வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 09:01

மண்ணின் வரலாறு - 9 வந்தோரை வாழவைக்கும் வந்தவாசி

Written by 
Rate this item
(0 votes)

விழுப்புரம் மாவட்டத்துக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் நடுவில் இருக்கும் வந்தவாசி 1500 ஆண்டுகால பழமையான ஊர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்களில் வந்தவாசிக்கும் தனியிடம் உண்டு.
கடல் மட்டத்திலிருந்து 242 அடி உயரத்தில் உள்ள வந்தவாசி 75% கல்வியறிவு பெற்ற நகராகும். இங்கிருந்தோ அங்கிருந்தோ அல்ல மக்கள் எங்கிருந்தெல்லாமோ வந்துகுடியேறிய ஊர் வந்தவாசி, அதனால்தான் ஊர்ப் பெயரே வந்தவாசி.
தொண்டை மண்டலத்து எழுபது கோட்டங்களில் வந்தவாசி கோட்டமும் ஒன்று. வந்தவாசியைப் போல் வரலாறு பேசும் தெள்ளாறு இந்நகரத்தின் தெற்கில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மன் தெள்ளாறை வென்று -கி.பி.840- இல் “தெள்ளாற்றெறிந்த நந்தி வர்மன்” எனும் பெயர் பெற்றான். ‘குடவோலை முறை’ பற்றிப் பேசப்படும் போது கவனத்துக்கு வரும் உத்திரமேரூர் வந்தவாசிக்கு வட கிழக்கில் உள்ளது. முக்கிய வைணவத் தலமான தென்னாங்கூர் வடக்கில் உள்ளது. அண்மையில் பெயர் பெற்ற மேல் மருத்துவத்தூர் கிழக்கில் உள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் பற்றவைக்கப்பட்ட மதவெறித்தீ ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவேற்றியது. அத்தீ நடுத்தமிழகத்தை எட்டாததால் சமணர்கள் வந்தவாசியிலும் புறத்தேயுள்ள ஊர்களிலும் கணிசமாக வாழ்கின்றனர். தமிழ் சமணர்களான நெயினார்களின் கேந்திரங்கள் திருமலையும் மேல் சித்தாமூரும் வந்தவாசிக்கு அருகில் உள்ளன.
சமனர்களோடு வன்னியர்கள், உடையார்கள், தலித்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என நல்லதோர் சமுதாயம் வந்தவாசியில் காலாதிகாலமாக வாழ்ந்து வருகிறது. விவசாயமும் பாய் பின்னுதலும் முக்கிய தொழில்களாக உள்ளன.
ஆற்காடு நவாபாக சாதத்துல்லாஹ் கான் இருந்த போது -1710- 1732- அவரின் ஆட்சியின் கீழ் வந்தவாசி இருந்தது. அப்போது மொகலாயர்களின் மேலாதிக்கம் இராமேஸ்வரம் முதல் ஐரோப்பா வரை வியாபித்திருந்தது.
ஆற்காட்டு நவாபுக்கான போட்டியில் சந்தா சாகிபும் முகம்மது அலியும் மோதிய போது மூன்றாவது கர்நாடகப் போர் மூண்டது. அந்தப் போர் ஆங்கிலேயர் ஃபெரெஞ்சியர் இடையிலான போராக மாறியது. 1756 முதல் 1763 வரை நடந்த போரில் அவர்கள் வந்தவாசி கோட்டையைக் கைப்பற்ற போட்டி போட்டனர். 1761 ஆங்கிலேய தளபதி அயர்கூட் ஃப்ரெஞ்ச் தளபதி லாலி தலைமையிலான படையை வந்தவாசியில் தோற்கடித்தார். இப்போரின் மூலம் ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்றினர். இது மூன்றாவது கர்நாடகப் போரின் மூலம் கிடைத்தது. 1780 இல் ஹைதர் அலியின் படைகளை வந்தவாசியில் ஆங்கிலேயத் தளபதி பிளிண்ட் தோற்கடித்தார்.
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதை காலப்போக்கில் சரியான பராமரிப்பு இல்லாததால் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்களின் ஆக்ரமிப்பால் கோட்டையின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன. ஆனால் இப்போதும் கோட்டைப் பகுதிகளைத் தோண்டும் போது பழங்கால ஆயுதங்கள், போர் உடைகள், பீரங்கிக் குண்டுகள், குதிரைக் கடிவாளங்கள் கிடைக்கின்றன.
இங்குள்ள ஈஸ்வரன் கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக தரவு உள்ளது. அதைப் போல பெரியபள்ளிவாசல் 1879 - இல் கட்டப்பட்டதாக அறியக் கிடைக்கிறது. ஹாஜி கே,ஏ.வகாப், முன்னாள் எம்.எல்.ஏ. முத்தவல்லியாக இருந்த இப்பள்ளியின் தற்போதைய முத்தவல்லி ஹாஜி கே.ஏ.அப்துல் காதர் சரீப் ஆவார். இவர் முன்னாள் முத்தவல்லியின் புதல்வர்.
நவாப்கள் ஆட்சிக் காலத்தில் இங்கு ஐந்து பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன. இப்போது வந்தவாசியின் ஒரு நவாப் பள்ளியும் செங்கூர் கிராமத்தில் ஒரு நவாப் பள்ளியுமே இயங்குகின்றன. மூன்று பள்ளிவாசல்கள் சிதிலமடைந்து விட்டன.
இப்போது வந்தவாசியில் இயங்கும் நவாப் பள்ளியின் பெயர் மகமூதியா மசூதி. இதன் முத்தவல்லி ஜனாப் சய்யிது உமர்கான், இப்பள்ளிவாசல் கோட்டைப் பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.
நெல்லை கடம்பூரிலிருந்து வந்தவாசிக்கு வந்து குடியேறியவர்கள் கட்டிய பள்ளிவாசல் கடைத் தெருவில் உள்ளது. கடம்பூரார் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறியதாக தெரிகிறது. தம் ஊரில் கைத் தொழிலாய் கொண்டாடிய பாய் முடைதலை வந்தவாசிக்கு கொண்டு வந்தவர்கள் கடம்பூர்க்காரர்கள். இன்றும் கடம்பூரார் வகையறா தம் விலாசத்தில் கடம்பூரைக் குறிப்பிட ‘க’ வை முதலெழுத்தாக எழுதுகின்றனர்.
மக்கா பள்ளி மரைக்காயர்களின் பள்ளிவாசலாகும். ஆற்காடு மாவட்டங்களில் உட் பகுதியிலுள்ள ஊர்களில் மரைக்காயர்கள் பெரும்பாலும் திரளாக வாழ்வதாகத் தெரியவில்லை. வந்தவாசியில்தான் அவர்கள் ஒரு மஹல்லாவாக அமைத்து வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மக்தூம் மரைக்காயர் தெருவில் மக்கா மசூதியை அடுத்தே வாழ்கின்றனர்.
இவர்கள் வணிகம் செய்வதற்காக காயல்பட்டினம், மேலப்பாளையம் போன்ற வாப்பா வீட்டுக்காரர்கள் (ஷாபி மத்ஹப்) அதிகம் வாழும் ஊர்களிலிருந்து வந்து குடியேறி இருக்கலாம். காயல்பட்டினக்காரர்கள், கோட்டக்குப்பம், நாகூர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் குடியேறி வாழ்ந்த தரவுகள் உள்ளன. இடைக்கழி நாட்டு வாப்பா வீட்டினரை செங்கல்பட்டு மாவட்ட ஊர்களில் ‘காயலான்’ எனவே குறிப்பிடுகின்றனர்.
அண்மையில் கட்டப்பட்ட இரு பள்ளிவாசல்களில் ஒன்று மஸ்ஜிதே காயிதே மில்லத். இதன் முத்தவல்லி ஜனாப் கே.ஏ,கமால் இவருக்கு முன் ஹாஜி கே.எஸ்.கே.எம்.ஹசன் முத்தவல்லியாக இருந்தார்.
வந்தவாசியில் மட்டும் பதினோரு பள்ளிவாசல்கள் உள்ளன. இங்கிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள தெள்ளாற்றில் ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. சரித்திரப் புகழ் பெற்ற இவ்வூரிலும் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர்.
ஆற்காடு அரசாங்கம் 84 கிள்ளேக்களாக -ஹில்லே = கோட்டை- பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் வந்தவாசியும் ஒன்று, வந்தவாசி கிள்ளேதார் செஞ்சியின் கீழும் ஆற்காட்டின் கீழும் செயல்பட்டதாக தெரிகிறது. பின்னர் மராட்டியரால் கோட்டை கட்டப்பட்டது என்கிறார் ஆய்வாளர் ‘சோமலெ’. கோட்டையின் நுழைவாயிலில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் அருகில் பழங்கால மன்னர்களாலும் ஆங்கிலேயர்களாலும் பயன்படுத்தப்பட்ட பீரங்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சியாய் இருந்த வந்தவாசி நகராட்சியாகியுள்ளது. பழைய பேருந்து நிலையம் நகரின் நடுவில் பரபரப்போடு இயங்க புதிய பேருந்து நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பேரமைதியோடு காட்சி தருகிறது.
50.000 மக்கள் தொகையுள்ள வந்தவாசி நகரில் 20.000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஊராட்சிக் காலத்தில் பதினான்கு வட்டங்களைக் கொண்டிருந்த வந்தவாசி நகராட்சியாகி இருபத்தியொரு வட்டங்களைக் கொண்டுள்ளது.
நாடு விடுதலை பெற்ற பின் ஊராட்சியாய் இருந்த காலத்தில் ஒரேயொரு முறை திரு.கே.வி.டி. சீனிவாசன் தலைவராகியுள்ளார். அதற்கு முன்பும் பின்பும் முஸ்லிம்களே இதுவரை தலைவராகியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும் ஜில்லா போர்டு உறுப்பினரும் ‘இரும்புத் தலையர்’ என அழைக்கப்பட்டவருமான ஜனாப் கே.எம்.பாட்சா சாகிப் வந்தவாசியின் முதல் தலைவராயிருந்தார்.
‘விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்’ எனும் நூலில் வரலாற்றாய்வாளர் செ.திவான் கெயெம்பி பற்றிக் கூறுவதைக் காணுங்கள்.
வந்தவாசி சன்னதி தெருவைச் சேர்ந்த கே.எம்.பாட்சா சட்டமறுப்பு இயக்கத்திலும் ஆகஸ்டு புரட்சியிலும் பங்கேற்று சிறை சென்றவர். வட ஆற்காடு மும்மணியில் தந்திக் கம்பிகளை அறுத்தெறிந்து நாட்டு விடுதலைக் களத்தில் வீரப்பணியாற்றியவர் பாட்சா சாகிப்.

maab
இவர் மறைந்த பின் இவருக்கு ஊராட்சி மன்ற வளாகத்தில் பெரிய சிலையொன்றை அமைத்து மரியாதையை ஊரார் வெளிக்காட்டினர். சிலையெடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை அறிந்த போது முஸ்லிம்களே முன் நின்று சிலையை அகற்றினர். காலம் கடந்த புரிதல்.
முஸ்லிம்களோடு பல்வேறுவகை மக்களும் மதிக்கத்தக்கவராய் வாழ்ந்த கேஎம்பீ பல்வேறு மக்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து மதநல்லிணக்க அடையாளமாக விளங்கினார்.
எவராவது ஒரு புதிய மனிதரை யாரெனக் கேட்டால் அவர் விளையாட்டாக ‘வந்தவாசி’ என்பார். அந்த வந்தவாசியில் பல அர்த்தங்கள் உள்ளன. தென்னகத்திலிருந்து காசிக்கு நடைப் பயணமாய் சென்ற ஒருவரை யாரெனக் கேட்க அவர் சொன்ன பதிலே வந்தவாசியாகியுள்ளதாக வந்தவாசி மக்கள் கூறுகின்றனர்.
‘வந்தவாசி’ என மொழியப்பட்ட இடமே நாளடைவில் வந்தவாசியாகியுள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து குடியேறியவர்களே வந்தவாசி மக்கள்.
நாகூரில் அவுலியாவிலிருந்து பக்தர்கள் வரை கப்பல்காரர்களிலிருந்து கடலோடிகள் வரை அயல்தேசத்தினர் முதல் உள்நாட்டினர் வரை அனைவரும் வந்தவாசிகளே. அதைப் போல் வந்தவாசியும் நான்கு திசைகளிலிருந்து வந்தவர்களை உள்ளடக்கிய மாநகரே.
வந்து குடியேறியவர்களில் தெக்கத்திக்காரர்கள் அதிகம். அவர்கள் நெல்லை இராமநாதபுரம் மாவட்ட ஊர்களிலிருந்து ஏறத்தாழ ஐந்தாறு தலைமுறைகளுக்கு முன்பாக வந்து குடியேறியதாக கணிக்க முடிகிறது. இன்று அவர்களின் வேர்களைக் கண்டறிய முடியாவிட்டாலும் ஊர்களைக் கண்டறிய முடிகிறது.
எடுத்துக்காட்டாக அவர்களின் பூர்வீக ஊர்களில் நெல்லை கடம்பூரும் இராமநாதபுரம் மாவட்ட ‘கல்லூரி’ எனும் ஊரும் பழைய வரலாற்றை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. காலமும் தூரமும் தொடர்புகளைக் கத்தரித்து விட்டிருக்கிறது. இக்காலத்தில் உள்ளது போல் போக்குவரத்துத் தொடர்பும் தொலைபேசித் தொடர்புகளும் இருந்திருக்குமாயின் உறவுத் தொடர்பும் ஊர்த் தொடர்பும் அறுபடாமல் இருந்திருக்கும்.
இன்றுள்ள கடம்பூரார் வகையறா என்போரும் கல்லூரியார் வகையறா என்போரும் இரு ஊர்களையும் பார்த்ததில்லை, சுற்றுலா கூட சென்றதில்லை. மேற்கண்ட ஊர்க்காரர்களுக்கும் வந்தவாசியில் நம்மூர்க்காரர்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி கூட எட்டவில்லை. காலம் பிரித்து விட்டது.
இப்போது கேஎம்பி கதைக்கு வருவோம். கேஎம்பி கல்லூரி எனும் ஊரிலிருந்து வந்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர். வணிகர்களான குடும்பத்துக்கு வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளூரில் நிலபுலன்கள் இருந்தன. நிலக்கிழாரான கேஎம்பிக்கு பெருந்தலைவர் காமராஜர் கூட நல்லுறவு இருந்தது. மதிக்கத்தக்க மனிதர், மறக்க முடியாத மறத்தமிழர் கேஎம்பி.
மாமனிதர் கேஎம்பிக்குப் பின் அவருடைய புதல்வர் கே.எஸ்.கே. அபூபக்கர் ஊராட்சித் தலைவர் ஆனார்.
காங்கிரஸ் கட்சியோடு உறவு வைத்திருந்தாலும் இங்குள்ள முஸ்லிம்கள் முஸ்லிம் லீக்கினராய் இருந்தனர். இன்றும் முஸ்லிம் லீக் இங்கு வலுவோடுள்ளது.
1962 - இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் திமுகவோடு கூட்டு வைக்க வந்தவாசி தொகுதியில் திரு முத்துலிங்கம் எம்.எல்.ஏ. ஆனார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தசரதன் தோல்வியைத் தழுவினார். இதனால் பெருந்தலைவர் காமராஜருக்கு பெரும் வருத்தம், இந்நாள்வரை வந்தவாசி தனித் தொகுதி, அப்போது போட்டியிட்ட இருவருமே கோட்டைக் காலனியைச் சேர்ந்தவர்கள்.
வந்தவாசியின் இரண்டாவது தலைவரான ஜனாப் கே.எஸ்.கே.அபூபக்கர் செய்த நற்பணிகள் பல, விளை பொருள் விற்பனைக் கூடம், மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, சாலைகள் அமைத்தல் என தொடர்ந்த பொதுப் பணிகளில் முக்கியமானது நகருக்கு குடிநீர் கொண்டு வந்தது.
வந்தவாசிக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள செய்யாற்றிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆறாண்டு காலம் வானம் பொய்த்தாலும் தண்ணீர்ப் பஞ்சம் வரவே வராது.
ஜனாப் கே.எஸ்.கே.அபூபக்கரின் துணைவியார் பெயர் சைத்தூன், இவர் கடம்பூரார் வகையறாவைச் சேர்ந்த மீயன்னா காதர் சரீப் அவர்களின் புதல்வி, பெருந்தலைவர் ஹாஜி கே.ஏ.வகாப் -முன்னாள் எம்.எல்.ஏ.- அவர்களின் மூத்த சகோதரி.
கடம்பூரார் வகையறா பெண் கல்லூரியார் வீட்டில் மணம் முடிக்கப்பட்டிருந்தார். கடம்பூர் கல்லூரி எனப் பெயர் கூறும் குடும்பங்களோடு லால்பேட்டை விழுப்புரத்தார், பட்டணத்தார், திண்டிவனத்தார் எனப் பல்வேறு ஊர்களால் குறிப்பிடப்படும் குடும்பங்கள் வந்தவாசியில் உள்ளன.
எனக்கு வந்தவாசியைப் பற்றி பல்வேறு தகவல்களைத் தந்த ஜனாப் டி.எம்.பீர் முகம்மது திண்டிவனம் வகையறா. இவர் விலாசத்திலுள்ள ‘டி’ திண்டிவனத்தைக் குறிக்கும், முஸ்லிம் லீகின் முக்கியப் பிரமுகரான டிஎம்பி திருவண்ணாமலை மாவட்ட முஸ்லிம் லீகின் கௌரவத் தலைவர், அக்கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்.
வந்தவாசி ஊராட்சியின் மூன்றாவது தலைவரானவர் ஹாஜி கே.ஏ.வகாப். முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளாராகவும் பதவி வகித்த வகாப் சாகிப் அவர்கள் 1972 - இல் ராணிப்பேட்டைத் தொகுதியில் வெற்றி வாகை சூடியவர்.
அவர் பெரிய பள்ளிவாசல் முத்தவல்லியாக இருந்த போது இரு பள்ளிவாசல்களை மேலும் கட்டச் செய்தார். ஒன்று காயிதே மில்லத் நகரிலுள்ள மஸ்ஜிதே நூர் மற்றொன்று சீதக்காதி நகரிலுள்ள மஸ்ஜிதே காயிதே மில்லத், இரு பள்ளிவாசல்களையும் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் திறந்து வைத்தார். மக்கள் மேம்பாட்டுக்காக கே.ஏ.வகாப் சாகிப் கோரைப் புல் உற்பத்தியாளர் மற்றும் பாய் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்தினார். ஷாதி மகால் எனும் திருமணக் கூடம் கே.ஏ.வகாப் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.mannai
வட ஆற்காடு மாவட்டம் என்றால் முக்கிய தொழில்களாக தோல்பதனிடுதலும் பீடி சுற்றலும் நினைவுக்கு வரும். இந்த இரு தொழில்களும் இல்லாத ஊர் வந்தவாசி. இங்கு கைத்தறி நெசவுத் தொழில் இல்லையென்றாலும் அருகிலுள்ள அம்மையப்பட்டில் கைக்கோளர்கள் காலாட்டி வாழ்கின்றனர். அம்மையப்பட்டில் முஸ்லிம்கள் இல்லையென்றாலும் வந்தவாசி முஸ்லிம்களின் பெருநாள் தொழுகைக்கான ‘ஈத்கா’ அங்குள்ளது.
நெல் பயிரிடுவதோடு வந்தவாசியில் கோரைப் பயிரும் வளர்க்கப்படுகிறது. ஆங்காங்கே காடு கரைகளில் வளர்ந்த கோரைப்புல் தேவை அதிகரிக்க வயல்களில் வளர்க்கப்படுகிறது.

மற்றப்பயிர்களைப் போலவே கோரைப் பயிரும் நடப்பட்டது, இடையில் வளர்ந்த களையும் எடுக்கப்பட்டது. அறுக்கப்பட்ட கோரை நெல்கட்டைப் போல பேணப்பட்டது. பின்னர் அவை கீறப்பட்டு காய வைக்கப்பட்டது, என்றாலும் வேளாண்துறை கோரைப் பயிரை காட்டுப் பயிர் என்றே கணக்கு வைத்துள்ளது.
பயிரிடப்படும் கோரைப்பயிரை விவசாயப் பயிரென்று கணக்கிட்டால்தான் பயிரிடுபவர் விவசாயியின் கணக்கில் வருவார். விவசாயிகளுக்கு கிடைக்கும் சில உதவிகளை கோரைப்பயிர் விவசாயியும் பெறுவார். அரசு ஆவன செய்யுமா?
கோரைப் பயிரை வளர்ப்பவர் வன்னியரோ உடையாரோ முஸ்லிமோ வேறு எவராகவும் இருக்கலாம். ஆனால் கோரைப்பாய் முடைபவர் ராவுத்தர்கள். பாய்களை முடையப் பயன்படும் நூலை உற்பத்தி செய்பவர்கள் உருது முஸ்லிம்கள், பாயின் ஓரத்தைக் கட்டுபவர்கள் மரைக்காயர்கள், பாய் உற்பத்தியில் பழைய பணிகள் இவை, பலரின் பணிகளில் ஒரு பாய் உருவாகி, பயணித்து, விற்பனையாகி நம் படுக்கை அறைக்கு வந்தது. இலங்கையின் கிழக்கிலுள்ள முஸ்லிம் ஊர்களில் கோரைப் புல் ‘பன்’ எஅன குறிப்பிடப்படுகிறது. ஐந்து வகை பன்கள் உள்ளன. அவை கற்பன், கிராம்பன், புற்பன், சாப்பைப் பன் இவற்றை பயன்படுத்தி 21 வகை பாய்கள் பின்னப்பட்டிருக்கின்றன. அவற்றில் வடிவமைத்த பூக்களும், பறவைகளும் பாய்களுக்கு பெயராகியுள்ளன.
இன்று ஜப்பானிலிருந்து இறக்கப்பட்ட எந்திரங்களும் ஜப்பான் எந்திரங்களைப் பார்த்துச் செய்த நம் நாட்டு எந்திரங்களும் பாய் உற்பத்தியை எளிதாக்கி விட்டன. முஸ்லிம் பெண்களை முடக்கிய பழைய தறிகள் காணாமல் போய் விட்டன. தென் தமிழகத்தில் பத்தமடையும், வட தமிழகத்தில் வந்தவாசியும் கோரைப் பாய் தேவையை நிறைவு செய்கின்றன.
பாய் வியாபாரத்தோடு பல்வேறு வணிகங்கள் செய்து வரும் வந்தவாசி மக்கள் தம் மக்களை கல்வி - கேள்விகளில் சிறந்தவர்களாக்கியுள்ளனர். கற்றவர்கள் இன்று பல்வேறு அலுவல்களில் சிறப்புற பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
லப்பைக்குடிக்காடு போன்ற முஸ்லிம்களின் ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் அயல்நாடுகளில் வேலை செய்கின்றனர். ஆனால் வந்தவாசியில் அந்த மோகம் கிடையாது. மிகச் சிலரே கடல் கடந்து சென்றுள்ளனர்.
முந்தைய காலங்களில் வந்தவாசி மக்கள் கொள்வினை - கொடுப்பினைகளை திண்டிவனம், திருக்கழுக்குன்றம், இடைக்கழி நாட்டு ஊர்களோடு வைத்துக் கொண்டிருந்தனர். இன்று அந்த எல்லையை விரிவாக்கியுள்ளனர். தொண்டி - நம்புதாழை தொடர்புகள் கூட இன்று இங்கு உள்ளது.
வந்தவாசியைப் பற்றி படித்தவர்கள் அனைவரும் அறிவர். அது வரலாற்றுப் புகழ்மிக்க ஊர் என்பதோடு வரலாற்றுப் புகழ் மிக்க ஊர்களுக்கு நடுவில் இருக்கும் ஊராகும். தெற்கில் தெள்ளாறு செஞ்சி, மீனம்பூர் என்றால் வடக்கில் ஆறணி, ஆற்காடு, வேலூர் என நீண்ட பட்டியல் கண்முன் வரும்.
ஆறணி அரிசிக்கும் பட்டுக்கும் புகழ்பெற்ற ஊர் மட்டுமல்ல கம்மந்தான் கான் சாகிபு எனும் மருதநாயகம் சுபேதாராக இருந்த ஊராகும், ஆற்காடு பிரியாணியை மட்டும் நினைவு படுத்தும், ஊர் மட்டுமல்ல, நவாப்களின் கோட்டைக் கொத்தளங்களை கண் முன் கொண்டு வரும் ஊர். கோட்டைக்குள் அடங்கி இருக்கும் திமிரி எனும் ஊரில் தான் ஆற்காடு நவாப்களில் ஒருவரான சந்தா சாகிப் இறந்து போனார். வேலூரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
பயணம் செல்வதும் ஊர்களைப் பார்ப்பதும் ஒரு சிறந்த படிப்பு. இதனாலேயே மாணவர்கள் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதைப் பெரியவர்களும் பின்பற்றலாம்.
பல்வேறு பணிகளைத் திட்டமிட்டுச் செய்யும் நம் இயக்கங்கள் சுற்றுலாப் பயணங்களையும் மேற்கொள்ளலாம். அதற்கு நீண்ட நாட்கள் தேவையில்லை. ஒருநாள் போதும்.
சென்னையிலுள்ளோர் ஒருநாள் பயணத்தில் செஞ்சி, மீனம்பூர், வந்தவாசி, காஞ்சிபுரம் என சென்று வரலாம். இதன் மூலம் வரலாற்றறிவையும் பெறலாம். ஊர்களைத் தெரிந்து கொள்வதோடு மக்களையும் படிகலாம்.
பறவைகள் மட்டும் வலசை போவதில்லை. கடலாமைகள் கூட கண்டம் விட்டு கண்டம் வலசை போகின்றன.
ஊர்வலம் தொடரும்… தொடர்புக்கு : 971 0266 971

Read 916 times