தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள் (67)

சோழ மன்னர்களின் கடற்கரைப் பட்டினங்கள் பலவாக இருந்தாலும் அவற்றில் மூன்று பட்டினங்கள் முக்கியமானவை. அவை காவிரிபூம்பட்டினம், அதிராம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகும்.
திருநாகை என்றும் நாகை காரோணம் என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் நாகப்பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றன. நாகர் என்ற காட்டு மக்கள் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகவும் நாகஅரசன் ஒருவன் அவர்களை ஆண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஆதி காலத்தில் இப்பகுதி ‘புன்னாக வனம்’ என அழைக்கப்பட்டது. புன்னை மரத்தின் மறேறொரு பெயர் நாகமரம். எனவே நாகமரங்கள் சூழ்ந்திருந்த ஊர்கள் நாகப்பட்டினம், நாகூர் என ஆனதாம். அதன் காரணமாக நாகை, நாகூர் என ஊர்ப் பெயர்கள் அமைந்ததாகவும் செவி வழிச் செய்திகள் புழங்குகின்றன.
மிகப் பழமையான நகரங்களில் ஒன்று நாகப்பட்டினம். காஞ்சிபுரத்தைப் போல சமயங்களின் இருப்பிடமாகவும் விளங்கியுள்ளது நாகப்பட்டினம்.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் தொண்டி துறைமுக நகரை சமனத்தைச் சேர்ந்த இலவோன் ஆண்டதாக தரவுகள் உள்ளன. அக்கால கட்டத்தில் நாகையும் சமனர்களின் நகராக இருந்திருக்கிறது. நாகை பவுத்தர்களின் நகராக விளங்கியதற்கான தரவுகளும் உள்ளன.
பல்லவர் ஆட்சி இங்கு பரவியிருந்த காலத்தில் பழைய நாகையில் சமனத்தை பின்பற்றியோர் பலர் இருந்தனர். பார்கவநாதர் கோவில் எனும் சமன சமயக் கோவிலே இன்று பாசுபதேஸ்வரர் கோவிலாக மாறியிருப்பதாக கூறுவர். தஞ்சையைச் சேர்ந்த சில ஊர்களில் சமணக் கோவில்கள் உள்ளன.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். சோழர்களின் துறைமுகமாய் விளங்கிய நாகை சோழ குல வல்லிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்ததாம். பர்மிய வரலாற்று நூலில் நாகையில் அசோகப் பேரரசன் கட்டிய புத்தவிகாரம் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். சீனப் பயணி யுவான் சுவாங் கூட இங்கிருந்த புத்த விகாரம் பற்றி குறிப்பிட்டுள்ளாராம்.
இராசராச சோழனும் அவனுக்குட்பட்ட வெளிநாட்டு அரசன் ஒருவனும் ‘சூடாமணி விக்கிரகம்’ என்ற புத்தர் கோவிலை நாகையில் கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டு வரை சூடாமணிக் கோவில் சிறந்து விளங்கியுள்ளது. ராஜராஜப்பெரும்புள்ளி, ராஜேந்திர சோழப்பெரும்புள்ளி, சோழப்பெரும்புள்ளி என புத்த விகாரங்கள் ஆங்காங்கு இருந்தன.
1856 க்கும் 1870 க்கும் இடையில் நாகை வெளிப்பாளையம் நாணயக்காரத் தெரு ஆகிய இடங்களில் 350 புத்தவிகாரங்கள் கண்டெடுக்கப்படுள்ளன. இவை 870 முதல் 1250 வரையுள்ள காலத்தவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கல்கத்தாவிலுள்ள இந்தியன் பொருட்காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சோழப் பேரரசின் தலைநகராகவும் பவுத்த சமயம் வேரூன்றியிருந்த பகுதியாகவும் வணிகப் பேரூராகவும் வெளிநாட்டினருக்கு தமிழ்நாட்டின் வாயிலாகவும் நாகப்பட்டினம் இருந்திருக்கிறது.
சமணம், பவுத்தம் ஆசீர்வகம், சைவம், வைனவம் ஆகிய மதங்களில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம். எதையும் பின்பற்றாமலும் இருக்கலாம். இத்தகைய நிலைமைதான் தமிழகம் முழுவதும் இருந்து வந்தது.
இந்த அழகிய நிலையை ஏழாம் நூற்றாண்டு நொறுக்கிப் போட்டது. திருஞான சம்பந்தன் எனும் சீர்காழிக்காரர் பாண்டிய அரசியையும் அரசனையும் தன் வசப்படுத்தி சமணர்களைக் கழுவிவேற்றிய காலகட்டம் கறுப்பு நிலாக்காலம் சம்பந்தனின் ஆரிய சூழ்ச்சி இன்னும் கூட சரியாக அம்பலப்படுத்தப்படாமலிருக்கிறது.
எட்டாம் நூற்றாண்டில் நாகையில் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட பவுத்தக் கோவில் ஒன்று இருந்தது. இதைப் பற்றிய குறிப்புகள் வெளிநாட்டுப் பயணி மார்க்கோ போலோவின் நூல்களில் உள்ளன. இக்கோவிகளில் இருந்த புத்தரின் தங்கச் சிலையை திருமங்கையாழ்வார் கொள்ளையிட்டுச் சென்றுதான் திருவரங்கம் கோவிலின் நான்காவது மாடத்தைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
சமணத்தை சைவம் அழித்ததும் பவுத்தத்தை வைணவம் அழித்ததும் வரலாறாக உள்ளது. அந்த அழிவாயுதத்தை ஏந்திக்கொண்டே இப்போதும் சில வெறியர்கள் அலைகிறார்கள். கடந்தகால வரலாறு நமக்கு எச்சரிக்கையாக உள்ளது.
முற்காலத்தில் சென்னையைப் போலவே நாகையும் வளர்ந்தது. சென்னை நகரையொட்டிய பகுதிகளுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் ஏற்பட்ட ரயில்பாதை நாகை – தஞ்சை ரயில்பாதை. இது 1861 – இல் தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகே 1876 – இல் தூத்துக்குடிக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதுவரை நாகைத் துறைமுகம் மரக்கலங்களால் நிரம்பி வழிந்தது. தூத்துக்குடியால் நாகை சரிவைச் சந்தித்தது.
1941 வரை நாகையிலிருந்து வங்கக் கடலில் பயணித்து கல்கத்தா, ரங்கூன் வரை கப்பல்கள் போய் வந்தன. அதே சமயம் இந்துமகா கடலைத் தொட்டு அரபிக் கடலில் பயணித்து பம்பாய், கராச்சி வரையும் கப்பல்கள் சென்று வந்தன.
மதராஸிலிருந்து புறப்பட்ட எஸ்.எஸ்.ரஜுலா போன்ற பயணியர் கப்பல்கள் நாகையைத் தொட்டு சிங்கப்பூர், மலேயா வரை சென்று திரும்பின.
தமிழ்நாடு, கேரளம் கன்னடம் ஆகிய மூன்று மாநிலங்களிலிருந்து எஃகு பித்தளைப் பொருட்கள் வெண்கலப் பாத்திரங்கள் நாட்டு மருந்துகள் துணிமணிகள், பீடிப் பொதிகள், மிளகாய்ச் சிப்பங்கள் ஆகியவை நாகையிலிருந்து மலேயாவுக்குச் சென்றன.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாகை டச்சுக்காரர்களிடம் இருந்தது. நாகை இயறகைத் துறைமுகமாக இல்லாவிட்டாலும் வையாற்றின் முகத்துவாரத்திலிருக்கிறது. கப்பல் பயணிகள் படகுகளில் சென்றே கப்பலில் ஏறினர். என்றாலும் நாகை இன்று வரை மிகப் பெரிய மீன் பிடித் துறைமுகம். கடல் வளம் காலாதி காலமாக வளர்ந்து வருகிறது.
19 ஆம் நூற்றாண்டில் நாகை வழியாகவே தஞ்சை அரிசி இலங்கைக்கு சென்றது. நாகைக்கு தெற்கேயுள்ள கோடிக்கரைக்கும் இலங்கை காங்கேசன் துறைக்கும் உள்ள தொலைவு 45 கி.மீ. பாய்மரக் கப்பலில் பயணித்தால் ஆறு மணி நேரத்தில் ஈழத்தமிழைக் கேட்கலாம்.
மூவேந்தர் காலத்திலிருந்து 1902 வரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆட்களும் பொருட்களும் கோடிக்கரை வழியாக சென்று வந்தன. அக்கரையிலிருப்போர் படகில் படகில் இக்கரைக்கு வந்து திரைப்படம் பார்த்துச் செல்வது வழக்கமாய் இருந்துள்ளது. எவ்விதத் தடையும் அப்போது கிடையாது. கடலுக்கு வேலி போடும் முட்டாள்கள் அப்போதில்லை.
இலங்கையிலிருந்து நாகைத் துறைமுகத்துக்கு ஏலம், கிராம்பு, பாக்கு, புகையிலையோடு யானைகளும் வந்திறங்கின. பர்மாவிலிருந்து தேக்கு மரங்கள் தோணியில் கட்டியிழுத்து வரப்பட்டன. தாய்லாந்த் போன்ற கிழக்காசிய நாடுகளிலிருந்து யானைகளும் குதிரைகளும் இறக்குமதியாகின.
நாகப்பட்டினத்திற்கும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குமிடையே படகுகள் செல்லத்தக்க பாலம் (LIFT SPAN BRIDGE) ஒன்று 1957 இல் கட்டப்பட்டிருக்கிறது. பெரிய படகுகளும் கடல் மணலை அள்ளும் கருவிகளும் இதன் கீழ் செல்லலாம். இதன் நீளம் 320 அடி.
நாகப்பட்டினத்தை புயல் தொட்டுத் தழுவி கட்டியணைக்காத காலங்கள் குறைவு. 1681 இல் அடித்த புயல் டச்சுக்காரர்களின் கோட்டையையே சிதைத்தது. 1952 – 1955 என வந்த புயல்கள் கடலோரத்தையே காணாமல் செய்தன. தூரத்து இடிமுழுக்கம் கூட நாகையில் பெரும் மழையுடன் கரையேறும் 2004 டிசம்பர் சுனாமியில் மரணித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர், நவம்பர் வந்தாலே போது நாகை நடுங்க ஆரம்பித்து விடும். நடுக்கடல் பயணத்தைத் தடுத்து விடும்.
அரேபியர்கள் கிழக்குக் கரைத் துறைமுகப்பட்டினங்களில் குடியேறியதை சங்க இலக்கியங்களோடு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் பதிவு செய்துள்ளன. பூம்புகாரில் அமைந்திருந்த யவனச்சேரி போல நாகப்பட்டினத்திலும் அரபுக் குடியேற்றம் இருந்தது. நூற்றுக்கணக்கான குதிரைகள் கப்பல்களில் கொண்டு வரப்பட்டு சோழ, பல்லவ மன்னர்களால் வாங்கப்பட்டுள்ளன.
நாகை அரேபியர்களால் ‘மலே பட்டான்’ என அழைக்கப்படிருக்கிறது. அண்ணலார் காலத்துக்குப் பின் அரேபியர்கள் முஸ்லிம்களாய் மாறி காலாதிகாலமாக செய்த இறக்குமதி ஏற்றுமதிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். நாகையில் வந்திறங்கிய அரபு வணிகர்களோடு சோழ மண்டல வணிகர்கள் நீண்டகாலமாக வணிக உறவைப் பேணி வந்ததோடு வாழ்க்கை உறவுகளையும் கொண்டாடி வந்துள்ளனர்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபு மக்கள் கப்பல் கப்பலாய் குடும்பத்தோடு புலம் பெயர்ந்து வந்த பிறகு குளச்சலிலிருந்து பழவேற்காடு வரை குடியேறியதால் ஓர் புதிய உறப்பாலம் அமைந்திருக்கிறது. பழவேற்காடு பாய் மரக்கப்பல்கள் ஆங்காங்கிருந்து பட்டினங்களில் உறவு பேணியும் தொழில் செய்தும் குளச்சலைத் தாண்டியும் சென்றுள்ளன. நடுத் தமிழகத்தின் நடுப்பகுதி துறைமுகங்களாய் நாகூரும் நாகையும் அமைந்திருந்ததால் காயல்பட்டின – கீழக்கரை வணிகர்கள் தொழில் நிமித்தம் இரு நகர்களிலும் ஏராளமாய் வந்து தங்கி வணிகம் செய்துள்ளன. இரு நகரங்களிலும் அதிகமான மரைக்காயர்கள் வந்தவாசியாயிருந்தும் சொந்தவாசியாய் மாறிப் போயினர்.
இரு நகரங்களிலும் ஏராளமான பாய்மரக்கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. பன்னாட்டு வணிகர்களும் வந்து போய்க் கொண்டிருந்தனர். கி.பி.பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பயணங்கள் அதிகமாக இருந்தன. அங்கு புத்தமதம் வேகமாக பரவியிருந்ததால் இரு நாட்டு உறவுகளும் சுமூகமாக இருந்தன. சுங்க வருவாயால் சோழ அரசு செழித்தது.
செட்டியார்களும் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபட்டிருந்தாலும் முஸ்லிம் வணிகர்களே முன்னிலை வகித்தனர். இதைப் பற்றிய சங்கதியை போர்த்துகீசியர் பயணி பார்போசா பதிவு செய்துள்ளார்.
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக் கீசியர்களும் டச்சுக்காரர்களும் நாகப்பட்டின வணிகத்தை தம் வசப்படுத்தினர். அவர்கள் மலாக்கா முதல் இலங்கை வரை வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தனர். முஸ்லிம் வணிகர்களின் கப்பல் வணிகம் பரங்கியரால் பாதிக்கப்பட்டாலும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு இணக்கமாக இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, தென்னாட்டின் பிற துறைமுகங்களுடன் தொடர்ந்து வாணிபம் செய்து வந்தனர்.
18, 19 ஆம் நூற்றாண்டுகளில் நாகூர் – நாகை துறை முகங்கள்தான் தென்னிந்திய கடல் வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தன. கடலிலிருந்து கடுவையாற்றின் முகத்துவாரத்துக்குள் 500 டன் எடையுள்ள கப்பல்கள் கூட நேரடியாக சென்று வரக் கூடியதாக இருந்தது.
1799 இல் நாகப்பட்டினம் பகுதி ஆங்கிலேயரின் ஆளுகைக்கு வந்தது. வேதாரண்யத்திலிருந்து உப்பு, வெங்காயம் போன்ற பொருட்களும் கொண்டு வரப்பட்டு ஏற்றுமதியாகின.
ஆற்காடு நவாபுகளும் தஞ்சை மன்னர்களும் முஸ்லிம்களின் வணிகத்துக்கு பல சலுகைகள் அளித்தனர். ஆங்கிலேயரும் முந்தைய ஆட்சியாளர்கள் அளித்த சலுகைகளைத் தொடர்ந்தனர். நாகூரும் நாகப்பட்டினமும் பாய்மரக் கப்பல்களாலும் கப்பல்காரர்களாலும் நிரம்பி வழிந்தன. இரு துறைமுகங்களும் முஸ்லிம்களின் துறைமுகம் – ‘MOOR PORTS’ என அழைக்கப்பட்டன. இங்குள்ள முஸ்லிம் வணிகர்கள் ‘சோழியர்’ எனக் குறிப்பிடப்பட்டனர். 1815 இல் ஆங்கிலேயரின் கடலூர் வணிக மையம் நாகையுடன் இணைக்கப்பட்டது.
மலாக்கா, சுமத்திரா, கெதா ஆகிய நாடுகளுக்கும் கப்பல் வணிகம் தொடர்ந்தது. துணி வகைகளே முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. மலாக்கா, சீனா, ஜாவா ஆகிய கிழக்காசிய நாடுகளிலிருந்து சர்க்கரை, சந்தண மரம், யானைத் தந்தம் மெழுகு, தகரம் ஆகியவை இறக்குமதியாகின. சுமத்திராவிலிருந்து குதிரைகளும் தாய்லாந்திலிருந்து யானைகளும் கூட தமிழகம் வந்து சேர்ந்தன.
நாகை – நாகூரைச் சுற்றியுள்ள ஊர்களெங்கும் தறிகளின் ஓசை தடங்களில்லாமல் கேட்டன. பலவகையாக துணிமணிகள் கட்டுக்கட்டுகளாக அலைவாய்க் கரைக்கு வந்து சேர்ந்தன. அவை தூர கிழக்கு நாடுகளுக்கு மட்டும் செல்லவில்லை, அய்ரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன.
நாகூரில் தயாரிக்கப்பட்ட திரைச் சேவைகள், விரிப்புகள், வண்ண வளைவுகள் கொண்ட அலங்காரத் துணிகள் ஆகியவற்றுக்கு அய்ரோப்பியச் சந்தையில் நல்லவிலை கிடைத்தன. இவற்றைக் கடல் கொண்டு செல்ல நாகூரில் மட்டும் 400 க்கு மேற்பட்ட கப்பல்கள் இருந்தன.
இப்பகுதிகளில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டோர் தொகை தொகையாய் வாழ்ந்தனர். 4000 நெசவாளார்கள், 1023 தறிகள், 1000 சலவையாளர்கள், 230 வண்ண ஓவியம் வரைவோர், 300 சாயக்காரர்கள் இருந்ததாக ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர்.
நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஊதா துணிக்கு ஐரோப்பாவில் நல்ல சந்தை இருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து அமெரிக்காவுக்குக் கூட துணிமணிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கைக்கு நெல், அரிசி, துணி வைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அங்கிருந்து பாக்கு, மிளகு, வாசனைப் பொருட்கள், உலர்ந்த மீன், புகையிலை, முத்துக்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. இங்கிருந்து இலங்கை, பர்மா, சிங்கப்பூர், பினாங்கு துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல்களும் முஸ்லிம்களால் இயக்கப்பட்டன.
கலகத்தாவிலிருந்து காலிகட் வரை (வங்கக் கடல் – அரபுக் கடல்) கரை வழிப்போக்குவரத்து நாகை – நாகூர் நகரங்களை மிகப்பெரும் சந்தைக் கூடமாக்கியது. இங்கு நாணயங்கள் கூட தயாரிக்கப்பட்டன. அவை ‘நாகப்பட்டின பகோடா’ என அழைக்கப்பட்டன.
நடுத்துறைமுகப்பட்டினங்களான நாகையும் நாகூரும் கப்பல் கட்டும் தளமாகவும் விளங்கியுள்ளது. தம் தேவைகளை நிறைவு செய்த கப்பல் தயாரிப்புக் கூடங்கள் ஆங்கிலேயருக்கும் மேலைக் கடற்ககரை வணிகர்களுக்கும் கூட கப்பல்களை கட்டிக் கொடுத்துள்ளன.
கிழக்காசிய நாடுகளில் வணிகத்துக்காக தங்கியவர்கள் அங்கு தம் முத்திரைகளைப் பத்திதுள்ளனர். 1770 கெதா நாட்டில் வாழ்ந்த நாகை வணிகர் ஜமாலுத்தீன் அமைச்சராக இருந்ததோடு ‘டத்தோ ஸ்ரீ ராஜா’ எனும் பட்டத்தையும் பெற்றிருந்தார். இவர்தான் அரசர் சார்பில் ஆங்கிலேயரோடு பேசி வணிக ஒப்பந்தங்கள் செய்தார்.
1786 இல் பிரான்ஸிஸ் லை தலைமையில் பினாங்கு உருவான போதும் 1824 இல் சிஙகப்பூர் உருவான போதும் அங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அக்காலகட்டத்தில் நாகூரும் நாகையும் அந்நாடுகளோடு பெருமளவில் வணிகத்தொடர்புகள் கொண்டிருந்தன. முஸ்லிம்கள் வணிகர்களாக மட்டும் வாழவில்லை. கப்பலோட்டிகளாகவும், மாலுமிகளாகவும் தொழில் வல்லுநர்களாகவும் வாழ்ந்தனர்.
விடுதலை பெற்ற பின்னர் நாகப்பட்டினம் ஒளியிழந்தது. சென்னையைப் போல் வளர வேண்டிய துறைமுகப்பட்டினம் களையிழந்தது. தமிழகத்தின் நடு நாயகமாய்த் திகழும் நகரம் உயர வேண்டிய அளவுக்கு உயரவில்லை.
ரோலிங் மில், ரயில்வே தொழிற்சாலைகள் இடம் மாறிப் போயின. வளர்ந்து வந்த கல்லூரிகள் குறைந்து போயின.
ரெட்டை நகர்களான நாகையும் நாகூரும் முஸ்லிம்கள் கை கோர்த்துக் கொண்டிருக்கும் ஒரே நகராகி விட்டது. நாகூர் நாகராட்சியில் ஒன்று சேர்ந்து விட்டது.
நாகையில் முஸ்லிம்கள் 25% விழுக்காடு இருக்கிறார்கள். மரைக்கார் 60% ராவுத்தர் 30% உருது மொழி பேசுவோர் 10% என முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். மாற்று மதச் சகோதரர்களோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மும்முரமாய் வாழ்ந்தவர்கள் இன்று பல்வேறு தொழில் செய்கிறார்கள். கல்வியை கண்ணெனப் பேணி பல்வேறு தளங்களில் முன்னணியில் உள்ளார்கள். 75% விழுக்காடு பெண்கள் கல்வியில் சிறந்துள்ளார்கள்.
கடற்கரைப் பகுதிகள், வெளிப்பாளையம், காடம்பாடி போன்ற இடங்களில் முஸ்லிம்கள் திரளாக உள்ளனர். மரைக்கார் பள்ளி, மீரா பள்ளி, கமாலியா பள்ளி, யாஉசேன் பள்ளி, புதுப் பள்ளி, முகைதீன் பள்ளி எனப் பல பள்ளிவாசல்கள் உள்ளன.
தொடக்க காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களோடு நாகைக்கு வணிகத்துக்காக வந்து குடியேறியவர்களில் முக்கியமானவர்கள் ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள். அவ்வாறு வந்து குடியேறிய முக்கிய குடும்பம்தான் ‘நாவலாசிரியர் ஹஸன்’ அவர்களுடையது.
தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல கேரள முஸ்லிம்களும் மேமன் முஸ்லிம்களும் குடியேறி வாழ்ந்துள்ளனர். வணிகங்கள் சுருங்க மேமன்கள் தம் குடும்பங்களோடு புலம் பெயர்ந்து விட்டனர். கேரள முஸ்லிம்கள் நாகையைத் தம் தாயகமாகக் கொண்டு விட்டனர்.
மேமன் முஸ்லிம்கள் கட்டிய பள்ளிவாசலே கமாலியா பள்ளிவாசல், கமாலியா பளிவாசலைக் கட்டிய மேமன்கள் அவர்கள் தொழில் செய்த கடற்கரை அருகிலேயே ஒரு சிறிய பள்ளியைக் கட்டினர். அது இன்றும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது. மேமன்களின் பூர்வீகம் குஜராத் இவர்கள் சென்னையில் கணிசமாக வாழ்கின்றனர்.
ஒரு காலத்தில் கப்பல்கள் நிறைந்திருந்த துறைமுகத்தில் இன்று உரமும் கரியும் மட்டுமே இறக்குமதியாகின்றன. என்றாலும் தமிழகத்தின் மிகப்பெரும் மீன் பிடித் துறைமுகமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலேயரின் முக்கிய கேந்திரமாய் விளங்கிய நாகையில் இருந்த ஆட்சியர் ஸ்டெப் போர்தான் சிங்கப்பூரைக் கைப்பற்றி ஆண்டார். இவருக்கு நாகையில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. தனித்த தமிழ் தலைவர் மறைமலை அடிகளுக்கும் நாகையில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. நாகையின் மைந்தன் அவர்.
முஸ்லிம்களின் அரசியல் நுழைவை முன்னெடுத்துச் சென்றதில் நாகைக்குத் தனியிடம் உண்டு. அதை நினைவுகூரும் தெரு சர் அகமது தெரு.
மிகப்பெரும் கப்பல் வணிகராய்த் திகழ்ந்த சர் அகமது மரைக்காயரை நினைவுகூராகவே சர் அகமது தம்பி அமைந்திருக்கிறது. அன்றைய முஸ்லிம்களிடையே சிறப்பான ஆளுமையாகத் திகழ்ந்த மரைக்காயர் நீதிக்கட்சியின் முக்கியப் பிரமுகராய்த் திகழ்ந்தவர், மதராஸ் ராஜதானியை நீதிக்கட்சி (Justice party) ஆண்ட போது டெல்லி நாடாளுமன்ற உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மரைக்காயரின் இல்லம் ‘டயமண்ட் மகால்’ எனப் பெயர் பெற்றிருந்தது. இன்றும் அது பழம் வரலாற்றைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது. மரைக்காயரின் உறவினர் மதிப்பிற்குரிய அமீர் சுல்தான் பிற்காலத்தில் மதராஸ் ராஜதானியின் மேலவையை அலங்கரித்தார்.
இடைக்காலத்தில் 1957 இல் இசைமுரசு நாகூர் அனிபாவும் அடுத்து கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனும் நாகைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அண்மைக் காலத்தில் சகோதரர்கள் நிஜாமுதீனும், தமீமுல் அன்ஸாரியும் சட்டசபை உறுப்பினர்களாகியுள்ளனர்.
முந்தைய காலகட்டத்தில் நாகையின் குறிப்பிடத்தக்கவர் நாகை பாட்சா எனும் திராவிடர்க் கழக பிரமுகர். பின்னாட்களில் இவர் இறைவனைத் தொழும் நிலைக்கு உயர்ந்தவர்.

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018 07:22

வீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2

Written by

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் துஷ்யந்த் தவே.தலைமை நீதிபதி ஆள் பார்த்து வழக்குகள் ஒதுக்குவதில் அதிருப்தி வெளிப்படுத்தியவர்.2018,ஜனவரி 10 அன்று, ஒரு சட்ட இணையத்தில்,”இன்றைய உச்சநீதிமன்ற செயல்பாடுகளை உற்று நோக்கும் போது,தலைமை நீதிபதி அதிகாரத்தை பயன்படுத்தும் விதம் முற்றிலும் தெளிவில்லாமலும்,புரிய முடியாமலும் இருப்பதை காட்டுகிறது.சமீப மாதங்களில் நடந்த பல உதாரணங்களை சொல்லலாம்.அரசியல் சாசன அவைகள் குறிப்பிட்ட சில நீதிபதிகளை ஒதுக்கி விட்டு குறிப்பிட்ட சில நீதிபதிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டன” என்று எழுதினார்.

நான்கு நீதிபதிகள் விவகாரத்தை வீதிக்கு கொண்டு வந்ததை சரி என கூறும் சிலர், அவர்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறுகிறார்கள்.இந்த பிரச்சனைகளை உள்ளரங்கில் தீர்க்க முதலில் முயற்சிகள் செய்திருக்கிறார்கள்.அவர்கள் வாய் மூடி கொண்டு இருந்தால் எது நடந்து கொண்டிருந்ததோ அது தான் தொடர்ந்து நடக்கும்.மக்கள் நீதிக்காக நீதிமன்றம் போகிறார்கள்.நீதிபதிகள் மக்கள் மன்றத்துக்கு போனது ஒரு நேர் முரணான காட்சி தான்” என்கிறார்கள்.

11 veethi 1

நான்கு நீதிபதிகளை விமர்சிப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்? பிரச்சனை எவ்வளவு தீவிரம் கொண்டிருந்தாலும்,மிக அவசரமானதாக இருந்தாலும் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்ததன் மூலம் நன்மையை விட அதிக தீமையை ஏற்படுத்தி விட்டார்கள்.நீதிதுறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உண்மையில் அசைத்துள்ளது என்கிறார்கள். தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி,” பிரச்சனை இப்போது மக்கள் மன்றத்துக்கு போய் விட்டது.அவர்கள் இப்போது நீதித்துறையை எப்படி பார்ப்பார்கள்?ஊழல் மலிந்துள்ளவர்கள் தங்களுக்கு இடையில் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று தான் நினைப்பார்கள்.இந்த வகையில்,நீதிபதிகள் தங்களை ஒரு வியாபார சங்க உறுப்பினர்கள் போல நடந்து கொண்டார்கள். நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தை வைத்து பெரும் தொகையை பார்க்க முடியும் என்று கருத இடமளித்து விட்டார்கள்” என்று கூறுகிறார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் நீதிபதிகள் நால்வர் பொது வெளிக்கு வந்ததை ஏற்க வில்லை எனினும்,இந்த பிரச்சனை நேர்மையாக எழுப்பப்பட்டது என்கிறார்.”தலைமை நீதிபதி பிரச்சனை தொடர்பில் எதையும் கூறவில்லை.இந்த பிரச்சனை மேலும் தீவிரமாவதை தடுக்க இது ஒரு தொடக்கம்.இப்போது,நீதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்றார்.ஜனவரி 16 ஆம் நாள்,தலைமை நீதிபதி மிஸ்ரா மூன்று இளம் நீதிபதிகள் முன்னிலையில் மூத்த நான்கு நீதிபதிகளை சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.ஆனால்,எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையாம்.

தலைமை நீதிபதி உறுதியான முடிவுகள் எதையும் வழங்கவில்லை. வழக்கமான கடைபிடிக்கும் முறையில் தான் வழக்குகளை ஒதுக்குவேன் என்று பிடிவாதம் காட்டினாராம்.இப்ப அவர் ஏதாவது மாற்றத்தை செய்தாலும், அவரது முந்தைய செயல்பாடுகளில் தவறு இருந்ததை ஒத்துக் கொண்டதை போல ஆகிவிடும் என்ற கருத்தும் கூறப்பட்டது. மிகவும் சிக்கலான வழக்குகளை ஜனவரி 17 முதல், அரசியல் சடட அவை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பு செய்தது.ஆனால்,அந்த அமர்வின் நீதிபதிகளில் மாற்றம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.அதாவது,சர்ச்சையை கிளம்பிய நான்கு நீதிபதிகளுக்கும் அந்த அமர்வில் இடமளிக்கப்பட வில்லை.

வழக்குகளில் சில கட்ட விசாரணைகள் ஏற்கெனவே நடந்து விட்டதால் அந்த அமர்வுகளில் நீதிபதிகளை மாற்றுவது நடைமுறை சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று நான் கருதவில்லை என்கிறார் மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங்.இவர் ஏற்கெனவே உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலவராக இருந்தவர். வெளியில் இருந்து பார்க்கும் போது,இயல்பாக போய்க்கொண்டு இருப்பது போல் தெரியும்.நீதிபதிகள் மொத்தம் பேரும் உட்கார்ந்து பேசினால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும்.வழக்குகள் ஒதுக்குவது பற்றி விவாதிக்க வேண்டும்.அதில் ஒரு சமாதானம் வர வேண்டும் என்கிறார்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்,விஜய் ஹன்சாரியா தலைமை நீதிபதி சில சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.அதற்கு ஒரு நீண்ட கால தேவை இருக்கலாம்.நீதிபதிகளின் முக்கிய கவலை வழக்குகள் ஒதுக்குவது பற்றி தான்.எந்த வழக்கு எந்த அமர்வுக்கு போக வேண்டும் என்று சில வழி முறைகளை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் இந்த நீதிபதிகள் என்ன நன்மையை பெற்றார்கள் என்று மற்றொரு கேள்வியும் எழுந்தது.நாட்டுக்காக கடமை ஆற்றினோம் என்று நால்வரும் கூறும்போது,அஅவர்களை மூத்த நீதிபதிகள் என்ற அங்கீகாரத்துக்கு அவர்கள் மட்டும் தான் போராடுகிறார்கள்?அது தான் பிரச்சனை என்றால்,மிகப்பெரிய நன்மைகள் ஏற்படும் என்று நம்ப வைத்து முட்டாள் ஆக்கப்பட்டுள்ளோம்” என்கிறார் ஆர்வலர் ஷைலேஷ் காந்தி.

“பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது தான் நான்கு நீதிபதிகளின் நோக்கம்.இதன் பின்னர்,அரசியல் பதட்டம் உடைய வழக்குகள் ஒதுக்கும் போது எச்சரிக்கை உணர்வோடு செயல்பட இது காப்புறுதி அளிக்கும்.பதிவுத்துறை மிக விழிப்பாக இருக்கும்.தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கும் போது கூடுதல் விழிப்புடன் இருப்பார். எதிர் வரும் தலைமை நீதிபதிகள் வழக்கறிஞர்கள் சங்கம்(பார்) மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நீதிதுறையில் தங்கள் விருப்பத்துக்கு தலையிட கூடாது என்கிற செய்தி போய் சேர்ந்திருக்கிறது ” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சினேகா கலிதா(Sheba Kaliya).

இதனிடையே,நீதிமன்றத்தில் மிக முக்கியமான வழக்குகளில் தலையிடுவதாக குற்றம் சுட்டப்படும் பாஜக திட்டமிட்டு மௌனமாக இருக்கிறது.எல்லாமே நல்லபடியாக தான் இருக்கிறது என்றும் சொல்லவே ஆசைப்படுகிறது.பாஜக பதில் சொல்வதில் இருந்து தப்பிக்கிறது.நழுவுகிறது.இதில் அரசும் சம்பந்தப்பட்டு இருப்பதால்,இதனை நீதிதுறையின் உள் விவகாரமாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் மனு ஷிங்வி கூறினார்.

நீதித்துறையில் அதிக வெளிப்படையும் பொறுப்பையும் சாட்ட நீதித்துறையில் சீர்திருத்தங்களை அதிரடியாக கொண்டுவர வேண்டும்.உச்சநீதிமன்றத்தை மாற்றி அமைக்கும் தேவை இருக்கிறது என்கிறார் தில்லியிலிருந்து இயங்கும் சட்ட கொள்கைக்கான (Legal Policy) விதி சென்டரின் நிறுவனர் மற்றும் ஆய்வுகழக தலைவர் அர்கையா சென்குப்தா(Arghya Sengupta). உச,சநீதிமன்ற பணிகளை நிர்வகம்,மேல் முறையீடு ,அரசியல் சாசனம் என்று மூன்றாக பிரிக்க வேண்டும்.அரசியல் சாசன அமர்வு மூத்த வழக்கறிஞர்களை பெரும்பான்மையாக கொண்டு அமைய வேண்டும்.அத்தகைய அமர்வு தான் அரசியல் சாசன விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என்கிறார்.

11 veethi 5

இதனை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவில் இருந்தே தொடங்கலாம்.அவரது தோழமை நீதிபதிகள் அவநம்பிக்கையை ஒழிக்க வேண்டும்.மேலும்,இதுவரையில் இல்லாத ஆழமான பிரச்சனைகளில் இருந்து நீதிதுறையை மீட்க வேண்டும்.ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என நீதிபதிகள் வைக்கும் குற்றச்சாட்டு மிக முக்கியமானது.இதனை கூற இன்னும் காலம் கடத்தினால் அது,மன சாட்சியை விற்றுவிட்டது போலாகிவிடும் என்று அவர்கள் கூறி இருந்தார்கள்.நீதித்துறைக்கு இருக்கும் ஆபத்தை குறித்து எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள். அவர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து ஊழலை வெளிப்படுத்தும் ஆர்வலர்கள் போல நடந்து கொண்டார்கள்.

நீதிதுறையில் ஏற்கெனவே ஏராளமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.அரசியல்வாதிகள் தொடர்புடைய வழக்குகள் மூத்த நீதிபதிகளை தவிர்த்து விட்டு வேண்டிய நீதிபதிகளை கொண்ட அமர்வுகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு சாதகமான தீர்ப்புகள் பெறப்படுகின்றன என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.இன்று சர்ச்சையான வழக்காக இருக்கும் சொராபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை குற்றமற்றவர் என்று வழக்கில் இருந்து விடுத்து சென்றவர் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் தானே.

தனது நீதிபதி பதவியின் இறுதி காலத்தில் அந்த தீர்ப்பை வழங்கினார்.பதவி ஓய்வுக்குப் பிறகு கேரள மாநில ஆளுனர் பதவி பாஜக அரசால் வழங்கப்பட்டது.பாஜக தனது கட்சியில் நீண்ட காலம் வேலை செய்து வந்தவர்களை கௌரவிக்கும் வகையில் ஆளுநர் பதவிகளை வழங்கி வருகிறது.அந்த சமயத்தில் தலைமை நீதிபதி சதாசிவம் அந்த பதவியை பாஜக மூலம் பெற்றது முன்னர் நடந்திராத ஒன்று ஆகும்.அமித் ஷாவை விடுவித்து வழங்கிய தீர்ப்பு அரசியல் அதாயத்துக்காக வழங்கப்பட்டது என்று தான் இன்றும் கூறப்படுகிறது.இதனால்,மூத்த நீதிபதிகள் இடம்பெறும் ஒரு அமர்வில் இருந்து மட்டும் தீர்ப்பு நேர்மையாக வந்து விடும் என்று சொல்வதை ஏற்க இயலவில்லை.

நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் வெளிப்படை வேண்டும்.நீதிபதிகள் நியமனத்திலும் வெளிப்படை வேண்டும்.வழக்குகள் ஒதுக்குவதிலும வெளிப்படை தன்மையும் நேர்மையான செயல்பாடும் அறிவார்ந்த நடைமுறையும் வேண்டும்.தலைமை நீதிபதிக்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்த இருக்கும் உரிமை தடுக்கப்பட வேண்டும்.தலைமை நீதிபதிக்கு இருந்த நாணயமும் புகழும் இந்த குற்றச்சாட்டுகள் மூலம் நிலை குழைந்து விட்டது.அரசுக்கு தோதாக நீதித்துறை செயல்பாடுகளை தலைமை நீதிபதி அரசுக்கு தோதாகவும் தவறான வழியிலும் நடத்தி வந்திருக்கிறார் என்பது மூத்த நீதிபதிகள் வைத்த குற்றச்சாட்டில் இருந்து தெள்ள தெளிவாக வெளிப்பட்டு விட்டது.தலைமை நீதிபதியை கையில் வைத்து கொண்டு மத்திய அரசு வழக்குகளில் விளையாடி இருக்கிறது.அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வேண்டிய வகையில் தீர்ப்புகளை பெற்று வந்திருக்கிறது.

உதாரணமாக,தீதிபதி பி.எச்.லோயா மர்ம மரணம்,ஆதார் சம்பந்தமான வழக்கு அல்லது சி.பி.ஐ.சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கை எடுத்து கொள்வோம்.மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய வழக்கில் மருத்துவ கல்லூரிகள் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் சி.பி.ஐ விசாரணையை ஏவி விடப் போவதாக மத்திய அரசு தலைமை நீதிபதியை மிரட்டி பல காரியங்களை சாதித்து கொண்டுள்ளது.மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் கீழ் தலைமை நீதிபதி செயல்பட்டு வந்திருக்கிறார் என்பது மிக தெளிவாக தெரிகிறது என்கிறார் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.(பார்க்க:தி வீக் ஜனவரி 28,2018).உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநில அரசு மற்றும் அரசியல் அதிகாரங்களின் ஏவலாளிகள் போல செயல்பட்டு வந்திருப்பதற்கும் ஏராளமான ஆதாரங்களை மூத்த வழக்கறிஞர்கள் அடுக்குகிறார்கள்.

11 veethi

மாநில கட்சிகள்,தலைவர்கள் மீதும் முதலமைச்சர்கள் உள்ளிட்ட மாநில அதிகாரங்கள் மீது மத்திய அரசு சி.பி.ஐயை ஏவி விட்டு அவர்களை தன் வழிக்கு கொண்டு வரும் அதே பாணியை தான், நீதித்துறை மீதும் மத்திய அரசு திணித்து உள்ளது.அரசியல் செயல்பாட்டிலும்,நிர்வாக அமைப்பிலும் முதலில் நேர்மையை ஒழித்து கட்டுவது.அடுத்ததாக நேர்மை இல்லாதவர்களை,பொருத்தம் இல்லாதவர்களுக்கு பதவிகள் கொடுத்து அதிகாரத்தில் அமர வைப்பது.பின்னர் அவர்களிடத்தில் இல்லாத நேர்மையை வைத்து அதிகார மையங்களை அச்சுறுத்தி வசப்படுத்தி காரியம் சாதித்து கொள்வது. இதை ஜனநாயக அமைப்பு ஊடாகவே சாதித்து கொள்வது. மேலும் இங்கு எல்லாம் நல்லபடியாக நடந்து வருவது போல நாடகம் காட்டுவது.இது தான் ஆரியத்தின் காரிய சூழ்ச்சியாக இருக்கிறது.சாணக்கியன் கற்று கொடுக்கும் சமூக அறிவியலும் இது தான்.இவை பற்றியும் இவற்றின் போக்கு பற்றியும் பெரியார் முன்னரே எச்சரிக்கை செய்து இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.தொடரும்...

சேயன் இப்ராகிம்

கத்தோலிக்க சமய பீடத்தின் தலைமையகமான வத்திகன் நகரில் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 6, 7 தேதிகளில் நடைபெற்ற ஒரு சமயக் கருத்தரங்கில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளைச் சார்ந்த கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டிலிருந்து இந்தியப் பிரதிநிதிகளுடன் அம் மாநாட்டிற்குச் சென்ற மார்க்க அறிஞர்களில் அவரும் ஒருவர். மாநாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்துவ பாதிரியார்கள் “I am the father of London city church,” “I am the father of Paris Town city church,” “I am the father of Newyork city church,” என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தமிழகத்திலிருந்து சென்ற இந்த மார்க்க அறிஞரோ தன்னை அறிமுகப்படுத்தும் போது “I am the father of Seven Children ,”என்று கூறவே ஒட்டு மொத்த மாநாட்டு அரங்கமும் சிரிப்பலைகளால் ஆர்ப்பரித்தது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சில கிறிஸ்தவப் பாதிரியார்கள் முஸ்லிம் அறிஞர்களை நோக்கி ‘உங்களது நபியை அழகிய முன்மாதிரி என்று கூறுகிறீர்களே, நீங்களும் ஏன் அவர்களைப் போல் ஒன்பது, பத்து மனைவிகளை மணந்து கொள்ளக்கூடாது? என்று குதர்க்கமாகக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் தனது உரையினூடே கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘எங்களது நபி அவர்கள் கொண்டு வந்து எங்களுக்கு வழிகாட்டித் தந்த அருள்மறை குர்ஆன் தான் நாங்கள் முதலாவதாகப் பின்பற்ற வேண்டிய சட்டநூலாகும். உண்மையில் அது ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைத் துணைவியரை திருமணம் செய்ய விழையும் போது எங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதோடு அதனைத் தவிர்க்க வேண்டுமென்ற நோக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் நீங்கள் நீதியாக நடப்பது இயலாத காரியம் என்றும் கூறுகின்றது. ஆனால் கிறிஸ்துவ மதத்தின் புனித ஏற்பாட்டில் (பைபிளில்) புனைந்துரைக்கப்பட்டிருக்கும் கதைகள் இல் வாழ்க்கைக்குப் புறம்பான சல்லாப நிகழ்வுகளை விவரிக்கின்றன. இன்று கிருஸ்துவ மதத்தைப் பின்பற்றும் மேலை நாடுகளிலுள்ள குடும்பங்களில் நடக்கும் கூத்துக்களை நான் கூறத் தொடங்கினால் இந்த அவை சினத்தைக் கக்கும். அல்லது சிரிப்பில் திளைக்கும். மேலை நாடுகளின் கேந்திரமான அமெரிக்காவில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் திருமணங்களும், திருமண முறிவுகளும், கற்பழிப்புகளும், காதல் களியாட்டங்களும் நடக்கின்றன. மேலை நாடுகளில் குடும்ப வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து போயிருப்பதாக அன்றாடம் செய்தித் தாள்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் அறிய வருகிறோம். அவ்வாறெல்லாம் ஆகக்கூடாது என்பதற்காகத் தான் எங்கள் அருள்மறை குர்ஆனும், அண்ணல் நபி(ஸல்) அவர்களும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று அல்லது உச்சகட்டமாக நான்கு மனைவியரை மணமுடிக்கும்படி வரையறை செய்து வாழ்க்கையை இனிதாக வகுத்தளித்துத் தந்துள்ளது”
இப்படி அம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அந்த தமிழக மார்க்க அறிஞர் வேறுயாருமல்ல. 1970, 1980, 1990 களில் தமிழக இஸ்லாமிய மேடைகளை தனது கருதாழமிக்க சொற்பொழிவுகளால் பொலிவுறச் செய்த மௌலவி எம்.அப்துல் வஹாப் M.A., B.Th அவர்கள்தான்.
இளமைப் பருவம்:
மௌலவி எம்.அப்துல் வஹாப் சாகிப் 29.5.1920 அன்று அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்டிருந்த செங்கோட்டையில் (இன்றைய திருநெல்வேலி மாவட்டம்) இஸ்மாயில் – மரியம் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தந்தையார் இஸ்மாயில் பர்மா சென்று அங்கு வணிகம் செய்து வந்தார். எனினும் இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவின் தலைநகரான ரங்கூனை ஜப்பானியப் படைகள் குண்டு வீசித் தாக்கி அதனைக் கைப்பற்றியபோது ஏராளமான தமிழர்கள் அந்நகரை விட்டு வெளியேறி கால்நடையாகவே கல்கத்தா வழியாக தாயகம் திரும்பினார். அப்படித் திரும்பியவர்களில் ஒருவர்தான் இஸ்மாயிலும் ஒருவர். நல்ல வருமானம் தந்த வணிகத்தை அப்படியே விட்டு விட்டு வந்ததால் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே இஸ்மாயில் சாகிப் சிரமப்பட்டார். இந்நிலையில் அப்துல் வஹாப் சாகிபின் இளமைப் பருவம் வறுமையிலேயே கழிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை செங்கோட்டையிலிருந்த பள்ளிகளிலேயே கற்றுத் தேறிய அவர், திருவனந்தபுரத்திலுள்ள மகாராஜா கல்லூரியில் சேர்ந்து இன்டர் மீடியட் படித்தார். பின்னர் ஊரிலிருந்த சில நல்லெண்ணம் கொண்டோரின் உதவி பெற்று சென்னை சென்று அங்கிருந்த கவர்ன்மெண்ட் முகம்மதன் கல்லூரியில் சேர்ந்து இஸ்லாமிய இயலில் பட்டப் படிப்புப் படித்தார். பின்னர் உ.பி. மாநிலம் அலிகரிலுள்ள புகழ்பெற்ற முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து முதுகலை பட்டப்படிப்பையும் இஸ்லாமிய இறைமையியல் பட்டப்படிப்பையும் படித்து முடிந்தார்.
எழுத்துப்பணி:
மௌலவி அப்துல் வஹாப் சாகிப் இளமையிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். எழுத்தாளர் ஹஸன் ஆர்வமூட்டியதன் பேரில் முதன் முதலாக ஆனந்தவிகடன் வார இதழுக்கு சிறுகதை ஒன்று எழுதி அனுப்பினார். ‘மூன்றாம் கேள்வி’ என்ற தலைப்புக் கொண்ட அச்சிறுகதை அவ்விதழில் வெளியானது. பின்னர் தொடர்ந்து குமுதம் போன்ற இதழ்களிலும் கதை, கட்டுரைகள் எழுதினார். இவர் எழுதிய முதல் சரித்திரக் கதையினை நாராண. துரைக்கண்ணன் என்பவர் நடத்தி வந்த பிரசன்ட விகடன் என்ற இதழ் வெளியிட்டது.

சுதேசமித்திரன் பத்திரிகையில் இஸ்லாமிய நூல்கள் குறித்த மதிப்புரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். திருப்பத்தூர் நூர்முகம்மது நடத்திய ‘கதிர்’ என்ற மாத ஏட்டின் ஆசிரியர் குழுவிலும் சில காலம் இருந்தார். ‘டெக்கான் ஹெரால்டு’ என்ற ஆங்கில நாளிதழில் “Talking Point” என்ற தலைப்பில் அப்போதைய நாட்டு நடப்புகளை எழுதினார். காயிதேமில்லத் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முஸ்லிம்’ நாளேட்டின் தலையங்க ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிப் 1951 ஆம் ஆண்டு மணிவிளக்கு மாத இதழைத் தொடங்கிய போது அதன் ஆசிரியர் குழுவில் இவரும் இருந்தார். அந்த இதழில் திருக்குர்ஆனின் சிறப்புக்கள் குறித்து ‘தித்திக்கும் திருமறை’ என்ற தலைப்பில் தொடர் ஒன்று எழுதினார். அவரது சகோதரியின் புதல்வரான மீரான் 1956 ஆம் ஆண்டு ‘பிறை’ என்ற மாத இதழைத் தொடங்கிய போது அதன் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். அந்த இதழிலும் ‘தித்திக்கும் திருமறை’ த் தொடரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. இது பின்னர் நூலாக வெளிவந்தது. இந்த நூலுக்குத் தமிழக அரசு சிறப்பு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். நல்மணிகள் நால்வர், நவீன இப்னு பதூதா, சுவர்க்கத்துக் கவிஞன், மாநபியின் மகளார், Wisdom of Quran, இஸ்லாமிய மேதைகள் ஆகியன இவர் எழுதிய பிற நூல்களாகும்.

3. muthal thalaimurai 33. muthal thalaimurai 43. muthal thalaimurai 6
அல்லாமா இக்பாலின் ஷிக்வா ஜவாபே ஷிக்வா என்ற உருது நெடுங்கதையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இவரது எழுத்துப் பணிகளுக்குச் சிகரம் வைத்தாற் போல் அமைந்திருப்பது இஸ்லாமியத் தத்துவ மேதை இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாவு உலூமித்தீன்’ என்ற மாபெரும் நூலை இவர் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதாகும். பல்வேறு தலைப்புகளில் இது 26 நூல்களாக வெளி வந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைக்கும் இந்த நூல்கள் பல பதிப்புகளைக் கண்டு சாதனைகள் நிகழ்த்தி வருகின்றன.
1980 ஆம் ஆண்டு குமுதம் வார இதழில் பேராசிரியர ஓக் என்ற இந்துத்துவ வரலாற்றாசிரியர் தாஜ்மகால் ஒரு இந்துக் கோயிலாக இருந்ததாகவும், மொகலாய மன்னர் ஷாஜஹான் அந்த கோயிலில் பெருமளவு மாற்றங்கள் செய்து அதனை தனது மனைவியின் கல்லறையாக்கி விட்டதாகவும் எழுதியிருந்தார். பேராசிரியர் ஓக்கின் இந்த வரலாற்றுத் திரிபு வாதங்களை மறுத்து மௌலவி அப்துல் வஹாப் சாகிப் அதே குமுதம் இதழில் அடுத்து எழுதிய கட்டுரையில் தாஜ்மகால் மாமன்னர் ஷாஜஹானால் கட்டப்பட்டதே என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவியிருந்தார்.
திருக்குர்ஆனின் பதினான்காம் நூற்றாண்டு மலரையும் இவர் தொகுத்து வெளியிட்டார். இது ஒரு அரிய களஞ்சியமாக இன்றைக்கும் கருதப்படுகின்றது. பிற எழுத்தாளர்கள் எழுதிய பல நூல்களுக்கு மதிப்புரைகள் எழுதியுள்ளார்.
தோப்பில் முகம்மது மீரான், அதிரை அகமது, எம்.ஏ. அக்பர், ஆளூர் ஜலால், ஷேக்கோ போன்ற முஸ்லிம் எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவித்தார். அவர்களது படைப்புகளை ‘மணிவிளக்கிலும்’, ‘பிறை’யிலும் இடம் பெறச் செய்து அவர்களது எழுத்துத் திறமையினை உலகறியச் செய்தார்.
சொற்பொழிவாளர்:
மேடையில் இவர் தான் ஏறின்
மிக்குயர் பேச்சாளர்கள்
தாடையில் கை வைக்கத்தான்
தடையில்லாதவராய் ஆவர்.
கூடையில் விரித்த பூக்கள்
கொடியிலே ஏறிக் கொள்ள
ஓடையில் இறங்கும் நீரும்
உயரேறும் இவரின் பேச்சால்

இப்படி மௌலவி அப்துல் வஹாப் சாகிபின் பேச்சாற்றலைப் புகழ்ந்தேத்துகின்றார் தத்துவக் கவிஞர் இ.பத்ருதீன்.

ஆம் மௌலவி அப்துல் வஹாப் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மிகச் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். முப்பது, நாற்பது ஆண்டுகளாக இவரது கருத்தாழமிக்க உரைகளால் இஸ்லாமிய மாநாடுகளும், கருத்தரங்குகளும், மீலாது நிகழ்ச்சிகளும் வலிவும் பொலிவும் அடைந்தன. தமிழகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கில் இஸ்லாமிய மாநாடுகள் நடந்தாலும் அங்கு இவர் இருப்பார். இவரது உரையினைக் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது என்றால் மிகையல்ல.
தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், உருது, அரபி ஆகிய மொழிகளிலும் எழுதவும் பேசவும் வல்லமை பெற்றிருந்தார். தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், பர்மா, அரபு நாடுகள், அமெரிக்கா என உலகின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு நடைபெற்ற சமய மாநாடுகளிலும், மீலாதுக் கூட்டங்களிலும் கலந்து உரையாற்றியிருக்கிறார். இவர் கலந்து கொண்ட கூட்டங்களின் எண்ணிக்கை 3500யைத் தாண்டும்.
இவரது உரைகள் பெரும்பாலும் இஸ்லாமிய சமயம், இஸ்லாமிய அரசியல், பொருளியல் ஆகிய விஷயங்களைச் சுற்றியே இருக்கும். 2002 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ’Time and Distance’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எல்லையற்ற காலம், பிரபஞ்ச அமைப்பில் அமைந்துள்ள தூரத்தின் பரிமாணம் ஆகிய இந்த இரண்டையும் இறைவனின் ஆற்றலுடன் இணைத்து இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்திழுத்தது. (இதுவே இவரது இறுதி உரையாகவும் அமைந்தது)
சமயப் பணிகள்:
மௌலவி சாகிப் இஸ்லாமிய சமயப் பணிகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னை மண்ணடியிலுள்ள K.T.M. மன்ஸிலிலும், மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குர்ஆன் விரிவுரை வகுப்புகள் நடத்தி வந்தார். மௌலான மௌலவி K.M. நிஜாமுதீன் பாகவி ஹழ்ரத் அவர்களுடன் இணைந்து குர்ஆன் தர்ஜுமா வெளியிட்டார். திருக்குர்ஆன் அருளப் பெற்று 1400 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகமெங்கும் குர்ஆன் மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகள் பலவற்றில் இவர் கலந்து கொண்டு திருக்குர்ஆனின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர் திருவை. அப்துல் ரகுமானின் திருக்குர்ஆன் ஒலி நாடா வருவதற்குப் பெரிதும் துணைபுரிந்தார். தன்னுடன் பணியாற்றிய, தான் சந்திக்கின்ற பிற சமய நண்பர்களிடம் இஸ்லாமிய சிறப்பியல்புகளை எடுத்துக் கூறுவார். திருக்குர்ஆன் தற்காலத்திற்குப் பொருந்தாது என தி.மு.க தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது அவரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.
இலக்கிய ஈடுபாடு:
இஸ்லாமிய இலக்கியத்தில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இஸ்லாமிய இலக்கியம் குறித்து சென்னை வானொலியில் இவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒருமணி நேரம் ஆற்றிய அவ்வுரையில் உலக, இந்திய, தமிழக முக்கிய இஸ்லாமிய இலக்கியங்கள் அனைத்தையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். இவ் உரையில் இமாம் கஸ்ஸாலி அவர்கள் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தாவது :-
''இஹ்யாவுல் உலூம் (கல்வி ஞானங்களின் உயிர்ப்பு) கீமியாயே ஸஆத்த (பேரின்ப ரசவாதம்) போன்ற அரும் பெரும் நூல்களை யாத்த இமாம் கஸ்ஸாலி அவர்களை "அல் கேஸில்" என்று பெயரிட்டுப் போற்றி அவர்களது தத்துவ விளக்கங்களால் மேலை நாடுகள் பெரிதும் பயனடைந்தன. மனுக்குலம் முழுவதும் தோற்றுவித்த இலக்கியத்தின் பட்டியலைத் தொகுத்துப் பார்த்தால், அதிலும் இமாம் கஸ்ஸாலியின் பங்கு கணிசமாயிருக்கும். அனைத்துலக அறிஞர் குழாம் போற்றிப் புகழுமாறு சீரருமைத் திறம் படைத்த சிந்தனைச் சிற்பியாக, பேரொளி அகத்தே பெற்ற பேச்சாளராக, அறிஞர்மொழி அரபியிலும், விந்தை மொழி பார்சியிலும் ஆயும் திறன் படைத்த ஆசிரியராக, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத எழுத்தாளராக, மக்களை மட்டுமல்லாமல் பிராணிகளையும், பறவைகளையும் கூட நேசித்த நெஞ்சுடையவராக, தூய வாழ்வு வாழ்வதற்காக துறவறம் பூணும் அளவுக்கு நெறி பிறழாத நிறை நீதராக, கற்றோரையும், மற்றோரையும் களிப்படையச் செய்யும் கருத்துக் கருவூலமாக, அறிவுலகத்தின் அணைந்திடாப் பேரொளியாக இன்றும் விளங்கும் இமாம் கஸ்ஸாலியின் அரபி மொழியிலான நூல்களை மொழி பெயர்த்து வெளியிடும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சாரப் பிரிவு முதல் நூலாக ‘யா அய்யுஹல் வலது’ (குழந்தையே) என்னும் புத்தகத்தின் மொழி பெயர்ப்பை வெளிக் கொணர்ந்துள்ளது.’
தமிழகத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்திலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சமூக உறவு:
மௌலவி சாகிப் பட்டப் படிப்பு முடிந்ததும் இந்தியத் தபால் - தந்தித் துறையின் தணிக்கைப் பிரிவில் தணிக்கையாளராக 1943ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அரசுப் பணியில் இருந்து கொண்டேதான் அவர் எழுத்துப் பணியையும், பேச்சுப் பணியையும், சமயப் பணியையும் தொடர்ந்தார். அரசுப் பணி, பொதுப்பணி என இந்த இரண்டு பணிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் தனது செயல்பாடுகளை கவனமாக வகுத்துக் கொண்டார். எனவே அவருக்கு அரசுப் பணியில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. முஸ்லிம் அரசியலில் அவருக்கு மிகுந்த நாட்டம் இருந்த போதிலும், வெளிப்படையான கட்சி அரசியலில் அவர் ஈடுபடவில்லை. எனினும் முஸ்லிம் லீக் தலைவர்களான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிபு, சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் ஆகியோருடன் மிகுந்த நல்லுறவும் தோழமையும் கொண்டிருந்தார். மனத்தளவில் அவர் ஒரு முஸ்லிம் லீகராகவே இருந்தார். 1978ஆம் ஆண்டு இலாகா பணியிலிருந்து ஓய்வு பெற்ற உடன் அப்போதையத் தமிழ் மாநில முஸ்லிம் லீகின் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் முன்னிலையில் அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். தனது ஆயுட் காலம் முடியும்வரை முஸ்லிம் லீக்கிலேயே தொடர்ந்து இருந்து வந்தார். கட்சியில் அவருக்குப் பதவிகள் வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்க மறுத்து ஒரு தொண்டராகவே இருந்தார்.
பள்ளப்பட்டி நகரில் பொதுக் கல்வியும், மார்க்கக் கல்வியும் இணைந்து கற்பிக்கும் வண்ணம் தொடங்கப்பட்ட உஸ்வத்துல் ஹஸனா மகளிர் ஓரியண்டல் பள்ளிக் கூடத்தின் ஆரம்ப கட்டச் செயல்பாடுகளில் மௌலவி சாகிப் வழிகாட்டியாக இருந்து உறுதுணை புரிந்ததாக அந்தப் பள்ளியில் 19 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பேராசிரியை கமருன்னிஸா பேகம் தெரிவிக்கின்றார்.
மாநில வக்ப் வாரியத்தின் உறுப்பினராகவும் சென்னையிலுள்ள சில பள்ளிவாசல்களின் பொறுப்பாளராகவும் பதவிகள் வகித்துள்ளார்.
ஆளுமைப் பண்புகள்:
அழகிய தொப்பி, வெளுத்த மீசை, தாடி, ஊதா நிறக்கோட்டு, வெள்ளைப் பேண்டு, கட்சூ – இவை தான் மௌலவி சாகிபின் தோற்றப் பொலிவாகும். எப்போதும் புன்னகையுடன் இருப்பார். அவர் மிகச் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தபோதிலும், மிகுந்த தன்னடக்கத்துடன் இருப்பார். தன்னுடைய பேச்சிலோ, எழுத்திலோ ஏதேனும் தவறு இருப்பதாக யாரேனும் சுட்டிக் காட்டினால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுத் திருத்திக் கொள்வார். அதே நேரத்தில் யாரேனும் தவறான கருத்தை எழுதினால் அல்லது பேசினால் அதனைச் சுட்டிக் காட்டவும் தயக்க மாட்டார். பொது நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும் மௌலவி சாகிப் கடைசிப் பேச்சாளராகத்தான் அழைக்கப்படுவார். இருப்பினும் ஆரம்பத்திலேயே மேடைக்கு வந்து அமர்ந்து மற்றவர்கள் பேசுவதையும் கவனமாகக் கேட்பார். உரையை நிறைவு செய்ததும் அவர்கள் தெரிவித்த நல்ல கருத்துக்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பார். தவறான செய்திகளையும், விழாவுக்குப் பொருத்தமில்லாத தகவல்களையும் தெரிவிக்கின்ற பேச்சாளர்களிடம் அவற்றை நயமாகச் சுட்டிக் காட்டுவார். கொடுக்கப்பட்ட தலைப்பில் நின்று அது சம்பந்தமான ஆழ்ந்த கருத்துக்களைப் பேச வேண்டும் என விரும்புவார். இஸ்லாமியத் தத்துவ அறிஞர் இமாம் கஸ்ஸாலி அவர்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராகத் திகழ்ந்தார்.
இஸ்லாமிய சமயக் கடமைகளைப் பேணுவதில் அவர் மிகுந்த கண்ணும் கதுத்துமாக இருப்பார். ஒரு முறை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங் ஆற்றிய உரையை மொழிபெயர்க்கும் பணி மௌலவி சாகிப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது. மாலையில் நடைபெற்ற அந் நிகழ்ச்சியில் ஜனாதிபதி 10 நிமிடங்கள் மட்டுமே பேசுவர் என அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பேசத் தொடங்கிய ஜனாதிபதி பத்து நிமிடங்களையும் தாண்டி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மகரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஜனாதிபதியின் உரையை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த மௌலவி சாகிப் இடையிடையே தனது கைக்கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அப்போது மௌலவி சாகிப் ஜனாதிபதியிடம் ‘மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே, முஸ்லிம்களாகிய நாங்கள் கட்டாயமாகத் தொழ வேண்டிய குறைவான நேர இடைவெளியேயுள்ள மக்ரிப் தொழுகை தொழ வேண்டும். எனவே நான் இத்துடன் என் பொறுப்பிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மன்னிக்கவும் என்று கூறி விட்டு மேடையிலிருந்து இறங்கித் தொழுகைக்குச் சென்று விட்டார். எந்தச் சூழ்நிலையிலும் தொழுகையைத் தவற விட்டு விடக்கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதையே இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
ஒருமுறை ஒரு ஊரில் நடைபெற்ற மீலாது விழாவில் கலந்து கொண்ட அவருக்கு விழா முடிந்ததும் அவ்வூர் செல்வந்தர் ஒருவரின் வீட்டில் விருந்தளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வெள்ளிக்கிண்ணம் ஒன்றில் மாதுளைச்சாறு வழங்கப்பட்டது. இதனைக் கண்ட அவர் வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது நபிகளின் வழி முறைக்கு முரண்பட்டது என்று கூறி அதனை அருந்த மறுத்துவிட்டார். பின்னர் சாதாரணக் குவளையில் பழச்சாறு கொடுக்கப்பட்டபோது தான் அதனை அருந்தினார்.

3. muthal thalaimurai 9
பொறுப்புகள் – பதவிகள்:
மௌலவி சாகிப் சக எழுத்தாளர்களிடம் நல்லுறவு கொண்டிருந்தார். அவரது அலுவலகத்திலேயே பி.எஸ். கல்யாணராமன், பாலசுப்பிரமணியன், கோமதி சுவாமிநாதன், லூர்துநாதன் ஆகிய மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இருந்தனர். எழுத்தாளர் அமைப்புகளுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய நூலாசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவிகள் வகித்துள்ளார். 28.9.1992 அன்று இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற விழா ஒன்றில் இவருக்கு ‘செய்குத் தர்ஜுமா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
குடும்பம்: அப்துல் வஹாப் சாகிபிற்கு முகம்மது இஸ்மாயில் ஜின்னா, அப்துல் ஹக், தாஹா இப்ராகிம் புகாரி, கஸ்ஸாலி, முகம்மது சித்தீக் என ஐந்து மகன்களும் இரண்டு மகள்களும் உண்டு. மக்கள் அனைவரும் பல்வேறு பொறுப்புகளும் பதவிகளும் வகித்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.
முடிவுரை:
சில நாட்கள் உடல் நலிவுற்றிருந்த அப்துல் வஹாப் சாகிப் தனது 82 வது வயதில் 26.12.2002 அன்று மரணமுற்றார். ‘நம்முடைய நேசத்திற்குரிய ஒவ்வொருவரின் பிரிவிலும் நம்மில் ஒரு பகுதியை இழந்து விடுவதாகவே தெரிகிறது. எனினும், மழை நின்ற பிறகும் இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளைப் போல சிலரின் மறைவுக்குப் பின்னரும் நம் நெஞ்சங்களை நனைக்கும் நினைவுத் துளிகள் நம் வாழ்வை வளப்படுத்தவே செய்கின்றன. அத்தகைய மாமழை போன்று உலகைச் செழிக்கச் செய்த மவ்லானா அவர்களை நமக்குத் தந்த இறைவனுக்கே எல்லாம் புகழும்’ என்று அவரது நினைவைப் போற்றும் வண்ணம் குறிப்பிடுகின்றார் அவரது புதல்வர் அப்துல்ஹக். அவரது கருத்துக்களை நாமும் வழிமொழிகிறோம். மௌலவி அப்துல் வஹாப் சாகிப் தமிழகம் கண்ட மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவர். பலருக்கும் அவர் வழி காட்டியாகத் திகழ்ந்தார். அவரது வாழ்க்கையில் அனைவருக்கும் ஒரு சிறந்த முன் மாதிரி இருக்கின்றது.
ஆதார நூல்: திரியெம் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள ‘அல்லாமா அப்துல் வஹாப் சாகிப் நினைவுத் தொகுப்பு’ என்ற நூல்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

என்.ஜாஹிர் உசேன், மருந்தாளுநர், மனித வள மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், தொடர்பு எண் : +91 98427 03690, +91 75982 03690 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் அறிமுகம்
(என்.ஜாஹிர் உசேன் அவர்கள், ஈரோட்டில் வசித்து வருகிறார். 32 வருடங்களாக மருந்து வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். 15 வருடங்களாக மனிதவள மேம்பாடு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். “கற்றதையும் பெற்றதையும் யார் திருப்பி தருகின்றாரோ அவர்தான் இறைவனிடத்தில் பெறுவதற்கும் கேட்பதற்கும் தகுதியானவர்” என்ற எண்ணத்தின் காரணமாக தான் கற்ற, பெற்ற, படித்து அறிந்து புரிந்து கொண்ட அனுபவங்களை, பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களின் வாழ்வியல் செய்திகளையும் நல்கருத்துக்களையும் இளைய தலைமுறையினர், சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தொழில் முனைவோர்கள், சுய தொழில் குழு பெண்கள், பெண்கள் அமைப்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தன்னம்பிக்கை (self confidence) ஆளுமைத் திறன் மேம்பாடு (Personality Development) பெண்ணாலும் முடியும் (women can) தொழில் முனைவோர் மேம்பாடு (Entrepreneurship Development) என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். மேலும் பெற்றோர்களுக்கு “பெற்றோர்கள் சாதனையாளர்களின் முகவரி” (Parents are Address of Achievers) ஆசிரியர்களுக்கு “ஆசிரியர்களே மாணவர்களின் முன்மாதிரி (Teachers Are Role Models of students)’ பணியாளர்களுக்கு “பணித்திறன் மேம்பாடு (Employability)’ போன்ற தலைப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தியுள்ளார். பல்வேறு புத்தகங்கள் மேலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆளுமை திறன் கொண்ட தொழில் முனைவோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை உருவாக்குவதே அவரது வாழ்நாள் லட்சிமாக கொண்டுள்ளார். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக.)
எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக…
தொழிலும் நாமும் வேறல்ல! தொழில்தான் நமது வேர்
கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு இரண்டின் மூலம்தான் குடும்பங்கள் மற்றும் ஒரு தேசத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது.
எல்லாம் வல்ல இறைவன் அருளால், சிறு மற்று குறு தொழில் செய்பவர்கள் மற்றும் புதிதாக தொழில் துவங்க எண்ணம் கொண்டவர்களுக்கு தொழில் செய்யும் தன்னம்பிக்கை, ஊக்கம் மற்றும் உற்சாகத்தையும் தொழில் செய்வதற்கான வழிமுறைகள், செயல் திட்டங்களை “தொழில் செய்வோம் வளம் பெறுவோம்” என்ற பெயரில் தொடராக நமது சமூகநீதி முரசு மாத இதழ் மூலம் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உலக அளவிலும் சரி, நமது தேச அளவிலும் சரி 80% பொருளாதாரத்தை கையாளுபவர்கள் 20% தொழில்துறையில் உள்ளவர்கள் தான் என்பது 100% நிதர்சன உண்மை.
இப்படிப்பட்ட மதிப்புமிக்க, பொருளாதார வளர்ச்சியைத் தரும் தொழில் துறையில் ஈடுபட்டு வெற்றி பெற எல்லோராலும் முடியும்.
அதற்காக அளப்பரிய ஆற்றல், அறிவு, திறமை, வாய்ப்புகள் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அனைத்து மனிதர்களுக்கும் தந்துள்ளான். இதை முழு நம்பிக்கையுடன் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தியவர்கள்தான் எத்துறையாயினும் தனி முத்திரை பதித்த சாதனையாளர்கள்.
தொழில் துறையில் நிறைய பேர் தயக்கம் கொள்ள சொல்லும் காரணங்கள்,தொழில் துவங்க நிறைய பணம் தேவை, நிரம்ப படிப்பறிவு வேண்டும். நஷ்டம் ஆகிவிட்டால் பணத்தை இழந்து விடுவோமா என்ற பயம் ஏன் தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) மற்றும் தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) கொண்டுள்ளது.
இன்றைய தினங்களில் தேசிய அளவில் மட்டுமல்ல நமது மாநிலத்தில் உள்ள தொழில்துறை சாதனையாளர்கள் பெரும்பான்மையினர் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர்கள், மிக மிக சொற்ப தொகையைக் கொண்டு தொழில் துறைக்கு வந்தவர்கள், வளரும் போது அந்த சொற்ப தொகை கூட இல்லாதவர்கள் பலரும் கூட இன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் தன் தொழில் நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தன் நிறுவனத்தின் மூலம் சிறு குறு தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கிக் கொண்டுள்ளார்கள். வருடா வருடம் பல லட்சம் ரூபாய்களை கல்வி உதவித் தொகைகளை கொடையாக வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
தொழில் துறையில் நுழைவதற்கு படிப்பு, பணம் தேவையில்லை என்பது இதன் அர்த்தமில்லை. அவை வாழ்வதற்கான ஓர் கருவி மட்டுமே, அவை இருந்தால் மட்டுமே தொழில்துறையில் வெற்றி பெற முடியும் என்று காரணம் கூறாமல், சூழ்நிலையை காரணம் காட்டாமல் சாதித்தவர்கள்தான் முன்மாதிரி சாதனையாளர் என்ற வகையில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் எதிர்மறை சூழ்நிலைகளைக் காரணம் காட்டாமல் வெற்றிக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டவர்கள்.
தான் விரும்பும் தொழில் துறையில் இன்றைய சாதனையாளர்கள் 10 தாரக மந்திரத்தை வெற்றிக்கான சூத்திரங்களை தன் மனதில் ஆழமாக விதைத்து உள்ளத்தால் உணர்வால் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தியுள்ளார்கள்.
சாதனையாளர்கள் சாதனைக்கோர் பாதை அமைத்து வெற்றி கொண்டுள்ள 10 தாரக மந்திரங்கள்.
1. தன்னம்பிக்கை (Self - Confidence)
2. இலக்குகளை தீர்மானித்தல் (Goal Setting)
3. முடிவெடுக்கும் திறன் (Decision Making)
4. விடா முயற்சி (Perseverance)
5. பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving)
6. வாய்ப்புகளை பயன்படுத்துதல் (Opportunities Utilization)
7. நேர மேலாண்மை (Time Management)
8. மனித உறவுகள் (Human Relations)
9. மாற்றம் / புதுப்பித்தல் (Changes – Update)
10. சந்தைப்படுத்துதல் (Marketing)
இந்த 10 தாரக மந்திரங்களை முழுமனதுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தினால் நம்மாலும் சாதிக்க முடியும்.
முயற்சியும் பயிற்சியும் செய்தால் சாதாரணமானவர்களும் சாதனையாளராகலாம்.

தொடரும்…

2004 டிசம்பர், 26
சொல்லிக் கொள்ளாமல் சுனாமி வந்தநாள். தன் பெயரைப் பிரபலப்படுத்த ஆழிப்பேரலை கடலோரக் கிராமங்களை காவு கொண்ட நாள். படகுகளைப் பந்தாடி குப்பங்களை கொலைக்களம் ஆக்கிய நாள்.
பரங்கிப் பேட்டைக்கும் அந்த பாதரவு வந்தது. கடலோர மக்கள் பசியும் பட்டினியுமாய் அடுத்தடுத்துள்ள தெருக்களில் நிர்க்கதியாய் நின்றனர்.
அன்று ஓர் மணவிழ என்பதால் அங்குள்ள முஸ்லிம்கள் ஒன்றாய்க் கூடியிருந்தனர். அவர்கள் கவனம் மணப்பந்தலை விட்டு மீனவர்களின் இயலாமையின் பக்கம் சாய்ந்தது. விழாவுக்காக சமைக்கப்பட்ட உணவு மீனவர்களின் பசியைப் போக்க உதவியது. அடுத்து பாதிக்கப்பட்டவர்களை நோக்கி சகோதர சமுதாயத்தின் உதவிக்கரங்கள் நீண்டன.
அன்றுவரை ஒரு வகையான சுவருக்குப்பின் வாழ்ந்தவர்களை சுனாமி ஒன்றாக்கியது. சுவற்றை உடைத்தெறிந்தது.
நிலைமைகள் சரியாகி கடலுக்குச் சென்ற மீனவர்கள் தாய் பிள்ளை அன்போடு அனைத்தையும் பள்ளிவாசல் வாயிலுக்குக் கொண்டு வந்து கொட்டினர்.

2. parangip pettai 6
சுனாமி செய்த ஒரு நாள் பாய்ச்சலால் முஸ்லிம்களும் மீனவர்களும் ஒன்றாகினர். உறவுக்கரம் பற்றினர்: இவ்வுறவை மேம்படுத்தியவர் பேரூராட்சியின் மேனாள் தலைவர் யூனுஸ் அவர்கள்.
கடலோரங்களில் பெரும்பாலும் மீனவமக்களும் முஸ்லிம் மக்களுமே வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் இரு சமுதாயங்களிடையே நீண்ட உறவுகளோ நெருக்கமான தொடர்புகளோ இல்லை. இதை சுனாமி பரங்கிப்பேட்டையில் புரட்டிப்போட்டது.
கடல், கடலோர மக்களை ஆய்வு செய்துவரும் பேராசிரியரும் ‘பழவேற்காட்டிலிருந்து நீரோடிவரை’ எனும் நூலாசிரியருமான வஹீதையா கான்ஸ்டைன் கடற்புரத்து மக்களிடையேயுள்ள தொடர்பின்மையைப் பற்றிக் கவலைப்படுகிறார். இனிவரும் ஏதாவது கட்டுரையில் நாம் கடற்புரத்து மக்களின் தொடர்பையும் தூர விலகி நிற்பதையும் பற்றி விரிவாகப் காண்போம்.
பரங்கிப் பேட்டை கடலூர் மாவட்டத்து பாழைய துறைமுக ஊர். இங்கிருந்து கடலூர் 30 கி.மீ. தூரத்தில் வடக்கில் உள்ளது.
பழம்பெரும் நகரான பரங்கிப்பேட்டையின் பழைய பெயர்கள் : ஆதிமூலோவரம், வருணா புரி, கிருஷ்ணாபுரி, கிருஷ்ண பட்டினம், முத்து கிருஷ்ணபுரி, நாயக்கர்களின் ஆட்சியிலிருந்த துறைமுகப்பட்டினம் முஸ்லிம்களின் பெருக்கத்திற்குப்பின் முகமதுபந்தர் எனப் பெயர் பெற்றுள்ளது. பந்தர் என்பதன் பொருள் துறைமுகப்பட்டினம் என்பதே. பரங்கியர்களின் குடியேற்றத்திற்குப்பின் பரங்கிப்பேட்டை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நோவா என்பது நூஹ் நபியைக் குறிக்கும் சொல் நூஹ் நபி கடற்பயணத்தைக் குறிக்கவோ PORTNOVA எனப் பெயரிடப்பட்டுள்ளது!
இவ்வூரின் பழம்பெருமைகளில் முக்கியமானது நபித்தோழர் உக்காஸா (ரலி) அவர்களின் அடக்கத்தலம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இஸ்லாமியப் பேரொளி கிழக்குக் கடலோரங்களில் பரவியதைப் பற்றியும் உக்காஸா (ரலி) பற்றியும் பாகிஸ்தானின் நபீஸ் அகாடமி வெளியிட்டுள்ள நூலொன்று விரிவாகப் பேசுகிறது.
‘ஆயினேயே அகீகத்துல் நுவஸி’ -உண்மையான வரலாற்றுக் கண்ணாடி- எனும் நூல் பரங்கிப் பேட்டை பற்றி பேசுகிறது. இதன் ஆசிரியர்: மௌலானா அக்பர் ஷாஹ் கான் நஜீப் ஆபாதி. இந்தநூல் தவிர ‘இந்தியத் துறவிகள் – ‘Saints of india’ எனும் நூலும் உக்காஸா (ரலி) பற்றி கூறுகிறது. இவரின் அடக்கத்தலம் ‘கண்டெடுக்கப்பட்ட பள்ளி’ என அழைக்கப்படுகிறது. முந்தைய கால கட்டத்தில் இப்பகுதியில் புகையிலைத் தோட்டங்கள் இருந்தனவாம்.
ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே அரபு வணிகர்கள் பரங்கிப்பேட்டைக்கு வந்து சென்றுள்ளனர். உக்காஸா (ரலி) வருகையின் போது வந்தவர்களும் அவரால் இஸ்லாத்தைத் தழுவியவர்களும் இறைநேசர்களாகி பரங்கிப்பேட்டை முழுவதும் அடங்கியுள்ளார்கள். அவர்களின் கபரடிகள் 360-வும் இன்று சிறிய பெரிய தர்காக்களாக உள்ளன.
எட்டு, ஒன்பது, பத்து என நூற்றாண்டுகள் ஓட பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து வந்து கடியேறிய பனிரெண்டு பட்டினங்களில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. இவர்களின் பண்பாட்டு அடையாளம் பெண்வீட்டுக்கு மாப்பிள்ளை சென்றுவாழ்வது, பெண்ணுக்கு சீதனமாய் வீடு வழங்குவது. இப்பழக்கம் பரங்கிப்பேட்டையிலும் உண்டு. இப்பழக்கம் இல்லாத முஸ்லிம் குடிகளும் இங்கு உண்டு.

2. parangip pettai 2
5000 முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட பரங்கிப்பேட்டையில் பதினாறு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இன்று வெளிநாடுகளுக்கு சென்ற முஸ்லிம்கள் அன்று கப்பல்காரர்களாய விளங்கியுள்ளனர், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அயல்நாடுகளில் உள்ளனர்.
முனைவர் ஜெ. ராஜாமுகம்மது எழுதியுள்ள ‘தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ எனும் நூல் பரங்கிப்பேட்டையின் பண்டைய வரலாற்றைப் பாறைசாற்றுகிறது.
துறைமுகத்தின் அமைவிடமே அதன் மேன்மையை மேலும் மேலும் உயர்த்தும் பரங்கிப்பேட்டைத் துறைமுகத்தின் அமைப்பு கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமாக இருக்கிறது. கொள்ளிடத்திலிருந்து கிளைபிரிந்துவரும் வெள்ளாறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் இடதுபக்கம் முகத்துவாரம் அமைந்துள்ளது. முகத்துவாரம் வழியாக மரக்கலங்கள் ஆற்றில் நங்கூரமிடப்படும். தெற்கே பிச்சாவரம் சதுப்பு நில சுரப்புன்னைக் காடுகள் பாதுகாப்பாய் அமைந்துள்ளன.
கிழக்குக்கடற்கரை துறைமுகங்கள் கிரேக்கம், ரோமர், யாவனர் என தொடர்புவைத்திருந்த வணிக மையங்கள். அரபு முஸ்லிம்கள் வருகை தந்து கொண்டிருந்த முகத்துவாரங்கள் காலப்போக்கில் போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சியர், ஆங்கிலேயர்கள் வசம் கைமாறின. இவர்களைப் பொதுவாக பரங்கியர் என வரலாறு கூறுகிறது.
இவர்களில் டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியிலும், பரங்கிப்பேட்டையிலும் வணிகம் செய்துள்ளனர். இவர்களின் எச்சமாக தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டையும் பரங்கிப் பேட்டையில் ‘டேனிஷ்மெண்ட் மிஷன் பள்ளி’யும் உள்ளன. இப்பள்ளிக்கு அண்ணல் காந்தி அடிக்கல் நாட்டியுள்ளார்.
டச்சுக்காரர்களை இலங்கையர் ஒல்லாந்தர் என்பர், பரங்கிப்பேட்டையிலும் அவர்கள் ஒல்லாந்தர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் நிறுவனங்கள் இருந்த பகுதி ‘ஒல்லாந்தர் தோட்டம்’ என்றும் கல்லறை ‘ஒல்லாந்தர் கல்லறை’ என்றும் இன்றும் குறிப்பிடப்படுகின்றன.
பரங்கிப்பேட்டையிலிருந்து துணிவகைகளும் சாயவகைகளும் (INDIGO) ஏற்றுமதியாகியுள்ளன. இவை கிழக்கு - மேற்கு நாடுகளை சென்றடைந்துள்ளன.
துணிமணிகளோடு அரிசி, நவதானியங்களும் ஏற்றுமதியாகின. யானை, குதிரைகளோடு, மிளகு, லவங்கம், பாக்கு, வாசனைத் திரவியங்களும் இறக்குமதியாகின. கெதா, பைகு, ஜோகர் போன்ற கிழக்காசிய நாட்டு மன்னர்கள் தம் கப்பல்களை பரங்கிப்பேட்டைக்கு அனுப்பினர்.
பரங்கிப்பேட்டை கப்பல் கட்டும் தொழிலில் புகழ்பெற்றிருந்தது. இங்கு கட்டப்பட்ட கப்பல்களை கிழக்காசிய பண்டம் நாட்டு சுல்தான் விரும்பி வாங்கியதாக ஆவணங்கள் உள்ளன. சிறந்த ஓடாவிகளாய் இருந்த முஸ்லிம்கள் கப்பல்களைக் கட்டியதோடு பழுது பார்ப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளனர். கப்பல் கட்டுவோர் கலப்பத்தர் எனவும் அழைக்கப்பட்டனர். கப்பல் கட்டதேவையான மரங்களை விற்க கிட்டங்கிகள் இருந்துள்ளன.
பரங்கிப்பேட்டை கப்பல் வணிகர்கள் கல்கத்தா முதல் மலாக்கா, அச்சை, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய இடங்களில் பெரும்வணிகம் செய்தனர். சென்ற இடங்களில் தங்கியும் தொழில் செய்துள்ளனர். சோழ மண்டலக்கடற்கரையிலிருந்து சென்று வாழ்ந்தவர்களின் தெருக்கள் சோழியர் தெரு என அழைக்கப்பட்டன.
முஸ்லிம்கள் வணிகர்களாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் மாலுமிகளாகவும் கப்பல் தொழிலாளர்களாகவும் விளங்கியுள்ளனர். கப்பல் மாலுமிக்கு அரபு மொழியில் ‘நகுதர்’ எனப் பெயர். நகுதா எனும் பெயரோடு முஸ்லிம்கள் உள்ள ஊர்கள் பரங்கிப்பேட்டையும் நாகூரும் ஆகும். வேறு ஊர்களில் இப்பெயர் புழக்கத்தில் இல்லை.
இராமநாதபுர மாவட்ட புதுமடம் போன்ற ஊர் முஸ்லிம்கள் பெயரோடு ‘நகுதா’ எனப்பொருள்தரும் சம்மாட்டி எனும் சொல்லை பெயரோடு சேர்த்துக் கொள்கின்றனர். கப்பலின் மீகாமனே சம்மாட்டி ஆவார்.
பரங்கிப்பேட்டை வணிகர்கள் கிழக்காசியத் துறை முகங்களில் பெயர் சொல்லும் அளவில் தொழில் செய்துள்ளனர். மலாக்கா நாட்டு எபராக் துறைமுகத்தில் சித்திக்லெப்பை அந்நாட்டின் அரசு வணிகராக விளங்கியுள்ளார். ஷேக் சந்தா மரைக்காயர், ஷேக் இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் பர்மா துறைமுகங்களில் பெயர் பெற்றிருந்தனர்.
முகம்மது அலீ மரைக்காயர் பல கப்பல்களுக்குச் சொந்தக்காரராயிருந்துள்ளார். ஹபீபுல்லா மரைக்காயர் ‘படே தவுலத்’ எனும் கப்பலுக்குச் சொந்தக்காரராயிருந்துள்ளார். மீரா லெப்பை, பீர் மரைக்காயர் எனப் பலர் செல்வாக்கு மிக்க கப்பல் வணிகராய்த் திகழ்ந்துள்ளனர்.

2. parangip pettai 3
பரங்கிப்பேட்டை ஆற்காடு நவாபின் துறைமுகங்களில் ஒன்று. முகம்மது அலீ ஆற்காடு நவாபாக இருந்தபோது சஃப்பைனதுல்லா, சஃப்பைனத்துல் நபிம் ஆகிய இரு கப்பல்கள் அவர்களுக்குக் சொந்தமாக இருந்தன. இந்த இரு கப்பல்களும் பயணிகளோடு பொருட்களையும் ஏற்றிக்கொண்டு இங்கிருந்து அரபகத்துக்குப் புனிதப்பயணம் செல்ல பயன்பட்டிருக்கின்றன. இவற்றின் மாலுமிகளும் தொழிலாளர்களும் பரங்கிப்பேட்டை சகோதரர்களாய் இருந்துள்ளனர்.
பரங்கியரின் தொழில் போட்டியால் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் விவசாயிகளாய் மாறினர். அவர்கள் வெற்றிலைக் கொடிக்காரர்காளகவும் புகையிலை பயிரிடுபவர்களாகவும் உள்நாட்டு வணிகர்களாகவும் புதிய களங்களைக் கண்டனர். பலர் வெளிநாடுகளில் தங்கி புதிய வணிகங்களை மேற்கொண்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அருகில் இருப்பதால் பரங்கிப்பேட்டைக்காரர்கள் பட்டதாரிகளாக மாற வாய்ப்பேற்பட்டது. அவர்கள் பல்வேறு பணிகளில் சேர்ந்து உயர்வடைய கல்வி கை கொடுத்தது.
பரங்கிப்பேட்டை கடல் வளம் நிறைந்த பகுதி, இங்கு கடற்கரை கழிமுகம் சதுப்பு நிலம் ஆற்று நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன. இந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் - Marine Biology Study Center - ஒன்றினை நிறுவியுள்ளனர்.
இந்த மையத்தில் கடல் உயிரினங்கள், பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது, இதனைக்காண ஏராளமான பெதுமக்கள் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகமும் இங்கு இருக்கிறது. ஆய்வுக்காக ஒரு கப்பலும் நான்கு படகுகளும் கூட இங்கு உள்ளன. இந்த ஆய்வு மையம்தான் இந்தியாவில் கடல் உயிரின ஆய்வுக்கான தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையமாகும்.
பேராசிரியர் சாதிக் அப்துல் அமீது சென்னை சதக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், பரங்கிப்பேட்டைக்காரர், நல்ல நண்பர், ஆய்வாளரும்கூட, அவரை நான் பரங்கிப்பேட்டையில் சந்தித்தேன். அவர் பல அரிய தகவல்களைத் தந்தார்.
கி.பி. 1784 இல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவுப் போர்க்கொடி கம்பமும் கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளன. ஹைதர் அலி தோல்வியைத் தழுவியதைப் பற்றிய கல்வெட்டு ஒன்று உண்டு. அப்போரில் மரணித்தவர்கள் ஹில்ரு நபி பள்ளிவாசல் கப்ரஸ்தானில் ஓய்வுறக்கத்தில் உள்ளார்கள்.
ஆசியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை பரங்கிப்பேட்டையில் நிறுவப்பட்டிருந்தது. 1818 - இல் நிறுவப்பட்ட உருக்காலை ஜோயம் ஹீத் எனும் ஆங்கிலேய வணிகரால் உருவாக்கப்பட்டது. இங்கு கட்டிடங்களுக்கான வார்ப்படங்களும் பாலங்களுக்கான இரும்புத் தொகுதிகளும் வடிக்கப்பட்டு லண்டன், சிங்கப்பூர் என ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில்வே அலுவலகங்களில் கூட பரங்கிப்பேட்டை வார்ப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளாற்றங்கரையில் அமைக்கப்பட்ட இரும்பாலைக்கு சேலத்திலிருந்து இரும்புத்தாதுக்கள் நீர்வழியாகவே கொண்டுவரப்பட்டுள்ளன. நீர் வழி, கடல் வழிப் பயன்பாடுகள் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் பரங்கிப்பேட்டை வளம் கொழிக்கும் ஊராகத் திகழ்ந்துள்ளது.
பரங்கிப்பேட்டை வெள்ளாறும் கடலூர் உப்பனாறும் இணைக்கப்பட்டு அந்நீர்த்தடம் புதுச்சேரியைக் கடந்து பக்கிங்காங்கால்வாயோடு சேர்க்கப்படும் திட்டம் செயல் படுத்தப்படாமல் போயிருக்கிறது. கடலோர ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழிப் பயணங்கள் தொடர்ந்திருந்தால் கிழக்குக் கடற்கரைச்சாலை பயணத்திற்கு இணையாக நீர்த்தடப் பயணங்களும் வளர்ந்திருக்கும்.
மதராஸ் பட்டினத்திலிருந்து கடலூர், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினத்தைத் தொட்டு மலேயா, சிங்கப்பூர் சென்ற கப்பல்கள் பொருள்களோடு பயணிகளையும் ஏற்றிக் சென்றுள்ளன.
இன்றைய சாலைப் போக்குவரத்தோடு நீர் வழிப்போக்குவரத்தையும் கடல் வழிப் போக்குவரத்தையும் கற்பனை செய்து பாருங்கள், காக்கிநாடாவிலிருந்து பரங்கிப்பேட்டை வரை உருவாகியிருக்க வேண்டிய மூன்று வழிப்பாதைகள் தரைவழிப் பாதையாக மட்டும் சுருங்கிப் போய்விட்டது. இந்த சுருக்கத்தை இருப்புப்பாதை ஓரளவு விரிவடையச் செய்துள்ளது.
பேராசிரியர் சாதிக் அப்துல் அமீது சீறா புராணம் பற்றிய சில செய்திகளைச் கூறினார் சீறாப் புராணத்தின் கையேட்டுப் பிரதிகள் இரண்டு பரங்கிப்பேட்டையில் இருந்ததாகவும் அவை ஹாஜி காதர் அலி மரைக்காயர் ஜனாப் ஒலி சாகிபு ஆகிய இருவரின் வசம் இருந்ததாகவும் பேராசிரியர் கூறினார்.
அக்கையேட்டுப் பிரதிகளில் ஒன்று 1890 - இல் கண்ணமுது மகமூது புலவர் மூலம் பதிப்பிக்கப்பட்டு ஜனாப் அபுல் காசிம் மரைக்கார் இல்லத்தின் முன் போடப்பட்ட பந்தலில் வெளியிடப்பட்டதாகவும் பேராசிரியர் கூறினார்.
பரங்கிப்பேட்டையில் அடங்கப்பட்டிருக்கும் உக்காஸா (ரலி) பற்றி கூறிய பேராசிரியர் கோல்கொண்டாவிலிருந்து வந்து அடங்கியிருக்கும் இறைநேச செல்வர் அக்காஷா பற்றியும் எடுத்துரைத்தார். அக்காஷா தர்காவின் கந்தூரிவிழா மிகவும் பெரிய அளவில் நடந்ததாகவும் அங்கு நடந்த பெருஞ் சந்தையில் எல்லாப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்தாகவும் என்னுடைய பரங்கிப்பேட்டை உறவினர் கவுஸ் பழைய கால நினைவுகளைக் கண்முன் கொண்டுவந்தார்.
எந்த ஊரிலும் இல்லாத அளவுக்க பரங்கிப் பேட்டையில் உள்ள தர்காக்களில் பெண் இறைநேசர் அரைக்காசு நாச்சியார் தர்காவும் ஒன்று. எமனிலிருந்து வந்து அடக்கமாகியிருக்கும் அன்னையின் சரியான பெயர் அல் குறைஷ் பீவி.
முற் காலத்தில் மூன்று முஸ்லிம்களின் ஊர்களுக்கு ‘வகுதை’ எனும் சிறப்புப்பெயர் சூட்டப்பட்டிருந்தது. அவை காயல்பட்டினம், கீழக்கரை, பரங்கிப்பேட்டை ஆகிய பட்டினங்களாகும். தொன்மைக்காலத்தில் பாரசீகத்தின் பாக்தாத் பெரும் புகழ் பெற்றிருந்த காரணத்தால் அந்த நகரத்தின் பெயரைத் தம் ஊர்களுக்கும் முஸ்லிம்கள் சூட்டி மகிழ்ந்தனர். பாக்தாத்தின் தமிழ் வடிவமே வகுதை. முந்தைய காலத்தில் கீழக்கரை, காயல்பட்டின வணிகர்கள் நாகூரில் குடியேறியதைப் போல் காயல் வணிகர்கள் பரங்கிப்பேட்டையிலும் குடியேறியிருந்தனர். அவர்கள் வாழ்ந்த தெரு காயல் தெரு.
டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் நாணயங்களை வெளியிட்டு புழக்கத்தில் விட்டது போல் பரங்கிப்பேட்டையிலும் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். அவை ‘பரங்கிப்பேட்டை பகடா’ என குறிப்பிடப்பட்டன.

2. parangip pettai 8
பரங்கியர் காலத்தில் பரங்கிப்பேட்டையில் நெசவாலைகளும் சாய ஆலைகளும் முக்கியம் வகித்தன. டச்சுக்காரர்கள் கூட சாய ஆலை வைத்திருந்தனர். சாய ஆலை இருந்த பகுதி வண்ணாரப்பாளையம் என இன்றும் அழைக்கப்படுகிறது. கடலூரிலும் வண்ணாரப்பாளையம் உள்ளது. மதரஸாபட்டினத்திலும், திருநெல்வெலியிலும் வண்ணாரப்பேட்டைகள் உள்ளன.
இன்று பரங்கிப்பேட்டையில் நெசவுத் தொழில் இல்லையென்றாலும் அடுத்துள்ள புவனகிரியில் கைத்தறி தொழில் சிறப்புற்று விளங்குகிறது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் புவனகிரியில் இரு பள்ளிவாசல்கள் உள்ளன. முட்லூர், பெருமாத்தூர் பெரியபட்டு ஆகிய ஊர்களில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர். முட்லூரில் மட்டும் நான்கு பள்ளிவாசல்கள் உள்ளன. அடுத்துள்ள சிதம்பரத்தில் ஆறு பள்ளிவாசல்கள் உள்ளன.
பழம் புகழைப் பறை சாற்றுவதுபோல் கலங்கரை விளக்கமும் சுங்க அலுவலகமும் தோணித்துறையும் விளங்குகின்றன. புவனகிரி வட்டத்திலும் சிதம்பரம் தொகுதியிலும் உள்ள பரங்கிக்பேட்டை நாற்பதுக்கு மேற்பட்ட தெருக்களைக் கொண்ட பேரூர். ஒவ்வொரு தெருவும் கணிசமான அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்பு நீதிமன்றமும் கிளைச் சிறைச்சாலையும் கூட இருக்கின்றன.
பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் பனிரெண்டு கிழக்குக் கடற்கரைப்பட்டினங்களில் வாழ்ந்து வருவதாக ஆவணங்கள் உள்ளன. காயல்பட்டினத்திலிருந்து பழவேற்காடு வரை ஆங்காங்கு அவர்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்த வருகின்றனர். அவர்கள் அவர்களுக்குள்ளேயே அகமணம் புரிந்து வாழ்கின்றனர்.
பழவேற்காட்டின் அருகில் அவர்களின் வகையறா இல்லாததால் அவர்களுக்குள்ளே மணம் முடித்துக் கொள்கின்றனர். பரங்கிப்பேட்டைக்காரர்கள் கடலூரும் திரு முல்லை வாசலும் அருகில் இருப்பதால் அகமணம் செய்து கொள்கின்றனர். என்றாலும் தற்போது அவ்வழக்கம் மாறிவருகிறது. கீழக்கரை - காயல்பட்டின மரைக்கார்கள் அவ்வழக்கத்தைத் தொடர்கின்றனர். தொலைவைப் பார்க்காமல் இரு ஊராரும் தொடர்ந்து தம் உறவைப் பேணி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டைக்காரர்கள் புதுவை, கோட்டக்குப்பம், நெல்லிக்குப்பம் வரை சம்பந்தம் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன் காரைக்காலில் ஒரு தம்பியைச் சந்தித்தேன். அவர் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவக்கடிக்காரர். அவர் தன் சகோதரியை பரங்கிப்பேட்டையில் மணம் முடித்துக் கொடுத்திருப்பதாக சொன்னார்.
தொடக்கத்தில் சிங்கப்பூர், மலேசியா முதலிய கிழக்காசிய நாடுகளில் சம்பாதித்ததோடு சம்பந்தமும் செய்து வாழ்ந்த பரங்கிப்பேட்டைக்காரர்கள் இன்று அரபு நாடுகள் முழுதும் சென்று சம்பாதித்து வாழ்கின்றனர்.
அமைதியான ஊர், அழகான ஊர், பழம்பெருமை வாய்ந்த ஊர் பரங்கிப்பேட்டை. இப்பேரூரை நீங்கள் ஒரு முறை சென்று கண்டு வரவேண்டும். பழங்கால நினைவுகளை நெஞ்சில் கொண்டு வர வேண்டும்.

 அ. முஹம்மது கான் பாகவி

மாணவக் கண்மணிகளே! அரபிக் கல்லூரியில் நீங்கள் மாசுமறுவற்ற முறையில் கற்க வேண்டிய மிக முக்கியமான கலை “இறையியல்” ஆகும். ‘கடவுள்’ என்ற தத்துவத்தையும் அதை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளையும் குறித்த துறையே ‘இறையியல்’ (Theology) எனப்படுகிறது. இதையே, இறைவனின் தன்மை (இறைமை), இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆகியன பற்றிய துறை என்றும் கூறுவர்.
மத்ரஸாக்களில் இதையே ‘அகீதா’ (நம்பிக்கை) என்று குறிப்பிடுவர். இறைவன் என்றால் யார்? அவனது மெய்மை என்ன? அவனுக்கே உரிய தனித்தன்மைகள் யாவை? அவன் நம்பச்சொன்ன இறை மார்க்கம், இறைத்தூதர், இறைமறை, வானவர்கள், மறுமை, மரணத்திற்குப்பின் உயிர் கொடுத்து எழுப்பப்படல், இறைவனின் விசாரணை, அவனது தீர்ப்பு, நல்லோருக்கு அழியா சொர்க்கம், தீயோருக்கு நரகம்… போன்ற நம்பிக்கைகள் தொடர்பாக அறிந்து, ஐயத்திற்கிடமின்றி திடமாக நம்புவதே ‘அகீதா’ எனப்படுகிறது.
இந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும்தான் மார்க்கத்தின் அஸ்திவாரம்; செயல்கள், வழிபாடுகள் அனைத்தும் அதன் கிளைகள். இந்த அடிப்படை நம்பிக்கைகளைத்தான் ஆரம்பமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் போதித்தார்கள்; மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்தார்கள்.
இருக்கின்றான் இறைவன்; அவன் ஒருவன்; அவனுக்கு இணைதுணை கிடையாது; எந்தத் தேவையும் இல்லாதவன். அவனை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனும் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவன் இப்படிப்பட்டவன் என்று சுட்டிக்காட்டுவதற்கு -அவனுக்கு நிகராக யாருமில்லை; எதுவுமில்லை.
அவன்தான் இந்தப் பேரண்டத்தைப் படைத்தான். அதிலுள்ள அனைவரையும் அனைத்தையும் படைத்தான். ஒவ்வொன்றுக்கும் ஒரு விதியை ஏற்படுத்தினான். அந்த விதியின்படி ஒவ்வொரு பொருளும் இயங்கிவருகிறது. அவன் அறியாது துரும்பும் அசையாது. அவனுக்குத் தெரியாமல் யாரும் எங்கும் எதையும் எப்படியும் செய்ய முடியாது.
நீங்கள் எண்ணுவது, கண் இமைப்பது, செய்வது, உங்கள் பிறப்பு, வாழ்க்கை, உயர்வு-தாழ்வு, சுகம்-துக்கம், எழுவது-வீழ்வது, இறுதியாக இறப்பு, இறப்புக்குப்பின் உயிர் கொடுத்து எழுப்புவது… என ஒவ்வோர் அசைவும் அவனது திட்டப்படியும் நாட்டப்படியுமே நடக்கிறது. அவை அனைத்தையும் அவனே நிகழ்த்துகிறான். எல்லாம் அறிந்தவன். சர்வ வல்லமை படைத்தவன். கருணையாளன். கடுமையாகத் தண்டிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். நல்வழி இது; தீவழி இது என தன் தூதர்கள் மூலம் அறிவித்தவன்; தன் வேதத்தில் விவரித்தவன்.

ஒற்றைக் கடவுள் கொள்கை
இதில் இரண்டு கோட்பாடுகள். 1. இறைவன் இருக்கின்றான். இந்தப் பிரபஞ்சம், வரையறுக்கப்பட்ட கச்சிதமான ஒரு விதியின்கீழ் இயங்கிவருவதே இதற்குச் சாட்சி. காரணம், வரையறுத்த அந்தப் பேராற்றல்தான் இறைவன்.
2. அவன் ஒருவன். கடவுள் பலராக இருந்திருப்பின் வானமும் பூமியும் என்றோ சீர்குலைந்திருக்கும். அதிகாரத்தை நிலைநிறுத்த ஒவ்வொரு கடவுளும் முயலும்போது போட்டி ஏற்பட்டு, நீயா-நானா என்ற தன்முனைப்பால் படைப்புகள் பரிதாபத்திற்குரிய நிலையை அடைந்திருப்பர்.

1 aalim9 4
இந்த ஒற்றைக் கடவுள் கொள்கை (தவ்ஹீத்)தான், மனிதன் படைக்கப்பட்ட நாளில் இருந்தே மனிதர்களின் நம்பிக்கையாக இருந்துவந்தது. இடையில், வல்லமைக்கு முன் பணியும் மனித புத்தியால், யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் வல்லமை உண்டோ அதையெல்லாம் கடவுளாக நம்ப ஆரம்பித்தான் மனிதன். சர்வாதிகாரிகள், ராஜாக்கள், குருக்கள், ஆசான்கள், ஆன்றோர்கள், சாதனையாளர்கள்… என யாரைக் கண்டெல்லாம் பிரமித்துப்போனானோ அவர்களையெல்லாம் கடவுளாக்கி, சிலைகள் வடித்து வழிபடத் தொடங்கிவிட்டான் மனிதன்.
ஒரு கட்டத்தில் பெற்ற தாயைப் பெண் தெய்வம் என்றான். தந்தையை, ‘ஆளாக்கிய சாமி’ என்றான். பிறந்த மண்ணை, செய்யும் தொழிலை, காப்பாற்றிய மருத்துவரை, கற்பித்த ஆசிரியரை, கை கொடுத்த நண்பனை, மனதுக்குப் பிடித்த நடிகரை, வாக்களித்த பொது மக்களை, பதவி கொடுத்த முதல்வரை, நெருக்கடியில் உதவியவரை… இப்படிக் கொஞ்சமும் விவஸ்தையே இல்லாமல் கண்டவரையெல்லாம், கண்டதையெல்லாம் கடவுள் என்று சொல்லி ஏமாந்துபோனான் சாமானியன்.
வேதங்களில் ஓரிறை
இறைவேதங்கள் அனைத்திலும் ஒற்றைக் கடவுள் கொள்கைதான் பறைசாட்டப்பட்டுள்ளது; பலதெய்வக் கொள்கை மறுக்கப்பட்டுள்ளது; கண்டிக்கப்பட்டுள்ளது. இதோ இறைவேங்களில் இறுதியான பரிசுத்த மாமறை திருக்குர்ஆன் பகர்வதைப் பாருங்கள்:
(நபியே!) “என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, என்னையே வழிபடுங்கள்” என்று நாம் அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் அனுப்பிவைக்கவில்லை. (21:25)
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் தூதரை நாம் அனுப்பியிருந்தோம். (அவர்கள்) “அல்லாஹ்வையே வழிபடுங்கள்; தீய சக்திகளைத் தவிர்த்திடுங்கள்” என்றே பரப்புரை வழங்கினார்கள். (16:36)
யூத, கிறித்தவ வேதங்கள்
திருக்குர்ஆன் மட்டுமன்றி, யூத, கிறித்தவ வேதங்களான விவிலியங்களும் ஒற்றைக் கடவுள் கொள்கைக்கே சாட்சியம் அளிக்கின்றன. இறைத்தூதரை, ‘இறைவன்’ என்று வருத்திக்கொண்ட மனிதர்களின் பிழைக்கு வேதம் என்ன செய்யும்?
விவிலியம் பழைய ஏற்பாடு கூறுவதைக் கவனமாகப் படியுங்கள்!
உன்னை அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின என்னையன்றி உனக்கு வேறெ தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்!
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கின்றவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்! (யாத்திராகமம், 20:2-5)
இந்நிலையில், அக்கால யூதர்கள், இறைத்தூதரான உஸைர் (அலை) அவர்களை (எஸ்றா) தேவனின் குமாரர் என்று சொல்லிவந்தார்கள் எனத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. (9:30)
விவிலியம் புதிய ஏற்பாடு (பைபிள்) சொல்லும் தீர்ப்பைப் பாருங்கள்!
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக! (லூக்கா, 4:8)
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. (மத்தேயு, 7:21)
உண்மை இவ்வாறிருக்க, இறைவனின் அடியாரும் தூதருமான ஈசா (அலை) அவர்களை – இயேசுவை - கர்த்தரின் (அல்லாஹ்வின்) குமாரர் என்கின்றனர் கிறித்தவர்கள் சிலர் என எடுத்துரைக்கின்றது திருக்குர்ஆன் (9:30).
இன்னும் சிலர், பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் சேர்ந்து ஒருமித்த கடவுள் என்பர். இதையே ‘திரித்துவம்’ (Trinity) என்கிறார்கள். இதையும் குர்ஆன் சுட்டிக்காட்டத் தவறவில்லை. (5:73)
வேறுசிலர், மூன்றின் மொத்தமும் கடவுள்தான்; ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் கடவுள்தான் என்பர். இதன்படி, கடவுள்கள் மூவர் என்றாகும்.

இந்து வேதங்கள்
இந்துக்கள் தங்களின் வேதங்கள் என்றும் உபநிஷத்கள் என்றும் போற்றுகின்ற ஏடுகள் சொல்வதை இனிக் காண்போம்:
1. யா இக் இத்முஸ்தி இ (ரிக் வேதம்: 6:45:16) சமஸ்கிருத வாக்கியமான இதன் பொருள்: வழிபாட்டுக்குரியவன் இறைவன் ஒருவனே!
2. மா சிதன்யதிவி சன்சதா (ரிக்வேதம், 8:11) பொருள்: அவனையல்லாது வேறு எவரையும் வழிபடாதீர்கள்.
3. சந்தம் தமப்ரவசந்தியே அஸம்பூதம், உபாஸதே ததபூய இவ தே தமயே ஸம்பூத்யாம்ரதா (யஜூர் வேதம், 40:9). பொருள்: யார் அசம்பூதியை –இயற்கையை- வழிபடுகிறார்களோ அவர்கள் இருளில் இருக்கிறார்கள். படைக்கப்பட்டதை வழிபடுபவர்கள் ஆழ்ந்த இருளுக்குள் செல்கிறார்கள்.
4. ஏகம் ஏவல் அத்வீதயம் (சாந்தோ சியா உபநிஷத், 6:2:1). பொருள்: அவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை.
5. நாதஸ்தி பிரதிம அஸ்தி (ஸ்வேத்தாஸ் வரதா உபநிஷத், 4:19). பொருள்: அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை.
6. பிறப்பும் முடிவும் அற்ற என்னை, மயங்கிய இவ்வுலகு அறிவதில்லை. (பகவத் கீதை, 7:25)
இம்மக்கள் தாங்கள், வேதங்கள் என்று நம்பும் இவற்றின் கூற்று ஓரிறைக் கொள்கையாக இருக்க, பலதெய்வக் கொள்கையை எப்படி ஏற்றனர் என்று தெரியவில்லை. ஒரே பரம்பொருள் என்று கூறும் இந்து சமயம், எங்கும் நிறைந்த, எப்போதும் உள்ள, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, எல்லாவற்றிலும் நிறைந்த சர்வ வல்லமை கொண்ட பரம்பொருள், பல்வேறு வடிவங்களாக வெளிப்படுகிறது என்று சொல்கிறதாம்!

1 aalim9 5
மனிதர்களின் சராசரி அறிவுக்கும் புலனுக்கும் புரிவதற்காக வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் பரம்பொருள் ஒன்றே என்பது இந்து மதத்தின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)
ஆக, ஒற்றைக் கடவுள் கொள்கையை – தவ்ஹீதை - ஏதோ ஒரு வகையில் ஒப்புக்கொள்ளும் இச்சமயத்தார், சுற்றிவளைத்து அந்த ஏகனுக்கு இணைகளாக – நிகர்களாகப் பல படைப்புகளை நம்புகின்றனர். படைப்பாளன் ஒதுபோதும் படைப்பாக இருக்க முடியாது; படைப்பின் வடிவத்தையும் பெற முடியாது. அவனுக்கு நிகராக எந்தவொன்றும் இல்லை -என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
இதனாலேயே, திருக்குர்ஆன்மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்கள், ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுள் என்றோ, கடவுளின் மறுபிறவி என்றோ, கடவுளைப் போன்றவர் என்றோ ஒருகாலும் சொல்லமாட்டார்கள்.
அவர் இறைத்தூதராகவோ பெரிய மகானாகவோ இருக்கட்டும்! ராஜாதிராஜனாகவோ இருக்கட்டும்! பெற்ற தாயாக, சொல்லிக்கொடுத்த குருவாக, வேலை கொடுத்து அரவணைத்த முதலாளியாக, யாராகவும் இருக்கட்டும்! யாருமே கடவுளுக்கு நிகரானோர் அல்லர்; நிகரானோர் என எண்ணுவதுகூட ‘ஷிர்க்’ எனும் இணை கற்பித்தல் ஆகிவிடும் – என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்கள் ஆவர்.
                                                                                                                                                                                                         (சந்திப்போம்)...........

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018 13:50

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! 10

Written by

நவீனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
அருமை மாணாக்கர்களே! ஃபிக்ஹ் எனும் ஷரீஆ சட்டக் கலையில் புதுப்புதுப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. ஆனால், பிரச்சினை என்ன என்பதை மிகச் சரியாக அறிந்து, அதற்கான விடை எங்கே, எதில் இருக்கிறது என்பதை நுணுகி ஆராய்ந்து, சரியான தீர்வைக் கண்டுபிடிப்பது மார்க்க

தோன்றின் எடுப்போடு தோன்றுக!
மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை பெறுவதற்கான வழிமுறைகளை இத்தொடரில் பார்த்து வருகிறோம்.
முந்தைய தொடர்களில் புன்னகை, அன்பளிப்பு வழங்குதல், பிறர் பேசுவதை கவனத்துடன்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2018 13:27

மண்ணின் வரலாறு - 12 -கலங்கள் நிறைந்த கடலூர்

Written by

சில ஊர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கும். பல ஊர்களைக் கொண்ட பகுதியாக இருந்தாலும் கடலூர் தமிழில் கடலூராகவும் ஆங்கிலத்தில் கூடலூராகவும் காட்சி தரும்.
கடலின் தரையில் இருப்பதால் கடலூர். எப்படி வந்தது

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018 16:27

முதல் தலைமுறை மனிதர்கள் 12

Written by

சுதந்திரப் போராட்ட வீரர் வேலூர் .                                              V.M. உபயதுல்லா சாகிப்
இந்திய அரசியல் சீர்திருத்தம் குறித்து ஆராய்ந்து அறிக்கை கொடுப்பதற்காக 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு ஸைமன் என்ற ஆங்கில அதிகாரி தலைமையில் குழு ஒன்றை நியமித்தது ஆனால் இந்தக் குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை. இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி