திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017 06:32

மண்ணின் வரலாறு-5

Written by 
Rate this item
(0 votes)

நானிலம் குழுமும் நாகூர்!

நாகப்பட்டினம் நகராட்சிக்குள் அமைந்துள்ள நாகூரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இரட்டை நகர்களான நாகூரும் நாகையும் பல்வேறு பண்பாடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுக்குச் சொந்தமுடையவை.
ஆதிகாலத்தில் இப்பகுதி ‘புன்னாகவனம்’ என அழைக்கப்பட்டது. புன்னை மரத்தின் மற்றொரு பெயர் நாகமரம். எனவே நாக மரங்கள் சூழ்ந்திருந்த இவ்வூர்கள் நாகை, நாகூர் என மாறியிருக்கலாம்.
இப்பகுதியை நாகன் எனும் மன்னன் ஆண்டதாகவும் இங்கு நாகர்கள் எனும் பழங்குடிகள் வாழ்ந்ததாகவும் செய்திகள் புழங்குகின்றன.
நகரம் என்பதே மருவி நாகூர் ஆகியிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் மொழிகின்றனர். மேற்கு வங்கத்திலுள்ள சந்திரநாகூர் அதையடுத்துள்ள பாசா நாகூர், கோநாகூர் எனும் ஊர்கள் நம் கவனத்துக்கு உரியன.
நாகூர் முதலில் ஒரு சிறிய மீனவக் கிராமமாகவே இருந்தது. பின்னரே அது தோணித்துறைமுகமாக மாறியது. நாகையோடு சேர்ந்து வளர்ந்து நாகூர் ரெட்டைத் துறைமுகங்களில் ஒன்றாகியது.
மீனவச் சேரியை அடுத்து யவனச்சேரி உருவானது. பூம்புகார் துறைமுகத்தில் குதிரைகள் வந்து கும்மாளமிட்ட போது பிதுங்கிய தோணிகள் நாகை - நாகூரிலும் நங்கூரமிட்டன. சோழர் - பல்லவர் படைகள் ரெட்டை நகரைத் தொட்டுச் சென்றன.
அரபுக்கள் வணிகர்களாக பரிணாம வளர்ச்சி பெற்ற போது அரபு மொழி கொண்டல் காற்றோடு சோழ மண்டலக் கடற்கரையில் சொந்தம் கொண்டாடியது.
ஏழாம் நூற்றாண்டில் அவர்கள் முஸ்லிம்களாக வலம் வந்தார்கள். வந்து தங்கிச் சென்று கொண்டிருந்த அரபு முஸ்லிம்கள் கடற்கரைப் பட்டினங்களில் தங்கி வணிகம் செய்யவும் தொடங்கினார்கள்.
‘யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என அகநானூறு கூறுகிறது.
பொன்னைக் கொண்டு வந்த கலங்கள் புரவிகளையும் கொண்டுவந்து கரை சேர்த்தன. மிளகு முதலிய மசாலாக்களைக் கொண்டு சென்ற கலங்கள் முத்தையும் மணியையும் கொண்டு சென்றன. அது ஒரு பொற்காலம்.
ஏழு, எட்டு என ஓடிய நூற்றாண்டுகள் பத்தைத் தாண்டி பதிமூன்றையும் எட்டிப்பிடித்த போது அரபகத்திலிருந்து முஸ்லிம்கள் கப்பல்களில் வந்து கரையேறினர்.
கி.பி.1269 -
அப்போது அரபகத்தை ஆண்ட ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் அறமில்லா ஆட்சியைப் புறக்கணித்து முஸ்லிம்கள் கப்பல் கப்பலாய் மலையாள, தமிழகக் கடற்கரைப் பட்டினங்களில் வந்திறங்கினார்கள்.
அக்கப்பல்களில் சில நாகை, நாகூர் பட்டினங்களிலும் நங்கூரமிட்டன.
காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிராம்பட்டினம், காரைக்கால், திருமுல்லைவாசல், பரங்கிப்பேட்டை, கடலூர், கோட்டைக்குப்பம், பழவேற்காடு என பனிரெண்டு பட்டினங்களில் அரபு வம்சாவழியினர் வந்திறங்கி வாழத்தொடங்கினர்.
அவர்கள் எல்லோருமே வணிகர்கள், மரைக்காயர்கள், கப்பல் கட்டுவோர், கடலோடிகள் என வாழ்ந்தவர்கள். அரபகத்தில் அவர்கள் செய்த தொழில்களையே தாம் புலம் பெயர்ந்த இடங்களிலும் செய்தனர்.
இவர்களன்றி நாகூரில் வந்து குடியேறியவர்களில் “மாலிமார்கள்” குறிப்பிடத்தக்கவர்கள்.
முஹல்லிம் - மாலிமார் எனத் தம் பெயருக்குப் பின் குறிப்பிடும் இவர்கள் ஆசான்கள், கப்பல் தலைவர்கள், வழிகாட்டிகள் எனும் தலைமைத்துவ வட்டத்துக்குள் வருபவர்கள்.
நாகூரில் மாலிமார் தெருவென்றே ஒரு தெரு உண்டு.
மாலிமார்களில் மிகச் சிறந்த வணிகரும் நாகூர் தமிழ்ச் சங்க நிறுவனருமான சகோதரர் முஹம்மது ஹுஸைன் மாலிமாரைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அவரை இருமுறை சந்தித்த எனக்கு நாகூரைப் பற்றிய பல தரவுகள் கிடைத்தன. இவர் முன்னாள் நாகைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் நஜிமுதீனின் மூத்த சகோதரர் பெஹ்ரைன் முடியரசின் தலைநகர் மனாமாவில் நவமணிகள் வணிகம் செய்யும் அன்பர் தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறார். இவரை இளம் எழுத்தாளர் நாகூர் ரிஸ்வான் எனக்கு ஆற்றுப்படுத்தினார்.
நாகூரில் குடியேறிய அரபு முஸ்லிம்களோடு காயல்பட்டின, கீழைக்கரையில் குடியேறியவர்கள் தொடர்பு வைத்திருக்கின்றனர். சோழ மண்டலக் கடற்கரையின் நடுவில் அமைந்த துறைமுகப்பட்டினங்களான நாகூரும் நாகப்பட்டினமும் கப்பல் தொழிலுக்கு மையப்புள்ளியாக இருந்ததால் காயல், கீழை கப்பல் வணிகர்கள் நடுப்பட்டினங்களை மிகவும் நேசித்திருக்கிறார்கள். அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள். தெற்குத் தெருவில் அவர்கள் திரளாக உள்ளனர்.
அவர்கள் மரைக்காயர்கள் என்றாலும் மாலிமார்களோடும் மணவுறவு வைத்திருந்தனர். இன்றும் அவ்வுறவைத் தொடர்கின்றனர்.
கடலோரத்தை கலங்கள் நிறுத்துமிடமாகக் கொண்டவர்கள் வெட்டாற்றையும் ஏற்றுமதி - இறக்குமதிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நாகூரின் வடக்கில் பாயும் வெட்டாற்றின் தென்கரையில் அமைந்திருந்த மேலை நாகூர் முகத்துவரமாகவும் விளங்கியிருக்கிறது. அங்கு பண்டக சாலைகளும் குடியிருப்புகளும் இருந்துள்ளன.
மண்மூடிப்போன மேலை நாகூர் அகழ்ந்தெடுக்கப்பட்டால் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கக்கூடும். தொல்பொருள் துறையிடம் மேலைநாகூரை அகழ்ந்து பார்க்க கேட்டுக் கொண்ட முயற்சிகள் முன்னேற்றம் காணவில்லை.
மேலை நாகூருக்கு அண்மையில் இயற்கை எரிவாயு நரிமணத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
பெருந்தோணிகள் நிறைந்திருந்த நாகூர்பட்டினம் படிப்படியாக பக்தர்கள் வந்து குவியும் ஆன்மீகப்பட்டினமாய் மாறியது எப்படி?
உத்திரப் பிரதேசத்தில் அயோத்திக்கு அருகிலுள்ள மாணிக்கப்பூரில் கி.பி.1490 (ஹிஜ்ரி 910) இல் பிறந்த மாமனிதர் சாகுல் ஹமீது அரபு - ஃபார்ஸி மொழிகளிலிருந்த சமய நூல்களைக் கற்றுத் தேறி பேராசான் ஆனார். அந்தப் பேராசானுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களில் 400 பேர் புடை சூழ தம் 37 ஆவது அகவையில் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாரசீகம் எனப் பயணித்து மக்கா சென்றார். பின் அங்கிருந்து மாலைத் தீவு, இலங்கை என கப்பலேறி தமிழகக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.
அக்கால கட்டத்தில் தஞ்சைப் பகுதியை ஆண்ட மகாராஜா அச்சுதப்ப நாயக்கர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரின் வயிற்று வலியைப் போக்க ஆவன செய்ததால் நற்பெயர் பெற்ற மாமனிதரை மன்னர் நாகூரில் தங்கச் செய்தார்.
நீண்ட பயணம்; பெருங்குழுவினர்; நீண்ட காலம், அவர்களின் அக்காலப் பயணத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இத்தகைய பெரும் பயணம் செய்தவர் உலகில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்!
கடலோரம் குடியேறிய ஆன்மீகப் பெரியாரைக் கண்டு உடல் நலமும் மனநலமும் பெற்றவர்கள் பலர். அவருக்கு தஞ்சையை ஆண்ட மன்னர்கள் நிலபுலன்களையும் பொருள்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.
நாகூரில் நடந்தேறிய ஒரு முக்கிய திருமணம் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு.
அப்போது கீழ் நாகூரில் மாணிக்கப்பூர் மைந்தர்கள் வாழ்ந்து வந்தனர். மேல் நாகூரில் மாலிமார்களில் ஏழு குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.
இறைவனின் எண்ணப்படியும் திட்டப்படியும் மாணிக்கப்பூர் மாமனிதரின் மைந்தர் யூசுப் சாகிப் மாலிமார் குடும்பத்துக் குலக்கொடியை மணந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏழு குடும்பங்களில் சிலர் சம்மதிக்கவில்லை; சிலர் சம்மதித்தனர்.
இம்மண நிகழ்வில் மூலம் வந்தவர்களே இன்று சாபுக்கள் என அழைக்கப்படும் பாபுக்கள். அதே சமயம் கலப்படம் ஆகாத மாலிமார்கள் இன்றும் மாலிமார்களாகவே பரம்பரையைத் தொடர்கின்றனர். மரைக்காயர்களோடும் மணவுறவு கொள்கின்றனர்.
மாணிக்கப்பூர் மாமனிதர் கி.பி. 1558 இல் மரணிக்க அவர் அடக்கத்தலம் தர்காவானது. பின்னர் படிப்படியாக தர்கா பெரிய மகாலாக மாறியது.
மராட்டிய மன்னர் பிரதாப்சிங் தர்காவின் முன் 90 அடி உயரமுள்ள அழகிய கூண்டைக் கட்டச் செய்தார். பிரதாப்சிங்கின் மகன் மகாராஜா துளசாஜி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் 6000 ஏக்கர் நிலத்தை தர்காவுக்காக அளித்தார்.
கோவில்களில் சிலை வணக்கம். தர்காக்களில் சமாதி வணக்கம். நாகூர் தர்காவும் கோவிலைப் போலவே இயக்கப்படுகிறது. கோவிலில் திருப்பள்ளி எழுச்சி என்றால் தர்காவில் அதிகாலையில் நான்கு பேர் வாழ்த்துச் சொல்ல தர்பார் தொடங்குகிறது.
கோவிலில் யானையைக் காணலாம். நாகூர் தர்காவிலும் யானை ஆசி வழங்கியது. முப்பது ஆண்டுகளாக இங்கிருந்த காதர் பீவி என்ற யானை 1989 இல் இறந்தது. 1990 இல் வந்த பாத்திமா என்ற யானை 2014 இல் மரணிக்க மூன்று ஆண்டுகளாக யானையில்லாமல் இருக்கிறது நாகூர் தர்கா.
கோவில்களில் தமிழ்ப் புலவர் நியமனம் போல நாகூர் தர்காவிலும் தர்காப் புலவர் இருந்தார். நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் உயர்திரு எஸ்.எம்.ஏ. காதர் மறைந்த பின் அவ்விடம் காலியாகவே உள்ளது.
கோவில்களில் தேர்த் திருவிழா என்றால் தர்காவில் சந்தனக்கூடு. பிற மக்களை ஈர்க்க செய்யப்பட்ட கந்தூரி இன்றும் தொடர்கிறது. தமிழகத்தில் எந்தக் கொம்பன் வந்தாலும் நாகூரை அசைக்க முடியாது.
நாகூர் போன்ற இடங்கள் இரு சமூக இணைப்புப் பாலமாக விளங்குகிறது. சரபோஜி மன்னனின் காலத்தை சிலர் மாற்ற முயன்றாலும் காலம் அவர்களை மாற்றவிடாது. தர்காவின் முன் எழுந்து நிற்கும் ஸ்தூபி அதற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. அதுவே நாகூரின் அடையாளம்.
“அலங்கார வாசல்” அழகாக நின்று அனைவரையும் வரவேற்புரை ஆற்றாமல் வரவேற்கிறது. அவ்வாசலை அமைத்துக் கொடுத்த புரவலர் அ.பு.நகுதா அவர்களின் புகழைப் பேசாமல் பேசுகிறது.
புரவலர் அ.பு.நகுதா அவர்கள் வாழ்க்கையில் 1850 முதல் 1900 வரை பொற்காலமாகும். மிக விரிந்த ஏற்றுமதி இறக்குமதிக்காரரும் பல கப்பல்களுக்குச் சொந்தக்காரருமான புரவலர் நூற்றுக்கணக்கானவர்களை அலுவல்களில் அமர்த்தியிருந்தார்.
இவரைப் போல மேலும் சில கப்பல் வணிகர்கள், அவர்கள் ஒவ்வொருவரிடமும் பல பல கடலோடிகள். இவர்களில் பெரும்பாலோர் தொண்டி, பாம்பன், மண்டபம் என இராமநாதபுரக்காரர்கள்.
இவர்கள் குடும்பத்துடன் முகைதீன் பள்ளிவாசல் அருகில் குடியேறியிருந்தார்கள். குடும்பத்திலுள்ள ஆண்கள் கப்பல் வேலைக்குச் சென்றால் திரும்ப ஓராண்டாகும்.
அதுவரை கப்பல்காரரே அவர்களின் குடும்பத்திற்கு பாதுகாவலர் ஆவார். அக்காலத்தில் கப்பல் தொழிலாளர் குடும்பங்கள் அங்கிருந்த பல சிறு சிறு தெருக்களில் வாழ்ந்தனர். அவர்களுக்குத் தனித்தனி சமையல் கிடையாது. அவர்களுக்குரிய உணவுகள் மைதீன் பள்ளி வளாகத்தில் மொத்தமாக தயாரிக்கப்பட்டன.
மூன்று வேளையும் முழங்கும் நகரா ஓசை அவர்களை உணவுண்ண அழைக்கும். தொழுகை அழைப்புக்கு குண்டு போடப்பட்டது.
காலப்போக்கில் வணிகத்துக்காகவும் வேலைகளுக்காகவும் குடியேறிய பல்வேறு ஊர்மக்கள் நாகூர்வாசிகளாகவே மாறிப் போனார்கள். எல்லோருமே வந்தவாசிகள்.
நாகூரை ‘புலவர்கோட்டை’ எனப் போற்றுகிறார்கள். அது உண்மை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. தமிழக முஸ்லிம் ஊர்களிலேயே இலக்கியமும் இன்னிசையும் கை கோர்த்துக் கொண்ட ஒரே ஊர் நாகூரே!
படைப்பாளிகளில் மிகச் சிறந்தவராகிய குலாம்காதிறு நாவலர் கவிதையிலும் உரை நடையிலும் பேரும் புகழும் பெற்றார். இவர் எழுதிய நாகூர்ப்புராணம், ஆரிபு நாயகம், மதீனாக் கலம்பகம், உமறு (மொழி பெயர்த்த நாவல்) ஆகியவை குரிப்பிடத்தக்க படைப்புகள். இவரின் புதல்வரே ஆரிஃபு நாவலர்.
முஸ்லிம் தமிழ்ப் பெண் படைப்பாளிகளில் முதன்மையானவர் சித்தி ஜுனைதா. இவர் எழுதிய ‘காதலா/ கடமையா’, ‘மகிழம்பூ’, ‘ஹலீமா’, ‘வனஜா’, ‘பெண் உள்ளம்’, ‘மலைநாட்டு மன்னன்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இவருடைய குடும்பமே படைப்பாளிகளின் பாசறை, தம்பிகள் நாகூர் சலீம், தூயவன் (அக்பர்) தூயவனின் துணைவியார் ஜெய்புன்னிசா என முந்தைய தலைமுறையையும் நாகூர் ரூமி போன்றோர் இன்றைய தலைமுறையையும் அலங்கரிக்கிறார்கள்.
எம்ஜியாரின் கதையிலாகாவில் இருந்த ரவீந்தர் (செய்யது முகம்மது) ‘இசை முரசு’ இ.எம்.ஹனீஃபா, ‘இசைமணி’ யூசுஃப் கவிஞர் காதர் ஒலி என நாகூரின் இலக்கிய - இசைவாணர்களின் பட்டியல் மிக நீளமானது. தனி மனிதர்கள் செய்த பணிகளை இன்று நாகூர் தமிழ்ச் சங்கம் தொடர்கிறது.
நாகூரின் வீதிகளிலெல்லாம் தப்ஸ் இசை தவழ்வது போலவே இருக்கும். அங்கு தோல் ஒலியும் சதங்கை மொழியும் முயங்கிக் கிடக்கும். இங்குள்ள பைத்து சபாக்கள்தான் கவிஞர்களையும் பாடகர்களையும் உருவாக்கின. கௌதியா பைத்து சபா, காயிதே மில்லத் சபா, யூசுபியா பைத்து சபா, ஹமீதியா பைத்து சபா என சதங்கை கட்டிய சிறுபறை ஏந்திய குழுவினர் இன்றும் மணவிழா ஊர்வலங்களை மகிமைப்படுத்துகின்றனர்.
சுற்றுலா பயணிகள் சூழும் ஊர் என்பதால் பல ஊர், மக்களைப் பார்க்க முடிகிறது. உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் அல்வாக் கடைகளும் பல்வேறு பொருள் விற்கும் கடைகளும் நாகூரின் செழுமையைக் காட்டுகின்றன. பதினைந்துக்கு மேல் பள்ளிவாசல்கள் உள்ளன.
தர்காவில் காணிக்கை நிறைகிறது. சாபுமார்கள் நிறைவோடு வாழ்கிறார்கள்.படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் பணிகளில் சிறக்கிறார்கள். என்றுமுள்ள வெளிநாட்டுத் தொடர்புகள் கிழக்கிலும் மேற்கிலும் கால் நீட்டிப் படுத்துக் கிடக்கின்றன.
பல்வேறுவகை முஸ்லிம்கள் நாகூரில் காணக் கிடைத்தாலும் பச்சைத் தலைப்பாகைக் காரர்களையும் தர்காவைச் சூழ காணலாம். பல்வேறு ஊர்களில் வாழக்கூடிய ஐந்து தரீக்காக்காகாரர்கள் அவ்வப்போது காணப்பட்டாலும் கந்தூரி காலத்தில் மொத்தமாக வந்து விடுவார்கள்.
எஜமானனின் பிள்ளைகள் அவர்கள், பக்கீர்கள் எனும் அவர்களின் தப்ஸ் நாதத்தோடு இஸ்லாமிய வரலாறுகளைக் கேட்க கேட்க நம் காதுகள் குளிரும், கல்புகள் சம்மனம் போட்டு அமர்ந்து கொள்ளும்.

Read 646 times