ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018 13:50

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 10

Written by 
Rate this item
(0 votes)

நவீனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
அருமை மாணாக்கர்களே! ஃபிக்ஹ் எனும் ஷரீஆ சட்டக் கலையில் புதுப்புதுப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. ஆனால், பிரச்சினை என்ன என்பதை மிகச் சரியாக அறிந்து, அதற்கான விடை எங்கே, எதில் இருக்கிறது என்பதை நுணுகி ஆராய்ந்து, சரியான தீர்வைக் கண்டுபிடிப்பது மார்க்க

வல்லுநர்களின் பொறுப்பாகும்.
பிரச்சினை என்ன? எந்தத் துறை சார்ந்தது? அந்தத் துறையில் இதற்கு ஏதேனும் முன்னுதாரணம் உண்டா? இல்லை என்றால், மூலாதாரங்களில் அறியப்பட்டுள்ள பொதுவிதிகளில் எந்த விதியின்கீழ் இப்பிரச்சினை அடங்கும்? அவ்வாறு அடங்குவதற்கு பிரச்சினையின் எந்தக் கூறு அடிகோலியது? பல கூறுகள் இருப்பின், அக்கால மக்கள் வழக்கில் எந்தக் கூறு முதன்மையானது… என்பதையெல்லாம் விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்துத்தான் பிரச்சினைக்கு விடைகாண வேண்டும்.
வங்கிமுறை
எடுத்துக்காட்டாக, இன்றைய வங்கிமுறை கொடுக்கல் வாங்கலைக் கூறலாம்! நீங்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்கள். அது சேமிப்புக் கணக்காக இருக்கலாம்! இது, அக்காலத்தில், ஒருவரிடம் உங்கள் பொருளை அமானிதமாகக் கொடுத்துவைக்கும் ‘வதீஆ’ முறைக்குள் அடங்கும். அதற்கான சட்டப்படி, நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்த தொகையை மட்டுமே திரும்பப் பெற வேண்டும். கூடுதல் தொகை வாங்குவது கூடாது. அது வட்டியாகிவிடும்.
வேண்டுமானால், உங்கள் தொகையைப் பாதுகாக்கவும் வரவு-செலவைப் பதிவிடவும் வங்கிக்குச் செலவு பிடிக்கும். அதற்காக வங்கி உங்கள் கணக்கிலிருந்து சிறிதளவு தொகையை நியாயமாக எடுத்துக்கொள்ளுமானால், அது தவறாகாது. அதை விடுத்து, போட்ட காசைவிடக் கூடுதலாகப் பெறுவது எந்த வகையில் நியாயம்?
ஒருகால், உங்கள் சேமிப்பை ஏதேனும் ஹலாலான தொழிலில் முதலீடு செய்து, வங்கி இலாபம் ஈட்டுமானால், இலாபத்தில் உங்கள் தொகைக்கான சதவீத அடிப்படையில், அல்லது முன்பே செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொகையைக் கூடுதலாக நீங்கள் பெறலாம். இது அன்றைய கூட்டு வியாபார விதியின்கீழ் அடங்கும். அதே நேரத்தில், வியாபாரத்தில் வங்கிக்கு நஷ்டம் ஏற்படின், அதிலும் நீங்கள் பங்கெடுத்தாக வேண்டும்.
வங்கியில் நீங்கள் கடன் வாங்குகிறீர்கள். அதற்காக ஏதேனும் செக்யூரிட்டி தேவை. நிலம், நகை, வீடு போன்ற ஒன்றை அடைமானமாக வைத்தே கடன்பெற இயலும். அப்போது தவணை முடிந்தவுடன் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும்! வங்கி, அடைமானப் பொருளை உங்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இதையே ‘ரஹ்ன்’ என்போம். இதற்குமேல், கடனைவிடக் கூடுதல் தொகையை வங்கி கேட்டால், அது வட்டியாகும். வட்டி கூடாது. வட்டி வாங்குவதும் கூடாது; கொடுப்பதும் கூடாது.
அதே நேரத்தில், நீங்கள் கடனாகப் பெற்ற தொகையைத் தொழிலில் முதலீடு செய்கிறீர்கள்; இலாபமும் பார்க்கிறீர்கள்; வங்கியும் உங்களுடன் உடன்படிக்கை செய்துள்ளது. இந்நிலையில், கூட்டுவியாபார அடிப்படையில் வங்கிக்கு - வாங்கிய கடனுக்கேற்ப - இலாபத்தில் ஒரு பங்கு கொடுக்கலாம்! ஆனால், இங்கேயும் வாடிக்கையாளருக்குத் தொழிலில் இழப்பு ஏற்பட்டால், வங்கியும் தன் பங்கிற்கு இழப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஆக, வங்கி நடவடிக்கைகளில் கடன் கொடுக்கல், வாங்கல் செல்லும். இரண்டு தரப்பிலும் வட்டிக்கு அனுமதி கிடையாது. “ஆதாயம் ஈட்டும் ஒவ்வொரு கடனும் வட்டியாகும்” என்ற பொது விதியின்கீழ், வங்கித் தொழில் குறித்து தீர்வு காண்கிறோம். இன்னும் இதுபோன்ற, பல்வேறு புதிய கேள்விகள் நம்முன் உள்ளன. அவற்றுக்கான விடைகளை, மூலாதாரங்களில் இருந்து கண்டறிவது காலத்தின் கட்டாயமாகும்.

2 - ilam 2

வாடகைத் தாய் (Surrogate Mother)
தம்பதியர் சந்திக்கும் சவாலானதொரு பிரச்சினையே குழந்தைப் பேறின்மை. பொதுவாக எட்டில் ஒரு ஜோடி, குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களாக இருக்கலாம்! 50-60 விழுக்காடு பெண்ணும், 30-40 விழுக்காடு ஆணும் 10 விழுக்காடு கண்டுபிடிக்க இயலாத அம்சங்களும் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது!
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அறிவியல் முன்வைப்பது செயற்கை கருத்தரிப்பு. ஏழு முறையான செயற்கை கருத்தரிப்புகள் உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கால்நடை இனப்பெருக்கத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் செயற்கை முறை, படிப்படியாக மனிதர்களுக்கும் பரவத் தொடங்கி, பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டதுதான் வேதனை.
இந்த 7 முறைகளில் இரண்டு மட்டும் அவசியத்தை முன்னிட்டு செல்லும் என்றும் மற்றவை கூடாது என்றும் ஷரீஆ சட்ட வல்லுநர்கள் தீர்மானித்துள்ளனர். கூச்சமாக இருந்தாலும், அவசியம் கருதி அந்த இரண்டு முறைகளை மட்டும் குறிப்பிடுகிறேன். (தாய்மார்கள் மன்னிக்கவும்!)
7 செயற்கை முறை
1. கணவனின் விந்தணுவை எடுத்து, மனைவியுடைய கருப்பையின் கழுத்துப் பகுதியில், அல்லது யோனியில் வைத்து வளரச்செய்வார்கள். அது கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொண்டு கருத்தரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த முறையில், தம்பதியர் அல்லாத மற்றவருக்குப் பங்கில்லை என்பதுடன், பெற்றோர் - பிள்ளை உறவிலும் சிக்கலுக்கு இடமில்லை. எனவே, அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மார்க்கத்தில் இதற்கு அனுமதியுண்டு.
2. கணவனின் விந்து, மனைவியின் கருமுட்டை ஆகிய இரண்டையும் எடுத்து, ஐ.வி.எஃப் சோதனைக் குழாயில் (Test Tube) - ஒரு புறம் அடைப்பும் குறைந்த சுற்றளவும் கொண்ட கண்ணாடிக் குழாயில் - வைத்துக் கருவுறச் செய்வார்கள். பின்னர் உரிய நேரத்தில் குழாயிலிருந்து எடுத்து, மனைவியின் கருப்பையில் செலுத்திவிடுவர். கருப்பையின் சுவரைப் பிடித்துக்கொண்டு கரு வளரும். இதற்குப் பல லட்சங்கள் செலவாகுமாம்!
பிரிட்டன் விஞ்ஞானியான ராபர்ட் எட்வர்ட்ஸ், டாக்டர் பாட்ரிக் ஸ்டெப்போ ஆகியோர் இணைந்து 1978இல் சோதனைக் குழாய்மூலம் குழந்தை பிறக்கும் முறையை உருவாக்கினர். இந்த முறையில் முதன்முறையாக லூயிஸ் பிரௌன் என்பவர் பிறந்தார்.

2 - ilam 1
மிகவும் அவசியம் நேர்ந்தால் மட்டுமே இந்த முறை மார்க்கத்தில் அனுமதிக்கப்படும். இதிலும் கணவன் - மனைவி அல்லாத வேறு ஆணோ பெண்ணோ சம்பந்தப்படாத காரணத்தாலும் பெற்றோர் - பிள்ளை உறவு முறைக்குச் சிக்கல் இல்லாததாலும் இது அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சோதனைக் குழாயில் வளர்க்கப்படும்போதோ, குழாயிலிருந்து கருப்பைக்குள் செலுத்தும்போதோ விந்தணு, அல்லது கருமுட்டை மாறிவிடக் கூடாது என்பது மிகவும் முக்கியம்.
இந்த இரண்டுமுறை அல்லாத இதர ஐந்து முறைகள் மூலம் குழந்தையைத் தேடிக்கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல. அவற்றில் கணவன் - மனைவி அல்லாத மற்ற ஆண், அல்லது பெண்ணின் துணை நாடப்படுவதே காரணம். கணவனின் விந்தணுவிலோ, மனைவியின் கருமுட்டையிலோ பிரச்சினை என்றால், - அதாவது அவர்களுக்கு அறவே இல்லை என்றால் - வேறு குழந்தையை எடுத்து வளர்த்துக்கொள்ளலாம்! அதைவிட, (மனைவியிடம் மட்டும் பிரச்சினை எனும்போது) கணவன் மறுமணம் செய்துகொள்ளலாம்.)
முற்றிலும் புதிய கண்டுபிடிப்பான இந்த முறைகள் குறித்துத் தீர்மானிக்க மூலாதாரங்களில் கீழ்க்கண்ட நபிமொழிகள் கை கொடுக்கின்றன:
யார் தெரிந்துகொண்டே, தம் தந்தையல்லாத வேறொருவருடன் தம்மை இணைத்து (“நான் அவருடைய மகன்தான் என்று) வாதிடுகிறாரோ அவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்படும்.” (புகாரீ)
யார் தம் தந்தையல்லாத ஒருவரைத் தந்தை என வாதிடுகிறாரோ அவர் மீது, அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள், மனிதர்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்! அவர் செய்த கடமையான, கூடுதலான எந்த நன்மைகளையும் மறுமை நாளில் அல்லாஹ் அவரிடமிருந்து ஏற்கமாட்டான். (முஸ்லிம்)
கருணைக்கொலை (Euthanasia)
மற்றோர் உதாரணம் சர்ச்சைக்குரிய கருணைக்கொலை. மரணம் நிச்சயம் என்ற நிலையில், உபாதை மிகுந்து துன்பப்படுபவருக்கு மருந்து கொடுத்து அவருடைய உயிரைப் போக்கும் செயல் - என ஓர் அகராதியில் ‘கருணைக்கொலை’ என்பதற்குப் பொருள் சொல்லப்படுகிறது. இதையே Mercy Killing; அல்லது Euthanasia என்பர் ஆங்கிலத்தில்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் இப்படிக் குறிப்பிடலாம்: இனிமேல், மருந்துகளால் குணப்படுத்தி காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை, அவர்களது விருப்பத்தின் பேரில் கொலை செய்துவிடுவது. அதாவது குணப்படுத்தி வாழச்செய்யவும் முடியாமல், சாகவும்மாட்டாமல் தானும் வேதனை அடைந்து பிறரையும் சிரமப்படுத்திக்கொண்டு பல்லாண்டு காலம் கிடப்பதைவிட, சாத்வீகமான முறையில் உயிரிழக்கச் செய்துவிட்டால் எல்லாருக்கும் நிம்மதியல்லவா?
இதற்காக மருத்துவக் கருவிகளை அகற்றிவிடலாம்; அல்லது மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடலாம்; அல்லது டயாலிசிஸ் செய்யாமல் இருந்துவிடலாம்! இதனால் நோயாளி தானாகவே மெல்ல மெல்ல இறந்துபோவார்.
இந்தக் கொலை பல நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அந்தச் சிந்தனை தலைதூக்கிவருகிறது; பல சந்தர்ப்பங்களில் சப்தமின்றி நடந்தும்வருகிறது.
ஷரீஆ என்ன சொல்கிறது?
முதலில் கொலை என்பது கொடூரமானது; அதில் எப்படிக் கருணை இருக்கும்? நோயாளியே விரும்புகிறாரே என்றால், சாதாரண தற்கொலையும் அப்படித்தானே! உறவினர் சொல்கிறார்கள்; மருத்துவரே சொல்கிறார் என்பதற்காகக் கருணைக்கொலை செய்தால், கொலையில்லாமல் ஆகிவிடுமா? அப்படி அனுமதித்தால், சொத்துக்காகவோ, வேறு சுயநலத்திற்காகவோ உறவினர்களே கருணைக்கொலை செய்யமாட்டார்கள் என்பதற்கும் மருத்துவரும் அதற்குத் துணைபோகமாட்டார் என்பதற்கும் என்ன உத்தரவாதம்? பெற்றோரையே விஷ ஊசி போட்டுக் கருணைக்கொலை செய்யும் பிள்ளைகள் உருவாகிவிடமாட்டார்களா? சுருங்கக்கூறின், மனிதர்களிடம் கருணை இல்லாமல் போய்விட்டதால்தான் கருணைக்கொலை செய்கிறார்கள்.
ஷரீஆவைப் பொறுத்தமட்டில், யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதி கிடையாது. காரணம் உயிர் என்பது அவரது உடைமை அல்ல; இறைவன் கொடுத்த அருள். திருக்குர்ஆன், “உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்மீது கருணையுள்ளவன் ஆவான்” (4:29) என்று கூறி, தற்கொலைக்குத் தடை விதிக்கிறது.
உயிர்வாழ்வது சிரமம் என்பதற்காக யாரும் சாகத் துணியக் கூடாது. “உங்களில் யாரும், தமக்கு ஏற்பட்ட இடரின் காரணத்தால் சாவை விரும்ப வேண்டாம்!” என நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கிறார்கள். (புகாரீ, முஸ்லிம்)
நோய் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அதைக் குணப்படுத்தவே முடியாது என்றிருந்தாலும், அல்லது அந்நோய் அடுத்தவருக்குப் பரவுவதைத் தடுப்பதாக இருந்தாலும் கொலை செய்வதற்கு மார்க்கம் அனுமதியளிக்கவில்லை. நோயாளி தற்கொலை செய்வதோ, பிறர் அவரது அனுமதி பெற்று அவருடைய உயிரைப் போக்குவதோ இரண்டுமே தடை செய்யப்பட்டவைதான். முந்தியது தற்கொலை என்றால், இரண்டாவது படுகொலை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முற்காலத்தில் வாழ்ந்த ஒருவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. வலி தாங்காமல் துடித்த அவர் கத்தியை எடுத்து, தமது கையை வெட்டிக்கொண்டார். அதனால் இரத்தம் நிற்காமல் வழிந்தோடியது. இறுதியாக இறந்தேபோனார். அப்போது அல்லாஹ் கூறினான்: என் அடியான் தன் விஷயத்தில் என்னை முந்திக்கொண்டான். (இயற்கை மரணத்தைக் கைவிட்டு, செயற்கை மரணத்தைத் தேடிக்கொண்டான்.) அவனுக்கு நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (தடுத்து)விட்டேன். (புகாரீ, முஸ்லிம்)

2 - ilam 3
ஆக, கருணைக்கொலை என்பது நவீன காலத்துப் பிரச்சினையாக இருந்தாலும், செயல் பழையதுதான். புது வழிகளில் -அவர்களது கூற்றுப்படி, சாத்வீக வழிகளில்- நடக்கிறது கொலை. அவ்வளவுதான்.
மேற்சொன்ன மூலாதாரங்கள் அடிப்படையில்தான், இப்பிரச்சினைக்குத் தீர்வு கூறுகிறார்கள் மார்க்க வல்லுநர்கள். இப்படி, புதிதாகத் தோன்றும் இரத்த தானம், உறுப்பு தானம், மூன்றாம் பாலினம் போன்ற ஒவ்வொரு பிரச்சினைக்கும் மார்க்கத்தின் மூலாதாரங்களை ஆராய்ந்து, அவற்றிலிருந்து தீர்வு கண்டு மக்களை வழிநடத்த வல்லுநர்கள் குழு ஒன்று செயல்பட வேண்டும். இதுவரை வெளிவந்துள்ள இத்தகைய தீர்வுகளை மாணவர்களாகிய நீங்கள் கற்றுக்கொண்டு வெளிவருவது காலத்தின் கட்டாயமாகும்.
(சந்திப்போம்)

Read 143 times