புதன்கிழமை, 21 பிப்ரவரி 2018 12:38

மண்ணின் வரலாறு-10

Written by 
Rate this item
(0 votes)

கோட்டக்குப்பம் என அழைக்கப்படும் கோட்டைக்குப்பம் பாண்டிச்சேரி மாநகரோடு ஓர் நகராய் வடக்கில் “பிரெஞ்சோடு இங்கிலிஸாய்’ இணைந்து இருக்கும் கோ நகரம்.
புதுவைப் பகுதியில் ஊர்கள் தனித்தனியாக இல்லாமல் தமிழக ஊர்களோடு கலந்து கிடக்கின்றன. எனவே இப்பகுதி மக்கள் புதுவை தமிழக ஊர்களை அடையாளப்படுத்த பிரெஞ்சு இங்கிலீஸ் என குறிப்பிடுகின்றனர்.
மதராஸ்பட்டினத்திற்கு அன்று சென்ற பாதை இன்று பழைய பட்டணப் பாதை என அழைக்கப்படுகிறது. இன்றைய புதிய பட்டணப்பாதை கிழக்குக் கடற்கரைச் சாலையாக மாறிவிட்டது.
இன்றைய கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபக்கங்களிலும் பழைய மரக்கலை நுணுக்கப் பொருட்கள் விற்கும் கடைகள் நிறைந்து கிடக்கின்றன. இவை போன்ற கடைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும் ஒரே ஊர் இதுவே.
உரூபா எழுபத்தைந்தாயிரம் மதிப்புள்ள ஒற்றைக் கதவு. பிரமாண்டமாக அது பெரம்பலூர் பகுதியில் வாங்கப்பட்டிருந்தது. வாசக்கால்களுடன் வாங்கப்பட்டிருந்த அதன் திறவு கோல் ஒரு பெரிய கையின் அளவில் மரத்தாலேயே வடிக்கப்பட்டிருந்தது.’ இதை நான் “பஹ்மிதா” கலைப்பொருள் மரக்கடையில் கண்டேன்.
தனி ஊராட்சியாக இருந்த கோட்டக்குப்பம் இன்று பெரிய கோட்டக்குப்பம், சின்னக் கோட்டக்குப்பம், பெரிய முதிலியார் சாவடி, சின்ன முதலியார் சாவடி, குயிலாம்பாளையம், கோட்டைமேடு ஆகிய ஊர்களையும் உள்வாங்கி பேரூராட்சியாக விளங்குகிறது.
கோட்டக்குப்பத்தின் மேற்கில்தான் சர்வதேச நகரான “ஆரோவில்’ உள்ளது. கிழக்கில் கடற்கரையும் அதைத் தொடர்ந்து தென்னந் தோப்புகளும் நிறைந்த கோட்டக்குப்பம் மிக முக்கியமான மீனவக்கிராமம். ஐந்து மீனவக் குப்பங்களை ஊள்ளடக்கிய பெரிய கிராமம்.
மீனவர்கள், வன்னியர்கள், முஸ்லிம்கள், தலித்கள் என பல்வேறு வகை மக்களும் வாழும் கோட்டக்குப்பம் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியிலிருந்து பாண்டிச்சேரி விடுதலை பெற கேந்திரமாக விளங்கியுள்ளது.
ஐரோப்பியர்கள் வரும் முன்னர் ஆதிகாலத்தில் புதுவை, கோட்டக்குப்பம், கூனிமேடு, மரக்காணம் ஆகிய பகுதிகள் “எயில்நாடு’ என விளங்கியதாக தகவல்கள் உள்ளன.
எயில் என்றால் கோட்டை என்று பொருள், பெருங்கோட்டையோடு பெயர் பெற்றிருந்த நாடு எயில்நாடு. எயில் நாட்டின் கோட்டை பெருஞ்சுவர்களோடு புதுவைக்கும் கோட்டக்குப்பத்திற்கும் கிழக்கே இருந்ததால் அது கடற்கோளால் இன்று கடலுக்குள் மூழ்கிக் கிடப்பதாகவும் அதன் சுவர்கள் கடலுக்குள் தட்டுப்படுவதாகவும் கடலாராய்ச்சியாளர் ஒரிஸா பாலு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
கோட்டையென்றால் அரசாள்வோரின் இருப்பிடம், குப்பம் என்றால் கோட்டையைச் சூழ்ந்திருக்கும் மக்களின் இருப்பிடம். பழவேற்காட்டின் கடலோரப்பகுதி இன்றும் கோட்டையோடு குப்பமுள்ள பிரதேசம், கோட்டக்குப்பம் என்றே அழைக்கப்படுகிறது.
கோட்டக்குப்பத்தின் ஒரு பகுதியாக கோட்டைமேடும் உள்ளது. அங்கு நவாப்காலத்தில் ஒரு கோட்டையிருந்தது, அது சிதிலமாகி மண்மேடாக மாறியிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் கோட்டக்குப்பம் கோட்டையோடு சம்பந்தப்பட்ட பேரூர்தான்.
ஒரு கடலோர முஸ்லிம் கிராமம் சில இலக்கணங்களோடு அமைந்திருக்கும். கடலோரத்தில் மீனவர் தெரு அடுத்து கிழக்கத் தெரு அதையடுத்து வடக்குத் தெரு என அமையும். பெரியதெரு அதற்கும் மேலாக மேலத்தெரு, அதன் தொடர்ச்சியாக சில தெருக்கள்; சில குளங்கள்.
மேற்கில் பரந்து கிடக்கும் வயல்வெளிகள், அதற்கும் மேலாக கண்மாய். இதுதான் கிழக்குக் கடலோர முஸ்லிம் கிராமங்களின் அமைப்பு விதி.
கடலோரம் மீனவர்கள், அவர்களை அடுத்து கடல்தொழில் செய்யும் முஸ்லிம்கள், அவர்களை விட்டும் தள்ளி பலதொழில் செய்யும் முஸ்லிம் குடியானவர்கள். அடுத்து பல்வேறு வகை மக்கள், பெரும்பாலும் விவசாயிகள் அவர்களை அடுத்து கண்மாய்க்கரையோரம் விவசாயக் கூலிகள் என ஊர் அமைந்திருக்கும்.
கோட்டக்குப்பத்தில் சிறிது மாற்றம், குடியிருப்புகளிடையே தென்னந் தோட்டங்கள். கிழக்குக் கரை சாலையெங்கும் தென்னந் தோட்டங்கள். இவற்றைக் கடந்தே இங்கு வயல்வெளிகள் உள்ளன.
முஸ்லிம்கள் கடற்கரையை அடுத்த தெருக்களில்தான் குடியேறி வாழ்வார்கள். அங்குதான் பள்ளிவாசலை முதன் முதலில் கட்டிக்கொள்வார்கள். இந்த வரை விலக்கணப்படி பார்த்தால் கோட்டக்குப்பம் கடலோரமுள்ள மஸ்ஜிதே மாமூர்தான் முதல் பள்ளிவாசலாகும். இப்பள்ளியைச் சூழவே முஸ்லிம் குடியிருப்புகள் உருவாகியுள்ளன.
கோட்டக்குப்பத்தில் மக்கள் வந்து வாழத் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்காடு நவாப் இங்கு வருகை தந்துள்ளார். செஞ்சியை மராட்டியரிடமிருந்து வென்றெடுத்த முகலாயர்களின் தளபதி ஜுல்பிகார் அலி கானே இந்த நவாப் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வருகை தந்தபோது உடன் ஆற்காடு அரண்மனையில் விருந்தினராய் வந்திருந்த மார்க்க அறிஞர் சையத் மகபூஷா அவர்களையும் அழைத்து வந்து தங்கவைத்திருந்தார். நவாபின் விருந்தினர் வந்த இடத்தில் இறைவனடி சேர அங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட சையத் மகபூஷா அவர்களின் பெயரால் நவாப் இனாமும் விட்டுச் சென்றுள்ளார். அதன் பின் நீண்ட காலத்திற்குப் பின்பே 1867இல் நவாப் ஜாமிஆ மஸ்ஜிதைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
மீனவக் கிராமங்களில் பெரும்பாலும் மீனவர்களும் முஸ்லிம்களுமே குடியிருக்கின்றனர் கிழக்கில் மீன்பிடித்தலும் வியாபாரமும் வளர்ந்த சமயத்தில் மேற்கில் தோட்டந்துரவுகளும் விவசாயமும் உயர்ந்துள்ளன.
மரக்கலராயர்களாய் இருந்த முஸ்லிம்களோடு பல்வேறு ஊர்களிலுள்ள முஸ்லிம்களும் வணிக நோக்கோடு கோட்டக்குப்பத்திற்கு வந்து குடியேறியுள்ளனர்.
கோட்டக்குப்பத்து மூத்த குடிகளில் ஒன்றான காஜி ஜெய்னுலாபீதீன் குடும்பம் தஞ்சை மாவட்டத்து திருப்பணந்துருத்தியிலிருந்து வந்து குடியேறி 250 ஆண்டுகளுக்கும் மேலாகிறது என்கின்றனர். மானுடக் கணக்குப்படி பார்த்தால் ஏழு தலைமுறையைத் தாண்டுகிறது.
காஜியார் குடும்பத்தினரைப் போல் மேலும் சிலர் தஞ்சை மாவட்டத்திலிருந்து குடியேறியுள்ளனர். காலங்கள் கடந்தும் அவர்கள் இன்றும் தஞ்சாவூரான் வீட்டினர் என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு வேர்களைத் தோண்டினால் பல சுவையான சங்கதிகள் கிடைக்கும்.
நாகப்பட்டினம், ஆற்காடு பகுதிகளிலிருந்தும் பலர் வந்து குடியேறியுள்ளனர்.
ஆற்காட்டு நவாப் காலத்தில் ஆட்சியதிகார அலுவல்களுக்காக உருது பேசும் முஸ்லிம்கள் இங்க குடியேறியுள்ளனர். அவர்கள் நிலமானியமும் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கிய செய்தி.
கடலோரக் கிராமங்களிலுள்ள முஸ்லிம்கள் தமிழ் பேசுபவர்களாகவும் ஷாபிகளாகவும் இருப்பர். இங்கு தமிழ் பேசுபவர்கள் பெரும்பாலும் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்கள், ஷாபிகளும் இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் இங்கு ஊரின் மேற்குப் பகுதியில் காயல்பட்டினக்காரர்கள் வாழ்ந்துள்ளனர். இன்றைய பழையபட்டணப் பாதை அன்றைய காயலான் தெரு என அழைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு பதினொரு தொழுகைப் பள்ளிகள் இருந்தாலும் பழைய பள்ளிகள் இரண்டு : ஒன்று நகரின் நடுவில் இருக்கும் ஜாமிஆ ஜும்மா பள்ளி, இரண்டு முத்தியால் பேட்டை தொடக்கத்திலுள்ள புஸ்தானி பள்ளி. ஆற்காடு நவாப் 1867 இல் கட்டிய ஜாமிஆ ஜும்மா பள்ளிவாசல் 1971இல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் பலவிருந்தாலும் ஒரே ஜமாஅத்தாக செயல்படுவது இவ்வூரின் சிறப்பு.
இங்குள்ள ஒரே தர்கா மகபூப்ஷா தர்கா. ஆற்காட்டு நவாப் காலத்தில் இங்குவந்து அழைப்புப் பணியாற்றிய மூன்று சகோதரர்களில் மூத்தவர் மகபூப்ஷா. அடுத்தவர் பாகர்ஷா, இவருடைய கபர்ஸ்தான் விழுப்புரத்தில் உள்ளது. மூன்றாமவர் அச்சிறுபாக்கத்தில் அடக்கமாகியுள்ளார்.
இங்குள்ள ரப்பானியா மதரஸா பெரும் புகழ்பெற்றது. பெண்களுக்காக இயங்கி வரும் மதரஸாவும் மிகச் சிறப்புக்குரியது.
தமிழகத்தின் எந்த முஸ்லிம் பேரூரும் பெறாத ஒரு மாபெரும் சிறப்புப் பெற்ற ஊர் கோட்டக்குப்பம். அதற்குக் காரணம் நகரின் நடுவிலுள்ள “அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம்‘ நூலகம், அதன் அகவை 90.
1926 இல் அஞ்சுமன் நூலகம் தொடங்கப்பட்டது. பல்வேறுவகை இதழ்களையும் நூல்களையும் வாசிக்கும் இடமாக மட்டும் இல்லாமல் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மார்க்க விழிப்புணர்வு, சுகாதார மேம்பாடு, பொருளாதார உதவி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான கேந்திரமாகவும் விளங்கி வருகிறது அஞ்சுமன். அண்மையில் 90ஆம் ஆண்டுவிழாவை பெருவிழாவாகக் கொண்டாடிய அஞ்சுமன் நூலகம் ‘நூற்கண்டு’ எனும் அருமையான மலரை வெளியிட்டு கோட்டக்குப்ப வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளது.
இதன் நிறுவனர் காஜி அப்துல் ஹமீது ஹஃபீஸ் பாகவி. இவர் அண்மையில் மறைந்த அஞ்சுமன் செயலாளர் காஜி ஜைனுல் ஆபிதீனின் தந்தையார். தற்போதைய செயலாளர் சகோதரர் அ. லியாகத் அலீ, தலைவர் டாக்டர். ஹாஜி எல். எம் ஷரீஃப், இந்நூலகத்திற்கு தமிழகத்தின் பல்வேறுவகை படிப்பாளிகளோடு அயல்நாட்டுப் படிப்பாளிகளும் வருகை புரிந்திருக்கின்றனர்.
கடல் தாலாட்ட தென்னைகள் நடனமாட பயிர்களும் தலையாட்டிக் கொண்டிருந்த கோட்டக்குப்பத்தில் முக்கிய தொழிலாக நெசவும் சிறப்பான வணிகமாக துணிகள் ஏற்றுமதியும் வருவாயைப் பெருக்கியிருக்கின்றன.
நெசவுத் தொழிலைப் பற்றி கோட்டை கலீம் கூறுவதைக் கேளுங்கள் : எம் முன்னோர் நெசவாளிகளின் வாசிப்பிடம் மட்டுமின்றி அவர் வசிப்பிடமே நூலகம்தான்.
நெசவோடு அவர்கள் சுருட்டுத் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். காலம் சுழல நெசவும் சுருட்டுத் தயாரிப்பும் இல்லாமல் போக விவசாயம் குறைய தோட்டந் துரவுகள் முகத்தை மாற்றிக்கொள்ள கண்ணுக்குத் தெரியாமல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பர்மா சென்று திரும்பியோர் கிழக்காசிய நாடுகளில் பிழைக்கக் சென்றனர். மேற்கில் உதித்த இஸ்லாமிய சூரியக்கதிரில் ஒளிபெற்றோர் இரண்டாவதாக மேற்கில் உதித்த வேலைவாய்ப்புப் பேரொளியில் இருட்டை விரட்டினர். அப்பேரொளியே தொடர்ந்து இருளைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.
உலகக்கல்வி, மார்க்கக் கல்வி என கல்வியைக் கூறு போட்டதால் பின்னுக்குத் தள்ளப்பட்ட சமுதாயம் இன்று ரெட்டைக் கல்விகளைப் பெற்று கணினிகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் பெற்ற வேலைவாய்ப்புகளை இன்று பலரும் பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
மார்க்க அறிஞர்களின் கோட்டையாகவே கோட்டக்குப்பம் விளங்கி வருகிறது. பாகவி, ஜமாலி, மிஸ்பாஹி, உமரி பட்டங்கள் பெற்றவர்கள் மட்டுமல்ல நத்வி, தேவ்பந்தி, மதனி பட்டங்கள் பெற்றவர்களும் இங்கு ஆன்மபலம் சேர்த்துள்ளார்கள்.
மௌலவி அப்துல் ஸமத் நத்வி மலேசியாவில் பணியாற்றிய போது மலேசிய ரேடியோவிலும் உரையாற்றியுள்ளார். நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளார். அக்கேள்வி பதில்கள் ‘நீங்கள் கேட்டவை’ என நூலாக வெளிவந்துள்ளது. கோட்டக்குப்ப அல்ஜாமிஅத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரி இவரால் நிறுவப்பட்டதே, நூல்கள், உரைகள் மூலம் சிறப்பாக சன்மார்க்கப்பணி செய்த நத்வியாரை கோட்டக்குப்ப வரலாறு மறக்காது.
மார்க்க அறிஞர்களின் கோட்டை எனப் பெயர் பெற்ற ஊர் கோட்டக்குப்பம். 1905 1906 களில் தேவ்பந்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் இவ்வூர் ஆலிம்கள். மௌலானா அப்துல் ரஹீம், மௌலான அப்துல் கரீம் ஆகிய இருவரும் அக்காலகட்ட தேவ்பந்த் மாணவர்கள்.
காஜி லெப்பை குடும்பத்தைக் சேர்ந்தவர்களான காஜி முஹம்மது யாகூப் ஹஜ்ரத் காஜி மௌலவி அப்துல் ரஹ்மான் பாகவி, அஞ்சுமன் நிறுவனர் மௌலானா அப்துல ஹமீது ஹபீஸ் பாக்கவி என நீண்ட பட்டியலைக் கொண்ட உலமாக்கள் பிறந்த ஊர் இது. கோட்டக்குப்பத்தில் பிறந்து உலமாக்களாக உயர்ந்தோர், ஊரிலேயே நீண்டகாலம் மார்க்கப் பணி செய்துள்ளனர்.
புதுச்சேரியின் வட எல்லையாக அமைந்ததால் அது அடைந்த சிரமங்களும் சிக்கல்களும் அதிகம். அந்தச் சங்கடங்களைத் தாண்டி பண்பாட்டைக் காப்பாற்றி வாழும் ஊர் கோட்டக்குப்பம். வெளியூர்க்காரர்களுக்கு இரு ஊர்களின் எல்லை எது எனத் தெரியாது. இன்று அவை இரண்டும் பிணைந்து கிடக்கிறது. அந்நியர் ஆட்சியில் கோட்டையிலிருந்து சேரிக்குச் செல்ல கடவுச்சீட்டு தேவை. கடவுச்சீட்டு காட்ட வேண்டிய இடம் சாலைத் தெருவில் இருந்தது. அது இன்றும் “மகிமை’ என குறிப்பிடப்படுகிறது.
கோட்டக்குப்பமும் பிரெஞ்சியர் வசம் இருந்திருக்குமாயின் இன்று புதுவை மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பல சலுகைகள் இங்கும் கிடைத்திருக்கும்.
2004, டிசம்பர், 26 தமிழகம் மறக்க முடியாத நாள். ஆழிப்பேரலை - சுனாமி கோட்டக்குப்பத்திலும் கரையேறி கொண்டாட்டம் போட்டது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் அளிக்க ஜமியத்துல் உலமா ஹிந்தின் நிவாரணக்குழு வந்திருக்கிறது.
நிவாரணம் செய்தபடியே ஜமியத் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 78 வீடுகளை ஒன்றரைக் கோடி மதிப்பில் கட்டிக் கொடுத்தார்கள். அதுவே ஜமியத் நகர். சுனாமி தந்த இழப்பை பின்னுக்குத் தள்ளி அதன் மூலம் வந்த மீட்சியைப் பறைசாற்றுகிறது ஜாமியத் நகர்.
ஜமியத் நகரைப் போலவே இன்னொரு நகரும் உருவானது. அதன்பெயர் சமரசம் நகர். சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் 38 குடியிருப்புகள் ஜமாஅத்தே இஸ்லாமியால் கட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜாமியத் நகரை அடுத்தே சமரசம் நகர் அமைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்புகள் மேற்கிலும் பழைய குடியேற்றங்கள் கிழக்கிலும் திகழ நீண்ட கிழக்குக் கடற்கரை நடுவில் செல்லும் கோட்டக்குப்பத்தில் பழம் புகழ் மரச் சாமான்களோடு பழம்பெரும் நூலகத்தைக் காணும் வாய்ப்பைப் பெற புதுச்சேரி வட எல்லையில் ஒருமுறை கால்களை பதியுங்கள்.
ஊர்வலம் தொடரும்... தொடர்புக்கு : 9710266971

Read 430 times Last modified on வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 13:41