. அது சமயம் இந்தியாவில் ஏர் இந்தியா என்ற ஒரு விமானக் கம்பெனி மட்டும் விமானப் போக்குவரத்தை நடத்திக் கொண்டிருந்தது. அந்த கம்பெனி வசமிருந்த விமானங்கள் மிகச் சிறியவை. 22 பிரயாணிகளே செல்லக்கூடிய டக்கோட்டா விமானங்கள் ஆகும். ஆகவே சென்னையிலிருந்து கராச்சிக்குச் செல்ல 5 பேர்களுக்கு மட்டுமே இடம்தர முடியுமென விமானக் கம்பெனி கூறிவிட்டது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள், சென்னை மாகாண முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.டி.எம்.அகமது இப்ராகிம் சாகிப் எம்.எல்.சி அவர்கள், மலபார் முஸ்லிம்களின் தலைவரான சீதி சாகிப் எம்.எல்.ஏ அவர்கள், எம்.எம். அன்வர் சாகிப், ஏ.கே.ஜமாலி சாகிப் ஆகிய ஐவரும் 1947 டிசம்பர் மாதம் 11ம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து கராச்சிக்குப் புறப்பட்டோம். எங்களின் விமானம் ஹைதராபாத், பம்பாய் வழியாக இரவு 11 மணிக்கு கராச்சி விமான நிலையம் போய்ச் சேர்ந்தது”.
இந்தக் கவுன்சில் கூட்டத்தில் முஸ்லிம் லீகின் எதிர்காலம் பற்றி முடிவு செய்யும் பொறுப்பு இரு நாடுகளின் தலைவர்கள் வசம் விடப்பட்டது. இதற்கென இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் தனித்தனி கன்வீனர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தியாவிற்குரிய கன்வீனராக காயிதே மில்லத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்வு ஏகமனதாக அமையவில்லை. காயிதே மில்லத்தை எதிர்த்து ஐக்கிய மாகாணத்தைச் சார்ந்த ரிஸ்வான் சாகிப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
பின்னர், காயிதே மில்லத்தைக் கன்வீனராகக் கொண்ட முஸ்லிம் லீகின் கவுன்சில் கூட்டம் சென்னை ராஜாஜி ஹாலில் 10.03.1948 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் ஜமாலி சாகிப் கலந்து கொண்டார். அவர்தான் மாநாட்டின் தொடக்கமாக கிராஅத் ஓதினார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் அகில இந்திய முஸ்லிம் லீகை “இந்திய யூனியன் முஸ்லிம் லீக்” என்ற பெயரில் தொடர்ந்து நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் :
1946 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சட்டசபைத் தேர்தலில் இராமநாதபுரம் தனித் தொகுதியிலிருந்து முஸ்லிம் லீகின் சார்பில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸையது முகம்மது சாகிப் மரணமுற்றதால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் 1948ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக ஜமாலி சாகிப் அறிவிக்கப்பட்டார். ஆனால் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பிரமுகர்கள் தங்கள் பகுதியைச் சார்ந்த ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்றும், வெளியூர்க்காரரான ஜமாலி சாகிப்பை நிறுத்தக் கூடாது எனவும், மாகாணத் தலைமைக்கு விண்ணப்பங்கள் அனுப்பினர். எனினும் மாகாணத் தலைவர்கள் ஜமாலி சாகிபின் நியமனத்தை எதிர்த்த கட்சிப் பிரமுகர்களுடன் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினர். இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜமாலி சாகிப் வெற்றி பெற்றார். 1948 ஆம் ஆண்டு முதல் 1952-ம் ஆண்டு வரை (அதாவது முதலாம் பொதுத் தேர்தல் வரை) ஜமாலி சாகிப் சட்டசபை உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். காயிதே மில்லத் அவர்களுடன் இணைந்து சட்டசபையில் முஸ்லிம்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும், பல்வேறு பொதுப் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்தார்.
பத்திரிக்கையாளர் : சென்னை மாகாண முஸ்லிம் லீகின் சார்பில் 1938ஆம் ஆண்டு “முஸ்லிம்” என்ற வார இதழ் தொடங்கப்பட்டு அது சிறப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. நாட்டுப் பிரிவினைக்குப் பின் இந்த இதழ் நாளிதழாக மாற்றப்பட்டது. மாகாண முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.எம்.அகமது இப்ராகிம் சாகிப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இந்த இதழின் 11 பங்குதாரர்களில் ஜமாலி சாகிபும் ஒருவர். இந்த நாளிதழின் வளர்ச்சிக்காக ஜமாலி சாகிப் பெரு முயற்சிகள் எடுத்துக் கொண்டார். தமிழ் நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதழுக்கு சந்தாதாரர்களைச் சேர்த்தார். எனினும் “முஸ்லிம”; நாளிதழ் தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்குச் சிறப்பான முறையில் வழிகாட்ட தவறி விட்டதென்றும், சமூகத்திற்குத் தேவையான செய்திகளும், கட்டுரைகளும் அதில் இடம்பெறவில்லையென்றும் புகார் கூறி இதழின் நிர்வாகத்திலிருந்து அவர் விலகினார். பின்னர் 15.08.1952 அன்று திருச்சி ஏ.எம்.யூசுப் சாகிப்புடன் இணைந்து “மறுமலர்ச்சி” வார இதழைத் தொடங்கினார். அதன் பங்குதாரர்களில் ஒருவராகவும், வெளியீட்டாளராகவும் இருந்தார். அந்த இதழில் அரசியல், சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார். 1965 ஆம் ஆண்டு ஆசிரியர் ஏ.எம்.யூசுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த போது, மறுமலர்ச்சி இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி பத்திரிக்கை தொய்வின்றி தொடர்ந்து வெளிவர முயற்சிகள் மேற்கொண்டார்.
மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் சாகிபுடன் இணைந்து கட்சிப் பணியும் ஆற்றினார். 1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டின் வெற்றிக்காகப் பெரிதும் உழைத்தார்.
மதல தலமற 1கட்சியிலிருந்து நீக்கம் :
1962ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது முஸ்லிம் லீக் தி.மு.க-வுடன் கூட்டணியமைத்துப் போட்டியிட்டது. இத்தேர்தலில் முஸ்லிம் லீகிற்கு 6 சட்டசபைத் தொகுதிகளும், இரு பாராளுமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. லீகிற்கு ஓதுக்கப்பட்டிருந்த வடசென்னைப் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட ஜமாலி சாகிபும், பொதுச் செயலாளர் கே.டி.எம்.அகமது இப்ராகிம் சாகிபும் விண்ணப்பித்திருந்தனர். எனினும் மாநிலத்தலைமை இந்தத் தொகுதியில் லீக் சார்பில் ஏ.கே.ஏ.அப்துல் சமது சாகிப்பை வேட்பாளராக நிறுத்தியது. அதே நேரத்தில் ஜமாலி சாகிப் திருச்சி மாவட்டம் அரவாக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இத்தொகுதியில் போட்டியிட இவர் தயக்கம் காட்டிய போதிலும், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் முழு ஒத்துழைப்புத் தருவார்கள். எனவே தயங்காது களம் இறங்குங்கள் என மாநிலத் தலைமை இவரை அறிவுறுத்தியதன் பேரில் இத்தொகுதியில் போட்டியிட்டார். எனினும் இத்தேர்தலில் ஜமாலி சாகிப் வெற்றி பெறவில்லை (காங்கிரஸ் வேட்பாளர் சதாசிவம் வெற்றி பெற்றார். சுதந்திராக் கட்சியின் வேட்பாளர் இரண்டாவது இடத்திற்கும், ஜமாலி சாகிப் மூன்றாவது இடத்திற்கும் வந்தனர்). தேர்தல் தோல்வியால் விரக்தியுற்ற அவர், திருச்சி மாவட்ட முஸ்லிம் லீக் தனக்கு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று புகார்கூறி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து விலகல் கடிதத்தை மாநில பொதுச்செயலாளருக்கு அனுப்பினார். எனினும் இவரது விலகல் கடிதம் கட்சித் தலைமையால் ஏற்றக்கொள்ள படவுமில்லை, நிராகரிக்கப்படவுமில்லை. இதன் பின்னர் ஜமாலி சாகிப் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். 1967ம் ஆண்டு கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்ற போது மீண்டும் அதில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டார்.
இதற்குப் பின்னரும் இவருக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்குமான உறவுகள் மேம்பாடு அடையவில்லை. இந்நிலையில் 1968ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 29.09.1968 அன்று திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜமாலி சாகிப் மாவட்டத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே மாவட்டத் தலைவராகப் பதவி வகித்த நஸ்ருதீன் சாகிப் தோல்வியுற்றார். இத்தேர்தலில் ஜமாலி சாகிப்பிற்கு மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப்பும், ஏ.கே.பாஷாவும் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனினும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி இவரையும், ஏ.எம்.யூசுப் உள்ளிட்ட மேலும் ஆறு பேர்களையும் மாகாணத் தலைமை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது. இதன்பின்னர் இவர் ஏ.எம்.யூசுப்புடன் இணைந்து தனி அணியாகவே செயல்பட்டு வந்தார். 1973 ஆம் ஆண்டு ஏ.எம்.யூசுப் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார். கேரள மாநிலத் தலைவர்களின் முயற்சிகள் காரணமாக 1977 ஆம் ஆண்டு, யூசுப் சாகிப் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீக் தாய்க் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைந்தது. அப்போது ஜமாலி சாகிபும் இணைந்தார். கட்சியில் அவருக்கு மாநிலத் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் தனது ஆயுட்காலம் முடியும் வரை நீடித்தார்.
சேவைகள் :
1948-1952க்கும் இடைப்பட்ட காலத்தில் இராமநாதபுரம் தொகுதி சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய ஜமாலி சாகிப், அத்தொகுதியைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது, தனது சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயிலவும், தகுந்த கல்வித் தகுதி பெற்றிருந்த மாணவர்கள் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறவும் உறுதுணையாக இருந்தார்.
லெப்பைக் குடிக்காடு ஊராட்சி மன்றத் தலைவராக 1968லிருந்து 1971ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். அப்போது ஊரின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தினார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலிருந்து கடன் உதவி பெற்று பாதுகாக்கப்பட்ட குடிநீர்த் திட்டத்தையும், மத்திய அரசு மானிய உதவியுடன் பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் கொண்டு வந்தார். இவரது பதவிக் காலத்தில்தான் லெப்பைக் குடிக்காடு கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இவரது இடையறாத முயற்சிகள் காரணமாக, லெப்பைக் குடிக்காட்டில் பெண்களுக்கென தனியாக ஒரு உயர்நிலைப் பள்ளியை அரசு தொடங்கியது.
கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே தற்போது செயல்பட்டு வரும் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட அதனுடைய தாளாளர் திட்டக்குடி கிருஷ்ணசாமி முதலியாருக்கு உறுதுணையாக இருந்தார்.
லெப்பைக் குடிக்காட்டில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்குத் குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக 1979 ஆம் ஆண்டு கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் தரிசாகக் கிடந்த 67 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அதனை வீட்டு மனைகளாக்கி தேவையானவர்களுக்கு வழங்கினார். அந்தப் பகுதி தற்போது ஜமாலியா நகர் என அழைக்கப்படுகிறது. லெப்பைக் குடிக்காடு கிழக்கு ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்துச் சேவையாற்றினார்.
பண்பு நலன்கள் :
ஜமாலி சாகிப் தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம் ஆகிய மொழிகள் தெரிந்தவர். சிறந்த பேச்சாளர். செயல் வீரர். சாதி, சமய பேதமின்றி தன்னை நாடி வந்த அனைவருக்கும் உதவி செய்வார். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் நற்பண்பினராக இருந்தார். இவரது துணைவியாரும் இதே பண்பினைக் கொண்டிருந்தார்.
குடும்பம் :
ஜமாலி சாகிபின் துணைவியார் பெயர் பதுருன்னிஸா பேகம். இத்தம்பதியினருக்கு சம்சுதீன் புகாரி, நஜ்புதீன் புகாரி, அகமது புகாரி, பாபு (எ) மைதீன் புகாரி ஆகிய நான்கு மகன்களும், செல்வம் பானு என்ற புதல்வியும் உண்டு. மகன் நஜ்புதீன் புகாரியும், மகள் செல்வம் பானுவும் மரணமுற்று விட்டனர். மற்றப் புதல்வர்கள் தற்போது லெப்பைக் குடிக்காட்டில் வசித்து வருகின்றனர்.
இறப்பு :
சிறிது காலம் உடல் நலிவுற்றிருந்த ஜமாலி சாகிப் 12.04.1996 அன்று தனது 74வது வயதில் மரணமுற்றார். ஜமாலி சாகிப் இளமையிலேயே கட்சியில் பெரும் பதவிகள் வகித்தார். எனினும் இடைக்காலத்தில் கட்சியில் நிலவிய குழு அரசியல் காரணமாக அவரது அரசியல் வளர்ச்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதே நேரத்தில் மறுமலர்ச்சி வார இதழின் வெளியீட்டாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றார். இது அவரது மிகப் பெரிய சாதனையாகும். இந்த இதழியல் சாதனைக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார்.
நன்றி : தகவல்கள் அளித்திட்ட லெப்பைக் குடிக்காடு ஜனாப். அப்துல் ஹாதி அவர்களுக்கு.
கட்டுரையாளரின் கைபேசி எண் : 9976735561

Read 510 times