தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள் (63)

வியாழக்கிழமை, 26 ஜூலை 2018 06:30

தொல்புகழ் படைத்த தொண்டித் துறைமுகம்

Written by

பல்வேறுவகை கடல்கள் உள்ளன. அவை மாக்கடல், வளைகுடா, விரிகுடா, நீரிணை (ஜலசந்தி) என பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளன. தமிழகக் கடல்களில் இவை நான்கும் உள்ளன. தெற்கெல்லையில் கிடக்கும் இந்துமாக்கடல் மிகப் பெரும் நீர்பரப்பு. அதற்கு வடக்கில் கிடக்கும் மன்னார் வளைகுடா வளைவான குடாக்கடல். குடாக்கடலைத் தாண்டி ஆழமின்றி ஆர்ப்பரிப்பு இல்லாமல் படுத்துக்கிடப்பது பாக் ஜலசந்தி, ஜலசந்தியைத் தாண்டி வடக்கில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப்பாடி அலையெழுப்பிக் கொண்டிருப்பது வங்காள விரிகுடா, இது சோழமண்டலக் கடற்கரை எனவும் கூறப்படுகிறது.

இந்த நான்கு கடல் சகோதரிகளின் கரையிலிருக்கும் முக்கியபட்டினங்கள் பழம்பெரும் வரலாறுகளைப் பேசாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. பல்லவர்களின் கோநகரான மாமல்லபுரம், சோழர்களின் முக்கிய பட்டினமான காவிரிப்பூம்பட்டினம், பாண்டியர்களின் பழம்பெரும் துறைமுகமான தொண்டிமாநகர், கொற்கை, காயல், சேரர்களின் கடற்கரைப் பட்டினங்களாகன குளச்சல், தேங்காய்ப்பட்டினம் எனத் தமிழகக் கடலோரங்கள் பல்லாயிரமாண்டுகளின் கதைகளைச் சுமந்து நிற்பவை.
இவற்றில் நாம் இப்போது தொண்டித் துறைமுகத்தைப் பற்றி அறிந்து கொள்ளவிருக்கிறோம். அது நம் கருத்தில் பதியவைக்கும் சங்கதிகளைப் பற்றி புரிந்துகொள்ள விருக்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்திலுள்ள துறைமுகப் பட்டினமாகும் இது. தொண்டி என்பதற்கு துறை, துவாரம் என்று பொருள். ஐம்பதாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட துளையுள்ள காலணா நாணயத்தை வடமாவட்டங்களில் தொண்டிக் காலணா என்றனர். கடலுக்கு துவாரம் போல துறைமுகம் அமைந்ததால் அதை தொண்டி என்றனர். எனவே கடல் துறையை முகத்துவாரம் எனவும் அழைத்தனர்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கீர்த்தியோடு விளங்கிய கிழக்குக் கரையோரப்பட்டினங்களின் ராணி நகர் இது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இங்கு சமண மதம் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. இலவோன் எனும் சமண மன்னன் தொண்டியைத் தலைநகராக்கி ஆண்டபோது மதுரையிலுள்ள மலைக்குகைகளில் சமணத் துறவிகளுக்கு படுக்கைகள் அமைத்துக் கொடுத்துள்ளான். இதைப் பற்றிய கல்வெட்டுகள் மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ளன.
1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் தொண்டியைப் பற்றிய பதிவுகள் உள்ளன. அதிலுள்ள ஊர்காண் காதையில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திர விழாவிற்கு தொண்டியை ஆண்ட அரசரால் அகிற்கட்டைகளும் துணிமணிகளும் வாசனைப் பொருட்களும் மரக்கலங்களில் அனுப்பப்பட்ட சங்கதி பாடலாக பதிவாகியுள்ளது. ‘வங்க வீட்டத்து தொண்டியோரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்’ என்ற சொற்றொடர் தொண்டியின் பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
வரலாற்று ஏடுகளிலும் இலக்கிய ஏடுகளிலும் பதிவாகியுள்ள மிகப்பழமையான துறைமுகப்பட்டினமான தொண்டிமாநகர் ஒரு நல்ல பெண்ணின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையின் கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்.
“வான்கடல் பரப்பில் தூவதற்கு எதிரிய
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த முடவுமுதிர் புன்னை தடவுநிலை மாச்சினைப்
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப
நெய்தல் உன்கண் பைதல் கலுழப்
பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்
அரிது துற்றனையால் பெரும் உரிதினில்
கொண்டாங்குப் பெயர்தல் கொண்டலொடு
குரூ உத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே!”
(குறு, நெய்தல் – பா10)
புலவர் அம்மூவனார் கூறுகையில், அழகான உவமையைக் கையாண்டுள்ளார். அதாவது, தலைவியின் அழகுக்கு சிறுசிறு உவமைகள் கூறாமல், தொண்டி என்னும் ஊரின் மொத்த அழகையும் உவமிக்கிறார். இதன்மூலம் தலைவியின் அன்பு யாராலும் அளவிட முடியாத அளவு மிகப் பரந்துபட்டது என்பதை நுட்பமாகவும் மிக அழகாகவும் கூறியுள்ளார் (தினமணி). இது போன்ற உவமைகள் சங்கப் பாடல்களுக்கே உரிய சிறப்புகளாகும்.
பாடியவர் யாரெனத் தெரியாத நற்றினைப் பாடல் சொல்லும் தொண்டியின் சீர்த்தியைக் கேளுங்கள்.
‘கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல்அரி தொழுவர் கூர்வாள் உற்றென
பல்இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்’
’கல்’ என ஒலிக்கும் பறவைக் கூட்டத்தையுடைய கடற்கரைச் சோலையாற் சூழ்ந்தது தொண்டு எனும் ஊர். அவ்வூர் வயலிலே நெற்கதிர் அறுக்கும் உழவரின் கூர்மையான அரிவாளால் நெய்தல் மலரும் அறுபடும்.
இலக்கியங்களிலும் வரலாற்று நூல்களிலும் ஆங்காங்கு காணப்படும் சங்கதிகள் தொண்டிமாநகரை முதன்மையான பட்டினமாக நமக்குக் காட்டுகின்றன. கிரேக்கர், ரோமர், யவனர் என மேலைநாட்டினரும் சீனர், சாவகர், சிங்களர் என கீழை நாட்டினரும் கால்பதித்த துறைமுகப்பட்டினம் தொண்டிமாநகர். இதன் கடற்கரைத் தெருவுக்குப் பெயர் ‘பன்னாட்டார் தெரு’ என்பதாகும். பல நாட்டவரும் வந்து தங்கி வணிகம் செய்த தெரு.
வாசனைப் பொருட்களும் துணிமணிகளும் ஏற்றுமதியான தொண்டிச் சீமையில்தான் கீழைத்தேச பொருட்களும் தேக்கு மரங்களும் அரபுக் குதிரைகளும் வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது. ஆண்டொன்றுக்கு 25,000 குதிரைகள் வந்திறங்கியதாக ஆவணங்கள் கூறுகின்றன.
மிடுக்காக நடைபயிலும் பெண்ணை இன்றும் தஞ்சைப் பகுதியில் தொண்டிக் குதிரை போல் நடக்கிறாள் எனக் கூறும் பழக்கம் உண்டு. இங்கு வந்து கரையேறிய பர்மாவின் தேக்கு மரங்கள்தான் செட்டிநாட்டு பங்களாக்களை அரண்மனையாக்கியுள்ளன.
தொண்டியிலிருந்து புறப்பட்ட மரக்கலங்கள் கிழக்கையும் மேற்கையும் இணைத்தன. 1940 – களில் இங்கிருந்து கப்பலில் இலங்கை செல்ல வெறும் இரண்டு ரூபாய் தான் கட்டணம். விடுதலை பெற்றபின் கள்ளத் தோணியில் பயணம் செய்ய இருபத்தைந்து ரூபாய்தான் கட்டணம். இலங்கையில் கள்ளத்தோணியருக்கு ‘மரக்கல மினுசு’ எனப் பெயர்.
தொண்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே முப்பது கல் தொலைவே உள்ளது. இவ்வூர் மக்கள் முற்காலத்தில் பாய்மரக்கப்பலேறி வைகறையில் சென்று வாணிபம் செய்து விட்டு மாலையில் ஊர் திரும்பி விடுவாராம். பயணக் கட்டணம் கால்ரூபாயாம். 1890 முதல் 1915 வரை தொண்டிக்கும் கொழும்புக்கும் நீராவிக் கப்பல் போக்குவரத்து இருந்ததாம்.
காலாதிகாலமாக இங்கு வந்து சென்று கொண்டிருந்த அரபுக்கள் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் – முஸ்லிம்களான பின் தொண்டித் துறைமுகத்தை வசிப்பிடமாகவும் கொண்டனர். இதை உறுதிப்படுத்துவது போல் அலைவாய்க்கரையை அடுத்து ஓடாவித் தெரு, சோனகர் தெரு, மரைக்காயர் தெரு, லெப்பைத் தெரு என தெருக்கள் பெயர் பெற்றுள்ளன.
2500 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டினரின் விருப்பமுள்ள நகராக விளங்கிய தொண்டி மாநகரில் கால் வைத்துத்தான் பலரும் மதுரையை அடைந்துள்ளனர்.
பூர்வீகக் குடிகளின் கணக்கோடு இங்குள்ள மீனவப் படையாட்சிகளும் உள்ளனர். பனிரெண்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு சோழ நாட்டுப் படைக்கும் சிங்களப் படைக்கும் போர் நடந்தனத ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றால் அறியக்கிடைக்கிறது. போர் நடந்த போது சிங்களர் வந்து பாளையம் இறங்கிய இடமே பிற்காலத்தில் ‘புதுப்பட்டினம்’ ஆனது.
போராளிகளாய் படைகளில் ஆட்சி செய்த படையாட்சிகளே பிற்காலத்தில் போரில்லா காலத்தில் மீன்பிடித் தொழிலில் இறங்கியுள்ளனர். வாள் பிடித்த கைகள் வாள் போன்ற வாளை மீன் பிடித்துள்ளன.
ஆதிக்குடிகளோடு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறியவர்களை அவர்களின் வீட்டுப் பெயர்கள் அடையாளம் காட்டுகின்றன. எக்க குடியார் வீடு, தெக்கத்தியார் வீடு, சேர் வாய்க்கால் வீடு, கண்ணங்குடியார் வீடு, அனுமந்தங்குடியார் வீடு, குணங்குடியார் வீடு என ஊர்ப் பெயர்களை அடையாளம் காட்டும் வீட்டுப் பெயர்கள்.
குணங்குடி மஸ்தான் எனப் பேசப்படும் ஞானியின் தந்தையின் ஊர் குணங்குடி; தாயாரின் ஊர் தொண்டி. இங்கு பிறந்து வளர்ந்து கீழைக்கரை அரூஸியா மதரசாவில் ஓதியவரே குணங்குடி மஸ்தான் எனும் சுல்தான் அப்துல் காதர்.
தொண்டித் துறைமுகத்தின் விரிவான வரலாறு பதிவாகாமல் இருந்தாலும் துணுக்குகளாக பல சங்கதிகள் கிடைக்கின்றன. இங்கு வந்து குடியேறிய அரபிகளில் மொரோக்காவிலிருந்து வந்து குடியேறிய சையிது லப்பை குடும்பத்தினரைப் பற்றி பன்னூலாசிரியர் தம் இஸ்லாமியக் கலை களஞ்சியத்தில் பதிவு செய்துள்ளார்.
பல்வேறு கால கட்டங்களில் அரபு முஸ்லிம்கள் தொண்டியில் வந்து குடியேறியிருந்தாலும் 13 – ஆம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து கப்பல் கப்பல்களாக கிழக்குக் கடற்கரைப் பட்டினங்களில் வந்து குடும்பங்களோடு குடியேறினர். அவற்றில் தொண்டியும் ஒன்று. இவர்களின் அடையாளத்தை நாம் நன்கறிவோம். இவர்கள் தம் மாப்பிள்ளைகளை வீட்டோடு வைத்துக் கொள்வர். சொத்துக்கள் யாவையும் பெண்களுக்கு மட்டும் உரியவை. பழவேற்காட்டிலிருந்து காயல்பட்டினம் வரை பனிரெண்டு பட்டினங்களில் இன்றும் அவர்கள் தனித்த அடையாளத்துடன் வாழ்கின்றனர்.
வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள ஊர்களில் பர்மாக்காரர் வீடு, சிங்கப்பூரார் வீடு, பினாங்கார் வீடு, கொழும்பார் வீடு என குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ‘சீயத்தார் வீடு’ என வீட்டுப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தொண்டியில் சீயத்தார் வீடு என ஒரு குடும்பத்தார் உண்டு. அதென்ன சீயத்தார். சயாம்தான் சீயமாக மாறியுள்ளது. சயாம் நாட்டில் வணிகம் செய்தவர்கள் சீயத்தார் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சயாமின் இன்றைய பெயர் தாய்லாந்து.
இஸ்லாமியத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய கவிஞர் ‘தண்ணன்’ மூஸா அவர்களும் ஆயிஷா சித்தீகா மதரஸாவின் தாளாளர் அ.அஜ்மல்கான் அவர்களும் சீயத்தார் குடும்பத்தவரே.
சீயத்தார் வீட்டினரின் சம்பந்திகளே பிரபல குடும்பமான மு.நா.வகையறா. இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தை வழங்கியவரும் பன்னூலாசிரியருமான மு.றா.மு.அப்துற்றஹீம் இலக்கியத் தொண்டின் அடையாளம்; தொண்டியின் அடையாளம்.
மு.றா.குடும்பத்தினர் அன்று முதல் இன்று வரை கல்வியில் சிறந்தவர்கள். ‘ஆசிரியர்’ என அழைக்கப்பட்ட அப்துற்-றஹீம் தம்பி முகம்மது முஸ்தபாவு எழுத்தாளரே. பிரபல வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் மு.றா.மு.அப்துல் கரீம். ‘கான்சாகிப்’ என அழைக்கப்பட்ட மு.றா.பீ.சையத் முகம்மது மதராஸ் ராஜதானியின் இடைக்கால சட்டமன்றத்தில் உறுப்பினராக விளங்கியவர்.
தொண்டி ஊராட்சியின் தலைவராகவும் விளங்கிய கான்சாகிப் காலத்தில் கட்டிய ஆற்றுப் பாலம் இன்றும் வலுவோடு விளங்குகின்றது. இவர் அரசு பயணியர் விடுதி கடற்கரையின் தென்பகுதியில் தொலைவில் இருந்ததால் பயணிக்க வசதியாக கடலோரச் சாலை அமைக்க ஆவன செய்தார். பிற்காலத்தில் இச்சாலைக்கு ‘பிரபாகரன் பீச்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. மாண்பமை பிரபாகரன் அன்றைய முகவை மாவட்ட ஆட்சியராய் இருந்து நற்பணியாற்றியவர். இவர் கூட யாழ்ப்பாண உறவினரே.
கான்சாகிப் தம் சொந்தச் செலவில் 13 ஏக்கர் நிலத்தை வாங்கி அமைக்கப்பட்டதே செய்யது முகம்மது மேனிலைப் பள்ளி. கிலாபத் இயக்கம், முஸ்லிம் லீக் என அரசியல் பணியாற்றிய ‘கான்சாகிப் தொண்டியின் வரலாற்றோடு பின்னிப் பிணைத்தவர்.’
மாவட்ட நூலக ஆணைக் குழுவின் உறுப்பினராக விளங்கிய மு.றா.மு.சையது இபுறாகீம் தனியாக ஒரு நூலகத்தை அமைத்தார். அது இன்று “வளர்பிறை நூலகம்” என்ற பெயரில் பெரும் நூலகமாக விளங்கி வருகிறது. நூலகம் கண்டவரின் புதல்வர்களில் ஒருவரான எம்.எஸ்.அப்துல் சலாம் 1960 – களில் ஊராட்சித் தலைவராக விளங்கினார்.
கல்வியைக் கண்ணெனப் போற்றிய மு.றா.வகையறா கல்வியாளர்களின் பாசறை என்றால் மிகையாகாது.
மு.றா.குடும்பத்தைப் போல் புலமைப் பெற்ற குடும்பம் கிழக்குத் தெருவிலுள்ள புலவர் குடும்பம். பாண்டித்யம் மிக்க வா.மு. முகம்மது நெய்னார் சாகிபு அவர்களின் புதல்வர்கள் ஹைதர் அலி, ஜமால் முகம்மது (கவிஞர் குணங்குடிதாசன்) ரசூல் முகைதீன், ஒய்சுல் கர்ணை வணிகம், அலுவல், அரசியல், இலக்கியம் என உயர்ந்தவர்கள். இவர்களின் வாரிசுகளும் இன்றும் கல்வியாளர்களாய்த் திகழ்கின்றனர்.
நால்வரின் மருமகனார் பந்தே நவாஸ் பள்ளியாசிரியர், ஒய்சுல் கருணையின் புதல்வி நசீமா பானு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியை. இவர்கள் குணங்குடி மஸ்தானின் தாயாதிகள்.
இடையே ஒரு பதிவு, அக்காலத்தில் தொண்டிக்கு மீலாது விழாவுக்கு வந்து சொற்பெருக்காற்றிய சதாவதானி சேகுத் தம்பி பாவலருக்கு ‘கலைக் கடல்’ – என்ற பட்டத்தை வழங்கியவர்கள் தொண்டிப் பெருங்குடி மக்களே.
தொண்டித் துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை திருக்கோணமலை துறைமுகத்தில் தொழில் செய்த அலித் தம்பி மரைக்காயரின் மகன் சுல்தான் அபூபக்கர் அங்கு இரண்டு பள்ளிவாசல்களைன் நிர்மாணித்து வக்பு செய்துள்ளார். கி.பி.1770 – இல் இவர் கட்டிய பெரிய திருக்கோணமலை சோனகத் தெருவில் உள்ளது. 1781 – இல் கட்டிய சிறிய பள்ளி மரைக்காயர் பள்ளி எனும் பெயரில் என்.சி.சாலையில் உள்ளது. இரு பள்ளிகளுக்கும் வருவாய் பெற சில கடைகளையும் தோட்டங்களையும் வக்பு செய்துள்ளார். இவரின் மகன் சீனித் தம்பி மரைக்காயரும் மைத்துனர் முகம்மது அலீ மரைக்காயரும் பல நல்லறங்கள் செய்துள்ளனர். பல்வேறு பகுதி மக்கள் தொண்டியில் வந்து வாழ வழி வகுத்துள்ளனர்.
தொண்டியின் சகோதர ஊரான நம்புதாழையைச் சேர்ந்த கிதுர் முகம்மது எனும் நல்லத் தம்பிப் பாவலர் தொண்டி அரசும் பொது மருத்துவமனைக்கு எதிரில் பேரும் புகழோடு வாழ்ந்தார். இலங்கை கண்டியை அடுத்த கம்பளையில் பெரும் வணிகராகத் திகழ்ந்த பாவலர் ‘இசைத்தேன்’ எனும் இசைப்பாடல் நூலை வெளியிட்டுள்ளார். ‘இசைமுரசு’ நாகூர் அனிபா தன் முதலடிகளை இவர் மூலம்தான் வைத்துள்ளார். கம்பளை, மதுரை, தொண்டி, சென்னை என பாவலரின் வாரிசுகள் வாழ்கின்றனர். பாவலரின் புதல்வர்களில் இருவர் சென்னையில் டாக்டர்களாக உள்ளனர். அவர்கள் டாக்டர் காதர் மஸ்தான், டாக்டர் அக்பர் அலீ. பாவலரின் பேரர் லியாக்கத்தலி ‘பாவலர்’ என்ற பெயருடனேயே தொண்டியில் வாழ்கின்றார்.
இன்றுள்ள மதுரை துணிக்கடைகளில் கணிசமானவை தொண்டிக்காரர்களுடையவை. தொண்டியின் ஊராட்சித் தலைவராக விளங்கிய ‘பாம்பாட்டி வீட்டு’ செய்யது அகமதுவின் புதல்வர்கள் துணி வணிகத்தில் பெரும் புள்ளிகள்.
குணங்குடி மஸ்தான் சாகிபின் மாமா கட்டை ஷைகின் கோரி இங்குள்ள வாழைத் தோப்பில் உள்ளது. இவர்களின் வழியில் தோன்றிய முகம்மது அப்துல் காதர் மதுரை ‘காஜியுல் குலாத்’ ஆக அரசால் நியமிக்கப்பட்டு அங்கேயே மறைந்தார். இவரின் மகன் முகம்மது இபுறாஹீம் சாகிபு தொண்டியில் காஜியாக இருந்தார். அடுத்தும் தொண்டிக்கு காஜியாக வந்தவர் முந்தைய காஜியின் புதல்வரான முகம்மது இஸ்மாயில் சாகிபே. இவர் மாபெரும் மார்க்க மேதையுமாவார்.
நாகூரை புலவர் கோட்டை என்பர். தொண்டி புலவர் பேட்டை. இங்கு பல்வேறு எழுத்தாளுமைகள் வாழ்ந்துள்ளனர்.
உலக மாந்தர்கள் தம் பெயருக்கு முன் தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்தை விலாசமாக பதிவிடுகின்றனர். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில் தாயின் பெயரிலுள்ள முதல் எழுத்தைப் பதிவிடுகின்றனர். பெரும்பாலோர் ஓரெழுத்தையே பதிவிட நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஈரெழுத்தையும் சிலர் சித.கண.பழ. என மூன்று தலைமுறையையும் பதிவிடுகின்றனர். இவற்றைப் பின்னுக்கு கொண்டு போன ஒரு விலாசத்தை அண்மையில் நான் கண்டேன்.
(அடுத்த இதழிலும் ‘தொண்டி’ தொடரும்)
தொடர்புக்கு ; 9710266971

வாணியம்பாடி என்றதும் அது முஸ்லிம்கள் நிறைந்து வாழும் ஊர் என்பதும், அதன் சுற்று வட்டாரத்தில் பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன என்பதும், நூற்றாண்டைத் தொடும் ‘இஸ்லாமியா கல்லூரி’ அங்கு இயங்கி வருகிறது என்பதும், கவிக்கோ அப்துல் ரகுமான் அக்கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார் என்பதும் நமது நினைவிற்கு வரும். ஆனால் வாணியம்பாடி, ‘இஸ்லாமியா கல்லூரியை’த் தொடங்குவதில் முக்கியப் பங்கு வகித்த தொழிலதிபர் மலங்கு அஹமது பாஷா பகதூர் அவர்களைப் பற்றி இன்றையத் தலைமுறையினருக்குத் தெரியுமா? சந்தேகமே!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிலில் முன்னணிப் பங்கு வகித்தனர். மேல் விஷாரம் சி. அப்துல் ஹக்கீம் சாகிப். வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப், அப்துல் சுப்ஹான் சாகிப் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் தொழில் அதிபர்கள் இருந்தனர். இவர்கள் முஸ்லிம்களின் பொருளாதார முன்னேற்றத்திலும். கல்வி வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர். தங்களிடமிருந்த செல்வத்தின் ஒரு பகுதியை இப்பெருமக்கள் இதற்காகச் செலவிட்டனர். அவர்களில் ஒருவர் தான் வாணியம்பாடி மலங்க் அஹமது பாஷா சாகிப்
பிறப்பு - படிப்பு:-
மலங்க் அஹமது பாஷா வாணியம்பாடியில் 17.09.1893 அன்று பிறந்தார் இவரது தந்தையார் பெயர் மலங்க் ஹயாத் அப்துல் ரகுமான் சாகிப்.

malagஇவர் சென்னையில் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வந்தார். பாஷா சாகிப் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை சென்னை சைதாப் பேட்டையிலிருக்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றுத் தேறிய பின்னர், சென்னை தாம்பரத்திலிருக்கும் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து தத்துவ இயலில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெற்றார்.
அத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக இவருக்கு கல்லூரி நிர்வாகம் தங்க மெடல் வழங்கிப் பாராட்டியது. சென்னை மாகாணத்தில் இத்தகைய சிறப்பினைப் பெற்ற முதல் மாணவர் இவர் என்பது மட்டுமின்றி, வாணியம்பாடி முஸ்லிம் சமூகத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையும் இவருக்குண்டு. இத்தகைய உயர்நிலை அடைந்ததற்காக வாணியம்பாடி முஸ்லிம் சமூகம் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.
தொழில் துறையில்
பட்டம் பெற்றபின், அரசுப் பணியில் சேர்ந்திட இவர் ஆர்வம் காட்டவில்லை. தனது தந்தையார் சென்னை பெரிய மேட்டில் நடத்தி வந்த தோல் பதனிடும் நிறுவனமான மலங்க் ஹயாத் அன்கோவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பொருளாதாரம், வணிகம், நிதி மேலாண்மை ஆகிய துறைகளில் பெற்றிருந்த அறிவு, தொழிலில் இவருக்குப் பெரிதும் துணை நின்றது. மிகப் பெரிய தொழிலதிபராக உருவெடுத்தார். சில ஆண்டுகளிலேயே மலங்கு டிரேடிங் கம்பெனி என்ற தோல் பதனிடும் நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
தோல் பதனிடும் தொழிலில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பிற தொழிலதிபர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். வணிகத்தில் நாணயமிக்கவராகவும், நேர்மையானவராகவும் திகழ்ந்தார். தொழில் தர்மத்தையும், உயரிய மரபுகளையும் எந்தச் சூழ்நிலையிலும் வழுவாது கடைப்பிடித்து வந்தார்.
இத்தொழிலில் புதிதாக ஈடுபட்ட பல முனைவர்கள் இவரை நாடி வந்து வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுப் பயனடைந்தனர். தென்னிந்திய தோல் வணிகர் சங்க நிறுவனர்களில் ஒருவராக இவர் இருந்தார். இத்தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்ட போதெல்லாம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகி அவற்றைத் தீர்த்து வைத்தார்.
முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தோல் பதனிடும் தொழில் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. 1923ஆம் ஆண்டு இவரது நிறுவனமும் பெரும் நட்டத்திற்கு உள்ளாகி மூடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் இவர் மனம் தளரவில்லை. காப்பீடு செய்திருந்த இம்பிரியல் வங்கியிடமிருந்து மிகப் பெரும் தொகையை ஈட்டுத் தொகையாகப் பெற்றுக் கொண்டு 1927ஆம் ஆண்டு மீண்டும் தனது வணிகத்தைத் தொடங்கினார். 1930களில் சென்னை பெரியமேடு பகுதியில் அவர்தான் முன்னணி தொழில் அதிபராக விளங்கினார். தோல் பதனிடும் தொழிலுக்குத் தேவைப்படும் ரசாயனப் பொருள்களை லண்டனிலிருந்து இறக்குமதி செய்து பிற வணிக நிறுவனங்களுக்கு மறு விற்பனை செய்தார். சிறிய தோல் நிறுவனங்களிடமிருந்து பதப்படுத்தப்படாத தோல்களை வாங்கி அவற்றை தனது நிறுவனத்தில் பதப்படுத்தும் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்.
தோல் பதனிடும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொள்கை முடிவுகள் எடுக்கின்ற போது, சென்னை மாகாண அரசு இவரைக் கலந்தாலோசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. 1937 ஆம் ஆண்டில் சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்ற சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி, தோல் தொழிலுக்கு வணிக வரி விதிப்பது சம்பந்தமாக இவரைக் கலந்தாலோசனை செய்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இவரது செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது.
கல்வி வளர்ச்சியில்
முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் பாஷா சாகிப் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தார். வாணியம்பாடி நகரில் தொடங்கப்பட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் ஆயுள் கால உறுப்பினராகவும் இருந்தார். 1916 ஆம் ஆண்டு இந்தக் கல்விச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று திறம்படச் செயல்பட்டார். தனது ஆயுள் காலம் முழுமையும் இச்சங்கத்தில் ஏதாவது ஒரு பொறுப்பில் இருந்து பணியாற்றினார். இச்சங்கம் தான் 1918 ஆம் ஆண்டு வாணியம்பாடி நகரில் ‘இஸ்லாமியா கல்லூரி’ என்ற கல்லூரியைத் தொடங்கியது.
1919ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியது. தமிழ் நாட்டில் முஸ்லிம்களால் தொடங்கப்பட்ட முதல் அரசு உதவி பெற்ற கல்லூரி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டை நெருங்கும் பாரம்பர்யச் சிறப்பு மிக்க இக்கல்லூரியில் தற்போது இரண்டாயித்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் தாளாளராகவும் பாஷா சாகிப் சில ஆண்டுகள் பதவி வகித்தார். தனது பதவிக் காலத்தின் போது கல்லூரியில் உருது மற்றும் இஸ்லாமிய சமய படிப்புகளைக் கொண்டு வந்தார்.
முஸ்லிம் கல்வியாளர்களால் சென்னை நகரில் தொடங்கப்பட்ட தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்திலும் பாஷாசாகிப் முக்கியப் பொறுப்புகள் வகித்தார். இச்சங்கத்தின் செயலாளராக ஏழு ஆண்டுகளும். தலைவராக இரு ஆண்டுகளும் பதவி வகித்தார். சங்கத்தின் கல்விப் பணிகளுக்காக சென்னை நகரத்தின் வீதிகள் தோறும் சென்று கடை கடையாக ஏறி இறங்கி நிதி திரட்டினார். இச் சங்கம் தான் சென்னை இராயப்பேட்டையில் ‘புதுக்கல்லூரி’ என்ற புகழ் பெற்ற கல்லூரியை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி. மாநிலம் அலிகர் நகரில் செயல்பட்டு வரும் இந்திய முஸ்லிம்களின் முதல் பல்கலைக் கழகமான அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்திற்கும் நன்கொடை வழங்கியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துக் கல்வி பணி ஆற்றியுள்ளார். ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்குத் தாராளமாக நிதி உதவி செய்துள்ளார். படித்த இளைஞர்களை வர்த்தகத்தில் ஈடுபடுமாறு ஊக்குவித்துள்ளார்.
அரசியல் ஈடுபாடு
பாஷா சாகிப் அகில இந்திய முஸ்லிம் லீகில் இணைந்து அதன் நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டார். அன்றைய சென்னை மாகாண முக்கிய முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சென்னை மாநகராட்சி உறுப்பினராக 1936ம் ஆண்டுமுதல் 1941 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் (பெரியமேடு பகுதி) 1937ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக வடஆற்காடு மாவட்ட முஸ்லிம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1946 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார். சட்ட சபையில் முஸ்லிம்களின் பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தார். மக்களை அறியாமையிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுவிப்பதே தனது லட்சியம் எனச் சூளுரைத்துச் செயல்பட்டார். சென்னை மாகாணத்தின் தமிழ் பகுதி முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு முஸ்லிம் ஜமாஅத்துகளையும், அமைப்புகளையும் சந்தித்து பிரச்னைகளைக் கேட்டறிந்தார். அவற்றின் தீர்வுக்குப் பாடுபட்டார்.
முஸ்லிம்லீக் ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டுமென்பதிலும் குடும்ப அரசியல் கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். அன்றையக் கால கட்டத்தில் சென்னை மாகாண முஸ்லிம் லீகின் தலைவராகப் பொறுப்பு வகித்த ஜனாப் எம்.ஜமால் முகம்மது சாகிபுடன் அவருக்கு இணக்கமான உறவு இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் 1940 ஆம் ஆண்டு ஜமால் முகம்மது சாகிப் மாகாணத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் ஹமீது கானுடன் பாஷா சாகிப் இணைந்து செயல்பட்டார். 1941ஆம் ஆண்டு முஸ்லிம் லீகின் 28வது தேசிய மாநாட்டை சென்னையில் நடத்திடுமாறு அகில இந்தியத் தலைமை மாகாணத் தலைமையை கேட்டுக் கொண்டபோது, மாநிலத் தலைவர்கள் இத்தகைய பெரிய பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்திட முடியுமா என தயக்கம் காட்டினர். மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திட பெருமளவு தேவைப்படும் நிதியை திரட்டிட முடியுமா என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாக இருந்தது. எனினும் பாஷா சாகிப் ‘எப்படியும் மாநாட்டை நடத்துவோம்.
தயக்கம் வேண்டாம்’ என மாகாணத் தலைவர்களுக்கு ஊக்க மூட்டினார். அவரே 28வது மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கட்சியின் மாகாணத் தலைவர் அப்துல் ஹமீதுகான் வரவேற்புக் குழுத் தலைவர்). சென்னை மாகாணமெங்கும் அவர் சுற்றுப்பயணம் மேற் கொண்டு மாநாட்டுச் செலவுகளுக்காக நிதி திரட்டினார். மாநாடு திட்டமிட்டபடி சென்னை நகரில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11, 12, 13,14 தேதிகளில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

muthal tha
மாகணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான லீக் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக மாகணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 19 சிறப்பு ரயில்களை இரயில்வே துறை இயக்கியதாகவும், 75000 தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் மாநாட்டில் நுழைவுக் கட்டணமாக ஒரு பெருந்தொகை வசூலானது என்றும் ‘மெயில்’ ஏடு குறிப்பிட்டிருந்தது. இம் மாநாட்டின் வெற்றிக்கு பாஷா சாகிப்பின் அயராத முயற்சிகளே காரணம் என்றால் அது மிகையல்ல.
இம் மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய முஸ்லிம் லீகின் தலைவர் காயிதே ஆஜம் ஜின்னா சாகிபின் ஆங்கில உரையை பாஷா சாகிப் தமிழில் மொழிபெயர்த்தார். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கு, அந்நாட்டில் சேருவதற்குப் பூகோள ரீதியில் வாய்ப்பில்லாத சென்னை மாகாணம் உள்ளிட்ட பிற மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களும் ஆதரவு தெரிவிப்பது ஏன் என்ற கேள்வி அப்போது காங்கிரஸ் தலைவர்களாலும், தேசிய முஸ்லிம்களாலும் எழுப்பப்பட்டது இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாநாட்டில் வரவேற்புரையாற்றிய பாஷா சாகிப் குறிப்பிட்டதாவது.... ‘நாம் இதை இந்தியாவின் ஒட்டு மொத்தமான முஸ்லிம்களின் நோக்கில் பார்க்கிறோம். இஸ்லாத்தின் பொதுக் கொள்கையில் நம்மை ஐக்கியமாக்கிக் கொள்ளவும், இந்தியா முழுவதிலுமுள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கவும் தேவையான எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்’
சமயத் தளத்தில்:
மலங்கு அஹமது பாஷா சாகிப் இஸ்லாத்தின் பால் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்தார். சமயப் பணிகளுக்குத் தாராளமாக நிதிஉதவி செய்து வந்தார். பிற இந்திய மொழிகளில் திருக்குர்ஆனை மொழிபெயர்க்கவும், இஸ்லாமிய நூல்கள் வெளிவரவும் நிதி உதவி செய்தார். வேலூரில் செயல்பட்டு வரும் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரிக்கும், உ.பி. மாநிலத்திலுள்ள தேவ்பந்த் மத்ரஸாவுக்கும் தொடர்ந்து நன்கொடை வழங்கினார். தப்லீக் இயக்கத்தின் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை நின்றார். இந்து, கிறிஸ்தவ. பௌத்த சமயங்களின் வேத நூல்களையும், நீதி நூல்களையும் படித்து அச்சமயங்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அறிந்து வைத்திருந்தார். சமயம் சார்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுகின்ற பொழுது, பிற சமயங்களை விட எங்ஙனம் இஸ்லாம் மார்க்கம் உயர்வானது என ஒப்பீடு செய்து பேசுவார். சென்னை இராமகிருஷ்ணா மடத்தில் இஸ்லாம் குறித்து அவர் ஆற்றிய உரை ஒரு சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது.
பண்பு நலன்கள்:
பாஷா சாகிப் மிகச் சிறந்த நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார். தன்னை நாடி வந்தவர்களுக்குச் சாதி, சமய வேறுபாடின்றி உதவி செய்தார். பல ஏழைக் குமர்களின் திருமணம் நடந்தேறிடவும், அவசியத் தேவைகளுக்காக வேறு வழியின்றிக் கடன்வாங்கி அதனைச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டவர்களுக்கும் நிதி உதவி செய்துள்ளார். தினந்தோறும் திருக்குர்ஆன் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். விளம்பரத்தையும், ஆடம்பரத்தையும் அவர் விரும்பமாட்டார். மிகப் பெரிய செல்வந்தராக இருந்த போதிலும் எளிய உணவுகளையே உட்கொள்வார். தரையில் தான் படுத்துறங்குவார். சென்னை மாநகராட்சி உறுப்பினராக. சட்டசபை உறுப்பினராகப் பதவி வகித்த போது தன்னை ஒரு சாதாரணச் சேவையாளராகவே காட்டிக் கொண்டார்.
குடும்பம்:
மலங்கு அஹமது பாஷா சாகிப்பிற்கு இரண்டு மகன்கள். நான்கு மகள்கள் என ஆறு மக்கள் இருந்தனர். மூத்த மகன் மலங்க் அப்துல் ரகுமானும் தந்தையார் நடத்தி வந்த ‘மலங்கு டிரேடிங் அன்கோ’ நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். தந்தையைப் போலவே பொதுப் பணிகளிலும் கல்விப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மிகச் சிறந்த புகைப்படக்கலைஞராகவும் அவர் திகழ்ந்தார்.
மலங்கு பாஷா சாகிபின் வாரிசுகள் தற்போது வாணியம்பாடி, சென்னை எனப் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
முடிவுரை:
சில காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் 5.09.1947 அன்று வாணியம்பாடியில் காலமானார். அவரது இறப்பிற்கு மாகாணத்தின் முக்கிய தின, வாரஇதழ்கள் அஞ்சலி செலுத்தியிருந்தன.
3.6.1939 அன்று தொண்டியில் நடைபெற்ற தொண்டி தாலுகா முஸ்லிம்லீக் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்ட பாஷா சாகிப்பிற்கு வாசித்தளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரத்தில் ‘நம் முஸ்லிம் சமூகமானது கல்வி விஷயத்திலும், ராஜ்ஜிய விஷயத்திலும் மிகவும் பிற்போக்கடைந்து, அரசியல், பொருளாதார உரிமைகளை பகைவர்களது வலையில் சிக்கி இழக்கும் தருவாயில் இருக்குங்கால் முஸ்லிம்களின் நிலையை முன்னேற்ற விழைந்து தாங்கள் முன் வந்ததைக் கண்டு எல்லோருள்ளத்திலும் புத்துணர்ச்சி உண்டாகுமென்பது திண்ணம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
31.5.1939 அன்று ஈரோடு மதரஸா இஸ்லாமியா சங்கத்தாரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது கலந்து கொண்ட அவருக்கு ‘அன்புடன் வாசித்தளிக்கப்பட்ட’ நல் வரவேற்புத் தாளில்.. ‘சென்னை சட்ட சபையில் அங்கம் பெற்ற தினம் முதல் பொதுமக்கள் நலங்கருதி தாங்கள் ஆற்றி வரும் சமூக, தேசத் தொண்டானது வருங்காலத்திலும் இன்னும் அதி ஊக்கத்துடன் சேவை புரிவீர்கள் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளதென்பதை எவராலும் மறுக்க முடியாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை மலங்கு அஹமது பாஷாவின் சேவைக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும். அவரின் வாழ்க்கையில் இன்றையத் தலைமுறையினர் பின்பற்றத்தக்க அளவிற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன என்பது திண்ணம்.
நன்றி:
பாஷா சாகிப் பற்றிய தகவல் அளித்திட்ட வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் அபுல் பஃஸல் மற்றும் வேதியியல் துறை பேராசிரியர் முனைவர் அபூபக்கர் சித்தீக் ஆகியோருக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

சனிக்கிழமை, 19 மே 2018 09:55

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 12

Written by

அ. முஹம்மது கான் பாகவி

அதுவென்ன சுன்னத் வல்ஜமாஅத்?
அறிவும் ஆர்வமும் மிக்க மாணவக் கண்மணிகளே! ‘அகீதா’ எனும் கொள்கைவியலைப் பயில்கையில் முக்கியமாக நீங்கள் அறிந்து அசைபோட வேண்டிய விஷயம், மாறுபட்ட சிந்தனைக் குழுக்கள் பற்றியும் சரியான சிந்தனை எது என்பது பற்றியும் ஆய்வு செய்வதுதான்.
அதுவும் மேலோட்டமாக இல்லாமல், சற்று ஆழமாகவே அறிந்துகொண்டால்தான், பாதை மாறாமல் சரியான பாதையில் செல்ல ஏதுவாயிருக்கும்; மக்களை நல்வழிப்படுத்தவும் உதவியாயிருக்கும்.
ஒரு நெடிய வரலாற்றை உடைய இஸ்லாம் போன்ற ஒரு தத்துவத்தில் -உலகளாவிய அளவில் பல மொழி, பல நிற, பல பிராந்திய மக்கள் தமது வாழ்க்கை நெறியாகக் கொண்டுள்ள ஒரு மார்க்கத்தில்- கருத்து வேறுபாடுகளும் சிந்தனை மாற்றங்களும் இருப்பது இயல்பான ஒன்றே!
இந்த வேறுபாடுகளும் வித்தியாசங்களும் பழக்கவழக்கங்களில் தொடங்கி, நம்பிக்கைகள்வரை விரவி காணப்படுவதும் சகஜமான ஒன்றுதான்.
இதைத் தத்துவப் பிழையாகக் கொள்வதைவிட, அணுகுமுறையிலும் பார்வையிலும் ஏற்பட்ட கண்ணோட்ட வேறுபாடாக எடுத்துக்கொள்வதே எதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு முடிவாக இருக்கும்.
இதைவிடுத்து, ஒட்டுமொத்தக் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளுவதோ, சிஸ்டத்தின் கோளாறு என்று சொல்லி மார்க்க அமைப்பையே குறைசொல்வதோ, ஒருவரை ஒருவர் வசைபாடியே எதிரியை வாழவைப்பதோ அறிவுடைமை ஆகாது.
ஆனால், ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மார்க்கத்தின் மூலாதாரங்களையும் முடிவெடுப்பதற்கான அளவுகோலாக விளங்கும் தரவுகளையும் ஆராய்ந்து பார்த்து, நடுநிலையோடு நின்று சீர்தூக்கிப் பார்த்து, எந்தக் கருத்துச் சரியானது; அல்லது உகந்தது என்ற ஆய்வை மேற்கொள்வது ஒவ்வொரு குழுவினரின் கடப்பாடு ஆகும்.
நபிகளாரின் முன்னறிவிப்பு
“இஸ்ரவேலர்கள் எழுபத்து இரண்டு பிரிவினராகப் பிரிந்துபோயினர். என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவினராகப் பிரிந்துபோவர். அவர்களில் ஒரு பிரிவினர் தவிர, மற்ற அனைவரும் நரகம் செல்வர்” என்று நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை அறிவித்தார்கள்.
அப்போது தோழர்கள், “அந்த ஒரு பிரிவினர் யார், அல்லாஹ்வின் தூதரே?” என வினவினர். அதற்கு நபியவர்கள், “நானும் என் தோழர்களும் எவ்வழியில் உள்ளோமோ அவ்வழி செல்பவர்கள்” என விடையளித்தார்கள். (திர்மிதீ - ஹசன் ஃகரீப்)
மற்றோர் அறிவிப்பில் காணப்படுவதாவது: இன்று நானும் என் தோழர்களும் எவ்வழியில் இருக்கிறோமோ அவ்வழியில் செல்பவர்கள். (ஹாகிம்)
நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி 73 கூட்டங்களில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் தவறானவை; சீர் கெட்டவை ஆகும். அதனால்தான் அவற்றின் முடிவு நரகமாகிவிட்டது. சரியானது; சீரானது ஒன்றுதான். அதனாலேயே, அது சொர்க்கம் செல்கிறது.
சீர்கெட்ட 72 கூட்டங்களுக்கு அசலாகவும் அடிப்படையாகவும் அடையாளம் காணப்பட்டவை 7 பிரிவுகளாகும்.
ஏழு பிரிவுகள், 72 கூட்டங்கள்
1. முஅதஸிலா. இவர்களின் வேறுபட்ட கொள்கைகளாவன: மனிதன்தான் தன் செயல்களைப் படைக்கிறான் (இறைவன் அல்ல). இறைவனைச் சொர்க்கத்திலும் பார்க்க முடியாது. நல்லறத்திற்கு நன்மையும் தீமைக்குத் தண்டனையும் அளிப்பது இறைவன்மீது கட்டாயம்.
இவர்களில் இருபது உட்பிரிவுகள் உள்ளனர்.
2. ஷீஆ. நபித்தோழர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்மீது எல்லை கடந்த பாசம் கொண்டவர்கள். இவர்களில் 22 உட்பிரிவுகள் உள்ளனர். அலீ (ரலி) அவர்களுக்குத்தான் நபித்துவம் கிடைத்திருக்க வேண்டும்; வானவர் ஜிப்ரீல் தவறிழைத்துவிட்டார் -என்று கூறுவோரும் அவர்களில் உள்ளனர்.
நபித்தோழர்களான அலீ (ரலி), அம்மார் (ரலி), மிக்தாத் (ரலி), சல்மான் (ரலி) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் காஃபிர்கள் -என்று கூறும் ராஃபிஸ்களும் அவர்களில் அடங்குவர்.
3. கவாரிஜ்கள்: இஸ்லாமிய கிலாஃபத் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கியவர்கள் ‘கவாரிஜ்கள்’ அல்லது ‘காரிஜிய்யாக்கள்’ என அறியப்படுகிறார்கள். தீவிரப்போக்கு கொண்ட இவர்கள், அலீ (ரலி) அவர்களையே ‘காஃபிர்’ என்று பிரகடனப்படுத்தினர். ‘அவ்வாறே, பெரும் பாவம் செய்யும் ஒவ்வொருவரும் இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்கள் என்று கருதினர்.
இருபது உட்பிரிவுகளைக் கொண்ட காரிஜிய்யாக்கள், அலீ (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களைக் கடுமையாக விமர்சித்துவந்தனர்.
4. முர்ஜிஆ: இவர்கள், ஓரிறை நம்பிக்கை (ஈமான்) இருந்துவிட்டாலே போதும்; பாவங்கள் பாதிப்பை ஏற்படுத்தா என்று கூறுகிறார்கள். எப்படி, ஓரிறை மறுப்பு (குஃப்ர்) இருக்கையில் செய்யப்படும் நல்லறங்கள் பயனளிக்காதோ அப்படித்தான் இதுவும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
முர்ஜிஆக்களில் 5 உட்பிரிவுகள் உள்ளனர்.
5. நஜ்ஜாரிய்யா: மனிதனின் செயல்கள் அல்லாஹ்வால் படைக்கப்படுபவைதான் என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், முஅதஸிலாக்கள்போல், இறைவனுக்குப் பண்புகள் (ஸிஃபாத்) என்று எதுவுமில்லை என்பார்கள். அவ்வாறே, இறைமறை, இறையுரை எல்லாம் படைப்புகள் என்று ‘நஜ்ஜாரிய்யா’க்கள் கூறுவர்.
இவர்களில் 3 உட்பிரிவுகள் இருக்கின்றனர்.
6. ஜப்ரிய்யா: மனிதனுக்குச் சுய விருப்பம் என்று எதுவுமில்லை; அவன் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டவன் என்று இவர்கள் கூறுவர். மனிதன் நினைத்தாலும் தன் விருப்பப்படி செயல்பட இயலாது. அவன் செயலுக்கு அவன் பொறுப்பு அல்ல. இறைவன்தான் பொறுப்பு -என்று கருதும் இவர்களில் உட்பிரிவு கிடையாது.
7. முஷப்பிஹா: படைப்புகளைப் போன்றே படைப்பாளனுக்கும் முப்பரிமாண உடல் உண்டு; மற்றப் பொருட்களைப் போன்றே இறைவனும் இடத்தை அடைத்துக்கொள்ளும் சரீரம் உடையவன் என்று நம்புகிறார்கள் இவர்கள். இதனாலேயே, ‘படைப்புக்கு ஒப்பிடுவோர்’ எனும் பொருளில் ‘முஷப்பிஹா’ என இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவர்களிலும் உட்பிரிவு இல்லை.
ஆக, முஅதஸிலா - 20 பிரிவுகள்; ஷீஆ - 22 பிரிவுகள்; காரிஜிய்யா - 20 பிரிவுகள்; முர்ஜிஆ - 5 பிரிவுகள்; நஜ்ஜாரிய்யா - 3 பிரிவுகள்; ஜப்ரிய்யா - 1 பிரிவு; முஷப்பிஹா - 1 பிரிவு.
ஆக மொத்தம் - 72 பிரிவுகள் நடுநிலை தவறிய, தீவிரப் போக்கு கொண்ட, நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழர்களும் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு எதிரான சிந்தனை கொண்ட கூட்டங்கள் ஆவர்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்
சொர்க்கம் செல்லும் ஒரே வெற்றிக் கூட்டம் இறைத்தூதரையும் அவர்கள்தம் தோழர்களையும் நம்பிக்கையாலும் நடத்தையாலும் பின்பற்றக்கூடியவர்களே! இவர்கள்தான் நபிகளார் சுட்டிக்காட்டியபடி, “நானும் என் தோழர்களும் எவ்வழியில் உள்ளோமோ அவ்வழி செல்பவர்கள்” என்ற வரைமுறைக்கு ஏற்ப நடப்பவர்கள் ஆவர்.
‘நான் செல்லும் வழி’ என நபியவர்கள் குறிப்பிட்டதுதான், ‘சுன்னத்’ ஆகும். ‘என் தோழர்கள் சென்ற வழி’ என்பதுதான், ‘ஜமாஅத்’ ஆகும். இந்த இரண்டையும் இணைத்தே, ‘சுன்னத்தையும் ஜமாஅத்தையும் பின்பற்றுவோர்’ என்ற பொருளில் ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்’ (நபிவழி மற்றும் நபித்தோழர்கள் வழி உடையோர்) என இக்கூட்டத்தார் அறியப்படுகின்றனர்.
ஆக, குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ (ஜமாஅத்), சிக்கலான -புதிய- பிரச்சினைகளில் இம்மூன்றின் அடிப்படைக்கு மாற்றமில்லாமல் இமாம்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வு எனும் இஜ்திஹாத், அல்லது கியாஸ் ஆகியவற்றைப் பின்பற்றி ஒழுகுவோரே வெற்றிபெறும் கூட்டத்தார் ஆவர்.
இந்த சுன்னத் வல்ஜமாஅத்தார்தான், இன்றைய உலக முஸ்லிம்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத் தக்கது. பெயரைப் போன்றே, இவர்களின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும் நபிவழி மற்றும் நபித்தோழர்கள், இமாம்கள் வழியை ஒட்டியதாக இருக்கும்.
சரியான கொள்கைகள்
1. ‘முஅதஸிலாக்கள்’போல், “மனிதனே தன் செயல்களைப் படைத்துக்கொள்கிறான்” என்று சுன்னத் வல்ஜமாஅத்தினர் சொல்லவுமாட்டார்கள். அதற்காக “மனிதனுக்குச் சுயவிருப்பம் என்பதே கிடையாது” என்று ‘ஜப்ரிய்யாக்கள்’ வாதிடுவதைப் போன்று சொல்லவுமாட்டார்கள்.
மாறாக, மனிதனுடைய செயல்களை மட்டுமல்ல; அவன் எண்ணங்களையும்கூட இறைவனே படைக்கின்றான்; உருவாக்குகின்றான் -என்பதே சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். திருமறை குர்ஆன் சொல்வதுதான் இந்தக் கொள்கை.
உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும அல்லாஹ்தான் படைத்தான் (என்று இப்ராஹீம் கூறினார்). (37:96)
அல்லாஹ் நாடுவதைத் தவிர (வேறு எதையும்) நீங்கள் நாடுவதில்லை. (76:30)
அதே நேரத்தில், நன்மை அல்லது தீமையை, உயர்வு அல்லது தாழ்வை, அழுகை அல்லது புன்னகையைத் தேர்ந்தெடுக்கும் சுய விருப்பம் மனிதனுக்கு உண்டு. இதுவும் அருள்மறை குர்ஆன் அறிவிப்பதுதான்:
அது (ஆன்மா) தேடிக்கொண்ட நன்மை அதற்கே உரியது; அது தேடிக்கொண்ட தீமையும் அதற்கே உரியது. (2:286)
மனிதக் கரங்கள் தேடிக்கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. (30:41)
2. சுன்னத் வல்ஜமாஅத்தாரின் மற்றொரு நடுநிலைக் கொள்கையைப் பாருங்கள். நபித்தோழர் அலீ (ரலி) அவர்களை ஷியா பிரிவினரைப் போன்று அளவுக்குமேல் உயர்த்தவுமாட்டார்கள்; காரிஜிய்யாக்கள்போல் தாழ்த்தவும்மாட்டார்கள்.
மாறாக, அலீ (ரலி) அவர்களை எந்த அளவிற்கு மதிக்கிறார்களோ, அதே அளவிற்கு அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருபெரும் (ஷைகைனி) நபித்தோழர்களையும் மதிப்பார்கள்; தம் குடும்பத்தாருக்குத் தனியான குர்ஆன் இருக்கிறது என்று அலீ (ரலி) அவர்களே, ஒருமுறைகூடச் சொன்னதில்லை என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளார்கள்.
ஆதாரபூர்வமான நபிமொழிகளைக் காணுங்கள்:
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும் (இன்பத்திலும் துன்பத்திலும்) என் தோழரும் ஆவார். (புகாரீ-3656)
உமரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய ஒரு (அபூர்வ) தலைவரை நான் கண்டதில்லை. (புகாரீ-3682)
அலீ (ரலி) அவர்களை நோக்கி, நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன் -என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ-2699)
பொதுவாக, நபித்தோழர்கள் அனைவர்மீதும் அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் கொள்ள வேண்டும்; அவர்களில் யாரையும் இழிவாகக் கருதக் கூடாது; அவமரியாதையாகப் பேசக் கூடாது என்பதே சன்னி முஸ்லிம்களின் போற்றத் தக்க நம்பிக்கையாகும்.
“நபித்தோழர்கள் அனைவரும நேர்மையாளர்கள் -என்பதே அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாத்தார் கொள்கையாகும்; இறைவேதமும் நபிமொழியும் நபித்தோழர்களை -அவர்களின் குணநலன்கள், செயல்கள், தியாகங்கள் அனைத்தையும்- பாராட்டியிருப்பதே இதற்குக் காரணம்” -என இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். (இக்த்திஸாரு உலூமில் ஹதீஸ்)
3. முர்ஜிஆக்களைப் போல் இறைநம்பிக்கை (ஈமான்) மட்டும் போதும்; பாவங்களால் எந்தப் பாதிப்புமில்லை -என்று சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்கள் சொல்லவுமாட்டார்கள்; காரிஜிய்யாக்களைப் போல், பெரும் பாவம் செய்பவர் ‘காஃபிர்’ (இறைமறுப்பாளர்) என்று சொல்லவுமாட்டார்கள்.
மாறாக, இறைநம்பிக்கையாளர் ஒருவர் பாவம் செய்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். நாடினால் அவன் மன்னிக்கலாம். நாடினால் தண்டிக்கலாம். தண்டனைக் காலம் முடிந்தபின் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நிரந்தர நரக வேதனை என்பது, முஃமினுக்குக் கிடையாது -என்பதே எமது கோட்பாடாகும்.
மறுமையில் நபி (ஸல்) அவர்கள் செய்யும் பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான நீண்ட ஹதீஸ் ஒன்றில் பின்வருமாறு இடம்பெறுகிறது:
“யாருடைய உள்ளத்தில் அணுவளவு ஈமான் உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுவீராக” என அல்லாஹ் என்னிடம் கூறுவான். (புகாரீ-7510)
இவர்களே சுன்னத் ஜமாஅத்தினர்.
ஆக, பல்வேறு தரப்பட்ட, வேறுபட்ட, வித்தியாசமான கொள்கையாளர்களுக்கு மத்தியில், இறைமறையும், இறைத்தூதரும் நபித்தோழர்களும் இமாம்களும் எந்தக் கொள்கை கோட்பாட்டைக் காட்டியுள்ளார்களோ அவற்றை ஏற்று நம்பி, செயல்படுகின்ற வெற்றிக் கூட்டமே சுன்னத் வல்ஜமாஅத் முஸ்லிம்கள் ஆவர்.
இதை விடுத்து, இன்றைய முஸ்லிம்களிடம் ஊடுருவிவிட்ட அநாசாரங்கள், மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் புதுப்புது அனுஷ்டானங்கள், மூடக்கொள்கைகள் ஆகியவற்றை நம்புகின்றவர்கள்தான் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் என்ற முற்றிலும் தவறான கண்ணோட்டம் களையப்பட வேண்டியதாகும்.
இவற்றில் சில, ‘ஷியா’க்களிடமிருந்தும் இன்னும் சில பிற மதங்களிலிருந்தும் முஸ்லிம்களிடம் பரவியவை ஆகும்.
முஹர்ரம் மாதத்தில் பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, மார்பில் அடித்துக்கொள்வது, அதைப் புனிதமாகக் கருதுவது, பெரியார்கள் பெயரில் சந்தனக்கூடு தூக்குவது, உர்ஸ் என்ற பெயரில் நடக்கும் ஆட்டம் பாட்டங்கள், ஸஃபர் மாதத்தில் ‘ஸஃபர் கழிவு’ என்று சொல்லி நடக்கும் பித்அத்கள், திக்ர் அல்லது ஸலவாத் என்ற பெயரில் நடக்கும் குத்தாட்டம், ‘பேய்விரட்டல்’ என்று காரணம் காட்டி, போடும் பேயாட்டங்கள், பந்தக்கால் விசேஷம், திருஷ்டி கழிப்பிற்காக பூசணிக்காய் உடைத்தல், பெரியார்கள் அடக்கத் தலங்களில் நடக்கும் மயிலிறகு பூச்சு, தவாஃப், சஜ்தா… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதற்கெல்லாம் மார்க்கத்தில் இடமுண்டா? சுன்னத் வல்ஜமாஅத்தின் மூலாதாரங்களில் எதிலாவது சான்று உண்டா? இதுவெல்லாம் தடை செய்யப்பட்டுள்ள அநாசாரங்கள் என்று பிரசாரம் செய்து, தடுக்க முயல்வோரை ‘வஹ்ஹாபிகள்’ என்ற பயங்கரவாதிகள் என்று வசைபாடலாமா?
இந்த அநாகரிகங்கள் தீனின் பெயரால் நடைபெறும்போது அவை பாவச்செயல்கள் அல்லவா? பாவத்தை பாவம் என்று சொல்லாமல் அனுமதிப்பதோ, மௌனம் காப்பதோ பெருங்குற்றம் அல்லவா?
எல்லாவற்றையும்விட மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இவற்றை அனுமதிப்பதுதான் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கை என்று பாமரர்கள் நம்புகின்ற நிலையை உருவாக்கிவிட்டு, எதிர்ப்பவர்களைத் தீண்டத் தகாதவர்கள்போல் நடத்துவதுதான்.
இன்னொரு பக்கம், பித்அத்களைச் செய்வோர் எல்லாம் ‘இணைவைப்பாளர்கள்’ ஆவர் என்று ‘ஃபத்வா’ கொடுத்து, இஸ்லாத்திலிருந்தே வெளியேற்றும் கொடுமையும் நடக்கிறது.
மாணவக் கண்மணிகளே! இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும். எதார்த்தம் என்ன என்பதை அறிந்து தெளிய இப்போதே உழைக்க வேண்டும்.
(சந்திப்போம்)

சனிக்கிழமை, 19 மே 2018 09:42

முதல் தலைமுறை மனிதர்கள் 15

Written by

சேயன் இப்ராகிம்
பன்னூலாசிரியர்ஏ.கே.ரிபாயி சாகிப்

19.02.1981 அன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகிலிருக்கும் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த பட்டியலின மக்களைச் சார்ந்த 180 குடும்பத்தினர் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சி இந்துத்துவ சக்திகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பி.ஜே.பியின் அகில இந்தியத் தலைவர்கள் தொடங்கி கீழ்மட்டப் பிரமுகர்கள் வரை மீனாட்சிபுரம் நோக்கிப் படையெடுத்தனர்.

முஸ்லிம்கள், பட்டியலின மக்களுக்குப் பணம் கொடுத்தும், பிரியாணி கொடுத்தும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாக்குறுதியளித்தும் மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று பரப்புரையை அவர்கள் முடுக்கிவிட்டனர். ஊடகங்களும் இதனை முக்கியச் செய்தியாக வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தின.

திருநெல்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இஷாஅத்துல் இஸ்லாம் சபை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இந்த மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது.

இந்த மதமாற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நல இயக்குநர் கே. ஆறுமுகம், விசாரணை அதிகாரி சத்திய நாராயண மூர்த்தி, மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் குற்றாலம் வருகை தந்தனர். அப்போது இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிர்வாகிகளும் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்த அமைப்பின் சார்பில் ஐந்துபேர் விசாரணையில் கலந்து கொண்டனர். அதில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவரும் இருந்தார். அவர் தான் விசாரணைக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார். விசாரணைக் குழுவினர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் இதோ.....
விசாரணை அதிகாரி : உங்கள் சபையின் சார்பில் 2000 பேரை மதம் மாற்றியிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் : இல்லை 8000 ஆயிரம் பேரை மதம் மாற்றியிருக்கிறோம்.

வி.அ :- 1981ல் 2000 பேரை மதம் மாற்றியிருக்கிறீர்கள்?
மு.மா.உ : 1945லேயே தெற்குப்பட்டி என்ற கிராமத்தில் 4000 பேரை மதம் மாற்றியிருக்கிறோம்.
அவரின் இந்தப் பதிலைக் கேட்டு விசாரணை அதிகாரிகள் அதிர்ந்து போயினர். மேலும் அவர் ‘எங்களிடத்தில் ஒளிவு மறைவு இல்லை. நாங்கள் யாரையும் ஆசை காட்டியோ, கட்டாயமாகவோ மதம் மாற்றுவதில்லை. மதம் மாறுவதற்காக விரும்பி வருகின்றவர்களையே நாங்கள் எங்கள் மதத்தில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்றும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இன்னொரு விசாரணை அதிகாரி அவரிடம் ‘மதம் மாறி வந்த பட்டியலின மக்களுடன் நீங்கள் திருமண உறவுகள் வைத்துக் கொள்வீர்களா எனக் கேட்டபோது அதற்கு அவர் சிரித்துக் கொண்டே’ திருமண உறவு வைத்துக் கொள்வீர்களா என்றா கேட்கிறீர்கள்... எனக்கு ஐந்து ஆண்மக்கள் அதில் இருவர் மதம் மாறி வந்தவர்களைத் திருமணம் புரிந்துள்ளனர். ஒரு பெண் பிற்பட்ட வகுப்பிலிருந்து வந்தவர் இன்னொரு பெண் பட்டியலின வகுப்பிலிருந்து வந்தவர்’ என்று கூறினார்.
இந்தப் பதில் கேட்டு அந்த விசாரணை அதிகாரி வாயடைத்துப் போனார். அந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தான் முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான ஏ.கே. ரிபாயி என அழைக்கப்படும் அஹமது கபீர் ரிபாயி சாகிப் என்பார் ஆகும். அவரது சேவைகளையும், சாதனைகளையும் இப்போது பார்க்க விருக்கிறோம்.

பாரம்பர்யக் குடும்பம்:
‘தென்காசி மேடை முதலாளி’ என மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட, திருநெல்வேலி முஸ்லிம் தனித் தொகுதி சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய, அகில இந்திய முஸ்லிம்லீகிலும், இ.யூ. முஸ்லிம் லீகிலும் நெல்லை மாவட்டத் தலைவராகப் பதவி வகித்த, தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நிறுவனத் தலைவராக விளங்கிய மர்ஹும் மு.ந. அப்துல் ரஹ்மான் சாகிபின் மூத்த புதல்வர் தான் ஏ.கே. ரிபாயி அவர்கள்.
தென்னிந்தியாவிலேயே மிகப் பெரும் தொழில் அதிபராகவும், தென்னிந்தியாவின் வர்த்தக இளவரசர் எனப் போற்றப்பட்டவராகவும், சென்னை மாகாண அ.இ. முஸ்லிம் லீகின் தலைவராகவும், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் நிறுவனராகவும், திகழ்ந்த மர்ஹும் எம். ஜமால் முஹம்மது சாகிபின் மூன்றாவது மகனான ஆடுதுறை அப்துல்லா சாகிபின் மூத்த மகள் பாத்திமா பீவி தான் ரிபாயி சாகிபின் தாயார் (அப்துல்லா சாகிபின் இரண்டாவது மகள் ஹமீதா தான் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபின் துணைவியராவார்) இத்தகைய பாரம்பர்யப் பெருமை மிக்க மு.ந. அப்துல் ரஹ்மான் - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாக 17.01.1924 அன்று தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் ரிபாயி சாகிப் பிறந்தார்.
தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை தென்காசியிலேயே கற்றுத் தேறிய ரிபாயி, திருநெல்வேலியிலுள்ள புகழ் பெற்ற மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை (பி.ஏ) பட்டம் பெற்றார்.

அரசியல் ஈடுபாடு:
ரிபாயி சாகிபின் தந்தையார் மு.ந. அப்துல் ரகுமான் சாகிப் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தந்தையைப் பின்பற்றித் தனயனும் இளமைக் காலம் தொட்டே முஸ்லிம் லீகில் அங்கம் வகித்தார். முஸ்லிம் லீக் நடத்திய அனைத்து இயக்கங்களிலும் பங்கு கொண்டார். தென்காசி நகர முஸ்லிம்லீகின் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார். 04.11.1962 அன்று திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளராகவும், 21.10.1970 அன்று குற்றாலத்தில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சில ஆண்டுகள் கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் பதவி வகித்தார். நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
1962 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் சேர்த்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக தி.மு.கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டன. இத் தேர்தலில் முஸ்லிம் லீகிற்கு இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

முஸ்லிம்லீகிற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென்காசித் தொகுதியில் இவர் முஸ்லிம்லீக் வேட்பாளராகப் போட்டியிட்டார். இத் தொகுதியில் அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸின் சார்பாக மிகப் பெரும் நிலச் சுவான்தாரரான இடைகால் ஏ.ஆர். சுப்பையா முதலியார் களத்தில் இருந்தார். போட்டி கடுமையாக இருந்தது. எனினும் இத் தொகுதியில் ரிபாயி சாகிப் வெற்றி வாய்ப்பை இழந்தார். காங்கிரஸ் வேட்பாளரான ஏ.ஆர். சுப்பையா முதலியார் வெற்றி பெற்றார்.
வாக்குகள் விவரம்:
ஏ.ஆர். சுப்பையா முதலியார் (காங்கிரஸ்) 29,684
ஏ.கே. ரிபாயி (முஸ்லிம் லீக், சைக்கிள் சின்னம்) - 16, 882

பாராளுமன்ற மேலவை உறுப்பினர்:
1972 ஆம் ஆண்டு பாராளுமன்ற மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ரிபாயி சாகிப் முஸ்லிம் லீக் வேட்பாளராக (தி.மு.க ஆதரவுடன்) நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். ஆறு ஆண்டுகள் அவர் மாநிலங்களவை உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இவரையும் சேர்த்து மொத்தம் ஐந்து முஸ்லிம் லீகர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். (மற்றவர்கள் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாகிப், எஸ்.ஏ. காஜா முகையதீன் சாகிப் மற்றும் கேரளாவைச் சார்ந்த பி.வி. அப்துல்லா கோயா, ஹாமிதலி ஷம்னாத் ஆகியோர்) இந்த ஐவர் அடங்கிய குழுவிற்கு ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாகிப் தலைவராக இருந்தார். தலைவர் அப்துஸ் ஸமது சாகிபுடன் இணைந்து முஸ்லிம்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக ரிபாயி சாகிப் குரல் கொடுத்தார். குறிப்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்த்தை பறிக்கக் கூடாது என்று ஆணித்தரமாக வாதிட்டார். தனது பதவிக் காலத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மாநிலங்களவையிலும், பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகளைத் தொகுத்திடும் பணியில் ஈடுபட்டார்.
தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை:
பிற மதத்திலிருந்து விலகி இஸ்லாமில் இணைந்த மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக (கலிமா சொல்லிக் கொடுப்பது, ஆண்களுக்கு சுன்னத் செய்வது, மார்க்கக் கல்வி போதிப்பது, திருமணம் செய்விப்பது, அதற்கான செலவுகளை ஏற்பது போன்ற பணிகள்) அவரது தந்தையார் மு.ந.அ. அவர்களின் தலைமையில் தென்காசியில் ‘முஸ்லிம் பிரச்சார சபை’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. சென்னை மாகாணமெங்கும் இந்தப் பணிகளை விரிவு படுத்தும் நோக்கில் 1945 ஆம் ஆண்டு இதன் பெயர் தென்னிந்திய ‘இஷாஅத்துல் இஸ்லாம் சபை’ என மாற்றம் செய்யப்பட்டது.
இந்த அமைப்பு மதம் மாறிய முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தது. 19.02.1981 அன்று மீனாட்சிபுரம் கிராமத்தைச் சார்ந்த பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 180 குடும்பங்கள் இஸ்லாமில் இணைந்த போது மத்திய-மாநில அரசுகள் இந்த அமைப்புக்கு பெரும் நெருக்கடி கொடுத்தன. அப்போது இஷா அத்தின் தலைவராக இருந்த அவரது தம்பி ஏ. சாகுல் ஹமீது சாகிப்பிற்கு இவர் அருந்துணையாக இருந்து எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி கண்டார்.1986ஆம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து ஏ. சாகுல் ஹமீது விலகியபின் அந்த சபையின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். (இறக்கும் வரை அப்பொறுப்பில் நீடித்தார்).
மீனாட்சிபுரம் கிராமத்தில் மத மாற்றம் நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சில ஆங்கில இதழ்களின் நிருபர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறிய இம்மக்கள் ‘தலித் இஸ்லாமியர்களாகவே’ வாழ்கின்றனர் அவர்களுக்குச் சமத்துவம் கிடைக்கவில்லை என்று எழுதிய போது இவர் அந்தக் கிராமத்திற்கே சென்று ஆய்வு செய்து விரிவான அறிக்கை ஒன்று கொடுத்தார். அந்த அறிக்கையில் அக் கிராமத்தில் மதம் மாறிய முஸ்லிம்கள் அருகிலுள்ள வடகரை, அச்சன்புதூர், கடையநல்லூர், வாவா நகர், செங்கோட்டை, பண்பொழி ஆகிய ஊர்களைச் சார்ந்த பாரம்பர்ய முஸ்லிம்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டுள்ளதையும், மதம் மாறிய ஆண்களில் பலர் அரபி மத்ரஸாக்களில் சேர்ந்து ஓதி ஆலிம் பட்டம் பெற்றுள்ளதையும் அப்படி ஆலிம் பட்டம் பெற்றவர்கள் தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களில் பேஷ் இமாமாகப் பணியாற்றி வருவதையும் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்திருந்தார். இதன் காரணமாக அந்தப் பொய்ப் பிரச்சாரம் நின்று போனது.

காயிதே மில்லத் நினைவு மலர்:
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் நினைவைப் போற்றும் வண்ணம் விரிவான நினைவு மலர் ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்ற எண்ணம் சமுதாயப் பிரமுகர்களிடையே இருந்து வந்தது. இதனைச் செயல்படுத்துவதற்காக 6.8.85 அன்று பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை இல்லத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நினைவு மலரினைத் தயாரிக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வீரை. அப்துல் ரகுமான் சாகிப், பேராசிரியர் கா. அப்துல் கபூர் சாகிப் உள்ளிட்ட சமுதாயப் பிரமுகர்களின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளின் அடிப்படையில் அவர் காயிதே மில்லத் அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது திரட்டிவைத்திருந்த காயிதே மில்லத்தின் பாராளுமன்ற உரைகளையும் அம்மலரில் இடம் பெறச் செய்தார். 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த மலர் (பெரிய அளவிலானது) காயிதே மில்லத் அவர்களின் சமூக, சமய, அரசியல் பணிகளை விளக்கிடும் ஒரு காலப்பெட்டகமாகத் திகழ்கிறது.

பன்னூலாசிரியர்:
ரிபாயி சாகிப் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, மிகச் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அன்றைய கால கட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்த மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, பிறை, மறுமலர்ச்சி, மணிச்சுடர் ஆகிய இதழ்களில் சமயம், அரசியல், வரலாறு சார்ந்த ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்த அவர் ஆங்கில இதழ்களில் வெளிவந்த இஸ்லாமிய சமயம், அரசியல் சார்ந்த கட்டுரைகளைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1948ஆம் ஆண்டு மாநில முஸ்லிம் லீகால் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் 1951ஆம் ஆண்டு தின இதழாக வெளிவந்த ‘முஸ்லிம்’ இதழின் துணையாசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
1961 ஆம் ஆண்டு டிசம்பரில் மாநில முஸ்லிம் லீகின் அதிகாரப் பூர்வ வார ஏடாக தொடங்கப்பட்ட ‘உரிமைக்குரல்’ இதழின் ஆசிரியராக இவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். இந்த இதழிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மணிச்சுடர் நாளிதழிலும் இணைந்து பணியாற்றினார்.
இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தவிர, கீழ்க்கண்ட நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
1. மக்களும் நதிகளும் (பேரா. ஹுமாயூர் கபீர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)
2. அற்புத சாதனை (அமெரிக்க அரசியல் விமர்சனம்)
3. என்னைக் கவர்ந்த இஸ்லாம் (லியோ போர்டு வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்பு நூல்)
4. ஞானப் பெண்ணே உன்னைத்தான்
5. ஆயிரம் மலர்களே மலருங்கள் (சமூக நாவல்)
6. நாயகமே எங்கள் நபி நாயகமே
7. விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும் (மாரிஸ் புகைல் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு)
8. கவ்மின் காவலர் (காயிதே மில்த் வரலாறு)
9. மைசூர் வேங்கையின் சபதம்
10. காயிதே ஆஜம் (வாழ்க்கை வரலாறு)
11. இஸ்லாமிய சிறுகதைகள் (தொகுப்பு நூல்)
12. தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு
13. 21வது நூற்றாண்டில் இஸ்லாம்
14. ஐரோப்பாவில் இஸ்லாம் மார்க்கம்
15. சமுதாய நீரோட்டத்தில் சங்கமம் (மு.ந. அப்துல் ரகுமான் வாழ்க்கை வரலாறு)
16. திருக்குர்ஆன் சிந்தனைகள்
17. ஏ.கே.ஆரின் சிறுகதைகள்
மேலும் ‘உரிமைக்குரல்’ வார இதழில் வியட்நாம் பிரச்னை குறித்து தொடர் கட்டுரை ஒன்றையும். மறுமலர்ச்சி வார இதழில் ‘குற்றவாளிக் கூண்டில் காந்திஜி’ என்ற தலைப்பில் ஒரு தொடரையும், நெல்லையிலிருந்து அவரது புதல்வர் ஹிலால் முஸ்தபாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘சகோதரத்துவக் குரல்’ என்ற மாத இதழில் ‘ஹஸினாவின் கணவர்’ என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை.
ரிபாயி சாகிப் எழுதிய நூல்களில் ‘21வது நூற்றாண்டில் இஸ்லாம்’ என்ற நூல் ஒரு மிகச் சிறந்த ஆய்வு நூலாகும். நான்கு பாகங்களைக் கொண்ட இந்நூலின் முதல் மூன்று பாகங்களில்ஸ்பெயினில் மூர்கள் நடத்திய ஆட்சியின் மாட்சி குறித்தும். மூர்களின் ஆட்சியின்போது ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சி குறித்தும், சிலுவைப்போர்கள் குறித்தும். உதுமானியப் பேரரசின் சாதனைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். நான்காவது பாகத்தில் ஐரோப்பாவில் இஸ்லாம் வேகமாகப் பரவி வருவதையும், மிக விரைவிலேயே ஐரோப்பிய நாடுகளின் மார்க்கமாக இஸ்லாம் திகழும் என்றும் கணித்துள்ளார். அவரது இந்தக் கணிப்பு தற்போது உண்மையாகிக் கொண்டு வருகிறது.
குடும்பம்:
ரிபாயி சாகிபின் துணைவியார் பெயர் ஆமினா பீவி. இத் தம்பதியினருக்கு நத்தர் பாவாஜலால், அப்துல் ரகுமான், முகம்மது பிலால். ஹிலால் முஸ்தபா, முகம்மது இஸமாயில் ரபீக் என ஐந்து மகன்கள் உள்ளனர். மகன்களில் முஹம்மது பிலால் தவிர்த்து மற்ற நால்வரும் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். நான்காவது மகனான ஹிலால் முஸ்தபா ஒரு மிகச் சிறந்த கவிஞர். நபிமார்களைப் பற்றிய இவரது புதுக்கவிதைகள் ‘பேரீச்சம் பழக் காட்டின் பிரதிநிதிகள்’ என்ற தலைப்பிலும் பல்துறை சார்ந்த கட்டுரைகள் ‘தேவையான தீர்ப்புகள்’ என்ற தலைப்பில், நூலாக வெளிவந்துள்ளன. சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மணிவிளக்கு’ மாத இதழின் துணை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். எங்கள் தங்கம், உஷா (நடிகர் டி. இராஜேந்தரின் மாத இதழ்) சகோதரத்துவக் குரல் ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
முடிவாக:
பன்னூலாசிரியராகத் திகழ்ந்த ஏ.கே.ரிபாயி சாகிப் அவர்கள் சமுதாயத்திற்குக் கிடைத்த ஒரு நன்முத்து என்பதில் ஐயமில்லை. தனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவர் கடையநல்லூருக்கு அருகிலுள்ள ‘வாவா நகரம்’ என்ற எழில் கொஞ்சும் சிற்றூரில் தங்கியிருந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். சமுதாயம் மற்றும் அரசியல் பிரச்னைகளில் தன்னை நாடி வந்தவர்கட்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்கி வந்தார். இறுதிவரை தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
1998 ஆம்ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மெக்கா சென்றிருந்த போது 21.03.1998 அன்று மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது ஜனாஸா மெக்கா நகரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ரிபாய் சாகிபின் சமுதாயப் பணிகள் காலத்தைக் கடந்து சமுதாய மக்களால் நினைவு கூறப்படும் என்பது திண்ணம். அவரது நூல்கள் மறு பிரசுரம் செய்யப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் அவரது புதல்வர்கள் ஈடுபடவேண்டுமென்பது நமது அவாவாகும். எல்லாம் வல்ல இறைவன் அதற்குத் துணை புரிவானாக.
ஆதார நூல்கள்:
1. சமுதாய நீரோட்டத்தில் சங்கமம் - ஏ.கே. ரிபாயி
2. முஸ்லிம் லீக் மாநாட்டு மலர்கள்
3. பிறைமேடை ஜுன் 16-30 (2016) இதழில் ஜனாப் காயல் மகபூப் எழுதிய கட்டுரை.
நன்றி... ரிபாயி சாகிப் பற்றிய தகவல்களை தந்துதவிய அவரது புதல்வர் ஹிலால் முஸ்தபா அவர்களுக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

சனிக்கிழமை, 19 மே 2018 09:34

சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா?

Written by

இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்ய 30 ஆண்டுகளாக(1986 முதல்) வழக்கத்தில் இருந்து வரும் கொலிஜியம் அமைப்புக்கு மாற்றாக மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு இயற்றிய நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை(National Judicial Appointment Commission-NJAC),இந்திய உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2015,அக்டோபர் 16 அன்று செல்லாது என ரத்து செய்து உத்தரவு போட்டது.5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் மத்திய அரசு ஆணையத்தை எதிர்த்தும் 1 நீதிபதி ஆதரித்தும் தீர்ப்பளித்தனர்.4 நீதிபதிகள் பெரும்பான்மை என்ற எண்ணிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்த ஆணையம் ரத்து ஆனது.99 வது திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த அரசியலமைப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு தன்னேற்பு வழக்காக எடுத்துக்கொண்டு குப்பை கூடைக்குள் வீசியது.

மத்திய அரசு இதனை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு வடிவத்தில் கொண்டு வரும்.இந்த ஆணையம் சட்டமானதும் கொலிஜியம் உடனடியாக ரத்தாகி விடும். உச்சநீதிமன்றத்தின் தன்னாட்சி உரிமைகளை இந்த ஆணையம் கைப்பற்றிக் கொள்ளும்.இந்த நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்துக்கு சட்ட அமைச்சரே தலைவராக இருப்பார். சட்ட அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இந்த ஆணையம் வந்து விடும்.

மத்திய அரசு பல அரசியல் சட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் எதிர் கொள்கிறது. அதனல், அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வாதி ஆகிறார். உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை தேர்வு செய்வதில் ஒரு வாதி எப்படி தலையிட முடியும்? என்கிறார் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜித் பட்டாச்சார்யா. இவர்,மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் இருந்தவர். இந்த வழக்கில் இவரும் ஒரு மனுதாரர்.2015 கோடை விடுமுறையில் 32 நாட்கள் காலை 10:30 முதல் மாலை 04:00 மணி வரையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.வழக்கின் முடிவில் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்தை தள்ளுபடி செய்து கொலிஜியத்துக்கான அதிகாரத்தை நீதிமன்ற அமர்வு காப்பாற்றி கொண்டது.அரசு ஆணையத்தை இழந்தது.மத்திய அரசு கொண்டு வந்த ஜனநாயக விரோத சட்டங்கள் பலவற்றை கேள்வி கேட்காத உச்சநீதிமன்றம் தனது உரிமைக்கும் அதிகாரத்துக்கும் ஒரு ஆபத்து வந்துவிட்ட உடன் தானே தலையிட்டு தனது அதிகாரத்தை காப்பாற்றியது.

இந்த தீர்ப்புக்குப் பிறகு அரசுக்கும் நீதித்துறைக்குமான சிக்கல் வரலாற்று முக்கியம் கொண்ட இந்த தீர்ப்புக்கு பிறகு கடுமையானது.இந்த முடிவினை மத்திய அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்த தீர்ப்பு வெளியாகிய பின்னர் 27 மாதங்கள் கழித்தும் நீதிபதிகளை நியமனம் செய்ய தேவையான நடைமுறை குறிப்பாணையை(Memorandum of Procedure) மத்திய அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.மத்திய அரசு தலைமை நீதிபதியை ஆலோசித்து நடைமுறை குறிப்பானையை இறுதி செய்யும் படி உச்சநீதிமன்றம் தேசிய ஆணையத்தை ரத்து செய்து இட்ட உத்தரவுடன் சேர்த்து அறிவுறுத்தியது.

இருந்தும்,மத்திய அரசு குறிப்பாணையை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. குறிப்பாணை வெளியிடாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மீறி தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய அரசு முயல்கிறது.உச்சநீதிமன்றம் தனது பரந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் 129, 141 மற்றும் 144 என்ற விதிகளின் கீழ் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டிருக்க முடியும்.இருந்தும்,மத்திய அரசை பகைத்துக் கொள்வது நல்ல விளைவுகளை தராது என்று சகித்துக் கொண்டுள்ளது.

இந்த சூழல் காரணமாக நீதித்துறையின் செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. நீதிபதிகளை நியமிப்பதில் இடையூறு ஏற்பட்டு வழக்குகள் மூச்சு திணறும் அளவுக்கு அதிகரித்து உள்ளது.உயர்நீதிமன்றங்களில் 40 விழுக்காடு பதவிகள் காலியாக இருக்கின்றன.இதில்,வழக்கு போட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக நிற்கின்றனர்.இந்த நிலையில் தான் மத்திய அரசு நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட்டு வருகிறது என்று நான்கு நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்து புகார் கூறினார்கள்.

தி வாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழின் இளம் செய்தியாளர் பாப் உட்வர்ட்(Bob Woodward) கார்ல் பெர்ன்ஸ்டீன் (Carl Bernstein) உடன் இணைந்து 1972 ல் அமெரிக்காவில் நடந்த வாட்டர் கேட் ஊழலை வெளிப்படுத்தினார்.இதில்,அமெரிக்க அதிபரான ரிச்சர்டு நிக்சன் பதவி விலக நேர்ந்தது.அதே போல்,அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜக்மோகன் லால் சின்கா பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். தேர்தலில் மோசடி செய்த குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தார்.இந்திரா காந்தி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட கூடாது என்றும் தடை விதித்தார்.

இந்திரா காந்தி தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க இந்தியாவே நெருக்கடியில் இருப்பதாக கூறி அவசர நிலையை பிரகடனம் செய்தார்.சுதந்திர இந்தியாவில் அது முதல் முயற்சி. எனினும்,ஆங்கிலேயர் ஆட்சியிலும் அதற்கு முந்திய காலங்களிலும் அப்படி ஒரு நிலையை இந்தியா சந்திக்க வில்லை. அவசர நிலை அமலுக்கு வந்ததால் அரசியலமைப்பு சட்டத்தின் அதிகாரமே ரத்தாகி விட்டது. நீதிமன்றத்துக்கான அதிகாரம் முடக்கப்பட்டது. இந்திய மத்திய அரசுக்கும் இந்திய நீதித்துறைக்கும நடந்த பெரிய அதிகார யுத்தமாக அது இருந்தது. அதன் பிறகு,நீதிமன்ற நியமன ஆணையத்தின் அதிகாரத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அதிகாரத்தை முட்டித் தள்ளி இருக்கிறது.பத்திரிகை துறையோடும் நீதித்துறையோடும அரசு மோதும் போது அது ஒரு போராக மாறுகிறது.

1960 களிலும்,1970 களிலும் அரசியல் நீதித்துறை மீது தனது அதிகாரத்தை செலுத்தியது.அரசியல் முற்போக்கு அம்சங்களில் ஆர்வம் காட்டுவதாகவும் நீதித்துறை பிற்போக்காக இருக்கிறது என்றும் பார்க்கப்பட்டது.ஐ.சி.கோலக்நாத் மற்றும் பல நீதிமன்ற தீர்ப்புகள் கடும் சட்டங்கள் இயற்றுவதில் நாடாளுமன்றத்துக்கான அதிகாரத்தை கட்டுப்படுத்தின. இந்திரா காந்தியின் இடதுசாரி தோழர்களான மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்தும்(committed judiciary) தேவை உள்ளதாக வெளிப்படையாக கூறினார்கள்.

1980 களிலும்,1990 களிலும் மத்திய அரசு தனிப் பெரும் பலம் கொண்டதாக அமையவில்லை. கூட்டணி அரசுகளும் சிறுபான்மை அரசுகளும் ஏற்பட்டன.அரசு பலம் குன்றிப் போனதால் நீதித்துறை அரசு மீது தனது அதிகாரத்தை செலுத்தியது.பொது நல வழக்குகள் மீது தொடர்ச்சியாக தீர்ப்புகள் வழங்கி குடி மக்கள் உரிமைகளை பலப்படுத்தியது.தனது அதிகாரத்தையும் விரிவு படுத்தியது.அரசு அதிகாரத்தை அதிக பொறுப்புடையதாக மாற்றியது.

1973 ல்-நீதிபதிகள் ஜே.எம்.ஷெலத்(J.M.shelat),கே.எஸ்.ஹெக்டே(K.S.Hegde),ஏ.என்.குரோவர்(A.N.Grover) ஆகியோரை மீறி ஏ.என்.ரேயை(A.N.Ray) தலைமை நீதிபதியாக மத்திய அரசு நியமனம் செய்தது.இதனை தொடர்ந்து நீதிபதிகள் ராஜினாமா செய்தார்கள்.

1975 ல் ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்கில் இந்திய குடி மகன் ஒருவன் அடிப்படை உரிமைகளை கேட்க நீதிமன்ற தீர்வை நாடுவதற்கு மத்திய அரசு தடை ஏற்படுத்திய போது நீதித்துறை ஒளிந்து கொண்டது.

1977 ல் எச்.ஆர்.ஹன்னா(H.R.Khanna) ஏடிஎம் ஜபல்பூர் தீர்ப்பில் முரண்பட்டார் என்பதற்காக மத்திய அரசு அவரை மீறி எம்.எச்.பேக்கை (M.H.Beg) தலைமை நீதிபதியாக அமர்த்தியது.இதனை எதிர்த்து எச்.ஆர்.கண்ணா பதவி விலகினார்.

1982 ல் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட முதல் வழக்கான எஸ்.பி.குப்தா வழக்கு.இந்த வழக்கில் நீதிபதிகளை நியமனம் செய்வதில் தலைமை நீதிபதியின் பரிந்துரையின் முக்கியத்துவத்தை மத்திய அரசு நிராகரிக்க முடியும் என்பதை நீதிபதி பகவதி அமர்வு ஒப்பு கொண்டது.இது, நீதிபதிகளை நியமிப்பதில் அரசு அதிகாரத்தின் ஏதேச்சதிகாரத்தை உருவாக்கியது.

1993 ல் மத்திய அரசு, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமஸ்வாமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.நீதிபதி ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த முதல் நிகழ்வும் அது தான்.ஆனால்,ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதில் இருந்து விலகியதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி கண்டது.

1993 ல் Supreme Court Advocates -on-Record Association என்பது பிரபலமான வழக்கு.நீதிபதிகள் தொடர்பான இரண்டாவது வழக்கு இது.இந்த வழக்கில் தான் நீதிபதி ஜே.எஸ்.வெர்மா அமர்வு நீதிபதிகளை நியமிக்கும் உரிமையை உச்சநீதிமன்றத்துக்கு வழங்கியது.கொலிஜியம் அமைப்பை உருவாக்கவும் வழி காட்டியது.

1998 ல் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா அமர்வு ஜனாதிபதியின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வழக்கில் கொலிஜியம் முறையை புதுப்பித்தது.அதே நேரம்,நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரம் கொலிஜியத்துக்கு தான் உண்டு என்று பரூச்சா அமர்வு உறுதிபட கூறியது.

2009 ல் மத்திய அரசு உச்சநீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்ய மேலவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.கீழவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் முன்னரே சௌமித்ரா சென் பதவி விலகினார்.

2014 ல் நாடாளுமன்றம் நீதிபதிகள் நியமன தேசிய ஆணைய சட்டத்தை நிறைவேற்றியது.இந்த ஆணையத்தின் படி நீதிபதிகளை தேர்ந்தெடுக்க ஒரு குழு உருவாக்கப்படும்.இந்த குழுவில் நீதித்துறை,சட்டத்துறை மற்றும் அரசு துறை சேர்ந்தவர்கள் இடம் பெறுவார்கள்.

2015 ல் உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி தள்ளுபடி செய்தது. கொலிஜியம் முறையை மீண்டும் உறுதி செய்து, நீதிபதிகளை நியமனம் செய்ய ஒரு புதிய நடைமுறையையும் சுட்டிக் காட்டியது.இப்போது இது தான் நடைமுறையில் இருக்கிறது.

2018 ல் 4 மூத்த நீதிபதிகள் ஊடகங்கள் முன்பு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ஊழல் புகார்களை வைத்து உச்சநீதிமன்றத்துக்குள் நடக்கும் தில்லுமுல்லுகளை போட்டுடைத்தனர்.

1960 கள் மற்றும் 1970 களில் நீதித்துறை மீது அரசியல் அழுத்தம் இருந்தது.அரசு மற்றும் நீதித்துறைக்கு இடையான கொள்கை முரண்கள் துருத்தி நின்றன.நீதித்துறை பழமைவாத போக்குள்ளதாகவும் அரசியல்துறை முற்போக்கு நோக்கம் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஐ.சி.கோலக்நாத் மற்றும் இதர தீர்ப்புகள், கடுமையான சட்டங்களை இயற்றவிடாமல் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை முடக்கின. இந்திரா காந்தி காலத்தில் இடதுசாரி கொள்கையுடைய மோகன் குமார மங்கலம் போன்றவர்கள் நிதித்துறையை அரசின் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசினார்கள்.

1980 களுக்கும் 1990 களுக்கும் மத்தியில் இந்தியாவில் கூட்டணி அரசுகளும் சிறுபான்மை அரசுகளும் அமைந்து மத்திய அரசு நெகிழ்வாக இருந்து.இந்த சந்தர்ப்பத்தில் இந்திய நீதித்துறை தன்னை வலிமை படுத்திக் கொண்டது. தொடர்ச்சியான பொது நல வழக்குகள் மூலம் நீதித்துறை குடி மக்கள் உரிமைகளை விரிவு படுத்தியது.தனது அதிகாரத்தையும் ஆழப்படுத்திக் கொண்டது. அரசின் மீது அதிக சுமைகளை ஏற்றியது.

1990 களின் பிற்பகுதியிலும் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் நீதிமன்ற கடுமையை நெகிழச் செய்ய வேண்டும் என்ற பேச்சு கனமாக எழுந்தது. அரசின் சமூக நலத் திட்டங்கள்(உ.ம்: இட ஒதுக்கீடு,கல்லூரி மாணவர் சேர்க்கை வழக்குகள்); சுற்று சூழல்( உ.ம்: கடற்புற மேலாண்மை, டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு) சட்ட அவையில் மூக்கை நுழைப்பது( நம்பிக்கை தீர்மானம் கோருவதில் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களுக்கு உத்தரவு போடுவது) ஆகியவற்றில் நீதிமன்றம் தனது கொள்கையை திணிக்கிறது என்று நீதிமன்றத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஓரினச்சேர்க்கைக்கு தண்டனை அளிக்கும் சட்டப் பிரிவு 377 ஐ நீக்கம் செய்ய அரசு மறுத்த போது, முற்போக்குவாதிகள் கேட்டுக் கொண்ட போதிலும் நீதிமன்றம் தலையிட மறுத்தது. (இப்போது மாற்றிக் கொண்டது தனிக் கதை). பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மீது தொடர்ந்து கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் நீதித்துறையை கட்டுப்படுத்தும் பலத்தை நாடாளுமன்றத்துக்கு கொடுத்திருக்கிறது.

சனிக்கிழமை, 19 மே 2018 08:46

மனதைக் கவரும் மதரஸாபட்டினம்

Written by

ஆங்கிலேயர் ஆண்டபோது மதரஸா ராஜதானியில் ஒரிஸா முதல் கேரளா வரை இருந்தது. மதராஸ்தான் தலைமையகம். மொழி, இன, பிரதேச வெறி இல்லாத கால கட்டம். மதராஸ் ராஜதானியின் ஆட்சித் தலைவர் பிரதமர் என அழைக்கப்பட்டார். நம் ராஜதானியின் முதல் பிரதமர் கடலூரைச் சேர்ந்த மேதகு சுப்ராய ரெட்டியார். அவர் நீதிக் கட்சிக்காரர். காங்கிரஸ் கூட ஒருமுறை பதவியை பிடித்தது. அப்போதைய பிரதமர் மேதகு ராஜகோபாலாச்சாரியார்.
மதராஸ் இன்று சென்னையெனப் பெயர் மாற்றம் பெற்றாலும் உயர்நீதிமன்றத்தின் பெயர் மதராஸ் ஹை கோர்ட்டே.
மதராஸ் எனப் பெயர் பெறும் முன் இந்நகரம் வடக்கில் மண்ணடி எனப் பெயர் பெற்றிருந்தது. தெற்குப் பகுதி சென்னக்குப்பம் எனப் பெயர் பெற்றிருந்தது. இரண்டும் சிறிய கடலோரக் கிராமங்களாகவே இருந்தன. இவை கூவத்துக்கு வடக்கில் இருந்தன தெற்கில் திருவல்லிக்கேணியும் மயிலாப்பூரும் பழமையான ஊர்களாய் இருந்தன.
மண்ணடி மேட்டுப் பகுதியாகவும் அதன் கடலோரம் தாழ்ந்தும் இருந்ததால் அது தோணித்துறையாக தானாகவே அமைந்தது. தோணித்துறைக்கு மேற்கில் இன்று ‘றேவு’ என அழைக்கப்படும் இடத்தில் தோணிகள் கட்டப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளன.
‘றேவு’ என்றால் பொருள் என்னவென ஆய்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அண்மையில் நான் பழவேற்காட்டுக்குப் பயணம் செய்தபோது ‘தோணிறேவு’ எனும் கடலூரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அன்றிலிருந்து ‘றேவு’ என் மனதுக்குள் அலையடித்துக் கொண்டே இருந்தது.
அதன் பின் ‘பழவேற்காட்டிலிருந்து நீரோடி வரை’ எனும் நூலைப் படித்தேன். அதன் ஆசிரியர் வறீதையா ‘தோணிறேவை’ தோணி இறவு எனக் குறிப்பிட்டு அது அண்மைக் காலம் வரை தோணிகள் கட்டப்பட்ட ஊர் என்றும் தோணிகளை கட்டிய முஸ்லிம்கள் ஓடாவிகள் என்றும் அந்நூலில் குறிப்பிட்டிருந்தார்.
நான் இறவுக்கான பொருளை அகராதிகளில் தேடினேன். கிடைக்கவில்லை. கணினி ‘எல்லை’ என்றது. தோணி இறவு என்றால் தோணி எல்லை. ஒரு வகையில் சரி என்றாலும் முழுப் பொருளை அடையமுடியவில்லை.
முகநூலில் அறிவித்த போது மூத்த எழுத்தாளர் இலங்கையைச் சேர்ந்த சகோதரர் மானா மக்கீன் யாழ்பாணத்துக்கு தெற்கேயுள்ள யானை இறவைப் பற்றி பதிந்து அதன் ஆங்கில வாசகமான ‘ELEPHANT PASS’ என்பதையும் ஞாபக மூட்டினார். அப்படியென்றால் இறவின் பொருள் PASS - கடப்பது. தோணிகள் கடக்கும் இடம் தோணியிறவு என பொருளாகிறது.
மண்ணடி எனப் பெயர் இருக்கும் போதே நம்பட்டினம் மதரஸாபட்டினம் எனப் பெயர் பெற்றுள்ளது. சோனகர்களின் சேரி - மூர்தெரு. சில பள்ளிவாசல்களின் - அவற்றைச் சேர்ந்த மதரஸாக்களின் உருவாக்கத்தால் மதரஸா எனப் பெயர் பெற்றிருக்கிறது.
மதரஸாபட்டினத்துக்குள்ளேயே முத்தியால் பேட்டை, கொத்தவால் சாவடி, பெத்து நாயக்கன் பேட்டை என சில பகுதிகள். இவை மூன்றும் அதிகாரம் வகித்தோரின் பெயரை குறிப்பிடும் பெயர்கள்.
ஆங்கிலேயர் சென்னைக் குப்பத்தை விலைக்கு வாங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி அதற்கு ‘ஒயிட் டவுன்’ எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கேயிருந்த மண்ணடியையும் மேற்கிலிருந்த பேட்டைகளையும் சுவர் எழுப்பி செயிண்ட் ஜார்ஜ் டவுன் என அழைத்ததோடு ‘பிளாக்டவுன்’ எனவும் குறிபிட்டனர். நான்கு புறச் சுவர்களின் நான்கு மூலைகளில் கொத்தளங்கள் அமைத்து பாதுகாவலர்களை நியமித்தனர். அதன் எச்சமாகவே இன்றும் மூலக் கொத்தளம் எனும் பெயர் விளங்குகிறது.
மேற்கு புறச் சுவரை வரி வசூல் செய்து கட்டினர். அதனாலேயே இன்றும் மேற்குப் பகுதி சாலை ‘வால்டாக்ஸ் ரோடு’ என அழைக்கப்படுகிறது.
நான்கு பக்க சுவர்களும் பிரெஞ்சுக் காரர்களின் ஒரு படையெடுப்பின் போது உடைக்கப்பட்டு விட்டன. இன்றும் பெயர் சொல்லும் தெருக்களில் ஆங்கிலேயர் பெயர்கள் உள்ளன. இந்துக்களின் பெயர் சொல்லும் தெருக்கள் பலவும் ஆங்கிலேயரிடம் துபாஷாக - தரகராக - மொழி பெயர்ப்பாளர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள்.
இவற்றில் காசிச் செட்டி தெரு என்பது சாந்தோமில் மிகப் பெரும் வணிகராக விளங்கிய காசி வீரண்ணா பெயரை நினைவு கூரும் தெரு, கோல்கொண்டா முஸ்லிம் ஆட்சியாளரிடம் நட்புறவு கொண்டு வாழ்ந்த காசி வீரண்ணா இஸ்லாத்தைத் தழுவியதோடு மயிலாப்பூர் மசூதி தெருவில் ஒரு பளிவாசலையும் கட்டியுள்ளார்.
மண்ணடியின் கிழக்கில் ஜஹாங்கீர் தெரு, மரைக்கா லப்பைத் தெரு, வட மரைக்கார் தெரு, இபுறாஹீம் ஜி தெரு என முஸ்லிம்களின் பெயர்களில் தெருக்கள் உள்ளன. மேற்கில் முல்லா சாகிபு தெரு, இபுறாஹீம் தெருவோடு கொண்டித் தோப்பு பகுதியிலும் முஸ்லிம்களின் பெயர்களில் தெருக்கள் உள்ளன.
பெரிய மேட்டில் படா மஸ்ஜிதோடு அதைச் சூழ்ந்துள்ள தெருக்களில் முஸ்லிம்களின் பெயர்களில் பல தெருக்கள் உள்ளன. பல முஸ்லிம்களின் தோல்மண்டிகளும் உள்ளன.
பெரிய மேட்டுக்கு வட மேற்கே சூளை, பட்டாளம் பகுதிகள் உள்ளன. முதன் முதலில் செங்கல் சூளை உருவான பகுதியே சூளை என அழைக்கப்படுகிறது. இதையடுத்து பட்டாளம் உள்ளது. மிலிட்டரி-பட்டாளம் குவிக்கப்பட்டிருந்த பகுதியே பட்டாளம் என அழைக்கப்படுகிறது. இவ்விரு பகுதிகளிலும் பரவலாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
பட்டாளத்துக்கு மேற்கே தாதாஷா மகான் பகுதி உள்ளது. இங்கு தாதா ஷா எனும் சூஃபி ஞானி அடங்கியுள்ளார். அவர் பெயராலேயே இப்பகுதி அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கணிசமான அளவில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களின் தாய்மொழி உருது. இங்கு இரு மசூதிகள் உள்ளன.
தாதாஷா மகானுக்கு வட மேற்கில் ஜமாலியா நகர் உள்ளது. இங்கு மூன்று மசூதிகள் உள்ளன. இவற்றில் ஒன்றான ஜமாலியா மசூதியில் தான் ஜமாலியா அரபிக் கல்லூரி இயங்குகிறது. இதன் எதிரில் தான் ‘சமரசம்’ தமிழிதழ் அலுவலகமும் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையும் (IFT) பதிப்பகமும் உள்ளன. இவற்றுக்கு வடக்கே ஜமாலியா மேல்நிலைப் பள்ளி உள்ளது.
ஜமாலியா நகருக்கு வட மேற்கே பெரம்பூர் உள்ளது. இங்கு சில மசூதிகளும் உள்ளன. கணிசமான முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.
புரசைவாக்கத்தில் சில பள்ளிகளும் கணிசமான முஸ்லிம் குடும்பங்களும் உள்ளன. வணிகப்பகுதியான புரசையில் பல முஸ்லிம்களின் கடைகள் உள்ளன. மதார் ஷா துணிக்கடல் 1938 - இல் தொட்ங்கபட்டதாகும். சங்கிலித் தொடராக ஆயிஷாவின் துணிக்கடைகள் உள்ளன.
எழும்பூரில் புதுப்பேட்டையிலும் பல பள்ளிவாசல்கள் உள்ளன. எழும்பூர் பல திருமண மண்டபங்களைக் கொண்ட ஊர். புதுப்பேட்டை பழைய மோட்டார் சாமான்கள் விற்கும் கடைகளைக் கொண்ட பேட்டை. இங்கும் கணிசமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கடைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்கு சொந்தமானவை.
புதுப்பேட்டைக்கு தென் கிழக்கில் மவுண்ட் ரோடு மூஸா காதிர் தர்காவும் அதையடுத்த மக்கா மஸ்ஜிதும் உள்ளன. இவற்றுக்கு தென்கிழக்கில் தான் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் உள்ளன.
திருவல்லிக்கேணி பெரிய மசூதி ஆற்காடு நவாபுகள் கட்டியது. இதைச் சுற்றிலும் கணிசமாக முஸ்லிம்களின் பெயர்களைத் தாங்கிய தெருக்கள் உள்ளன. கணிசமான முஸ்லிம்களும் காலாதிகாலமாக வாழ்கின்றனர்.
பெரிய மசூதி வளாகத்தின் முன்புறம் நவாப்களின் குடும்பத்தினரும் சில மேதைகளும் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுடன் ‘காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப் சமாதியும் உண்டு.
ஜாம்பஜாரில் பாரதி சாலையில்தான் ‘அமீர் மஹால்’ எனும் ஆற்காட்டு நவாப்களின் அரண்மனை உள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள ‘எழிலகம்’ கூட ஆற்காட்டு நவாப்களின் இல்லமாக இருந்துதான்.
ஐஸ் ஹவுஸ், மீர் சாகிப் பேட்டை, கிருஷ்ணாம் பேட்டை, ராயப்பேட்டை ஆகிய இடங்களிலும் பல மசூதிகள் உள்ளன. இங்கெல்லாம் முஸ்லிம்களும் கணிசமாக வாழ்கின்றனர்.
மயிலாப்பூரில் மட்டும் நான்கைந்து மசூதிகள் உள்ளன. இப்பகுதியில் முஸ்லிம்கள் திட்டுத் திட்டாக வாழ்கின்றனர்.
ஆயிரம் கதைகளைச் சொல்லக் கூடியது ஆயிரம் விளக்கு. இங்குள்ள ஷியா முஸ்லிம்களின் மசூதி அண்ணா சாலையையும் பீட்டர்ஸ் சாலையையும் இணைக்கிறது.
தக்காணத்தில் நடந்த தலைக்கோட்டைப் போருக்குப் பின் கி.பி.1565-இல் விஜயநகர சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது. பாமினி அரசுகள் கர்நாடகத்தையும் தம் கைக்குள் போட்டன. பாமினி அரசுகளில் ஒன்றான பீஜப்பூர் செஞ்சியைப் பிடித்தது. கோல்கொண்டா மதரஸா பட்டினம் வரை வந்தது. (1647 - 1687)
கோல்கொண்டா அரசின் பழைய பெயர் வாரங்கல். புதிய பெயர் நிஜாமிய அரசு. நிஜாமிய அரசுக்கு முந்தைய கோல்கொண்டா அரசு மதரஸா பட்டினத்திற்கு வந்தபோது விஜயநகர அரசின் உதிரி ஆட்சி பூந்தமல்லியிலும் கிளை பரப்பி சந்திரகிரியில் இருந்தது.
பூந்தமல்லி நிர்வாகியாக தாமரல குடும்பத்து வெங்கடாத்ரி இருந்தார். அவரிடமிருந்தே ஆங்கிலேய தலைமை அதிகாரி ஃப்ரான்சிஸ் டே. 1639 - இல் சென்னைக்குப்பப் பகுதியை வணிகம் செய்யவும் பண்டக சாலை அமைக்கவும் உரிமை பெற்றார்.
கி.பி.1647 - இல் கோல்கொண்டா பிரதிநிதி மதரஸாபட்டினம் வர ஆட்சி மாற்றம். நிர்வாகம் செய்யவும் அரசுப் பணியாற்றவும் ஆயிரக் கணக்கானவர்கள் கோல்கொண்டாவிலிருந்து மதரஸா பட்டினத்திற்கு வந்தார்கள்.
கச்சேரி தெருவில் அரசு அலுவலகங்கள் ஆயிரம்விளக்கில் குடியிருப்புகள் என மதரஸாபட்டினம் விரிவடைந்த நிலையில் கட்டப்பட்டதுதான் ஆயிரம் விளக்கு அப்பாஸி ஆஸர் கானா பள்ளிவாசல். இது ஷியா முஸ்லிம்களின் மசூதி என்பதால் முஹர்ரம் பண்டிகை இங்கு மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி முஸ்லிம்களோடு மாற்று மதத்தினரும் பண்டிகையை இங்கு கொண்டாடியதால் இப்பகுதி ஆயிரம் விளக்கு எனப் பெயர் பெற்றது.
ஆயிரம்விளக்கில் உருதும் தமிழும் பேசும் முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர். கிரீம்ஸ் சாலை முனையில் ஒரு மசூதியும் ஜெமினி அண்ணா பாலம் தாண்டி ஒரு மசூதியும் உள்ளன.
அண்ணா பாலத்தின் கீழுள்ள மசூதியின் பெயர் சர்பு நிஷா பேகம் சாகிபா பள்ளிவாசல். இது நவாப் குடும்ப மகளிர் கட்டிய மசூதி, மேலும் மூன்று மசூதிகள் நவாப் குடும்பப் பெண்களால் கட்டப்பட்டுள்ளன. அவை : நந்தனத்திலுள்ள நவாப் பஜீலத்துல் நிஷா பேகம் சாகிபா மசூதி, ராயப்பேட்டை கபர்ஸ்தானிலுள்ள அமீரு நிஷா பேகம் சாகிபா மசூதி, கிருஷ்ணாம் பேட்டையிலுள்ள ஹைருன்னிசா பேகம் சாகிபா மசூதி.
இன்றைய சைதாப்பேட்டையின் அசல் பெயர் செய்யத் கான் பேட்டை. ஆற்காடு நவாப் அன்று செய்யத்கான் எனும் நிர்வாகிக்கு அளித்த பகுதி செய்யத் கான் பேட்டையானது. செய்யது கான் தமக்களித்த நிலப்பரப்பை நெசவாளிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் பகிர்ந்தளித்தார். அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக் கொண்டு மசூதி ஒன்றையும் கட்டுவித்தார். அம்மசூதியே நவாப் சாதத்துல்லா கான் மசூதி.
சைதாப்பேட்டைக்கு மேற்கில் உள்ளது ஜாபர்கான் பேட்டை. வடக்கில் உள்ளது மாம்பலம். மாம்பலத்தின் விழியே அதன் கிழக்கேயுள்ள தியாகராய நகர். இந்நகர் நீதிக் கட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதால் அவர்களின் கட்சிப் பிரமுகர்களான உஸ்மான், ஹபீபுல்லாஹ், மூசா, பசுலுல்லாஹ் போன்றவர்களின் பெயர்களால் தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாம்பலத்திற்கு வடக்கே கோடம்பாக்கம் அமைந்துள்ளது. ஆற்காடு நவாபுகளின் குதிரை லாயங்கள் இங்கு அமைந்திருந்ததால் குதிரையைக் குறிக்கும் ‘கோடக்’ எனும் உருதுச் சொல்லால் அமைந்தது இப்பகுதி. இப்பகுதியின் தொடக்க ஊராக இருப்பது புலியூர். புலியூர் அக்காலத்தில் மதரஸா பட்டினத்துப் புறநகர்ப் பகுதி. இங்கு மசூதியோடு கபர்ஸ்தானும் இருக்கிறது.
கோடம்பாக்கம் பாலத்தின் மேற்குப் பகுதியின் கீழ் மசூதி உள்ளது. இதனருகில்தான் ‘ஜக்கரியா காலனி’ உள்ளது. ஜகரியா எனும் பெரும் தோல் வணிகரின் நிறுவனம் இருந்த பகுதி இது. இதன் வடக்கில் சூளைமேடு உள்ளது.
தொடக்கத்தில் சுபேதார் தோட்டம் உள்ளது. வடக்கில் வகாப் தெரு அப்துல்லாஹ் தெரு என முஸ்லிம்களின் பெயர்களைக் கொண்டது சூளைமேடு.
குதிரைகளுக்கான லாயங்கள் கோடம்பாக்கத்தில் இருந்தது போல் ஒட்டகங்களுக்கான தரிப்பிடமும் இருந்தது. அந்த தரிப்பிடம் இருந்த இடம் இன்று ஒட்டக பாளையம் என அழைக்கப்படுகிறது. வடபழநி நாற்சந்திக்கு தெற்கே நூறடி சாலையில் அசோக்நகரின் தொடக்கத்தில் அப்பகுதி உள்ளது.
கோல்கொண்டா சுல்தான்களுக்குப் பின் 1687 - இல் மதரஸாபட்டினம் மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. செஞ்சிக் கோட்டையைப் பிடித்த ஆலம்கீர் அவுரங்கசீபின் தளபதி ஜுல்பிகார் அலிகான் கர்நாடக நவாப் ஆனார்.
அதன்பின் தாவூது கான் சாதத்துல்லா கானின் ஆட்சிக் காலத்திலேயே ஆஸிப்ஜா எனும் நிஜாமுல் முல்க் ஹைதராபாத்தின் நிஜமாகி தனியரசு கண்டார்.
பின்னர் நிஜாம்கள் மாற ஆர்காட்டு நவாப்களும் மாற வாலாஜா முகம்மது அலி ஆற்காட்டு நவாப் ஆனார். இவர் ஆங்கிலேயரைக் கொண்டாடியதால் தம் இருப்பிடத்தை மதரஸாபட்டினத்திற்கே மாற்றிக் கொண்டார்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் அரண்மனையை அமைத்துக் கொண்டவர் பின் அங்கிருந்து வெளியேறி அமீர்மகாலில் குடிபுகுந்தார்.
பின்னர் 1647 - இல் கர்நாடகத்தில் காலடி எடுத்துவைத்த கோல்கொண்டா, 1687 - இல் தடம்பதித்த டெல்லி, 1724 - இல் வந்த ஹைதராபாத் ஆற்காடு என மதரஸாபட்டினம் 1799 - இல் மைசூர் புலி திப்பு சுல்தான் இறக்கும் வரை ஏறத்தாழ 15 ஆண்டுகள் முஸ்லிம்களின் கரங்களில் இருந்தது.
தொடக்க காலத்தில் மண்ணடிப் பகுதியில் முஸ்லிம்கள் குடியேறினார்கள். அவர்கள் தென்னகத்தின் கடலோரப்பட்டினக்களைச் சேர்ந்தவர்கள். ஆயிரம் விளக்கு பள்ளிவாசலைச் சுற்றி குடியேறிவர்கள் கோல்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள், மொகலாயர் காலத்திலும் தக்கான முஸ்லிம்கள் மதரஸாபட்டினத்திற்கு வந்தார்கள்.
குதிரைகளிலும் குதிரை வண்டிகளிலும் நேரடியாக வடக்கிலிருந்து வந்தவர்களைத் தவிர மதரஸாபட்டினத்திற்கு கப்பலில் வந்தவர்கள் பெருந்தொகையினர். டெல்லியிலிருந்தும் கோகொண்டாவிலிருந்தும் குதிரை வண்டிகளிலும் ஆந்திரத்து மசூலிப்பட்டினத்திற்கு வந்தவர்கள் அங்கிருந்து கப்பல்கள் மூலமும் மதரஸாபட்டினம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இவ்வாறுதான் மதரஸாபட்டினம் முஸ்லிம்களின் பட்டினமாக மாறியிருக்கிறது.
மதரஸாபட்டினம் - கோல்கொண்டா - ஆக்ரா - டெல்லி என தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒரு முக்கியமான அளுமை தளபதி ஜியாவுத்தீன் கான். ஆலம்கீர் அவுரங்கசீபின் ஆட்சிக்குப்பின் மூத்த மகன் முஆஜம் பகதூர் ஷா எனும் பெயரோடு சக்கரவர்த்தி ஆனார். பகதூர்ஷாவின் அமைச்சர்களில் ஒருவராகவும் விளங்கிய ஜியாவுதீன் கானின் மனைவி மதராஸ்பட்டின சாந்தோமைச் சேர்ந்தவர்.
அப்போதைய மதரஸாபட்டின ஆளுநர் பிட் ஜியாவுதீன்கானோடு நல்லுறவு வைத்திருந்தார். அவ்வுறவின் மூலம் ஆங்கிலேயர் தம் பழைய பிராமணங்களை நீட்டித்துக் கொண்டார். புதிய பிராமணங்களும் செய்து கொண்டனர். ஐந்து கிராமங்களை புதிதாய்ப் பெற்றனர். டெல்லி மாமன்னர் கேட்ட பொருள்களையெல்லாம் மசூலிப்பட்டினத்திற்கு அனுப்பி அங்கிருந்து டெல்லி செல்ல குதிரை வண்டிகளையும் ஏற்பாடு செய்தனர். (1708)
தளபதி ஜியாவுதீன் கானின் புதல்வரே ஆஸிப்ஷா. நிஜாமுல் முல்க் எனப் பட்டம் பெற்ற ஆஸிப் ஷா பகதூர்ஷா காலத்தில் தக்காண ஆளுநராகவும் டெல்லி அமைச்சராகவும் இருந்தார். 1708 - முதல் 1724 வரை டெல்லியோடு இணைப்பில் இருந்த நிஜாமுல் முல்க் 1724 இல் நிஜாமிய அரசை ஹைதராபத்தில் உருவாக்கினார், இவர் மதரஸாபட்டின மாதரசியின் மைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
உருதுவையும் தமிழையும் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மதரஸாபட்டினத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் வேறு வேறு மொழி பேசும் முஸ்லிம்களும் பட்டினத்தில் கணிசமாக வாழ்கின்றனர்.
மலையாளம் பேசும் முஸ்லிம்கள் ஆங்காங்கு வாழ்கின்றனர். அவர்களுக்கான அமைப்புகளும் மதராஸில் உண்டு. அவற்றில் முக்கியமானது மலபார் முஸ்லிம் அசோசியேசன். இதன் தலைமையகம் எழும்பூர் கென்னட் சாலையில் உள்ளது. அங்கு ஒரு மசூதியும் தங்கும் விடுதியும் உள்ளன. பல்வேறு வணிகங்கள் செய்யும் அவர்கள் முக்கியமாக மரவாடிகளும் உணவு விடுதிகளும் வைத்துள்ளனர்.
அதேபோல் மதரஸாவில் காலாதிகாலமாய் வாழ்வோர் மேமன் முஸ்லிம்கள். இவர்கள் குஜராத்தின் கட்ச் பகுதியிலிருந்து வந்து மதராஸில் வாழ்பவர்கள். பெரும் வணிகங்களும் முக்கியமாக துணி வணிகமும் செய்தனர். இவர்கள் ஈவினிங் பஜார், சைனா பஜார், கொத்தவால் சாவடி பகுதிகளில் வணிகப் பெரும் புள்ளிகளாக வாழ்ந்தவர்கள்.
இவர்கள் கட்டிய பள்ளிவாசல்கள் கிடங்குத் தெருவிலும் ஆண்டர்ஸன் தெருவிலும் உள்ளன. ஆண்டர்ஸன் தெரு பள்ளிவாசல் இன்றும் மேமன் மசூதி எனவே அழைக்கப்படுகிறது. ‘கட்ச்’ மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் உருது மொழியும் பேசுகின்றனர். பெரும்பாலானோர் கல்விக்கு முதலிடம் கொடுப்பதால் குஜராத்தி, பார்ஸி, அரபி, ஆங்கிலம், தமிழ் என பன்மொழிப் புலமையுடையோராய் திகழ்கின்றனர்.
இவர்கள் கட்டிய ‘முஸாபர்கானா’ கொத்தவால்சாவடி சின்னத் தம்பித் தெருவில் உள்ளது. குறைந்த வாடகையில் வெளியூர்க்காரர்கள் தங்க சிறந்த இடமாக முஸாபர்கானா விளங்குகிறது.
காங்கிரஸ், கிலாபத் இயக்கங்களில் பங்கேற்ற இவர்கள் பெருங்கொடையாளர்கள். ‘ஹோம் ரூல்’ இயக்கத்திலும் இவர்களில் சிலர் பங்கேற்றுள்ளனர்.
மதராஸ் ராஜதானியில் அமைந்த இடைக்கால அரசில் 1916 - இல் யாக்கூப் ஹஸன் சேட் என்ற மேமன் பிரமுகர் உறுப்பினராகவும் 1941 - இல் அமைந்த ராஜாஜி மந்திரி சபையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர்தான் மதரஸா பட்டினத்திற்கு குடிநீர் தரும் பூண்டி நீர்த் தேக்கத்தை தெரிவு செய்தவர். இவருடைய துணைவி கதீஜா பீவி 1937 - இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

மேமன் முஸ்லிம்களைப் போலவே மதரஸாபட்டினத்தில் போரா முஸ்லிம்களும் வாழ்கின்றனர். இவர்கள் மண்ணடி, பிராட்வே பகுதிகளில் வன்பொருள் (Hardwares) தொழிலகங்கள் நடத்திவருகின்றனர். இவர்களின் குடியிருப்புகள் மண்ணடிப் பகுதியிலேயே உள்ளன. இங்கேயே அவர்களின் இரு வணக்கத்தலங்களும் உள்ளன.
இவர்களும் குஜராத்திலிருந்து வந்து குடியேறியவர்களே. ‘போஹ்ரா’ என்ற குஜராத்தி சொல்லுக்கு வணிகர்கள் என்று பொருளாகும். ஷியா - சன்னிகளான இவர்கள் ஆதியில் விவசாயிகளாக இருந்தவர்கள்.
ஷியாக்களில் பெரும்பாலோர் இஸ்மாயிலி பிரிவினர். மேலும் பல பிரிவுகள் உள்ளன. இவர்கள் ஒரு தலைவரின் கீழ் அமைப்பாக உள்ளனர். தலைவருக்கு போராக்கள் தலை சாய்த்து முகமன் கூறுகின்றனர். இவர்களில் பிரபலமான அஸ்கர் அலி எஞ்சினியர் தலைவருக்கு தலை சாய்த்தல் போன்றவற்றால் போராக் குழுவிலிருந்து வெளியேறி இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.
வேற்று மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும் மதராஸ் பட்டினத்தின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தற்போது வில்லிவாக்கம் சிட்கோ நகரில் கணிசமாக வாழ்கின்றனர்.
பல்வேறு முஸ்லிம்கள் பல்வேறு வாழ்க்கைத் தரங்களில் வாழ்ந்தாலும் மிக ஏழ்மையான பல முஸ்லிம்கள் சில குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். வண்ணாரப்பேட்டை லாலா குண்டாவிலும் பெரம்பூரின் ஓரங்களிலும் புளியந்தோப்பிலும் திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா பகுதியிலும் கிருஷ்ணாம்பேட்டை பகுதியிலும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்கள் வாழ்கின்றனர்.
ஏழை எளியவராய் பாமரராய் வாழும் இங்குள்ள முஸ்லிம்களைத்தான் சச்சார் கமிஷன் அஷ்ரப், அஜ்லப், அர்ஸல் என மூன்று வித நசுக்கப்பட்டவர்களாய் அடையாளம் காட்டுகிறது. இவர்களில் பெரும்பாலோர் பீடி முறங்களை மடியில் ஏந்தியவர்கள். பெண்கள் பீடி சுற்ற, ஆண்கள் டீ வாங்கி வர, பிள்ளைகள் பீடிகளின் வாய்மூட லேபிள் ஒட்ட என வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டவர்கள்.
வறுமையைப் போக்க பீடி சுற்றக் கற்றுக் கொண்டவர்கள் தம்மையும் தொலைத்து தம் வருங்காலத்தையும் சிதைத்துக் கொண்டார்கள். படிப்பறிவில்லாத அவர்கள் தம் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பாதவர்கள். கிடைத்த கூலியைத் தவிர அவர்களுக்குக் கேட்காமல் போனசும் கிடைத்தது. அது காசநோய்.
ஆங்கிலேயர் காலத்தில் கல்வியை இரண்டாக்கினர் முஸ்லிம் மேதாவிகள்… இம்மை மறுமைக் கல்வியெனப் பிரித்து வழங்கிய பத்வா - மார்க்கத் தீர்ப்பினால் சமுதாயம் கல்வியை இழந்தது போல் பீடி சுற்றுவதாலும் பேரிழப்பைச் சந்தித்தனர் முஸ்லிம்கள்.
காலப்போக்கில் விழிப்படைந்த முஸ்லிம் சமுதாயம் கல்வியைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட்டது. கரையேறிய சமுதாயத்தை உரிய வழியில் அழைத்துச் செல்லாத தலைவர்கள் தாமும் தடுமாறி சமுதாயத்தையும் தடுமாறச் செய்து கொண்டுள்ளனர். இயக்கங்களால் பிரிந்து கிடக்கும் சமுதாயம் மீண்டெழப் பிரார்த்தனை செய்வதோடு பாடாற்றுவோம். பண்பாட்டுப் பாட்டையில் பயணிப்போம்.
ஊர்வலம் தொடரும்…
தொடர்புக்கு : 9600989963

திங்கட்கிழமை, 07 மே 2018 14:29

தொழில் செய்வோம் வளம் பெறுவோம்-2

Written by

வெற்றியின் சூத்திரமான முதல் மூல மந்திரம் “தன்னம்பிக்கை (Self-confidence)”
சாதனையாளர்களின் தலைவாசல் – தன்னம்பிக்கை
பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்நாள் முழுவதும் உயிர் வாழ சுரக்கும் வற்றாத ஜீவநதி-யாக இரத்தத்தை இறைவன் பிறப்பிலேயே உருவாக்கி உள்ளான். அது போல் எல்லா மனிதர்களையும் இறைவன் படைக்கும் போதே தன்னம்பிக்கை விதையை மனதில் விதைத்துள்ளான். விதைக்கப்பட்ட அனைத்து விதைகளுக்கும் இறைவன் பாரபட்சமின்றி ஒரே காற்றையும், நீரையும் தந்துள்ளான். உயிர்ப்புள்ள விதைகள் மட்டுமே மண்ணை கிழித்துக் கொண்டு வெளி வந்து செடியாகி, மரமாகி, விருட்சமாகி பரந்து விரிந்து பயன் அளிக்கின்றது. அதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆற்றல், அறிவு திறமைகள் வாய்ப்புகள் போன்றவற்றை தன்னம்பிக்கை விதைகள் பெற தந்துள்ளான்.
ஒரு முட்டை வெளியில் இருந்து உடைபட்டால் ஒரு உயிர் போகின்றது. ஆனால் உள்ளுக்குள் இருந்து உடைபட்டு வெளிவந்தால் ஒரு குஞ்சாக ஓர் உயிராக வெளிவருகின்றது.
அதுபோல் தாழ்வு மனப்பான்மை, முடியாது என்ற முயலாமை போன்ற மனத்தடைகளை உடைத்துக் கொண்டு, தன்னம்பிக்கை கொண்டு “இதுவும் கடந்து போகும்” என்ற எண்ணத்துடன் செயல்பட்ட சாதனைப் பெண்களில் ஒருவர் தான் கோவை கணபதி நகர் பகுதியில் டெக்ஸ்டைல் இயந்திரங்களுக்கான ரப்பர் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிப்புத் தொழிற் சாலை நடத்திக் கொடிருப்பவர் திருமதி ஷோபனா அவர்கள். மகிழ்வான குடும்ப வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் தன் கணவரை இழந்துவிட்டார். வாழ்க்கைத் துணைவரை இழந்து உறவுகளை இழந்து பல்வேறு கேவலங்கள் அவமானங்களைப் பெற்ற நிலையில் தன்னமிபிக்கை என்ற கடிவாளத்தை உயர்த்திப் பிடிதன்னையும் வளர வைத்து தன்னைப் போல் பலரையும் உயர வைத்த சாதனை பெண்ணின் தாரக மந்திரம் தன்னம்பிக்கைதான்.
ஓர் பழத்தில் எத்துனை விதைகள் என்பதை எல்லோராலும் எண்ணி விட முடியும். ஆனால் ஓர் விதைக்குள் எத்தனை மரங்கள் கனிகள் என்பதை யாராலும் கற்பனை கூட செய்ய முடியாது.
அப்படி சிறு விதைக்குள் இருந்து விருட்சமாக வெளி வந்தவர்கள் தான் ஓசூர் அருகில் கொண்டபள்ளி கிராமப் பகுதியில் செயல்பட்ட பெண்கள் சுய உதவி குழுக்களில் இருந்து வெளி வந்த 60 பெண்கள் கொண்ட ஒரு குழு சிறு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட சப்பாத்தி வணிகம் இன்று தினம் தோறும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சப்பாத்திகளை விற்பனை செய்யும் அளவிற்கு உயர்ந்து உள்ளார்கள். அசாதாரணமான வெற்றிகளை பல சாதரணமானவர்கள் பெறுவதற்கு மூல மந்திரம் தன்னம்பிக்கைதான் தான்.
ரூபாய் நோட்டு எத்துனை முறை மடித்தாலும் கசக்கினாலும் கிழிந்தாலும் தன் மதிப்பு மாறுவதில்லை. அதுபோல் தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கும் எத்துனை கேவலங்கள் அவமானங்கள் நடந்தாலும் தன் மதிப்பு மாறாமல் இருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கோவை முருகானந்தம் அவர்கள் பெண்களுக்கான மிகக்
குறைந்த விலையில் தரமான சானிடரி நேப்கின்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் செயல்பட துவங்கிய போது பல்வேறு கேவலங்கள், அவமானங்கள், முடியாது என்ற சொற்களை குடும்ப உறவுகள், சமூகத்தில் பெற்ற போதும் கூட முடியாது என்பது இயலாதது மட்டுமே, நம்மால் முடியாதது யாராலும் முடியாதது. யாராலும் முடியாதது நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை எண்ணத்தை உள்ளத்தில் கொண்டு இன்று 10 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு தந்து, நாட்டில் 27 மாநிலங்களில், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மலிவான விலை தனித் தரமான சானிடரி நேப்கின்களை விற்பனை செய்யும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
பொருட்களை, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி (Value added products) விற்பனை செய்தால் தான் குடும்ப பொருளாதாரமும் மதிப்பு கூடும் என்ற எண்ணத்தில் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி கண்டுள்ளவர்கள் இளநீரை மதிப்பு கூட்டும் பொருட்களாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் திருச்சி காஜா மொய்தீன் அவர்களும், பால் பொருட்களை மதிப்பிக் கூட்டும் பொருட்களாக தயாரித்து விற்பனை
செய்து கொண்டிருக்கும் தஞ்சாவூர் வல்லத்தைச் சேர்ந்த ஷகிலா பானு தம்பதியினரும் இவர்கள் போல் தனி நபர்களாக, குழுக்களாக தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழகத்தில் பலநூறு தொழில் துறை சாதனையாளர்களை ஆதாரத்துடன் அறிந்து வைத்துள்ளேன். நேற்றைய கேள்விக் குறியாளர்கள் இன்றைய ஆச்சரியக்குறிகளாக உள்ளார்கள்.
நேற்றைய நிழல், இன்றைய நீளும்… நாளைய சரித்திரம் என்பதை மெய்ப்பிக்கும் முதல் மூல மந்திரம் தன்னம்பிக்கை…..

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018 12:50

முதல் தலைமுறை மனிதர்கள் 14

Written by

சேயன் இப்ராகிம்

காதிமே மில்லத் திருச்சி K.S அப்துல் வகாப் ஜானி
திருச்சி மாவட்டம் பல சுதந்திரப் போராட்ட வீரர்களையும், சமுதாயச் சேவையாளர்களையும் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்துள்ளது. காஜா மியான் இராவுத்தர், ஸையத் முர்த்துஸா ஹழ்ரத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களும், மறுமலர்ச்சி ஆசிரியர் A.M. யூசுப், K.S. அப்துல் வஹாப் ஜானி, A.K. பாஷா, எழுத்தரசு A.M. ஹனீப், குலாம் ரசூல், மதனி போன்ற சமுதாயச் சேவையாளர்களும் இம்மாவட்டத்தைச் சார்ந்தவர்களே! இவர்களுள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவிகள் வகித்த திருச்சி K.S. அப்துல் வஹாப் ஜானி சாகிப் அவர்களைப் பற்றி இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
பிறப்பு - கல்வி:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் திருச்சி நகரில் பல பீடிக் கம்பெனிகள் செயல்பட்டு வந்தன. பெரும்பாலான பீடிக் கம்பெனிகளின் அதிபர்களாக முஸ்லிம்களே இருந்தனர். பீடிசுற்றும் தொழிலிலும் முஸ்லிம்களே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி நகரில் செயல்பட்டு வந்த பீடிக் கம்பெனிகளில் குறிப்பிடத்தக்கது மான்மார்க் பீடிக் கம்பெனியாகும். அதன் உரிமையாளர் அப்துல் ஸமது சாகிபின் இரண்டாவது மகனான ஜானிபாய் என்றழைக்கப்பட்ட அப்துல் வஹாப் 14.11.1922ல் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை திருச்சி அரசினர் இஸ்லாமிய உயர் நிலைப்பள்ளியில் கற்றுத் தேறிய ஜானிபாய், பட்டப்படிப்பிற்காக அந்நகரிலிருந்த செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். எனினும் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. அவரது தகப்பனார் அப்துல் ஸமத் சாகிப் 1942ஆம் ஆண்டு திடீரென மரணமுற்றதால், பீடிக் கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக கல்லூரிப் படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பினை இளம் வயதிலே ஏற்றுக் கொண்டார்.
அரசியல் ஈடுபாடு:
பீடிக் கம்பெனியின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அவருக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்தது. அப்போது அகில இந்திய முஸ்லிம் லீக் மிகவும் விறுவிறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போதிருந்த பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்களைப் போல் அவரும் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார். முஸ்லிம் லீக் நடத்திய ஊர்வலங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டார். 1946ஆம் ஆண்டு திருச்சி நகர முஸ்லிம் லீகின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதே ஆண்டு திருச்சி மாவட்ட முஸ்லிம் லீகின் பொதுக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது கட்சிப்பணிகள் தீவிரமடைந்தன. நாட்டுப் பிரிவினைக்குப் பின்னர், இந்திய நாட்டு முஸ்லிம்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து தனது பணிகளைத் தொடர்ந்தார். பிரிவினைக்குப் பின்னர் முதன் முதலாக கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு பங்களா பணிமனையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்து கொண்டார்.
1958 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 மற்றும் 12 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாடு அக்கட்சியின் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பின்னர் சற்றுத் தொய்வடைந்திருந்த அக்கட்சி இம்மாநாட்டிற்குப் பின்னர் புத்துயிர்பெற்றது. தமிழகமெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவராக ஜானி சாகிப் பொறுப்பு வகித்து மாநாட்டின் வெற்றிக்காகப் பெரிதும் உழைத்தார். அதே ஆண்டு தஞ்சை மாவட்டம் அய்யப்பேட்டையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டிலும் கலந்து கொண்டார். இதன் பின்னர் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 மற்றும் 18தேதிகளில் சென்னை நகரில் காயிதேமில்லத் தமைமையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். திருச்சி மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளராகத் தேர்ந்தெடுக்கபட்ட அவர் அப்பதவியில் பல ஆண்டுகள் நீடித்தார்.
சட்டமன்ற மேலவை உறுப்பினர் (M.L.C)
தமிழக அரசியலில் ஒரு திருப்பமாக, அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தி.மு.கவும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கும் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்த கொண்டு போட்டியிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலுக்கு முன்னர் இரு கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும். பாராளுமன்றத்திற்கும், தமிழக சட்டமன்றத்திற்கும் சேர்த்து நடைபெற்ற இந்தப் பொதுத் தேர்தலில் முஸ்லிம் லீகிற்கு இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளும், ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. எனினும் இந்தத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கும் சட்ட மன்றத்திற்கும் போட்டியிட்ட முஸ்லிம்லீக் வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெறவில்லை இதனால் முஸ்லிம் லீக் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் இடம் பெறாவிட்டாலும், சட்டமன்ற மேலவையிலாவது (M.L.C) இடம் பெற்று சமுதாய மக்களின் குரலை ஒலிக்க வேண்டும் என்று கருதிய மாநிலத் தலைமை தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணாவைச் சந்தித்து சட்டமன்ற மேலவையில் முஸ்லிம்லீகிற்கு ஒரு இடம் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தது. இதனை அண்ணாவும் ஏற்றுக் கொண்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மேலவை உறுப்பினர்களுக்கான ஒரு இடத்தை முஸ்லிம்லீகிற்கு ஒதுக்கினார். இந்த இடத்திற்கு யாரும் எதிர்பாராதவிதமாக, ஜானிபாயை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்தது. அவரும் வெற்றிபெற்று மேலவை உறுப்பினரானார். 1962ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டுவரை அவர் மேலவை உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் அவர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1974ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 1974ஆம் ஆண்டு மேலவைக்கு நடைபெற்ற தேர்தலின் போதும் முஸ்லிம்லீக் மூன்றாவது முறையாகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தது. எனவே அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு மேலவை உறுப்பினரானார். மொத்தம் 18 ஆண்டுகள் அவர் தொடர்ந்து சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி வகித்துச் சாதனை புரிந்தார். மேலவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், பக்தவத்சலம், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய ஐந்து தலைவர்கள் தமிழ் நாட்டின் முதல்வர்களாக இருந்துள்ளனர். இந்த ஐந்து முதலமைச்சர்களுடனும் அவர் நெருங்கிய தோழமையும் நட்பும் கொண்டிருந்தார். 1974ஆம் ஆண்டிற்குப்பிறகு நடைபெற்ற சட்டமன்ற மேலவைத் தேர்தலில் முஸ்லிம் லீகின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வடகரை பக்கர்சாகிப் மற்றும் J.M. மியாக்கான் சாகிப் ஆகியோருடன் இணைந்து ஜானிசாகிப் பணியாற்றினார்.
தனது 18ஆண்டுகள் மேலவை உறுப்பினர் பதவிக் காலத்தில் ஜானிபாய் பல்வேறு பொதுப் பிரச்சனைகளுக்காகவும் முஸ்லிம்களின் நலன்கள், உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் பேசியுள்ளார். பல்வேறு மானியப் கோரிக்கைகள். சட்ட முன்வடிவுகள், மசோதாக்கள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், ஒத்திவைப்புத் தீர்மானங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பேசுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்புகளையெல்லாம் அவர் நன்முறையில் பயன்படுத்திக் கொண்டார். அவரது அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, கண்ணியமான அணுகுமுறை அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.
மாநில முஸ்லிம்லீக் தலைவர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராகவும், தமிழ் மாநிலத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் 5.4.1972 அன்று மரணமுற்றார். அவருக்குப் பதிலாக மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டதால் ஒரு இடைக்கால ஏற்பாடாக மாநிலத் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்த தென்காசி முதலாளி மு.ந.அப்துர் ரஹ்மான் சாகிப் தலைவராக நியமிக்கப்பட்டார். (அவர் 6.4.72 முதல் 11.5.72 வரை பதவி வகித்தார்.) மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையான பொதுக்குழுக் கூட்டம் 12.05.1972 அன்று சென்னையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில லீகின் தலைவராக ஜானி சாகிப் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத் தலைவராக ஏ.கே.ஏ. அப்துல் சமது சாகிப் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சியின் முன்னணிப் பிரமுகர்களும், தொண்டர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஜானி சாகிப் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏ.கே.ஏ. அப்துல் ஸமது சாகிபை எதிர்த்து காயிதே மில்லத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தயாராக இருந்ததாகவும், எனவே போட்டியைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சமரச ஏற்பாடாக ஜானி பாய் தேர்ந்தெடுக்கபட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜானிபாய் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். பொறுப்புக்கு வந்து ஓராண்டுக்குப்பின்னர் அதாவது 1973 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை நகரில் மாநில லீகின் மாநாட்டை அவர் வெற்றிகரமாக நடத்தினார். இம் மாநாட்டில் லீகின் தேசியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட், கேரளச் சிங்கம் சி.ஹெச். முகம்மது கோயா, தளபதி திருப்பூர் முகையதின் சாகிப், சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துல் ஸமது சாகிப். அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இம்மாநாட்டிற்கு வசூலான தொகையில் செலவு போக மிச்சமிருந்த ரூ.45ஆயிரம் சென்னை மரைக்காயர் தெருவில் செயல்பட்டு வரும் மாநில லீக் தலைமையத்தின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியை சிறப்பாக வழிநடத்திய பெருமை ஜானி சாகிபுக்கு உண்டு. எனினும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அவர், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி 1975ம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவரது பதவி விலகலையடுத்து 12.2.1975 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துல் சமது சாகிப் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஜானி பாய் 12.05.1972 முதல் 13.05.1975 வரை தலைவராகப் பொறுப்பு வகித்தார்.)
தோல்வியும் பிளவும்:
1968ஆம் ஆண்டு லீகின் உள்கட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அதன்படி 29.9.1968 அன்று திருச்சி மாவட்ட மு°லிம் லீக் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஜானி சாகிப் மற்றும் பி.ஹெச். நஸீருத்தீன் சாகிப் ஆகியோர் ஒரு அணியாகவும். மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப் ஆதரவாளர்களான ஏ.கே. ஜமாலி சாகிப் மற்றும் ஹெச்.எம்.சுல்தான் சாகிப் ஆகியோர் ஒரு அணியாகவும் பதவிகளுக்குப் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஜானி சாகிப் வெற்றி வாய்ப்பை இழந்தார். மறுமலர்ச்சி ஆசிரியர் யூசுப் அணியைச் சார்ந்த ஹெச். எம். சுல்தான் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் திருச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் மாநில அளவில் கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. தேர்தல் நடைபெற்று முடிந்த மூன்று தினங்கள் கழித்து மாநில செயற்குழுக் கூட்டம் அக்டோபர் மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம்.யூசுப். ஏ.கே. ஜமாலி சாகிப், ஏ.கே. பாஷா உள்ளிட்ட ஏழுபேர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். (கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஏ.எம். யூசுப் பின்னர் தமிழ்நாடு முஸ்லிம்லீக் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி சில ஆண்டுகள் நடத்திவிட்டு பின்னர் முஸ்லிம்லீகில் இணைந்தார். அது தனி வரலாறு.) இந்த நடவடிக்கைக்குப் பின்னர் 29.9.68 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை ரத்துச் செய்த மாநிலத் தலைமை 17.11.68 அன்று மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இத்தேர்தலில் ஜானி சாகிப் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுப் பணிகள்
சொந்தத் தொழில், அரசியல் பணிகள் தவிர திருச்சி நகரில் பல்வேறு பொது நல அமைப்புகளிலும் ஜானிபாய் அங்கம் வகித்து மக்கள் பணியாற்றினார். திருச்சியில் சிறந்த சமுதாய நிறுவனமாகத் திகழ்ந்திடும் முஸ்லிம் லிட்டரரி சொசைட்டி (இலக்கிய சங்கம்) யின் தலைவராக 1953ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். திருச்சியிலுள்ள ஆற்காடு நவாப் என்டோமெண்ட் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சென்னை மேடவாக்கத்தில் தொடங்கப்பட்ட காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழுத் தலைவராகவும் இருந்து சிறப்பான கல்விப் பணியாற்றியுள்ளார்.
பண்பு நலன்கள்:
ஜானி சாகிப் மிகச் சிறந்த நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார். தனது தொழில் மூலம் கிடைத்த வருமானத்தின் கணிசமாக பகுதியை கட்சிக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் செலவிட்டார். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் விருந்தோம்பும் பண்பினராக அவர் விளங்கினார். அவரது இல்லத்திற்கு வந்து அவரது இனிமையான விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளாத தலைவர்களே இல்லை எனலாம். கள்ளம் கபடமற்ற வெள்ளை மனமும், பரந்த பண்பும் கொண்ட அவர் தன்னுடைய பீடிக் கம்பெனியில் பணியாற்றிய ஏழை எளிய மக்களுக்கும் பெரிதும் உதவிகள் புரிந்து வந்தார்.
குடும்பம்:
ஜானி சாகிபின் தாயார் பெயர் ஷாஜாதி. கே.எஸ். அப்துல் ஜப்பார், கே.எஸ். அப்துல் ரஷீத் ஆகியோர் அவரது சகோதரர்கள். இவரது திருமணம் 1950ஆம் ஆண்டு நடைபெற்றது. துணைவியார் பெயர் கைருன்னிஸா இவரது திருமணத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், எம்.எஸ்.அப்துல் மஜீத் சாகிப், எம்.எஸ். ரஜாக்கான் சாகிப், தி.மு.க பொதுச் செயலாளர் பேரறிஞர் அண்ணா, நடிகர் கே.ஆர் . இராமசாமி, ஆர்.எம்.வீரப்பன் ஆகிய தலைவர்களும் முஸ்லிம் லீகின் முன்னணிப் பிரமுகர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ஜானி சாகிப் - கைருன்னிஸா தம்பதியினருக்கு ஜஹாங்கீர், ஷாஹின்ஷா என்ற இரு மகன்களும், குல்ஷாத், சமீம் பானு, மம்லா, சகீலா என்ற நான்கு மகள்களும் உண்டு.
முடிவுரை:
சிறந்த சமுதாய ஊழியராகத் திகழ்ந்த ஜானிபாய் 19.7.1988 அன்று காலமானார். சமுதாய ஊழியர் என்று பொருள்படும் ‘காதிமே மில்லத்’ என அவரை கட்சியினர் அழைத்துப் பெருமைப்படுத்தினர். கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களுக்குப் பிறகு மிக நீண்ட காலம் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் பிரதிநிதியாகயிருந்த ஒரே முஸ்லிம் லீக் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கொள்கையில் உறுதியும். லட்சியப் பிடிப்பும் கொண்டவராக அவர் திகழ்ந்தார். அவரது சமுதாயப் பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்பது உறுதி.
நன்றி:
ஜானி சாகிப் குறித்த தகவல்களை அளித்த முஸ்லிம்லீக் தலைமை நிலையப் பேச்சாளர் வேலூர் V.S. பஸ்லுல்லாஹ் மற்றும் திருச்சி நகர முஸ்லிம் லீக் செயலாளர் ஹுமாயூன் ஆகியோருக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018 12:40

அரசியலுக்காக நடக்கும் அரக்கத்தனமான போர்

Written by

                                                                                                                                                                              அ. முஹம்மது கான் பாகவி
அரசியல் பதவி என்று வந்துவிட்டாலே, மனிதன் அரக்கன் ஆகிவிடுகிறான். ஈவு, இரக்கம், அன்பு போன்ற மென்மையான மனிதப் பண்புகளுக்கு அரசியலில் இடமிருப்பதில்லை. பதவிச் சுகம் ஒன்று மட்டுமே இலக்காகிவிட்ட மனிதன், மிருகத்தையும்விடக் கேவலத்திலும் கேவலமான பிறவியாகிப்போகிறான். இது, இன்றல்ல; நேற்றல்ல. நாடு, நகரம் என்ற அமைப்பு தோன்றிய நாள் முதலாய் இந்த வெறித்தனம் மனிதனிடம் குடிகொண்டுவிட்டது.
இஸ்லாமியத் தரவுகளில் இடம்பெறும் ‘ஷாம்’ தேசம் என்பது, இன்றைய சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான் முதலான மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு நாட்டின் பெயராக விளங்கியது. அதன் பெரும் பகுதி இன்றைய சிரியாவில் அடங்கியிருப்பதால், ‘ஷாம்’ என்றாலே ‘சிரியா’தான் எனப் பெயராகிப்போயிற்று. ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமான சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட சிரியா, 1 கோடிக்கும் அதிகமான மக்கட்தொகையைக் கொண்ட செழிப்பான நாடாகும்.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் (திமஷ்க்), ‘பூவுலகச் சொர்க்கம்’ எனும் பெயர் பெற்றது. அந்த அளவிற்கு அந்நகரம் கட்டமைப்பு, அழகு, பசுமை, கனிவகைகள், தூய்மை, நீர்வளம், வசதிகள் ஆகியன நிறைந்த பூமியாகும். ஹலப், ஹிம்ஸ் (அல்லது ஹும்ஸ்), லாதிகிய்யா, தைருஸ் ஸூர், அல்ஃகூ(த்)தா ஆகியன சிரியாவின் முக்கிய நகரங்களாகும். தோட்டங்கள் நிறைந்த ‘அல்ஃகூத்தா’ நகரம்தான், தற்போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
தற்போதைய சிரியா
சிரியா நாட்டில் அரபியரே பெரும்பான்மையினர் ஆவர். அரேபிய முஸ்லிம்களில் சன்னி பிரிவினர், சலஃபிகள், ஷியாக்கள், ஷியாக்களிலேயே தற்போது மூர்க்கத்தனமாக சன்னிகளைக் கொன்று குவிக்கும் ‘அலவி’கள் ஆகியோர் உள்ளனர். கிறித்தவர்கள், யூதர்கள் ஆகியோரும் சிறுபான்மையினராக அங்கு வசிக்கின்றனர். கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள், குர்துகள் எனப் பல்வேறு இனத்தாரும் அங்கு வாழ்கிறார்கள்.
சிரியா நாட்டின் வருமானத்தில் நாற்பது விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதிமூலம் கிடைத்துவந்தது. உள்நாட்டு போருக்குப்பின் கடனாளியாக மாறிவிட்டது சிரியா. எண்ணெய் ஏற்றுமதி மூன்றில் இரு மடங்கு குறைந்துவிட்டது. சுற்றுலாத்துறை மூலம் இருபது விழுக்காடு வருவாய் கிடைத்துவந்த நிலையில், இப்போது அத்துறையே படுத்துவிட்டது.
நாட்டு மக்களில் முப்பது விழுக்காட்டினர் ஏழைகளாகிப் போனார்கள். 11.4 விழுக்காட்டினர், வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுவிட்டனர். குழந்தைகளும் கையில் துப்பாக்கிகளுடன் சுற்ற வேண்டிய கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரில் 2013இல் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாண்டுபோயினர். அவர்களில் 11ஆயிரம் பேர் குழந்தைகள் என்பது கொடுமையின் உச்சம். அண்மையில் 11 நாட்களில் 602பேர் இறந்துபோனதில், 185பேர் குழந்தைகள், 109பேர் பெண்களாம்!
சிரியாவில் என்னதான் நடக்கிறது?
சிரியாவில் நடக்கும் அரக்கத்தனமான போருக்குக் காரணமே அதிகாரப் போட்டிதான். சண்டாளன் ஃபிர்அவ்னைப் போன்ற ஒருவன் அங்கே ஆட்சியில் அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கின்றான். அவன் பெயர் பஷ்ஷார் அல்அசத். ஷியா பிரிவினனான இவன், மக்களின் செல்வாக்கை இழந்தவன். இந்த அரக்கன் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்பது பெரும்பான்மை சிரியர்களின் வேட்கை. அதற்காகப் பலர் உயிரைக் கொடுத்துப் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டம் 11 ஆண்டுகளாக நீடிக்கிறது.
2011ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் தோன்றிய ‘அரபு வசந்தம்’ எழுச்சியின் ஒரு பகுதியே சிரிய மக்களின் இந்தப் போராட்டமும். அரபு நாடுகள் பலவற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் இல்லை. சர்வாதிகார மன்னர் ஆட்சியே அங்கே கோலோச்சுகிறது. நாட்டு வளங்களை, ஆட்சியாளர்களின் குடும்பங்கள் சுரண்டுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்வு திணறடிக்கிறது. எதிர்த்தால் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
இக்கொடுமைகள் எல்லை தாண்டியதால் தன்னெழுச்சியாக மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு சிரியா, எகிப்து, துனீசியா, யமன், லிபியா, பஹ்ரைன் முதலிய நாடுகளில் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் வெடித்தன. சிரிய அதிபர், ராணுவத்தைக் கொண்டு போராட்டங்களை நசுக்கிவருகிறார். கிளர்ச்சியாளர்கள் பிரிந்து சிதறிக் கிடப்பதுதான், அசதுக்கு வசதியாகப் போனது.
அதிபரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுப் படை ஒருபக்கம்; அமெரிக்க ஆதரவுடன் குர்து இன மக்கள் மற்றொரு பக்கம்; ஐ.எஸ் என்ற நயவஞ்சகர் கூட்டம் இன்னொரு பக்கம். இப்படி இவர்கள் சிதறிக்கிடக்க, சர்வாதிகாரி அசதுக்கு ஆதரவாக ஈரானும் ரஷியாவும் சீனாவும் ஆதரவுக் கரம் நீட்டி, இராணுவப் படைகளை அனுப்பி சிவிலியன்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்துவருகின்றன.
தங்களை சன்னி முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஐ.எஸ். முனாஃபிக் படைகள், ரஷியாவையோ சீனாவையோ ஈரானையோ அசதையோ தைரியமாக எதிர்கொண்டு தாக்குதல் தொடுத்திருக்க வேண்டுமா, இல்லையா? ஷைத்தான்கள் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்து அவர்கள் வேஷம் -முகமூடி கிழிந்துபோயிருப்பதுதான் உண்மை. இவர்களை ‘அறப்போராளிகள்’ என்று நம்பி, இவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளும் நல்ல இளைஞர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியது.
அமெரிக்காவும் ரஷியாவும், ஏன் சீனாவும்கூட பிணம் தின்னும் கழுகுகள் என்பது உலகறிந்த உண்மை. எங்காவது உள்நாட்டுச் சண்டை மூளாதா? அடித்துக்கொள்ளும் இரு கோஷ்டிகளில் ஒன்றுக்கு ஆதரவு என்ற பெயரில், அவர்கள் அழைத்தோ, அல்லது அழைக்கவைத்தோ உள்ளே புகுந்து, அந்நாட்டு மக்களை வேட்டையாடி, ஆதரவு கோரிய கைகளில் ஆயுதங்களை விற்றுக் காசாக்கி, போர் நடக்கும்போதும் நடந்தபின்பும் அந்நாட்டின் வளங்களை அனுமதியோடு கொள்ளையடித்துக் கேவலமான பிழைப்பு பிழைப்பதே அவர்களின் வாடிக்கை!
ஈரானுக்கு என்ன வந்தது? இஸ்லாத்தில் ஒரு பெரும் கரும்புள்ளியாகத் தோன்றி, அன்று முதல் இன்றுவரை மார்க்கத்தின் தனித்தன்மையைச் சீரழித்து, எதிரிகளுக்கு வால் பிடித்து, பெரும்பான்மை முஸ்லிம்களை எதிர்ப்பதும், அவர்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கிக் குளிர் காய்வதும், நேரத்திற்கேற்ப நண்பர்களை மாற்றிக்கொண்டு பொதுஜனத்திற்குக் கொள்ளிவைப்பதும்தான் ஈரானியரின் குருதிக் குணமாகவே இருந்துவருகிறது.
அகண்ட பாரசீகத்தை உருவாக்கும் கனவில் மிதக்கும் ஈரான், தன் ஆட்களை விட்டு, முஸ்லிம் நாடுகளில் குழப்பம் விளைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது. சரியான ஈமானை என்றைக்கு அவர்கள் அடைமானம் வைத்துவிட்டு, யூதனான இப்னு சபாவைப் பின்பற்றத் தொடங்கினார்களோ அன்றைக்கே இச்சமுதாயத்தினர் விஷச் செடியாக மாறிவிட்டார்கள்.
அவர்களின் பிள்ளைதான் இந்த அசது எனும் கொடுங்கோலன். ஹிஸ்புல்லாஹ் என்ற ஷியா அமைப்பு லெபனானிலிருந்து தம் ஆட்களைத் திரட்டி சிரியாவுக்கு அனுப்பி, அசதைக் காப்பாற்றத் துடிக்கிறது. ஈரான் தன் நாட்டிலிருந்து மட்டுமன்றி, இராக், யமன் போன்ற நாடுகளிலிருந்தும் ஷியா துருப்புகளை சிரியாவுக்கு அனுப்பி அசதைத் தூக்கி நிறுத்த அலைகிறது.
நம் முன்னுள்ள கேள்வி
அக்கம்பக்கத்தில் உள்ள முஸ்லிம் நாடுகள் என்ன செய்கின்றன என்பதுதான் நம் முன்னுள்ள விடை தெரியாத வினாவாக உள்ளது. துருக்கியைத் தவிர, யாரும் வாய் திறந்ததாகத் தெரியவில்லையே! கொடுங்கோலன் அசதை எதிர்த்துப் போராடிவரும் படைகளுக்கும் போராளிகளுக்கும் அவர்கள் என்ன துணை செய்தார்கள்?
ஒன்று, சிரிய அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே சமாதானம் செய்து, பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நியாயமான தேர்தல் நடத்தி, வெல்வோர் ஆள்வதற்கு வகை செய்ய வேண்டும். அரசைப் பணியவைக்க ஐ.நா.வையோ, அமெரிக்காவையோ, வேறு உகந்த நாடுகளையோ ஏன் அணுகக் கூடாது?
இல்லையா? அரசுக்கெதிரான கட்சிகளையும் படைகளையும் ஒன்றிணைத்து, வேண்டிய எல்லா வகையான உதவியையும் ஒத்துழைப்பையும் அளித்து, சனியனை விரட்டியடிக்க கைகோக்க வேண்டுமா, இல்லையா?
எங்களுக்கென்ன? நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணி, கண்ணை மூடிக்கொண்டால், உங்கள் நாட்டிலும் ஒரு ஃபிர்அவ்ன் தோன்றமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி தோன்றிவிட்டால், உங்களைக் காக்க மற்ற முஸ்லிம் நாடுகள் முன்வருமா? இப்படி எதையாவது யோசித்தார்களா என்று நமக்குத் தெரியவில்லை.
உண்மையைச் சொல்வதானால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் அடிமைகள் என்றும் எடுபிடிகள் என்றும் மக்கள் மனதில் பதிந்துவிட்ட கருத்து உண்மையோ என எண்ணத் தோன்றுகிறது. சகோதரச் சண்டையில் ருசி கண்டு, எதிரியின் ஆயுதக் கிடங்கிற்குச் சந்தையாகச் செயல்படும் சொத்தைகளா அவர்கள்? அந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடவோ திராணியற்றவர்கள்தானே!
பிற மத்தியக் கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்கேயும் உட்பூசல்களையும் அரசியல் எதிரிகளையும் சமாளிக்கவே நேரம் இல்லாமல் திகைப்பவர்கள்; நாட்டை முன்னேற்றப்படுத்த வக்கில்லாமல், இறைவன் கொடுத்த இயற்கை வளங்களைத் தின்று தீர்த்து, அனுபவித்து, ஆடம்பரத்தில் இன்பம் காணும் உல்லாசப் பிரியர்கள்.
மொத்தத்தில், கனடா நாட்டுக்காரனுக்கு ஏற்பட்ட இரக்கம்கூட இல்லாத கல்நெஞ்சர்கள் இவர்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
இறுதியாக, இறைவா!
இறுதியாக, இறைவா! உன்னிடம் கையேந்துவதைத் தவிர, வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை. குண்டு துளைத்த இளங்குருத்துகளைப் பார்க்கும்போது, எங்கள் நெஞ்சம் வெடித்துவிடும்போல் தெரிகிறது. எங்கள் முஸ்லிம் அன்னையரின், அடுக்கிவைக்கப்படும் ஜனாஸாக்களைக் காணும்போது உண்மையிலேயே துடித்துப்போகிறோம்.
தந்தையின் பிணத்திற்கருகே அமர்ந்துகொண்டு, அவர் தலையைத் தொட்டுக் கதறும் பச்சிளம் குழந்தையைக் கண்டு கண்ணீர் வடிப்பதைத் தவிர எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! தான் பெற்ற செல்வத்தின் இரத்தம் தோய்ந்த உடம்பைத் தூக்கிக்கொண்டு ஓடும் பெற்றோரைப் பார்த்தும் ஆறுதல்கூட சொல்ல முடியாத அபலைகளாகிவிட்டோமே நாங்கள்!
இறைவா! எங்களை மன்னித்துவிடு! எங்கள் இயலாமையை மறந்துவிடு! அந்த அப்பாவி மக்களுக்குக் கருணை செய்! அந்நாட்டில் அமைதியைக் கொண்டுவா! கொடுங்கோலனைக் கொளுத்திவிடு! நல்லாட்சியைக் கொண்டுவா!
வேறு என்ன சொல்ல முடியும் எம்மால்?

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018 07:22

வீதிக்கு வந்த நீதிபதிகள்-3

Written by

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதிகளில் ஆள் பார்த்து வழக்குகளை ஒதுக்குகிறார் என்பது தான் மூத்த நான்கு நீதிபதிகள் தலைமை நீதிபதி மீது வைத்த குற்றச்சாட்டு.குறிப்பான வழக்குகளை நீதிபதி அருண் குமார் மிஸ்ரா அமர்வுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது.சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பி.எச்.லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு அருண் குமார் மிஸ்ரா அமர்வுக்கு தீபக் மிஸ்ரா ஒதுக்கி தந்தார்.இந்த பி.எச்.லோயா போலி எண்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் வழக்கை நடத்தி வந்தார்.சொராபுதீன் ஷேக் கொலை வழக்கில் ஆளும் கட்சியான பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டப்பட்டு இருந்தார்.

அருண் குமார் மிஸ்ரா விசாரித்த மற்றொரு முக்கியமான வழக்கு சகாரா-பிர்லா நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான வழக்கு. அரசியல்வாதிகள்,நீதிபதிகள் உள்ளிட்ட சக்திமிக்க நபர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான அந்த ஆவணங்கள் சகாரா குரூப் மற்றும் ஆதித்யா பிர்லா குரூப் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன.அந்த ஆவணங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோர் பெயரும் அந்த பட்டியலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.பின்னர்இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அருண் குமார் மிஸ்ரா விசாரித்த மற்றொரு வழக்கு ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தம் சம்பந்தமான வழக்கு.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்து கொண்டு அருண் குமார் மிஸ்ராவிடம் ஒப்படைத்தார்.மருத்துவ கல்லூரிகள் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டி அதன் மீது விசாரணை வேண்டும் என்று போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு போட்ட அமர்விலும் அருண் குமார் மிஸ்ரா இடம் பெற்றார்.தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவும் ஜபல்பூர்(மத்திய பிரதேசம்) நீதிமன்றத்தில் ஏறக்குறைய பத்து வருடங்கள் ஒன்றாக பணி செய்தவர்கள்.ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளவர்கள்.

மிஸ்ரா, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் (ஜபல்பூர்) 1999 ஆம் ஆண்டு நீதிபதியாக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக சொந்த ஊரான குவாலியரில் 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.ஜிவாஜி பல்கலைகழகத்தில் ( Jivaji University) மிஸ்ரா ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார்.இந்திய பார் கவுன்சிலுக்கு இளம் வயதில் தலைவராக இருந்தவர்.மிஸ்ரா ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நவம்பர் 2010 லும்,கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக டிசம்பர் 2012 லும் நியமனம் செய்யப்பட்டார்.

நீதிபதி பொறுப்பேற்றது முதல் மிஸ்ரா மொத்தம் 97,000 வழக்குகளை முடித்து வைத்திருக்கிறார்.தீபக் மிஸ்ரா கடும் நேர்மை கொண்டவர் என்று தான் நீதித்துறை வட்டாரத்தில் பெயரெடுத்தவர்.துர்க்கா தேவியை வழிபடும் நீதிபதி மிஸ்ரா கடும் பக்தி உணர்வு கொண்டவர்.வருடம் தோறும் 9 நாட்கள் நவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து குவாலியரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாட்டியாவில் இருக்கும் பீத்தாம்பர பீத் கோவிலில் சில மணி நேரங்கள் செலவிடுவார் என்றெல்லாம் அவரைப் பற்றி கூறப்படுகிறது.

தீபக் மிஸ்ரா குடும்பம் முழுவதும் இந்திய நீதித்துறையோடு தொடர்பு உடையது.கவிஞருமான மிஸ்ரா ஒடியா குடும்பத்தை சேர்ந்தவர்.இவரது தாய் வழி பாட்டனார் ஒடியா மொழியில் புகழ்பெற்ற கவிஞர்.இந்து மத இதிகாசங்களில் இருந்தும் மேற்கத்திய இலக்கியங்களில் இருந்தும் மேற்கோள் காட்டக் கூடியவர்.இவரது தந்தை ஹர்கோவிந்த் மிஸ்ரா மத்தியப் பிரதேச மாநில ஜபல்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி புரிந்தவர்.இவரது சகோதரி மகன் விஷால் மிஸ்ரா மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற குவாலியர் கிளையில் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணி புரிகிறார்.

மற்றொரு மருமகன் ஜே.பி.மிஸ்ரா மத்தியப்பிரதேச மாநில பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளார்.மிஸ்ராவின் மகள் தீக்‌ஷா மிஸ்ரா தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.இந்திய உச்சநீதிமன்றத்தின் 21 வது தலைமை நீதிபதியான ரங்கனாத் மிஸ்ரா இவரது தாய்வழி மாமன் ஆவார்.இந்த ரங்கனாத் மிஸ்ரா தலைமையில் அமைந்த ஆணையம் தான், ‘இந்திய சிறுபான்மையோருக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடும் அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கும் வழங்க வகையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்று இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த போது தீபக் மிஸ்ராவின் மாமா ஷியாம் பிகாரி அரசு கூடுதல் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். பாஜகவில் உறுப்பினராக இருந்த ஷியாம் பிகாரி கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.இரண்டாண்டுகள் முன்னர் ஷியாம் பிகாரி இறந்து போனார்.முதல்வர் சௌகான் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.மிஸ்ரா மருமகன்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் சௌகான் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்.

மிஸ்ராவின் தாயார் சரஸ்வதி தேவி ஏப்ரல் 2012 ல் இறந்த போது ஆறுதல் கூற முதல்வர் சௌகான் மிஸ்ரா வீட்டிற்கு சென்றார்.அப்போது மிஸ்ரா ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.அந்நேரம்,ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக இருந்த அசோக் கெல்லெட்டும் இறுதி ஊர்வலத்தில் மிஸ்ராவுடன் பங்கேற்றார்.இவ்வாறாக,தலைமை நீதிபதி மிஸ்ரா தற்போதுள்ள மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக தலைமை நீதிபதி மிஸ்ரா செயல்பட இவ்வாறான உறவுகள் காரணம் என்று அவரை விமர்சனம் செய்பவர்கள் கூறுகிறார்கள்.மூத்த நீதிபதிகளுக்கும் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நட்புறவு இயல்பாகவே உண்டாகும்.இதை வைத்துக்கொண்டு மிஸ்ராவை குற்றம்சாட்டக் கூடாது என்ற கருத்தும் இருக்கிறது.

மிஸ்ரா கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சமயம் உச்சநீதிமன்றத்துக்கு உயர்த்த மூன்று முறை முயற்சி நடந்தது.ஆனால்,2014 ஜூலையில் தான் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் வாய்ப்பு வந்தது.2017 ஆகஸ்ட் 28 ல் மிஸ்ரா இந்திய உச்சநீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக உயர்வு பெற்றார்.பாரம்பரியத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர் என்ற புகழுரையுடன் தலைமை நீதிபதியானார்.நீதிமன்றம் தடையில்லாமல் இயங்க புதிய முடிவாக தன் உள்ளுறையில் சில சமரசங்கள் செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.மிஸ்ரா மரபுகளை மீறி செயல்படுவதாக பதவியேற்ற சில மாதங்களிலேயே குற்றம்சாட்டப்பட்டார்.

இவருக்கு முன் தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ்.கெஹர் எளிதில் கோபப்படக் கூடியவர்.குரலை உயர்த்தி பேசக்கூடியவர்.மிஸ்ரா நேர் மாற்றமாக அமைதியாக பேசும் இயல்பு கொண்டவர்.வழக்கறிஞர்களுக்கும்,மனுதாரர்களுக்கும் சற்று கால ஓய்வு வழங்குவார்.குடி மக்களின் நீதிபதி என்று பெயரெடுத்தவர் என்றும் மிஸ்ரா பற்றி நல்ல அபிப்ராயங்கள் உள்ளன.அவதூறு சட்டத்தை உயர்த்தி பிடித்தது,மும்பையில் நடைபெற்று வந்த நாட்டிய அரங்குகளுக்கு(dance bars) போட்டிருந்த தடையை ரத்து செய்து உத்தரவு இட்டது ஆகிய தீர்ப்புகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.சினிமா அஅரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என்று இவர் போட்ட உத்தரவு உடனடியாக விமர்ச்சனம் செய்யப்பட்டது.ஆளும் வர்க்கத்தின் தேசியவாத கொள்கைக்கு நீதிபதி மிஸ்ராவும் பலியாகி விட்டார் என்றும் கூறப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டதில் கூட லஞ்ச புகார் கூறப்பட்டது.தற்கொலை செய்து கொண்ட அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல் எழுதி வைத்த தற்கொலை குறிப்பில் கூட மிஸ்ரா பெயர் இருந்ததாக கூறப்பட்டது.இந்த குற்றச்சாட்டு மேலும் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை.ஆனால்,இப்போது,மூத்த நான்கு நீதிபதிகள் விமர்ச்சனம் வைத்த பிறகு மிஸ்ரா தனது நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டார்.மிக முக்கியமாக,நீதித்துறையின் நம்பகத்தன்மையை மிஸ்ரா கட்டாயம் மீட்டு எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தலைமை நீதிபதி மிஸ்ரா 2020 செப்டம்பரில் தான் ஓய்வு பெறுகிறார்.

நீதிபதி செல்லமேஸ்வர்:
தலைமை நீதிபதி மிஸ்ராவுடன் நேரெதிரில் மல்லுக்கு நிற்கும் மூத்த நீதிபதி ஜஸ்தி செல்லமேஸ்வர்ர்.இந்திய உச்சநீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை பணி நியமனம் செய்யும் கொலிஜியம் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்தவர்.தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் 2015 ல் கொண்டுவரப்பட்ட போது,அதனை உச்சநீதிமன்றம் தன்னேற்பு(Suo Motto) வழக்காக எடுத்து விசாரணை செய்து தள்ளுபடி செய்தது.5 நீதிபதிகள் இடம்பெற்ற அமர்வில் 4 நீதிபதிகள் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்த்து தீர்ப்பளித்த போது ஜஸ்தி செல்லமேஸ்வர்ர் மட்டும் ஆதரித்து தீர்ப்பு வழங்கினார்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நீதிபதி செல்லமேஸ்வர் அஸ்ஸாம் மற்றும் கேரள மாநில உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தார்.தெலுங்கு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்.மருத்துவ கல்லூரிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நவம்பர் 2017 ல் வந்த ஒரு வழக்கை நீதிபதி அருண் குமார் மிஸ்ராவுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கீடு செய்த வகையில் தான் செல்லமேஸ்வர் தீபக் மிஸ்ரா உடன் முரண்பட்டார.மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் போட்ட மனுவை விசாரிக்க ஓபன் கோர்ட்டை நிறுவ வேண்டும் என்று விசாரணை அமர்வின் பெரும்பான்மையான நீதிபதிகள் கூற அவர்களுடன் செல்லமேஸ்வர் முரண்பட்டார்.

தனி மனிதனின் அந்தரங்கம் அடிப்படை உரிமையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய ஆதார் வழக்கை அரசியல் சட்ட முழு அமர்வுக்கு அனுப்பி வைத்தார் செல்லமேஸ்வர்.செல்லமேஸ்வர் இந்தியாவில் பல்வேறு தனிச்சிறப்பான தீர்ப்புகள் வழங்கியதை மெச்சி அக்டோபர் 14 ஐ நீதிபதி ஜஸ்தி செல்லமேஸ்வர் தினமாக 2016 ல் அமெரிக்கா அறிவிப்பு செய்தது.அதே 2016 ல் அமெரிக்காவின் நப்பர்வில்லி(Naperville) மற்றும் இல்லினாய்ஸ்(Illinois) மாகாணங்களின மேயராக கௌரவிக்கப்பட்டார்.

கே.எஸ்கெஹர் மற்றும் தீபக் மிஸ்ராவுக்கு முன்பே செல்லமேஸ்வர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்வு பெற்றிருந்தார்.எனினும்,2011 அக்டோபர் 10 ல் செல்லமேஸ்வரும் தீபக் மிஸ்ராவும் நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.அதற்கு ஏறக்குறைய ஒரு மாதம் முன்னர் கெஹர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு விட்டார்.மேலும்,தீபக் மிஸ்ராவும் செல்லமேஸ்வருக்கு முன்பு நீதிபதியாக உறுதிமொழி எடுத்து விட்டார்.அதனால், நீதிபதிகள் படி நிலையில் மிஸ்ரா செல்லமேஸ்வரை விட மூத்தவராகி விட்டார்.நீதிபதிகள் நியமனத்தை பணி மூப்பு அடிப்படையில் செய்வதை கண்டிப்புடன் பின்பற்றி இருந்தால்,2018 ஜூலையில் ஓய்வுப் பெறப்போகும் நீதிபதி ஜஸ்தி செல்லமேஸ்வர், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தாக்கூருக்கு அடுத்ததாக வந்திருப்பார்.

நீதிபதிகளை நியமனம் செய்ய ஏதேச்சதிகாரம் கொண்ட கொலிஜியம் பணி மூப்பை கண்டிப்புடன் பின்பற்றாமல் போனதால் இந்தியாவின் தலைமை நீதியாகும் வாய்ப்பை செல்லமேஸ்வர் இழந்துள்ளார்.அதன் காரணமாகவே கொலிஜியம் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நீதிபதிகள் நியமன தேசிய ஆணையத்துக்கு செல்லமேஸ்வர் தார்மீக ஆதரவு அளித்திருந்தார்.கொலீஜியம் கூட்டங்களில் கலவாமல் விலகி வந்தார்.நீதிபதிகள் நியமனத்தில் கூட நேர்மை தப்பிவிடுகிறது என்பதற்கு செல்லமேஸ்வர் அனுபவம் ஒரு உதாரணம்.தலைமை நீதிபதியாகும் தகுதியுடைய ஒருவர் அந்த அங்கீகாரத்தை நிர்வாக முறைகேடுகள் வழியாக இழக்கிறார் என்பது மன்னிக்க கூடியதாக இல்லை........தொடரும்....