வியாழக்கிழமை, 26 ஜூலை 2018 06:43

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 13

Written by 
Rate this item
(0 votes)

 அ. முஹம்மது கான் பாகவி

பாகப் பிரிவினைச் சட்டம்
ஆருயிர் மாணவச் செல்வங்களே! நீங்கள் நன்கு கற்றுத் தேற வேண்டிய கலைகளில் பாகப்பிரிவினைச் சட்டம், அல்லது வாரிசுரிமைச் சட்டமும் ஒன்றாகும். இதுவும் ஷரீஆ சட்டங்களில் ஒன்றாக இருந்தாலும், அதன் முக்கியத்துவத்தைக் கருதி தனிக் கலையாகவே இது மதிக்கப்படுகிறது.
பாகப்பிரிவினைச் சட்டவியல் என்பதை, இல்முல் ஃபராயிள் (Law of Distribution of Estate) என்பர். அல்லது ‘இல்முல் மவாரீஸ்’ (வாரிசுரிமைச் சட்டவியல் - Law of Succession) என்றும் கூறுவர். அதாவது இறந்துபோன ஒருவர் சொத்துகளை விட்டுச்சென்றிருந்தால், அவருடைய வாரிசுகளில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு அச்சொத்துகளில் கிடைக்கும் என்று வரையறுக்கப்பட்ட சட்டத் தொகுப்பே இக்கலையாகும்.
வாரிசுரிமை என்பது, இயல்பான ஒரு நடைமுறையாகும். முற்கால, பிற்கால மனித சமுதாயங்களில் பெரும்பாலோர் இதை ஏற்று நடந்தது மட்டுமன்றி, ரஷியா தவிரவுள்ள எல்லா நாடுகளும் இன்றும் இதை ஏற்றுள்ளன. வாழ்க்கையில் கடின உழைப்புக்கு ஒரு தூண்டுகோலாகவும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரு உந்துசக்தியாகவும் வாரிசுரிமை அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் உங்கள் வாரிசுகளை, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச்செல்வதே சாலச்சிறந்ததாகும். (புகாரீ, முஸ்லிம்)
ஆக, உயிரோடு வாழும்போது தன்னை நம்பியுள்ள குடும்பத்தாருக்காக உழைக்க வேண்டிய மனிதன், தன் மறைவுக்குப் பிறகு அவர்கள் தன்னிறைவோடு வாழ்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டும் செல்ல வேண்டும். அப்போதுதான், வாரிசுரிமைச் சட்டப்படி அவன் விட்டுச்செல்லும் செல்வத்தை வாரிசுகள் உடைமையாக்கிக்கொண்டு நிம்மதியாக வாழ வழிபிறக்கும்.
ஷரீஆ சட்டம்
உலகிலுள்ள பாகப்பிரிவினைச் சட்டங்களிலேயே இஸ்லாமிய ஷரீஆ சட்டமே வரையறுக்கப்பட்ட, தெளிவான, நியாயமான சட்டமாகும்; வாரிசுக்கும் சொத்தை விட்டுச்சென்றவருக்கும் இடையிலான அன்பு, உடன் வாழ்தல், உதவி, பொறுப்பு, இரக்கம் ஆகிய அம்சங்களை அளவுகோல்களாகக் கொண்டு வாரிசுரிமை வழங்குவதுடன், கிடைக்கும் பங்கின் விகிதத்தை நிர்ணயிக்கவும் செய்கிறது ஷரீஆ சட்டம்.
இந்த வகையில், உறவுகளில் குறிப்பிட்ட நான்கு குழுவினருக்குப் பாகப்பிரிவினையில் பங்கு ஒதுக்கியுள்ளது ஷரீஅத். 1. இறந்தவருடனான அன்பிலும் பாசத்திலும் அதிகப் பங்கு வகிப்போர். உதாரணம்: மகன்கள். 2. வாழ்நாளில் அதிகமாக அவருடனேயே கலந்து வாழ்ந்தவர். உதாரணம்: மனைவி. 3. அவர் வாழ்ந்தபோது தமக்குப் பலமாகவும் பாதுகாப்பாகவும் கருதிய உறவுகள். உதாரணம்: சகோதரர்கள். 4. அவருக்கு யாருடன் பரஸ்பர இளைப்பாறுதலும் பரிவும் இருந்ததோ அத்தகைய மற்ற உறவினர்.
இதனால்தான், வாரிசுகளை வரிசைப்படுத்துகையில், பின்வரும் நியதியை இஸ்லாம் கவனத்தில் கொள்கிறது: இறந்தவரின் இடத்தை வாரிசு வகித்தல்; குடும்பத்தின் பெயரைக் காத்தல். இந்த அம்சங்கள் உள்ள உறவினருக்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார் என்பது தெளிவு.
அறியாமைக் காலம்
இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதைக் கருத்தில் கொண்டால்தான், இஸ்லாத்தின் வருகை எவ்வளவு பெரிய வசந்தம் என்பது புலனாகும். அன்று அந்த இணைவைப்பாளர்களில் ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசுகளில் வயதுக்கு வந்த ஆண்களுக்கு மட்டுமே அவரது சொத்தில் பங்கு தருவார்களாம்!
இதற்கு அவர்கள் கற்பித்த காரணம்தான் விநோதமானது. ஆம்! ஆண்களில் பருவ வயதை அடைந்த பெரியவர்கள்தான் போரைச் சந்திப்பவர்கள்; வழிப்பறி மற்றும் கொள்ளையை எதிர்கொள்பவர்கள். இவ்வாறு சொல்லி பெண்கள், குழந்தைகள், பலவீனர்கள் ஆகியோருக்குச் சொத்துரிமையை மறுத்துவந்தனர்.

inheritance
ஆனால், இஸ்லாத்தில் உறவினர்களில் ஆண்களாகட்டும பெண்களாகட்டும், ஆண்களிலேயே பெரியவர்களாகட்டும் சிறுவர்களாகட்டும் அனைவருக்கும் வாரிசுரிமை உண்டு. அதே நேரத்தில், உறவின் நெருக்கம் மற்றும் தொலைவைப் பொறுத்து, கிடைக்கும் பங்கில் வாரிசுகளிடையே ஏற்றத்தாழ்வு உண்டு.
இந்தியாவில் கிறித்தவ வாரிசுரிமைச் சட்டம் 1925இல்தான் நிறைவேற்றப்பட்டது. இந்து வாரிசுரிமைச் சட்டமோ 1956இல்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், முஸ்லிம் வாரிசுரிமைச் சட்டம் கி.பி. 625ஆம் ஆண்டுவாக்கில் திருக்குர்ஆன்மூலம் அருளப்பெற்றது. அதனை நபி (ஸல்) அவர்கள்தம் வாழ்நாளில் செயல்படுத்தினார்கள். பின்னர் நபித்தோழர்கள் தம் ஆட்சிகளில் நடைமுறைப்படுத்தினார்கள். இன்றுவரை உலக முஸ்லிம்கள் இச்சட்டத்தையே பின்பற்றிவருகிறார்கள்.
வாரிசுரிமை முதல் வசனம்
அன்சாரி நபித்தோழர் அவ்ஸ் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 3ஆம் ஆண்டு (கி.பி. 625) நடந்த உஹுத் அறப்போரில் வீர மரணம் அடைந்தார்கள். அன்னாருக்கு உம்மு குஜ்ஜா (ரலி) என்ற துணைவியாரும் மூன்று மகள்களும் இருந்தனர். அவ்ஸ் அவர்கள் விட்டுச்சென்ற சொத்துகளை, அவருடைய தந்தையின் சகோதரர் புதல்வர்களான சுவைத், அர்ஃபஜா (ரலி) ஆகியோர் -அன்றைய வழக்கப்படி- கைப்பற்றிக்கொண்டனர். அவ்ஸின் துணைவியாருக்கோ மகள்களுக்கோ ஒன்றும் தரவில்லை.
இதுகுறித்து, உம்மு குஜ்ஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். உடனே அவ்விருவரையும் அழைத்து விசாரித்தபோது அவ்விருவரும், “அல்லாஹ்வின் தூதரே! உம்மு குஜ்ஜாவின் குழந்தைகள் குதிரையில் ஏறப்போவதில்லை; பாரத்தைச் சுமக்கப்போவதில்லை; எதிரியைத் தாக்கப்போவதில்லை” என்று சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “சரி! நீங்கள் செல்லலாம்! இப்பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் ஏதேனும் ஆணை பிறப்பிக்கின்றானா என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறி அனுப்பிவிட்டார்கள். அவ்வாறே அல்லாஹ் பின்வரும் வசனத்தை அப்போது அருளினான்:
தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இது, (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:7) (தஃப்சீர் வசீத்)
இதே காலகட்டத்தில் மற்றொரு நிகழ்ச்சி! நபித்தோழர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபித்தோழர் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் ‘உஹுத்’ போரில் வீர மரணம் அடைந்த பிறகு, அவருடைய துணைவியார் இரு மகள்களை அழைத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்.
“அல்லாஹ்வின் தூதரே! இவ்விரு பெண்கள் சஅத் பின் அர்ரபீஉ அவர்களின் மகள்கள். சஅதோ, தங்களுடன் உஹுத் போரில் கலந்துகொண்டு வீர மரணம் அடைந்துவிட்டார். இவர்களின் தந்தையின் சகோதரர் (சஅதின் சகோதரர்) சஅத் விட்டுச்சென்ற சொத்துகளை எடுத்துக்கொண்டார். இவர்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. (உரிய) பணம் இருந்தால்தான், இவ்விருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடியும்” என்று முறையிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், இதுதொடர்பாக அல்லாஹ் முடிவு செய்வான் என்று கூறிவிட்டார்கள். அப்போதுதான் பின்வரும் வசனம் அருளப்பெற்றது:
ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பாகத்திற்கு சமமானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு, அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், (பெற்றோர்) விட்டுச்சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டு பாகங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். ஒரே ஒரு பெண் (மட்டும்) இருந்தால், (சொத்தில்) பாதி அவர்களுக்குக் கிடைக்கும். (4:11)
உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சஅத் (ரலி) அவர்களுடைய சகோதரருக்கு ஆளனுப்பி அவரை வரவழைத்தார்கள். அவர் வந்தவுடன், “நீர் சஅதுடைய இரு மகள்களுக்கும் அவரது சொத்தில் மூன்றில் இரு பாகங்களும் இப்பெண்களின் தாய்க்கு (சஅதின் மனைவிக்கு) எட்டில் ஒரு பாகமும் கொடுத்துவிடுவீராக! மீதிதான் உமக்குரியது” என்று தீர்ப்பளித்தார்கள். (திர்மிதீ)
அதாவது பின்வரும் விகிதப்படி பங்கிட வேண்டும்:
சஅத் (ரலி) (100%)
________________________________________
சகோதரர் மனைவி மகள்-2
20.83% 12.50% 66.67%
(மீதி) (1/8) (2/3)

சுருங்கக் கூறின், சஅத் (ரலி) அவர்கள் விட்டுச்சென்ற சொத்தில் சுமார் 21% மட்டுமே பெற வேண்டிய அவர் சகோதரர், ஆண் மகன் என்ற காரணத்திற்காக நூறு விழுக்காட்டையும் எடுத்துக்கொண்டார். அதில் சுமார் 79% பாகத்தைப் பெண்களாகிய மனைவிக்கும் மகள்களுக்கும் அவர் கொடுத்தாக வேண்டும் என அல்லாஹ் ஆணையிட்டான்.
மார்க்கத் தலையீடு ஏன்?
ஒருவர் தமக்குச் சொந்தமான சொத்தைத் தாம் விரும்பியவருக்கு, விரும்பிய அளவு கொடுத்துவிட்டுப்போகட்டும் என்று, பாகப்பிரிவைனை உரிமையை அவரிடமே விட்டுவிடலாமே! இதில் மார்க்கம் ஏன் தலையிட வேண்டும் என்று சிலர் எண்ணலாம்!
முதலில் ஓர் உண்மை. சொத்துக்காரருக்குச் சொத்தை அருளியது யார்? இறைவன்தானே! அப்படியானால், உண்மையான உரிமையாளன் அல்லாஹ்தான். அவன் சொல்வதன்படி நடப்பதுதான் தர்மம். அடுத்து மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாறும் இயல்பு உள்ளவன்; அந்தரங்கம் அறியாதவன். பாகப்பிரிவினை உரிமையை மனிதன்வசம் ஒப்படைத்தால், வெளிப்படையில் தனக்கு நெருக்கமான, விருப்பமான உறவுக்காரருக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மற்றவர்களைப் புறந்தள்ளிவிட வாய்ப்பு அதிகம் உண்டு.
இவர் யாரை வெறுக்கிறாரோ அவர் உண்மையில் இவர்பால் அந்தரங்கத்தில் அதிக அன்பு கொண்டவராக இருந்துவிடலாம்! இவர் யாரை விரும்புகிறாரோ அந்த உறவினர் மறைமுகமாக இவருக்குப் பெரிய துரோகியாகக்கூட இருந்துவிடலாம். ஆக, யார் நமக்கு எதார்த்தத்தில் நன்மை பயப்பவர் என்பதை அறிவது எளிதன்று.
இதையே அல்லாஹ் இவ்வாறு கூறுவான்: உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் பிள்ளைகளில் உங்களுக்குப் பலன் அளிப்பதில் யார் மிகவும் நெருக்கமானவர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (இந்தப் பங்கீட்டு முறை) அல்லாஹ்வால் விதிக்கப்பட்டதாகும். (4:11)
பாகப்பிரிவினைக்குமுன்
இறந்துபோன ஒருவர் விட்டுச்சென்ற சொத்துக்களை, அவருடைய வாரிசுகளுக்கிடையே பங்கிடுவதற்குமுன், மேற்கொள்ள வேண்டிய பணிகள் சில உள்ளன. அக்கடன்கள், அவருடைய செல்வத்திலிருந்துதான் நிறைவேற்றப்படும்.
இவ்வகையில் நான்கு வகையான முன்கடமைகள் உள்ளன. அவையாவன:
1. ஸகாத், அடைமானம், குற்றப் பரிகாரம் போன்ற, செல்வத்தோடு நேரடி தொடர்புள்ள கடமைகள். அதாவது சொத்தை விட்டு இறந்துபோனவர், தம் வாழ்நாளில் நிறைவேற்றத் தவறிய ஸகாத், அடைமானத்தைத் திரும்பக் கொடுத்தல், குற்றத்திற்கான அபராதம் போன்றவற்றை அவருடைய சொத்திலிருந்து முதலில் நிறைவேற்ற வேண்டும்.
2. அடக்கம் செய்வதற்கான செலவினம். கஃபன் (பிரேத ஆடை), அடக்கக் குழி தோண்டுவதற்கான கூலி, குளிப்பாட்டுவதற்கான செலவு ஆகியவை அவர் பணத்திலிருந்தே மேற்கொள்ளப்படும்.
3. அவர் பொறுப்பில் உள்ள நேரடிக் கடன்கள். அடைமானம் இல்லாமல் அவர் பெற்ற கடன்வகை இதில் அடங்கும்.
4. வாரிசு அல்லாத எவருக்கேனும், அல்லது எதற்கேனும் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்திற்குள்ளாக அவர் செய்துவிட்டுச் சென்ற ‘வஸிய்யத்’ எனும் இறுதி விருப்பம்.
இத்தனை கடமைகளையும் அவர் விட்டுச்சென்ற சொத்திலிருந்து நிறைவேற்றிய பிறகே வாரிசுரிமைச் சட்டப்படி உரியவர்களுக்கு அவர்களின் பாகங்களைப் பிரித்து அளிக்க வேண்டும்.
அவ்வாறு பங்கிடுவதற்குமுன் மூன்று விஷயங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 1. சொத்துக்குரியவர் இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். 2. அவர் இறக்கும்போது வாரிசு உயிருடன் இருந்தார் என்பது உறுதியாக வேண்டும். 3. இறந்துபோன அவர் சொத்து ஏதேனும் விட்டுச்சென்றிருக்க வேண்டும்.
அத்தோடு வாரிசாக இருப்பவர், எந்த இனத்தில் வாரிசு என்பது தெளிவாக வேண்டும். 1. திருமண உறவு. இதற்குத் திருமண ஒப்பந்தம் நடந்து முடிந்திருந்தாலே போதும். 2. பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், தந்தையின் சகோதரர்கள் ஆகிய நான்கு இனங்களில் ஒன்றாக வாரிசின் உறவு இருக்க வேண்டும்.
வாரிசுரிமை தடை
மூன்று காரணிகளில் ஒன்று இருந்தாலும் வாரிசுரிமை மறுக்கப்படும்.
1. அடிமை. (அக்கால முறைப்படியான) அடிமை ஒருவர், சுதந்திரமான தம் துணையிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் வாரிசுரிமை பெற முடியாது. காரணம், அடிமைக்குச் சேரும் செல்வம் அனைத்தும் உரிமையாளரான எசமானுக்கே சொந்தமாகிவிடும்.
2. கொலை. வேண்டுமென்றோ (திட்டமிட்டோ), தவறுதலாகவோ கொலை செய்த ஒருவன், கொல்லப்பட்டவரின் சொத்துக்கு வாரிசாக முடியாது. இல்லாவிட்டால், சொத்துக்காகக் கொலை செய்யும் போக்கு அதிகமாகிவிடும்.
3. சமய வேறுபாடு. முஸ்லிமின் செல்வத்திற்கு முஸ்லிமல்லாதவர், அல்லது முஸ்லிமல்லாதவரின் சொத்துக்கு முஸ்லிம் வாரிசாக முடியாது. வாரிசுரிமைச் சட்டம் மதத்திற்கு மதம் வேறுபடலாம்; சொத்துச் சேர்க்கும் முறை, பணப் பரிவர்த்தனை போன்ற நடைமுறைகளும் வித்தியாசப்படலாம்.
முஸ்லிம் வாரிசுரிமைச் சட்டப்படி சொத்தைப் பெறுவதானாலும் கொடுப்பதானாலும் இரு பக்கமும் அச்சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அப்படியானால், இருவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

(சந்திப்போம்)

Read 304 times