நேரம் தவறாமை

littleboy and crow TamilarivuKadhaikal Babu Natesan
கதிரவன் ஒரு பள்ளி பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒரு காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.
கதிரவனுக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. கதிரவன் திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது.
கதிரவன் தான் தின்று கொண்டிருந்த வடையை இரண்டாகப் பிரித்து பாதியை காகத்துக்குப் போட்டான். காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. கதிரவனுக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அன்றைய தினம் அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.
இரண்டாம் நாள் நேற்று இருந்த அதே இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. நேற்று போலவே அங்கும் இங்கும் நடந்தது காகம். இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. கதிரவன் தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. கதிரவன் அருகில் சென்றதும் விருட்டென பறந்தோடியது.
மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் கதிரவனுக்குப் பக்கத்தில் வந்தது. கதிரவனின் கையை ஆவலோடு பார்த்தது. கதிரவன் வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. கதிரவன் காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் சட்டென பறந்தோடியது.
ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. நாளாக நாளாக காகத்தைப் பிடிக்கும் எண்ணம் மறந்து போனது. கதிரவனும் காகமும் நண்பர்களானார்கள். கதிரவன் சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும். இவனும் காகத்துடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பான்.
சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு கதிரவன் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? ஒரு கடிகாரம் இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத காகம்,ஆனால் சரியான நேரத்துக்கு காகம் எப்படி வந்து போகிறது. கதிரவன் வியந்தான். தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்து வேலைகளையும் முறையாகச் செய்யும் கதிரவனைப் பார்த்து ஆசிரியருக்கு சந்தோஷத்தில் அவனை பாராட்டினார். அவனுடன் படிக்கும் அவனது நண்பர்களும் அவனைப் போல பள்ளிக்கு சீக்கிரமாக வர ஆரம்பித்தார்கள். அவர்களுடைய வகுப்புகள் மகிழ்ச்சியாக நடந்தது.

நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.