புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018 06:08

இளம் ஆலிம்களே! உங்களைத்தான் 11, இறையியல் கோட்பாடு

Written by 
Rate this item
(0 votes)

 அ. முஹம்மது கான் பாகவி

மாணவக் கண்மணிகளே! அரபிக் கல்லூரியில் நீங்கள் மாசுமறுவற்ற முறையில் கற்க வேண்டிய மிக முக்கியமான கலை “இறையியல்” ஆகும். ‘கடவுள்’ என்ற தத்துவத்தையும் அதை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளையும் குறித்த துறையே ‘இறையியல்’ (Theology) எனப்படுகிறது. இதையே, இறைவனின் தன்மை (இறைமை), இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆகியன பற்றிய துறை என்றும் கூறுவர்.
மத்ரஸாக்களில் இதையே ‘அகீதா’ (நம்பிக்கை) என்று குறிப்பிடுவர். இறைவன் என்றால் யார்? அவனது மெய்மை என்ன? அவனுக்கே உரிய தனித்தன்மைகள் யாவை? அவன் நம்பச்சொன்ன இறை மார்க்கம், இறைத்தூதர், இறைமறை, வானவர்கள், மறுமை, மரணத்திற்குப்பின் உயிர் கொடுத்து எழுப்பப்படல், இறைவனின் விசாரணை, அவனது தீர்ப்பு, நல்லோருக்கு அழியா சொர்க்கம், தீயோருக்கு நரகம்… போன்ற நம்பிக்கைகள் தொடர்பாக அறிந்து, ஐயத்திற்கிடமின்றி திடமாக நம்புவதே ‘அகீதா’ எனப்படுகிறது.
இந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும்தான் மார்க்கத்தின் அஸ்திவாரம்; செயல்கள், வழிபாடுகள் அனைத்தும் அதன் கிளைகள். இந்த அடிப்படை நம்பிக்கைகளைத்தான் ஆரம்பமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் போதித்தார்கள்; மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்தார்கள்.
இருக்கின்றான் இறைவன்; அவன் ஒருவன்; அவனுக்கு இணைதுணை கிடையாது; எந்தத் தேவையும் இல்லாதவன். அவனை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனும் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவன் இப்படிப்பட்டவன் என்று சுட்டிக்காட்டுவதற்கு -அவனுக்கு நிகராக யாருமில்லை; எதுவுமில்லை.
அவன்தான் இந்தப் பேரண்டத்தைப் படைத்தான். அதிலுள்ள அனைவரையும் அனைத்தையும் படைத்தான். ஒவ்வொன்றுக்கும் ஒரு விதியை ஏற்படுத்தினான். அந்த விதியின்படி ஒவ்வொரு பொருளும் இயங்கிவருகிறது. அவன் அறியாது துரும்பும் அசையாது. அவனுக்குத் தெரியாமல் யாரும் எங்கும் எதையும் எப்படியும் செய்ய முடியாது.
நீங்கள் எண்ணுவது, கண் இமைப்பது, செய்வது, உங்கள் பிறப்பு, வாழ்க்கை, உயர்வு-தாழ்வு, சுகம்-துக்கம், எழுவது-வீழ்வது, இறுதியாக இறப்பு, இறப்புக்குப்பின் உயிர் கொடுத்து எழுப்புவது… என ஒவ்வோர் அசைவும் அவனது திட்டப்படியும் நாட்டப்படியுமே நடக்கிறது. அவை அனைத்தையும் அவனே நிகழ்த்துகிறான். எல்லாம் அறிந்தவன். சர்வ வல்லமை படைத்தவன். கருணையாளன். கடுமையாகத் தண்டிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். நல்வழி இது; தீவழி இது என தன் தூதர்கள் மூலம் அறிவித்தவன்; தன் வேதத்தில் விவரித்தவன்.

ஒற்றைக் கடவுள் கொள்கை
இதில் இரண்டு கோட்பாடுகள். 1. இறைவன் இருக்கின்றான். இந்தப் பிரபஞ்சம், வரையறுக்கப்பட்ட கச்சிதமான ஒரு விதியின்கீழ் இயங்கிவருவதே இதற்குச் சாட்சி. காரணம், வரையறுத்த அந்தப் பேராற்றல்தான் இறைவன்.
2. அவன் ஒருவன். கடவுள் பலராக இருந்திருப்பின் வானமும் பூமியும் என்றோ சீர்குலைந்திருக்கும். அதிகாரத்தை நிலைநிறுத்த ஒவ்வொரு கடவுளும் முயலும்போது போட்டி ஏற்பட்டு, நீயா-நானா என்ற தன்முனைப்பால் படைப்புகள் பரிதாபத்திற்குரிய நிலையை அடைந்திருப்பர்.

1 aalim9 4
இந்த ஒற்றைக் கடவுள் கொள்கை (தவ்ஹீத்)தான், மனிதன் படைக்கப்பட்ட நாளில் இருந்தே மனிதர்களின் நம்பிக்கையாக இருந்துவந்தது. இடையில், வல்லமைக்கு முன் பணியும் மனித புத்தியால், யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் வல்லமை உண்டோ அதையெல்லாம் கடவுளாக நம்ப ஆரம்பித்தான் மனிதன். சர்வாதிகாரிகள், ராஜாக்கள், குருக்கள், ஆசான்கள், ஆன்றோர்கள், சாதனையாளர்கள்… என யாரைக் கண்டெல்லாம் பிரமித்துப்போனானோ அவர்களையெல்லாம் கடவுளாக்கி, சிலைகள் வடித்து வழிபடத் தொடங்கிவிட்டான் மனிதன்.
ஒரு கட்டத்தில் பெற்ற தாயைப் பெண் தெய்வம் என்றான். தந்தையை, ‘ஆளாக்கிய சாமி’ என்றான். பிறந்த மண்ணை, செய்யும் தொழிலை, காப்பாற்றிய மருத்துவரை, கற்பித்த ஆசிரியரை, கை கொடுத்த நண்பனை, மனதுக்குப் பிடித்த நடிகரை, வாக்களித்த பொது மக்களை, பதவி கொடுத்த முதல்வரை, நெருக்கடியில் உதவியவரை… இப்படிக் கொஞ்சமும் விவஸ்தையே இல்லாமல் கண்டவரையெல்லாம், கண்டதையெல்லாம் கடவுள் என்று சொல்லி ஏமாந்துபோனான் சாமானியன்.
வேதங்களில் ஓரிறை
இறைவேதங்கள் அனைத்திலும் ஒற்றைக் கடவுள் கொள்கைதான் பறைசாட்டப்பட்டுள்ளது; பலதெய்வக் கொள்கை மறுக்கப்பட்டுள்ளது; கண்டிக்கப்பட்டுள்ளது. இதோ இறைவேங்களில் இறுதியான பரிசுத்த மாமறை திருக்குர்ஆன் பகர்வதைப் பாருங்கள்:
(நபியே!) “என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, என்னையே வழிபடுங்கள்” என்று நாம் அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் அனுப்பிவைக்கவில்லை. (21:25)
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் தூதரை நாம் அனுப்பியிருந்தோம். (அவர்கள்) “அல்லாஹ்வையே வழிபடுங்கள்; தீய சக்திகளைத் தவிர்த்திடுங்கள்” என்றே பரப்புரை வழங்கினார்கள். (16:36)
யூத, கிறித்தவ வேதங்கள்
திருக்குர்ஆன் மட்டுமன்றி, யூத, கிறித்தவ வேதங்களான விவிலியங்களும் ஒற்றைக் கடவுள் கொள்கைக்கே சாட்சியம் அளிக்கின்றன. இறைத்தூதரை, ‘இறைவன்’ என்று வருத்திக்கொண்ட மனிதர்களின் பிழைக்கு வேதம் என்ன செய்யும்?
விவிலியம் பழைய ஏற்பாடு கூறுவதைக் கவனமாகப் படியுங்கள்!
உன்னை அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின என்னையன்றி உனக்கு வேறெ தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்!
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கின்றவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்! (யாத்திராகமம், 20:2-5)
இந்நிலையில், அக்கால யூதர்கள், இறைத்தூதரான உஸைர் (அலை) அவர்களை (எஸ்றா) தேவனின் குமாரர் என்று சொல்லிவந்தார்கள் எனத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. (9:30)
விவிலியம் புதிய ஏற்பாடு (பைபிள்) சொல்லும் தீர்ப்பைப் பாருங்கள்!
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக! (லூக்கா, 4:8)
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. (மத்தேயு, 7:21)
உண்மை இவ்வாறிருக்க, இறைவனின் அடியாரும் தூதருமான ஈசா (அலை) அவர்களை – இயேசுவை - கர்த்தரின் (அல்லாஹ்வின்) குமாரர் என்கின்றனர் கிறித்தவர்கள் சிலர் என எடுத்துரைக்கின்றது திருக்குர்ஆன் (9:30).
இன்னும் சிலர், பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் சேர்ந்து ஒருமித்த கடவுள் என்பர். இதையே ‘திரித்துவம்’ (Trinity) என்கிறார்கள். இதையும் குர்ஆன் சுட்டிக்காட்டத் தவறவில்லை. (5:73)
வேறுசிலர், மூன்றின் மொத்தமும் கடவுள்தான்; ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் கடவுள்தான் என்பர். இதன்படி, கடவுள்கள் மூவர் என்றாகும்.

இந்து வேதங்கள்
இந்துக்கள் தங்களின் வேதங்கள் என்றும் உபநிஷத்கள் என்றும் போற்றுகின்ற ஏடுகள் சொல்வதை இனிக் காண்போம்:
1. யா இக் இத்முஸ்தி இ (ரிக் வேதம்: 6:45:16) சமஸ்கிருத வாக்கியமான இதன் பொருள்: வழிபாட்டுக்குரியவன் இறைவன் ஒருவனே!
2. மா சிதன்யதிவி சன்சதா (ரிக்வேதம், 8:11) பொருள்: அவனையல்லாது வேறு எவரையும் வழிபடாதீர்கள்.
3. சந்தம் தமப்ரவசந்தியே அஸம்பூதம், உபாஸதே ததபூய இவ தே தமயே ஸம்பூத்யாம்ரதா (யஜூர் வேதம், 40:9). பொருள்: யார் அசம்பூதியை –இயற்கையை- வழிபடுகிறார்களோ அவர்கள் இருளில் இருக்கிறார்கள். படைக்கப்பட்டதை வழிபடுபவர்கள் ஆழ்ந்த இருளுக்குள் செல்கிறார்கள்.
4. ஏகம் ஏவல் அத்வீதயம் (சாந்தோ சியா உபநிஷத், 6:2:1). பொருள்: அவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை.
5. நாதஸ்தி பிரதிம அஸ்தி (ஸ்வேத்தாஸ் வரதா உபநிஷத், 4:19). பொருள்: அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை.
6. பிறப்பும் முடிவும் அற்ற என்னை, மயங்கிய இவ்வுலகு அறிவதில்லை. (பகவத் கீதை, 7:25)
இம்மக்கள் தாங்கள், வேதங்கள் என்று நம்பும் இவற்றின் கூற்று ஓரிறைக் கொள்கையாக இருக்க, பலதெய்வக் கொள்கையை எப்படி ஏற்றனர் என்று தெரியவில்லை. ஒரே பரம்பொருள் என்று கூறும் இந்து சமயம், எங்கும் நிறைந்த, எப்போதும் உள்ள, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, எல்லாவற்றிலும் நிறைந்த சர்வ வல்லமை கொண்ட பரம்பொருள், பல்வேறு வடிவங்களாக வெளிப்படுகிறது என்று சொல்கிறதாம்!

1 aalim9 5
மனிதர்களின் சராசரி அறிவுக்கும் புலனுக்கும் புரிவதற்காக வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் பரம்பொருள் ஒன்றே என்பது இந்து மதத்தின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)
ஆக, ஒற்றைக் கடவுள் கொள்கையை – தவ்ஹீதை - ஏதோ ஒரு வகையில் ஒப்புக்கொள்ளும் இச்சமயத்தார், சுற்றிவளைத்து அந்த ஏகனுக்கு இணைகளாக – நிகர்களாகப் பல படைப்புகளை நம்புகின்றனர். படைப்பாளன் ஒதுபோதும் படைப்பாக இருக்க முடியாது; படைப்பின் வடிவத்தையும் பெற முடியாது. அவனுக்கு நிகராக எந்தவொன்றும் இல்லை -என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
இதனாலேயே, திருக்குர்ஆன்மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்கள், ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுள் என்றோ, கடவுளின் மறுபிறவி என்றோ, கடவுளைப் போன்றவர் என்றோ ஒருகாலும் சொல்லமாட்டார்கள்.
அவர் இறைத்தூதராகவோ பெரிய மகானாகவோ இருக்கட்டும்! ராஜாதிராஜனாகவோ இருக்கட்டும்! பெற்ற தாயாக, சொல்லிக்கொடுத்த குருவாக, வேலை கொடுத்து அரவணைத்த முதலாளியாக, யாராகவும் இருக்கட்டும்! யாருமே கடவுளுக்கு நிகரானோர் அல்லர்; நிகரானோர் என எண்ணுவதுகூட ‘ஷிர்க்’ எனும் இணை கற்பித்தல் ஆகிவிடும் – என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்கள் ஆவர்.
                                                                                                                                                                                                         (சந்திப்போம்)...........

Read 337 times