வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 11:42

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்!

Written by 
Rate this item
(0 votes)

நபிமொழிப் பாடம் - 8
அ. முஹம்மது கான் பாகவி

மாணவச் செல்வங்களே! நபிமொழித் தரவியல்குறித்து அறிந்தோம். இனி, நபிமொழிப் பாடங்கள்குறித்தும் அவற்றைக் கற்க வேண்டிய நுணுக்கங்கள்குறித்தும் அறிவோம்.
எதையும் தேர்வுக்காகவோ மதிப்பெண்களுக்காகவோ மட்டும் கற்காதீர்கள். அந்தந்தத் தத்துவங்களை நுகர்ந்து, சுவைத்து, மனம் லயித்து, மூளையில் செலுத்தி கற்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
அப்போது எதுவும் சுமையாக இருக்காது; சுகமாக இருக்கும். எரிச்சல் வராது; துணிச்சல் தரும். பாரமாகத் தெரியாது; கிடைப்பதற்கரிய வரமாகத் தெரியும்.
அதிலும் இறைவாக்கும் இறைத்தூதர் மொழியும் தேன்சுவை மிக்கது; திகட்டாதது. அள்ளஅள்ளக் குறையாதது; தீர்ந்துபோகாதது. அதை ஆய்வதில்தான் ஆயுளின் சூட்சுமமே உள்ளது. அதைப் படிப்பதில்தான் பிறவிப் பலனே உள்ளது.
அந்த நபிமொழிப் புத்தகம் உங்கள் கரங்களில். நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். தாள்களைப் புரட்டும்போதே லாவகமாகப் புரட்டுங்கள். அரபி மூலத்தை வாசிக்கும்போது இலக்கணப் பிழையின்றி வாசியுங்கள். மூலத்தின் பொருளைத் தடாலடியாகத் தீர்மானிக்காதீர்கள். அரபிமொழி தெரிவதால் மட்டும் ஹதீஸின் பொருளும் தெரிந்துவிடும் என எண்ணாதீர்கள். அது பிழையான எண்ணம்; பழிப்பான எண்ணமும்கூட.
காரணம் உண்டு. ஒரு சொல்லுக்கு அகராதியில் ஒரு பொருள் இருக்கும்; மக்கள் வழக்கில் இன்னொரு பொருள் இருக்கும்; நபிகளார் மூன்றாவதொரு பொருளில்கூட அச்சொல்லை ஆண்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டாக: ‘அல்ஹர்ஜ்’ (الهَرْج) எனும் சொல். இதற்கு அகராதியில் காணப்படும் பொருள்கள்: அதிகம், பலவீனமானது, விசாலமானது, வலுவானது, (கதவை) திறந்துபோடுவது, (குதிரை) விரைந்து ஓடுவது, குழப்பம், கைகலப்பு முதலானவை.
பொதுமக்கள் இச்சொல்லை, நகைச்சுவை, கேலி எனும் பொருளில் ஆள்வார்களாம்! ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இறுதி நாளின் அடையாளங்களைப் பட்டியலிட்டபோது, “(பயனுள்ள) கல்வி கைப்பற்றப்படும்; அறியாமையும் குழப்பங்களும் வெளிப்படும்; ‘ஹர்ஜ்’ அதிகமாகிவிடும்” என்று கூறினார்கள்.

ilam o“அல்லாஹ்வின் தூதரே! ‘ஹர்ஜ்’ என்றால் என்ன?” என்று தோழர்கள் வினவ, கழுத்தை அறுப்பதைப் போன்று கையால் சைகை செய்து அசைத்துக்காட்டினார்களாம்! அதாவது “கொலை பெருகிவிடும்” என்று சுட்டிக்காட்டினார்கள். (புகாரீ-85)
அறிஞர்கள் சிலர், அபிசீனிய மொழியில் ‘ஹர்ஜ்’ என்பதற்கு ‘கொலை’ என்ற பொருள் உண்டு என்பர். ஆக, அரபி மொழியில் பிறந்து வளர்ந்தவர்களே இச்சொல்லுக்குப் பொருள் பிடிபடாமல், நபியவர்களிடமே வினா எழுப்பித் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், நாம் எம்மாத்திரம்?
கருவைக் கற்க!
ஹதீஸின் தனிச் சொற்களுக்குப் பொருள் அறிந்தபின், அதன் கருப்பொருள் என்ன என்பதை அறிவதே முதன்மையான இலக்காகும்; முக்கியப் பணியாகும். அனஸ் (ரலி) அறிவிக்கும் அழகானதொரு ஹதீஸைப் பாருங்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ எனப்படும் ஒட்டகம் ஒன்று இருந்தது. பந்தயத்தில் எவரும் முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக அது இருந்தது. இந்நிலையில், கிராமவாசி ஒருவர் பயணிப்பதற்கும் சுமை ஏற்றுவதற்கும் ஏற்ற (ஆறு வயது) ஒட்டகம்மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திவிட்டது.
இது, முஸ்லிம்களுக்கு மனவேதனை அளித்தது. இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயரத்திற்குப்போன எந்த ஒன்றையும் (ஒருநாள்) கீழே இறக்குவதுதான் அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். (புகாரீ-2872)
நபிகளாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது; அதன் பெயர் அள்பா; ஒட்டகப் பந்தயத்தில் அதுதான் வெல்லும்; ஒரு கிராமவாசியின் ஒட்டகத்திடம் ஒருநாள் அது தோற்றுப்போனது… என்பதெல்லாம் துணைத் தகவல்கள். மையக் கருத்து என்னவென்றால், “உச்சத்தைத் தொட்டுவிட்ட ஒன்று, அல்லது ஒருவர், அடுத்த கட்டமாக கீழே இறங்குவார்; இது, இறை நியதி” என்பதுதான்.
இதற்குமேல் உயர ஸ்பேஸ் இல்லை என்பதாலோ, இதற்குமேலும் அவர் உயரப்போனால் பூமி தாங்காது என்பதாலோ சருகி விழுவதுதான் நியாயம். எனவே, மேலிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் கீழிறங்களாம்! உஷார்! இறங்கத் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவம் இது!

ilam vpநுணுக்கத்தை நுகர்க!
ஹதீஸ் நீண்டதாக இருக்கும். இறுதியில் ஓரிரு வார்த்தை இடம்பெறும். அதில் நுணுக்கமான ஒரு கருத்து இழையோடும். அது கோடி பெறும். அந்த நுணுக்கத்தை நுகர்வதுதான் ஹதீஸில் கெட்டிக்காரத்தனம்.
அற்புதமானதொரு ஹதீஸ்! நபி (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா அல்உசைதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றி -அவற்றை நேரில் பார்ப்பதுபோல்- நினைவூட்டுவார்கள். ஆனால், மனைவி மக்களிடமும் தொழிலுக்கும் திரும்பிவிட்டால் அதிகமாக மறந்துவிடுகிறோம். இதனால் நான் நயவஞ்சனாகிவிட்டேனோ -என்று வருந்தி, நபிகளாரிடமே கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து எழுந்து செல்லும்போதுள்ள அதே (மன)நிலையில் எப்போதும் நீங்கள் இருந்தால், உங்கள் அமர்வுகளிலும் பாதைகளிலும் படுக்கைகளிலும் (வந்து) வானவர்கள் உங்களிடம் கை கொடுப்பார்கள். ஆனால், ஹன்ழலா! (இப்படிச்) சிலநேரம். (அப்படிச்) சிலநேரம்! (முஸ்லிம்-5305)
அதாவது மறுமை நினைவு கொஞ்ச நேரம்; வாழ்க்கை பற்றிய நினைவு கொஞ்ச நேரம். இதுதான் இயல்பானது. எனவே, நீர் கவலைப்பட வேண்டாம்!
இங்கு ஒரு பெரிய நபித்தோழர், தம்மை ‘நயவஞ்சகன்’ என அறற்றியது, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் இத்தகவலைப் பரிமாறிக்கொண்டது, இருவரும் வந்து நபியவர்களிடம் எடுத்துச்சொன்னது… எல்லாம் கிளைச் செய்திகள். இறுதியாகச் சொன்ன இரு வார்த்தைகள்தான் முத்தாய்ப்பு.
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் உலகம், உலகம் என்று இல்வாழ்விலும் இம்மை வாழ்விலும் மூழ்கிவிடக் கூடாது. அதற்காக, மறுமை, மறுமை என்று சொல்லி, இம்மையை அடியோடு புறக்கணிப்பதும் கூடாது. இரண்டுக்கும் இடையிலான பேலன்ஸைப் பேணி வாழ வேண்டும். இந்த நுணுக்கமான தத்துவம்தான் ஹதீஸின் ஹைலைட்.
நபிமொழியில் பல்கலை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குப் பல கலைகளையும் கற்பித்தார்கள். இயல்பாக அப்பாடங்கள் அமைந்தன. இதற்கென இடம், காலம், நேரம்… என்றெல்லாம் அவர்கள் வகுத்துக்கொண்டிருக்கவில்லலை.
போகிறபோக்கில், நண்பர்களுடன் அமர்ந்திருக்கையில், பள்ளிவாசலில், வீட்டில், பயணத்தில், மேட்டில், காட்டில், வெயிலில், மழையில்… என எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் அண்ணலாரின் வகுப்பு நடந்தது. ஒரே மாணவர் இருந்தாலும் (அபூஹுரைரா (ரலி) போல) போதித்தார்கள்.
இப்படி இறையியல், வழிபாடு, தனிமனித ஒழுக்கம், சமூக உறவு, குடும்ப உறவு, வணிகம், விவசாயம், மருத்துவம், தத்துவம், தொழில்… எனப் பிறப்பு முதல் இறப்புவரையிலான -ஏன் இறப்பிக்குப் பிந்திய- நிலைகளில்கூட மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொன்னார்கள்.
இதனாலேயே நபிமொழித் தொகுப்புகள் பல்வேறு தலைப்புகளில் பல அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஒவ்வோர் அத்தியாயங்களும் பல்வேறு கிளைத் தலைப்புகளில் பல பாடங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் சில அல்லது பல ஹதீஸ்கள் வரிசை எண்ணோடு இடம்பெற்றிருக்கும்.
இந்த வகையில் பெரும்பாலான நபிமொழிக் கிரந்தங்களில் ஈமான், தூய்மை, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, வணிகம், வேளாண்மை, வழக்குகள், போர், திருக்குர்ஆன் விளக்கம், திருமணம், தலாக், குடும்பச் செலவுகள், உணவு, வேட்டை, பானம், நோய், மருத்துவம், ஆடை அணிகலன், நல்லொழுக்கம், துஆ (பிரார்த்தனை), தத்துவம், நேர்த்திக் கடன், பரிகாரம், பாகப் பிரிவினை, குற்றவியல் தண்டனைகள், குழப்பங்கள்… என்ற வரிசையில் அத்தியாயங்கள் அமைந்திருக்கும்.
ஆனால், பாடத்திட்டத்தில், எந்தவொரு நபிமொழித் தொகுப்பையும் முழுமையாகக் கற்பிப்பதற்கான ஏற்பாடு பெரும்பாலான கல்லூரிகளில் இல்லை. அல்லது அத்தியாயங்களின் தலைப்புகளைப் பிரித்து, சில தலைப்புகள் புகாரியில், சில தலைப்புகள் முஸ்லிமில், இன்னும் சில தலைப்புகள் இப்னுமாஜாவில் என அறுபெரும் நூல்களைத் தலைப்புவாரியாக வகுத்துக்கொண்டு கற்பிக்கலாம்! அதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதன்படி செய்தால், நபிமொழியில் உள்ள எல்லா இயல்களையும் மாணவர்கள் தொட்டதாகவும் இருக்கும்; அறுபெரும் ஹதீஸ் நூல்களின் தனித்தனியான போக்கும் நடையும் மாணவர்களுக்குப் பிடிபட்டதாகவும் இருக்கும்.
‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ எனும் ஒரு பெரிய நபிமொழி தொகுப்பு இன்றைய பாடத்திட்டத்தில் நடைமுறையில் உள்ளது. அதில் முக்கியமான எல்லா நூல்களிலும் உள்ள நபிமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆனால், ஒவ்வொரு நூலின் தனிப் போக்கையோ ஒவ்வொருவரும் அமைத்துள்ள பாடத் தலைப்புகள்மூலம் அவரவர்கள் நிலையாட்ட விரும்புகிற சட்டமியற்றும் வழிமுறையையோ மாணவர்கள் மிஷ்காத் வாயிலாக அறிந்துகொள்வது கடினம்.
அதுமட்டுமன்றி, நபிமொழிகளின் உண்மைத் தன்மை, நபிமொழி அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை பற்றியெல்லாம் அதில் பிரஸ்தாபிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை.
இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள், “நான் ஆதாரபூவர்மான (ஸஹீஹ்) ஹதீஸ்களில் ஒரு லட்சம் ஹதீஸ்களை மனனம் செய்தேன்; ஆதாரபூர்வமற்ற (ஸஹீஹ் அல்லாத) இரண்டு லட்சம் நபிமொழிகளையும் மனனம் செய்தேன்” என்று கூறுவார்கள்.
ஆனால், தமது நூலில் 7563 ஹதீஸ்களை மட்டுமே இடம்பெறச் செய்துள்ளார்கள். அதிலும் திரும்பத் திரும்ப வரும் எண்ணிக்கையை நீக்கிவிட்டால், நான்காயிரம் ஹதீஸ்கள் மட்டுமே மிஞ்சும்.
ஒரே ஹதீஸை, பல்வேறு தலைப்புகளின்கீழ் இடம்பெறச்செய்து, வெவ்வேறு சட்டங்களை அதிலிருந்து கண்டறிதவற்காகவே ‘திரும்பக் கூறல்’ ஸஹீஹுல் புகாரியில் நடக்கிறது. இதையெல்லாம் புகாரியை நேரடியாகக் கற்றால் மட்டுமே இனங்காண முடியும்.
அறிவியல் நோக்கில் ஹதீஸ்
முன்பே குறிப்பிட்டதைப் போன்று, நபிமொழிகளில் ஏராளமான இயல்கள் மறைந்துள்ளன. இவற்றையெல்லாம் இலைமறை காயாகவேனும் மாணவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது காலத்தின் கட்டாயமல்லவா?
பல் துலக்கல் (மிஸ்வாக்), அங்கத் தூய்மை (உளூ), தொழுகையின் நிலைகள், மாதவிடாய், மகப்பேறு, உணவு முறைகள், தடை செய்யப்பட்ட உணவுகள், சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடாமை, புவி வெப்பம், இயற்கைச் சீற்றங்கள், நோய்நொடிகள், அவற்றுக்கான மருந்துகள், நோன்பில் உள்ள ஆரோக்கியம், ‘கத்னா’வில் உள்ள சுகாதாரம், சிறுநீர் கழித்தபின் சுத்தம்… என ஏராளமான நபிவழிகளில் அறிவியல் உண்டு.
மாணவக் கண்மணிகளே! எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகும் பழக்கத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வசனமோ, நபிமொழியோ, ஷரீஅத் சட்டமோ எதுவானாலும் ஏன், எதற்கு, எப்படி… என அலசி ஆராய்கின்ற பார்வை உங்களுக்கு வந்தாக வேண்டும்! அப்போதுதான், தலைசிறந்த, விஷய ஞானமுள்ள நல்லறிஞராக நீங்கள் மிளிர முடியும்!

(சந்திப்போம்)

Read 409 times