செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018 07:07

மண்ணின் வரலாறு - 13 நாலு வகை மதங்களிருந்த நாகப்பட்டினம்

Written by 
Rate this item
(0 votes)

சோழ மன்னர்களின் கடற்கரைப் பட்டினங்கள் பலவாக இருந்தாலும் அவற்றில் மூன்று பட்டினங்கள் முக்கியமானவை. அவை காவிரிபூம்பட்டினம், அதிராம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகும்.
திருநாகை என்றும் நாகை காரோணம் என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் நாகப்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றன. நாகர் என்ற காட்டு மக்கள் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும் நாகஅரசன் ஒருவன் அவர்களை ஆண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஆதி காலத்தில் இப்பகுதி ‘புன்னாக வனம்’ என அழைக்கப்பட்டது. புன்னை மரத்தின் மறேறொரு பெயர் நாகமரம். எனவே நாகமரங்கள் சூழ்ந்திருந்த ஊர்கள் நாகப்பட்டினம், நாகூர் என ஆனதாம். அதன் காரணமாக நாகை, நாகூர் என ஊர்ப் பெயர்கள் அமைந்ததாகவும் செவி வழிச் செய்திகள் புழங்குகின்றன.
மிகப் பழமையான நகரங்களில் ஒன்று நாகப்பட்டினம். காஞ்சிபுரத்தைப் போல சமயங்களின் இருப்பிடமாகவும் விளங்கியுள்ளது நாகப்பட்டினம்.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் தொண்டி துறைமுக நகரை சமனத்தைச் சேர்ந்த இலவோன் ஆண்டதாக தரவுகள் உள்ளன. அக்கால கட்டத்தில் நாகையும் சமனர்களின் நகராக இருந்திருக்கிறது. நாகை பவுத்தர்களின் நகராக விளங்கியதற்கான தரவுகளும் உள்ளன.
பல்லவர் ஆட்சி இங்கு பரவியிருந்த காலத்தில் பழைய நாகையில் சமனத்தை பின்பற்றியோர் பலர் இருந்தனர். பார்கவநாதர் கோவில் எனும் சமன சமயக் கோவிலே இன்று பாசுபதேஸ்வரர் கோவிலாக மாறியிருப்பதாக கூறுவர். தஞ்சையைச் சேர்ந்த சில ஊர்களில் சமணக் கோவில்கள் உள்ளன.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். சோழர்களின் துறைமுகமாய் விளங்கிய நாகை சோழ குல வல்லிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்ததாம். பர்மிய வரலாற்று நூலில் நாகையில் அசோகப் பேரரசன் கட்டிய புத்தவிகாரம் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். சீனப் பயணி யுவான் சுவாங் கூட இங்கிருந்த புத்த விகாரம் பற்றி குறிப்பிட்டுள்ளாராம்.
இராசராச சோழனும் அவனுக்குட்பட்ட வெளிநாட்டு அரசன் ஒருவனும் ‘சூடாமணி விக்கிரகம்’ என்ற புத்தர் கோவிலை நாகையில் கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு வரை சூடாமணிக் கோவில் சிறந்து விளங்கியுள்ளது. ராஜராஜப்பெரும்புள்ளி, ராஜேந்திர சோழப்பெரும்புள்ளி, சோழப்பெரும்புள்ளி என புத்த விகாரங்கள் ஆங்காங்கு இருந்தன.
1856 க்கும் 1870 க்கும் இடையில் நாகை வெளிப்பாளையம் நாணயக்காரத் தெரு ஆகிய இடங்களில் 350 புத்தவிகாரங்கள் கண்டெடுக்கப்படுள்ளன. இவை 870 முதல் 1250 வரையுள்ள காலத்தவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கல்கத்தாவிலுள்ள இந்தியன் பொருட்காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சோழப் பேரரசின் தலைநகராகவும் பவுத்த சமயம் வேரூன்றியிருந்த பகுதியாகவும் வணிகப் பேரூராகவும் வெளிநாட்டினருக்கு தமிழ்நாட்டின் வாயிலாகவும் நாகப்பட்டினம் இருந்திருக்கிறது.
சமணம், பவுத்தம் ஆசீர்வகம், சைவம், வைனவம் ஆகிய மதங்களில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம். எதையும் பின்பற்றாமலும் இருக்கலாம். இத்தகைய நிலைமைதான் தமிழகம் முழுவதும் இருந்து வந்தது.
இந்த அழகிய நிலையை ஏழாம் நூற்றாண்டு நொறுக்கிப் போட்டது. திருஞான சம்பந்தன் எனும் சீர்காழிக்காரர் பாண்டிய அரசியையும் அரசனையும் தன் வசப்படுத்தி சமணர்களைக் கழுவிவேற்றிய காலகட்டம் கறுப்பு நிலாக்காலம் சம்பந்தனின் ஆரிய சூழ்ச்சி இன்னும் கூட சரியாக அம்பலப்படுத்தப்படாமலிருக்கிறது.
எட்டாம் நூற்றாண்டில் நாகையில் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட பவுத்தக் கோவில் ஒன்று இருந்தது. இதைப் பற்றிய குறிப்புகள் வெளிநாட்டுப் பயணி மார்க்கோ போலோவின் நூல்களில் உள்ளன. இக்கோவிகளில் இருந்த புத்தரின் தங்கச் சிலையை திருமங்கையாழ்வார் கொள்ளையிட்டுச் சென்றுதான் திருவரங்கம் கோவிலின் நான்காவது மாடத்தைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
சமணத்தை சைவம் அழித்ததும் பவுத்தத்தை வைணவம் அழித்ததும் வரலாறாக உள்ளது. அந்த அழிவாயுதத்தை ஏந்திக்கொண்டே இப்போதும் சில வெறியர்கள் அலைகிறார்கள். கடந்தகால வரலாறு நமக்கு எச்சரிக்கையாக உள்ளது.
முற்காலத்தில் சென்னையைப் போலவே நாகையும் வளர்ந்தது. சென்னை நகரையொட்டிய பகுதிகளுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் ஏற்பட்ட ரயில்பாதை நாகை – தஞ்சை ரயில்பாதை. இது 1861 – இல் தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகே 1876 – இல் தூத்துக்குடிக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதுவரை நாகைத் துறைமுகம் மரக்கலங்களால் நிரம்பி வழிந்தது. தூத்துக்குடியால் நாகை சரிவைச் சந்தித்தது.
1941 வரை நாகையிலிருந்து வங்கக் கடலில் பயணித்து கல்கத்தா, ரங்கூன் வரை கப்பல்கள் போய் வந்தன. அதே சமயம் இந்துமகா கடலைத் தொட்டு அரபிக் கடலில் பயணித்து பம்பாய், கராச்சி வரையும் கப்பல்கள் சென்று வந்தன.
மதராஸிலிருந்து புறப்பட்ட எஸ்.எஸ்.ரஜுலா போன்ற பயணியர் கப்பல்கள் நாகையைத் தொட்டு சிங்கப்பூர், மலேயா வரை சென்று திரும்பின.
தமிழ்நாடு, கேரளம் கன்னடம் ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து எஃகு பித்தளைப் பொருட்கள் வெண்கலப் பாத்திரங்கள் நாட்டு மருந்துகள் துணிமணிகள், பீடிப் பொதிகள், மிளகாய்ச் சிப்பங்கள் ஆகியவை நாகையிலிருந்து மலேயாவுக்குச் சென்றன.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாகை டச்சுக்காரர்களிடம் இருந்தது. நாகை இயறகைத் துறைமுகமாக இல்லாவிட்டாலும் வையாற்றின் முகத்துவாரத்திலிருக்கிறது. கப்பல் பயணிகள் படகுகளில் சென்றே கப்பலில் ஏறினர். என்றாலும் நாகை இன்று வரை மிகப் பெரிய மீன் பிடித் துறைமுகம். கடல் வளம் காலாதி காலமாக வளர்ந்து வருகிறது.
19 ஆம் நூற்றாண்டில் நாகை வழியாகவே தஞ்சை அரிசி இலங்கைக்கு சென்றது. நாகைக்கு தெற்கேயுள்ள கோடிக்கரைக்கும் இலங்கை காங்கேசன் துறைக்கும் உள்ள தொலைவு 45 கி.மீ. பாய்மரக் கப்பலில் பயணித்தால் ஆறு மணி நேரத்தில் ஈழத்தமிழைக் கேட்கலாம்.
மூவேந்தர் காலத்திலிருந்து 1902 வரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆட்களும் பொருட்களும் கோடிக்கரை வழியாக சென்று வந்தன. அக்கரையிலிருப்போர் படகில் படகில் இக்கரைக்கு வந்து திரைப்படம் பார்த்துச் செல்வது வழக்கமாய் இருந்துள்ளது. எவ்விதத் தடையும் அப்போது கிடையாது. கடலுக்கு வேலி போடும் முட்டாள்கள் அப்போதில்லை.
இலங்கையிலிருந்து நாகைத் துறைமுகத்துக்கு ஏலம், கிராம்பு, பாக்கு, புகையிலையோடு யானைகளும் வந்திறங்கின. பர்மாவிலிருந்து தேக்கு மரங்கள் தோணியில் கட்டியிழுத்து வரப்பட்டன. தாய்லாந்த் போன்ற கிழக்காசிய நாடுகளிலிருந்து யானைகளும் குதிரைகளும் இறக்குமதியாகின.
நாகப்பட்டினத்திற்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குமிடையே படகுகள் செல்லத்தக்க பாலம் (LIFT SPAN BRIDGE) ஒன்று 1957 இல் கட்டப்பட்டிருக்கிறது. பெரிய படகுகளும் கடல் மணலை அள்ளும் கருவிகளும் இதன் கீழ் செல்லலாம். இதன் நீளம் 320 அடி.
நாகப்பட்டினத்தை புயல் தொட்டுத் தழுவி கட்டியணைக்காத காலங்கள் குறைவு. 1681 இல் அடித்த புயல் டச்சுக்காரர்களின் கோட்டையையே சிதைத்தது. 1952 – 1955 என வந்த புயல்கள் கடலோரத்தையே காணாமல் செய்தன. தூரத்து இடிமுழுக்கம் கூட நாகையில் பெரும் மழையுடன் கரையேறும் 2004 டிசம்பர் சுனாமியில் மரணித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர், நவம்பர் வந்தாலே போது நாகை நடுங்க ஆரம்பித்து விடும். நடுக்கடல் பயணத்தைத் தடுத்து விடும்.
அரேபியர்கள் கிழக்குக் கரைத் துறைமுகப்பட்டினங்களில் குடியேறியதை சங்க இலக்கியங்களோடு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் பதிவு செய்துள்ளன. பூம்புகாரில் அமைந்திருந்த யவனச்சேரி போல நாகப்பட்டினத்திலும் அரபுக் குடியேற்றம் இருந்தது. நூற்றுக்கணக்கான குதிரைகள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு சோழ, பல்லவ மன்னர்களால் வாங்கப்பட்டுள்ளன.
நாகை அரேபியர்களால் ‘மலே பட்டான்’ என அழைக்கப்படிருக்கிறது. அண்ணலார் காலத்துக்குப் பின் அரேபியர்கள் முஸ்லிம்களாய் மாறி காலாதிகாலமாக செய்த இறக்குமதி ஏற்றுமதிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். நாகையில் வந்திறங்கிய அரபு வணிகர்களோடு சோழ மண்டல வணிகர்கள் நீண்டகாலமாக வணிக உறவைப் பேணி வந்ததோடு வாழ்க்கை உறவுகளையும் கொண்டாடி வந்துள்ளனர்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபு மக்கள் கப்பல் கப்பலாய் குடும்பத்தோடு புலம் பெயர்ந்து வந்த பிறகு குளச்சலிலிருந்து பழவேற்காடு வரை குடியேறியதால் ஓர் புதிய உறப்பாலம் அமைந்திருக்கிறது. பழவேற்காடு பாய் மரக்கப்பல்கள் ஆங்காங்கிருந்து பட்டினங்களில் உறவு பேணியும் தொழில் செய்தும் குளச்சலைத் தாண்டியும் சென்றுள்ளன. நடுத் தமிழகத்தின் நடுப்பகுதி துறைமுகங்களாய் நாகூரும் நாகையும் அமைந்திருந்ததால் காயல்பட்டின – கீழக்கரை வணிகர்கள் தொழில் நிமித்தம் இரு நகர்களிலும் ஏராளமாய் வந்து தங்கி வணிகம் செய்துள்ளன. இரு நகரங்களிலும் அதிகமான மரைக்காயர்கள் வந்தவாசியாயிருந்தும் சொந்தவாசியாய் மாறிப் போயினர்.
இரு நகரங்களிலும் ஏராளமான பாய்மரக்கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. பன்னாட்டு வணிகர்களும் வந்து போய்க் கொண்டிருந்தனர். கி.பி.பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பயணங்கள் அதிகமாக இருந்தன. அங்கு புத்தமதம் வேகமாக பரவியிருந்ததால் இரு நாட்டு உறவுகளும் சுமூகமாக இருந்தன. சுங்க வருவாயால் சோழ அரசு செழித்தது.
செட்டியார்களும் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டிருந்தாலும் முஸ்லிம் வணிகர்களே முன்னிலை வகித்தனர். இதைப் பற்றிய சங்கதியை போர்த்துகீசியர் பயணி பார்போசா பதிவு செய்துள்ளார்.
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக் கீசியர்களும் டச்சுக்காரர்களும் நாகப்பட்டின வணிகத்தை தம் வசப்படுத்தினர். அவர்கள் மலாக்கா முதல் இலங்கை வரை வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தனர். முஸ்லிம் வணிகர்களின் கப்பல் வணிகம் பரங்கியரால் பாதிக்கப்பட்டாலும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு இணக்கமாக இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, தென்னாட்டின் பிற துறைமுகங்களுடன் தொடர்ந்து வாணிபம் செய்து வந்தனர்.
18, 19 ஆம் நூற்றாண்டுகளில் நாகூர் – நாகை துறை முகங்கள்தான் தென்னிந்திய கடல் வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தன. கடலிலிருந்து கடுவையாற்றின் முகத்துவாரத்துக்குள் 500 டன் எடையுள்ள கப்பல்கள் கூட நேரடியாக சென்று வரக் கூடியதாக இருந்தது.
1799 இல் நாகப்பட்டினம் பகுதி ஆங்கிலேயரின் ஆளுகைக்கு வந்தது. வேதாரண்யத்திலிருந்து உப்பு, வெங்காயம் போன்ற பொருட்களும் கொண்டு வரப்பட்டு ஏற்றுமதியாகின.
ஆற்காடு நவாபுகளும் தஞ்சை மன்னர்களும் முஸ்லிம்களின் வணிகத்துக்கு பல சலுகைகள் அளித்தனர். ஆங்கிலேயரும் முந்தைய ஆட்சியாளர்கள் அளித்த சலுகைகளைத் தொடர்ந்தனர். நாகூரும் நாகப்பட்டினமும் பாய்மரக் கப்பல்களாலும் கப்பல்காரர்களாலும் நிரம்பி வழிந்தன. இரு துறைமுகங்களும் முஸ்லிம்களின் துறைமுகம் – ‘MOOR PORTS’ என அழைக்கப்பட்டன. இங்குள்ள முஸ்லிம் வணிகர்கள் ‘சோழியர்’ எனக் குறிப்பிடப்பட்டனர். 1815 இல் ஆங்கிலேயரின் கடலூர் வணிக மையம் நாகையுடன் இணைக்கப்பட்டது.
மலாக்கா, சுமத்திரா, கெதா ஆகிய நாடுகளுக்கும் கப்பல் வணிகம் தொடர்ந்தது. துணி வகைகளே முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. மலாக்கா, சீனா, ஜாவா ஆகிய கிழக்காசிய நாடுகளிலிருந்து சர்க்கரை, சந்தண மரம், யானைத் தந்தம் மெழுகு, தகரம் ஆகியவை இறக்குமதியாகின. சுமத்திராவிலிருந்து குதிரைகளும் தாய்லாந்திலிருந்து யானைகளும் கூட தமிழகம் வந்து சேர்ந்தன.
நாகை – நாகூரைச் சுற்றியுள்ள ஊர்களெங்கும் தறிகளின் ஓசை தடங்களில்லாமல் கேட்டன. பலவகையாக துணிமணிகள் கட்டுக்கட்டுகளாக அலைவாய்க் கரைக்கு வந்து சேர்ந்தன. அவை தூர கிழக்கு நாடுகளுக்கு மட்டும் செல்லவில்லை, அய்ரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.
நாகூரில் தயாரிக்கப்பட்ட திரைச் சேவைகள், விரிப்புகள், வண்ண வளைவுகள் கொண்ட அலங்காரத் துணிகள் ஆகியவற்றுக்கு அய்ரோப்பியச் சந்தையில் நல்லவிலை கிடைத்தன. இவற்றைக் கடல் கொண்டு செல்ல நாகூரில் மட்டும் 400 க்கு மேற்பட்ட கப்பல்கள் இருந்தன.
இப்பகுதிகளில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டோர் தொகை தொகையாய் வாழ்ந்தனர். 4000 நெசவாளார்கள், 1023 தறிகள், 1000 சலவையாளர்கள், 230 வண்ண ஓவியம் வரைவோர், 300 சாயக்காரர்கள் இருந்ததாக ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர்.
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஊதா துணிக்கு ஐரோப்பாவில் நல்ல சந்தை இருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து அமெரிக்காவுக்குக் கூட துணிமணிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கைக்கு நெல், அரிசி, துணி வைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அங்கிருந்து பாக்கு, மிளகு, வாசனைப் பொருட்கள், உலர்ந்த மீன், புகையிலை, முத்துக்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இங்கிருந்து இலங்கை, பர்மா, சிங்கப்பூர், பினாங்கு துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல்களும் முஸ்லிம்களால் இயக்கப்பட்டன.
கலகத்தாவிலிருந்து காலிகட் வரை (வங்கக் கடல் – அரபுக் கடல்) கரை வழிப்போக்குவரத்து நாகை – நாகூர் நகரங்களை மிகப்பெரும் சந்தைக் கூடமாக்கியது. இங்கு நாணயங்கள் கூட தயாரிக்கப்பட்டன. அவை ‘நாகப்பட்டின பகோடா’ என அழைக்கப்பட்டன.
நடுத்துறைமுகப்பட்டினங்களான நாகையும் நாகூரும் கப்பல் கட்டும் தளமாகவும் விளங்கியுள்ளது. தம் தேவைகளை நிறைவு செய்த கப்பல் தயாரிப்புக் கூடங்கள் ஆங்கிலேயருக்கும் மேலைக் கடற்ககரை வணிகர்களுக்கும் கூட கப்பல்களை கட்டிக் கொடுத்துள்ளன.
கிழக்காசிய நாடுகளில் வணிகத்துக்காக தங்கியவர்கள் அங்கு தம் முத்திரைகளைப் பத்திதுள்ளனர். 1770 கெதா நாட்டில் வாழ்ந்த நாகை வணிகர் ஜமாலுத்தீன் அமைச்சராக இருந்ததோடு ‘டத்தோ ஸ்ரீ ராஜா’ எனும் பட்டத்தையும் பெற்றிருந்தார். இவர்தான் அரசர் சார்பில் ஆங்கிலேயரோடு பேசி வணிக ஒப்பந்தங்கள் செய்தார்.
1786 இல் பிரான்ஸிஸ் லை தலைமையில் பினாங்கு உருவான போதும் 1824 இல் சிஙகப்பூர் உருவான போதும் அங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அக்காலகட்டத்தில் நாகூரும் நாகையும் அந்நாடுகளோடு பெருமளவில் வணிகத்தொடர்புகள் கொண்டிருந்தன. முஸ்லிம்கள் வணிகர்களாக மட்டும் வாழவில்லை. கப்பலோட்டிகளாகவும், மாலுமிகளாகவும் தொழில் வல்லுநர்களாகவும் வாழ்ந்தனர்.
விடுதலை பெற்ற பின்னர் நாகப்பட்டினம் ஒளியிழந்தது. சென்னையைப் போல் வளர வேண்டிய துறைமுகப்பட்டினம் களையிழந்தது. தமிழகத்தின் நடு நாயகமாய்த் திகழும் நகரம் உயர வேண்டிய அளவுக்கு உயரவில்லை.
ரோலிங் மில், ரயில்வே தொழிற்சாலைகள் இடம் மாறிப் போயின. வளர்ந்து வந்த கல்லூரிகள் குறைந்து போயின.
ரெட்டை நகர்களான நாகையும் நாகூரும் முஸ்லிம்கள் கை கோர்த்துக் கொண்டிருக்கும் ஒரே நகராகி விட்டது. நாகூர் நாகராட்சியில் ஒன்று சேர்ந்து விட்டது.
நாகையில் முஸ்லிம்கள் 25% விழுக்காடு இருக்கிறார்கள். மரைக்கார் 60% ராவுத்தர் 30% உருது மொழி பேசுவோர் 10% என முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மாற்று மதச் சகோதரர்களோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மும்முரமாய் வாழ்ந்தவர்கள் இன்று பல்வேறு தொழில் செய்கிறார்கள். கல்வியை கண்ணெனப் பேணி பல்வேறு தளங்களில் முன்னணியில் உள்ளார்கள். 75% விழுக்காடு பெண்கள் கல்வியில் சிறந்துள்ளார்கள்.
கடற்கரைப் பகுதிகள், வெளிப்பாளையம், காடம்பாடி போன்ற இடங்களில் முஸ்லிம்கள் திரளாக உள்ளனர். மரைக்கார் பள்ளி, மீரா பள்ளி, கமாலியா பள்ளி, யாஉசேன் பள்ளி, புதுப் பள்ளி, முகைதீன் பள்ளி எனப் பல பள்ளிவாசல்கள் உள்ளன.
தொடக்க காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களோடு நாகைக்கு வணிகத்துக்காக வந்து குடியேறியவர்களில் முக்கியமானவர்கள் ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள். அவ்வாறு வந்து குடியேறிய முக்கிய குடும்பம்தான் ‘நாவலாசிரியர் ஹஸன்’ அவர்களுடையது.
தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல கேரள முஸ்லிம்களும் மேமன் முஸ்லிம்களும் குடியேறி வாழ்ந்துள்ளனர். வணிகங்கள் சுருங்க மேமன்கள் தம் குடும்பங்களோடு புலம் பெயர்ந்து விட்டனர். கேரள முஸ்லிம்கள் நாகையைத் தம் தாயகமாகக் கொண்டு விட்டனர்.
மேமன் முஸ்லிம்கள் கட்டிய பள்ளிவாசலே கமாலியா பள்ளிவாசல், கமாலியா பளிவாசலைக் கட்டிய மேமன்கள் அவர்கள் தொழில் செய்த கடற்கரை அருகிலேயே ஒரு சிறிய பள்ளியைக் கட்டினர். அது இன்றும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. மேமன்களின் பூர்வீகம் குஜராத் இவர்கள் சென்னையில் கணிசமாக வாழ்கின்றனர்.
ஒரு காலத்தில் கப்பல்கள் நிறைந்திருந்த துறைமுகத்தில் இன்று உரமும் கரியும் மட்டுமே இறக்குமதியாகின்றன. என்றாலும் தமிழகத்தின் மிகப்பெரும் மீன் பிடித் துறைமுகமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலேயரின் முக்கிய கேந்திரமாய் விளங்கிய நாகையில் இருந்த ஆட்சியர் ஸ்டெப் போர்தான் சிங்கப்பூரைக் கைப்பற்றி ஆண்டார். இவருக்கு நாகையில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. தனித்த தமிழ் தலைவர் மறைமலை அடிகளுக்கும் நாகையில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. நாகையின் மைந்தன் அவர்.
முஸ்லிம்களின் அரசியல் நுழைவை முன்னெடுத்துச் சென்றதில் நாகைக்குத் தனியிடம் உண்டு. அதை நினைவுகூரும் தெரு சர் அகமது தெரு.
மிகப்பெரும் கப்பல் வணிகராய்த் திகழ்ந்த சர் அகமது மரைக்காயரை நினைவுகூராகவே சர் அகமது தம்பி அமைந்திருக்கிறது. அன்றைய முஸ்லிம்களிடையே சிறப்பான ஆளுமையாகத் திகழ்ந்த மரைக்காயர் நீதிக்கட்சியின் முக்கியப் பிரமுகராய்த் திகழ்ந்தவர், மதராஸ் ராஜதானியை நீதிக்கட்சி (Justice party) ஆண்ட போது டெல்லி நாடாளுமன்ற உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மரைக்காயரின் இல்லம் ‘டயமண்ட் மகால்’ எனப் பெயர் பெற்றிருந்தது. இன்றும் அது பழம் வரலாற்றைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது. மரைக்காயரின் உறவினர் மதிப்பிற்குரிய அமீர் சுல்தான் பிற்காலத்தில் மதராஸ் ராஜதானியின் மேலவையை அலங்கரித்தார்.
இடைக்காலத்தில் 1957 இல் இசைமுரசு நாகூர் அனிபாவும் அடுத்து கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனும் நாகைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அண்மைக் காலத்தில் சகோதரர்கள் நிஜாமுதீனும், தமீமுல் அன்ஸாரியும் சட்டசபை உறுப்பினர்களாகியுள்ளனர்.
முந்தைய காலகட்டத்தில் நாகையின் குறிப்பிடத்தக்கவர் நாகை பாட்சா எனும் திராவிடர்க் கழக பிரமுகர். பின்னாட்களில் இவர் இறைவனைத் தொழும் நிலைக்கு உயர்ந்தவர்.

Read 397 times