புதன்கிழமை, 10 அக்டோபர் 2018 05:30

மண்ணின் வரலாறு - 15 கீர்த்திமிகு கீழக்கரை

Written by 
Rate this item
(0 votes)

தமிழகத்தின் முதல் பெரிய அரபிக் கல்விக் கூடம் வேலூர் பாக்கியாத் சாலிஹாத் மதரஸா என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீழக்கரையிலுள்ள அரூசியா மதரஸாவே தமிழகத்தின் முதல் பெரிய மதரஸா. அரூசியா எனும் பட்டத்தை வழங்கும் இம்மதரஸாவில் ஓதிப் படித்தவர்கள்தான் குணங்குடி மஸ்தான், புலவர் நாயகம் போன்றவர்கள்.
காயல்பட்டினத்தில் பிறந்து கீழக்கரைக்கு மருமகனாய் வந்த தைக்கா சாகிபு அப்துல் காதர் நிறுவிய மதரஸாவே அரூசியா, இவர்தான் அண்ணலெங்கோ முஹம்மது (ஸல்) அவர்களின் பெருந்தொண்டைப் புகழும் ‘ஷஃபஇய்யா’ எனும் நூலை யாத்தவர்.
தைக்கா சாகிபிடம் பாடம் கேட்ட லெப்பை ஆலிம், ஆசானின் ஐந்தாவது மகனை மணந்து மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆனார். தமிழ், அரபி, உருது, பார்சி என புலமை பெற்ற மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரூசியாவின் பொறுப்பை ஏற்றதோடு பல மௌலிதுகளையும் ராத்திபுகளையும் இயற்றியுள்ளார்.
அரூசியாவில் கற்றவர்களே கலவத்து நாயகமும் பல்லாக்கு வலியும் இவர்கள் கல்விக் கடலாகவும் அரபு மொழி மேதைகளாகவும் திகழ்ந்தனர்.
ஷைகு நாயகம் என்ற அகமது அப்துல்காதர் அவர்களும் மஹானந்த பாவா என்ற முகம்மது அப்துல்காதர் அவர்களும் குறிப்பிடத்தக்க சூஃபிகளாவர்.
காயல்பட்டனத்திலிருந்து வந்து கீழக்கரையில் வாழ்ந்த சதக்கத்துல்லா அப்பா, அண்ணலார் மீது அரபுக் கவிதைகள் பாடினார். அந்நூலின் பெயர் : வித்ரியா.
சதக்கத்துல்லா அப்பா அவர்களின் பேரர். சின்ன மரக்காயர் என்ற அப்துல்காதர் ஆலிம் புலவர் அரபியிலும் தமிழிலும் பல செய்யுட்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய நூலே ‘அடைக்கல மாலை.’
ஹபீபு முஹம்மது மரக்காயரின் தம்பி மகனான சையது இஸ்மாயில் லெப்பை மரைக்காயர் ‘மூஸா நபி நாயகம்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.
இவ்வூரில் வாழ்ந்த கருத்த சதக்குத் தம்பிப் புலவரும் காதிர் சாகிபு அண்ணாவியாரும் முஹம்மது காசிம் மரக்காயரும் சேர்ந்து ‘யூசுபு நபி காவியம்’ எனும் நூலை எழுதியதாக சொல்லப்படுகிறது. இவ்வூரில் பிறந்து இலங்கையில் மறைந்து அப்துல் மஜீது புலவர் ‘ஆசாரக் கோவை’ எனும் நூலை எழுதியுள்ளார்.
‘ஆயிரமசாலா’ பாடிய செய்யிது இசுஹாக் புலவர் ‘நபியவதார அம்மானை’ பாடிய கவி களஞ்சியப் புலவர் ‘சின்ன சீறா’ பாடிய பனீ அகமது மரைக்காயர் புலவர் ‘நூறு நாமா’ பாடிய செய்யது அகமது மரைக்காயர் புலவர், மதுரை தமிழ் சங்க வித்வான் செய்யிது முகம்மது ஆலிம் புலவர் ஆகியோர் கீழக்கரைவாசிகள்.
வளமான வணிகத்தால் வளமான வாழ்க்கைக்குச் சொந்தமுடைய பேரூர் பேரறிவாலும் பேரருளாலும் பல பெருமகன்களைக் காலந்தோறும் பெற்றே வந்துள்ளது.
அண்மைக் காலத்தில் பெரும் புகழ் பெற்ற அப்ஸலுல் உலமா டாக்டர் தைக்கா சுஹைப் ஆலிம் ஆய்வு செய்து எழுதிய நூல் மிகவும் சிறப்புக்குரியது. அந்நூலின் பெயர் : ARABIC ARAVI AND PERSIAN IN SARANDIB AND TAMILNADU.sadaksyed abthul kaderஅமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல் மொழியியல் வரலாறு பற்றிய பல சந்ததிகளை உலகுக்கு உரைக்கிறது.

அப்ஸலுல் உலமா சுஹைல் ஆலிம் அவர்களுக்கு நேரெதிர் கருத்துக்களைக் கூறிய கவிஞர் இன்குலாப் எனும் சாகுல் அமீதும் கீழக்கரைக்காரரே.
‘தமிழகத்தில் மார்க்கோபோலோ, இபுனு பதூதா’ எனும் நூலை எழுதிய இத்ரீஸ் மரைக்காயரும் ‘பசுங்கதிர்’ எனும் இதழை நடத்திய எம்.கே.ஈ.மவ்லானாவும் கீழக்கரைக்காரர்களே!
‘தென்பாண்டிச் சீமையிலே’ எனும் பெயரில் ஏர்வாடியார் வரலாற்றை நாவலாக வடித்த சகோதரர் ச.சி.நெ.அப்துல் ரசாக்கும் அவருடைய அண்ணன் அப்துல் ஹக்கீமும் குறிப்பிடத்தக்க கீழக்கரை எழுத்தாளர்கள்.
‘காணாத காட்சி’ எனும் சிறுகதை நூலை எழுதிய மஜீதா மைந்தன் [இயற்பெயர் மகபூபா] சில நாவல்களை எழுதிய ரஹீமா ஆகிய பெண் படைப்பாளிகளும் கீழக்கரைவாசிகளே . எமக்குத் தெரியாதவரும் இருப்பர்.
மகத்தான சமுதாயத்தை அமைக்க மதரஸாக்கள் - கல்விக் கூடங்கள் உதவியிருக்கின்றன என்பதை கீழக்கரை மெய்ப்பிக்கிறது.
கீழக்கரை அரூசியா மதரஸா குணங்குடியார், புலவர் நாயகம் போன்றவர்களின் இரண்டாவது தாய் வீடாக இருந்ததை முன்பே குறிப்பிட்டுள்ளோம். இவர்கள் மட்டுமல்ல அக்கால மேதைகள் பலரையும் அரூசியா மதரஸா உருவாக்கித் தந்துள்ளது.
அவர்களில் முக்கியமானவர்கள் : புதூர் குட்டைக் காதர் லெப்பை, வேலூர் அஃலா ஹலரத் அவர்களின் தந்தை ஆத்தூர் அல்லாமா அப்துல் காதிர் சாகிபு, அம்மாபட்டினம் முகம்மது யூசுபு ஹலரத், அபிராமம் அப்துல் காதர் ஆலிம் சாகிபு.
கீழக்கரை அறிஞர்களையும் அருளாளர்களையும் பெற்ற பேரூர் மட்டுமல்ல கொடையாளர்கள் பலரையும் பெற்ற சீரூர்.
வள்ளல் சீதக்காதியைப் பற்றி தமிழகமே நன்கறியும். இவரைப் போல் மானுடர்க்கல்லாது தமிழ் வளர்க்க வாரி வழங்கியவர்கள் சிலர் இருந்துள்ளனர். பெரிய மரைக்காயர் என்ற லெப்பை நெய்னா மரைக்கார் ‘சின்ன சீறா’ எனும் நூல் வெளிவர கொடையளித்துள்ளார். அப்துல் காதிர் என்ற வள்ளலே ‘இராஜ நாயகம்’ எனும் நூல் வெளிவர கொடை நாயகராய் இருந்துள்ளார்.
ஆயிரமாண்டு கால வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டது கீழக்கரை என்றால் மிகையாகாது. காலங்கள் தோறும் கல்விச் சாலைகள் மூலம் கல்விப் பணி செய்த சமுதாயம் பிற்காலத்தில் உஸ்வத்துல் ஹஸனா எனும் சங்கத்தின் மூலம் கல்வியை முன்னெடுத்துச் சென்றது.
சங்கத்தின் பொறுப்பிலிருந்த புகழ்பெற்ற கே.டி.எம். எனும் விலாசத்துக்கு சொந்தக்காரரான ஹுஸைன் ஹாஜியார் மதரஸதுல் ஹமீதியா எனும் வித்தை ஹமீதியா தொடக்கப் பள்ளி என்னும் செடியாக்கினார். அதுவே வளர்ந்து ஹமீதியா மேல்நிலைப் பள்ளியாக கிளை விட்டு ஹமீதியா மகளிர் மேனிலைப் பள்ளியாகவும் வளர்ந்துள்ளது.
ஹமீதியா கல்விக் கூடங்களைத் தொடர்ந்து எவரும் எதிர்பாராத வகையில் இன்று கீழக்கரை கல்விக் கூடங்களின் தாயகமாகத் திகழ்கின்றது.
பத்து தொடக்கப் பள்ளிகள், பத்து மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளிகள், ஐந்து கிண்டர் கார்டன் பள்ளிகள், முகம்மது சதக் பாலிடெக்னிக், முகமது சதக் ஐ.டி.ஐ., முகம்மது சதக் அறிவியல் கல்லூரி, முகம்மது சதக் ஆண்கள் கலைக் கல்லூரி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் அறிவியல் கல்லூரி, புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி, சையது ஹமீதியா அரபிக் கல்லூரி, சையது ஹமீதியா கலை அறிவியல் கல்லூரி, கீழக்கரை கல்லூரிகளில் பெரும்பாலானவை மேதகு சேனா மூனா வகையறாவைச் சேர்ந்த ஹமீது அப்துல் காதர் அமைத்தவை. சென்னை சோழிங்கநல்லூரிலும் இவர்களின் கல்லூரி உள்ளது.bsa u
சேனா மூனா ஹமீது அப்துல் காதர் தனியார் கல்லூரிகள் உருவாக முதலமைச்சராக இருந்த எம்ஜியாருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்.
சேனா மூனாவுக்கு கல்விப் போட்டியாளர் சேனா ஆனா வகையறா இவர்கள்தான் வண்டலூர் பி.எஸ்.ஏ.பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர்கள்.
அண்மைக் காலத்தில் கீழக்கரை மைந்தர்கள் மைந்தர்களை மட்டுமல்ல பல்வேறு பகுதி மக்களையும் வாழ வைத்தவர்கள் கீழக்கரை வணிக முன்னோடிகள். கிழக்காசியா நாடுகளிலும் மேற்காசிய நாடுகளிலும் வேலை கொடுத்து இந்தியாவைச் செழிப்பாக்கியவர்கள் கீழக்கரை வணிகர்கள்.
கீழக்கரையின் மிக முக்கியமான பிரமுகர் பேரூராட்சித் தலைவராகவும் பதவி வகித்த அல்ஹஜ் கே.எஸ்.எம்.சாகுல் ஹமீது ஆலிம் ஜமாலியாவார்.
ஜமாலியா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற ஹாஜியார் பேரூராட்சித் தலைவராக இருந்த போது கீழக்கரையைச் சுற்றியுள்ள ஊர்களிலும் பிரபலமானார். அவ்வாறு அவர் பிரபலமாகக் காரணம் தம்முடைய மார்க்கமான இஸ்லாத்தை நசுக்கப்பட்ட மக்களிடம் எடுத்துரைத்ததே.
இவரால்தான் கூரியூர் கிராமமே இஸ்லாத்தின் வண்ணத்தை பூசிக் கொண்டது. அழைப்பியல் முன்மாதிரி ஹாஜியார்.
தொடக்க காலத்தில் சங்குத் தொழிலில் கொடி கட்டிப் பறந்த ஹாஜியார் மோட்டார் படகு வாங்க கேரளத்துக்குச் சென்று வாங்கிய படகில் பயணித்து கீழக்கரை வந்தாராம். இன்னொரு முக்கிய சங்கதி கேரளத்திலிருந்து படகோட்டி வந்தவர்களில் ஒருசிலர் கீழைக்கரைவாசிகளாக்கினாராம்.
1960 ஆம் ஆண்டு டிசம்பரில் கீழைக்கரையில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாடு ஒரு மகத்தான மாநாடாக அமைந்தது.
அம்மாநாட்டின் போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் பல்வேறு சங்கதிகளைப் பற்றி கதைக்கிறது.
அதிலுள்ள ‘வகுதை பூரான்’ எழுதிய ‘அதிசய மனிதர்’ எனும் கட்டுரைத் தொழில் முன்னோடி கே.டி.எம்.ஹூஸைன் ஹாஜியார் பற்றிக் கூறுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கீழக்கரை ஏற்றுமதி இறக்குமதியில் நலிவுற்றது. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய போது பிறந்த ஹுஸைன் ஹாஜியார் கீழக்கரை மீண்டெழ் வழிவகுத்தார்.
சங்கு முத்து ரத்தின வணிகங்களைத் தொடங்கிய ஹாஜியார் பலரை தம் பங்காளிகளாக்கிக் கொண்டார். இத்தகைய வழிமுறையை கீழக்கரையாளரைத் தவிர வேறு யாரும் வேறு யாரும் முன்னெடுக்கவில்லை. இதே முறையைத்தான் பிற்காலத்தில் பெரும் செல்வச் சீமானாக வளர்ந்த டாக்டர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பின்பற்றினார்.
இறுதியாக டாக்டர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்கள் குறிப்பிட்ட ஒரு நன்மொழியைக் கூறி கட்டுரையை முடிப்போம்.
“மறுமைக்கென நன்மையை நாடி நாம் இறைவனை வணங்கும் போது அடுத்தவேளை உயிருடன் இருப்போம் என்ற எண்ணமின்றி ஒரே ஓர்மையுடன் வணக்கம் புரிதல் வேண்டும். இம்மைக்கென செல்வம் தேடி நாம் நிறுவனங்களைத் துவங்கும் போது ஆயிரம் ஆண்டுகள் தழைத்திருக்கும் என்ற எண்ணத்தில் தக்க கட்டமைப்புகளுடன் துவங்கிட வேண்டும்.”
மண் வலம் தொடரும்…
9710266971

Read 234 times