புதன்கிழமை, 21 பிப்ரவரி 2018 13:33

இளம் ஆலிம்களே உங்களைத்தான்-9 சட்டக் கலை!

Written by 
Rate this item
(0 votes)

அன்பு மாணவர்களே! குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு அடுத்ததாக நாம் கற்க வேண்டியது, இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களாகும். இந்தச் சட்டக் கலையையே வழக்கில் ‘ஃபிக்ஹ்’ என்கிறோம்.
‘ஃபிக்ஹ்’ எனும் சொல்லுக்கு அறிவு, ஞானம், விளக்கம் என்பதெல்லாம் சொற்பொருள்களாகும். இஸ்லாமியர் வழக்கில் ‘ஃபிக்ஹ்’ என்பது, ஷரீஆவின் தெளிவான ஆதாரங்களிலிருந்து கண்டறியப்பட்ட செயல்பூர்வமான பிரிவுச் சட்டங்களைக் குறிக்கும். செய்தல், விடுதல், விருப்பம் ஆகிய மூன்று நிலைகளில் இச்சட்டங்கள் அமையும். தொழுகை, கட்டாயம் செய்ய வேண்டியது; மோசடி, கட்டாயம் கைவிட வேண்டியது; சாப்பிடுதல், விருப்பத்தின்பால் பட்டது.
இறைமறை, நபிமொழி, நபித்தோழர்களின் வழிகாட்டல் முதலான அடிப்படைகளிலிருந்து ஆய்வு செய்து அறிஞர்களால் கண்டறியப்படும் செயல்பூர்வமான ஷரீஆ சட்டங்களே ஃபிக்ஹ் சட்டங்களாகும். நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள், பண்பாடு சம்பந்தப்பட்ட விதிகள், புலன் அல்லது அறிவுசார்ந்த முடிவுகள் ஆகியன ‘இல்முல் ஃபிக்ஹ்’ (சட்டக் கலை) என்பதில் அடங்கா.
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான வழிபாடுகள், வணிகம், வேளாண்மை, அலுவலகப் பணிகள் முதலான தொழில் துறைகள், சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள், அங்கத் தூய்மை, குளியல், தயம்மும் முதலான தூய்மை முறைகள், கடன், அன்பளிப்பு, மரண சாசணம், வாரிசுரிமை முதலான சொத்துப் பரிமாற்றங்கள், திருமணம், மணவிலக்கு, குழந்தை பராமரிப்பு, குடும்ப நிதி நிர்வாகம் முதலான இல்லறம் தொடர்பானவை, இன்னும் இவை போன்ற செயல் சட்டங்கள் அனைத்தும் ஃபிக்ஹ் என்பதில் அடங்கும்.
தனிக் கலை தேவையா?
மூலாதாரங்களான குர்ஆனும் ஹதீஸும் சான்றோர் கருத்துகளான ஆஸாரும் இருக்கையில் சட்டக் கலை (ஃபிக்ஹ்) என்றொரு கலை தேவையா? என்று நீங்கள் எண்ணலாம்! இதற்கு இரண்டு விதமான விளக்கங்கள் கூறலாம்.
1. குர்ஆனையும் ஹதீஸையும் முழுமையாகப் படித்தறிந்து, அவை சொல்லவரும் மார்க்கச் சட்டங்களைப் பிழையின்றி கண்டறிந்து, முறையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதென்பது, அனைத்து மக்களாலும் சாத்தியம் எனச் சொல்ல முடியாது. நான் தொழ வேண்டும்; தொழுகை முறை என்ன? சொல்லுங்கள் - என்றே சாமானியர் கேட்பர். அவருக்குத் தொழுகை முறையை - அவர் புரிந்துகொள்கின்ற வகையில் - எளிதாக விளக்கிச் சொல்லியாக வேண்டும்! அல்லது செய்து காட்ட வேண்டும்.
அத்தோடு அவர் நிறுத்தமாட்டார். தொழுகையில் இப்படிச் செய்துவிட்டால், அல்லது இப்படிச் செய்யாவிட்டால் தொழுகை நிறைவேறுமா? அல்லது திரும்பத் தொழ வேண்டுமா? என்று கேட்பார். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மறந்துவிட்டேன்; அல்லது முகத்தை ஒரு தடவைதான் கழுவினேன்; இரு கால்களில் ஒரு காலைக் கழுவாமல் தொழுதுவிட்டேன்; சாக்ஸ் மீது நீரால் தடவினால் (மஸ்ஹ் செய்தால்) செல்லுமா?... இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அவருக்குத் தோன்றும். இவற்றுக்கெல்லாம் ஓரிரு வரிகளில் விடை சொல்லி, அவர் ஐயத்தை அகற்ற வேண்டும். அல்லது நீயே குர்ஆனிலோ ஹதீஸிலோ தேடிக்கொள் என்று கைவிரிக்க வேண்டும்.
இதற்கெல்லாம் ஒரு சட்டத் தொகுப்பு இருக்குமானால், சுலபமாக அவரே விடை காண முடியும்; அல்லது அதைப் படித்தறிந்தவர்கள் விடை சொல்ல முடியும். செல்லும் - செல்லாது; சரி - தவறு; திரும்பத் தொழு - திரும்பத் தொழ வேண்டியதில்லை என்ற வகையில் விடை எளிதாக இருந்தால் மட்டுமே நடைமுறைக்கு ஏற்றதாக அமையும். ஆதாரங்களையும் அதன் நுட்பங்களையும் அறிஞர்கள் மட்டத்தில் பேசலாமே தவிர, அவரைப் பொறுத்தவரை அது கூடுதல் என்பார்.
மூலாதாரமே குர்ஆன் - ஹதீஸ்தான்
‘ஃபிக்ஹ்’ (ஷரீஆ சட்டம்) என்பது, இறைவேதத்திலிருந்தும் நபிமொழிகள் மற்றும் நபித்தோழர்களின் விளக்கங்களிலிருந்தும் ‘இமாம்’கள் எனப்படும் பேரறிஞர்களால் அவதானிக்கப்பட்ட சட்டங்கள்தான். இதையே, மார்க்கச் சட்டத்தின் மூலாதாரங்கள் நான்கு என்பர்.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் ஆகியவையே அந்த நான்கும்.
எடுத்துக்காட்டாக, முதல்தர வழிபாடான தொழுகையையே எடுத்துக்கொள்வோம். இறைமறையாம் திருக்குர்ஆனில், “தொழுகையைக் கடைப்பிடியுங்கள்” (அகீமுஸ் ஸலா) என்ற கட்டளை உண்டு. நாளொன்றுக்கு ஐவேளை தொழ வேண்டும் என்ற குறிப்பும் பூடகமாக உண்டு.
ஆனால், ஒவ்வொரு நேரத்திற்கும் எத்தனை ‘ரக்அத்’கள்? தொழுகையின் செய்முறை என்ன? ஐவேளையின் சரியான நேரங்கள் என்ன? ஒவ்வொரு நேரத்தின் தொடக்கமும் முடிவும் யாது? கூட்டுத் தொழுகையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? மறதிக்குப் பரிகாரம் என்ன?... இப்படி எல்லாவற்றுக்குமான வழிகாட்டல் நபிமொழிகளில்தான் உண்டு. அவற்றை நபிகளாரிடமிருந்து கற்ற நபித்தோழர்களின் விளக்கம் ‘ஆஸார்’களில் உண்டு.
இவ்வாறு எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, அறிஞர் பெருமக்களால் அலசி ஆராயப்பட்டு, வரைமுறைப்படுத்தப்பட்ட தொகுப்புதான் ஷரீஆ சட்டங்கள் எனும் ‘ஃபிக்ஹ்’ கலையாகும். இமாம்களின் சொந்தக் கருத்தோ சுய கண்டுபிடிப்போ அல்ல. ஆகவே, ஷரீஆ சட்டங்கள் என்பது, இறைவேதத்திலிருந்தும் நபிவழியிலிருந்தும் வந்தவைதான்.
இருவேறு ஆதாரங்கள்
2. ‘ஃபிக்ஹ்’ தேவையா என்பதற்கு இது இரண்டாவது விளக்கம். மூலாதாரமான நபிமொழிகளில், வெவ்வேறு கருத்துகளைக் கொண்ட இருவேறு நபிமொழிகள் காணப்படுவதுண்டு. அறிவிப்பாளர் தொடரைப் பொறுத்தவரையில், இரு ஹதீஸ்களுமே ஏற்கத் தக்கவைதான். இரண்டில் எதை நாம் பின்பற்ற வேண்டும்? எதைக் கைவிட வேண்டும்? அல்லது செயல்படுத்துவதற்கு இரண்டையுமே எடுத்துக்கொள்வதா? அல்லது இரண்டில் ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடியது என்று முடிவு செய்வதா? இதையெல்லாம் யார் தீர்மானிப்பது?
1) அங்கத் தூய்மை செய்துவிட்ட ஒருவர், சமைக்கப்பட்ட பொருளை உட்கொண்டுவிட்டால், அவர் திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டுமா? வேண்டியதில்லையா? இது தொடர்பாக இரு விதமான நபிமொழிகள் ஜாமிஉத் திர்மிதியில் பதிவாகியுள்ளன.
அ) “நெருப்பு தீண்டிய (சமைத்த) பொருளை உண்டபின் (புதிதாக) அங்கத் தூய்மை செய்ய வேண்டும்; அது பாலாடைக் கட்டியாக இருந்தாலும் சரி!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-74. இது ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
ஆ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்து தொழுது முடித்தார்கள். அதன்பின் ஒரு பெண் இறைச்சி கொண்டுவந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டார்கள். பிறகு அஸ்ர் தொழுகையை முடித்தார்கள். (புதிதாக) உளூ செய்யவில்லை” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-75. இது, ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
முதல் ஹதீஸ், சமைத்த பொருளைச் சாப்பிட்டவர், மறுபடியும் ‘உளூ’ செய்ய வேண்டும் என்கிறது. நபித்தோழர்களில் இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஆயிஷா, ஸைத் பின் ஸாபித், அபூஹுரைரா (ரலி) முதலானோர் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இமாம்களில் அபூகிலாபா, யஹ்யா பின் யஅமுர், ஹசன் அல்பஸ்ரி, ஸுஹ்ரீ (ரஹ்) முதலானோரும் இதையே ஏற்றுள்ளனர்.
இரண்டாவது ஹதீஸ், சமைத்த பொருளை உட்கொண்டவர் திரும்பவும் அங்கத் தூய்மை செய்ய வேண்டியதில்லை; ஏற்கெனவே செய்த உளூவே போதும்; தொழலாம் என்று கூறுகிறது.
நபித்தோழர்களில் நாற்பெரும் கலீஃபாக்கள், இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஜாபிர் (ரலி) முதலானோர் இக்கருத்தையே கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி, நாற்பெரும் இமாம்கள், இப்னுல் முபாரக் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) முதலானோரும் இக்கருத்தையே ஏற்கின்றனர்.
முதலாவது ஹதீஸ் பழைய சட்டமாகும்; இரண்டாவது ஹதீஸே புதிய சட்டமாகும். எனவே, முந்தையது காலாவதியாகிவிட்டது. வேண்டுமானால், சமைத்ததைச் சாப்பிட்டவர், வாய் கொப்புளித்துவிட்டுத் தொழுவது நல்லது - என்று இவர்கள் விளக்கமளிக்கின்றனர். (துஹ்ஃபத்துல் அஹ்வதீ, அல்மின்ஹாஜ்)
2) வித்ர் தொழுகையில் ‘குனூத்’ எனும் சிறப்பு துஆ ஆண்டு முழுவதும் ஓத வேண்டுமா? என்றொரு விவாதம் உண்டு.
அ) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்மஹ்தினீ’ எனும் துஆவை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-426. இது, ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஆண்டு முழுவதும் வித்ரில் ‘குனூத்’ ஓத வேண்டும்; அதையும் ‘ருகூஉ’வுக்கு முன்னால் ஓத வேண்டும் என்பார்கள். இதுவே, சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, இப்னுல் முபாரக் (ரஹ்), ஹனஃபிய்யாக்கள் ஆகியோரின் கருத்தாகும்.
ஆ) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ரமளான் மாதத்தின் பிந்தைய 15 நாட்களில் தவிர வேறு நாட்களில் குனூத் ஓதமாட்டார்கள். அதையும் ருகூவிற்குப் பின்பே ஓதிவந்தார்கள். இதே நடைமுறையை இமாம் ஷாஃபிஈ, இமாம் அஹ்மத் (ரஹ்) ஆகியோர் கொண்டிருந்தனர். (ஜாமிஉத் திர்மிதீ)
3) தொழுகையில் ‘ருகூஉ’விற்குச் செல்லும்போது இரு கைகளை உயர்த்த வேண்டுமா? என்றொரு விவாதம் உண்டு.
அ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ருகூஉ’ செய்யும்போதும் ‘ருகூஉ’விலிருந்து தலையை உயர்த்தும்போதும் தம் இரு கைகளையும் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-237. இது ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
ஆ) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று உங்களுக்கு நான் தொழுது காட்டட்டுமா?” என்று கேட்டுவிட்டுத் தொழுது காட்டினார்கள். அப்போது, (ஆரம்ப தக்பீர் கூறும்) முதல் தடவையில் தவிர வேறு எப்போதும் அன்னார் தம் கைகளை உயர்த்தவில்லை -என்று அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம், ஹதீஸ்-238. இது ‘ஹசன்’ தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.)
முதல் ஹதீஸின்படி, நபித்தோழர்களில் இப்னு உமர், ஜாபிர், அபூஹுரைரா, அனஸ், இப்னு அப்பாஸ் (ரலி) முதலானோரும் ஹசன் அல்பஸ்ரி, முஜாஹித், சயீத் பின் ஜுபைர், மாலிக், ஷாஃபிஈ, அஹ்மத் (ரஹ்) முதலான இமாம்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது ஹதீஸை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்), ஹனஃபிய்யாக்கள் போன்றோர் இந்த ஹதீஸின்படியே செயல்பட வேண்டும் என்கின்றனர்.
சிலர் இப்படியும் விளக்கம் அளிப்பதுண்டு. ‘ருகூஉ’விலும் எழுந்திருக்கும்போதும் கைகளை உயர்த்துவதே பெரும்பாலான நேரங்களில் நபி (ஸல்) அவர்களது வழக்கமாக இருந்துள்ளது. அதிகமான நபித்தோழர்கள் அறிவித்ததிலிருந்து இதை உணரமுடிகிறது. ஓரிரு முறைகள் அவ்வாறு கைகளை உயர்த்தாமலும் நபியவர்கள் தொழுதிருக்கிறார்கள். அதையே இப்னு மஸ்ஊத் (ரலி) போன்றோர் அறிவித்துள்ளார்கள். (அல்மின்ஹாஜ்)
இப்போது சொல்லுங்கள்!
இதுபோன்ற சிக்கலான பிரச்சினைகளில், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதும் அதற்கான தகுந்த காரணங்களைக் கண்டுபிடிப்பதும் யாருக்குச் சாத்தியப்படும்? நபி (ஸல்) அவர்களை அருகிலிருந்து கண்கூடாகக் கண்ட நபித்தோழர்கள், அந்த நபித்தோழர்களை நேரில் கண்ட ‘தாபிஉ’கள், அந்த ‘தாபிஉ’களை நேரில் பார்த்த ‘அத்பாஉ’கள், அவர்களைத் தொடர்ந்து வாழ்ந்த இமாம்கள் ஆகியோர் இதற்குத் தகுதி வாய்ந்தவர்களா? பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் பொருத்தமானவர்களா?
நாற்பெரும் இமாம்களில் முதல் மூவர் ‘தாபிஉ’கள் காலத்தில் வாழ்ந்தவர்கள்; நான்காமவர் அத்பாஉ தாபிஉகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1. இமாம் அபூஹனீஃபா நுஅமான் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள். கூஃபா - இராக். (ஹி.80-150; கி.பி. 699-767).
2. இமாம் அபூஅப்தில்லாஹ் மாலிக் பின் அனஸ் (ரஹ்). மதீனா - சஊதி. (ஹி.93-179; கி.பி. 712-795).
3. அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இத்ரீஸ் அஷ்ஷாஃபிஈ (ரஹ்). ஃகஸ்ஸா - பாலஸ்தீனம். (ஹி.150-204; கி.பி. 767-820).
4. அபூஅப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்). பஃக்தாத் - இராக். (ஹி.164-241; கி.பி. 781-855).
ஆக, சாமானிய மக்களைப் பொருத்தமட்டில் இமாம்களும் அவர்களின் ஆய்வுகளான ஃபிக்ஹ் சட்டங்களும் தவிர்க்க முடியாதவை என்றே கூறலாம். கற்றறிந்த பெரிய மேதைகள் கூடப் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவையின்றி, இந்த நால்வரில் ஒருவருடைய ஆய்வே போதுமானதாக இருக்கிறது எனலாம்.
(சந்திப்போம்)

Read 420 times Last modified on வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 15:48