வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018 12:50

முதல் தலைமுறை மனிதர்கள் 14

Written by 
Rate this item
(0 votes)

சேயன் இப்ராகிம்

காதிமே மில்லத் திருச்சி K.S அப்துல் வகாப் ஜானி
திருச்சி மாவட்டம் பல சுதந்திரப் போராட்ட வீரர்களையும், சமுதாயச் சேவையாளர்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளது. காஜா மியான் இராவுத்தர், ஸையத் முர்த்துஸா ஹழ்ரத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும், மறுமலர்ச்சி ஆசிரியர் A.M. யூசுப், K.S. அப்துல் வஹாப் ஜானி, A.K. பாஷா, எழுத்தரசு A.M. ஹனீப், குலாம் ரசூல், மதனி போன்ற சமுதாயச் சேவையாளர்களும் இம்மாவட்டத்தைச் சார்ந்தவர்களே! இவர்களுள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவிகள் வகித்த திருச்சி K.S. அப்துல் வஹாப் ஜானி சாகிப் அவர்களைப் பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
பிறப்பு - கல்வி:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் திருச்சி நகரில் பல பீடிக் கம்பெனிகள் செயல்பட்டு வந்தன. பெரும்பாலான பீடிக் கம்பெனிகளின் அதிபர்களாக முஸ்லிம்களே இருந்தனர். பீடிசுற்றும் தொழிலிலும் முஸ்லிம்களே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி நகரில் செயல்பட்டு வந்த பீடிக் கம்பெனிகளில் குறிப்பிடத்தக்கது மான்மார்க் பீடிக் கம்பெனியாகும். அதன் உரிமையாளர் அப்துல் ஸமது சாகிபின் இரண்டாவது மகனான ஜானிபாய் என்றழைக்கப்பட்ட அப்துல் வஹாப் 14.11.1922ல் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை திருச்சி அரசினர் இஸ்லாமிய உயர் நிலைப்பள்ளியில் கற்றுத் தேறிய ஜானிபாய், பட்டப்படிப்பிற்காக அந்நகரிலிருந்த செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். எனினும் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. அவரது தகப்பனார் அப்துல் ஸமத் சாகிப் 1942ஆம் ஆண்டு திடீரென மரணமுற்றதால், பீடிக் கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக கல்லூரிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பினை இளம் வயதிலே ஏற்றுக் கொண்டார்.
அரசியல் ஈடுபாடு:
பீடிக் கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்தது. அப்போது அகில இந்திய முஸ்லிம் லீக் மிகவும் விறுவிறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போதிருந்த பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்களைப் போல் அவரும் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார். முஸ்லிம் லீக் நடத்திய ஊர்வலங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டார். 1946ஆம் ஆண்டு திருச்சி நகர முஸ்லிம் லீகின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதே ஆண்டு திருச்சி மாவட்ட முஸ்லிம் லீகின் பொதுக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது கட்சிப்பணிகள் தீவிரமடைந்தன. நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், இந்திய நாட்டு முஸ்லிம்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து தனது பணிகளைத் தொடர்ந்தார். பிரிவினைக்குப் பின்னர் முதன் முதலாக கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு பங்களா பணிமனையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொண்டார்.
1958 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாடு அக்கட்சியின் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பின்னர் சற்றுத் தொய்வடைந்திருந்த அக்கட்சி இம்மாநாட்டிற்குப் பின்னர் புத்துயிர்பெற்றது. தமிழகமெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவராக ஜானி சாகிப் பொறுப்பு வகித்து மாநாட்டின் வெற்றிக்காகப் பெரிதும் உழைத்தார். அதே ஆண்டு தஞ்சை மாவட்டம் அய்யப்பேட்டையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டிலும் கலந்து கொண்டார். இதன் பின்னர் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 மற்றும் 18தேதிகளில் சென்னை நகரில் காயிதேமில்லத் தமைமையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். திருச்சி மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளராகத் தேர்ந்தெடுக்கபட்ட அவர் அப்பதவியில் பல ஆண்டுகள் நீடித்தார்.
சட்டமன்ற மேலவை உறுப்பினர் (M.L.C)
தமிழக அரசியலில் ஒரு திருப்பமாக, அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தி.மு.கவும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கும் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்த கொண்டு போட்டியிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலுக்கு முன்னர் இரு கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும். பாராளுமன்றத்திற்கும், தமிழக சட்டமன்றத்திற்கும் சேர்த்து நடைபெற்ற இந்தப் பொதுத் தேர்தலில் முஸ்லிம் லீகிற்கு இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளும், ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. எனினும் இந்தத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கும் சட்ட மன்றத்திற்கும் போட்டியிட்ட முஸ்லிம்லீக் வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெறவில்லை இதனால் முஸ்லிம் லீக் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இடம் பெறாவிட்டாலும், சட்டமன்ற மேலவையிலாவது (M.L.C) இடம் பெற்று சமுதாய மக்களின் குரலை ஒலிக்க வேண்டும் என்று கருதிய மாநிலத் தலைமை தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணாவைச் சந்தித்து சட்டமன்ற மேலவையில் முஸ்லிம்லீகிற்கு ஒரு இடம் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தது. இதனை அண்ணாவும் ஏற்றுக் கொண்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்களுக்கான ஒரு இடத்தை முஸ்லிம்லீகிற்கு ஒதுக்கினார். இந்த இடத்திற்கு யாரும் எதிர்பாராதவிதமாக, ஜானிபாயை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்தது. அவரும் வெற்றிபெற்று மேலவை உறுப்பினரானார். 1962ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டுவரை அவர் மேலவை உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் அவர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1974ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1974ஆம் ஆண்டு மேலவைக்கு நடைபெற்ற தேர்தலின் போதும் முஸ்லிம்லீக் மூன்றாவது முறையாகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தது. எனவே அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு மேலவை உறுப்பினரானார். மொத்தம் 18 ஆண்டுகள் அவர் தொடர்ந்து சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வகித்துச் சாதனை புரிந்தார். மேலவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், பக்தவத்சலம், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய ஐந்து தலைவர்கள் தமிழ் நாட்டின் முதல்வர்களாக இருந்துள்ளனர். இந்த ஐந்து முதலமைச்சர்களுடனும் அவர் நெருங்கிய தோழமையும் நட்பும் கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டிற்குப்பிறகு நடைபெற்ற சட்டமன்ற மேலவைத் தேர்தலில் முஸ்லிம் லீகின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வடகரை பக்கர்சாகிப் மற்றும் J.M. மியாக்கான் சாகிப் ஆகியோருடன் இணைந்து ஜானிசாகிப் பணியாற்றினார்.
தனது 18ஆண்டுகள் மேலவை உறுப்பினர் பதவிக் காலத்தில் ஜானிபாய் பல்வேறு பொதுப் பிரச்சனைகளுக்காகவும் முஸ்லிம்களின் நலன்கள், உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் பேசியுள்ளார். பல்வேறு மானியப் கோரிக்கைகள். சட்ட முன்வடிவுகள், மசோதாக்கள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், ஒத்திவைப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பேசுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்புகளையெல்லாம் அவர் நன்முறையில் பயன்படுத்திக் கொண்டார். அவரது அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, கண்ணியமான அணுகுமுறை அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.
மாநில முஸ்லிம்லீக் தலைவர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராகவும், தமிழ் மாநிலத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் 5.4.1972 அன்று மரணமுற்றார். அவருக்குப் பதிலாக மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டதால் ஒரு இடைக்கால ஏற்பாடாக மாநிலத் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்த தென்காசி முதலாளி மு.ந.அப்துர் ரஹ்மான் சாகிப் தலைவராக நியமிக்கப்பட்டார். (அவர் 6.4.72 முதல் 11.5.72 வரை பதவி வகித்தார்.) மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையான பொதுக்குழுக் கூட்டம் 12.05.1972 அன்று சென்னையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில லீகின் தலைவராக ஜானி சாகிப் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத் தலைவராக ஏ.கே.ஏ. அப்துல் சமது சாகிப் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சியின் முன்னணிப் பிரமுகர்களும், தொண்டர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஜானி சாகிப் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏ.கே.ஏ. அப்துல் ஸமது சாகிபை எதிர்த்து காயிதே மில்லத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தயாராக இருந்ததாகவும், எனவே போட்டியைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சமரச ஏற்பாடாக ஜானி பாய் தேர்ந்தெடுக்கபட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜானிபாய் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். பொறுப்புக்கு வந்து ஓராண்டுக்குப்பின்னர் அதாவது 1973 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை நகரில் மாநில லீகின் மாநாட்டை அவர் வெற்றிகரமாக நடத்தினார். இம் மாநாட்டில் லீகின் தேசியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட், கேரளச் சிங்கம் சி.ஹெச். முகம்மது கோயா, தளபதி திருப்பூர் முகையதின் சாகிப், சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துல் ஸமது சாகிப். அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இம்மாநாட்டிற்கு வசூலான தொகையில் செலவு போக மிச்சமிருந்த ரூ.45ஆயிரம் சென்னை மரைக்காயர் தெருவில் செயல்பட்டு வரும் மாநில லீக் தலைமையத்தின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை சிறப்பாக வழிநடத்திய பெருமை ஜானி சாகிபுக்கு உண்டு. எனினும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அவர், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி 1975ம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவரது பதவி விலகலையடுத்து 12.2.1975 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துல் சமது சாகிப் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஜானி பாய் 12.05.1972 முதல் 13.05.1975 வரை தலைவராகப் பொறுப்பு வகித்தார்.)
தோல்வியும் பிளவும்:
1968ஆம் ஆண்டு லீகின் உள்கட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அதன்படி 29.9.1968 அன்று திருச்சி மாவட்ட மு°லிம் லீக் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஜானி சாகிப் மற்றும் பி.ஹெச். நஸீருத்தீன் சாகிப் ஆகியோர் ஒரு அணியாகவும். மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப் ஆதரவாளர்களான ஏ.கே. ஜமாலி சாகிப் மற்றும் ஹெச்.எம்.சுல்தான் சாகிப் ஆகியோர் ஒரு அணியாகவும் பதவிகளுக்குப் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஜானி சாகிப் வெற்றி வாய்ப்பை இழந்தார். மறுமலர்ச்சி ஆசிரியர் யூசுப் அணியைச் சார்ந்த ஹெச். எம். சுல்தான் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் திருச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் மாநில அளவில் கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. தேர்தல் நடைபெற்று முடிந்த மூன்று தினங்கள் கழித்து மாநில செயற்குழுக் கூட்டம் அக்டோபர் மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப். ஏ.கே. ஜமாலி சாகிப், ஏ.கே. பாஷா உள்ளிட்ட ஏழுபேர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். (கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஏ.எம். யூசுப் பின்னர் தமிழ்நாடு முஸ்லிம்லீக் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்திவிட்டு பின்னர் முஸ்லிம்லீகில் இணைந்தார். அது தனி வரலாறு.) இந்த நடவடிக்கைக்குப் பின்னர் 29.9.68 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை ரத்துச் செய்த மாநிலத் தலைமை 17.11.68 அன்று மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இத்தேர்தலில் ஜானி சாகிப் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுப் பணிகள்
சொந்தத் தொழில், அரசியல் பணிகள் தவிர திருச்சி நகரில் பல்வேறு பொது நல அமைப்புகளிலும் ஜானிபாய் அங்கம் வகித்து மக்கள் பணியாற்றினார். திருச்சியில் சிறந்த சமுதாய நிறுவனமாகத் திகழ்ந்திடும் முஸ்லிம் லிட்டரரி சொசைட்டி (இலக்கிய சங்கம்) யின் தலைவராக 1953ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். திருச்சியிலுள்ள ஆற்காடு நவாப் என்டோமெண்ட் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சென்னை மேடவாக்கத்தில் தொடங்கப்பட்ட காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழுத் தலைவராகவும் இருந்து சிறப்பான கல்விப் பணியாற்றியுள்ளார்.
பண்பு நலன்கள்:
ஜானி சாகிப் மிகச் சிறந்த நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார். தனது தொழில் மூலம் கிடைத்த வருமானத்தின் கணிசமாக பகுதியை கட்சிக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் செலவிட்டார். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் விருந்தோம்பும் பண்பினராக அவர் விளங்கினார். அவரது இல்லத்திற்கு வந்து அவரது இனிமையான விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளாத தலைவர்களே இல்லை எனலாம். கள்ளம் கபடமற்ற வெள்ளை மனமும், பரந்த பண்பும் கொண்ட அவர் தன்னுடைய பீடிக் கம்பெனியில் பணியாற்றிய ஏழை எளிய மக்களுக்கும் பெரிதும் உதவிகள் புரிந்து வந்தார்.
குடும்பம்:
ஜானி சாகிபின் தாயார் பெயர் ஷாஜாதி. கே.எஸ். அப்துல் ஜப்பார், கே.எஸ். அப்துல் ரஷீத் ஆகியோர் அவரது சகோதரர்கள். இவரது திருமணம் 1950ஆம் ஆண்டு நடைபெற்றது. துணைவியார் பெயர் கைருன்னிஸா இவரது திருமணத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், எம்.எஸ்.அப்துல் மஜீத் சாகிப், எம்.எஸ். ரஜாக்கான் சாகிப், தி.மு.க பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணா, நடிகர் கே.ஆர் . இராமசாமி, ஆர்.எம்.வீரப்பன் ஆகிய தலைவர்களும் முஸ்லிம் லீகின் முன்னணிப் பிரமுகர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ஜானி சாகிப் - கைருன்னிஸா தம்பதியினருக்கு ஜஹாங்கீர், ஷாஹின்ஷா என்ற இரு மகன்களும், குல்ஷாத், சமீம் பானு, மம்லா, சகீலா என்ற நான்கு மகள்களும் உண்டு.
முடிவுரை:
சிறந்த சமுதாய ஊழியராகத் திகழ்ந்த ஜானிபாய் 19.7.1988 அன்று காலமானார். சமுதாய ஊழியர் என்று பொருள்படும் ‘காதிமே மில்லத்’ என அவரை கட்சியினர் அழைத்துப் பெருமைப்படுத்தினர். கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களுக்குப் பிறகு மிக நீண்ட காலம் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் பிரதிநிதியாகயிருந்த ஒரே முஸ்லிம் லீக் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கொள்கையில் உறுதியும். லட்சியப் பிடிப்பும் கொண்டவராக அவர் திகழ்ந்தார். அவரது சமுதாயப் பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்பது உறுதி.
நன்றி:
ஜானி சாகிப் குறித்த தகவல்களை அளித்த முஸ்லிம்லீக் தலைமை நிலையப் பேச்சாளர் வேலூர் V.S. பஸ்லுல்லாஹ் மற்றும் திருச்சி நகர முஸ்லிம் லீக் செயலாளர் ஹுமாயூன் ஆகியோருக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

Read 411 times