ரியாத், ஜித்தா நகரங்களில் நாம் ஒரு வணிகச் சமூகம் தொழில் கருத்தரங்கம்

ரியாத் நகரில் அக்டோபர் 21, ஜித்தா நகரில் அக்டோபர் 28 அன்றும் “நாம் ஒரு வணிகச் சமூகம்” என்ற தலைப்பில் தொழில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக முஸ்லிம் சமூகம் 1350 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. தென் தமிழகத்தில் முஸ்லிம்கள் வணிகச் சமூகமாக அறிமுகமாகிப் பரவலாகக் குடியேறி, பிரஜைகளாக தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு வரலாற்றிலே இடம்பிடித்தது. 
முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக ஒரு வணிகச் சமூகமாக இருந்து வந்ததுடன் நாட்டின் வாழ்வுக்கும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக உயர்ந்த பங்களிப்பை செய்துள்ளது. காலம் காலமாக தமிழக முஸ்லிம் சமூகம் ஒரு வணிக சமூகமாகத்தான் இனம் காணப்பட்டு வந்தது. 
தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை நோக்கும் போது, அவர்கள் குடியேறிய காலம்முதல், தாம் குடியேறிய பிரதேசங்களில் தங்களது கலாசார பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மஸ்ஜிதுகளை அமைத்தார்கள். அந்த மஸ்ஜிதுகளை மையமாக வைத்து குர்ஆன் மத்ரஸாக்களை, பாடசாலைகளை அமைத்துக்கொண்டார்கள்.
வணிகத்தில் முதன்மை சமூகம் என்ற சிறப்பான அடையாளத்தை பெற்றிருந்த தமிழக முஸ்லிம் சமூகம் இன்று மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தன் பாரம்பரியம் அறியாமல் மாத ஊதிய பணியாளர்களாக மாறிவரும் இன்றைய படித்த இளைய தலைமுறையிடம் வணிகத்தின்  மேன்மையை விதைக்கும் விதமாக பல வரலாற்றுத் தகவல்களை சமூகநீதிமுரசு மாத இதழின் ஆசிரியர் CMNசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்.