Print this page
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 06:37

மண்ணின் வரலாறு-16, தொல் புகழ் படைத்த தொண்டி - 2

Written by 
Rate this item
(0 votes)

மதுரையில் வாழும் ஒரு குடும்பத்தாரின் விலாசம் எட்டெழுத்துக்களைக் கொண்டது. TSNMS APM என்பதே அந்த எட்டெழுத்து. இவ்வளவு நீளமான விலாசத்தைக் கொண்டவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா?

அரபுவம்சா வழி எனக்கூறும் கீழக்கரை மரைக்கார்களும் பழவேற்காடு மரைக்கார்களும் தம் நீண்ட வம்சா வழியை ஏட்டில் பதிவு செய்துள்ளனர். விலாசமாக நடைமுறையில் பயன்படுத்துவதில்லை, மதுரைக் குடும்பத்தினரோ எட்டெழுத்துக்களை ஏற்றமுடன் எடுத்துரைக்கின்றனர்.

TSNMS APM - எனும் எட்டெழுத்துக்களில் முதலெழுத்தான T - தொண்டி ராவுத்தர் என்பதே மண்ணின் வரலாற்றில் இவ்விலாசம் பேசப்படுவதற்கான காரணம்.
தொண்டி ராவுத்தரை அடுத்து வரும் சந்ததி சிக்கந்தர் - S என்பதாகும். மூன்றாம் பெயர் நெய்னா முகம்மது - N என்பதாகும். நான்காம் பெயர் மதார் முகைதீன் - M என்பதாகும். TSNM போக மீதியுள்ள விலாசங்களான SAPM நான்கு நபர்களைக் குறிக்காது. நான்கெழுத்தும் ஒருவரையே குறிக்கும். அவர் ஷேக் அஹமது பீர் முகம்மது முஸ்தபா என்பதாகும் SAPM.

இவரே முஸ்தபா ஹாஜியார் என மதுரை மாநகர் ஏற்றிப் போற்றும் கொடை வள்ளல். இவருக்கு அப்துல் லத்தீப், முகம்மது இலியாஸ், முகம்மது இத்ரீஸ், முகம்மது அப்துல்லா என நான்கு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உள்ளனர்.

இக்குடும்பத்தார் மதுரைப் பகுதியில் மார்க்க சமூக நலப் பகுதிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அல் அமீன் மேனிலைப் பள்ளி, அல் அமீன் எத்தீம் கானா, திருப்பங்குன்றதிலுள்ள ஜாமிஆ மஹ்ஸினுத்தாரைன் அரபிக் கல்லூரி இவர்களின் குடும்பப் பெயர் சொல்லும் அறக்கொடைகள். அண்மையில் மதுரையில் திறப்பு விழா கண்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத் தலைமையகம் ஒங்கி நிற்கும் 13 செண்ட் நிலம் எட்டெழுத்துக்காரர்கள் கொடுத்த இடம்தான்.

தொண்டி ராவுத்தர் வம்சா வழியில் ஐந்தாவது தலைமுறையில் மதுரை கீழவெளி வீதியில் 1928 - இல் பிறந்த முஸ்தபா ஹாஜியார் 1991 - இல் மரணமடைந்தார். தொண்டிக்காரர்களே அறியாத ஒரு வம்சா வழி மதுரையில் புகழ்க்கொடி பறக்க விட்டுக் கொண்டிருக்கிறது.

சில குடும்பங்களை மட்டும் பார்த்தோம், இனி சில தெருக்களை மட்டும் பார்ப்போம். வானவில் போன்றது முஸ்லிம் சமுதாயம் என்றால் மிகையாகாது. பல வண்ணங்கள் கொண்ட வானவில் போல் பலதரப்பட்ட குழுக்களைக் கொண்டது அந்த சம நிலைச் சமுதாயம்.

மீன் பிடிப்பவர்கள், மீன் வியாபாரிகள், மரக்கலமோட்டிகள், கலங்கள் கட்டுவோர் எனக் கடல் புரத்தில் இருந்தால் மேற்கே மரைக்காயர்கள், மார்க்கத்தைப் போதிக்கும் லப்பைகள், பல்பொருள் வணிகர்கள் என வசிப்பர். இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்பதால் பள்ளிவாசல்களில் வானவில் போல் இணைவர். தொண்டியின் கடல்புரத்தில் கடலோடிகள் குடியிருப்பு, அடுத்து கலங்களைக் கட்டும் ஓடாவித் தெரு, லெப்பை சாகிபு தெரு மேற்கில் தெற்கு வடக்காக பல்வேறு கச்சவடங்கள் செய்வோரின் தெருக்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தெருக்களில் நாம் இரு தெருக்களை மட்டும் விரிந்த பார்வைக்கு எடுத்துக் கொள்வோம்.

அவை : மரைக்காயர் தெரு, ஓடாவித் தெரு. மரக்கலங்களில் உரிமையும் அவற்றில் வணிகமும் செய்தோர் மரைக்காயர் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் வாழ்ந்த இடம் மரைக்காயர் தெரு. ஓடாவிகள் என்றால் படகுகளையும் தோணிகளையும் கட்டுவோர் ஆவர். ஓடம் என்ற மூலச் சொல்லிலிருந்து ஓடாவி எனும் சொல் வந்துள்ளது. அவர்கள் வாழ்ந்த தெரு, ஓடாவித் தெரு.
தொண்டியில் மட்டுமல்ல கடலோரப் பட்டினங்களில் இன்றும் ஓடாவிகள் வாழ்கின்றனர்.
சென்னைக்கு வடக்கே பழவேற்காட்டில் கூட ஓடாவிகள் உள்ளனர். இப்போது அவர்கள் மரக்கலங்களை உருவாக்கவில்லையென்றாலும் ஓடாவி எனும் பெயரால் அறியப்படுகின்றனர்.
அங்கெல்லாம் ஓடாவித் தெரு என தனித் தெருக்கள் இல்லை, அது தொண்டியில் இன்றும் உண்டு.
இங்கு ஓடாவித் தெரு இருக்க முக்கிய காரணம், முற்காலத்தில் இங்கு பெரிய அளவில் மரக்கலங்கள் கட்டப்பட்டதே. கலங்களைக் கட்டுவோர் நிறைந்திருந்ததும் கலங்களைக் கட்டுவதற்கான மரங்கள் பர்மாவிலிருந்து வந்து குவிந்திருந்ததும் கடலோசைக்குப் போட்டியாக மரச்சுத்தியலோசை எழுவதற்குரிய காரணிகளாகும்.

நாகை, நாகூர் கடலோரப்பட்டறைகளிலிருந்து கட்டப்பட்ட கலங்கள் கடற்பயணம் செய்தது போல் தொண்டிக் கடலோரங்களில் உருவாக்கப்பட்ட கலங்கள் பயணத்திற்கும் மீன்பாட்டுக்கும் பயன்பட்டிருக்கின்றன. தமிழகக் கடற்கரைகளில் கட்டப்பட்ட கலங்களை கிழக்காசிய நாடுகள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்றன. நம்மவர்கள் சாதாரணப் படகுகள் மட்டும் கட்டவில்லை, போர்க் கப்பல்களைக் கூட கட்டியிருக்கின்றனர். அவற்றில் நூற்றுக்கணக்கான போராளிகள் பயணம் செய்துள்ளனர்.
கப்பல்கள் கட்டுவதில் தமிழர்களின் கலை நுணுக்கத்தோடு அரபு தேசத்திலிருந்து வந்தவர்களின் கலை வண்ணமும் சேர கிழக்காசியா தமிழகத்தின் கரங்களுக்கு வந்திறக்கிறது. கங்கை கொண்டார் கடாரம் கொண்டாராக உயர வழிவகுத்திருக்கிறது.
ஒன்பதாம் நூற்றாண்டில் பழவேற்காட்டில் குடியேற்றப்பட்ட அரபு ஓடாவிகள் கட்டிய போர்க் கப்பல்களால்தான் மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் சயாமைத் தன் வசப்படுத்தியிருக்கிறான். இவன் தான் ‘தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன்’ எனப் புகழப்படுகிறான்.
பாண்டிய மன்னன் சிரீ வல்லபனை தெள்ளாற்றில் வென்ற மூன்றாம் நந்தி வர்மன் பழையாறு பூம்புகார் என வென்று தொண்டித் துறைமுகத்திலும் தன் கொடியைப் பறக்கவிட்டதாக நந்திக் கலம்பகம் உரைக்கிறது.
ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்றில் மட்டுமல்ல அண்மைக்கால வரலாற்றில் கூட தொண்டி மாநகர் இடம் பிடித்துள்ளது. சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களுக்கு அஞ்சி தொண்டிக்கு வந்த போது மருதரசர்களால் தொண்டியில் குடியேற்றப்பட்ட காதர் மீரா அம்பலம் என்பார் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை காதர் மீரா அம்பலம் பாய்மரக்கப்பலில் ஏற்றி நடுக்கடலில் பல நாட்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் பெருந்தொகையாக வாழும் தொண்டியில் பல பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் கிழக்குத் தெரு பள்ளி பழமையான கல்லுப் பள்ளியாகும். கடலோரமிருந்த பழைய பள்ளியொன்று இப்போது புதிதாக ஓடாவித் தெரு பள்ளியாகியுள்ளது. தெற்குத் தெருவில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. வடக்குத் தெரு பள்ளி ஒரு முக்கியமான பெரிய பள்ளிவாசலாகும்.

வடக்குத் தெரு பள்ளிவாசலுக்கு வடக்கே கைக்கோளன் குளக்கரையின் தெற்கில் ஷைகு மலங்கு சாகிப் தர்கா உள்ளது. வெளிநாட்டிலிருந்தோ வெளி மாநிலத்திலிருந்தோ வந்து அழைப்புப் பணியாற்றிய இறை நேசச் செல்வர் மலங்கு சாகிப். இவரின் தர்கா கைக்கோளன் குளக்கரையில் அமைந்திருப்பதால் இப்பகுதியில் கணிசமாக கைக்கோளர்கள் - நெசவாளர்கள் வாழ்ந்ததாக உய்த்துணரலாம்.

பெரும் புலவர்களின் வம்சா வழியில் கி.பி.1845 - இல் பிறந்த ஷைகு மஸ்தான் மோன நிலையிலேயே இருந்ததால் ‘மோனகுரு மஸ்தான்’ என அழைக்கப்பட்டார். இவருடைய அடக்கத்தலம் தொண்டியம்மன் கோவிலுக்கு கிழக்கில் உள்ளது. இதை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கட்டிக் கொடுத்துள்ளார்கள். ஞானக் கடலாக விளங்கிய அன்பர் எழுதிய பாடல்கள் ‘மோன குரு மஸ்தான் சாகிபு பாடல்கள்’ என நூலாக வெளி வந்துள்ளது.

ஷைகு அபூபக்கர் வலி எனும் இறைநேசச் செல்வர் கீழக்கரையில் பிறந்து தொண்டியில் மண முடித்து வாழ்ந்து நற்போதனைகள் செய்து மறைந்தவர். இவருடைய அடக்கத்தலம் தொண்டிக்குத் தெற்கில் அமைந்துள்ளது. இவரை ஆற்காடு நவாப் முகம்மதலி வாலாஜா தொண்டியில் சந்தித்துள்ளார். இவரின் பெயரை தொண்டியரோடு கீழக்கரையினரும் தம் பிள்ளைகளுக்குச் சூட்டுகின்றனர். என்றாலும் மரியாதை நிமித்தம் அப்பெயரை ‘தொண்டியப்பா’ என விளிக்கின்றனர்.
தொண்டியில் உள்ள அம்மன் கோவில் ‘தொண்டியம்மன்’ கோவில் என அழைக்கப்படுகிறது. தொண்டிப்பகுதியில் மட்டுமே தொண்டியப்பன், தொண்டிராஜ், தொண்டியம்மா எனப் பெயர்கள் உள்ளன.
சோனகர் தெருவிலுள்ள சேமலப்பா எனும் சையிது முகம்மது லப்பை அடக்கத்தலமும் ஒரு வரலாற்றுப் பதிவே. சேமலப்பா பாசிப்பட்டினம் நெய்னா முகம்மது வலியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மேலும் சில அடக்கத்தலங்கள் உள்ளன.
மதரஸதுல் இஸ்லாமியா செயல்படாமல் போய் விட்டது. ஆயிஷத்துல் சித்தீகா, கமாலியா என மதரஸாக்கள் செயல்படுகின்றன. பெண்கள் மிகப் பெருமளவில் ஆலிமாக்களாக உருவாகும் நிலை பாராட்டுக்குரியது.
நான்கைந்து தலைமுறைகளுக்கு முன் கிழக்குக் கடற்கரை சாலையெனப் பெயர் பெற்றிருக்கும் சேது ரஸ்தா சீரான சாலையாக உருவாகும் முன் சென்னைக்கு வடக்கேயுள்ள பழவேற்காட்டிலிருந்து மாட்டுவண்டியில் பயணித்து தொண்டிக்கு வந்து அரபு மொழி கற்றிருக்கின்றனர்.
கீழக்கரை மேதை சதகத்துல்லாஹ் அப்பாவின் மாணவரான தொண்டி முகம்மது தீபிடம் கல்வி கற்க பழவேற்காடு முகம்மது ஜான் தொண்டிக்கு சென்றிருக்கிறார் எனும் தகவலை பழவேற்காடு மூத்தவர்கள் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.
செய்யது முகம்மது அரசு உயர்நிலைப் பள்ளியோடு அல்ஹிலால் பள்ளி இஸ்லாமிக் மாடல் ஸ்கூல், அமீர் சுல்தான் அகாடமி ஆகியவை கல்விப் பணியாற்றுகின்றன. முப்பதாயிரத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட தொண்டியில் கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

இடையில் தொண்டி மாநகரின் ஊராட்சி வரலாற்றைக் காண்போம். ஆங்கிலேய அரசால் 1888 - இல் தொண்டி ஊராட்சி அமைக்கப்பட்டு செயல்பட்டிருக்கிறது. தொடக்க காலத்தில் தலைவர்கள் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

1901 - 22 வரை பெருந்தகைகள் நல்ல பீர் மரைக்கார் - நெய்னார் லப்பை இருவரும் தலைவர்களாக இருந்துள்ளனர். அடுத்து MRM முகம்மது காசிம், MRM முகம்மது இசாக்கும் 1924 - 41 வரை MRM செய்யது முகம்மது எனும் கான் சாகிபும் தலைவர்களாகியுள்ளனர். 1951 - 56 வரை M.S.அப்துஸ்ஸலாம் தலைவராகியுள்ளார்.இவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். இந்நால்வரும் MRM வகையறாக்கள்.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்கள் பட்டியல் நீளும். 1996 - இல் ஜானாபா செய்னம்பு பீவி, 2006 இல் ஜனாபா மாலிக் நிஷான் (சகோ, மஹ்ரூபுல் கர்க்கியின் துணைவியார்) 2011 - இல் திருமதி புவனேஸ்வரி என பெண்களும் தலைவர்களாகியுள்ளனர். நடந்து முடிந்த ஊராட்சியின் தலைவராக இருந்தவர் சகோ, சேகு நெய்னா.

இனி பாக் ஜலசந்தி கால் நீட்டிப் படுத்துக்கிடக்கும் அலைவாய்க்கரையில் - தொண்டித் துறைமுகத்தில் அமர்ந்தபடி கண்களை மூடிக் கொண்டு கற்பனையில் மிதந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாய்மரக் கப்பல்கள், கடலோசையைத் தோற்கடிக்கும் படியாக மனிதர்களின் பேச்சுக்கள், அண்மையில் கடற்கரையில் நடந்து வரும் குதிரைகள், சேய்மையில் கடல் நீரில் மிதந்து வரும் குதிரைகள்.

கண்களைத் திறந்து மீண்டும் மூடினேன். காட்சி மாறியது. காலமும் மாறியிருந்தது. பாய்மரக்கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. குதிரைகளைக் காணோம். கலங்களில் கட்டியிழுத்து வரப்பட்டிருந்த பர்மாவின் தேக்கு மரங்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்தன. கலங்களின் மேலிருந்த அரிசி மூட்டைகள் மனிதர்களின் முதுகுகளில் அமர்ந்து கரை சேர்ந்து கொண்டிருந்தன.

சுங்க வரி செலுத்தப்பட்ட பொருட்கள் பண்டக சாலைகளுக்கும் கிட்டங்கிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. கடற்கரையின் மேற்கிலுள்ள மரவாடிகளிலும் வணிக நிலையங்களிலும் பேரங்கள் நடந்து கொண்டிருந்தன.
கண்களைத் திறந்து கசக்கி விட்டவன் மீண்டும் கண்களை மூட காலமும் காட்சிகளும் மாறியிருந்தன. மாறாதது கலங்கரை விளக்கம் மட்டுமே.
பெரிய பாய்மரக்கப்பல்களைக் காணோம். கடற்கரையில் நின்றதெல்லாம் மீன்பிடிப் படகுகளே. ஆலாக்கள் ஆங்காங்கு தென்பட காக்கைகளும் கள்ளப்பருந்துகளும் கடல், வான்பரப்பை நிரப்பிக் கொண்டிருந்தன.
கண்களைத் திறந்தபடியே காலம் மாறியதையும் புகழ்மிக்க ஒரு துறைமுகம் மீன் பிடித்துறைமுகமாகக் கூட மாறாததையும் எண்ணிப் பார்த்து விசனப்பட்டுக் கொண்டிருந்தேன்.
தொண்டியின் தொல் புகழ் மீட்கப்படும், துறைமுகம் வந்தே தீரும் என கிளிப்பிள்லை போல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினராய் காங்கிரசார் காலம் கடத்திக் கொண்டிருந்தார்கள். சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாக் ஜலசந்தி ஆழமாகி விடும். இந்து மகா சமுத்திரக் கப்பல்கள் மன்னார் வளைகுடாவில் வலசை வந்து பாக் ஜலசந்தியில் பயணித்து வங்காள வளகுடாவில் வளைய வந்து கல்கத்தாவில் கரைபிடிக்கும், அப்போது தொண்டித் துறைமுகம் மாபெரும் துறைமகமாக மாற்றம் காணும் எனச் சொல்லிக் கொண்டே இருந்தனர். காங்கிரசார் கண்மூடித் தூங்க மக்களும் துறைமுகங்களையே தொலைத்து விட்டார்கள்.

ஆங்கிலேயர் இருந்திருந்தால் தொண்டித் துறைமுகம் வந்திருக்கும். பட்டுக்கோட்டையிலிருந்தோ சிவகங்கையிலிருந்தோ தொண்டி மாநகருக்கு இருப்புப் பாதையும் வந்திருக்கும்.
விடுதலைப் பெற்றவுடன் ரயில்வே மந்திரியாக வந்தவர் ஓ.வி.அளகேசன் எனும் தமிழர். மற்ற மாநிலங்கள் எல்லாம் ரெட்டை ரயில் பாதை பெற்றிருக்க தமிழகம் இதுவரை ரெட்டை ரயில் பாதையை பெறவில்லை. சென்னையையும் தூத்துக்குடியையும் தவிர்த்து நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழகத்தில் தேவையான வேறு துறைமுகங்கள் வரவில்லை.

நம்மை ஏமாற்றும் டெல்லிக் காரர்களை இனியும் சாதரணமாக தொண்டிக்குத் துறைமுகம் கேட்டும் பயனில்லை. திரண்டெழும் மக்கள் எழுச்சியின் மூலம் தான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும். உரிமைக் குரல்கள் ஓய்ந்திருந்தால் தொண்டித் துறைமுகம் வராது. அது உப்பூர் அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரியைக் கொண்டு வரும் துறைமுகம் ஆகலாம். தொண்டிப் பகுதி மக்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இல்லையேல் கார்ப்பரேட் கம்பெனிகளின் தனியார் துறைமுகமாகி விடும்.
தொடர்புக்கு : 9710266971

Read 420 times