திங்கட்கிழமை, 19 மார்ச் 2018 14:05

வீதிக்கு வந்த நீதிபதிகள்!

Written by 
Rate this item
(0 votes)

உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஜஸ்தி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர் ஆகிய நான்கு பேர் ஜனவரி 12 ஆம் நாள் (2018), எதிர்பாராத திருப்பமாக நீதிபதி செல்லமேஸ்வரர் வீட்டில் ஊடகங்களைச் சந்தித்து உச்சநீதிமன்றத்தின் போக்குகள் எதுவும் சரியில்லை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை பாரபட்சமாக ஒதுக்குகிறார் என்று அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறினார்கள். அதன் பின்னர், வாராந்திர விடுமுறை கழிந்து ஜனவரி 15 ஆம் நாள், அன்று காலை வேளையில் உச்சநீதிமன்றப் பணிகள் தொடங்கும் முன்னர் நீதிபதிகள் வழக்கம் போல் தேனீர் பருக கூறினார்கள். ஒருவரை ஒருவர் அக்கறையாக விசாரித்து கொண்டாலும் நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் நடந்து சென்ற வேளைகளில் ஒரு சஞ்சலத்தை காண முடிந்தது.

நீதிபதி அருண் குமார் மிஸ்ரா முதலில் வாய் திறந்தார். நான் பல ஆண்டுகளாக சம்பாதித்துக் கொண்ட கௌரவத்தை நான்கு நீதிபதிகளும் சீர்குலைத்து விட்டார்கள் என்றார். உச்சநீதிமன்றத்தில் இருக்கும் கைக்குள் அடங்கும் இளம் நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கு அரசியல் முக்கியத்துவம் கொண்ட வழக்குகளை தலைமை நீதிபதி ஒதுக்குவதாக நான்கு நீதிபதிகளும் குற்றம் சாட்டினார்கள். நீதிபதி அருண் குமார் மிஸ்ரா அமர்வுக்கு போகும் வழக்குகளைப் பற்றித் தான் நான்கு நீதிபதிகளும் கூறுகிறார்களோ என்ற சந்தேகம் நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு சந்தேகம் எழுந்தது. எனது புகழுக்கு களங்கம் உண்டாக்கியதற்கு பதில் என்னை தோட்டாக்களால் கொலை செய்திருக்கலாம் என்று வெளிப்படையாகவே கூறினார் அருண் குமார் மிஸ்ரா.

செல்லமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் சில காட்டமான கேள்விகளை எதிர்கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்தற்குப் பதிலாக மற்ற நீதிபதிகளிடம் நம்பிக்கை வைத்து கலந்து பேசியிருக்க வேண்டும். முரண்பாடுகளை நீதிபதிகள் மத்தியில் பேசியிருக்கலாம், இளம் நீதிபதிகளின் நேர்மையும், திறமையையும் குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அனைத்து நீதிபதிகளையும் அழைத்து பிரச்சனைகளை விவாதிக்க அவர்கள் அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும் என்று ஒரு இளம் நீதிபதி கூறினார். கோபத்தில் இருந்த சில இளம் நீதிபதிகள் நான்கு மூத்த நீதிபதிகளுடன் கை குழுக்காமல் தேநீர் விடுதியை நோக்கி நகர்ந்தனர்.

உச்சநீதிமன்றம் மற்றும் மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்யும் கொலிஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் குரியன் ஜோசப், ஜஸ்தி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன். பி.லோகூர் ஆகிய நீதிபதிகள் உள்ளனர். ஜனவரி 12 அன்று செய்தியாளர்களை சந்திக்கும் முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நான்கு நீதிபதிகளும் சந்தித்து நீதிபதி பி.எச்.லோயா மர்ம மரணம் தொடர்பான வழக்கை ஒதுக்கித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். நீதிபதி லோயா இருதய அடைப்பு காரணமாக இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. அவரது மருத்துவ சகோதரி தனது அண்ணன் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார். குஜராத்தில் போலி எண்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கை முதலில் நீதிபதி லோயா தான் விசாரித்தார்.

11 - veeethikku 3

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் லோயாவை பேரம் பேசியதாகவும் அவர் அதற்கு இணங்க மறுத்தார் என்றும் நீதிபதி லோயா குடும்பத்தினர் கூறினார்கள். மரணத்துக்கு பிறகு நடந்த உடல் பரிசோதனையில் லோயா கழுத்தில் ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டதை வைத்து அவரது சகோதரி சந்தேகம் கிளப்பினார். லோயா மரணம் சம்பந்தமான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. அருண் மிஸ்ரா இளம் நீதிபதி. தலைமை நீதிபதியை சந்தித்த நான்கு நீதிபதிகளும் நீதிபதி லோயா மரணம் அரசியல் பின்னணி உடையது என்பதால் ஒரு மூத்த நீதிபதி தான் இதனை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது முடிவில் உறுதியாக நின்றார். இதனால், கோபம் கொண்ட நீதிபதிகள் நான்கு பேரும் எங்களுக்கு சரியெனப்படுவதை செய்யப் போகிறோம் என்று சொல்லி விட்டு வந்து தான் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறார்கள். நான்கு நீதிபதிகளும் செல்லமேஸ்வர் வீட்டு பசுமை வளாகத்துக்கு (Lawns) வருவதற்கு முன்பே ஏதோ விரும்பத் தகாத ஒன்று நடக்கப் போவதாக நீதிபதி லோக்கூரது கோர்ட் அறையில் இருந்தவர்கள் உணர்ந்து கொண்டனராம். எதையும் பரபரத்து செய்யும் வழக்கம் இல்லாத நீதிபதி லோக்கூர் அன்று காலை, அவரது வேலைகளை முடிப்பதில் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்பை காட்டியிருக்கிறார். வேலைகளை முடித்த உடனேயே அவசரமாக கிளம்பி மற்ற மூன்று நீதிபதிகளுடன் சேர்ந்து செல்லமேஸ்வர் வீட்டுக்கு போய் இருக்கிறார். மைக்குகள் வரும் முன்பே செய்தியாளர்களைச் சந்திக்க போடப்பட்ட இருக்கையில் போய் அமர்ந்தார்.

முதலில் ஜஸ்தி செல்லமேஸ்வர் தான் பேச தொடங்கினார்.” உச்சநீதிமன்றத்தில நடக்கும் விவகாரங்கள் ஜனநாயகத்துக்கு பேரழிவை தந்திருப்பதால் ஊடகத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். தலைமை நீதிபதி மிஸ்ராவுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் எழுதிய கடித்திலும் கூட நாங்கள் இதனை சுட்டிக் காட்டினோம். நாட்டுக்கும் நீதிமன்றத்தின் மாண்புக்கும் பாரதூரமான விளைவுகளை (far-reaching consequences) உண்டாக்கக் கூடிய வழக்குகளை தலைமை நீதிபதி மிஸ்ரா ஆள் பார்த்து (selectively) வழங்குவதை சுட்டியும் அந்த வழக்குகளை எங்கள் அமர்வுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தோம்” என்று கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வர உள்ளவர் மதன் பி.லோகூர். இவர் உள்பட இதர மூன்று நீதிபதிகளும் நீதிமன்ற நடைமுறைகளை உடைத்து செய்தியாளர்களை சந்திக்கிறார்கள் என்றால் சூழ்நிலை அவ்வளவு அபாயமானது. நீதித்துறையின் ஆக மூத்த நீதிபதிகளே நீதித்துறையின் நம்பகம் குறித்த சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றார்கள். பிரச்சனை எதுவாக இருப்பினும், நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நிர்வாகம் தலையிடுவது தான் இதில் மையப் பிரச்சனையாக இருக்கிறது. அரசியல் தொடர்புடைய வழக்குகளில் அரசாங்கத்தை திருப்திபடுத்த சொன்னதை செய்யும் அமர்வுகளுக்கு (handpicked benches) வழக்குகள் ஒதுக்கப்படுகிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

“எந்தெந்த வழக்கை யார் யார் விசாரிக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுகிதோ என்ற சந்தேகம் உச்சநீதிமன்றத்துக்கு உள்ளேயே எழுந்திருக்கிறது என்று உள்ளே இருப்பவர்களே கூறுகிறார்கள். நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்காமல் இருந்தாலும், கடந்த சமீப காலங்களில், நீதிமன்ற நடப்புகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். நீதிபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பை பெரும்பாலான மக்கள் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. முக்கியமான வழக்குகள் மூத்த நீதிபதிகள் அமர்வுக்குப் போவதில்லை என்பதை நாங்களே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். சமூக நீதி சம்பந்தப்பட்ட பொது நல வழக்குகள் பொதுவாக நீதிபதி மதன் பி.லோகூருக்கு தான் போக வேண்டும். அவர் தான் அதில் சிறப்பானவர். ஆனால், அந்த வழக்குகள் அவருக்கு ஒதுக்கப்படுவதில்லை” என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.

சொன்னதைச் செய்யும் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு வழக்குகளை அனுப்புவதில் தலைமை நீதிபதி எப்படி தன்னிச்சையாக தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்பதை இந்த பிரச்சனை சுட்டிக் காட்டுகிறது. தலைமை நீதிபதி அரசியல் சம்பந்தமுடைய சிக்கலான வழக்குகளை தானே முடிவு செய்து அனுப்புகிறார் என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன்.

நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “MoP எனப்படும் செயல்முறை குறிப்பானை (Memorandum of Procedure) தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து ஆர்.பி.லுத்ரா (R.P.Luthra) போட்ட வழக்கில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டது குறித்தும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு 2017 அக்டோபரில், செயல்முறை குறிப்பாணையை மேலும் தாமதப்படுத்தாமல் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் கீழ் இந்த வழக்கு விசாரித்து முடிவெடுக்க வேண்டியது இருக்க இந்த வழக்கை வேறு ஒரு அமர்வு எப்படி விசாரிக்க முடியும் என்பது புரியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இது அரசுக்கு பெரிய பங்களிப்பை வழங்கிவிடும் என்று நீதிபதிகள் வெளிப்படையாகவே அச்சப்பட்டுள்ளனர்.

பிற முக்கியமான வழக்குகளில் ஒன்று ஆதார் சம்பந்தமானது. தனி மனிதனின் அந்தரங்கம் அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்ய 9 நீதிபதிகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு அரசியல் சாசன அமர்வுக்கு ஆதார் வழக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது, அதில் நீதிபதி ஜஸ்தி செல்லமேஸ்வரும் இடம் பெற்றிருந்தார். அந்தரங்கம் தனிமனிதன் உரிமை தான் என்று 2017 அக்டோபரில் இந்த அமர்வு கூறியது. அதன் பின்னர் ஆதார் சம்பந்தமாக 5 நீதிபதிகள்கொண்ட அமர்வை அமைத்த போது அந்த அமர்வில் செல்லமேஸ்வரை தலைமை நீதிபதி சேர்க்கவில்லை.

சி.பி.ஐ.க்கு சிறப்பு இயக்குனராக ஐ.பி.எஸ்.அதிகாரி ராகேஷ் அஸ்தனாவை நியமனம் செய்வது தொடர்பான ஒரு வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவீன் சின்கா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், சின்கா இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து பின் வாங்கினார். அதன் பிறகு நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வுக்கு அந்த வழக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த வழக்கு, அதே நளில், ரஞ்சன் கோகாய், ஆர்.எஃப்.நாரிமண், சஞ்செய் கிஷான் கவுல் இருந்த அமர்வுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

மற்றுமொன்று உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பின் கீழ் நடந்து வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு சம்பந்தமான பொதுநல வழக்கு அருண் மிஸ்ரா அமர்வுக்கு கொடுக்கப்பட்டது தொடர்பானது. இந்த வழக்கு முதலில் செல்லமேஸ்வர் அமர்வுக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த நாளே, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி மிஸ்ரா, தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்த போது இந்த வழக்கின் மூல வழக்கை விசாரித்ததாகக் கூறி, விலகிக் கொண்டாலும், மிஸ்ராவின் 10 ம் எண் கோர்ட்டில் தான் இப்போதும் இந்த வழக்கு இருக்கிறது. சத்தீஷ்கரில் சட்டவிரோதமாக நடந்த கொலை தொடர்பாக நீதிபதி லோக்கூர் விசாரித்து கொண்டிருந்த வழக்கு இப்போது மிஸ்ரா அமர்வுக்கு நகர்த்தப்பட்டு இருக்கிறது.

வழக்குகள் பாரபட்சமாக பட்டியலிடப்படுவதை கவனித்து கொண்டு வந்தவர்கள், 2017 நவம்பரில் இந்த பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது என்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றது தொடர்பில் வந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை நீதிபதி செல்லமேஸ்வர் அமைத்தார். இதில், அதிருப்தி அடைந்த தலைமை நீதிபதி மிஸ்ரா செல்லமேஸ்வர் அமைத்த 5 நீதிபதிகள் அமர்வை கலைத்து விட்டு, 3 நீதிபதிகள் கொண்டு ஒரு அமர்வை உருவாக்கி அங்கு இந்த வழக்கை அனுப்பி வைத்து இருக்கிறார். எந்த அமர்வுக்கும் பட்டியலிடப்படாத வழக்குகள் தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் அமர்வு மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையும் கூட வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், நான்கு நீதிபதிகள் இறுதியாக குற்றச்சாட்டு வைப்பது நீதிபதி லோயா மர்மமாக இறந்தது தொடர்பான வழக்கு. லோயா இவர்களின் தோழமை நீதிபதி ஆவார்.
தொடரும்.........

Read 336 times