தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள் (63)

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017 06:32

மண்ணின் வரலாறு-5

Written by

நானிலம் குழுமும் நாகூர்!

நாகப்பட்டினம் நகராட்சிக்குள் அமைந்துள்ள நாகூரைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இரட்டை நகர்களான நாகூரும் நாகையும் பல்வேறு பண்பாடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுக்குச் சொந்தமுடையவை.
ஆதிகாலத்தில் இப்பகுதி ‘புன்னாகவனம்’ என அழைக்கப்பட்டது. புன்னை மரத்தின் மற்றொரு பெயர் நாகமரம். எனவே நாக மரங்கள் சூழ்ந்திருந்த இவ்வூர்கள் நாகை, நாகூர் என மாறியிருக்கலாம்.
இப்பகுதியை நாகன் எனும் மன்னன் ஆண்டதாகவும் இங்கு நாகர்கள் எனும் பழங்குடிகள் வாழ்ந்ததாகவும் செய்திகள் புழங்குகின்றன.
நகரம் என்பதே மருவி நாகூர் ஆகியிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் மொழிகின்றனர். மேற்கு வங்கத்திலுள்ள சந்திரநாகூர் அதையடுத்துள்ள பாசா நாகூர், கோநாகூர் எனும் ஊர்கள் நம் கவனத்துக்கு உரியன.
நாகூர் முதலில் ஒரு சிறிய மீனவக் கிராமமாகவே இருந்தது. பின்னரே அது தோணித்துறைமுகமாக மாறியது. நாகையோடு சேர்ந்து வளர்ந்து நாகூர் ரெட்டைத் துறைமுகங்களில் ஒன்றாகியது.
மீனவச் சேரியை அடுத்து யவனச்சேரி உருவானது. பூம்புகார் துறைமுகத்தில் குதிரைகள் வந்து கும்மாளமிட்ட போது பிதுங்கிய தோணிகள் நாகை - நாகூரிலும் நங்கூரமிட்டன. சோழர் - பல்லவர் படைகள் ரெட்டை நகரைத் தொட்டுச் சென்றன.
அரபுக்கள் வணிகர்களாக பரிணாம வளர்ச்சி பெற்ற போது அரபு மொழி கொண்டல் காற்றோடு சோழ மண்டலக் கடற்கரையில் சொந்தம் கொண்டாடியது.
ஏழாம் நூற்றாண்டில் அவர்கள் முஸ்லிம்களாக வலம் வந்தார்கள். வந்து தங்கிச் சென்று கொண்டிருந்த அரபு முஸ்லிம்கள் கடற்கரைப் பட்டினங்களில் தங்கி வணிகம் செய்யவும் தொடங்கினார்கள்.
‘யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என அகநானூறு கூறுகிறது.
பொன்னைக் கொண்டு வந்த கலங்கள் புரவிகளையும் கொண்டுவந்து கரை சேர்த்தன. மிளகு முதலிய மசாலாக்களைக் கொண்டு சென்ற கலங்கள் முத்தையும் மணியையும் கொண்டு சென்றன. அது ஒரு பொற்காலம்.
ஏழு, எட்டு என ஓடிய நூற்றாண்டுகள் பத்தைத் தாண்டி பதிமூன்றையும் எட்டிப்பிடித்த போது அரபகத்திலிருந்து முஸ்லிம்கள் கப்பல்களில் வந்து கரையேறினர்.
கி.பி.1269 -
அப்போது அரபகத்தை ஆண்ட ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் அறமில்லா ஆட்சியைப் புறக்கணித்து முஸ்லிம்கள் கப்பல் கப்பலாய் மலையாள, தமிழகக் கடற்கரைப் பட்டினங்களில் வந்திறங்கினார்கள்.
அக்கப்பல்களில் சில நாகை, நாகூர் பட்டினங்களிலும் நங்கூரமிட்டன.
காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிராம்பட்டினம், காரைக்கால், திருமுல்லைவாசல், பரங்கிப்பேட்டை, கடலூர், கோட்டைக்குப்பம், பழவேற்காடு என பனிரெண்டு பட்டினங்களில் அரபு வம்சாவழியினர் வந்திறங்கி வாழத்தொடங்கினர்.
அவர்கள் எல்லோருமே வணிகர்கள், மரைக்காயர்கள், கப்பல் கட்டுவோர், கடலோடிகள் என வாழ்ந்தவர்கள். அரபகத்தில் அவர்கள் செய்த தொழில்களையே தாம் புலம் பெயர்ந்த இடங்களிலும் செய்தனர்.
இவர்களன்றி நாகூரில் வந்து குடியேறியவர்களில் “மாலிமார்கள்” குறிப்பிடத்தக்கவர்கள்.
முஹல்லிம் - மாலிமார் எனத் தம் பெயருக்குப் பின் குறிப்பிடும் இவர்கள் ஆசான்கள், கப்பல் தலைவர்கள், வழிகாட்டிகள் எனும் தலைமைத்துவ வட்டத்துக்குள் வருபவர்கள்.
நாகூரில் மாலிமார் தெருவென்றே ஒரு தெரு உண்டு.
மாலிமார்களில் மிகச் சிறந்த வணிகரும் நாகூர் தமிழ்ச் சங்க நிறுவனருமான சகோதரர் முஹம்மது ஹுஸைன் மாலிமாரைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அவரை இருமுறை சந்தித்த எனக்கு நாகூரைப் பற்றிய பல தரவுகள் கிடைத்தன. இவர் முன்னாள் நாகைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் நஜிமுதீனின் மூத்த சகோதரர் பெஹ்ரைன் முடியரசின் தலைநகர் மனாமாவில் நவமணிகள் வணிகம் செய்யும் அன்பர் தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறார். இவரை இளம் எழுத்தாளர் நாகூர் ரிஸ்வான் எனக்கு ஆற்றுப்படுத்தினார்.
நாகூரில் குடியேறிய அரபு முஸ்லிம்களோடு காயல்பட்டின, கீழைக்கரையில் குடியேறியவர்கள் தொடர்பு வைத்திருக்கின்றனர். சோழ மண்டலக் கடற்கரையின் நடுவில் அமைந்த துறைமுகப்பட்டினங்களான நாகூரும் நாகப்பட்டினமும் கப்பல் தொழிலுக்கு மையப்புள்ளியாக இருந்ததால் காயல், கீழை கப்பல் வணிகர்கள் நடுப்பட்டினங்களை மிகவும் நேசித்திருக்கிறார்கள். அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள். தெற்குத் தெருவில் அவர்கள் திரளாக உள்ளனர்.
அவர்கள் மரைக்காயர்கள் என்றாலும் மாலிமார்களோடும் மணவுறவு வைத்திருந்தனர். இன்றும் அவ்வுறவைத் தொடர்கின்றனர்.
கடலோரத்தை கலங்கள் நிறுத்துமிடமாகக் கொண்டவர்கள் வெட்டாற்றையும் ஏற்றுமதி - இறக்குமதிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நாகூரின் வடக்கில் பாயும் வெட்டாற்றின் தென்கரையில் அமைந்திருந்த மேலை நாகூர் முகத்துவரமாகவும் விளங்கியிருக்கிறது. அங்கு பண்டக சாலைகளும் குடியிருப்புகளும் இருந்துள்ளன.
மண்மூடிப்போன மேலை நாகூர் அகழ்ந்தெடுக்கப்பட்டால் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கக்கூடும். தொல்பொருள் துறையிடம் மேலைநாகூரை அகழ்ந்து பார்க்க கேட்டுக் கொண்ட முயற்சிகள் முன்னேற்றம் காணவில்லை.
மேலை நாகூருக்கு அண்மையில் இயற்கை எரிவாயு நரிமணத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
பெருந்தோணிகள் நிறைந்திருந்த நாகூர்பட்டினம் படிப்படியாக பக்தர்கள் வந்து குவியும் ஆன்மீகப்பட்டினமாய் மாறியது எப்படி?
உத்திரப் பிரதேசத்தில் அயோத்திக்கு அருகிலுள்ள மாணிக்கப்பூரில் கி.பி.1490 (ஹிஜ்ரி 910) இல் பிறந்த மாமனிதர் சாகுல் ஹமீது அரபு - ஃபார்ஸி மொழிகளிலிருந்த சமய நூல்களைக் கற்றுத் தேறி பேராசான் ஆனார். அந்தப் பேராசானுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள், அவர்களில் 400 பேர் புடை சூழ தம் 37 ஆவது அகவையில் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாரசீகம் எனப் பயணித்து மக்கா சென்றார். பின் அங்கிருந்து மாலைத் தீவு, இலங்கை என கப்பலேறி தமிழகக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.
அக்கால கட்டத்தில் தஞ்சைப் பகுதியை ஆண்ட மகாராஜா அச்சுதப்ப நாயக்கர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். அவரின் வயிற்று வலியைப் போக்க ஆவன செய்ததால் நற்பெயர் பெற்ற மாமனிதரை மன்னர் நாகூரில் தங்கச் செய்தார்.
நீண்ட பயணம்; பெருங்குழுவினர்; நீண்ட காலம், அவர்களின் அக்காலப் பயணத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இத்தகைய பெரும் பயணம் செய்தவர் உலகில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்!
கடலோரம் குடியேறிய ஆன்மீகப் பெரியாரைக் கண்டு உடல் நலமும் மனநலமும் பெற்றவர்கள் பலர். அவருக்கு தஞ்சையை ஆண்ட மன்னர்கள் நிலபுலன்களையும் பொருள்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.
நாகூரில் நடந்தேறிய ஒரு முக்கிய திருமணம் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு.
அப்போது கீழ் நாகூரில் மாணிக்கப்பூர் மைந்தர்கள் வாழ்ந்து வந்தனர். மேல் நாகூரில் மாலிமார்களில் ஏழு குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.
இறைவனின் எண்ணப்படியும் திட்டப்படியும் மாணிக்கப்பூர் மாமனிதரின் மைந்தர் யூசுப் சாகிப் மாலிமார் குடும்பத்துக் குலக்கொடியை மணந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏழு குடும்பங்களில் சிலர் சம்மதிக்கவில்லை; சிலர் சம்மதித்தனர்.
இம்மண நிகழ்வில் மூலம் வந்தவர்களே இன்று சாபுக்கள் என அழைக்கப்படும் பாபுக்கள். அதே சமயம் கலப்படம் ஆகாத மாலிமார்கள் இன்றும் மாலிமார்களாகவே பரம்பரையைத் தொடர்கின்றனர். மரைக்காயர்களோடும் மணவுறவு கொள்கின்றனர்.
மாணிக்கப்பூர் மாமனிதர் கி.பி. 1558 இல் மரணிக்க அவர் அடக்கத்தலம் தர்காவானது. பின்னர் படிப்படியாக தர்கா பெரிய மகாலாக மாறியது.
மராட்டிய மன்னர் பிரதாப்சிங் தர்காவின் முன் 90 அடி உயரமுள்ள அழகிய கூண்டைக் கட்டச் செய்தார். பிரதாப்சிங்கின் மகன் மகாராஜா துளசாஜி பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் 6000 ஏக்கர் நிலத்தை தர்காவுக்காக அளித்தார்.
கோவில்களில் சிலை வணக்கம். தர்காக்களில் சமாதி வணக்கம். நாகூர் தர்காவும் கோவிலைப் போலவே இயக்கப்படுகிறது. கோவிலில் திருப்பள்ளி எழுச்சி என்றால் தர்காவில் அதிகாலையில் நான்கு பேர் வாழ்த்துச் சொல்ல தர்பார் தொடங்குகிறது.
கோவிலில் யானையைக் காணலாம். நாகூர் தர்காவிலும் யானை ஆசி வழங்கியது. முப்பது ஆண்டுகளாக இங்கிருந்த காதர் பீவி என்ற யானை 1989 இல் இறந்தது. 1990 இல் வந்த பாத்திமா என்ற யானை 2014 இல் மரணிக்க மூன்று ஆண்டுகளாக யானையில்லாமல் இருக்கிறது நாகூர் தர்கா.
கோவில்களில் தமிழ்ப் புலவர் நியமனம் போல நாகூர் தர்காவிலும் தர்காப் புலவர் இருந்தார். நாகூர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்வான் உயர்திரு எஸ்.எம்.ஏ. காதர் மறைந்த பின் அவ்விடம் காலியாகவே உள்ளது.
கோவில்களில் தேர்த் திருவிழா என்றால் தர்காவில் சந்தனக்கூடு. பிற மக்களை ஈர்க்க செய்யப்பட்ட கந்தூரி இன்றும் தொடர்கிறது. தமிழகத்தில் எந்தக் கொம்பன் வந்தாலும் நாகூரை அசைக்க முடியாது.
நாகூர் போன்ற இடங்கள் இரு சமூக இணைப்புப் பாலமாக விளங்குகிறது. சரபோஜி மன்னனின் காலத்தை சிலர் மாற்ற முயன்றாலும் காலம் அவர்களை மாற்றவிடாது. தர்காவின் முன் எழுந்து நிற்கும் ஸ்தூபி அதற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. அதுவே நாகூரின் அடையாளம்.
“அலங்கார வாசல்” அழகாக நின்று அனைவரையும் வரவேற்புரை ஆற்றாமல் வரவேற்கிறது. அவ்வாசலை அமைத்துக் கொடுத்த புரவலர் அ.பு.நகுதா அவர்களின் புகழைப் பேசாமல் பேசுகிறது.
புரவலர் அ.பு.நகுதா அவர்கள் வாழ்க்கையில் 1850 முதல் 1900 வரை பொற்காலமாகும். மிக விரிந்த ஏற்றுமதி இறக்குமதிக்காரரும் பல கப்பல்களுக்குச் சொந்தக்காரருமான புரவலர் நூற்றுக்கணக்கானவர்களை அலுவல்களில் அமர்த்தியிருந்தார்.
இவரைப் போல மேலும் சில கப்பல் வணிகர்கள், அவர்கள் ஒவ்வொருவரிடமும் பல பல கடலோடிகள். இவர்களில் பெரும்பாலோர் தொண்டி, பாம்பன், மண்டபம் என இராமநாதபுரக்காரர்கள்.
இவர்கள் குடும்பத்துடன் முகைதீன் பள்ளிவாசல் அருகில் குடியேறியிருந்தார்கள். குடும்பத்திலுள்ள ஆண்கள் கப்பல் வேலைக்குச் சென்றால் திரும்ப ஓராண்டாகும்.
அதுவரை கப்பல்காரரே அவர்களின் குடும்பத்திற்கு பாதுகாவலர் ஆவார். அக்காலத்தில் கப்பல் தொழிலாளர் குடும்பங்கள் அங்கிருந்த பல சிறு சிறு தெருக்களில் வாழ்ந்தனர். அவர்களுக்குத் தனித்தனி சமையல் கிடையாது. அவர்களுக்குரிய உணவுகள் மைதீன் பள்ளி வளாகத்தில் மொத்தமாக தயாரிக்கப்பட்டன.
மூன்று வேளையும் முழங்கும் நகரா ஓசை அவர்களை உணவுண்ண அழைக்கும். தொழுகை அழைப்புக்கு குண்டு போடப்பட்டது.
காலப்போக்கில் வணிகத்துக்காகவும் வேலைகளுக்காகவும் குடியேறிய பல்வேறு ஊர்மக்கள் நாகூர்வாசிகளாகவே மாறிப் போனார்கள். எல்லோருமே வந்தவாசிகள்.
நாகூரை ‘புலவர்கோட்டை’ எனப் போற்றுகிறார்கள். அது உண்மை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. தமிழக முஸ்லிம் ஊர்களிலேயே இலக்கியமும் இன்னிசையும் கை கோர்த்துக் கொண்ட ஒரே ஊர் நாகூரே!
படைப்பாளிகளில் மிகச் சிறந்தவராகிய குலாம்காதிறு நாவலர் கவிதையிலும் உரை நடையிலும் பேரும் புகழும் பெற்றார். இவர் எழுதிய நாகூர்ப்புராணம், ஆரிபு நாயகம், மதீனாக் கலம்பகம், உமறு (மொழி பெயர்த்த நாவல்) ஆகியவை குரிப்பிடத்தக்க படைப்புகள். இவரின் புதல்வரே ஆரிஃபு நாவலர்.
முஸ்லிம் தமிழ்ப் பெண் படைப்பாளிகளில் முதன்மையானவர் சித்தி ஜுனைதா. இவர் எழுதிய ‘காதலா/ கடமையா’, ‘மகிழம்பூ’, ‘ஹலீமா’, ‘வனஜா’, ‘பெண் உள்ளம்’, ‘மலைநாட்டு மன்னன்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இவருடைய குடும்பமே படைப்பாளிகளின் பாசறை, தம்பிகள் நாகூர் சலீம், தூயவன் (அக்பர்) தூயவனின் துணைவியார் ஜெய்புன்னிசா என முந்தைய தலைமுறையையும் நாகூர் ரூமி போன்றோர் இன்றைய தலைமுறையையும் அலங்கரிக்கிறார்கள்.
எம்ஜியாரின் கதையிலாகாவில் இருந்த ரவீந்தர் (செய்யது முகம்மது) ‘இசை முரசு’ இ.எம்.ஹனீஃபா, ‘இசைமணி’ யூசுஃப் கவிஞர் காதர் ஒலி என நாகூரின் இலக்கிய - இசைவாணர்களின் பட்டியல் மிக நீளமானது. தனி மனிதர்கள் செய்த பணிகளை இன்று நாகூர் தமிழ்ச் சங்கம் தொடர்கிறது.
நாகூரின் வீதிகளிலெல்லாம் தப்ஸ் இசை தவழ்வது போலவே இருக்கும். அங்கு தோல் ஒலியும் சதங்கை மொழியும் முயங்கிக் கிடக்கும். இங்குள்ள பைத்து சபாக்கள்தான் கவிஞர்களையும் பாடகர்களையும் உருவாக்கின. கௌதியா பைத்து சபா, காயிதே மில்லத் சபா, யூசுபியா பைத்து சபா, ஹமீதியா பைத்து சபா என சதங்கை கட்டிய சிறுபறை ஏந்திய குழுவினர் இன்றும் மணவிழா ஊர்வலங்களை மகிமைப்படுத்துகின்றனர்.
சுற்றுலா பயணிகள் சூழும் ஊர் என்பதால் பல ஊர், மக்களைப் பார்க்க முடிகிறது. உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் அல்வாக் கடைகளும் பல்வேறு பொருள் விற்கும் கடைகளும் நாகூரின் செழுமையைக் காட்டுகின்றன. பதினைந்துக்கு மேல் பள்ளிவாசல்கள் உள்ளன.
தர்காவில் காணிக்கை நிறைகிறது. சாபுமார்கள் நிறைவோடு வாழ்கிறார்கள்.படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் பணிகளில் சிறக்கிறார்கள். என்றுமுள்ள வெளிநாட்டுத் தொடர்புகள் கிழக்கிலும் மேற்கிலும் கால் நீட்டிப் படுத்துக் கிடக்கின்றன.
பல்வேறுவகை முஸ்லிம்கள் நாகூரில் காணக் கிடைத்தாலும் பச்சைத் தலைப்பாகைக் காரர்களையும் தர்காவைச் சூழ காணலாம். பல்வேறு ஊர்களில் வாழக்கூடிய ஐந்து தரீக்காக்காகாரர்கள் அவ்வப்போது காணப்பட்டாலும் கந்தூரி காலத்தில் மொத்தமாக வந்து விடுவார்கள்.
எஜமானனின் பிள்ளைகள் அவர்கள், பக்கீர்கள் எனும் அவர்களின் தப்ஸ் நாதத்தோடு இஸ்லாமிய வரலாறுகளைக் கேட்க கேட்க நம் காதுகள் குளிரும், கல்புகள் சம்மனம் போட்டு அமர்ந்து கொள்ளும்.

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017 06:53

மண்ணின் வரலாறு – 4

Written by

பழவேற்காடு, புலிகாட் ஏரி (Pulicat Lake)

 – தாழை மதியவன்
தமிழகத்தின் வரைபடத்தைப் பார்த்தால் அதன் வடக்குக் கடற்கரை முடிவில் புலிகாட் ஏரி புலப்படும். ஏரி என்பது என்னவென்று புரிகிறது. புலிகாட் என்றால் என்ன? அதன் பொருள்தான் என்ன?
ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் ஊர்ப் பெயர்களை சிதைத்தது போல் “புலியூர் கோட்டம்” என்பதை புலிகாட் ஆக்கி இருக்கிறார்கள்.
பழங்கால தமிழ் மன்னர்களின் ஆட்சியில் (கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரை) புலியூர் கோட்டம் பழவேற்காடு சோழ மண்டலக் கடற்கரையின் முக்கிய துறைமுகமாக விளங்கியுள்ளது. அதன் பின் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
‘புலிகாட்’ என்பது புலியூர் கோட்டத்தின் ஐரோப்பியர் சொல்லாக்கம். ‘பளயகாட்’ என்றால் பழவேற்காடுதான்.
‘பழவேற்காடு’ எனும் பெயருக்கான காரணத்தை கண்டுபிடிக்க முயன்றேன். ஆர்க்காடு, ஏற்காடு எனும் பெயர் வரிசையில் வேற்காடு வருகிறது. வேற்காடோடு முன் ஒற்றாக பழ சேர பழவேற்காடாகிறதே, என்ன பொருள்? பழ என்றால் பழமை, பழமையான வேற்காடுக்கு பொருள் என்ன?
“கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு எனப்பட்டது போலும்” என பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை தன்னுடைய தமிழகம் ஊரும் பேரும் எனும் நூலில் பதிவு செய்துள்ளதைப் படிக்க நேர்ந்தது.
“பழமையான வேலங்காடு” என்பதே பழவேற்காடு எனக்கூறிய சொல்லின் செல்வர் அவ்வூரில் குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக்காடாக்கி விட்டனர் என்கிறார். பலரும் பழவேற்காடே புலிக்காடென்று நிறுவுகின்றனர். அவர்கள் பல்லவர்கள் அப்பகுதிக்கு புலியூர் கோட்டம் என பெயர் வைத்ததைக் கவனத்துக்குக் கொண்டு வராதவர்கள். புலியூர் கோட்டத்தின் ஒரு பகுதியே பழவேற்காடு அக்கோட்டத்தில் திருப்பாலைவனம், பேரலாச்சி, அம்மன் குளம், பசியாவரம், கோட்டைக்குப்பம், சாத்தான்குப்பம் ஆகியவை அடங்கியிருந்தன.
புலியூர் சோழர் காலத்துப் பெயராக இருக்கலாம். பல்லவர்கள் கோட்டம், நாடு, ஊர் என தம் ஆட்சிப் பகுதியைப் பிரித்தாண்டனர். தொண்டை மண்டலம் இருபத்தியேழு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் பதினேழாவது கோட்டமே புலியூர்க் கோட்டம்.(தமிழ்நாட்டு வரலாறு ; பல்லவர் பாண்டியர் காலம்)
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில்தான் வந்து போய்க்கொண்டிருந்த அரபு வணிகர்கள் வணிகம் செய்ததோடு நிரந்தரமாகத் தங்கி வாழத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் வணிகர்களாக மட்டுமல்லாமல் மரக்கல ராயர்களாகவும் ஓடாவிகளாகவும் விளங்கியுள்ளனர். கப்பல்களையும் பெருந்தோணிகளையும் கட்டியவர்களே ஓடாவிகள். மரக்கலங்களைப் பழுது பார்த்தவர்கள் கலப் பத்தர்கள். இன்றும் கூட கடலோர கிராமங்களில் ஓடாவிகளும் கலப்பத்தர்களும் வாழுகின்றார்கள்.
அவர்கள் மீன் பிடித் தொழிலிலும் பல்வேறு கைத்தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் செய்த முக்கியத் தொழில் நெசவு. இன்றும் தென் மாவட்டங்களில் முஸ்லிம்களை (ஷாபிகளை) அடையாளப்படுத்த ‘நெய்யக்காரர்’ எனக் கூறுகின்றனர்.
கி.பி.பத்தாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டு வரை புலியூர் கோட்டத்தை சோழர்கள் ஆண்டுள்ளனர். சோழர்களும் பல்லவர்களும் வைத்திருந்த கப்பற்படைக்கு புலியூர் கோட்ட ஓடாவிகள் கலங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள் புலியூர் கோட்டத்தை ஆண்டுள்ளார்கள். விஜயநகரத்தின் திவான் சந்திரகிரியில் இருந்துள்ளார்.
இக்கால கட்டத்தில்தான் கி.பி.1269 – இல் மதீனாவிலிருந்து புறப்பட்ட ஒரு பெருங்குழுவினர் தெற்கு யமன் கடற்புரத்தை அடைந்து அரபுக் கடல் வழியாக இந்து மகா கடலைக் கடந்து சோழ மண்டலக் கடற்கரையின் புலியூர் கோட்டத்து பழவேற்காட்டை அடைந்துள்ளனர்.
அப்போதைய மக்காவின் கலீஃபா ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் சரியில்லா ஆட்சியைப் புறக்கணித்தோ கலீஃபாவின் நடவடிக்கையாலோ அரபு முஸ்லிம்கள் தொகைதொகையாய் புலம் பெயர்ந்தார்கள். அவர்கள் இன்றைய கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பட்கல். மலப்புரக் கடலோரங்கள், தமிழகத்தின் காயல்பட்டினம், கீழக்கரை, அதிராம்பட்டினம், நாகை, நாகூர், கடலூர் எனக் குடியேறியதாகவும் தெரிகிறது.
இந்நிகழ்வுகள் டெல்லியை பாதுஷாக்கள் ஆள்வதற்கும் தக்காணத்தை முஸ்லிம் மன்னர்கள் பிடிப்பதற்கும் ஆர்காட்டு நவாப்கள் உருவாவதற்கும் முந்தைய நிகழ்வுகள் என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள். வணிகர்களாகவும் புலம் பெயர்ந்தவர்களாகவும் அப்போதைய முஸ்லிம்கள் இருந்தார்கள். ஆறாம் நூற்றாண்டு வரை அரபகத்திலிருந்து வந்து வணிகம் செய்து விட்டு சென்ற அரேபியர்கள் ஏழாம் நூற்றாண்டில் குடும்பங்களுடன் வந்து தங்கத் தொடங்கியுள்ளனர்.
விஜயநகர சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பின் கோல் கொண்டா சுல்தான் ஒளரங்கசீப், நவாப்கள் ஆண்ட தடயங்களைக் காட்டிலும் போர்த்துக்கீசியரும் டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் கால் பதித்த அதிகமான சுவடுகளே புலியூர் கோட்டத்தில் பதிவாகியுள்ளன.
கொற்கை, தொண்டி, நாகை, பூம்புகார், கடலூர் துறைமுகங்களாய் செயல்பாட்டதைப் போலவே புலியூர் கோட்ட கடற்கரை பிரளய காவேரி, ஆனந்தராயன்பட்டினம், பழவேற்காடு எனும் பெயர்களில் புகழ் பெற்றிருந்ததது.
மேற்கிலிருக்கும் ஓமனிடமிருந்து கிழக்கேயுள்ள மலேயா, தாய்லாந்து வரை பழவேற்காடு தொடர்பு வைத்திருந்தது.
காஞ்சிபுரத்திலிருந்து நூல்களை வரவழைத்து துணிகள் தயாரிக்கப்பட்டது. முக்கியமாக இங்கு தயாரிக்கப்பட்ட கைலிகள் கிழக்காசிய சந்தையில் பேரும் புகழும் பெற்றன. “பளையகாட்” என்றாலே கைலிகள் பழவேற்காடுதான் பளயகாட் ஆனது.
வாசனைத் திரவியங்கள், கைத்தறித் துணிகள், உணவுப் பொருட்கள் மட்டுமல்ல பழவேற்காடு துறைமுகத்திலிருந்து நவமணிகள் பலவும் ஏற்றுமதியாகின. கோல்கொண்டா, இலங்கை, பர்மா ஆகிய பிரதேசங்களிலிருந்து நவமணிகள் கொண்டு வரப்பட்டன.
சோழ, பல்லவர் காலத்திற்குப் பின் கி.பி.1502 முதல் 1606 வரை பழவேற்காடு விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டும் போர்த்துக் கீசியரின் முக்கிய எல்லையாகவும் விளங்கியுள்ளது.
1606 முதல் 1825 வரை டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கிய வணிகச் சந்தையாகவும் திகழ்ந்துள்ளது பழவேற்காடு.
துறைமுகமெனில் ஏற்றுமதிப் பொருட்கள் பல்வேறு இடங்களிலிருந்து வந்து குவிந்து கப்பலேறும் இடமாகவே பெரும்பாலும் இருக்கும். பழவேற்காடு துறைமுகமோ கைத்தறித் துணிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் துறைமுகமாகவே இருந்தது. காலாதி காலமாக இருந்த பாவோடிகள், தறிக்குழிகளோடு புதிதாய் டச்சுக்காரர்களின் உற்பத்தி சாலைகளும் உருவாகின. அப்போது அங்கு ஆயிரம் தறிகள் இருந்தன.
பதினெட்டாம் நூற்றாண்டில் கூட தையல் எந்திரங்கள் இல்லாத காலம். துணிகள் கத்திரிக்கப்பட்டு ஊசி நூலால் ஆடைகள் தயாரிக்கப்பட்ட காலம். டச்சுக்காரர்களின் ராணுவ உடைகளை பழவேற்காடு பெண்கள் வடிவமைத்து தைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
பழவேற்காடு டச்சுக்காரர்களின் முக்கிய கேந்திரமாகியுள்ளது. அவர்கள் இன்று கோட்டைக்குப்பம் என அழைக்கப்படும் இடத்தில் கோட்டையைக் கட்டியதோடு தேவலாயத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள். (1609) கோட்டையின் பெயர் ‘ஜெல்டிரியா.’
புலிகாட் ஏரிக்கு வடக்கிலிருந்த கரிமணல் கிராமத்தை டச்சுக்காரர்கள் தம் கப்பல்களின் தரிப்பிடமாகக் கொண்டார்கள். அவர்களின் உணவு கொள்முதல் தேவைகளை பழவேற்காடு முஸ்லிம்கள் நிறைவு செய்து வந்தார்கள். அதே சமயத்தில் போர்த்துக்கீசியர்கள் டச்சுக்காரர்களோடு மோதிய வேளையில் விஜயநகர ஆட்சி கோட்டை கட்டிக் கொள்ள அனுமதியளித்தது. அவர்களின் குடியிருப்பு ‘மாங்கி கூபாங்’ என அழைக்கப்பட்டது.
சோழ மண்டலக் கடற்கரையின் மகத்தான நகராய் மாறிப் போயிருந்த பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் நாணய உற்பத்தி சாலையை (MINT) அமைத்து அவர்கள் பரவி வணிகம் செய்த ஊர்களிலெல்லாம் டச்சு நாணயங்களைப் புழங்கச் செய்தனர்.
கல்கத்தாவிலிருந்து கொழும்பு வரை கால்பதித்த டச்சுக்காரர்களுக்கு மற்ற ஐரோப்பியர் எவரையும் பிடிக்காது. இலங்கையில் பெரும் வணிகம் செய்த அவர்கள் அங்கு ஒல்லாந்தர்கள் என அழைக்கப்பட்டனர். ஹாலந்து அவர்களது நாடு.
பதினேழாம் நூற்றாண்டில் பழவேற்காடு பகுதிகளில் பத்தாயிரம் பேர் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தறிக்காரர்களாகவும் வண்ணமூட்டுபவர்களாகவும் சலவைக்காரர்களாகவும் இருந்துள்ளனர். போர்த்துக்கீசியர்கள் சாந்தோமில் ஏற்றுமதி – இறக்குமதிகளும் சந்தைகளும் காணும்வரை பழவேற்காடு செல்வம் கொழிக்கும் பூமியாக இருந்துள்ளது.
அவர்கள் 1621 முதல் 1665 வரை அடிமை வணிகமும் செய்தனர். கடலூர் தேவனாம் பட்டினம், நாகப்பட்டினம், மதராஸ், பழவேற்காடு துறைகள் வழியாக 131 கப்பல்களில் 38,441 தமிழர்களை அடிமைகளாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இதற்காகவே பழவேற்காட்டில் தரகர்கள் இருந்து செயல்பட்டிருக்கின்றனர்.
தமிழக அடிமைகள் டச்சுக்காலனிகளில் அமைந்த காப்பி, தேயிலைத் தோட்டங்களுக்கு பணிபுரிய கொண்டு செல்லப்பட்டனர்.
டச்சுக்காரர்களுக்குப் பிறகு 1825 முதல் சோழ மண்டலக் கடற்கரை ஆங்கிலேயரின் கரங்களுக்கு வந்தது. அதன் பின் மதரஸாபட்டினம் அவர்களின் மையமாக உயர்ந்தாலும் பழவேற்காடு கைத்தறி உற்பத்தியிலும் பளயகாட் கைலி ஏற்றுமதியிலும் முன்னணி வகித்தது.
சர்க்கரை, வெல்லம், சீரகம், சுக்கு, புளி, மிளகு, பாக்கு, கடுக்காய், எண்ணெய், நெய் என ஏற்றுமதியான பொழுது நெல்லும், அரிசியும் மிகப்பெரிய அளவில் கலங்களை நிறைத்தன.
மதராஸ் ராஜஸ்தானியில் நெல்லூர், தஞ்சை பிரதேசங்கள் நெற்களஞ்சியங்களாக விளங்கின. இவ்விரண்டில் நெல்லூர் பழவேற்காட்டின் தலைப்பகுதியாய் அமைந்திருந்தது.
ஊரும் பேரும் ஆய்வில் குறிப்பிட வேண்டிய ஊர் நெல்லூர். எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள், எங்கு பார்த்தாலும் உழவர்கள் மிகுந்திருந்த மாவட்டத்தின் பெயர் நெல்லூர் என்றால் எவ்வளவு பொருத்தமானது.
இங்கெல்லாம் கூட 1876 முதல் 1878 வரை பெரும் பஞ்சம் சூழ்ந்தது. தாது வருஷப் பஞ்சம் எனப் பாமரராலும் சென்னை ராஜதானிப் பெரும் பஞ்சம் என வரலாற்றாலும் பேசப்படும் பஞ்சத்தால் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். அப்போதைய தாது வருஷம் 1877.
இக்கால கட்டத்தில்தான் மக்களிம் வருவாய்க்காக பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டது. பக்கிங்காம் எனும் கவர்னர் மக்களின் வேலை வாய்ப்புக்காகவும் அதன் மூலம் வயிற்றுப் பாட்டுக்காகவும் செய்த ஏற்பாடே பக்கிங் கால்வாய்த் திட்டம். இன்று பழவேற்காட்டில் கால்வாயின் மேல் கடற்கரை செல்ல பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஆந்திரத்தின் காக்கிநாடா முதல் புதுச்சேரி வரை செல்லும் கால்வாய் அக்காலத்தில் நீர் வழிப்பாதையாக சிறந்து விளங்கியது. மொத்த தூரம் 700 மைல். வங்காள விரிகுடா, பக்கிங்காம் கால்வாய், புலிகாட் ஏரி ஆகியவற்றின் இடையிலே முகத்துவாரம். அன்று ஏற்றுமதி – இறக்குமதி செய்த துறைமுகம் இன்று மீன் பிடித் துறைமுகமாக விளங்குகிறது.
புலிகாட் ஏரிக்கரையின் கிழக்கில் 1859-இல் எழுப்பப்பட்ட கலங்கரை விளக்கம் 1985 – இல் மறுகட்டுமானம் கண்டது. இது தமிழக வடக்கு கரையிலுள்ள முதல் கலங்கரை விளக்கம். இந்துக்கள் குறிப்பாக செட்டியார்கள், தலித்கள், பட்டணவர் என அழைக்கப்பட்ட மீனவர்கள், கிறிஸ்தவர்கள், அரபு முஸ்லிம் வம்சாவளியினர், தமிழக முஸ்லிம் வகையறாக்கள் என 10,000 பேர் பழவேற்காட்டில் வாழ்கின்றனர்.
முஸ்லிம்களுக்கான பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் தவிர சிவ, விஷ்ணு, முருகன், அம்மன் கோவில்களோடு கிராம தேவதை வழிபாட்டுத் தலங்களும் இங்கு உள்ளன.
பழவேற்காட்டின் தெருக்களும் கட்டிடங்களும் ஊரின் பழமையைச் சொல்லாமல் சொல்லும். கோட்டைத் தெரு, பெரிய தெரு, சின்ன தெரு ஆகிய தெருக்களிலுள்ள சில சிதிலமடைந்த கட்டிடங்களும் சில முக்கிய வீடுகளிலுள்ள பீங்கான் தாழிகளும் ஓவியம் வரையப்பட்ட குழிதாழிகளும் பழவேற்காட்டின் பழைய வரலாற்றை பறைசாற்றும்.
பழைய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சைனா களிமண் பீங்கான் பொருட்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.
முப்பதுக்கும் அதிகமான மீனவ கிராமங்களைக் கொண்டுள்ள புலியூர் கோட்டம் ஒரு மாபெரும் இழப்பை சந்தித்துள்ளது.
விண் கலங்களை ஏந்தும் ஹரிகோட்டா ஆந்திரப் பிரதேச முகவரியைப் பெற்றிருந்தாலும் அது பழவேற்காட்டின் தலைக்கு மேல்தான் உள்ளது. அதன் தென்பகுதி விரிவாக்கத்திற்காக 13 மீனவ கிராமங்கள் விழுங்கப்பட்டு தமிழக மீனவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். செம்பாசிப்பள்ளி, தேணிரேவு, மூஸாமுனை போன்ற கிராமங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.
இதனையே கருவாகக் கொண்டு காணாமல் போன மீனவக் கிராமக் கதையைச் சொன்ன ‘சிட்டிஸன்’ என்ற திரைப்படம் இப்பகுதியில்தான் படமாக்கப்பட்டது.
13 கிராமங்களுக்கும் ஏற்பட்ட நிலை பழவேற்காட்டுக்கும் ஏற்படலாம். அதற்குள் நீங்கள் ஒருமுறை பழவேற்காடு சென்று பார்த்து விடுங்கள். அது தொட்டுவிடும் தூரத்தில்தான் உள்ளது மதராஸிலிருந்து ஐம்பது கல் தொலைவில்...
டெல்லி பகாசுர அரசு பெரும்பசியோடு அலைகிறது.
ஊர்வலம் தொடரும்...

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 06:38

இளம் ஆலிம்களே! உங்களைத்தான் 3

Written by

அரபி இலக்கண கலைச்சொற்கள் பட்டியல்
மாணவக் கண்மணிகளே...!
சென்ற தொடரில் அரபி இலக்கணப் பாடங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் ஆகிய இரு இலக்கணங்களின் கலைச்சொற்கள் பட்டியலை இங்கு வரைபடமாக (Chart) வழங்கியுள்ளேன். இதை நகல் எடுத்து பாதுகாத்து வாருங்கள்! நிச்ச யம் உதவும்.

வரபடமn Chart 1

 வரபடம Char 6

வரபடம Charvt 2வரபடம Chartவரபடம Char5வரபடம Chart 4
அரபி இலக்கியம்

இலக்கியம் (LITERATURE) என்றால் என்ன என்பதை முதலில் காண்போம். கலை நயத்தோடு ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தும் படைப்பு. அது கவிதையாக, வசனமாக, சிறுகதையாக, நாவலாக எந்த வடிவத்திலும் அமையலாம். அரபி இலக்கியம் என்பதை ‘அல்அதபுல் அரபிய்யு’ என்பர்.

ஒரு செய்தியைச் சாதாரண நடையில் சொல்வதற்கும் ஈர்ப்புடன் கலைநயத்தோடு வெளியிடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. “துணி தைத்துக்கொண்டிருக்கிறாள்” என்பதையே, “துள்ளும் ஊசிக்கு வேலை தரும் துணி அவள் கையில்” - என்று சொன்னால் ஒரு மயக்கம் தொற்றிக்கொள்கிறதல்லவா?

2010இல் புனித ஹஜ் சென்றிருந்தபோது, புனித நகரங்களின் வீதிகளில் கண்ணில் பட்ட வாசகங்கள் என்னை ஈர்த்தன. ஒரு கண்ணாடிக் கடை விளம்பரத்தில், “உனக்காக என் கண்கள்” (عيوني لك) என எழுதப்பட்டிருந்தது. வாடகைக் கார் ஒன்றின் கண்ணாடியில், “கண்ணாடியில் தெரிவதைவிட உடலே உன்னுடன்தானே இருக்கிறது”(الاجسام اقرب مما تبدو في المرآة) எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

நம்மூர் போக்குவரத்து அதிகாரிகள், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் - என்பதை நயமாக இப்படி எழுதி வைத்திருந்தார்கள்: செல்போன் பேசியவாறு வண்டி ஓட்டாதீர்!எதிர்முனையில் அழைப்பது எமனாக இருக்கலாம்!

கலைநயத்தில் ஓர் இனிப்பு உண்டு. சொல்லாடலில் இந்த இனிப்பிற்கு ஒரு சுவை உண்டு. சொல்லில் சுவையேற்றி, செவியை விலைக்கு வாங்குவதுதான் இலக்கியத்தில் இலாபம்.

இலக்கியத்தின் சிகரம்

திருக்குர்ஆனின் நடை இதில் கைதேர்ந்தது; அற்புதமானது; மனித ஆற்றலுக்கு சவால் விடுக்கக்கூடியது. இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு ஒன்றை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

எகிப்து இஸ்லாமிய அறிஞரும் திருக்குர்ஆன் விரிவுரையாளருமான ஷைகு தன்தாவீ அவர்கள், தமது ‘அல்ஜவாஹிர்’ எனும் விரிவுரையில் குறிப்பிடுகிறார்: எகிப்து எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் ஷைகு கைலானி அவர்களை 13.06.1932இல் சந்தித்தேன். அவர் தமக்கேற்பட்ட அனுபவம் ஒன்றை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்கரும் கிழக்கத்திய சிந்தனையாளருமான வெங்கால் என் நண்பர். எங்களிடையே இலக்கிய உறவு பலப்பட்டிருந்த நேரம். ஒருநாள் அவர் விளையாட்டாக என்னிடம் அந்தக் கேள்வியைத் தொடுத்தார். “குர்ஆன் ஓர் (இலக்கிய) அற்புதம் என்று நீங்களுமா நம்புகிறீர்கள்?”உடனே நான், “திருக்குர்ஆனின் இலக்கியத் தரத்தை முடிவு செய்ய நாமே முயலலாமே!” என்றேன். வெங்காலுக்கு அரபி, ஆங்கிலம், ஜெர்மனி, ஹீப்ரு ஆகிய மொழிகள் நன்கு தெரியும் என்பது மட்டுமல்ல; மொழி ஆராய்ச்சியிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.

எனவே, ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்போம். அதற்கு நாமே வாக்கியம் அமைப்போம். பின்னர் அதே பொருளைத் திருக்குர்ஆனில் தேடுவோம். அதன் சொல்லாக்கத்தோடு ஒப்பிடுவோம். தெரிந்துவிடும் உண்மை- என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

நாங்கள் தேர்ந்தெடுத்தது “நரகம் மிகவும் பெரியது” என்ற மிக எளிதான பொருள்தான். இப்பொருளுக்கு இருவரும் சேர்ந்து சொல்லாக்கம் தர இயன்றவரை முயன்று, எங்களது மொழியாற்றல், இலக்கிய ஆற்றல் என எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்திப் பார்த்தோம்.

நிச்சயமாக நரகம் மிகப் பெரியது; நாம் நினைப்பதைவிட மிகவும் விசாலமானது; நரகத்தின் அளவு மனித அறிவுக்கே எட்டாதது; நரகத்தில் முழு உலகையே அடைக்கலாம்... இப்படி 20 வாக்கியங்களை அரபி மொழியில் இருவரும் இணைந்து வார்த்தோம். இதற்குமேல் என்ன இருக்கப்போகிறது என்ற பார்வை வெங்காலிடம். இனி நீங்கள் குர்ஆனின் இலக்கிய நயத்தைக் காட்டலாம் என்றார்.

திருக்குர்ஆனுக்குமுன் நாம் மழலைகள் என்பது உறுதியாகிவிட்டது என்றேன். எப்படி என்று வியப்போடு கேட்டார் மொழி ஆராய்ச்சியாளர்.

அன்று நரகத்திடம் கேட்போம் - íóæúãó äóÞõæúáõ áöÌóåäøóãó

உன் வயிறு நிரம்பிவிட்டதா...? - åóáö ÇãúÊóáóÆúÊö

அது சொல்லும் - æóÊóÞõæúáõ

இன்னும் இருக்கிறதா? (50:30) - åóáú ãöäú ãóÒöíúÏ

அதிர்ந்து போனார் வெங்கால். முகம் மலர்ந்தது. குர்ஆனின் இலக்கியத் தேன்மழையில் நனைந்தார்; நாணிப்போனார். நீங்கள் சொன்னது உண்மை! திறந்த மனத்துடன் ஏற்கிறேன்- என்றார் அமெரிக்கரான வெங்கால். இது புதுக்கவிதை அல்ல; புனித மறையின் உயர்நடை. திருக்குர்ஆனின் இலக்கிய அற்புதத்திற்கு, போதும் இந்த ஒரு சான்று.

பாடப் புத்தகங்கள்

அரபி இலக்கியம் கற்பிப்பதற்காக மத்ரஸா பாடத்திட்டத்தில் மூன்று வகையான பாடப் புத்தகங்கள் உண்டு. 1. சொல்லணிக் கலை (இல்முல் மஆனி) 2. சொல்லாட்சிக்கலை (இல்முல் பயான், அல்லது இல்முல் பலாஃகா) 3. அணியிலக்கணம் (இல்முல் பதீஉ)

இல்முன் மஆனீ: கேட்போரின் தகுதிக்கும் நிலைக்கும் ஏற்ப அமைகின்ற வகையில் அரபி மொழிச் சொல்லை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும் கலை. வாக்கியத்தில் ஒரு சொல்லை விட்டுவிடுவது, முந்தி அல்லது பிந்திச் சொல்வது, உறுதிப்படுத்திக் கூறுவது அல்லது சாதாரணமாகக் குறிப்பிடுவது.. போன்ற நிலைகள் உதாரணம்.

இல்முல் பயான்: ஒரு செய்தியை விவரிக்கும்போது பல்வேறு வழிகளைக் கையாளும் முறைகளை விவரிக்கும் கலை. நேர்பொருள் அல்லது சொற்பொருள் (ஹகீகத் - PROPERSENSE), மாற்றுப் பொருள் (மஜாஸ் - TROPE), ஆகுபெயர் (கிநாயா-METONYMY), சிலேடை (தவ்ரியா -EQUIVOKE), செம்மொழிச் சிலேடை (ஜினாஸ் - PARONOMASIA), முரணிசைவு நயம் (திபாக் - ANTITHESIS)... போன்ற இலக்கியக் கூறுகளை இதன் மூலம் அறியலாம்.

இல்முல் பதீஉ: முதலிரண்டு கலைகளின் விதிகளோடு, சொல் அலங்காரத்திற்கான வழிகளைக் கற்பிக்கும் கலை. எடுத்தது விடுத்து அடுத்தது விரித்தல் (இஸ்தித்ராது - EXCURSION), சுருட்டி பின்பு விரித்தல் (லஃப்பு நஷ்ர் - INVOLUTION AND EVOLUTION)... போன்ற இலக்கிய நடைகளை இது எடுத்துரைக்கும்.

இக்கலைகளைக் கற்றுத் தேறியிருந்தால்தான் குர்ஆனிலும் ஹதீஸிலும் புதைந்திருக்கும் இலக்கியச் சுவையை ரசிக்கவும் அசைபோடவும் உட்பொருளைக் கண்டறியவும் முடியும். மார்க்கக் கல்விக்கு இலக்கியம் எதற்கு என்று எண்ணிவிடாதீர்கள்! மார்க்கத்தையும் நயமாகத்தானே சொல்ல வேண்டியதிருக்கிறது! எனவே, ஆசையோடு பயிலுங்கள். இலக்கிய நதியில் நீந்துங்கள். இதுதான் சரியான தருணம்! வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இப்பாடம் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில் நடத்துவது வழக்கம்.

நவீன அரபி

அரபிக் கல்லூரி மாணவர்கள், மத்ரஸாவில் இருக்கும் காலத்திலேயே நவீன அரபி மொழியையும் (MODERN ARABIC) எப்பாடுபட்டாவது கற்றுக்கொண்டுதான் வெளியேற வேண்டும். நடப்பில் உள்ள அரபி மத்ரஸா பாடப் புத்தகங்கள் வாயிலாகவோ கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதைப் போல் பேசிப்பேசிப் பழகுவதற்கு வாய்ப்போ இல்லாததால் அதன் மூலமோ நவீன அரபியைக் கற்க இயலாத சூழ்நிலையே பெரும்பாலோருக்கு உண்டு.
நவீன அரபியைக் கற்கச் சொல்வதற்குக் காரணம், அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவதற்காக அல்ல. இன்றைக்கு அரபு நாடுகளிலிருந்து அரபி அறிஞர்கள் எழுதுகின்ற அற்புதமான மார்க்க நூல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணமுள்ளன. அவர்கள் பெரும்பாலும் இன்றைய நவீன அரபிமொழியிலேயே நூல்களை எழுதி வருகிறார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்தையோ நபிமொழி ஒன்றையோ சான்றோரின் அமுதமொழி ஒன்றையோ எடுத்துக்கொண்டால், நமது பார்வை கடிவாளமிடப்பட்ட குதிரையின் பார்வைபோல், மத்ரஸாவில் கேட்ட ஒரே திசையை நோக்கியே செல்கிறது. வசனத்திலுள்ள இலக்கண இலக்கியக் கூறுகள், ஏதேனும் சட்டங்கள், வரலாற்றுக் குறிப்புகள் மீறிமீறிப் போனால் வசனம் அருளப்பெற்ற பின்னணி-இத்தோடு நின்றுவிடுகிறது நம் தேடல்.

ஆனால், அரபி அறிஞர்களின் பார்வை விசாலமானது. இறைமொழியிலும் நபிமொழியிலும் பொதிந்துள்ள அரசியல், அறிவியல், இலக்கியம், குடும்பவியல், சமூகவியல், பொருளியல், வணிகவியல், வேளாண்மை, தொழில்... என இன்றைய உலகுக்கு வழிகாட்டும் எல்லா இயல்களையும் அவர்களின் எழுத்துத் தொட்டுச் செல்வதைக் காண முடியும்.

அவ்வாறே, அரபுலகிலிருந்து வெளிவரும் தினசரிகள், வார-மாத இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள், புதிய பிரச்சினைகளுக்கான மார்க்கத் தீர்ப்புகள் முதலானவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள இந்த நவீன அரபிதான் கைகொடுக்கும். இவற்றை வாசிக்க எங்கோ போக வேண்டியதில்லை. எல்லாம் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

பழையதும் புதியதும்

நவீன அரபியில் பழைய சொல்லைப் புதிய பொருளில் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, முபாஷரத் (مباشرة) - மேற்கொள்ளல்; தஸ்வீத் (تصويت) - வாக்கு (வோட்டு) அளித்தல்; முஃகாதரா(مغادرة) - புறப்படுதல்; தத்பீக் (تطبيق) - செயல்படுத்துதல்; முஅவ்வகூன் (المعوقون) - மாற்றுத்திறனாளிகள்;ஷிர்கத் (الشركة) - நிறுவனம் (கம்பெனி)... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அவ்வாறே, புதிய சொல்லைப் பழைய பொருளுக்குப் பயன்படுத்துவர். நடிகன்- முமஸ்ஸில் (ممثل); கொண்டுவந்தான்-ஜாப (جاب); குறைத்தல் - தக்ஃபீப் (تخفيف); பங்கெடுத்தல் - முசாஹமத் (مساهمة); அர்ப்பணித்தல்-தக்ரீஸ் (تكريس); எட்டுதல் - தராவுஹ் (تراوح) ... இப்படி நிறைய!

பேச்சு வழக்கைப் பார்த்தோமென்றால், நமக்கு ஒன்றுமே புரியாது. நத்திர்(ندر) - வெளியே எடு; இத்லஉ (اطلع) - புறப்படு; ஷுஃப் (شف) - பார்; ஃபக்கில் பாப் (فك الباب) - கதவைத் திற; சுக்கல் பாப் (سك الباب) - கதவை மூடு; மூயா(مو يا) - தண்ணீர்; கல்லி அஸ்ஃபல் (خل اسفل) - கீழேயே இருக்கட்டும்;ஃபில்லி இப்ரீக் (فل ابريق) - பானையை நிரப்பு; கீஸ் தய்யிப் (قيس طيب) - சரியாக அள!

நல்ல வாக்கிய அமைப்பில்கூட வித்தியாசம் உண்டு. “அவர் நீண்ட சுற்றுப் பயணம் செய்திருந்தாலும் - (رغم جولته الطويلة); மேலும் சொன்னார்:(كما قال); நாம் முஸ்லிம்கள் என்ற முறையில் - (نحن كمسلمين); இந்தப் பிரச்சினை குறித்து - (حول هذه القضية); இதையொட்டி - (بهذه المناسبة);இதற்குப் பொருளல்ல - (هذا لا يعني); அல்லாஹ்வின் உதவியால் - (بحول الله);அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் - (لا سمح الله); மீண்டும் சொன்னார் - (اضاف من جديد)... இவ்வாறு ஏராளமான வழக்குகள் உண்டு.

புதன்கிழமை, 05 ஜூலை 2017 07:39

மண்ணின் வரலாறு -3 பழவேற்காடு

Written by

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தின் உச்சியில் தமிழக கிழக்குக் கடற்கரை சாலையின் தொடக்கத்தில் பழவேற்காடு பரவிக் கிடக்கிறது.
பரவிக்கிடக்கக் காரணம், எங்கும் தண்ணீரின் தரிசனம். வடக்கே புலிகாட் ஏரி, கடலைத் தொட்டும் தொடாமலும், அதன் நீர் உப்பு நீரல்ல! ஒரு வகை கலப்பு நீர். அதனுள் ராலும் நண்டும் மீன்களும் அதன் மேலே காலம் காலமாக அமர்ந்து பயணிக்கும் ஆயிரமாயிரம் பறவைகள். அது ஒரு பறவைகள் சரணாலயம்.
அவற்றைப் பார்த்து ரசிக்கவும் ஏரியில் பயணித்து எழிலை ருசிக்கவும் வந்து குவியும் தமிழக ஆந்திர மக்கள்.
தாது வருடப் பஞ்சத்தைப் போக்க ஆங்கிலேயக் கவர்னர் தரையில் ஒரு கோடு போட வைத்தார். அது ஒரு நீர்க்கோடு. அது காக்கி நாடாவில் தொடங்கி புதுச்சேரியில் முடிகிறது. அதுதான் பக்கிங்காம் கால்வாய்.
அக் கால்வாய் பழவேற்காட்டைக் கடக்கும் போது ஆற்றைப் போல் தெரிகிறது. வங்காள விரிகுடாவின் கடற்கரை மணல்வெளி, அதற்கு இணையாகக் கிடக்கும் பக்கிங்காம் கால்வாய் புனல்வெளி. புனல்வெளியையும் மணல் வெளியையும் மிரட்டிக் கொண்டு கடல் வெளி.
அன்று கட்டு மரங்கொண்டு கடல்வெளியை வென்றவர்கள் இன்று மோட்டார் படகுகளோடு, அந்தப் படகுத்துறையை அக்கால தோணித் துறைமுகத்தை நினைவுபடுத்திக் கொண்டு இரு கண்களை மூடிக் கொண்டு பாருங்கள்.
கி.பி.1269 ஆம் ஆண்டு
அரபியக் கப்பல்கள் சில கரை சேர அவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கரையிறங்குகிறார்கள். எல்லோருமே அரபியர்கள். அவர்களை வரவேற்கும் பழவேற்காட்டைச் சேர்ந்த சிலர், அவர்களிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அரபுக்கள்.
யார் அவர்கள்?
கரையிறங்குபவர்கள் வணிகக் குழுவினராய்த் தெரியவில்லையே! அவர்கள் எல்லோரும் பல குடும்பத்தினராய்த் தெரிகின்றனரே! என்ன நேர்ந்தது அவர்களுக்கு? எதற்காக இந்தக் கடற்பயணம்?
அவர்கள் எல்லோரும் அரபகத்தின் மதீனாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்! அவர்கள் திடீரெனப் புறப்பட்டு வந்திருந்தாலும் அவர்களுள் சிலருக்கு சோழ மண்டல வாணிபத் தொடர்புகள் இருந்ததாலேயே பழவேற்காடு வர சாத்தியப்பட்டிருக்கிறது. அதுகாலாதி கால உறவு.
இஸ்லாமிய சூரியன் மேற்கில் உதிக்கும் முன்பே அரபியர்களுக்கு அரபுக் கடல் வங்கக் கடல் தொடர்புகள் வளர்ந்தோங்கியிருந்திருக்கிறது. இஸ்லாம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் உச்சநிலைக்கு வந்த போது அரபுக்கள் அனைவருமே முஸ்லிமாகவே வலம் வந்தார்கள்.
ஒரு வரலாற்று சான்றின்படி ஒன்பதாம் நூற்றாண்டில் அரபுக்கள் பழவேற்காட்டில் வணிகர்களாக மட்டுமில்லை. கப்பல்களைக் கட்டும் ஓடாவிகளாகவும் விளங்கியிருக்கின்றனர். அவர்களின் நீண்ட தொடர்பிலேயே பதிமூன்றாம் நூற்றாண்டில் மதீனத்து அரபிகள் பழவேற்காட்டில் கால் பதித்திருக்கிறார்கள்.
அரபுக் கடலோரம் வணிகம் செய்த அரபுக்கள் கொள்முதலோடு கொள்வினையும் செய்து மாப்பிள்ளைகளாக மாறியிருக்கிறார்கள். ஆனால் சோழமண்டலக் கடலோரம் வணிகம் செய்தோர் குடும்பத்துடன் வாழ்ந்ததினால் தமக்குள்ளே மணம் முடித்து சோனகர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இன்று கூட தமக்குள்ளேயே மணம் முடித்துக் கொள்ளும் காயல்பட்டினம், கீழக்கரை, அதிராம்பட்டினம், நாகூர் மரைக்காயர்களைப் போலவே பழவேற்காடு மரைக்காயர்களும் தம் வட்டத்தைத் தாண்டுவதில்லை. அதேசமயம் சோனகர்கள் பெரும்பான்மையினராக வாழாத ஊர்களில் அவர்கள் மற்ற முஸ்லிம்களோடு கலந்து விட்டார்கள். தொடக்கத்தில் அரபி மட்டுமே பேசியவர்கள் உள்ளூர் மொழியான தமிழையும் துணை சேர்த்துக்கொண்டார்கள். இருமொழிகளும் கலந்த புதுமொழி ‘அரவி’ எனக் கூறப்பட்டது. காலப் போக்கில் தமிழ் அரபி மொழியில் எழுதப்பட அரபுத் தமிழ் தோன்றியது. காலம் கனிய சோனகர்கள் தமிழர்களாகவே மாறிப்போனார்கள்.
1970 களில் நான் ஒருமுறை பழவேற்காடு சென்று வந்தேன். அது ஒரு ரால் கொள்முதல் பயணம். அப்போது நாங்கள் கிழக்குக் கடற்கரையோரமாகவே சென்று வந்தோம். இப்போது அப்பாதை கடல் அரிப்புகளால் தடைபட்டுள்ளது. எனவே நானும் சகோதரர் வலியுல்லாஹ்வும் செங்குன்றம் - பொன்னேரி வழியாக பழவேற்காடு சென்று வந்தோம்.
தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பயணத்தில் முதன் முதலாக ‘மஸ்ஜிதே முசாரப்’ எனும் சின்னப் பள்ளிவாசலுக்கு சென்றோம். கி.பி. 1708 இல் கட்டப்பட்ட இப்பள்ளிக்குள்தான் நிழல்கடிகாரம் உள்ளது.
இப்பள்ளிவாசல் சுற்றுலாத்துறையால் பேணப்படுகிறது. மதரஸா பட்டினத்தைச் சேர்ந்த மூவர் நிழல்கடிகாரத்ததை அமைத்துக் கொடுத்துள்ளனர். முகம்மது பீர் சாகிப், முஹம்மது அலி நெய்னா சாகிப், முஹம்மது பீர் பக்கீர் சாகிப் எனும் மூவரே கடிகார அமைப்பாளர்கள். காலை மணி ஆறு முதல் மாலை ஆறு வரை இக்கடிகாரத்தின் மூலம் நேரத்தை தெரிந்து கொள்ளலாம். இது 1915 இல் அமைக்கப்பட்டிருக்கிறது.
சின்னப்பள்ளிக்குள் தொழுகைக்கு அழைப்பதற்கான மேடை அழகாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் இடப்புறமாக எழில்மாடமாக “மதரஸா ரியாழுல் ஹூதா” எழுந்து நிற்கிறது. இதன் நிறுவனர் ஹாஜி அப்துல் ரஹ்மான். இவர் மண்ணடி மஸ்ஜிதே மாமூர் பள்ளிவாசலின் தலைமை இமாமாக பணியாற்றுவது மேலும் ஒரு சிறப்பு.
தமிழக, ஆந்திர மாணவர்கள் உண்டுறைப் பள்ளியின் மேலாளராக மௌலவி எ.முஹம்மது அலி மன்பயீ பணியாற்றுகிறார். அவர் பழவேற்காட்டைப் பற்றிய பல பழைய செய்திகளைச் சொன்னார்.
“தமிழகத்தின் வட எல்லையில் குடியேறிய உங்கள் மூதாதையர் என்ன தொழில் செய்தார்கள்?”

“வியாபாரம்தான் செய்தார்கள். அக்காலத்தில் சோழ மண்டலக் கடற்கரையில் மிக முக்கிய துறைமுகமாக பழவேற்காடு இருந்துள்ளது. வாசனைப் பொருட்கள், கைகலிகள் இங்கிருந்து ஏற்றுமதியாகிள்ளன.”
“எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?”
“நாங்கள் பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்தோம். முக்கியமாக தாய்லாந்து (சயாம்) எங்கள் கேந்திரமாக இருந்தது. அங்கேயே எங்கள் மூதாதையரில் சிலர் தங்கி வணிகம் செய்தனர். ஜப்பானுக்கு தங்கம் போனது. சைனாவிலிருந்து பட்டும் பீங்கான் பாத்திரங்களும் இறக்குமதி ஆயின.”
“உள்நாட்டுத் தொடர்பு. வணிகத் தொடர்பின்றி குடும்பத் தொடர்புகள்…?”
“உள்நாட்டுத் தொடர்பில் எங்கள் மூதாதையர் திருக்குர்ஆன் ஓதுவதற்காக கீழக்கரை மற்றும் தொண்டியோடு தொடர்பு வைத்திருந்தனர். சதகத்துல்லாஹ் அப்பாவின் மாணவர் முஹம்மது தீபி அவர்களிடம் கல்வி கற்க முஹம்மது ஜான் என்பார் தொண்டிக்கு சென்றிருக்கிறார்.”
“நீண்ட தூரமும் சரியான சாலைகளும் இல்லாத காலத்தில் சென்ற பயணங்கள் வியப்புக்குரிய செயலல்லவா?”
“நல்லாசிரியரைத் தேடுவதில் தூரமும் பயணமும் ஒரு தடையல்லவே. நாகூர், அதிரை, தொண்டி, கீழக்கரை, காயல் என எங்கள் மூதாதையர் பயணங்களின் போது ஆங்காங்கிருந்த அரபுக்களோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இக்காலத்தில் கூட எங்கள் காயல்பட்டின தொடர்பு தொடர்கிறது.”
“கொள்வினை… கொடுப்பினை எப்படி?”
நாங்கள் சம்பந்தங்களுக்காக பழவேற்காட்டைத் தாண்டுவதில்லை. ஜமீலாபாத், செம்பாசிப் பள்ளி, தோணிரேவு, மூஸா முனை எம்மைச் சேர்ந்த வடக்குப் பகுதிகள். அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அல்லர். நெசவுத் தொழிலோடு கைவினைப் பொருட்கள் செய்தல், மீன் பிடித்தல், படகுகள் கட்டியவர்கள் வியாபாரத்தையே முக்கியமாகக் கொண்டார்கள். இப்போதைய இளைய சமூகத்தினர் படித்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்” என்ற மதரஸா நிர்வாகி அலைபேசியில் ஒரு முக்கியப் புள்ளியை அழைத்து வரச் செய்து ஆற்றுப்படுத்தினார்.
அவரின் பெயர் ஹாஜி சலீமுத்தின் முஸ்ரபி, அரேபியர் முகமும் நிறமும் அவரிடம் தெரிந்தன. அவரின் வாய்மொழியும் மெய்மொழியும் அவரைத் தகவல் களஞ்சியம் என புரிய வைத்தன. அவர் சில காகிதக் கோவைகளோடு காணப்பட்டார்.
என்னுடைய வம்சாவளியினரின் பெயர்களைக் கேட்டார். தந்தை பாட்டனாரைத் தாண்டி என்னால் வம்சாவளியினரின் பெயரைக் கூறமுடியவில்லை அவரோ பாட்டனரைத் தாண்டியும் பல பெயர்களைச் சொன்னார்.
அவர் கொண்டு வந்திருந்த காகிதக் கோவையிலுள்ள தன் பாவா வம்சாவளியினரின் பல தலைமுறைப் பெயர்களைக் காட்டினார். பாவா வம்சாவளிபோல் 98 வகையறாக்கள் பழவேற்காட்டில் வாழ்வதாகவும் அவர்களுடைய பட்டியல் தனித்தனி காகிதக் கோவைகளாக உள்ளதாகவும் சொன்னார்.
உலகிலுள்ள இனங்களில் தலைமுறைகளின் பெயர்களை அரபுக்கள்தான் தம் நினைவில் பதித்து உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதேமுறையில் பழவேற்காட்டு முஸ்லிம்கள்…!
கீழக்கரை மரைக்காயர்கள் கூட அபூபக்கர்(ரழி) வகையறா எனக் கூறி தற்போதைய தலைமுறை வரை பதிவு செய்து வைத்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
கீழக்கரை - பழவேற்காடு தலைமுறைச் சங்கிலிகளை பின்னோக்கிப் பார்த்துக் கொண்டே சென்றால் ஏதாவது ஓரிடத்தில் அவர்கள் ஒரு கண்ணியில் இணையலாம்! முக்கிய காரணம் அவர்கள் இருவரும் மதீனாவாசிகள்.
ஹாஜி சலீமுத்தீன் முஸ்ரபி தான் வைத்திருந்த பழவேற்காட்டைப் பற்றிய பல செய்தித் தாள்களைக் காட்டினார். அன்பர் பழவேற்காட்டில் வணிகம் செய்வதோடு பரக்கத் நகர் பள்ளிவாசல் இமாமாகவும் பணிபுரிந்து வருகிறார்.
சூரிய நிழற்கடிகாரம் பற்றிய விளக்கத்தைத் தந்த அன்பர் பெரிய பள்ளிவாசலையும் முஸ்லிம்களின் பழைய கட்டிடங்களையும் காட்டி ஐரோப்பியர் காலத்தைக் கண்முன் கொண்டு வந்தார். முந்தைய காலத்தில் தாய்லாந்தோடு வியாபாரம் செய்த போது வந்திறங்கிய மிகப் பெரும் சீனக்களிமண் தாழிகளையும் பளிங்குக் குழி தாழிகளையும் காட்டி வியக்கும்படி செய்தார். ஒவ்வொரு ஏனமும் 200 லிட்டர் கொள்ளளவு கொண்டவை.
“எங்களில் பலர் ஆலிம்கள், அவர்கள் அரபிஇலக்கியத்தில் பாண்டித்தியம்மிக்கவர்கள். பல்வேறு அரபு நூல்களை எழுதியவர்கள். ஹம்சியா மவுலீது மட்டும் பன்னிரெண்டு பகுதிகளைக் கொண்டது” என அன்பர் சொல்லச் சொல்ல ஆனந்த பூங்காற்று வீசியது. அதில் கறி ஆனத்தின் வாசனையும் பொறித்த மீனின் வாசனையும் போட்டி போட்டன.
கடல் படு பொருட்களுக்குப் பெயர் பெற்ற ஊரில் அவற்றின் வாசனைக்குப் பஞ்சமிருக்குமா?
அன்று யாரோ ஒரு பெருமகனாரின் பிள்ளைக்குப் பிறந்த நாள் அதற்காக மதரஸா பிள்ளைகளுக்கு கறியோடு மீனும் நெய்ச்சோறுமாய் விருந்து. அதில் எங்களுக்கும் பங்கு கிடைத்தது.
இயற்கையழகு, மனதை மயக்கும் நீர்ப்பரப்பு, பாரம்பரிய கட்டிடங்கள், வளமையான வரலாறு, கலாச்சார கருவூலங்கள் நிறைந்த பழவேற்காட்டின் கதை மிக நீண்டது.
ஊர்வலம் தொடரும்…

புதன்கிழமை, 05 ஜூலை 2017 07:07

இளம் ஆலிம்களே உங்களைத்தான் - 2

Written by

தாழ்வு மனப்பான்மை நீக்குக!

அரபிக் கல்லூரிகளில் மார்க்கக் கல்வி பயின்றுவரும் மாணவக் கண்மணிகளுக்கு ஆரம்பமாக ஒரு வார்த்தைச் சொல்லிக்கொள்வேன்.
இந்தக் கல்வி கற்க வந்ததே, நீங்கள் செய்த புண்ணியம்தான் என்பதை முதலில் நம்புங்கள். எத்தனையோபேர் ஊரில் இருக்க, உங்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருப்பது, இறைவனின் தேர்வுக்கு நீங்கள் ஆளாகியிருக்கிறீர்கள் என்பதன் அடையாளம்தான். இல்லையென்றால், உங்கள் குடும்பத்திலும் உறவுகளிலும் இருக்கும் மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உங்களை இந்த மகத்தான கல்விக்கு இறைவன் தேர்ந்தெடுத்திருப்பானா?

திருக்குர்ஆனில் ஒரு வசனத்தில் இறைவன் கூறுவான் : பின்னர் நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை இவ்வேதத்திற்கு வாரிசுகளாக்கினோம். (35:32) இவ்வசனம் சமுதாயத்தார் அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் வேத அறிஞர்களுக்கே மிகவும் பொருந்தும். (தஃப்சீர் இப்னு கஸீர்) மற்றொரு வசனம் கூறுவதைப் பாருங்கள்:

தான் நாடுகின்றவர்களுக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பெற்றவர் ஏராளமான நன்மை வழங்கப்பெற்றவர் ஆவார். அறிவுடையோரைத் தவிர (மற்ற எவரும் இதைச்) சிந்திப்பதில்லை. (2:269)
இங்கு ‘ஞானம்’ (அல்ஹிக்மத்) என்பது, நபித்துவக் கல்வியைக் குறிக்கும் என்பதே அறிஞர்கள் பலரது கருத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பொன்மொழி இதை உறுதி செய்கிறது.
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். (ஸஹீஹுல் புகாரீ, ஹதீஸ் - 71)
ஆக, அல்லாஹ் உங்களுக்கு நன்மையை நாடிவிட்டான் என்பது, அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் சாட்சியாக சத்தியம். எனவே, தாழ்வுமனப்பான்மையை முதலில் தூக்கி எறியுங்கள். நான் சிறப்புக்குரியவன்; என்மீது அல்லாஹ்வின் பார்வை உண்டு; எனக்கு அவன் நன்மையை நாடியுள்ளான் என்று பெருமிதம் கொள்ளுங்கள். அப்போதுதான் இக்கல்வியில் மனம் லயிக்கும்; ஆர்வம் பிறக்கும்; அக்கறை தோன்றும்.

எண்ணமும் இலக்கும்
அடுத்து எந்தச் சூழ்நிலையில், எந்த நோக்கத்திற்காக மத்ரஸா படியை நீங்கள் மிதித்திருந்தாலும், மத்ரஸாவிற்குள் நுழைந்தபிறகு எண்ணத்தைத் தூய்மையானதாக, அப்பழுக்கற்றதாக மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்விற்காக, அவன் அன்பிற்காக, அவன் நெருக்கத்தைப் பெறுவதற்காகவே இக்கல்வியைக் கற்கிறேன்.
இக்கல்வியை நான் கற்று, என் அறியாமையை அகற்றி, தூய இஸ்லாத்தை அறிந்து, அதன்படி முதலில் நான் செயல்பட்டு என்னை நான் செம்மைப்படுத்திக்கொள்வேன். அதன்பிறகுதான் மற்றவையெல்லாம் - என்ற எண்ணத்தை மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும். எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. எண்ணம்போல்தான் வாழ்வு. உருவத்தை அல்லாஹ் பார்ப்பதில்லை; அதற்குள் இருக்கும் எண்ணத்தையும் அதைத் தொடர்ந்து உருவாகும் செயல்களையுமே அவன் பார்க்கின்றான்.
பொதுவாகவே வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு, குறிக்கோள் இருக்க வேண்டும். அது நல்லதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான், அதை அடைய ஓடமுடியும்; உழைக்க முடியும். இலக்கை எட்டாமல் என் கால்கள் ஓயாது என்ற வைராக்கியத்தில் வீரியமாகச் செயல்பட முடியும். மார்க்கக் கல்வி பயிலும் மாணவனின் இலக்காக எது இருக்க முடியும்?

என்னால் நான்குபேராவது திருந்த வேண்டும்; சமுதாயம் நல்வழிபெற வேண்டும். தனிமனித ஒழுக்கம், குடும்ப நல்லுறவு, சமூக ஒற்றுமை, சமய நல்லிணக்கம், அரசியல் தூய்மை, தொழில் ‘ஹலால்’மயம், உலக அமைதி… என ஒவ்வொரு துறையும் சீர்பட ஏதேனும் ஒருவகையில் என் பங்கும் இருக்க வேண்டும்; என்னால் இயன்ற அளவிற்கு என் குரலும் ஒலிக்க வேண்டும்.

இந்தச் சீர்திருத்தப் பணியைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் தெரிவித்த அற்புதமான ஒரு நபிமொழி உண்டு: “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நல்வழி காட்டப்படுவது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை)விட உமக்குச் சிறந்ததாகும்” என்பதே அம்மொழி. (ஸஹீஹுல் புகாரீ, ஹதீஸ் - 2942)
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, “குழப்பம் இங்குதான்; குழப்பம் இங்குதான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து… (அது தோன்றும்)” என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ, ஹதீஸ் - 3279)

மதீனாவிற்குக் கிழக்கே என்பது ‘இராக்’ பகுதியைக் குறிக்கும் என்றே விரிவுரையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். அன்றைய பாரசீகத்தில் இருந்த ‘ஜீலான்’ எனும் ஊரில் பிறந்து, இராக் தலைநகரம் ‘பக்தாத்’ வந்து, கல்வி கற்று, தீவிர மார்க்கப் பிரசாரம் செய்த ஷைகு அப்துல் காதிர் அல்ஜீலானி (ரஹ்) அவர்கள் (ஹி.490-561) உங்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்.
‘அல்ஃகுன்யா’ உள்ளிட்ட பல நூல்கள் எழுதியவர்கள். ஆயிரக்கணக்கான ஆலிம்களை உருவாக்கியவர்கள். உள்ளங்களை உருக்கி வார்த்தெடுக்கும் அற்புதப் பேச்சாற்றல்மிக்க பிரபல பரப்புரையாளர். அன்னாரது பிரசாரத்தால் குற்றங்களைக் கைவிட்டு நல்வழி திரும்பிய முஸ்லிம்கள் ஏராளம்; இஸ்லாத்தில் இணைந்த முஸ்லிமல்லாதோர் எண்ணற்றோர். அன்னாருடைய பரப்புரையின் அடிப்படையே இறையுணர்வு, ஓரிறைக் கோட்பாடு (தவ்ஹீத்), உலகப் பற்றின்மை (ஸுஹ்த்) ஆகியனவாகவே இருந்தது.
இருளும் குழப்பமும் சூழ்ந்திருந்த இராக் பகுதியில் தீன் ஒளி ஏற்றிவைத்து, மார்க்கத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, ஆயிரமாயிரம் உள்ளங்களுக்கு நல்வழிகாட்டிய அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள், ஹுசைன் (ரலி) அவர்களின் வழித்தோன்றல்; எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை ஏன் நமக்கு முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது?

நேர மேலாண்மை
மாணவர்களான உங்களுக்கு நேரம் மிக முக்கியமானது; ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றது. நேரத்தை நீங்கள் ஆளாவிட்டால், அது உங்களை ஆண்டுவிடும்; அடிமைப்படுத்திவிடும். நேரம் ஒன்றுதான், கடந்துவிட்டால் திரும்பக் கிடைக்காதது; விலை கொடுத்து வாங்க முடியாதது; அழுது புலம்பினாலும் அரற்றினாலும் கைக்கு வராதது.
இதனால்தானோ என்னவோ! காலத்தின் மீது சத்தியம் செய்கிறான் இறைவன். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டுப் பின்னர் காலத்தை ஏசுபவன், தன்னைப் புண்படுத்துவதாகச் சொல்கிறான் அல்லாஹ். காரணம், காலத்தைப் படைத்தவன் அவனே. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வழிபாடுகளெல்லாம் குறித்த காலத்திலும் நேரத்திலும் நிறைவேற்றப்பட வேண்டியவை என விதியாக்கி, வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.

எதிலும் நேரம் தவறாமையை இப்போதிருந்தே பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இது, எல்லா காலத்திற்கும் உதவும். அதிகாலை எழுவதிலிருந்து இரவு உறங்கச் செல்வதுவரை ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நேரம் வகுத்துக்கொள்ளுங்கள். அந்நேரத்தைக் கடைப்பிடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தொழுகை, குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், துஆ, வகுப்பிற்குச் செல்லுதல், உணவு, குளியல், காலைக்கடன், நடைப்பயிற்சி, அன்றைய பாடத்தைத் திரும்பப் படித்தல்… என எல்லாவற்றையும் உரிய நேரத்தில் நிறைவேற்றுவதை உங்களுக்கு நீங்களே கடமையாக்கிக்கொள்ளுங்கள்.
வகுப்புக்குச் சரியாகச் சென்றுவிடுங்கள். தாமதமும் கூடாது; விடுப்பு எடுப்பதும் கூடாது. தவிர்க்கவே முடியாத சந்தர்ப்பத்தில் மட்டுமே விடுப்பு எடுப்பதைக் கொள்கையாக்கிக்கொள்ளுங்கள். அரட்டை, குறட்டை, ஊர் சுற்றல், வீண்பொழுது கழித்தல் ஆகிய வேண்டாத வேலைகளில் நேரத்தைப் பாழ்படுத்திவிடாதீர்கள்.
இதுவெல்லாம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் எளிது; செயல்படுத்துவதுதான் கடினம் -என்று எகத்தாளம் பேசுவதைக் கைவிடுங்கள். உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்களின் வாழ்நாளை மதிப்பிடுவீர்களானால், அவர்கள் நேரத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காண்பீர்கள். நீங்கள் பத்தோடு பதினொன்றா? ஆயிரத்தில் ஒருவனா? என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

(சந்திப்போம் இறை நாடினால்)

சனிக்கிழமை, 13 மே 2017 07:31

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்...

Written by

1960 மற்றும் 70களிலெல்லாம் பொதுமக்களிடம் ஆலிம்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மார்க்கத்தின் மீது பற்றும் வழிபாடுகளில் ஈடுபாடும் உள்ள, சற்று வயது முதிர்ந்த பெரியவர்களே ஆலிம் பெருமக்களின் அருமை புரிந்து நடந்துகொண்டனர் எனலாம். இளம் வயதினரிடமோ நடுத்தர வயதினரிடமோ சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் புரிந்துணர்வு இருந்ததில்லை என்றே கருதுகிறேன்.

அதாவது என்னுடைய மாணவப் பருவத்தில் நான் கண்டதைக் கொண்டே இதைச் சொல்கிறேன். அதிலும் குறிப்பாக படித்த பட்டதாரிகள் ஆலிம்களைக் கண்டாலே பெரும்பாலும் ஒதுங்கிப்போய்விடுவார்கள். அரபி ஆலிம்கள் – ஆங்கிலப் பட்டதாரிகள் இடையே இனம் புரியாத ஓர் இடைவெளி எப்படியோ ஏற்பட்டுவிட்டிருந்தது. இடைவெளியைக் குறைக்க இரு பக்கத்திலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை.
ஆனாலும், ஆலிம்களின் எண்ணிக்கையும் அரபிக் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. இதற்குக் காரணம், ஒருகால் முஸ்லிம் பெற்றோர்களிடமிருந்த இறையுணர்வாக இருக்கலாம்; அல்லது வாழ்வாதாரம் பற்றாக்குறையாக இருக்கலாம்; அல்லது பிழைப்பிற்கான வழிவகைகள் வரையறுக்கப்பட்ட சிற்சில துறைகளாக மட்டும் இருந்ததாக இருக்கலாம்! இதனாலெல்லாம் விளைந்தது நன்மையே என்பது வேறு விஷயம்.
அதனால்தானே மத்ரஸாக்கள் செழிப்பாக இருந்தன; ஆலிம்களின் வரவு மலர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. ஓதுகிற பிள்ளைகள் சிரத்தையோடு ஓதினார்கள்; வெளிவந்த ஆலிம்கள் திறமைசாலிகளாக விளங்கினார்கள். சமுதாயத்தில் அமைதி நிலவியது. மக்களிடையே பெருந்தன்மை காணப்பட்டது. பெரியவர்களைச் சிறியவர்கள் மதித்தார்கள். சிறியவர்கள்மீது பெரியவர்கள் அக்கறை செலுத்தினார்கள்.

இன்றைய நிலை
ஆனால், இன்று – ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பிறகு - ஆலிம்களுக்கு மரியாதை உண்டு. ஆலிம்களுக்கும் பட்டதாரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு உண்டு. ஏன், ஆலிம்களே பட்டதாரிகளாக வெளிவருகின்றனர். வேலைவாய்ப்புகள் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ஆலிம்களுக்குக் கிடைக்கின்றன.

alim1

ஆலிம்கள் மற்றத் துறைகளிலும் பணியாற்றுகின்ற காலச்சூழ்நிலை உருவாகியுள்ளது. வணிக வளாகங்களில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட கமர்ஷியல் நடவடிக்கைகளில் ஆலிம்களைக் காணமுடிகிறது.
இளம் ஆலிம்கள் பலர் மத்ரஸா நிறுவனர்களாக, முதல்வர்களாக, பள்ளிவாசல் நிர்வாகிகளாக, எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களாக, அமைப்புகளின் வழிகாட்டிகளாக மிளிர்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயமல்லவா?

இருந்தும், தமிழகத்தில் மத்ரஸாக்கள் மூடப்படுகின்றன. மத்ரஸாக்களில் மாணவர்களைக் காணோம். ஆலிம்களின் வரவு அருகிக்கொண்டே போகிறது. சமுதாயம் பிளவுப்பட்டுக் கிடக்கிறது. யாரைப் பார்த்தாலும் - சலாம் சொல்வதற்குக்கூட - அவரது இயக்கப் பின்னணி என்ன என்று பார்க்கிறார்கள். ஒரு நல்ல கருத்து சொல்லப்பட்டாலும், சொன்னது யார் என்பதைப் பொறுத்தே ரசிக்கிறார்கள்; ஏற்கிறார்கள்.
முஸ்லிம் குடும்பங்களில் பாசமும் இல்லை; கண்டிப்பும் இல்லை. உறவுகள் நலிந்து மெலிந்துபோய்விட்டன. நட்பு, நாசத்திற்கு வழிவகுக்கிறது. இளைஞர்களிடம் தொழுகை போன்ற வழிபாடுகளும் வெளிப்படையான சுன்னத் நடைமுறைகளும் தென்பட்டாலும், குணநலன்கள், நடுநிலைப் பார்வை, பொதுமை நோக்கு ஆகிய தார்மிகப் பண்புகளுக்கு நிறையவே பஞ்சம் உண்டு.
அரபிமொழி, அரபி நூல்களுடனான தொடர்பு இன்றைய புது ஆலிம்களிடம் ரொம்பவே குறைந்து போய்விட்டது. மத்ரஸா பாடப் புத்தகங்களில் தலைப்பு வரிகளாக இடம்பெறும் மூலநூலை (ம(த்)தன்) படித்து பொருள் புரிந்து விளக்கம் சொல்வதே பெரிய உச்சநிலை திறமையாகக் கருதப்படுகின்ற நிலையே காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பின் எப்படி விளக்கவுரை (ஷர்ஹ்), அடிக்குறிப்பு விளக்கம் (ஹாஷியா) ஆகியவை எல்லாம் புரியப்போகிறது தெரியவில்லை.

நேர்முகத் தேர்வு
அண்மையில் நேர்முகத் தேர்வாளராக ஓரிடத்திற்குச் சென்றிருந்தேன். பல்வேறு கல்லூரிகளில் பயின்ற ஆலிம்களிடம் நேர்முகத் தேர்வு நடத்த வேண்டியிருந்தது. அவர்களில் ஃபாஸில் (முதுகலை) முடித்தவர்கள் இருந்தனர். சிலர் அரபிக் M.A; M.Phill பட்டம் பெற்றவர்கள். பெரும்பாலோர் அப்ஸலுல் உலமா தேர்வில் வென்றவர்கள்.
அரபி இலக்கணம், இலக்கியம், திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி ஆகிய நான்கு பாடங்களில் மிகச் சாதாரணமான வினாக்களே தொடுக்கப்பட்டன. ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் எங்களுக்குப் பேரதிர்ச்சியே அளித்தனர். ஒரேயொரு மாணவர் மிக நன்றாக விடையளித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டார். ஆயினும், கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஆங்கிலம் புரிகிறார்கள்; ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
இலக்கணப் பிழையின்றி வாசித்தல், சரியான பொருள் கூறல், அடுத்து வாக்கியத்தின் கருத்தைப் புரிந்து பிரதிபலித்தல்... என அடிப்படையான தகுதிகள் என்னென்னவோ அவற்றை அவர்களிடம் காண்பதில் சிரமமாகவே இருந்தது.
அவ்வாறே, வெள்ளிமேடைகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே மக்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அந்த இருபது, அல்லது முப்பது நிமிடங்களைக் கழித்தாலே போதும் என்றுதான் நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் அப்போதைய நிலைக்கேற்ப ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அதற்கு உகந்த திருமறை வசனம், நபிமொழி, சான்றோர் கருத்து, வரலாற்றுக் குறிப்பு, உலக நடப்பு, செய்திகள் ஆகியவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி, மக்களுக்குப் புரியும் மொழியில் எளிமையாக - அதே நேரத்தில் எழிலாக - உரையைத் தயாரித்து அங்கு வந்து நிற்பவர்களை ஒவ்வொரு வட்டாரத்திலும் கைவிட்டு எண்ணிவிடலாம்.
தமிழ் அல்லது உருது நூல்களைப் படித்துவிட்டோ, பிரபலமான பேச்சாளர்களின் பதிவு செய்யப்பட்ட உரைகளைக் காதில் கருவியைப் பொருத்தி கேட்டுவிட்டோ அப்படியே வந்து ஒப்புவிப்பவர்கள் உள்ளார்கள். உரையின் கரு மட்டுமன்றி, சொல், நடை, ஏற்றம் இறக்கம்கூடச் சொந்தமாக இல்லாமல் இரவலாகப் போய்விடுவதும் உண்டு. இதையெல்லாம் தவறு என்று சொல்ல முடியாது என்றாலும், தரம் என்றும் சொல்ல முடியாதல்லவா?
இளம் ஆலிம்களே! ஆலிமாகப் போகின்ற மாணவர்களே! சுமார் 50 ஆண்டுகள் மார்க்கக் கல்வி பயில்வதிலும் பயிற்றுவிப்பதிலும் எழுத்தாலும் பேச்சாலும் மார்க்கத்தை இயம்புவதிலும் வாழ்நாளைச் செலவிட்டுக்கொண்டிருப்பவன் என்ற முறையில் எனக்கு இத்துறையில் சில அனுபவங்கள் உண்டு.
என் அனுபவங்களை என் உடன்பிறவா சகோதரர்களான உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். படிப்பறிவு கைகொடுக்காத இடங்களில் பட்டறிவு பயன்படக்கூடும். என் அனுபவங்களை என்னோடு புதைத்துவிட விரும்பவில்லை. அது முறையுமாகாது. உங்களில் சிலருக்காவது என் எழுத்து உதவலாம்!
இன்ஷா அல்லாஹ், இத்தொடரில் உங்களைச் சமூக வலைதளம் மூலம் சந்தித்து, கற்கவும் கற்பிக்கவுமான வழிகாட்டல்களைப் பரிமாற எண்ணியுள்ளேன். முதலில் மாணவக் கண்மணிகளுக்கு! அடுத்ததாகப் பட்டம் பெற்று வெளிவந்த புதிய ஆலிம்களுக்கு!
(சந்திப்போம்! இன்ஷா அல்லாஹ்)

சனிக்கிழமை, 13 மே 2017 06:51

மண்ணின் வரலாறு – 2

Written by

Tamilnadu MapinTamil

மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருந்து வாழத் தொடங்கிய போது வாழ்ந்த இடம் தானாகவே பெயர் சூட்டிக் கொண்டது. தற்போதுதான் மனிதர்கள் புதிது புதிதாக இடங்களுக்கு பெயரிடுகின்றனர்.
முந்தைய கால கட்டங்களில் கடலையொட்டிய இடம் தானாகவே தன் பெயரைக் கடலூர் என அழைக்க வைத்தது. மண்ணடி, பள்ளத்தூர், மேட்டூர் என கடலையடுத்த இடங்கள் பொருத்தமான பெயர்களால் குறிப்பிடப்பட்டன.
ஆற்றையடுத்த ஊர் ஆத்தூர், தோப்பையடுத்த ஊர் தோப்பூர், குளத்தையடுத்த ஊர் குளத்தூர், வயலையடுத்த ஊர் வயலூர், மந்தைகள் நிறைந்த ஊர் மந்தைவெளி, தறியாளர்கள் நிறைந்த ஊர் தறிப்பேட்டை (சிந்தாதிரிப்பேட்டை), வண்ணார்கள் நிறைந்த பேட்டை வண்ணாரப்பேட்டை, போர்கள் பல நடந்த ஊர் போரூர், மாந்தோப்புகள் நிறைந்த ஊர் மாங்காடு, பூமல்லி நிறைந்த ஊர் பூவிருந்தவல்லி, குன்றம் நிற்கும் ஊர் குன்றத்தூர், கோடக் (குதிரை) லாயமுள்ள ஊர் கோடம்பாக்கம், ஆயிரம் விளக்குகள் ஏற்றி விழாக் கொண்டாடிய பகுதி ஆயிரம் விளக்கு, அல்லிகள் நிறைந்த கேணி திருவல்லிக்கேணி, தங்கக் காசு செய்த சாலையிலிருந்த சாலை தங்க சாலை, கொத்தளம் இருந்த மூலை மூலக் கொத்தளம், புளியமரங்கள் இருந்த பகுதி புளியந்தோப்பு, பிரம்புகள் நிறைந்திருந்த பகுதி பிரம்பூர் என எண்ணி இடப்பெயர்களை காரணத்துடன் சொல்லிக் கொண்டே செல்லலாம்.
பல்வேறு காரங்களைச் சொல்லி இடப்பெயர்களை அடுக்குவதற்கு முன் இயற்கை தந்த பெயர்களில் பெரும்பாலான பெயர்கள் மரங்களின் பெயராக இருப்பதை நாம் ஆழ்ந்து எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆல மரத்திலிருந்து ஆலந்தூர், அரச மரத்திலிருந்து அரசூர், அத்தி மரத்திலிருந்து அத்திப்பட்டு, வேப்ப மரத்திலிருந்து வேப்பூர், புளிய மரத்திலிருந்து புளியங்குடி, பனை மரத்திலிருந்து பனையூர், மாமரத்திலிருந்து மாங்குடி, தென்னை மரத்திலிருந்து தேங்காய் பட்டினம், நெல்லி மரங்களிலிருந்து நெல்லிக்குப்பம் என ஒரு பட்டியல் கிடைக்கும்.
மருத மரம் காரணமாக மதுரை எனப் பெயர் அமைந்ததாக பேராசிரியர் மெ.சுந்தரம் தம் ‘மதுரை’ நூலில் பதிவு செய்துள்ளார். ‘வஞ்சி’ என்ற ஊர் ‘பூவா வஞ்சி’ என்பதைக் கொண்டு வந்ததாக பேராசிரியர் கி.நாச்சிமுத்து ‘கொங்கு நாட்டு ஊர்கள்’ எனும் நூலில் கூறியுள்ளார். இதைப் போன்றே காஞ்சி மரம் காரணமாக காஞ்சிபுரம் பெயர் பெற்றதாக பேராசிரியர் கு.பகவதி தன் ‘ஊர்ப் பெயர்கள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். மரங்கள், பூக்களைக் கொண்டு மட்டுமல்ல பல ஊர்கள் இயற்கைப் பொருட்களைக் கொண்டே பெயர் பெற்றுள்ளன.
பெரும்பாலும் கடற்கரையூர்கள் குப்பம், பாக்கம், பட்டினம் என முடிகின்றன. கோட்டக்குப்பம், காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம், அயோத்தியாகுப்பம் எனக் குப்பங்களும் கடப்பாக்கம், தேன் பாக்கம், ஆரப்பாக்கம், பட்டினப்பாக்கம் என பாக்கங்களும் அம்மாப்பட்டினம், அதிராம்பட்டினம், தேவிபட்டினம், காயல்பட்டினம் என பட்டினங்களும் அலைவாய்க்கரையில் பெயர் சூட்டி நிற்கின்றன.
ஊர், நகரம் எனக் கூறாமல் வேறு வேறு கடைச் சொல்லால் ஊரைக் குறிக்கும் சொற்கள் எத்தனையோ உண்டு. இவை பிரதேசங்களுக்கு வேறாகவும் புழங்குகின்றன.
மதுரைப் பக்கம் பட்டிகள் : அவை ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, பட்டி வீரன் பட்டி, கன்யாகுமரிப் பக்கம் விளைகள் : அவை களியக்காவிளை, திசையன்விளை, சொத்த விளை என. எந்த ஊரின் பெயரும் பொருளோடுதான் இருக்கும். கோயிலென்றும் வாயிலென்றும் முடியும் பல பெயர்கள் உள்ளன. திருவானைக் கோயில், நயினார் கோயில், காளையார் கோயில் என கோயிலைக் கொண்டு முடியும் ஊர்கள் உள்ளன. நெறி வாயில், திருமுல்லைவாயில், குடவாயில் என வாயிலைக் கொண்டு முடியும் ஊர்கள் உள்ளன.
கோட்டை என முடியும் ஊர்கள், பேட்டை என முடியும் ஊர்கள் பலவும் உள்ளன. செங்கோட்டை, பாளையம் கோட்டை, புதுக்கோட்டை என கோட்டைகள். புதுப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை என பேட்டைகள்.
பாளையம் என முடியும் பல ஊர்கள் மேலப்பாளையம், மேட்டுப்பாளையம், உத்தமபாளையம், ராஜபாளையம், உடையார் பாளையம் என.
ஊரென முடியும் பெயர்களைப் போலவே ஆறென்றும் குளமென்றும் முடியும் பெயர்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. திருநள்ளாறு பழையாறு கோட்டாறு என ஆறுகள், இடைக்குளம் வாகைக்குளம், பெருங்குளம் என குளங்கள் பெயர்களைக் கொண்ட ஊர்கள்.
துறையென்றும் நெறியென்றும் முடியும் பல ஊர்கள் உள்ளன. ஆலந்துறை, திருப்பாலைத்துறை, மயிலாடுதுறை என துறைகள். செந் நெறி, நீள் நெறி, தவ நெறி என நெறிகள்
குடியும் காடும் மலையும் குன்றமும் என முடியும் பல ஊர்கள் தமிழ் நாட்டில் பரவிக் கிடக்கின்றன. இளையான்குடி, கொட்டக்குடி, கறம்பக்குடி என குடிகள். திருமறைக்காடு, திருவங்காடு, திருவேற்காடு என காடுகள். திருவண்ணாமலை, திரு ஈங்கோய் மலை, திரிகோணமலை என மலைகள், திருமுதுகுன்றம், திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம் என குன்றங்கள்.
ஊர்ப் பெயர்களைப் பற்றிய செய்திகளை விரித்துரைத்துக் கொண்டே செல்லலாம். தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் போற்றியவரிடையே வடமொழியையும் விக்கிரகப் பண்பாட்டையும் போற்றுவோர் புகுந்த போது முதலில் அடிமைப்பட்டது ஆண்டவர்க்கம். அவர்களால் ஊர்கள் கூட வடமொழிப் போர்வை பூண்டன.
மயிலாடுதுறை, மாயவரம் ஆனது, திருமுதுகுன்றம் விருத்தாசலம் ஆனது, மறைக்காடு வேதாரண்யம் ஆனது. திருக்காட்டுப் பள்ளி ஆரணீசுரர் கோயில் ஆனது, திருவரங்கம் ஸ்ரீரங்கம் ஆனது.
வடமொழி தென்னகத்தில் புகுந்ததால் ஊர்ப் பெயர்கள் மட்டும் மாறவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழே பேசி வந்த திராவிடர்கள் மொழிக் கலப்பால் கன்னடராய், தெலுங்கராய், மலையாளியாய், தமிழராய்ப் பிரிக்கப்பட்டனர். சமஸ்கிருதப் பாவை தென்னகத்தில் வீடு கூடுதல் நடத்தியிருக்காவிட்டால் தமிழ் மட்டுமே பேசும் சமுதாயம் எத்தகைய பெரும்பான்மைச் சமுதாயமாக விரிந்து பரவியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.
ஊரை விட்டு சமுதாயம், மொழி எனப் பேசத் தொடங்கி விட்டோம். மீண்டும் உள்ளூருக்குள் நுழைவோம்.
பள்ளிகளில் முடியும் சில ஊர்கள் திருச்சிராப்பள்ளி, சிவப் பள்ளி, செம்பொன் பள்ளி, திருக்காட்டுப் பள்ளி, மகேந்திரப் பள்ளி, சக்கராப் பள்ளி, மீயாப் பள்ளி என பள்ளிகளில் முடியும் ஊர்கள். இவற்றில் திருச்சிராபபள்ளி, சக்கராப் பள்ளி, மீயாப் பள்ளி மூன்றும் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஊர்கள்.
மேலும் சில ஊர்கள் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் ஊர்களாக உள்ளன. மரைக்காயர்பட்டினம், முல்லாபுரம், வாலாஜாபாத், வாலாஜாபேட்டை, கான்சாபுரம், ராவுத்தநல்லூர், ஜாஃபர்கான் பேட்டை என ஒரு பட்டியலிடலாம்.
பாரசீக மொழியிலுள்ள ஆபாத் எனும் சொல்லுக்கு நகர், ஊர் எனப் பொருளாகும். வாலாஜா எனும் ஆர்க்காட்டு நவாப் முகம்மது அலியின் பெயரால் இரு நகரங்கள் உள்ளது போல் அண்மைக் காலத்தில் உமர் எனும் வள்ளலால் அமைந்த ஊர் உம்ராபாத்.
தானாய் உருவாகிய ஊர்களைப் போல் திட்டமிட்டு உருவாக்கிய ஊர்களும் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை காந்தி கிராமம், அண்ணா கிராமம் ஆகியவை.
அதைப் போல் தொழிலகங்களுக்காக அமைக்கப்படும் நகரியங்கள் இன்று பெரும் நகரங்களாக உருமாறி வருகின்றன. நெய்வேலி, கல்பாக்கம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் சுரங்க, அணு நகரங்களில் அலுவலர்களுக்காக அமைக்கப்படும் நகரியங்கள் பெருகி வருவதை நம்மால் காண முடிகிறது.
வல்லத்தான் என நாம் அழைக்கும் ராஜாளியின் தொலை தூரப் பார்வையைப் போல் இக்கட்டுரைத் தொடர்ந்து இடம் பெறும்.
முதல் பகுதியில் நான் குறிப்பிட்ட ஊர்களைப் பற்றிய நூல்களில் ‘கடையநல்லூர் வரலாறு’ எனும் நூல் இடம் பெறாமல் நழுவி விட்டது. கடையநல்லூர் சேயன் இபுறாஹீம் அவர்கள் எழுதிய அந்நூல்தான் இதுவரை வெளிவந்த ஊர் பற்றிய நூல்களில் மிகப் பெரியது. ‘மதரஸாபட்டினம்’ – ஒரு முக்கியமான ஆவணம்.
இனி அடுத்து வரும் திங்கள்களில் மண்ணின் வரலாற்றை ஊர்ப் பெயரிட்டு தொடருவோம்.
ஊர்வலம் தொடரும்…