செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018 16:27

முதல் தலைமுறை மனிதர்கள் 12

Written by 
Rate this item
(0 votes)

சுதந்திரப் போராட்ட வீரர் வேலூர் .                                              V.M. உபயதுல்லா சாகிப்
இந்திய அரசியல் சீர்திருத்தம் குறித்து ஆராய்ந்து அறிக்கை கொடுப்பதற்காக 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு ஸைமன் என்ற ஆங்கில அதிகாரி தலைமையில் குழு ஒன்றை நியமித்தது ஆனால் இந்தக் குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை. இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி

தெரிவித்த கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்கவில்லை. எனவே இக்குழுவைப் புறக்கணிப்பது என்றும் ஸைமன் தலைமையிலான குழுவினர் இந்தியா வரும்போது அவர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதென்றும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. 3.2.1928 அன்று இக்குழு இந்தியா வருகை தந்தபோது அதனை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சி நாடெங்கும் போராட்டங்களில் ஈடுபட்டது. ஸைமனே திரும்பிப்போ என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். காந்திஜி, லாலாலஜபதிராய், திலகர், நேரு உள்ளிட்ட பல முக்கியக் காங்கிரஸ் தலைவர்கள் இப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர்.
சென்னை மாகாணத்திலும் இப்போராட்டம் வலுவான முறையில் நடைபெற்றது. வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் 23 வயதே நிரம்பிய ஒரு இளைஞரும் கலந்து கொண்டார். ‘ஸைமனே திரும்பிப்போ’ என முழங்கிக் கொண்டே தொண்டர்களுடன் அவர் முன்னேறிச் சென்றார். போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை விட்டு உடனே கலைந்து செல்ல வேண்டுமென்றும், இல்லையெனில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை செய்தனர். உடனே முன்னணியில் நின்ற அந்த இளைஞர் தனது சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு ‘சுடுங்கள்’ என காவல் துறை அதிகாரிகளின் துப்பாக்கிகளுக்கு நேராகத் தனது மார்பைக் காட்டினார். காவலர்கள் அவர் மீதும் மற்ற தொண்டர்கள் மீதும் கண் மூடித்தனமாகத் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளைஞர் தான் சுதந்திரப் போராட்ட வீரர் வேலூர் .V.M. உபயதுல்லா சாகிப் . அவரின் தியாக வரலாற்றைத்தான் இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
சுதந்திரப் போரில்:

8 - vallur 2
வேலூர் நகரில் பாக்கு மண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த மதார் பாட்சாவின் மகனாக உபயதுல்லா 02.05.1905 அன்று பிறந்தார். உபயதுல்லா வேலூரிலிருந்த பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். அவரது தந்தையார் அவரைத் தான் நடத்தி வந்த பாக்கு மண்டியில் தனக்குத் துணையாக வியாபாரத்தில் ஈடுபடுத்த வேண்டுமென விரும்பினார். ஆனால் உபயதுல்லாவுக்கு வியாபாரத்தில் நாட்டமில்லை. நாட்டில் அப்போது சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தது. காந்திஜி அறிவித்திருந்த ஒத்துழையாமை இயக்கமும், கிலாபத் இயக்கமும் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருந்தன. இப் போராட்டங்களால் சிறுவரான உபயதுல்லாவும் ஈர்க்கப்பட்டார். பாக்கு மண்டியில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த குப்புசாமி என்பவர் ஒரு காங்கிரஸ்காரர். இவர் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். அவரைப் பார்க்கவும், அவரிடம் ஆலோசனைகள் பெறவும் காங்கிரஸ்காரர்கள் பாக்கு மண்டிக்கு அடிக்கடி வருவது வழக்கம். இதனால் உபயதுல்லாவுக்கும் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமே அவரிடம் விடுதலை வேட்கையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி நடத்திய கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். நாளடைவில் சுதந்திரப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
வேலூரில் தான் வசித்து வந்த பகுதியில் ‘காந்தி சங்கம்’ என்ற சங்கத்தை நிறுவி தன்வயதையொத்த ஏராளமான இளைஞர்களை அதில் சேர்த்துக் கொண்டார். அச் சங்கத்தின் சார்பில் வேலூரில் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டினார். அப்போது அவருக்கு வயது 16தான். நாடெங்கும் கிலாபத் இயக்கம் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. உபயதுல்லா அந்த இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு வேலூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பிரச்சாரம் செய்தார். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே சுதந்திரம் அடைய முடியுமென்று மக்களிடையே விளக்கிக் கூறினார்.
கொடிப்போராட்டம்:
மகாராஷ்ரா மாகாணத்திலிருந்த நாகபுரியில் (நாக்பூர்) ஒரு குறிப்பிட்ட வீதியில் ஆங்கிலேயர்கள் குடியிருந்து வந்தனர். அந்தத் தெருவின் வழியாக சுதந்திரப் போராட்டத் தொண்டர்கள் கொடிபிடித்து ஊர்வலாமாகச் செல்லவும், முழக்கங்கள் எழுப்பவும் அரசு தடைவிதித்தது. இதனால் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். அரசின் தடையை எதிர்த்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் செய்த தொண்டர்களை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. நாட்கள் செல்லச் செல்ல இந்தப் போராட்டம் ஒரு தேசியப் போராட்டமாக மாறியது. இதில் கலந்து கொள்வதற்காக நாடெங்கிலுமிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் கட்சிக் கொடியுடன் நாகபுரி சென்றனர்.

8 - vellor 4
இதுவே ‘நாகபுரி கொடிப்போராட்டம்’ என அழைக்கப்பட்டது (1923). இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இளைஞரான உபயதுல்லாவுக்கு ஏற்பட்டது. மாகாண காங்கிரஸ் தலைமையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மாவட்டம் முழுவதிலுமிருந்து தன்னார்வத் தொண்டர்களை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குச் சென்றார். 31.07.1923 அன்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. நாகபுரி மற்றும் அமராவதி சிறைகளில் அவர் தண்டனையை அனுபவித்து விட்டு ஊர் திரும்பினார்.
உப்பு சத்தியாக்கிரகம்:
1930ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்புக்கு வரி வித்தது. காங்கிரஸ் கட்சி இந்த வரி விதிப்பை ரத்துச் செய்யுமாறு அரசிற்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அரசு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதுவே புகழ்பெற்ற ‘உப்புச் சத்தியாக் கிரகப்’ போராட்டமாகும். இப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கடற்கரை நகரங்களுக்குச் சென்று உப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மாகாந்திஜி 12.03.1930 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தண்டி என்ற கடற்கரை நகருக்கு உப்பு எடுப்பதற்காக பாதயாத்திரை மேற்கொண்டார். சென்னை மாகாணம் வேதாரண்யத்தில் 30.04.1930 அன்று நடைபெற்ற போராட்டத்திற்கு இராஜாஜி தலைமை தாங்கினார். சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு திருமதி துர்கா பாய் தலைமை தாங்குவார் என அறிவிக்ப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உபயதுல்லா தொண்டர்களைத் திரட்டினார். 70 தன்னார்வத் தொண்டர்களை அழைத்துக் கொண்டு குப்புசாமி முதலியாரும், சாமி சண்முகானந்தமும் உடன்வர சென்னை சென்று போராட்டத்தில் கலந்து கொண்டார். காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் 18மாதங்கள் சிறையிலிருந்தார்.
சட்டமறுப்பு:
1932ஆம் ஆண்டு காங்கிரகு கட்சி சட்டமறுப்புப் போராட்டம் நடத்தியது. மறியல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் எனப் பல வடிவங்களில் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் நடபெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு ஆங்கிலேய அரசிற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். 10.01.1932 அன்று வேலூரில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு உபயதுல்லா தலைமை ஏற்க, குப்புசாமி முதலியார், ஜீவரத்தின முதலியார் ஆகியோர் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அரசு விதித்திருந்த தடையினை மீறி நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்ட உபயதுல்லாவை காவல் துறை அதிகாரிகள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். 18 மாதங்கள் அவர் இத் தண்டனையை வேலூர் மற்றும் அலிப்பூர் சிறைகளில் அனுபவித்தார்.
16.03.1933 அன்று சென்னை மாகாண கவர்னரின் இருக்கைக்கு அருகேயிருந்த படுதாவில் ஒரு கைத்துப்பாக்கியும் மூன்று உபயோகப்படுத்தப்படாத தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. காவல் துறையினர் இதனை ஒரு கடுமையான விஷயமாக எடுத்துக் கொண்டு நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேலூரிலிருந்த உபயதுல்லாவின் வீடும் சோதனைக்கு இலக்கானது. எனினும் அவரது இல்லத்தில் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வெள்ளையனே வெளியேறு:
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் நாள் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது மகாத்மா காந்திஜி, நேரு, ஆஸாத் உள்ளிட்ட முக்கியக் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் துவங்குவதற்கு முன்னரே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அரசின் இச்செயல் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது சென்னை மாகாணக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அரசின் முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக வடஆற்காடு மாவட்டம் இராணிப்பேட்டை வந்து அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர் முகம்மது சுலைமான் என்பவர் வீட்டில் தலைமறைவாகத் தங்கியிருந்து போராட்டத்திற்கு தொண்டர்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டார். உபயதுல்லாவும் காமராஜர் அவர்களை அடிக்கடி ரகசியமாகச் சந்தித்து ஆலோசனை பெற்று போராட்டத்திற்கு தொண்டர்களைத் திரட்டி வந்தார். எனினும் போராட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னரே காமராஜரைக் காவல் துறையினர் கைது செய்தனர். தான் கைது செய்யப்பட்டால் போராட்டத்தை உபயதுல்லா முன்னின்று நடத்துவார் என காமராஜர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, வேலூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் 26 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கியது. அமராவதி, அலிப்பூர், வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அவர் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
காங்கிரஸ் கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் உபயதுல்லா கலந்துகொண்டார். அரசின் அடக்கு முறைக்கு ஆளானார். சிறைவாசம் அனுபவித்தார். தனது வாழ்நாளில் அவர் 68 மாதங்கள் சிறையிலிருந்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில்:
உபயதுல்லா வடஆற்காடு மாவட்டம் மட்டுமல்லாது சென்னை மாகாணத்தின் தமிழ்ப்பகுதிகள் அனைத்திற்கும் சென்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். ஆயிரக்கணக்கான மக்களை காங்கிரஸ் கட்சியில் ஆரம்ப உறுப்பினர்களாகச் சேர்த்தார். காங்கிரஸ் மாநாடுகளிலும், கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றி மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார். பெருந்தலைவர் காமராஜர் சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த போது உபயதுல்லா துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். காமராஜர் மேல் மிகுந்த அன்பும், பிரியமும் கொண்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸில் காமராஜருக்கும், இராஜாஜிக்கும் பிரச்னைகள் ஏற்பட்டபோது காமராஜரின் பக்கமே நின்றார். காங்கிரஸ் பேரியக்கத்தின் தேசியத் தலைவர்களான மகாத்மா காந்திஜி, பண்டித ஜவகர்லால் நேரு, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், சர்தார் வல்லபாய்படேல் ஆகிய தலைவர்களின் நன்மதிப்பையும் அவர் பெற்றிருந்தார்.
1937ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றபோது, மாகாணமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இத்தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. (இராஜாஜி மாகாணப் பிரதமராகத் தேர்தெடுக்கப்பட்டார்).
பொதுப்பணிகள்:
1938ஆம் ஆண்டுமுதல் 1944 ஆம் ஆண்டு வரை சுமார் 6 ஆண்டுகள் வடஆற்காடு ஜில்லா போர்டின் உபதலைவராகப் பதவி வகித்தார். வேலூர் நகர சபையின் உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தான் பொறுப்பு வகித்த காலங்களில் மாவட்டதிற்குப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தினார்.
பாகிஸ்தான் எதிர்ப்பு:
1940 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முஸ்லிம் லீகில் இணைந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாகத் திரும்பினர். எனினும் உபயதுல்லா தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தார். பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையையும் எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். பாகிஸ்தான் உருவானால் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் விளையாது என்பது அவரது திடமான கருத்தாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உபயதுல்லா தவிர மதுரை முகம்மது மௌலானா சாகிப், மு.ஆ. ஷெரீப் சாகிப், மதுரை ஹ.மு.ஆ. முகையதீன் மரைக்காயர், கும்பகோணம் A.A.ரகீம் சாகிப் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் தலைவர்களே இருந்தனர். சாதாரண முஸ்லிம்களில் மிகப் பெரும் பான்மையினர் முஸ்லிம் லீகில் இருந்ததால் உபயதுல்லா போன்ற காங்கிரஸ் முஸ்லிம்கள் சமூகத்தில் எதிர் நீச்சல் போடவேண்டியதிருந்தது. பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த அவர்கள் தேசிய முஸ்லிம்கள் என்றும், சமுதாய துரோகிகள் என்றும், காபிர்கள் என்றும் சமுதாய மக்களால் தூற்றப்பட்டனர். உபயதுல்லாவின் தாயார் இறந்த போது அவரது ஜனாஸாவை பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்ய பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே காவல் துறையினரின் தலையீட்டின் பேரில் ஜனாஸா பள்ளி மைய வடியில் அடக்கம் செய்யப்பட்டது. இச் சம்பவம் தேசிய முஸ்லிம்கள் பால் சமூக மக்கள் கொண்டிருந்த வெறுப்பை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
இத்தகைய மிகக் கடுமையான, சோதனையான கால கட்டங்களிலும் உபயதுல்லா மனம் தளராது தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். 12.07.1942 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேசிய முஸ்லிம் தலைவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாகிஸ்தான் பிரிவினை எதிர்ப்பு மாநாட்டில் அவரும் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்தக் காலகட்டத்தில் பிரிவினைக்கு ஆதரவான நிலை எடுத்திருந்த இராஜாஜிக்கு தனது உரையில் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பண்பு நலன்கள்:
‘சரியாக ஆறடி உயரம், இரட்டை நாடி உடம்பு, மாநிறம், நீண்ட பருத்த கைகள், அகன்ற நெற்றி, பார்ப்போருக்குச் சாதுவாகத் தோற்றமளிக்கும் கண்கள், எப்போதும் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருக்கும் வாய், கதர்லுங்கி, நீண்ட ஷேர்வாணி, தலையில் காஷ்மீர் குல்லா, கால்களில் ஷு, உறுதியான நடை இவர்தான் ஜனாப் உபயதுல்லா என அவரது தோற்றப் பொலிவிளை விவரிக்கின்றார் விடுதலைப் போராட்ட வீரர் வேலூர் N.L. ராஜு சர்மா என்பார். உபயதுல்லா மிகச் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அவரது உரைகள் புள்ளி விவரங்களுடன் இருக்கும். ஆணித்தரமாக தனது கருத்துக்களை எடுத்து வைப்பார். இவரது மேடை உரைகள் தமிழும் உருதும் கலந்தே இருக்கும். அதில் சூடும் சுவையும் இருக்கும். கேலியும் கிண்டலும் நையாண்டியும் இருக்கும். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக இவர் திகழ்ந்ததால் மாகாணமெங்குமுள்ள காங்கிரஸ்காரர்கள் இவரைத் தமது ஊர்களுக்கு அழைத்து உரையாற்றச் செய்தனர். பொதுக் கூட்டங்களில் உரையாற்றுகின்ற போது ஆங்கிலேயர்களை மட்டும் சாடுவதோடு இவர் நின்று விடுதில்லை. நீதிக் கட்சியினரையும் அதன் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். அவர்களை ஆங்கிலேயர்களின் அடிவருடிகள் என்று விமர்ச்சிப்பார். இவரது உரை கேட்க மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தனர்.
குடும்பம்:
27.12.1945 அன்று இவரது திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ஸைபுன்னிஸா. உபயதுல்லா-ஸைபுன்னிஸா தம்பதியினருக்கு முஸ்தாக் அகமது, ரபி அகமது என இரு ஆண்பிள்ளைகளும், ஜீனத் பேகம், குர்ஷித் பேகம், முஸரத் பேகம் என மூன்று பெண் பிள்ளைகளும் உண்டு. மூத்த மகன் முஸ்தாக் அகமது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது இவர் பேர்ணாம்பட்டில் குடியிருந்து வருகிறார். இளைய மகன் ரபி அகமது 02.07.2013 அன்று மரணமடைந்து விட்டார். ஸைபுன்னிஸா பீவி (உபயதுல்லாவின் மனைவி) 08.02.2004ல் மரணமடைந்தார்.
மக்கள் தொண்டர்:

8 - vellu 2
உபயதுல்லா சாகிப் தனது 53வது வயதில் 22.02.1958 அன்று மரணமுற்றார். 15வது வயதில் தொடங்கிய அவரது தீவிர அரசியில் வாழ்வு மரணிக்கும் அந்தக் கடைசி நிமிடம் வரை நீடித்தது. சுமார் 38 ஆண்டுகள் அவர் தீவிர அரசியலில் அதிலும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். அவரது சேவைகளை அங்கீகரித்துப் பெருந்தலைவர் காமராஜர் அவரை 1946ஆம் ஆண்டு இராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினராக்கினார். தொடர்ந்து இரண்டாவது முறையும் அவருக்கு இராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு அதிலும் சிறப்பான முறையில் பணியாற்றினார்.
இராஜ்ய சபா உறுப்பினராக இருந்த போது வேலூர் மாவட்ட மக்களுக்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தினார். தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு தன்னை நாடி வந்த ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் புரிந்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது புறக்கணிக்கப்பட்ட தனது சமுதாய மக்களாலேயே பின்னர் போற்றப்பட்டார். அவரது சேவையினை சமூக மக்கள் காலம் கடந்தாகிலும் அங்கீகரித்து மரியாதை அளித்தனர்.
இராஜ்ய சபா உறுப்பினராகப் பதவி வகித்த காலத்தில் டெல்லி அரசியலிலும் முக்கியப் பிரமுகராகத் திகழ்ந்தார். எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர், ரஷ்ய அதிபர்கள் புல்கானின் மற்றும் குருஷேவ் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்த போது அவர்களை வரவேற்கும் அரிய வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது. அவரது நினைவைப் போற்றும் வண்ணம் வேலூர் பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டி அரசு அவருக்கு மரியாதை செலுத்தியது. உபயதுல்லா சாகிபைப் போன்ற ஒரு நாட்டுப்பற்று மிக்க தலைவரை சென்னை மாகாணம் கண்டதில்லை எனலாம்.
துணை நூல்கள்:
1. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - .. V.N. சாமி
2. விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் .. செ. திவான்
3. சுதந்திரப் போரில் வட ஆற்காடு மாவட்டம் .. காங்கிரஸ் கட்சி வெளியீடு.
குறிப்பு: உபயதுல்லா சாகிபு குறித்த விரிவான தகவல்களைத் தந்து உதவிய அவரது மகனார் முஸ்தாக் அகமது அவர்களுக்கு நன்றி.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

 

Read 379 times