சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018 07:35

மண்ணின் வரலாறு - 19 நம்புதாழை எனும் நறும்பூந்தாழை

Written by 
Rate this item
(0 votes)

                                                                                                                                                                                                         தாழை மதியவன்
இராமநாதபுர மாவட்டத்தில் தொண்டித் துறை முகத்தின் தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ள மீன்பிடிக் கிராமம் நம்புதாழை.இதன் பூர்வீகப் பெயர் நம்பூந்தாழை. நறும்பூந்தாழை என்பதே மருவியுள்ளதாக ஆய்வாளர் கள் கூறுகின்றனர். “இங்கு தாழை பூத்துக் குலுங்கியதால், இது நல்ல பூந்தாழை எனப் பெயர் பெற்று அதுவே நம்புதாளை என்று மருவிற்று’’ என இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் பேசுகிறது.
இராமநாதபுர சேதுபதிகளின் ஆவணங்களி லும், முகவை ஆய்வாளர் டாக்டர் எஸ்.எம்.கமால் எழுதிய ‘முஸ்லிம்களும் தமிழகமும்’ எனும் நூலிலும் கச்சத் தீவு பற்றிய வரலாற்றுப் பதிவுகளிலும் ‘நம்புதாழை’ பதிவாகியுள்ளது.
தாழங்குடா, தாழங்குப்பம், தாழையூத்து, பூந்தாழை, தழுதாழை எனப் பல ஊர்கள் தாழையை அடிப்படையாகக் கொண்டு உள்ளன. அவற்றைப் போலவே நம்புதாழையும். தொண்டித்துறை முகத்தின் தென் பகுதியே நம்புதாழை. தொண்டியின் தெற்கிலுள்ள ஓடாவித் தெரு, மீனவர் தெருக்களின் நீட்சியே நம்புதாழை. இரு கிராமங்களுக்கு இடையே இரு சிற்றாறுகள் பாய்ந்து ஊரைப் பிரிக்கிறது.
தொண்டித் துறைமுகத்தின் தொடர்ச்சியாகவே நம்புதாழையின் முத்துபஜாரும் பன்னாட்டார் தெருவும் விளங்குகின்றன. முத்துக்கள் சந்தைப்படுத்தப்பட்ட பகுதி முத்துபஜார் என இன்றும் அழைக்கப்படுகிறது. பல வெளிநாட்டவரும் வந்து இருந்து வாழ்ந்த பகுதி பன்னாட்டார் தெரு. இரு ஊர்களையும் இணைக்க மூன்று பாதை கள் உள்ளன. ஒன்று கடலோரப் பாதை, இரண்டு தோப்புகள் வழியாகத் தொடரும் பாதை, மூன்று மிகப் பிரபலமான கிழக்குக் கடற்கரைச் சாலை, மூன்றாவதாகவுள்ள பழைய சாலையின் பழைய பெயர் சேது ரஸ்தா. இது இராமநாதபுரம் வரை சென்று ராமேஸ்வரமும் தெற்கில் நீண்டு சென்று குமரி முனையையும் அடைகின்றது.
நம்புதாழையின் வடக்கு எல்லையில் உள்ள புதிய பள்ளி மஸ்ஜித் கூபா. ஊருக்கு உள்ளே மேற்கில் மஸ்ஜித் தஃவா கிழக்கில் பலாஹ் என மொத்தம் மூன்று பள்ளிவாசல்கள் உள்ளன. இங்கு சிறிய பெரிய தர்காக்கள் நான்கு உள்ளன. மஸ்தான் சாகிபு, ஷைகு சாகிபு, வெள்ளை லெப்பை அப்பா, மலையாளத்தார் அப்பா ஆகிய இறைநேசர்களின் அடக்கத்தலங்கள் இவை. மலையாள அப்பா பெயர் சேகு அப்துல் காதர் வலி. இங்கேயுள்ள சகோதரர்கள் பல்வேறு காலகட்டங்களின் பல சங்கங்களை நிறுவியுள் ளனர். 1922 - இல் மஜ்மவுல் முஸ்லிமீன், 1925 இல் ஹிதாயா சங்கம், 1932 - இல் நஜாத்துல் முஸ்லிமீன், 1950 களில் பூரண சந்திரன் புட்பால் கிளப், 1960 - களில் ஹாஜஹான் கல்விக் கழகம், மாணவர் மன்றம், நம்புதாழை முற்போக்கு இளைஞர் மன்றம், 1992 - இல் ஸபீலுல் உலமா, இஸ்லாமிய இளந்தென்றல், சென்னை வாழ் முஸ்லிம்கள் நல அமைப்பு என நம்புதாழை மக்களின் நலத்தைப் பேணிட பல அமைப்புகள் உருவானாலும் மூன்று அமைப்புகளே தொடர்ந்து செயல்படுகின்றன.
1992இல் நம்புதாழை வந்த கீழக்கரை பல்லாக்கு வலியுல்லாஹ் அமைத்த ஹிதாயா சங்கம் ஆண்டு தோறும் அன்னாருக்கு விழா கொண் டாடி சிறப்பான விருந்தளித்து தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. மார்க்கத்தை முன் னெடுத்து செயல்படும் ஸபீலுல் உலமா மதரஸாக்களை உருவாக்கி ஏறத்தாழ நூறு உலமாக்களை உறுப்பினராகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இரு அமைப்புகளோடு சென்னை வாழ் நம்புதாழை மக்கள் நலச் சங்கம் சென்னையில் பதினைந்து ஆண்டுகளாக பாடாற்றி வருகிறது.
பன்னாட்டார் தெரு, முத்து பஜார் ஆகிய இடங்கள் சில சங்கதிகளைக் கூறுவது போல மேலும் சில இடங்கள் பழைய சங்கதிகளைக் கூறுகின்றன. ‘பாவோடி’ எனும் ஊரின் மையப் பகுதி. இங்கு நெசவுத் தொழில் இருந்தது பற்றிக் கூறுகிறது. ‘புகையிலைக் கொல்லை’ எனும் பகுதி இங்கு புகையிலைப் பயிரிட்டக் கதையைக் கூறுகிறது. ‘சோனகர்தெரு’ அரபு வம்சா வழியினர் வாழ்ந்த பகுதி எனக் கட்டியம் கூறுகிறது. ‘தைக்கா’ முந்தைய காலத்தில் ஊரில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடிய வரலாற்றைக் கூறுகிறது. ‘உதுமான் ஜப்பார் கப்ர்ஸ்தான்’ இவ்வூரின் பூர்வகுடிகளான தெக்கத்தி உதுமான்- ஜப்பார் (தெ.உ) வந்து வாழ்வாங்கு வாழ்ந்து இன்றும் பேர் சொல்லி வாழ்வதை பறைசாற்றுகிறது. ‘பல்லாக்கு வலியுல்லாஹ் வளாகம்’- வலியுல்லாஹ் 1925 - இல் வருகை தந்து ஊரைத் தத்தெடுத் ததையும் அத் தத்தெடுப்பு தொடர்வதையும் உரைக்கிறது.
தெக்கத்தி உதுமான் குடும்பத்தார் தெற்கிலி ருந்து நம்புதாழை வந்து குடியேறியது போல் பல குடும்பங்களும் இங்கு குடியேறியவையே. முத்திக்கிலும் இருந்து வந்து குடியேறியவர் களின் வரலாறு சுவையானவை. பெரும்பாலும் இவர்கள் இங்கு கிடைத்திட்ட மீன்களைப் பிடிக்கவோ சுவைக்கவோ வந்தவர்கள். கிழக்கு கடலோரத்திலுள்ள மிக முக்கியமான மீனவக் கிராமம் நம்புதாழை. இராமநாத புரத்தில் நடக்கும் வாரச் சந்தையில் விற்கப் படும் கருவாடுகளுக்கு மொத்தப் பெயர்கள் இரண்டு. ஒன்று ராமேஸ்வர கருவாடு, இரண்டு நம்புதாழைக் கருவாடு. நம்புதாழைக் கருவாடு நன்கு காய்ந்து மஞ்சள் பூசி சிரிக்கும். இராமேஸ்வரக் கருவாடு ஈரமுடன், ஈனஸ்வரத்தில் இருக்கும்.
பெரும்பாலான ஊர்களில் குடும்பங்களைக் கண்டறிய குடும்பப் பெயர்கள் இருப்பது போல் நம்புதாழையிலும் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் காரணப் பெயர் காரியப் பெயர், விலாசங்களைத் தாண்டி ஊர்ப் பெயர் களே அதிகமாக இருக்கும்.தோப்புத்துறை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அம்மாபட்டினம், கோட்டைப் பட்டினம், பொம்பேத்தி, அஞ்சங்குடி, அஞ்சுக்கோட்டை, ஆனந்தூர், இருமதி, இடைக் காட்டூர் வட்டானம், கவலை வென்றான், கமுதி, காக்கூர், குஞ்சங்குளம், கீழக்கரை, சித்தார் கோட்டை, பாசிப்பட்டினம், மாவூர், வல்லம், வலசைப்பட்டினம், வெண்ணத்தூர், திருப் பாலைக்குடி, வெள்ளையபுரம் என உள்ளூர் பெயர்களோடு கொழும்பு, மட்டக் கொழும்பு, கண்டி என அயல்நாட்டு ஊர்ப்பெயர்களைக் கொண்ட குடும்பங்கள் காலாதிகாலமாக வாழ்ந்து வருகின்றன.nambuthalai 7
வணிகர்களும் உழைப்பாளிகளும் கல்வியாளர்களும் வழிவழியாய் வாழ்ந்து வரும் நம்பு தாழை ஆன்மீக மேதைகளின் ஊருமாகும். மௌலானா மௌலவி ஷைகு அப்துல் காதிர் ஆலிம் சாகிபு 1885இல் நம்புதாழையில் பிறந்தார். தொண்டியிலுள்ள மத்ரஸத்துல் இஸ்லாமியாவில் மௌலவி நெய்னா முகம்மது ஆலிம் சாகிபிடம் மார்க்கக் கல்விபயின்றார். ஆலிமாகிய நம்புதாழை பேராசான் அதிராம்பட்டினம், தொண்டி, கீழக்கரை, பண்டார வடை ஆகிய ஊர்களில் ஆசிரியப் பணி புரிந்தார். பண்டாரவடையில் பணியாற்றிய போது கிலாஃபத் இயக்கத்தில் முக்கியப் பிரமுகராய் விளங்கிய மௌலானா 12.11.1920இல் மேலப்பள்ளிவாசல் சதுக்கத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். 1500 பேர்களுக்கு மேல் கூடியிருந்த கூட்டத்தில் திருவாளர்கள் அனுமந்தராவ், ராமச் சத்திர செட்டியார், திருவையாறு, சி.சுப்ரமணிய முதலியாரோடு ஷனாப்கள் ஆ.அப்துல் மஜீது சாகிப், எச்.முகம்மது இபுறாகீம், கோ.அ.பக்கீர் முகம்மது சாகிப் போன்றோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். (‘சுதேசமித்திரன்’ வெளியிட்ட செய்தியைத் தருபவர் வரலாற்று ஆய்வாளர் செ.திவான் - நூல் : விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்) மௌலவி அவர்கள் அரபு இலக்கியத்தில் சிறந்த புலமை பெற்றிருந்தார். அவர் அல்லகாத், மகாமாத் ஆகிய நூல்களைப் பயிற்று விக்கும்போது கூட ஒரு முறையேனும் அகராதியை எடுத்துப் பார்த்ததில்லை. கி.பி.1947 மற்றும் 1948 இல் மௌலவி அவர்கள் சென்னைப் பல்கலைக் கழக அரபி -உர்து பார்ஸிப் பிரிவின் தூண்டுதலின் பேரில் அரபி - தமிழ் அகராதி ஒன்றைத் தயாரித்தார். (இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் பாகம் : 4) பல்லாக்கு வலியுல்லாஹ்வால் மதிக்கப்பட்ட மௌலானா 1955இல் நம்புதாழையில் காலமானார். இவருடைய புதல்வர்களில் ஒருவர் அன்புக்குரிய ராஜ்முகம்மது. பேரர்களில் ஒருவர் ‘சொக்கரா’ அக்பரலி.
ஆலிம்களும் மார்க்க மேதைகளும் உலா வரும் நம்புதாழையில் முத்துபஜார் வீதியில் சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் குப்பை ராவுத்தர் - மீரா நாச்சியார் தம்பதிக் குப் பிறந்த சேகுநெய்னா முகம்மது சூஃபி ஞானியான வரலாறு மெஞ்ஞான ரத ஊர்வலமாகும். நாகூர் - முத்துப்பேட்டை என ஒற்றையடிப் பாதையில் பயணித்த சேகு நெய்னா முகம்மது இலங்கை சென்று ராஜபாட்டையில் தம் ஞான ரதத்தைச் செலுத்தி தாழையான் பாவா ஆனார். கொழும்பிலிருந்த அரசியல் பிரமுகர்கள், யாழ்பாணத் தமிழர்கள், ஞானிகள் என எல்லோரையும் கவர்ந்த தாழையான் பாவா 1955- களில் மரணமாகி கொழும்பு ரத்மலானையில் ஓய்வு றக்கம். இன்று அவரின் கபர் இருக்குமிடம் தர்காவாக. தாழையான் பாவா போலவே சூஃபி ஞானியாக விளங்கிய முள்ளாம் வீட்டு மஸ்தான் எனும் பக்கீர் மஸ்தானைத் தேடி 1940களில் வந்த மக்கள் ஆயிரக்கணக்கில்.- திருப்பாலைக் குடி -நம்புதாழை என உலவிய மஸ்தானை திருப்பாலைக்குடி மஸ்தான் எனவே அழைத் தனர். அவருடைய சமாதி திருப்பாலைக்குடி மையவாடியில் உள்ளது. மூன்றாவதாக உலா வந்த ஒரு சூஃபி புளி ஊத்தி வீட்டு மஸ்தான் என அழைக்கப்பட்ட ஞானக்கொடி பாவா, ‘கல்வத்தியா தபோவனம்’ என ஆன்ம இல்லம் அமைத்து சீடர் சூழ வாழ்ந்த ஞானக்கொடி பாவா இயற்றிய கவிதை நூல் ‘மெய்ஞ்ஞானத் திறவுகோல்’ வெளிவந்தது. வியப்பான செய்தியல்ல. நம்புதாழைக்காரரின் ‘தையார் சுல்தான்’ நாடகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்ததுதான் வியப்பு. ஊர்தோறும் நடிக்கப்பட்ட நாடகம் மட்டு மல்ல ‘தையார் சுல்தான்’ ராகம், தாளக் குறிப் போடு வந்த நாட்டாரியல் நாடக நூல் இது. இதை எழுதியவர் நம்புதாழையைச் சேர்ந்த சின்ன வாப்பு என்பார்.
இதன் இரண்டாம் பதிப்பு 1881 - லும் மூன்றாம் பதிப்பு 1990லும் வெளியாகியுள்ளது.இந்த இசை நாடக நூலுக்குப் பின் இதே நம்புதாழையைச் சேர்ந்த நல்ல தம்பி பாவலர் எனும் கிதுர் முகம்மது ‘இசைத்தேன்’ இசைப்பாடல் நூலை வெளியிட்டுள்ளார். நம்புதாழை யில் பிறந்து தொண்டியில் வாழ்ந்து கண்டியை அடுத்த கம்பளையில் கிளை பரப்பிய பாவலர் தெ.உ.குடும்பத்தைச் சேர்ந்தவர். இதே தெ.உ. குடும்பத்தின் தாய்வழியில் பிறந்த செ.முகம்மதலி சாகிபு எனும் தாழை மதியவன் ஒரு பன்னூலாசிரியர். சின்ன ஊர் என்றாலும் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஊர் பலவுண்டு என்பதற்கு நம்பு தாழை எடுத்துக்காட்டு. இராமநாதபுர சமஸ்தானத்துக்கு உட்பட்ட கச்சத்தீவின் உரிமை நம்புதாழை மேல வீட்டுக் காரர்களுக்கு இருந்துள்ளது. அது மட்டுமல்ல அத்தீவில் மீன் காயப்போட கொட்டகையைக் கட்டியவரும் நம்புதாழைக்காரரே. அவரு டைய பெயர் சீனிக்குப்பு, படையாட்சித் தெருக்காரர். காலப்போக்கில் சீனிக்குப்புப் படையாட்சி கட்டிய கொட்டகையை தேவாலயம் ஆக்கியவர்கள் ராமேஸ்வரம் ஓலக்குடாக் காரர்கள். கடைசியில் கையாலாகாத அரசுகள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டன.
நம்புதாழை மக்களில் 90 விழுக்காடு மக்கள் இலங்கையை நம்பியிருந்தனர். மிகச் சிலரே மலேசியா, தமிழக நகரங்களில் கால்பதித்தனர். இலங்கை கொழும்பு மாநகரில் அவர்களில் சிலர் சம்பாத்யத்தோடு பொதுப் பணிகளிலும் ஈடுபட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியதைத் தொடர்ந்து 1950களில் அதன் கிளையை கொழும்புவில் தொடங்கமுக்கியப் பங்கு வகித்தவர்கள் நம்புதாழை வாசிகள். நா.மீ. சதகத்துல்லா எனும் தாழை தாசனும் சேகுதாவூது எனும் செல்வத் தம்பியும் நாவலர் நெடுஞ்செழியனை கொழும்புக்குக் கூட்டிச் சென்று தொடக்க விழா நடத்தினர்.
கல்வியைக் கொண்டாட மறுத்த போதும் சிலர் கல்வியைக் கண்ணெனப் போற்றினர். அப்போது கொழும்பு சாஹிரா கல்லூரியில் படித்தவர்களில் வ.மு.வாஹிது காக்கா முக்கி யமானவர். எழுத்தார்வம் கொண்ட அவர் கொழும்பில் மேடையேற்றிய ‘மாப்பிள்ளை மரைக்கார்’ எனும் நாடகம் பரவலாகப் பேசப் பட்டது. பின்னாட்களில் அவர் நம்புதாழை ஊராட்சித் தலைவராகக் கூட இருந்தார். காக்காவின் தம்பி கிதுர் முகம்மது ‘மாணவர் மன்றம்’ அமைத்து இளைஞர்களை ஒருங்கி ணைத்தார். தியாக தீபம், சிந்தியதேன், மரகதச் சிலை போன்ற நாடகங்களை அரங்கேற்றத் துணை புரிந்தார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் மிகப் பெரும் வணிகப் புள்ளியாகத் திகழ்ந்தவர் அல்ஹாஜ் மன்சூர். இவர் நட்டியெழுப்பியதே மதுரையி லுள்ள ‘ஜூலைஹா’ ஏற்றுமதி இறக்குமதி தொழில்களோடு சினிமா விநியோகமும் ‘சேயன்னா பிலிம்ஸ்’ மூலம் செய்த ஹாஜியார் தான் மதுரை விஜயராஜை நடிகர் விஜயகாந்த் ஆக்கியவர். நம்புதாழையின் முதல் பட்டதாரி அல்ஹாஜ் S.R.M. ஜக்கரியா. இவர் இளையாங்குடி, கீழக்கரைப் பள்ளிகளில் ஆசிரியப் பணி புரிந்தார். கப்பல்காரர் வீட்டு ஹிதாயத்துல்லா இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். வ.மு. குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் காதர் மஸ்தான் மதுரை வக்ஃப் போர்டு காலேஜின் முதல்வராக இருந்தார். இவர்களே தொடக்கக் கால கல்வியாளர்கள்.nambuthalai 12
மலேசியாவின் வணிகம் செய்து சென்னையில் அச்சகம் நடத்திய இன்னாஞ்சி வீட்டு காசிம் நம்புதாழை பிரமுகர்களில் முக்கியமானவர். இவர் தயாரித்த திரைப்படம் ‘அர்த்தமுள்ள ஆசைகள்’ இவரின் புதல்வர்களில் ஒருவரே நடிகர் ரவிராகுல்.
நம்புதாழையின் பூனைவீட்டு அகமது அவர் கள் தான் ஏர்வாடி தர்ஹா அருகிலுள்ள பள்ளிவாசலைக் கட்டியவர். அவர் மரணித்து விட்டாலும் அவருடைய துணைவியார் ஹாஜியானி ஆசியம்மா கணவரின் கொடைத் திறத்தைக் கொண்டாடி வருகிறார். நம்புதாழையிலுள்ள பெரும் குடும்பங்களில் ஒன்று கா.மீ. குடும்பம். இக்குடும்பத்தைச் சேர்ந்த ஜனாப் கா.மீ.அகமது ஜலால்தீன் சுதந்திர போராட்டக் காலத்தவர். பெருந்தலைவர் காமராஜரின் நண்பர். இராமநாத புரம் மாவட்டத்தின் முற்கால ஜில்ல போர்டு உறுப்பினராக இருந்தவர். கதர் சட்டைக்காரர்.
கொழும்பு நகரில் இருந்த மு.மு.காசிம் சாகிப் & சன்ஸ் அத்தர்கடையும் மு.அ.மு.மகமுதீன் நூல் கடையும் வியாங்கொடையில் இருந்த இருந்த கா.சி.குடும்பத்தாரின் தேங்காய் எண்ணெய் ஆலையும் செல்வங்கொழிக்கும் இடங்களாக இருந்தன. கண்டிப்பகுதியில் செயல்பட்ட ரா.ம.சி. குடும்பத்தின் தேயிலை ஏற்றுமதி நிறுவனம் குறிப்பிடத்தக்க வணிகத் தலமாக விளங்கியது. மு.வா.குடும்பத்தாருக்கு நீர் கொழும்பில் வணிக நிறுவனம் இருந்தது. எளிமையான விருந்துக்கான சாப்பாடு என்றாலும் நம்புதாழை உணவுத் தயாரிப்பு நீண்ட கரைப் போக்கில் மிகச் சுவையானது. சோறு, கறியாணம், கலியா, புளியாணம் தான் நம்மையறியாமல் நாவூறும். இங்கு புழங்கும் தனித் தமிழ்ச் சொற்களும் கவனிக்கத்தக்கவை. வாழ்வரசி, புலாத் தண்ணீர், இழைவாங்கி, ஆழவாங்கி, உடுப்புப் பெட்டி, பசியாறுதல், பெட்டகம், தைலா எனச் சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக ஒரு செய்தி இந்தியா- இலங்கை யின் கடுமையான கட்டங்களுக்குப் பின் சட்டத்தை மீறிய போக்குவரத்து நடத்திய ஊர் நம்புதாழை. 1960 வரை இங்கிருந்துதான் பெரும் பாலும் ‘கள்ளத் தோணிகள்’ வல்வெட்டித் துறைக்குப் பயணித்தன.

தொடரும்....

Read 149 times