செவ்வாய்க்கிழமை, 02 ஜனவரி 2018 07:05

மண்ணின் வரலாறு-8 நாவாயத்கள் வாழும் மீனம்பூர்

Written by 
Rate this item
(0 votes)

சென்னை புத்தகக் கண்காட்சி புதுச்சேரியிலிருந்து சகோதரர் அஃப்ஸல் வந்திருந்தார். உரையாடல் ‘ஊரும் பேரும்’ என ஓடிக்கொண்டிருந்தது. அவரின் பூர்வீகம் செஞ்சியை அடுத்த மீனம்பூர். அவர் ஊரின் பெயர்க் காரணத்தை ஆராய்வதற்காக ‘இஸ்லாமிய கலைக் களஞ்சியத்தை’ எடுத்து பக்கங்களைத் திருப்பினேன். மீனம்பூரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மீனம்பூர் பற்றி ஒருவரி இருந்தாலும் சகோ, அஃப்ஸல் கலைக் களஞ்சியத்தின் நான்கு தொகுதிகளையும் வாங்கியிருப்பார். ஓராயிரத்து இருநூறு கல்லாவில் விழுந்திருக்கும்.
தமிழக இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான ஊர் நூல்களில் பதிவாகவில்லை, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி வட்டங்களைத் தாண்டி மீனம்பூர் பற்றிய சங்கதிகள் பரவவில்லை.
செஞ்சிக் கோட்டையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மீனம்பூர் பதுங்கிக் கிடக்கிறது. இங்கிருந்து விழுப்புரம் 34 கி.மீ. தொலைவிலும் தலைநகர் சென்னை 151 கி.மீ. தூரத்திலும் உள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவத்திலிருந்து மேற்காக சென்றால் செஞ்சியைத் தாண்டி தெற்கில் உள்ள பழமையான ஊர் மீனம்பூர்.
மீன்+அம்பு+ஊர் = மீனம்பூர்; மீனைப் போல் துள்ளிச் செல்லும் அம்புகளாக இருந்தனரோ? அல்லது மீன் வடிவ அம்புகள் செய்தனரோ மீனம்பூர்க்காரர்கள்? பெயர்க் காரணம் தெரியவில்லை. ஆனால் இவ்வூர் முஸ்லிம்கள் குடியேறி வாழும் ஊர் என்பதும் அவர்கள் குடியேற்றம் 300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதும் செஞ்சியின் வரலாற்றைப் படிக்கும் போது அறியக் கிடக்கிறது.
மீனம்பூர் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வந்த தக்னிகளும் அல்லர், தெற்கிலிருந்து வந்த ராவுத்தர்களும் அல்லர்; கிழக்கிலிருந்து போய்ச் சேர்ந்த மரைக்காயரும் அல்லர்; அவர்கள் மேற்கிலிருந்து வந்து குடியேறிய அரபுப் பழங்குடி மக்கள்.
அவர்கள் மீனம்பூருக்கு எப்போது வந்தார்கள்? எப்படி வந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் போர்வீரர்களாக ஆற்காட்டு நவாபின் படையில் பணியாற்ற வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கிள்ளேதார் எனும் கோட்டையின் - ஆளுநர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் அரபுக் கடலோரமுள்ள கொங்கணக் கடற்கரையிலிருந்து கூட்டம் கூட்டமாக தமிழகத்தின் நடுப்பகுதிக்கு வந்து குவிந்திருக்கிறார்கள்.
கொங்கணக் கடற்கரைக்கு அரபு மக்கள் எப்படி வந்தார்கள்? எப்போது வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?
அண்ணலாரின் காலத்துக்கு முன்பிருந்தே அரபு வணிகர்கள் நம்முடைய தேசத்தின் கிழக்குக் கடற்கரைக்கும் மேலைக் கடற்கரைக்கும் வந்து சென்று கொண்டிருந்தார்கள். வணிகர்களாக வந்து சென்று கொண்டிருந்தவர்கள் அண்ணலாரின் அழைப்பைத் தொடர்ந்து முஸ்லிம் வணிகர்களாக மாறி நம் கடலோரங்களில் கால் பதித்த போது அவர்களும் இஸ்லாமிய அழைப்பாளர்களும் உடன் வந்தார்கள்.

மனமபர 2
ஏழாம் நூற்றாண்டில் மாலிக் இப்னு தீனார் மலையாளக் கடற்கரைக்கு வந்ததைத் தொடர்ந்து பல பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. சேரமான் பெருமாளின் தலைநகரான கொடுங்கலூரில் கி.பி.629 இல் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது.
கி.பி. எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளிலும் அரேபியர் வருகைகள் தொடர்ந்திருக்கிறது. அரேபியர் - மலையாளிகள் உறவு தொடர வந்து சென்றவர்கள் மலையாளக்கரை மாப்பிள்ளைகள் ஆனார்கள். இங்குமங்கும் தங்கி வாழ மாப்பிள்ளை முஸ்லிம்கள் பெருந்தொகையாய்ப் போனார்கள். மலப்புரமெங்கும் மாமியார் வீடுகள்.
கி.பி. பதினொன்று பனிரெண்டாம் நூற்றாண்டுகள் சீராக போய்க் கொண்டிருக்க பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபகத்தில் ஏற்பட்ட கோடுங்கோலாட்சியில் அரபு மக்கள் ஓமன் கடற்கரைக்கு வந்து கப்பல் கப்பலாய் அரபுக் கடலைக் கடந்தனர். அவ்வாறு கி.பி.1269 - இல் வந்தவர்களின் வம்சா வழியினர்தான் கிழக்குக் கடற்கரை ஊர்களில் வாழும் பெரும் பான்மையினரான முஸ்லிம்கள்.
அக்கால கட்டத்தில் மேற்கில் அரபுக் கடலோர ஊர்களிலும் அரபுக்கள் வந்திறங்கினார்கள். அவ்வாறு கொங்கணக் கடற்கரையில் வந்திறங்கியவர்களின் வம்சாவழியினரே மீனம்பூர் முஸ்லிம்கள்.
கி.பி.பதினான்கு, பதினைந்து, பதினாறு என மூன்று நூற்றாண்டுகள் கொங்கணக் கடற்கரையிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் மண்ணின் மைந்தர்களாகவே மாறிப் போனார்கள்.
கடல் தொழில், வணிகம், தோட்டந் துரவுகள், விவசாயம் என பதினேழாம் நூற்றாண்டும் ஓடி மறைய பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் அந்த அரபு வம்சா வழியினரை காலம் போராளிகளாக மாற்றியது. தேவைக்கேற்பவே மனிதர்களை காலம் மாற்றியமைக்கிறது. ஜப்பானில் சாமுராய்கள் உருவானதைப் போல நம் நாட்டில் போர் மறவர்கள் உருவானார்கள், அவர்களில் கணிசமாக முஸ்லிம்களும் இருந்தார்கள்.
கொங்கணக் கடற்கரை அரபுக் குடும்பத்தில் கி.பி.1651 இல் பிறந்த முஹம்மது செய்யது இளைஞராகி தக்காணத்திற்கு வந்து குதிரை லாய உதவியாளர் ஆனது ஒரு தொடக்கப்புள்ளி.
அந்தப் புள்ளி நீண்ட கோடானது. குதிரை லாயம் குதிரை வீரராக்கியது. குதிரை வீரர் தளபதியாகி ‘மன்சாப்தார் - ஆட்சி மன்ற உறுப்பினர்’ என உயர்ந்தார். ‘சாதத்துல்லா கான்’ எனும் பட்டப் பெயரும் பெற்றார்.
சாதத்துல்லா கான் கர்நாடகத்தின் பௌஜிதாராகி 1710 இல் ஆற்காட்டுக்கு வந்தார். 1714 வரை சொரூப் சிங்கும் சிவாஜியும் ஆண்டு முடிய கான் ஆற்காட்டு நவாப் ஆனார்.
நவாப் ஆவதற்கு முன் தன்னுடைய இளவல் குலாம் அலியை டெல்லி பாதுஷாவின் அரசவையில் சேர்த்தார். பின்னாளில் குலாம் அலீ வேலூர் ஜாகீரானார்.
தன்னுடைய சகோதரருக்கு மட்டும் சாதத்துல்லா கான் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவில்லை. கொங்கணக் கடற்கரை சமுதாயத்திற்கே நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். படை வீரர், அரசு அலுவலர் எனப் பல்வேறு வாய்ப்புகளை தன் கொங்கணச் சகோதரர்களுக்கு வழங்கியதோடு அவர்களில் சிலரை கிள்ளேதார்களாகவும் நியமித்தார். கிள்ளேதார் என்பது ஒரு பெரும் வட்டத்தை நிர்வாகம் செய்யும் பணி.
கர்நாடக காட், காசர் கோட், வந்தவாசி, திமிரி போன்ற பகுதிகளை கொங்கணச் சகோதரர்களுக்கு வழங்கினார். கொங்கணக் கடற்கரை மக்கள் தொகை சுருங்கி சங்கரா பரணி தென்பெண்ணை பாலாற்றங்கரைகள் நிரம்பி வழிந்தன.
வடக்கே பழவேற்காட்டிலிருந்து தெற்கே பரங்கிப் பேட்டை அருகிலுள்ள பாளையங்கோட்டை வரை கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ‘ஹில்லே’ என்றால் கோட்டை, கோட்டைக் காவலர் ஹில்லேதார், ஹில்லேதாரே கிள்ளேதாராகியுள்ளது.
பல கோட்டைகளை ஆண்ட சாதத்துல்லா கானைப் பற்றிய பல சங்கதிகளை ‘சாதத் நாமா’ எனும் பார்ஸி நூல் பிறந்ததிலிருந்து இறந்தது வரை கூறுகிறது. 1651 முதல் 1732 வரையுள்ள நடுத்தமிழக வரலாற்றை அறிய நல்லதொரு ஆவணமாக ‘சாதத் நாமா’ விளங்குகிறது. ‘பாபர் நாமா’ போல் ‘சாதத் நாமா.’ அது ஒரு சக்கரவர்த்தியின் வரலாறு; இது ஒரு சாமான்யனின் வரலாறு.
கொங்கணக்கடற்கரையில் வந்திறங்கிய முஸ்லிம்களின் பாரம்பரியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரேபிய பழங்குடி மக்களில் ஓர் இனக்குழுவின் பெயர் ‘நவாயத்.’ இன்று வரை இவர்கள் தங்களை ‘நவாயத்’ என்றே அடையாளப்படுத்துகிறார்கள். சாதத்நாமா இதற்கு சான்று பகர்கின்றது.
‘ஏமன் வரலாறு’ எனும் நூல் நவாயத்களை கடலோடிகள் எனக் கூறுகிறது. இவர்கள் குறைஷிக் குழந்தைகள் - சிபிமிலிஞிஸிணிழி’ஷி ளிதி னிஹிஸிகிமிஷிபிமி எனப்படுவோரின் வழித்தோன்றல்கள் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் தபரி.
ஆற்காட்டு நவாப்களாக நவாயத் வகையறாக்கள் 1710 முதல் 1752 வரை ஆண்டனர். சாதத்துல்லா கான் முதல் சந்தா சாஹிப் வரை ஆண்ட போது கணிசமான நவாயத்கள் பாலாறு முதல் தென்பெண்ணையாறு வரை பரவினர்.
1752 க்குப் பிறகு நவாயத்கள் மைசூரின் ஹைதர் அலி - திப்பு சுல்தான் படைகளிலும் பணியாற்றினர். 1799 இல் திப்பு சுல்தான் மரணித்த பின் நவாயத்கள் படைப்பணிகளிலிருந்து கலைந்து சென்றனர்.
அவர்களில் ஒரு பெருந்திரள் மீனம்பூரில் மையம் கொண்டது. ஆங்காங்கு சிதறியும் வாழ்ந்தது. ஏறத்தாழ தொன்னூறு ஆண்டுகள் படையணியில் பாடாற்றியோர் - குதிரைகளோடும் ஆயுதங்களோடும் பழகியோர் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டனர். வணிகத்திலும் விவசாயத்திலும் கவனம் செலுத்தினர். கைத்தொழில்களும் செய்தனர்.
காயல்பட்டினத்தில் இரண்டாவது குடியேற்றம் கி.பி.1194 (ஹிஜிரி 571) இல் நிகழ்ந்த போது ஏர்வாடியில் அடங்கியிருக்கும் இப்றாஹீமும் காயலில் அடங்கியிருக்கும் கலீபா என்பாரும் இன்னொரு கலீபாவான ஈக்கி அப்பா கலீபாவும் வந்திருக்கின்றனர். அக்காலகட்டத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் அதி வீரராம பாண்டியன் மகன் குலசேகர பாண்டியன்.
முஸ்லிம்களில் பலரையும் தன் படையில் சேர்த்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்கு படைத் தளபதி ஆக்கினான். கலீபாவை நீதிபதி ஆக்கினான். இபுறாஹீமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.
குலசேகரப் பாண்டியவனின் மகன்கள் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும். இவர்களில் மன்னராக சுந்தரபாண்டியன் ஆனபோது வீரபாண்டியன் எதிர்த்தான். இவர்களின் தாயாதிச் சண்டையைத் தீர்த்து வைத்தவன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கபூர். டெல்லியின் கீழ் மதுரையைக் கொண்டு வந்த மாலிக் கபூர் சுந்தரபாண்டியனை கில்ஜி அரசுக்கு கப்பம் கட்ட வைத்தான். இது நடந்தது கி.பி.1310 இல், அப்போது மதுரைப் படையில் முஸ்லிம்கள் பங்கு பெற்றதைக் கண்டு வியப்புற்று மாலிக்கபூர் தம் பக்கம் சேரும்படி அழைக்க அவர்கள் மறுத்து விட்டார்களாம்.
வெளிநாட்டு வீரர்கள் பிறநாடுகளுக்குச் சென்று போர்ப் படையில் சேர்த்து களம் காண்பது புதிதல்ல. காலந்தோறும் அது நடந்து வந்திருக்கிறது. மேற்கிலிருந்து கிழக்கு நாடுகளுக்கு வந்து போராளிகள் களம் கண்டதைப் போல் கிழக்கிலிருந்து மேற்கு நாடுகளுக்குச் சென்று களம் கண்ட வரலாறுகளும் உண்டு.

மனமபர 3
வடபுலத்திலிருந்து பாரசீகம் சென்ற ஜாட்கள் பெர்ஸியப் படையில் இருந்ததும் அரபகத்திலிருந்து புறப்பட்ட இஸ்லாமியப்படை பாரசீகத்தை வென்ற போது பெர்ஸியர்களோடு ஜாட்களும் இஸ்லாத்தைத் தழுவியதும் வரலாறு.
மீனம்பூர் முஸ்லிம்கள் வணிகத்துக்காகவும் இஸ்லாத்தைப் பரப்பவும் வந்தவர்கள் என மேம்போக்காக கணிக்கின்றனர். உண்மையில் அவர்கள் சாதத்துல்லா கானின் அரவணைப்பால் ஆற்காட்டுப்படையணிக்கு வந்தவர்கள் என்பதே உண்மை.
இஸ்லாத்துக்கு முன்பு வில்லையும் அம்பையும் வைத்து வேட்டையாடிக் கொண்டிருந்த நவாயத்கள் துப்பாக்கியையும் பீரங்கியையும் இயக்கக் கற்றார்கள் அத்தர் வாடையை விட கந்தக வாடை அவர்களைக் கவர்ந்துள்ளது.
ஆயிரம் பேர் குழுமியிருந்தாலும் நவாயத் சகோதரர் தனியாகத் தெரிவார். இவர்களின் குடும்ப பெயர்கள் சயீத், பாபா கோகன், ஹூஸைன், சும்கர், ஷகீர், ஆம்பர் ஹானி, ஆக்லே, பாந்தேஹ், மெக்கிரி என்பவை.
கீழக்கரை, காயல்பட்டினம் அரபு வம்சா வழியினர் போல் மீனம்பூர் மாப்பிள்ளைகள் பெண் வீட்டோடு போவதில்லை. என்றாலும் அகமணம் செய்து கொண்ட இவர்கள் இப்போது ராவுத்தர்களோடும் மணமுடித்துக் கொள்கின்றனர். மணப்பந்தல்களில் மகத்தான உறவுகள் மலர்வதோடு மனங்களும் மனிதர்களும் மலர்கின்றனர்.
மீனம்பூர்க்காரர்களின் முற்கால கட்டங்கள் முஸ்லிம்களின் போர்க்கள ஈடுபட்டை வெளிப்படுத்துவதாய் உள்ளன. நவாயத் அரபுக்களைப் போலவே பிற முஸ்லிம்களும் களம் கண்டவர்களாய் வாழ்ந்துள்ளனர்.
மொகலாயர், நிஜாமியர், ஆற்காட்டுப் படைகளில் மட்டுமல்ல முஸ்லிம்கள் பிற படைகளிலும் அங்கம் வகித்ததோடு மட்டுமல்ல முன்னணி வகித்திருக்கிறார்கள்.
பாண்டியர்களின் படையில் அங்கம் வகித்த முஸ்லிம்கள் பிற்காலங்களில் நாயக்கர்களின் படைகளில் கூட அங்கம் வகித்திருக்கிறார்கள். படையணிகளில் அவர்கள் தொடக்க அணியாக நடை போட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ‘வெடிப்படை’ எனப் பெயர் வரக் காரணம், கந்தகத்தைக் கக்கும் பீரங்கிப் படைக்காரர்களாய் இருந்துள்ளதுதான்.
ஆங்கில, பிரெஞ்சுப் படைகளில் கூட முஸ்லிம்கள் தோக்குகளின் தோழர்களாக விளங்கியுள்ளனர். கம்மந்தான் கான் சாகிபு எனும் கமாண்டர் மருதநாயகம் பிரெஞ்ச், ஆங்கிலப் படைகளில் பணியாற்றி தன்னாட்சி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நாயகத்தின் வரலாறு கூட முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் பலரைப்பற்றிய சங்கதிகள் பதிவாகவில்லை.
சிப்பாய்க் கலகத்தின் போது ஆங்கிலேயப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் தான் எதிரணி உருவாக காரணமானவர்கள். பகதூர்ஷாவை களத்திற்குக் கொண்டு வந்தவர்கள்.
முஸ்லிம்கள் என்றால் வணிகர்கள் என்றே பெரும்பாலும் அறியக் கிடைக்கிறார்கள். அவர்களில் சரிபாதி போர்ப்படைக்காரர்கள் என்பதற்கான பதிவுகள் கிடைக்கவில்லை. தேடித்தேடியே அவர்களின் இயக்கங்களைக் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது.
குதிரைகளோடு வந்தவர்கள் குதிரைகளைப் பற்றி நன்கறிந்தவர்கள். தொண்டித் துறைமுககத்தில் மட்டும் ஆண்டுக்கு 25.000 குதிரைகள் இறங்கியுள்ளன. தொடக்க காலத்தில் வந்த குதிரைகள் லாடம் அடிக்கப்படாததால் நீண்ட நாட்களுக்கு அவற்றின் பயன்பாடு கிடைக்கவில்லை. அவற்றின் ஆயுள் நீளவில்லை.
குதிரைப் படை வீரராக ஒருவருக்கு குதிரையேற்றப் பயிற்சி தேவை. இப்பயிற்சி அரேபியர் பலருக்கும் இருந்தது. அவர்கள் குதிரைப் படை வீரராக வாள் பயிற்சி மட்டுமே தேவையான நிலையில் வாள் - வில் கரங்களில் ஏற வீரராக அட்டியேது? அவர்கள் குதிரைகளுக்கு கால்கவசமாய் லாடங்களை அடித்த போது அவற்றின் ஆயுள் நீண்டது. ஓட்டத்தின் உன்னதம் தெரிந்தது.
முஸ்லிம்கள் இன்றும் லாடக்காரர்களாய் இருப்பதற்கும் மிருகவைத்தியர்களாய் இருப்பதற்கும் பாரம்பர்யமே காரணம், குதிரைகள் முஸ்லிம்களுக்கு பறக்கும் பல்லக்குகள். அவற்றின் மேல் அமர்ந்தபடி அவர்கள் செய்த சாகசங்களை காற்றே நன்கறியும். மூச்சிரைக்கும் குதிரைகளோடு முஸ்லிம்கள் மூச்சாலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ராவுத்தர்கள் எனப் பெயர் பெற்றார்கள்.
இராவுத்தர்களாக குதிரைப்படை நடத்தியவர்கள் மாவுத்தர்களாக யானைப்படையும் நடத்தியுள்ளனர்.
படைகளுக்கான ஆயுதங்களை உருவாக்க முஸ்லிம்களே பட்டறைகளையும் அமைந்து வாள், வில்லோடு கவசங்களையும் உருவாக்கியுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஹைதர் பட்டறைத் தெரு இன்றும் உள்ளது. மதுரை பட்டறைக்காரத் தெருவும் போராயுதங்கள் செய்த தெருவே.
அரக்கோணத்திற்கு அருகில் உள்ள நாராயணபுரம் முஹம்மத்பூரில் சாணை பிடிப்போர் திரளாக வாழ்கின்றனர். சென்னை வீதிகளில் சுற்றித் திரியும் சாணை பிடிப்போர் அனைவரும் முஹம்மத்பூரைச் சேர்ந்தவர்களே. இஸ்லாமியப் படை வீரர்களின் எச்சங்களே இவர்கள்.
செஞ்சிக் கோட்டைக்குள் உள்ள விரிந்த நிலப்பரப்பில் அன்று போர்ப் பயிற்சிகள் நிறைவேறியுள்ளன. அங்கு பயிற்சி பெற்றவர்கள் ஆற்காட்டு சுபாவின் 84 கிள்ளேக்களில் - கோட்டைகளில் பணியாற்றியுள்ளனர்.செஞ்சி நிர்வாகத்தின் கீழ் மட்டும் களவாய், கிடங்கல் (திண்டிவனம்) பெருமுக்கல், வழுதாவூர், விருத்தாசலம், பளையங்கோட்டை ஆகிய ஏழு கிள்ளேக்கள் அடங்கியிருந்தன.
இராவுத்தநல்லூர், ரஞ்சன் குடி, குஞ்சக்காடி, போரூர், முஸ்தபா காட் (சங்கராபுரம்) வேப்பூர் துர்க்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, இளவரசூர், கர்நாடககாட், பெண்ணாத்தூர், திம்மையப்பன்துர்க்கம், மல்லிகார் ஜூனா காட், ஆரணி, சேத்துப்பட்டு கருங்குழி, செங்கல்பட்டு, பூந்தமல்லி, மைலாப்பூர் (சாந்தோம்) திருபாச்சூர், தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, வேலூர் கோட்டை, வந்தவாசி, கைலாஷ் காட், படை வீடு, வண்ணான் துர்க்கம், சக்கிலி துர்க்கம், வஜேந்திரகாட், ஆம்பூர், காத், சத்தாத், சித்தூர், மாயிமண்டலம், அவல்கொண்டை, சந்திரகிரி, உதயகிரி, ராம்பூர், சத்யவேடு, செக்கு, தேவகாட், தலுப்பகாட், கிருஷ்ணகிரி என 84 கோட்டைகளில் அயல்மொழிகளும் உருதும் பேசும் படையினரோடு தென்னக மொழிகள் பேசும் சத்திரியர்களும் இருந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் வாளேந்துபவர் இருந்துள்ளார்கள். அவர்கள் களமாட அன்றைய ஆட்சியாளர்கள் வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
விவசாயம், கைத் தொழில் தவிர்த்து மக்களுக்கு வேலைவாய்ப்பாக போர்த் தொழில் அமைந்திருக்கிறது.
நவாயத்கள் கொங்கணக் கடற்கரையில் இருந்த போது அரபு மொழியோடு வட்டார மொழியையும் கலந்து பேசினர். பழவேற்காட்டில் கரையிறங்கிய அரபுக்கள் அரபு மொழியோடு தமிழ் மொழியையும் கலந்து பேசினர். இம்மொழிக்கு அரவி எனப் பெயர்.
கொங்கணக் கடற்கரையில் அரபு மொழியோடு வட்டார மொழியைக் கலந்து பேசியவர்கள் ஆற்காட்டு நவாபின் கர்நாடகப் பிரதேசத்துக்கு வந்த போது உருதுவைக் கற்றுக் கொண்டு தமிழையும் கலந்து பேசினர். அரபு வேத மொழியாக இருக்க உருது தாய்மொழியாய் மாறியது. துருக்கியரை, பாரசீகரை, ஆப்கானியரை, மொகலாயரை இஸ்லாம் ஒரே சமுதாயமாக ஆக்கியதைப் போல் உருது மொழியும் முஸ்லிம்களை ஒன்றாக்கியது.
மீனம்பூரிலுள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசலுக்கு வயது 300 இருக்கலாம். இதன் தற்போதைய முத்தவல்லியின் வயது 97. பெயர் ‘மௌலானா மக்பூல் சாஹிப்.’
மீனம்பூரைச் சேர்ந்த அப்பம்பட்டில் இரு மசூதிகளும், பள்ளியம்பட்டில் இரு மசூதிகளும் உள்ளன. மக்கள் தொகை சுமார் இரண்டாயிரம். மீனம்பூரோடு பள்ளியம்பட்டும் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து ஒரு காலத்தில் குட்டி பாகிஸ்தான் என அழைக்கப்பட்டதாம்.

மனமபர 1i
மீனம்பூர்க்காரர்கள் விழுப்புரம் பகுதியில் பரந்து வாழ்கின்றனர். அரிசி, அரைவை ஆலைகள், நெல் - அரிசி வணிகம், பழ மண்டிகள் என பல்வேறு வணிகங்கள் செய்து வாழ்கின்றனர்.
திண்டிவனத்திலும் இவர்கள் அரிசி ஆலைகளும் பழ மண்டிகளும் வைத்துள்ளனர்.
திண்டிவனத்தில் அரிசி ஆலை வைத்திருக்கும் பெரியவர் ஹாஜி குலாம் தஸ்தகீர் சாகிபு மீனம்பூரைப் பற்றிய சங்கதிகளைச் சொன்னார். உடன் சகோதரர் ஹாஜி கா.மு.இஸ்மாயில் உதவியாய் இருந்தார்.
திண்டிவனத்திலுள்ள பழமையான நவாப் பள்ளிவாசலும் மதீனா பள்ளிவாசலும் மீனம்பூர் வாசிகளின் நிர்வாகத்தில் உள்ளன. இவற்றின் முத்தவல்லி ஹாஜி குலாம் தஸ்தகீர் அவர்களே.
மீனம்பூர்க்காரர்களின் தொழில்களில் ஒன்று பழத்தோட்டங்களை குத்தகைக்கு எடுப்பது. கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள இடைக்கழி நாட்டு பழத்தோட்டங்கள் இவர்களின் குத்தகைக்காகவே காத்துக் கிடக்கும் குத்தகைக்காரர்களைப் போலவே பழமண்டிக்காரர்களும் மீனம்பூராரே.
கட்டுரையின் தொடக்கத்தில் ஜப்பானைப் பற்றியும் சாமுராய்களைப் பற்றியும் குறிப்பிட்டோம். அதில் காலமும் சூழலும் மனிதர்களை வடிவமைப்பதைப் பற்றியும் சொல்லியிருந்தோம்.
சாமுராய்கள் வளர்ச்சி பெற்ற போர்க் காலம் போய் விட்டது. இனி போராளிகளுக்கு வேலையில்லை. நாட்டுக்கு ஆசான்கள் தேவைப்பட்டனர். எனவே ஜப்பானிய சமுதாயம் கல்வியைத் தேடி ஓடியது. கல்வியாளர்கள் பெருகிட சமுதாயம் நாற்காலியில் உட்கார்ந்தது.
ஜப்பானைப் போல் மீனம்பூரிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. போராளிகளாயிருந்து விவசாயிகளாகவும் வியாபாரிகளாகவும் இருந்த சமுதாயம் கல்வியைக் கட்டியணைத்துக் கொண்டது.
கிராமம் நகரங்களுக்கு நகர்ந்தது. அதன் தொடர்ச்சியாக பாரசீக வளகுடா நாடுகள், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தார் என கால்பதித்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் உலா நடத்தியிருக்கிறது. அதேசமயம் அவர்கள் வேர்களை விட்டுவிடவில்லை.
ஊர்வலம் தொடரும்…

Read 307 times