புதன்கிழமை, 05 ஜூலை 2017 07:07

இளம் ஆலிம்களே உங்களைத்தான் - 2

Written by 
Rate this item
(0 votes)

தாழ்வு மனப்பான்மை நீக்குக!

அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வி பயின்றுவரும் மாணவக் கண்மணிகளுக்கு ஆரம்பமாக ஒரு வார்த்தைச் சொல்லிக்கொள்வேன்.
இந்தக் கல்வி கற்க வந்ததே, நீங்கள் செய்த புண்ணியம்தான் என்பதை முதலில் நம்புங்கள். எத்தனையோபேர் ஊரில் இருக்க, உங்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருப்பது, இறைவனின் தேர்வுக்கு நீங்கள் ஆளாகியிருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். இல்லையென்றால், உங்கள் குடும்பத்திலும் உறவுகளிலும் இருக்கும் மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உங்களை இந்த மகத்தான கல்விக்கு இறைவன் தேர்ந்தெடுத்திருப்பானா?

திருக்குர்ஆனில் ஒரு வசனத்தில் இறைவன் கூறுவான் : பின்னர் நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை இவ்வேதத்திற்கு வாரிசுகளாக்கினோம். (35:32) இவ்வசனம் சமுதாயத்தார் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் வேத அறிஞர்களுக்கே மிகவும் பொருந்தும். (தஃப்சீர் இப்னு கஸீர்) மற்றொரு வசனம் கூறுவதைப் பாருங்கள்:

தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பெற்றவர் ஏராளமான நன்மை வழங்கப்பெற்றவர் ஆவார். அறிவுடையோரைத் தவிர (மற்ற எவரும் இதைச்) சிந்திப்பதில்லை. (2:269)
இங்கு ‘ஞானம்’ (அல்ஹிக்மத்) என்பது, நபித்துவக் கல்வியைக் குறிக்கும் என்பதே அறிஞர்கள் பலரது கருத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பொன்மொழி இதை உறுதி செய்கிறது.
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். (ஸஹீஹுல் புகாரீ, ஹதீஸ் - 71)
ஆக, அல்லாஹ் உங்களுக்கு நன்மையை நாடிவிட்டான் என்பது, அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் சாட்சியாக சத்தியம். எனவே, தாழ்வுமனப்பான்மையை முதலில் தூக்கி எறியுங்கள். நான் சிறப்புக்குரியவன்; என்மீது அல்லாஹ்வின் பார்வை உண்டு; எனக்கு அவன் நன்மையை நாடியுள்ளான் என்று பெருமிதம் கொள்ளுங்கள். அப்போதுதான் இக்கல்வியில் மனம் லயிக்கும்; ஆர்வம் பிறக்கும்; அக்கறை தோன்றும்.

எண்ணமும் இலக்கும்
அடுத்து எந்தச் சூழ்நிலையில், எந்த நோக்கத்திற்காக மத்ரஸா படியை நீங்கள் மிதித்திருந்தாலும், மத்ரஸாவிற்குள் நுழைந்தபிறகு எண்ணத்தைத் தூய்மையானதாக, அப்பழுக்கற்றதாக மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்விற்காக, அவன் அன்பிற்காக, அவன் நெருக்கத்தைப் பெறுவதற்காகவே இக்கல்வியைக் கற்கிறேன்.
இக்கல்வியை நான் கற்று, என் அறியாமையை அகற்றி, தூய இஸ்லாத்தை அறிந்து, அதன்படி முதலில் நான் செயல்பட்டு என்னை நான் செம்மைப்படுத்திக்கொள்வேன். அதன்பிறகுதான் மற்றவையெல்லாம் - என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும். எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. எண்ணம்போல்தான் வாழ்வு. உருவத்தை அல்லாஹ் பார்ப்பதில்லை; அதற்குள் இருக்கும் எண்ணத்தையும் அதைத் தொடர்ந்து உருவாகும் செயல்களையுமே அவன் பார்க்கின்றான்.
பொதுவாகவே வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு, குறிக்கோள் இருக்க வேண்டும். அது நல்லதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், அதை அடைய ஓடமுடியும்; உழைக்க முடியும். இலக்கை எட்டாமல் என் கால்கள் ஓயாது என்ற வைராக்கியத்தில் வீரியமாகச் செயல்பட முடியும். மார்க்கக் கல்வி பயிலும் மாணவனின் இலக்காக எது இருக்க முடியும்?

என்னால் நான்குபேராவது திருந்த வேண்டும்; சமுதாயம் நல்வழிபெற வேண்டும். தனிமனித ஒழுக்கம், குடும்ப நல்லுறவு, சமூக ஒற்றுமை, சமய நல்லிணக்கம், அரசியல் தூய்மை, தொழில் ‘ஹலால்’மயம், உலக அமைதி… என ஒவ்வொரு துறையும் சீர்பட ஏதேனும் ஒருவகையில் என் பங்கும் இருக்க வேண்டும்; என்னால் இயன்ற அளவிற்கு என் குரலும் ஒலிக்க வேண்டும்.

இந்தச் சீர்திருத்தப் பணியைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் தெரிவித்த அற்புதமான ஒரு நபிமொழி உண்டு: “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நல்வழி காட்டப்படுவது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை)விட உமக்குச் சிறந்ததாகும்” என்பதே அம்மொழி. (ஸஹீஹுல் புகாரீ, ஹதீஸ் - 2942)
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, “குழப்பம் இங்குதான்; குழப்பம் இங்குதான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து… (அது தோன்றும்)” என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ, ஹதீஸ் - 3279)

மதீனாவிற்குக் கிழக்கே என்பது ‘இராக்’ பகுதியைக் குறிக்கும் என்றே விரிவுரையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். அன்றைய பாரசீகத்தில் இருந்த ‘ஜீலான்’ எனும் ஊரில் பிறந்து, இராக் தலைநகரம் ‘பக்தாத்’ வந்து, கல்வி கற்று, தீவிர மார்க்கப் பிரசாரம் செய்த ஷைகு அப்துல் காதிர் அல்ஜீலானி (ரஹ்) அவர்கள் (ஹி.490-561) உங்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.
‘அல்ஃகுன்யா’ உள்ளிட்ட பல நூல்கள் எழுதியவர்கள். ஆயிரக்கணக்கான ஆலிம்களை உருவாக்கியவர்கள். உள்ளங்களை உருக்கி வார்த்தெடுக்கும் அற்புதப் பேச்சாற்றல்மிக்க பிரபல பரப்புரையாளர். அன்னாரது பிரசாரத்தால் குற்றங்களைக் கைவிட்டு நல்வழி திரும்பிய முஸ்லிம்கள் ஏராளம்; இஸ்லாத்தில் இணைந்த முஸ்லிமல்லாதோர் எண்ணற்றோர். அன்னாருடைய பரப்புரையின் அடிப்படையே இறையுணர்வு, ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்), உலகப் பற்றின்மை (ஸுஹ்த்) ஆகியனவாகவே இருந்தது.
இருளும் குழப்பமும் சூழ்ந்திருந்த இராக் பகுதியில் தீன் ஒளி ஏற்றிவைத்து, மார்க்கத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, ஆயிரமாயிரம் உள்ளங்களுக்கு நல்வழிகாட்டிய அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள், ஹுசைன் (ரலி) அவர்களின் வழித்தோன்றல்; எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை ஏன் நமக்கு முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது?

நேர மேலாண்மை
மாணவர்களான உங்களுக்கு நேரம் மிக முக்கியமானது; ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது. நேரத்தை நீங்கள் ஆளாவிட்டால், அது உங்களை ஆண்டுவிடும்; அடிமைப்படுத்திவிடும். நேரம் ஒன்றுதான், கடந்துவிட்டால் திரும்பக் கிடைக்காதது; விலை கொடுத்து வாங்க முடியாதது; அழுது புலம்பினாலும் அரற்றினாலும் கைக்கு வராதது.
இதனால்தானோ என்னவோ! காலத்தின் மீது சத்தியம் செய்கிறான் இறைவன். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டுப் பின்னர் காலத்தை ஏசுபவன், தன்னைப் புண்படுத்துவதாகச் சொல்கிறான் அல்லாஹ். காரணம், காலத்தைப் படைத்தவன் அவனே. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வழிபாடுகளெல்லாம் குறித்த காலத்திலும் நேரத்திலும் நிறைவேற்றப்பட வேண்டியவை என விதியாக்கி, வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.

எதிலும் நேரம் தவறாமையை இப்போதிருந்தே பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இது, எல்லா காலத்திற்கும் உதவும். அதிகாலை எழுவதிலிருந்து இரவு உறங்கச் செல்வதுவரை ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நேரம் வகுத்துக்கொள்ளுங்கள். அந்நேரத்தைக் கடைப்பிடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், துஆ, வகுப்பிற்குச் செல்லுதல், உணவு, குளியல், காலைக்கடன், நடைப்பயிற்சி, அன்றைய பாடத்தைத் திரும்பப் படித்தல்… என எல்லாவற்றையும் உரிய நேரத்தில் நிறைவேற்றுவதை உங்களுக்கு நீங்களே கடமையாக்கிக்கொள்ளுங்கள்.
வகுப்புக்குச் சரியாகச் சென்றுவிடுங்கள். தாமதமும் கூடாது; விடுப்பு எடுப்பதும் கூடாது. தவிர்க்கவே முடியாத சந்தர்ப்பத்தில் மட்டுமே விடுப்பு எடுப்பதைக் கொள்கையாக்கிக்கொள்ளுங்கள். அரட்டை, குறட்டை, ஊர் சுற்றல், வீண்பொழுது கழித்தல் ஆகிய வேண்டாத வேலைகளில் நேரத்தைப் பாழ்படுத்திவிடாதீர்கள்.
இதுவெல்லாம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் எளிது; செயல்படுத்துவதுதான் கடினம் -என்று எகத்தாளம் பேசுவதைக் கைவிடுங்கள். உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்களின் வாழ்நாளை மதிப்பிடுவீர்களானால், அவர்கள் நேரத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காண்பீர்கள். நீங்கள் பத்தோடு பதினொன்றா? ஆயிரத்தில் ஒருவனா? என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

(சந்திப்போம் இறை நாடினால்)

Read 777 times Last modified on வியாழக்கிழமை, 24 ஆகஸ்ட் 2017 07:42