ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018 13:27

மண்ணின் வரலாறு - 12 -கலங்கள் நிறைந்த கடலூர்

Written by 
Rate this item
(0 votes)

சில ஊர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கும். பல ஊர்களைக் கொண்ட பகுதியாக இருந்தாலும் கடலூர் தமிழில் கடலூராகவும் ஆங்கிலத்தில் கூடலூராகவும் காட்சி தரும்.
கடலின் தரையில் இருப்பதால் கடலூர். எப்படி வந்தது

கூடலூர் என்னும் பெயர்? தென்பெண்ணை, கெடிலம், பரவனாறு ஆகிய ஆறுகள் கடலில் கூடுமிடமாக அமைந்ததால் கடலூர் கூடலூராகியிருக்கிறது. ஆங்கிலேயர் அன்று அழைத்த பெயரே இன்றும் ஆங்கிலத்தில் "ஞிதஞீஞீச்டூணிணூஞு' என புழங்குகிறது. என்றாலும் கடலூர் கடலூரேதான், கூடலூர் அல்ல.
கடலூர் முதுநகர், புதுநகர் என அழைக்கப்படுகிறது. முதுநகரில் பழம்பெரும் துறைமுகம் உள்ளது, புது நகரில் திருப்பாதிரிப் புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இரண்டிலும் ரயில் நிலையங்கள் உள்ளன. முதுநகர் ரயில் நிலையம் சந்திப்பும் கூட.
கடலூர் முதுநகரில் மீன்பிடி துறைமுகம் இருப்பது போல் அதன் வடபகுதியில் தேவனாம்பட்டின மீனவர் குப்பமும் உள்ளது. இங்கு அகப்படும் மீன்கள் கேரளா வரை எடுத்துச் செல்லப்படுகின்றன. அரபுக் கடல் மீனைத் தோற்கடிக்கும் வங்கக் கடல் மத்தி மீன்கள்.
தேவனாம்பட்டின வெள்ளிக் கடற்கரை (ண்டிடூதிஞுணூ) பெயருக்கேற்றாற் போல் வெள்ளி மணல் துகள்கள்தான். இங்கு சங்கமிக்கும் கெடிலம் ஆறு மீனவர்களின் முகத்துவாரமாக விளங்கி கலங்களைச் சுமந்து நிற்கிறது.
இப்பகுதியில் மிகவும் பிரபலமான புனித டேவிட் கோட்டை சிதிலமாகி நிற்கிறது.
செஞ்சியின் ஆட்சியாளரிமிருந்து விலைக்கு வாங்கிய இடத்தில் கட்டிய கோட்டைக்கு புனித டேவிட் கோட்டையெனப் பெயரிட்டனர்.
மதரஸாபட்டினத்தின் சென்ன குப்பத்தில் ஆங்கிலேயர் கட்டிய கோட்டைக்குப் பெயர் புனித ஜார்ஜ்கோட்டை (1640) அதனை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய பின்னர் ஆங்கிலேயர் தம் தலைமையகத்தை புனித டேவிட் கோட்டைக்கு மாற்றிக் கொண்டனர். (கி.பி.1746)

4 kadalor 5
ஆங்கிலேயர்கள் கடலூரில் கால்பதிக்கும் முன், சோழர், பல்லவர், மொகலாயர் இப்பகுதியை ஆண்டுள்ளனர். 1780இல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்த கடலூர் "இஸ்லாமாபாத்' என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கம் திப்புசுல்தானுக்கும் நடந்த இரண்டாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைய கடலூர் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. (1781)
கடலூர் பழம் பெருமை வாய்ந்த ஊர், என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன. இங்கேயுள்ள அருங்காட்கியகம் பல செய்திகளை நமக்கு வழங்குகிறது.
கடலூரின் மையப்பகுதியான திருப்பாதிரிப் புலியூர் பழங்காலத்தில் பாடலிபுரம் என அழைக்கப்பட்டது. இங்கு சமண மடமும் சமணக் கோவிலும் இருந்தன. பாடலிபுரத்துச் சமணமடம் மிகப் பழைமை வாய்ந்தது. இங்கிருந்த சர்வ நந்தி எனும் சமண முனிவர் "லோகவிபாகம்' எனும் நூலை அர்த்தமாகதியிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார் அப்போது இப்பகுதி பல்லவரின் ஆட்சியின்கீழ் இருந்தது. அப்போதைய காஞ்சித் தலைவன் சிம்மவர்மன், நூல் எழுதப்பட்ட ஆண்டு கி.பி. 458.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாடலிபுரம் சமணப் பள்ளியில் கல்வி கற்ற தருமசேனர் சமணரும் மடத்தின் தலைவராகவும் விளங்கினார். தருமசேனர் சமணர், அவருடைய சகோதரி திலகவதி சைவர். சைவம் சமணத்தைத் தள்ளாடச் செய்தது. தருமசேனர் திருநாவுக்கரசர் ஆனார், இவர்தான் அப்பர்.
அப்பர் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனையும் தடுமாறச் செய்தார். ஆட்சியாளர் சமணத்தைத் துறந்து சைவத்தைத் தழுவ நாடு என்னாகும்? மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி. இதயக்கோவில்கள் மட்டும் இடிக்கப்படவில்லை, எல்லா சமணக் கோவில்களும் இடிக்கப்பட்டன. சமணக் கோவில்கள் சைவக் கோவில்களாக மாற்றப்பட்டன. கிமு. 300 களில் கீர்த்தியோடு விளங்கிய சமணம் கி.பி 700களில் இறங்கு முகத்தைக் கண்டது. "அஞ்சினான் புகலிடம்' எனப் போற்றப்பட்ட சமண மடம் அஞ்சி அஞ்சி ஆளில்லாத மடமானது.
எவருடைய வழிகாட்டலுமின்றி தமிழரின் மார்க்கம் இயற்கையை வணங்க, ஆங்காங்கு சிறு தெய்வ வழிபாடுகள் இருக்க சமணமும் பவுத்தமும் சாய்க்கப்பட சைவம் அரசின் ஆதரவோடு செழித்தோங்கி வளர்ந்தது. பிராமணீயம் கோவில்களில் குடியேறியது; சைவம் இல்லப்படியேறியது.
ஏழாம் நூற்றாண்டில் கிழக்குக் கடற்கரையில் இஸ்லாமியம் கரையிறங்க கடலூரிலும் அதன் நடமாட்டம் தொடங்கியது. வந்து சென்று கொண்டிருந்த அரபு வணிகர்கள் தங்கி வாழவும் தொடங்கினர். இம் மாற்றம் அரபுக்கடல் ஊர்களிலிருந்து வங்கக்கடல் ஊர்கள் வரை ஏற்பட்டது.
ஏழாம் எட்டாம் நூற்றாண்டு வருகைகள் எண்ணிக்கையில் அடங்கும், ஒன்பதாம் நூற்றாண்டு வருகைகள் பல கப்பல்களாக இருந்தன. பதிமூன்றாம் நூற்றாண்டில் கலீஃபா ஹஜ்ஜாஜ் இபுனு யூசுப் காலத்தில் மிக அதிகமாக அரபுக்கள் கிழக்குக்கரையோரம் அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

4 - cuddalorer 4
கிழக்குக் கடற்கரையில் அரபு முஸ்லிம்கள் வந்திறங்கிய பட்டினங்கள் பனிரெண்டு என கணக்கிடுகின்றனர். அவற்றில் ஒன்று கடலூர். அப்போது அது அக்கரை என அழைக்கப்பட்டது. அரபு முஸ்லிம்கள் சிங்காரத் தோப்பிலும் குடியேறினர். பின்னர் முஸ்லிம்கள் வாழும் பகுதி சோனகக் குப்பம் எனப் பெயர் பெற்றது.
வணிகம் செழிக்க வாழ்வாதாரம் உயர சோனகர் எனக் குறிப்பிடப்பட்ட முஸ்லிம்கள் கடல் பகுதியிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு வந்து வாழத் தொடங்கினர். சோனகர் தெரு, பள்ளிவாசல் தெரு, மாலுமியர் தெரு, தைக்கால் தோணித்துறை ஆகியவை அவர்கள் குழுமி வாழுமிடங்களாகின. இங்கு நானூறு குடும்பங்கள் குடியேறியிருந்தன.
திரைகடலோடி திரவியம் தேடிய அவர்கள் பாவோடி கைத்தறித் துணிகளை கணிசமாக உற்பத்தி செய்தனர். பாவோடியும் தறிக் குழிகளிலும் சஞ்சரித்தவர்கள் கைத்தறி வணிகமும் செய்தனர்.
வீட்டின் முன்கட்டே வணிகக் கூடமாக அமைந்தது. நடுக்கட்டு கிடங்காகவும் பின்கட்டு வாழுமிடமாகவும் இருந்தன. இறுதியில் தோட்டம் உருவாகியிருந்தது. இவ்வாறே பெரும்பாலான வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
அய்ரோப்பியர்கள் இங்கு வந்து வணிகம் செய்யும் வரை முஸ்லிம்களே ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்காக பாய் மரக்கப்பல்கள் சோழ மண்டலக் கரையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றன. அவை மேற்கில் சென்றதை விட கிழக்கில் சென்றதே அதிகம்.
கிழக்காசிய நாடுகளில் முஸ்லிம்கள் ஆண்டுக் கணக்கில் தங்கி கச்சவடம் செய்திருக்கிறார்கள். சிலருக்குத்தான் இங்கு மட்டும் மனைவி, பலருக்கு இங்குமங்கும் மனைவிகள்.
இந்தோனேசியா முழுமையான முஸ்லிம்களின் நாடாதலால் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றியதால் அங்கு கைம் பெண்களைக் காண முடியாது. அந்த அழகிய செயலால் நம் முன்னோர் அங்கு நன்றாக வேரூன்றி இருக்கிறார்கள். அங்குமிங்கும் துணைவியர்.
மதரஸாபட்டினத்திலிருந்து புறப்பட்ட எஸ். எஸ். ரஜுலா, ஸ்டேட் ஆஃப் மதராஸ் கப்பல்கள் கடலூர் வந்து பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு நாகப்பட்டினம் சென்று பின் கோலாலம்பூர், சிங்கப்பூர் துறைமுகங்களை அடைந்திருக்கின்றன.
கைலிகள், நூல், கயிறு, வடங்கள் ஏற்றிமதியாகி தேக்குமரங்கள் இன்ன பிற பொருட்கள் இறக்குமதியாகியுள்ளன. கடலூர்க்காரர்கள் பர்மாவோடும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.
அய்ரோப்பியர் வருகைக்குப் பின் முஸ்லிம்களின் வணிகம் குறைந்தது. அவர்கள் இருந்த கிழக்காசிய ஊர்களில் ஆண்டுக்கணக்கில் தங்கிவிட்டார்கள். முதலாளிகளாக இருந்தவர்கள் தொழிலாளிகளாய் மாறிப்போனார்கள்.
கி.பி. 1746 இல் கடலூர் பிரிட்டானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் சோழ மண்டலக் கடற்கரையின் முக்கியத் துறைமுகமாக கடலூர் மாறியது.
நெல்லிக்குப்பத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை இனிப்பு வகைகள் பரங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்புக்களன்கள் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக மாறின. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேர்க்கடலைக் கொட்டைகள் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பயிரிடப்பட்டு நல்ல மகசூல் கிடைத்தது.
மணிலாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கடலைக்குப் பெயர் மணிலாக்கொட்டை. அதுவே மல்லாக்கொட்டை என மருவியது. கடலூர் மாவட்டமே மணிலாக் கொட்டை (மல்லாக்கொட்டை) மாவட்டமானது.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் துளைமுகத்தில்தான் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தார். அவர் தங்கியிருந்த தெரு இன்று கிளைவ் தெரு என அழைக்கப்படுகிறது.

நாடு விடுதலையடைந்த பின் சேலத்தில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்களும் வெள்ளைக்கற்களும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. 1985 வரை 150 ஊழியர்களுடன் கடலூர் துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கத் தோணிகளுடன் இருபத்து நாலுமணி நேரமும் துறைமுகம் பேரோசையோடு விளங்கியது. சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களின் மூச்சுக் காற்றில் முகத்துவாரம் இயங்கியது. நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் கண்சிமிட்டிக் கொண்டே இருக்கிறது. குட்எர்த் கப்பல் கட்டுமான நிறுவனம் கலங்கலைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. கடலூரைச் சேர்ந்த பட்டணவர் ஒருவருக்கு கிழக்கு மேற்குக் கடல்களில் பயணிக்கும் மிகப்பெரிய சரக்குக்கப்பல் ஒன்று உள்ளது.
கடலூர் எனும் ஒற்றைச் சொல்லில் அழைக்கப்படும் பட்டினம் இரு கடலூர், வண்டிப்பாளையம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், தேவனாம்பட்டினம், குண்டு உப்பளவாடி எனப் பல பகுதிகளைக் கொண்ட பெருநகராகும்.
கடலூர் முது நகரிலும் புதுப்பாளையத்திலும் மஞ்சக்குப்பத்திலும் குண்டு உப்பளவாடியிலும் முஸ்லிம்கள் திரளாக வாழ்கின்றனர். ஆற்காட்டு நவாப் கட்டிக் கொடுத்த பள்ளிவாசலோடு பதினைந்து பள்ளி வாசல்கள் உள்ளன. எட்டு தர்காக்கள் உள்ளன. நவாப் பள்ளிக்கு 1940இல் மேதகு ஆதாம்சேட் என்பவர் வாங்கிக் கொடுத்த தொழுபை விரிப்புகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
பெரும் வணிகரான ஆதம்சேட் பாகிஸ்தான் பிரிவினையின் போது இஸ்லாமாபாத்துக்கு புலம்பெயர்ந்தார். அவருடைய பலகோடி சொத்துகள் அரசுக்கு உடைமையாயின.
இது போன்ற சொத்துக்களுக்கு இந்திய அரசு ‘எதிரிச் சொத்து’ எனப் பெயரிட்டிருக்கிறது.

கடலூரைப் பற்றிய பல தகவல்களை ஹாஜி முகம்மது கமாலுத்தீன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இவர் கடலூர் செம்மண்டலத்தில் கிரஸன்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியை நடத்துகிறார். முதுநகரைச் சேர்ந்தவர்.
ஆங்காங்கு முஸ்லிம் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடலூர் அத்தகைய தொகுதியில்லாக விட்டாலும் ஒருமுறை அது முஸ்லிம் உறுப்பினரைப் பெற்றது. அவருடைய பெயர் சி. அப்துல் லத்தீப் என்ற ஹிலால். மும்பையில் கொடிகட்டிப் பறந்த ஹாஜி மஸ்தான் மிஸ்ரா இளமைக் காலத்தில் கடலூரில்தான் இருந்தார். இவருடைய உறவினர்கள் இன்றும் கடலூரில் வாழ்கின்றனர். "கமர்' எனும் சினிமா தியேட்டர் ஹாஜி மஸ்தானுடையதே.
பல்வேறுபட்ட பழக்க வழக்கங்களோடு வாழும் முஸ்லிம்களில் அரபு முஸ்லிம் வம்சாவழியினர் இன்றும் பெண் வீட்டோடு மாப்பிள்ளை செல்லும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். பிற முஸ்லிம்கள் பெண் வீட்டோடு அடைக்கலம் ஆகாமல் பிற ஊர்களிலும் சம்பந்தம் செய்கின்றனர்.
மேலும் கடலூர் சில மாமனிதர்களால் சிறப்புப் பெறுகிறது. பேரெழுத்தாளர் ஜெயகாந்தனும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும் கடலூர்க்காரர்கள் என்பதோடு ஒன்றாகப் படித்தவர்கள். ஆற்காடு சகோதரர்கள் ராமசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியார் இருவரும் கடலூர்க்காரர்களே. வன்னியர்களின் தலைவரான ராமசாமி படையாட்சியார் கெடில ஆற்றின் கரை மைந்தரே.
கடலூரைத் தவிர இரு முதலமைச்சர்களைப் பெற்றெடுத்த ஊர் வேறில்லை. மதராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சர் சுப்புராயலு ரெட்டியார். புதுவை மாநில முதலமைச்சர் வி. வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் கடலூரின் மைந்தர்கள்.
கடலூரில் அய்யா பெரியாரின் தடயங்கள் சில உண்டு. பெரியார் ஒரே ஒரு முறை ஒரு பெரிய ஆளுமையின் கால்களில் விழந்து ஆசிபெற்ற நிகழ்வுண்டு. அந்த ஆளுமை திருப்பாதிரிப் புலியூரில் இருந்த ஞானியார் அடிகள். தொடக்க கால நிகழ்வுகளில் ஒன்றான காலில் விழுந்ததைப் பற்றி பெரியாரிடம் கேட்ட போது "தமிழர்களிடம் பேரும் புகழும் பெற்றிருந்த தமிழர் தலைவராக ஞானியார் அடிகளின் கால்களில் மரியாதை நிமித்தமாகவே விழுந்தேன்'' என்றார். பின்னர் அவர் அச்செயலை செய்யவே இல்லை. ஞானியார் அடிகள் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் உரையாற்றுவார் என்றால் அவரிடம் சரக்கு எவ்வளவு இருந்திருக்கும்.

4 kadalor 4
பெரியார் கடலூரில் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு ரிக்சாவில் வந்தபோது பாம்பை அவர் மேல் வீசினர். பிற்காலத்தில் அந்த இடத்தில் அவருக்கு ஒரு சிலை எழுப்பினர். அந்த இடம்தான் கெடில ஆற்றுப்பாலம் தொடங்கும் முச்சந்தி.
கடலூர் கண்டு களிக்க வேண்டிய அருமையான அலைவாய்க்கரையூர். பெரும்பாலான துறைமுகப்பட்டினங்கள் ஆற்றின் முகத்துவாரத்திலேயே அமைந்துள்ளன. காவிரியாறு கலக்கும் பூம்புகார் போல் இல்லாவிட்டாலும் கடலூர் மூன்று ஆறுகளின் சங்கம இடமாக உள்ளது.
குண்டு உப்பளவாடி முகத்துவாரத்தில் தென்பெண்ணை கலக்கிறது. தேவனாம் பட்டினக் கடற்கரையில் கெடிலம் கலக்கிறது. கடலூர் முதுநகரின் பரவனாறு கலக்கிறது.
மீனவர்கள் வாழும் தேவனம்பட்டினக் கடற்கரை டச்சுக்காரர்களின் காலத்தில் அடிமை வியாபாரத்துறையாக இருந்துள்ளது. இங்குள்ளவர்கள் கடலாதிக்கம் செய்வதில் வலுத்தவர்கள்.
முஸ்லிம்களும் மீனவர்களும் பிறரும் கலந்து வாழும் கடலூர் முதுநகரை மீனவச்சேரி என்றே அழைக்கலாம். குண்டு உப்பளவாடி அமைதியாக வாழ்வதற்குரிய அருமையான பகுதி. திருப்பாதிரிப்புலியூர் கோவில்களும் வணிகத் தலங்களும் நிறைந்த பகுதி.
கடலூர் கேரளத்தின் வர்க்கலா நகரத்தை நினைவுப்படுத்தும் அற்புதமான ஊர். வர்க்கலா கடற்கரை உலகப் புகழ்பெற்றது. கடலூர் வெள்ளிக் கடற்கரை பரப்பளவில் பெரியது. அங்குள்ள பள்ளிவாசல்களிலும் "வாப்பாக்கள்' இங்குள்ள பள்ளிவாசல்களிலும் "வாப்பாக்கள்' அங்கு பெரியவர் நாராயனகுருவின் சிவகிரி மடம் என்றால் இங்கு திருப்பாதிரிப்புலியூர் கோவிலும் ஞானியார் மடமும். அரபுக்கடல் தாலாட்டுகிறது அங்கே; சோழமண்டலக் கடல் தாலாட்டுகிறது இங்கே.
பல கிராமங்களின் தொகுப்புத் தான் வர்க்கலா. அதைப்போல் பல சிற்றூர்களின் தொகுப்பே கடலூர்!

Read 158 times