செவ்வாய்க்கிழமை, 02 ஜனவரி 2018 07:38

இளம் ஆலிம்களே உங்களைத்தான்-7 நபிமொழிக் கலை

Written by 
Rate this item
(0 votes)

அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே! நம் மத்ரஸா பாடங்களில் தஃப்சீருக்கு அடுத்ததாக ‘ஹதீஸ்’ எனும் நபிமொழிப் பாடம் இடம்பெறுகிறது.
‘ஹதீஸ்’ என்றால் என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றுக்கே ‘ஹதீஸ்’ என்று சொல்லப்படும். இந்த ‘ஹதீஸ்’தான் இஸ்லாமிய ‘ஷரீஆவின் இரண்டாவது மூலாதாரமாகும். இறைமறையாம் திருக்குர்ஆனின் பொருள் விளக்கமாகவும் செயல்வடிவமாகவும் ஹதீஸ் அமைகிறது. எனவே, ஹதீஸ் இல்லாமல் குர்ஆன் மட்டுமே எனக்குப் போதும் என்று எவரும் வாதிட முடியாது.
ஏன், இறைத்தூதரைப் பின்பற்றியவர்தான் இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவராவார். இறைத்தூதருக்கு மாறு செய்தவர் இறைக்கட்டளையை மீறியவர் ஆவார். பின்வரும் திருவசனங்களைப் பாருங்கள்:
(அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகின்றவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார். (4:80)
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் யார் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்களை அவன் (சொர்க்கச்) சோலைகளில் நுழையவைப்பான். (4:13)
எந்தத் தூதரையும், அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப அவருக்கு (மக்கள்) கீழ்ப்படிந்து நடப்பதற்காகத் தவிர (வேறு நோக்கத்திற்காக) நாம் அனுப்பவில்லை. (4:64)
ஆக, இறையன்பைப் பெற விரும்புகிறவர், இறைத்தூதரைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது 41ஆவது வயதில் -கி.பி. 610இல்- நபியாக்கப்பட்டார்கள். கி.பி. 632இல் மறைந்தார்கள். இந்த 23 ஆண்டுகள் நபிகளார் ஓதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனங்கள் நீங்கலாக - அவர்கள் பேசிய பேச்சு, செய்த செயல், அளித்த அங்கீகாரம் எல்லாமே ஹதீஸ்கள்தான். சுருங்கக் கூறின், அவர்களின் ஒவ்வோர் அசைவும் உம்மத்திற்கு வழிகாட்டியாகும்.
நபிமொழி வந்த வழி
இன்றிலிருந்து (2017) 1385 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த நபிகள் நாயகத்தின் சொல், செயல், அங்கீகாரத்தை நாம் எப்படி அறிய முடியும்? நபி (ஸல்) அவர்களின் சொல்லை அவர்களுடைய தோழர்கள் செவியுற்றார்கள்; நபியின் செயலைத் தோழர்கள் கண்டார்கள்; அன்னார் அளித்த அங்கீகாரத்தை நேரில் அறிந்தார்கள்.
தோழர்கள் அடுத்த தலைமுறையினருக்கு (தாபிஉ) எடுத்துரைக்க, இவர்கள் அதற்கடுத்த தலைமுறையினருக்கு (தாபிஉல் அத்பாஉ) சொல்ல, இவ்வாறு நபிமொழித் தொகுப்பாசிரியர்கள்வரை தகவல்கள் பரிமாறப்பட்டன.
அந்த நபிமொழித் தொகுப்புகளைப் பார்த்தே நபிமொழிகளை நாம் அறிந்துகொள்ள முடியும். நீண்டகால இடைவெளிக்குப் பிறகு தொகுப்பாசிரியருக்கு அந்தச் செய்தி கிடைப்பதால், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, சரியான தகவலா; தவறான தகவலா எனப் பகுத்தறிந்து, சரியான தகவலை மட்டுமே தம் நூலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த நூலாசிரியர்கள் தமக்குத் தாமே சில வரையறைகளையும் நிபந்தனைகளையும் வகுத்துக்கொண்டார்கள்.
அந்த நிபந்தனைகளுக்குட்பட்ட சரியான ஹதீஸ்களை மட்டுமே தம் தொகுப்புகளில் சிலர் இடம்பெறச்செய்தனர். இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம் (ரஹ்) போன்றோர் இவர்களில் அடங்குவர். ஆதாரப்பூர்வமான தகவல்களுடன், பலவீனமான ஆதாரங்கள் உடைய தகவல்களையும் சேர்த்து சிலர் தம் நூல்களில் இடம்பெறச் செய்தனர்.
அறிவிப்பாளர்தொடர்
இதனால்தான், பெரும்பாலான நபிமொழித் தொகுப்புகளில் நபிமொழிகளுடன் சேர்த்து, அவற்றின் அறிவிப்பாளர்தொடர்களையும் குறிப்பிடும் மரபு வந்தது. ஹதீஸின் ஆரம்பத்தில் நூலாசிரியர் குறிப்பிடுவார்: எமக்கு இன்னவர் இதனை அறிவித்தார். அவருக்கு இன்னவர், அவருக்கு இன்னவர், என்று தொடங்கி, அவருக்கு இன்ன நபித்தோழர் அறிவித்தார், அந்த நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் செவியுற்றார், என அத்தொடர் முடியும்.
எடுத்துக்காட்டாக, “எண்ணங்களைக் கொண்டே செயல்கள் அமைகின்றன” எனும் பிரபலமான நபிமொழியை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பிரசித்திபெற்ற ஸஹீஹுல் புகாரீ நூலில் முதல் ஹதீஸாகப் பதிவிடுகிறார்கள். இந்த ஹதீஸ் தமக்குக் கிடைத்த வழியை இமாம் தொடக்கத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்கள்:
அறிவிப்பாளர்தொடர் (சனத்)
எண் அறிவிப்பாளர் தலைமுறை ஆண்டு (ஹிஜ்ரீ)
1 இமாம் புகாரீ (ரஹ்) நூலாசிரியர் 194-256
2 ஹுமைதீ (ரஹ்) தபஉத் தாபிஈன் (மூத்தவர்) இ: 219
3 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) தபஉத் தாபிஈன் (மத்தியவர்) இ: 198
4 யஹ்யா பின் சயீத் (ரஹ்) தாபிஉ (இளையவர்) இ: 144
5 முஹம்மத் பின் இப்ராஹீம் (ரஹ்) தாபிஉ (மத்தியவருக்கும் கீழே) இ: 120
6 அல்கமா பின் அபீவக்காஸ் (ரஹ்) தாபிஉ (மூத்தவர்) (சுமார்) 65
7 உமர் பின் அல்கத்தாப் (ரலி) நபித்தோழர் இ: 23
8 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நபிகளார் இ: 9 ஸஃபர்

இளம ஆலமகள  1
இங்கு கவனிக்க வேண்டிய அம்சங்களாவன:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள்வரை ஆறுபேரைக் கடந்து இந்த நபிமொழி வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் மூன்று தலைமுறைகள் (நபித்தோழர் > தாபிஉ > தபஉத் தாபிஈன்) வாயிலாகக் கிடைத்துள்ளது. இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் நேரடியாகச் செவியுற்றது, தம் ஆசிரியர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அல்ஹுமைதீ (ரஹ்) அவர்களிடமிருந்துதான்.
இடையிலுள்ள ஆறு அறிவிப்பாளர்களின் (ஆசிரியர் உள்பட) தகுதி, நேர்மை, நினைவாற்றல், சந்திப்பு அல்லது செவியேற்பு நடந்ததற்கான வாய்ப்பு, ஒவ்வொருவரைப் பற்றியும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள்ஞ் முதலான பரிசோதனைகளுக்கு ஒவ்வொருவரையும் உட்படுத்தி, சரிகண்ட பிறகே நபிமொழியைப் பதிவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு ஒவ்வோர் அறிவிப்பாளர் குறித்துப் பரிசோதிக்கும்போது, ஒருவரைப் பற்றிய ஆய்வில் அவர் குறையுள்ளவர் - நினைவாற்றலின்மை, நேர்மையின்மை, சந்திப்பு அல்லது செவியேற்பின்மை போன்ற குறைகள் உள்ளவர்- என்பது முடிவானால், அவரது அறிவிப்பைப் புறக்கணித்துவிடுவார்கள். தொகுப்பாசிரியர்கள் சிலர், அத்தகையவரின் அறிவிப்பைப் பதிவு செய்துவிட்டு, இவர் பலவீனமானவர்; அல்லது குறையுள்ளவர் என்பதையும் சேர்த்துக் குறிப்பிட்டுவிடுவர்.
சிலவேளைகளில், தொகுப்பாசிரியர் குறிப்பிடாவிட்டாலும் விளக்கவுரை எழுதியுள்ள அறிஞர்கள் அத்தகவலைப் பதிவு செய்துவிடுவார்கள். அப்படியும் இல்லாவிட்டால், நாமே ஒவ்வோர் அறிவிப்பாளர் குறித்தும் அறிந்து தெளிய முடியும். அதற்கான நூல்கள் ஏராளமாக உள்ளன.
நபிமொழி தரவியல்
இதற்காகவென்றே -நபிமொழிகளின் தரத்தை அறிவதற்கென்றே- ‘நபிமொழி தரவியல்’ (முஸ்தலஹுல் ஹதீஸ்) என்ற கலை பிற்காலத்தில் உருவானது. இக்கலை, சில அடிப்படைகள் மற்றும் விதிகளைக் கொண்டது. அவற்றின் மூலம் நபிமொழி (மத்தன்) மற்றும் அதன் அறிவிப்பாளர்தொடர் (சனத்) ஆகியவற்றின் நிலை, தரம் குறித்து அறிய முடியும்; ஏற்புக்குரியதா; நிராகரிப்புக்குரியதா எனப் பகுத்தறிய முடியும்.
துவக்கத்தில், நபிமொழித் தொகுப்புகளின் ஓர் இணைப்பாக இருந்த இத்துறை, ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் தனியான துறையாகப் பரிணமித்தது. நபிமொழி தரவியலை முதன்முதலில் தனித்துறையாகப் பிரித்தவர் காழீ அபூமுஹம்மத் ஹசன் பின் அப்திர் ரஹ்மான் அர்ராமஹுர்முஸீ (இறப்பு: ஹி.360) அவர்கள்தான். அன்னார் எழுதிய அந்த முதல் நூலின் பெயர்: அல்முஹத்திஸுல் ஃபாஸில் பைனர் ராவீ வல்வாஈ’ என்பதாகும்.
அவ்வாறே, நபிமொழி அறிவிப்பாளர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் அவர்களின் தரவரிசை பற்றிய ஆய்வறிக்கைகளும் இடம்பெறுகின்ற நூல்களும் வெளிவந்துள்ளன. ‘அல்மக்தபத்துஷ் ஷாமிலா’ எனும் குறுந்தகட்டில் நபிமொழி தரவியல் நூல்கள் 45 இடம்பெற்றுள்ளன. அறிவிப்பாளர்கள் தரவரிசையில் 600 நூல்கள் காணப்படுகின்றன.
பாடப் புத்தகம்
அரபிக் கல்லூரி பாடத்திட்டத்தில், நபிமொழித் தரவியல் (முஸ்தலஹுல் ஹதீஸ்) புத்தகம் ஒன்றோ இரண்டோ இடம்பெறுவதுண்டு. ஆனால், எளிய முறையில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பல தற்போது வெளிவந்துள்ளன. நடைமுறையில் உள்ள புத்தகங்களில் அக்கால கடுமையான வாசக நடை, பொருள் அறிவதில் சிரமம், உதாரணங்கள் அரிதாக இடம்பெறல் முதலான நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றை மாணவர்கள் சந்திக்கின்றனர். இதனால் இத்துறை பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே மாணவர்கள் கற்று முடிப்பது வேதனையானது.
அன்பு மாணாக்கர்களே! ஒரு ஹதீஸை நீங்கள் அணுகக்கூடிய முறை இப்படியிருக்க வேண்டும்:
என்ன தலைப்பில், அல்லது எந்தப் பொருள் தொடர்பான ஹதீஸ் தேவையோ அதை அத்தியாயம், பாடம் வாரியாகத் தேட வேண்டும். ஹதீஸைக் கண்டுபிடித்தவுடன், அதன் அறிவிப்பாளர்தொடரை (சனத்) ஆய்வு செய்ய வேண்டும். தரமானது எனத் தீர்க்கமாக அறிந்தபின்பே ஹதீஸைக் கையாள வேண்டும்.
நபிமொழியை அறிவித்த நபித்தோழர் பெயர், அதைவிட முக்கியமாக நபிமொழி இடம்பெறும் நூல் ஆகியவற்றோடு நபிமொழியின் அரபிமூலத்தைக் குறிப்பெடுக்க வேண்டும். தெரியாத சொற்கள் இருப்பின் பொருளை அறிந்து, நபிமொழி சொல்லவரும் கருத்தை உள்வாங்கியபின்பே நபிமொழியைப் பயன்படுத்த வேண்டும்.
அரபிமொழியில் இருப்பதெல்லாம் நபிமொழி என்றோ, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (காலந் நபிய்யு) என்று வருவதெல்லாம் ஹதீஸ் என்றோ, அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் -என்று நபித்தோழர் பெயரைக் குறிப்பிடுவதுதான் ஆதாரம் என்றோ, நபிமொழி நூலில் இடம்பெற்றுவிட்டாலே அது ஆதாரபூர்வமானது என்றோ கருதிவிடக் கூடாது.
பொதுவாக ஒரு நபிமொழி சனத் (அறிவிப்பாளர்தொடர்), ‘ம(த்)தன்’ (மேட்டர்) என இரு கூறுகளைக் கொண்டதாக இருக்கும். இரண்டுமே முக்கியமானவை; கவனிக்கத் தக்கவை. மேட்டரைப் பார்த்து வியப்பதற்கு முன்னால், அதன் அறிவிப்பாளர்தொடர் சரியானது என்பதை உறுதிப்படுத்தியபின் தெம்போடு நபிமொழியைத் தொடுவதே புத்திசாலித்தனம்; நியதியும்கூட.
குறுந்தகடுகள்
‘மவ்சூஅத்துல் ஹதீஸ்’ (நபிமொழிக் களஞ்சியம்) என்றொரு குருந்தகடு (சி.டி.) உண்டு. ‘ஹர்ஃப்’ நிறுவனம் வெளியிட்டது. அதில் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், முவத்தா மாலிக், சுனனுத் தாரிமீ ஆகிய முதல்தரமான ஒன்பது நபிமொழி நூல்கள் உள்ளன.
நபிமொழி பக்கத்தை கிளிக் செய்தவுடன், நபிமொழிகளுக்கு வலப் பக்கத்திலே 12 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும். நபிமொழியில் உள்ள அபூர்வமான சொற்களுக்குள்ள பொருள்கள் (மஆனீ), அறிவிப்பாளர்கள் (ருவாத்), இந்நூலில் இதே ஹதீஸ் வேறு இடங்களில் வந்துள்ள விவரம் (அத்ராஃப்), இதே ஹதீஸ் (இந்த ஒன்பதில்) வேறு நூல்களில் வந்துள்ள தரவு (தக்ரீஜ்), அறிவிப்பாளர்தொடர் (சனத்), விளக்கவுரை (ஷர்ஹ்) முதலிய குறிப்புகளின் பெயர்கள் காணப்படும்.
தேவையானதை கிளிக் செய்தவுடன் உங்கள்முன் நீங்கள் தேடிய விவரம் உடனே காட்சி தரும். உதாரணமாக, ‘அறிவிப்பாளர்கள்’ ஆப்ஷனை ‘கிளிக்’கினால், அந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒவ்வொருவர் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு (தர்ஜமதுர் ராவீ), அந்த அறிவிப்பாளரின் ஹதீஸ் ஆசிரியர்கள் (ஷுயூக்), அறிவிப்பாளரிடம் ஹதீஸ் அறிவைப் பெற்ற மாணவர்கள் (தலாமீத்), அறிவிப்பாளரின் தரம் (ருத்பத்), அறிவிப்பாளர் பற்றிய நிறைகுறை (ஜர்ஹ் வ தஅதீல்) ஆகியன குறித்த தகவல்கள் உங்கள் கையில்.

இளம ஆலமகள  1
அவ்வாறே, ‘அறிவிப்பாளர்தொடர்’ எனும் ஆப்ஷனை சொடுக்கினால், அறிவிப்பாளர்களின் பெயர்கள் பல வண்ணங்களில் காணப்படும். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு தரம். தரத்தைக் குறிக்கும் எண்களும் இருக்கும். எண், வண்ணம் -இந்த இரண்டைப் பார்த்தவுடனேயே அறிவிப்பாளரின் தரத்தை அறியலாம். உதாரணமாக, வெள்ளை - 1 நபித்தோழரைக் குறிக்கும்; மஞ்சள் - 2-3 நம்பத் தகுந்தவர் என்பதைக் குறிக்கும்; பச்சை - 6 ஏற்கத் தக்கவர்; சிவப்பு - 8 பலவீனமானவர்ஞ் இப்படி வண்ணங்களும் எண்களும் உங்களுக்குப் பாடம் நடத்தும்.
அதே ஆப்ஷனில், அந்த ஹதீஸ் மர்ஃபூஉ; மவ்கூஃப்; மக்தூஉஞ் என எந்த வகையைச் சேர்ந்தது என்ற விவரமும் கிடைக்கும்.
வேறு என்ன வேண்டும் உங்களுக்கு..? பல நூல்களைத் தூக்கிப் பல மணி நேரம் புரட்டி, தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய கனமான தகவல்கள் ஆட்காட்டி விரலின் அசைவில்! சுப்ஹானல்லாஹ்! கொட்டிக் கிடக்கிறது! கட்டிச் செல்லத்தான் ஆள் இல்லை. இந்நிலையில், அறியாமைக்கு யாரைக் குற்றம் சொல்லப்போகிறீர்கள்?
இதைவிட அதிசயம்; இன்னொரு குறுந்தகடு. பெயர்: அல்மக்தப்பத்துஷ் ஷாமிலா (எல்லாம் உள்ள நூலகம்). இதில் பல்வேறு கலை சம்பந்தப்பட்ட 9 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள், அப்படியானால், நூலகம் (அல்மக்தபா) என்ற பெயர் பொருத்தம்தானே! நபிமொழி நூல்கள் மட்டும் - 230; தஃப்சீர்கள் - 195; நபிமொழி விளக்கம் - 195; சீரா - 200; வரலாறு - 230; கொள்கை விளக்கம் - 834ஞ் இப்படி பட்டியல் நீள்கிறது.
அத்தோடு அவ்வப்போது புதிய நூல்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இணையதள இணைப்பு இருப்பின் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியும். எல்லாம் இலவசம்.
(சந்திப்போம்)

Read 413 times