ஹஜ் பெருநாள் வரலாறு

zamzam well hajj mecca

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் தூதுவராக அனுப்பபட்டவர். கிறிஸ்துவர்களால் “ஆப்ரஹாம்” என்று அழைக்கபடுபவர். அல்லாஹ்வின் இல்லமான புனித இடம் “காஃபா” வை கட்டியவர்கள். மனிதர்களுக்கு ரோல்மாடல்களாக நபி (ஸல்) அவர்களையும், இப்ராஹீம் (அலை) அவர்களையும் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வாழ்ந்த காலத்தில் சிலைகளை அதிகமாக வணங்க கூடியவர்கள் இருந்தார்கள். அவருடையே தந்தையும் சிலையை வணங்க கூடியவராகத்தான் இருந்தார். தன்னுடைய தந்தையையும் மற்றவர்களையும் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் அழைத்தார்.
இப்ராஹீம் (அலை) நபியவர்கள் “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (சிலைகள் காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? என்று கேள்விகள் கேட்டு மக்களை சிந்திக்கத் தூண்டினார். (அல் குர்ஆன் 26:72,73.)

தன்னுடைய தந்தையின் எதிர்ப்பு, அந்நாட்டு அரசனின் எதிர்ப்பு, ஊர் மக்களின் எதிர்ப்பு என பல எதிர்ப்புகளுக்கும் இடையில் இஸ்லாத்தின்பால் மக்களை அழைத்தார்கள். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து அணைத்து துன்பங்களையும் சகித்து கொண்டு, இஸ்லாத்தை எத்தி வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார்கள். பல வருடங்களுக்கு பிறகு ஒரு அழகான ஆண் குழந்தை (நபி இஸ்மாயில் (அலை) பிறந்தது. அந்த நேரத்தில் தான் அல்லாஹ் கட்டளையிடுகிறான், மனைவியையும் கை குழந்தையையும் இன்று மக்கா என்று நாம் அறியும் பாலைவனத்தில் விட்டுவிட சொல்லி. எந்தவித யோசனயுமின்றி கட்டளையை நிறைவேற்றினார்கள்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜரா அவர்கள் கேட்டார்கள், “இப்ராஹீமே, இறைவன் சொன்னதால் இவ்வாறு செய்கிறீர்களா’’ என கேட்ட போது ’’ஆமாம்’’ என பதில் அளித்தார்கள்…. “அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கண்டிப்பாக கைவிட மாட்டான்’’…. என்று ஹாஜரா கூறினார்கள். அதுதான் இறை நம்பிக்கை.
யாரும் இல்லாத பாலைவனத்தில் கை குழந்தையோடு வாழ்ந்த வாழத் தொடங்கினார்கள் ஹாஜரா (அலை). ஒரு நாள் குழந்தையாக இருந்த இஸ்மாயீல் (அலை) தாகத்தில் தண்ணீர் கேட்டு அழ தண்ணீர் தேடி அன்னை ஹாஜரா அங்குமிங்கும் தண்ணீரைத் தேடி ஓடினார்கள். அல்லாஹ் பூமியிலிருந்து நீரை வெளியேற்றி இஸ்மாயீல் (அலை) தாகம் தீர்த்தான். அதுதான் இன்று நாம் விரும்பி அருந்தும் ஜம் ஜம் புனித நீரூற்று.
தியாகப் பெண்மணி நமது அன்னை ஹாஜரா அவர்களை நினைவு கூறத்தான் உம்ரா, ஹஜ்ஜிற்கு செல்லும் அனைவர்களும் ஸஃபா, மர்வா மலைகளுக்கு இடையே ஓடும் தொங்கோட்டத்தை அல்லாஹ் கடமையாக்கினான்.

பல ஆண்டுகள் கழித்து நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பி வந்தார்கள். அப்போது ஓடியாடும் சிறுவராக தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் வளர்ந்திருப்பதை கண்டு மகிழ்ந்தார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு பாசத்திற்குரிய அவரது மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடும் அல்லாஹ் கட்டளையிட்டான். பல வருடம் குழந்தை இல்லாத நிலையில் 90 வயதுக்குப் பிறகு பிறந்த இஸ்மாயீல் மீது அளவுகடந்த பாசம் உடையவர்களாக இருந்தார்கள். ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளை செய்துதான் ஆக வேண்டும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய கனவில் அல்லாஹ் கட்டளையிட்ட விஷயத்தை தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்களிடம் சொன்னார்கள். சற்றும் தயக்கமின்றி நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடியே செய்யுங்கள் என்று கூறினார்கள்.

“என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” அல் குர்ஆன் 37:102.

இறைவனின் கட்டளையை ஏற்று மகன் இஸ்மாயீலை அறுக்க நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தயாரானார்கள். அந்த நேரத்தில் ஷைத்தான் அதை தடுக்க ஷைத்தான் முயற்சி செய்தான். ஆனால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஷைத்தானுக்கு கட்டுப்படாமல் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற தயாரானார்கள்.

அப்போது வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அனுப்பி இஸ்மாயீல் நபியை பலியிடுவதை தடுத்தான் அல்லாஹ். நீ கண்ட கனவை நிறைவேற்றி விட்டாய். என்னுடைய சோதனை அனைத்திலும் வெற்றி அடைந்து விட்டாய் என்று அல்லாஹ் கூறினான். பதிலாக ஒரு ஆட்டை அல்லாஹ் பலியிட கட்டளையிட்டான். இதன் காரணமாகவே ஹஜ் பெருநாளின் போது “குர்பானி” கொடுக்கபடுகின்றது. அல்லாஹ் எப்போது தனக்கு கட்டுப்படுபவர்களுக்கு நன்மையே செய்வான்.
இந்த வரலாறை திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை நீங்கள் படிக்கலாம்.
சிறிது காலம் கழித்து நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீலும் இஅணைந்து காபாவை மறுகட்டுமானம் செய்தார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறவே “குர்பானி” கொடுக்கபடுகின்றது. அதாவது அல்லாஹ்விற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றோம் என்பதே இதன் பொருள்.
மாட்டை அறுத்து கொண்டாடுவது அல்ல இந்த பக்ரித் பெருநாள்..
தியாகத்தை நினைவு கூற கொண்டாடுவதே இந்த தியாக திருநாள்.,.!
இதன் பொருளை உணர்ந்து அனைவரும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து இப்பெருநாளுக்கு உரிய சிறப்பை செய்து கொண்டாடுவோம்.