"தந்தையைப் போல் பிள்ளை"

பேரா, SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, DUIHA கல்லூரி, தாராபுரம். 98658 04000.
பிரதிவருடம் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்னையர் தினம் கொண்டாடப்படுவதைப் போல பிரதி வருடம் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே ஜூன் முதல்நாள் அன்று பெற்றோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே..!
அமெரிக்காவில் சொனாரா ஸ்மார்ட் என்ற பெண், வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் அவரது தாய் இறந்து விட்டார். இந்த இக்கட்டான நேரத்தில் இவரது தந்தையே அனைவரையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அந்தத்
தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக தந்தையர் தினத்தைக் கொண்டாடினார் சொனாரா. இது நடந்த ஆண்டு 1910. இதை அடிப்படையாகக் கொண்டு தான் 1966 முதல் ஐ.நா.சபை இந்நாளை சர்வதேச தந்தையர் தினமாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தந்தை என்பவர் உண்மையிலேயே ஒரு பாவப்பட்ட ஜீவன் தான். தனது மனைவி, மக்களுக்காக உழைத்து, உழைத்து ஓடாய் தேய்ந்து போனவர். ஒரு குடும்பத்தின் ஆணிவேரே இந்த தந்தையின் வழியாகத்தான் ஊடுருவிச் செல்கிறது. தந்தையில்லாமல் ஒரு குடும்பம் நிச்சயம் முன்னுக்கு வரமுடியாது. எனினும் பெரும்பாலும் ஒரு தந்தையின் வலியும், வேதனையும் அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரிவதில்லை. பல நேரங்களில் அவர் போற்றிவளர்த்த அவரது குடும்பமே அவரைக் கண்டுகொள்வதில்லை என்பது தான்வேதனையிலும்பெரும் வேதனைக்குரியது.

அன்னைக்கு சில சிறப்புகள் இருப்பது போலவே தந்தைக்கும் சில சிறப்புகள் இருக்கின்றன. ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு பெரிதும் துணை நிற்பவர் ஒரு தந்தையே...! "நான் உங்களுக்கு ஒரு தந்தையைப் போன்றவன்" என்று நபிகளார் கூறி இருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. இதனால் தான் என்னவோ குர்ஆன் "தந்தையின் மீது சத்தியமாக...!" என்று ஒரு தந்தையின் மதிப்பை உயர்த்திக்காட்டுகிறது. ஏனெனில், அல்லாஹ் எதன் மீது சத்தியம் செய்கிறானோ அது கண்ணியத்திற்கும், மிகுந்த கவனத்திற்கும் உரியது என்பது குர்ஆனிய விரிவுரையின் பொது விதியாகும்.
"நீங்கள் மறுமையில் உங்கள் தந்தை யின் பெயருடன் இணைத்துத்தான் அழைக்கப்படுவீர்கள். எனவே, உங்களது பெயர்களை அழகியதாக (அர்த்தமுள்ளதாக) சூட்டிக் கொள்ளுங்கள்!" என்றார்கள் நபிகள்நாயகம். ஆக ஒரு தந்தையின் உறவு இம்மையில் மட்டுமல்ல அது மறுமை வரை தொடர்பு கொள்கிறது என்பதை நபிகளார் எவ்வளவு அழகாக உணர்த்திக் காட்டுகிறார்கள்..? நாம் தான் அவ்வப்போது படிப்பினை பெறத்தவறி விடுகிறோம் பெயர்தானே என்று நீங்கள் சற்று கவனமின்றி இருந்து விடாதீர்கள் அது கோடான கோடி மக்களுக்கு மத்தியில் உங்களை அசிங்கப் படுத்தி விடக்கூடும் என்பதையும் இத்துடன் இணைத்தே நபிகளார் நமக்கு நன்கு எச்சரிக்கிறார்கள்.
அவர் ஒரு முன்மாதிரியாளர் : ஒரு தந்தை என்றைக்குமே நல்லதொரு முன்மாதிரியாளராக இருக்க
வேண்டும். நமது பிள்ளைகள் நல்ல பழக்க வழக்கங்களை முதலில் தமது தந்தையிடமிருந்து தான் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றன. எனவே ஒரு தந்தை எப்போதுமே தமது பிள்ளைகளின் முன்னிலையில் நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும். நபிகளார் தமது மகளார் ஃபாத்திமா (ரளி) யின் வீட்டுக்குச் சென்றால் முதலில் கதவைத் தட்டி, தம் வருகையை உறுதிப்படுத்திக் கொண்டு, சலாம் சொல்லி, அனுமதி பெற்றபின் தான் அவ்வீட்டுக்குள்
நுழைவார்கள் என்பது நபிவரலாறு. தான் நபி என்பதற்காக நபிகளார் தான் நினைத்தபடியெல்லாம் நடக்கவில்லை. ஒருதந்தையின்பட்டம், பதவி என்பதெல்லாம் வீட்டுக்கு வெளியேதான் என்பதை நபிகளார் நன்கு செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அது நமக்கும் தான் என்பதை நன்கு நாம் முதலில் நன்கு புரிந்து கொண்டு நம்மை நாமே நல்லதொரு
முன்மாதியாளராக மாற்றிக்கொள்ள முன் வருவோமாக...!

அவர் ஒரு நற்குணாளர் : ஒரு தந்தை எப்போதுமே நற்குணம் உள்ளவராக இருக்க வேண்டும்.
அவரது நற்குணம் தான் அவரது பிள்ளைகளை நற்குணமுள்ளவர்களாக மாற்றும். தந்தையிடம் கெட்ட குணங்கள் பல குடிகொண்டிருக்கும் நிலையில் அவரது பிள்ளைகளிடம் நற்குணத்தை நாம் எதிர்பார்ப்பது முற்றும் முரண்பட்ட ஒன்று. எனவே ஒரு தந்தை எப்போதும் தன்னை நற்குணமுள்ளவராகவே வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஏனெனில், தன் தந்தையைக் காட்டிக் கொடுக்கும் ஒரு கண்ணாடி தான் “பிள்ளை என்பதை ஒரு தந்தையின் பரம ரகசியமே அவனது மகன் தான்" என்ற நபிமொழி மூலம் நாம் நன்கு உணரலாம்.
இதனால் தான் நபிகளாரை நாயன் அல்லாஹ் நமக்கு அறிமுகம் செய்யும் போது "நபியே ! நிச்சயமாக நீங்கள் மகத்தானநற்குணத்தின் மீது இருக்கிறீர்கள்" என்று அறிமுகம் செய்கிறான். அந்த குணம் நம்மிடமும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று.
அவர் ஒரு மன்னிப்பாளர் : ஒரு தந்தையிடம் அதிகம் மிளிர வேண்டியது அவரது மன்னிக்கும்
மனப்பான்மை தான். மன்னிக்காமல் ஒரு தந்தை தந்தையாகவே இருக்க முடியாது. தப்புகளும், தவறுகளும் தம்பிள்ளைகளிடம் அடிக்கடி வெளிப்படும் ஒன்றுதான். அவற்றை நான் மன்னிக்க மாட்டேன் என்று விடாபிடியாக இருந்தால் அப்பிள்ளையின் குற்றங்களை மன்னிக்க அல்லாஹ்
வும் முன்வருவதில்லை. எனவே ஒரு தந்தை எப்போதும் தனது மன்னிப்பு வாசலை திறந்தே வைத்திருக்க வேண்டும்.
"நான் இரக்கமுள்ளவனாகத்தான் அனுப்பப்பட்டுள்ளேன்; யாரையும் நான் சபிப்பவனாக அல்ல!" என்ற நபிமொழி என்றென்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது. இன்றைய நம்ம வீட்டுத் தந்தைமார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதும் இங்கு நாம் நன்கு நினைவு கூரத்தக்கது.
மன்னிப்புதான் ஒருமனிதனை மகா மனிதனாக மாற்றுகிறது என்பது மட்டும் என்றும் மாறாதது. எனவே மன்னிப்பை நாம் மறவாமல் என்றென்றும் கடைபிடிப்போம்...!
அவர் ஒரு கண்டிப்பாளர் : ஒரு தந்தையிடம் இரக்கம் இருக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் அதில் கால்பங்கு அளவுக்கு கட்டாயம் கண்டிப்பும் இருக்க வேண்டும். அடியாத பிள்ளை படியாது, அடி உதவற மாதிரி அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள் என்ற அனுபவ மொழிகளெல்லாம்
உண்மையிலேயே சிந்திக்கத் தக்கதுதான். பட்டம் எவ்வளவு உயரப் பறந்தாலும் அதன் பிடிநூல் நம்கையில்தான் என்பதை என்றைக்கும் நாம் மறந்து விடக்கூடாது. பட்டொளி வீசிப்பறக்கும் கொடி சுதந்திரக் கொடி என்றாலும் அதை கட்டிவைத்தால் தானே நன்கு பறக்கும்...? அவ்வாறு தான் நமது பிள்ளைகளுக்கு அவ்வப்போது ஒரு தந்தையின் கண்டிப்பு மிகஅவசியம். "உங்கள் பிள்ளைகளை ஏழுவயதில் தொழ ஏவுங்கள்;பத்து வயதில்(அவர் கள் தொழாவிட்டால்) அடியுங்கள்!" என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆக, கண்டிப்பு என்பது அது
கண்டிப்பாக, கண்டிப்பாக இருக்க வேண்டும். சும்மா ஏனோ தானோ என்றிருக்கக் கூடாது. ஏனெனில் இது எவ்வித நல்விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை.
அவர் ஒரு கண்காணிப்பாளர் : ஒரு தந்தை பிள்ளைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்க இருக்கவேண்டும் அதுவும் அவர்களுக்குத் தெரியாமல்! இல்லையெனில் நமது பிள்ளைகளை நாம் இழக்கிறபோது அழுது, புலம்பு வதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
"என் மீது நம்பிக்கை இல்லையா...?" "என்னை நம்ப மாட்டீர்களா.?" என்பது போன்ற சில துடுக்கான சொற்கள் பலவேளை நம்மை ஏமாற்றிவிடுவது உண்டு. எனவே இது போன்ற நேரங்களில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும். நபிகளார் எப்போதுமே தமது தோழர்கள் ஒவ்வொருவரின் மீதும் மிகுந்த கவனமுடன் தான் இருந்தார்கள் என்பது நபிகளாரின்
வரலாறு சொல்லும் உண்மை.
நாம் அவர்களை கண்டும் காணமல் இருக்கிறபோது, அதுவே அவர்களுக்குள் பெரும் மனதைரியத்தை உண்டுபண்ணி, நம்மை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்; நாம் நினைத்தபடி சுதந்திரமாக இருக்கலாம் என்ற எண்ணம் வ(ளர்)ந்து விடுகிறது. இது முற்றும் ஆபத்தானது.
நிறைவாக சில... நபி நூஹ் (அலை) தமது பிள்ளைக் காக எவ்வளவு தூரம் போராடினார்கள், நபி யஅகூப் (அலை) தவறு செய்த தமது பிள்ளைளுடன் எப்படி கருணையுடனும், மன்னிப்புடனும் நடந்து கொண்டார்கள், நபிஇப்றாகீம் (அலை) இறைக் கட்டளையை நிறைவேற்றுவதில் தமது பிள்ளையிடம் எப்படி கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள், நபி சுஅய்ப் (அலை) தமது பெண்மக்களிடம் எப்படி கண்காணிப்புடன் நடந்து கொண்டார்கள், நபி தாவூது (அலை) தமது பிள்ளைக்கு எப்படி நீதியுடன் ஆட்சி செய்யச் சொன்னார்கள், நபி ஜகரியா (அலை) தமது பிள்ளையை வளர்ப்பதில் எப்படி கண்ணும், கருத்துமாக இருந்தார்கள், பேரறிஞரான லுக்மான் (அலை) தமது பிள்ளைக்கு எப்படியெல்லாம் நல்ல பல உபதேசங்களைச் செய்தார்கள் என்றெல்லாம் குவலயக் குர்ஆன் ஆங்காங்கே கூறி நல்லதொரு வழியை நமக்கு ஒளி வீசி வழிகாட்டிச் செல்கிறது. எனவே ஏதோ ஒரு தந்தையாய் இருப்பதை விட, நல்லதொரு தந்தையாய் இருப்பதில் தான் நமக்கான நற்பெருமை இருக்கிறது.
வாருங்கள்... நல்ல தந்தையைப் போற்றுவோம்...!
கெட்ட தந்தையை மாற்றுவோம்.!